கெஜரிவாலும் அரசியலும்

12
கெஜரிவாலும் அரசியலும்

ரசியல்வாதிகளின் ஊழல்களை எதிர்த்துக் கெஜரிவால் துவங்கியது தான் ஆம் ஆத்மி கட்சி.

கெஜரிவாலும் அரசியலும்

வெகு விரைவிலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து யாருமே எதிர்பார்க்காத வண்ணம் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது ஆம் ஆத்மி.

ஆனால், துவக்கத்தில் இவர் மீது இருந்த எண்ணங்களுக்கும் தற்போதைய நிலைக்கும் பெருமளவில் மாற்றம்.

இவரை துவக்கத்தில் இருந்து கவனித்து வந்தவன் என்ற அடிப்படையில் சில கருத்துகளைக் கூற விரும்புகிறேன். Image Credit

கெஜரிவால் ஆட்சிக்கு வரும் முன்னர் டெல்லிக்கு மின்சாரக் கட்டணத்தை பாதி குறைக்கிறேன், அனைத்து வீடுகளுக்கும் 700 லிட்டர் தண்ணீர் இலவசமாக கொடுக்கிறேன் என்று அறிக்கை விட்டார்.

ஆனால், நடைமுறையில் இது சாத்தியமா என்பதை இவர் யோசித்தாரா என்று தெரியவில்லை.

உண்மையில் இவர் பல சர்வே எல்லாம் எடுத்து அதன் பிறகே இதை அறிவித்தார் ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு சிக்கல் மேல் சிக்கலாக வர, திணறி விட்டார்.

குறிப்பாக பல வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பே இல்லை அப்படி இருக்கும் போது எப்படி இலவச தண்ணீர் கொடுக்க முடியும்?

இது போதாது என்று இவரது ஆர்வக் கோளாறு MLA க்கள் சர்ச்சையில் மாட்ட அது ஒரு பக்கம் பிரச்சனையாக இருந்தது.

அரசியல் என்று வந்தால் இது போல சர்ச்சைகள் சகஜம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்.

அனைவரையும் திருப்தி செய்யும் படி / தன் கட்சியில் இருக்கும் அனைவரும் யோக்கியம் என்று எவராலும் சான்றிதழ் அளிக்க முடியாது.

எனவே இது ஏற்றுக்கொள்ளக் கூடிய நடைமுறை பிரச்சனை.

தர்ணா

ஆனால், அவர் அதன் பிறகு செய்த தர்ணா…! எப்படி சரியென்று ஏற்றுக்கொள்வது.

மக்களுக்கான கட்சி என்று கூறுகிறார் ஆனால், இவர் செய்த தர்ணாவால் எத்தனை மக்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டார்கள்.

முதலமைச்சரே இது போல போராட்டத்தில் இறங்கினால் எப்படி பிரச்னையை தீர்ப்பது? முதலமைச்சரே தெருவில் நாட்கணக்கில் உட்கார்ந்து கொண்டால், மற்ற பிரச்சனைகளை யார் பார்ப்பது? நடவடிக்கை எடுத்தால் தான் எழுவேன் என்றார்.

ஆனால், சர்ச்சைக்குரிய காவலர்களுக்கு விடுமுறை மட்டுமே அளிக்கப்பட்டது. இவர்களுக்கு விடுமுறை வாங்கித்தரவா இரண்டு நாள் தர்ணா!!

பொறுப்பில் உள்ளவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமே தவிர இது போல இன்னும் கட்சி எண்ணத்திலேயே அனைத்திற்கும் சாலையில் இறங்கி போராட்டம் செய்து கொண்டு இருந்தால் மற்ற வேலைகளை யார் கவனிப்பது?!

இவரால், தான் வாக்குறுதி கொடுத்த தண்ணீர் மின்சாரப் பிரச்சனைகளை சாமாளிக்க முடியவில்லை. ஆளாளுக்கு கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.

மக்கள் குறை கேட்பு

“மக்கள் குறை கேட்பு” கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அதற்கு மக்கள் குவிய அதை எதிர்பார்க்காத கெஜரிவால் பின்னர் கூட்டத்தையே கலைத்து, இது போல “மக்கள் குறை கேட்பு” கூட்டம் போடுவதையே நிறுத்தி விட்டார்.

பல சர்ச்சைகளில் எதையும் செய்யாமல் இப்படி போய்க் கொண்டு இருந்தது. இதன் பிறகு வந்தது தான் ஜன்லோக்பால்.

இந்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஏனென்றால் ஊழல் செய்பவர்களுக்கு இது கடிவாளம் போடும் சட்டம். இதை நிறைவேற்றவில்லை என்றால் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

ஜன்லோக்பால்

கெஜரிவால் வந்தது மக்கள் பிரச்சனைகளைச் சரி செய்யவா அல்லது இந்த ஜன்லோக்பால் மட்டும் நிறைவேற்றவா!

டெல்லி ல 1000 பிரச்சனைகள் இருக்கிறது அதையெல்லாம் விட்டுவிட்டு “ஜன்லோக்பால் ஜன்லோக்பால்” என்று கூறி ராஜினாமா செய்து விட்டார்.

உண்மையில் இவர் ஜன்லோக்பால் காரணம் கூறினாலும் இவர் வாக்குறுதி கொடுத்த தண்ணீர், மின்சாரப் பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாததே காரணம்.

இதிலிருந்து தப்பிக்க ஜன்லோக்பால் காரணம் கூறி வெளியே வந்து விட்டார்.

லோக்சபா தேர்தலில் போட்டியிடவும் இது போல செய்தார் என்று கூறுகிறார்கள்.

கிடைத்த அனுபவத்தில் ஜன்லோக்பால் குறித்து எனக்கு தற்போது மாற்று கருத்து ஏற்பட்டு இருக்கிறது.

சட்டங்கள்

உண்மையில் மிகச் சிறப்பான / கடுமையான சட்டங்கள் ஏற்கனவே நம்மிடையே உள்ளது ஆனால், அதை நிறைவேற்றத் தான் உறுதியான தலைவர்கள் இல்லை.

சமீபத்தில் எங்கள் ஊர் கோபியில் “சந்திரசேகர் சகாமுரி” என்ற சப் கலெக்டர் கோபியையே கிடுகிடுக்க வைத்து விட்டார்.

அவனவன் அரண்டு போய்ட்டான். தவறு செய்து கொண்டு இருந்தவர்கள் கதிகலங்கி விட்டார்கள்.

எவருக்கும் பயப்படாமல் விதிமீறல்கள் செய்த அனைவரையும் சுளுக்கெடுத்தார்.

இந்த மாதிரி எல்லாம் ஒரு சப் கலெக்டர் செய்ய முடியும் என்பதையே அப்போது தான் மக்கள் உணர்ந்தார்கள். கோபியே தலைகீழாக மாறி விட்டது.

பின்னர் வழக்கம் போல அரசியல் நெருக்கடியினால் அவரை வேறு இடத்திற்கு மாற்றி விட்டார்கள்.

இதை எதற்குக் கூறுகிறேன் என்றால், ஏற்கனவே பல நல்ல சட்டங்கள் இருக்கிறது அதை சரியாக செயல்படுத்தினாலே போதும்.

நமக்குத் தேவை இதை நிறைவேற்ற உறுதியான அதிகாரிகள் / தலைவர்களே! புதிய சட்டங்கள் அல்ல.

இது போல எத்தனை ஜன்லோக்பால் அல்ல ஜன்லோக்தயிர் வந்தாலும் ஒரு பயனும் இல்லை.

என்னமோ இந்தச் சட்டத்தை இயற்றினால் இந்தியாவே திருந்திப் பாலும் தேனும் ஆறாக ஓடும் என்பது போல இதற்காக முதல்வர் பதவியையே ராஜினாமா செய்து ஸ்டன்ட் அடித்து இருக்கிறார்.

நானும் ஒரு காலத்தில் இந்த ஜன்லோக்பாலுக்காக குதித்தவன் தான்.

இதைப் புரிந்த கொண்டபின் என் கருத்தை மாற்றிக்கொண்டேன். இப்பவும் நான் குதிச்சதை நினைத்தால் கூச்சமாகத்தான் இருக்கிறது.

அதனால் தான் கெஜரிவால் விசயத்தில் அவசரப் படக்கூடாது என்று இருந்தேன்.

கெஜரிவால் ராஜினாமா செய்த பிறகு இன்னமும் அரசு வீட்டை காலி செய்யாமல் இருக்கிறார்.

கெஜரிவால் ராஜினாமா

கேட்டால், “என்னோட பையன் படிப்பு முடிந்த பிறகு மாற்றிக் கொள்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

சரி மாத வாடகை எவ்வளவு என்று பார்த்தால் 85000 ரூபாய்! இவர் தான் ஏழை மக்கள் கட்சித் தலைவரா! தனி விமானத்தில் குஜராத் சென்று பிரச்சாரம் செய்கிறார்.

கேட்டால் அதற்கு நான் செலவழிக்கவில்லை என்னை அழைத்தவர்கள் செலவு செய்தார்கள் என்கிறார்.

சரி இவர் கூறியது படியே வருவோம். இது போல மோடி கூறினால் ஒரு தில்லானாவே ஆடி விட மாட்டாரா! இவருக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா!

தீவிர பாஜக ஆதரவாளர்கள் இவர் காங்கிரஸ்க்காக செயல்படுகிறார் என்று கூறிக்கொண்டு இருந்த போது இவர் மீது உள்ள வெறுப்பில் கூறிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தான் எண்ணிக்கொண்டு இருந்தேன்.

ஆனால், இவரின் சமீப நடவடிக்கைகள் அதை உறுதிபடுத்துவது போலத்தான் இருக்கிறது.

ஊழலை எதிர்க்கவா? மோடியை எதிர்க்கவா?

எனக்கும் நிஜமாலுமே இவர் காங் க்காக வேலை பார்க்கிறாரோ! என்ற சந்தேகம் வந்து விட்டது.

இவர் ஊழலை எதிர்க்க வேண்டும் என்கிறார்.. சரி! நல்ல விஷயம் தான் ஆனால், காங் பற்றி எதுவுமே பேசுவதில்லையே!

இவர் திட்டிக்கொண்டு இருப்பது மோடியை மட்டுமே தானே!

உலகத்திலேயே ஒரு பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சியை விட்டுவிட்டு எதிர்க் கட்சியை மட்டும் திட்டிக்கொண்டு இருக்கும் ஒரே நபர் கெஜரிவால் மட்டுமே இருப்பார்.

நான் மோடியை திட்ட வேண்டாம் என்று கூறவில்லை, தாராளமாக திட்டட்டும்.

அவர் மீது இல்லாத குற்றச்சாட்டுகளா! ஆனால், மோடியை மட்டுமே ஏன்?! காங்கை திட்டுகிறார் ஆனால், அதெல்லாம் சும்மா பேருக்கு கொஞ்சம் கிள்ளி வைப்பது போல இருக்கிறது.

கெஜரிவால் கட்சி ஆரம்பித்ததே காங் செய்த வரைமுறை இல்லாத ஊழல்களை எதிர்த்துத் தான் ஆனால், இவர் காங் ஊழல் பற்றிப் பேசுவதே இல்லையே!

இவர் கட்சி ஆரம்பித்ததே மோடியை எதிர்க்கத்தான் என்பது போலத் தான் இவரது நடவடிக்கைகள் இருக்கின்றன.

கட்சி ஆரம்பித்ததன் நோக்கம் ஊழலை எதிர்க்கவா? மோடியை எதிர்க்கவா?

இவர் மோடியை எதிர்க்கத்தான் அரசியலுக்கு வந்தேன் என்று மற்றவர்கள் எதிர்ப்பது போல வெளிப்படையாகக் கூறி இருந்தால், இங்கே கேள்வியே இல்லை.

எதற்கு ஊழல் எதிர்ப்பு முகமூடி?

காங் செய்த ஊழல்கள் எத்தனை! தவறான பொருளாதார முடிவால் இந்தியா எதிர்கொள்ளப்போகும் பிரச்சனைகள், விவசாயத்துக்கு எதிராக உள்ள வெளிநாட்டு கொள்கைகள், மரபணு மாற்று விதைகளின் அனுமதிப்பு என்று இந்தியாவை அழித்த காங் செய்த செயல்கள் எத்தனை!

நியாயமாக இவர் என்ன செய்து இருக்க வேண்டும்?

காங் செய்த ஊழல்கள், தவறான பொருளாதாரக் கொள்கைகள் பற்றி மக்களிடையே பேசி / போராடி இருக்க வேண்டாமா! அட! இவர் இருந்த டெல்லி ஷீலா தீக்சிட் ஊழல் பற்றி தற்போது மூச்சே இல்லையே!

சோனியா இந்தியாவை எவ்வளவு ஒழித்துக்கட்டி இருக்கிறார்… அவரைப் பற்றி பேச்சே இல்லையே!

யாரை திருப்தி படுத்த?

திரும்பப் பொறுமையாக யோசித்துப்பாருங்கள், இவர் காங் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவே இல்லை என்பது புரியும். இப்படி செய்தால் சந்தேகம் வருமா வராதா!

ஆம் ஆத்மியில் பதவி வகிக்கும் எவரும் MP தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றார் ஆனால், வாரணாசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடுகிறேன் என்று கூறுகிறார்.

இவர் முதல்வர் பதவி தான் விலகினாரே தவிர இன்னமும் இவர் MLA தான்.

சரி விடுங்க! போட்டி போடுகிறாரே அதிலாவது இவர் தன்னுடைய தனித்துவத்தை காண்பிக்க வேண்டாமா!

அங்கே சென்று பட்டையும் கொட்டையுமா போஸ் கொடுக்கிறார். கங்கையில் முங்கி எழுகிறார். ஒரே ஹிந்துத்வா போஸாக இருக்கிறது.

ஏன் இத்தனை நாட்களாக கங்கை அங்கு இல்லையா? கடவுள் அங்கு இல்லையா? பின் ஏன்? யாரை திருப்தி படுத்த?

அங்கு இந்துக்கள் அதிகம் எனவே அவர்கள் ஓட்டைப் பெற இந்த நாடகம்.

இதை நான் தவறு என்று கூறவில்லை, அனைத்து அரசியல்வாதிகளும் செய்வது தான்.

ஆனால், இவரும் ஓட்டுக்காக பிச்சை எடுக்கும் வழக்கமான அரசியல்வாதி தான் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும் அல்லவா!

“அரசியல்வாதிகள் மதங்களை வைத்து நாட்டை சீரழித்து விட்டீர்கள்” என்று கூறி ஏன் நடிக்க வேண்டும்?

எப்ப மதங்களைத் திருப்திப்படுத்த நடிக்க ஆரம்பித்து விட்டாரோ அப்போதே இவரும் பத்தோடு பதினொன்று தானே! இதில் இவர் என்ன ஸ்பெஷல் தோசா!

நடுத்தர வகுப்பு மக்களுக்கு ஊழல் ஒழிய வேண்டும் என்பதில் இருக்கும் ஆர்வம் இவருக்கு நன்கு பயன்பட்டுக் கொண்டு இருக்கிறது.

இதை வைத்து மக்களைத் தெளிவாகக் குழப்பி அதில் மீன் பிடித்துக் கொண்டு இருக்கிறார்.

மேலாண்மை

இந்த ஊழல் பாட்டைப் பாடியே இவர் தன் திறமையின்மையை மறைத்துக்கொண்டு இருக்கிறார். திறமையுள்ள தலைவன் என்றால் என்ன செய்து இருக்க வேண்டும்?

கிடைத்த டெல்லி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி தன்னை தேர்ந்தெடுத்தது வீண் போகவில்லை என்று நிரூபித்துக் காட்டியிருக்க வேண்டாமா!

இதில் மோடியின் மேலாண்மை சரியில்லை என்று குறை கூறிக்கொண்டு இருக்கிறார். மோடி இவர் போல பயந்து கொண்டு ஓடி விடவில்லையே!

மோடி அனைவரும் கொடுக்கும் பில்டப் போல செய்யவில்லை என்றாலும் ஏதாவது ஒன்றிரண்டு செய்து இருக்கிறார் என்றே இருக்கட்டும்.

ஆனால், இவர் அதைக் கூடச் செய்யவில்லையே! இவருக்கு மோடியின் மேலாண்மை பற்றிக் கூற என்ன தகுதி இருக்கிறது.

49 நாட்களில் கெஜரிவால் தானே ஓடி வந்தார், யாரும் இவரை கையை பிடித்து இழுக்கலையே! அப்படியே இழுத்தாலும் எதிர்த்துப் போராட வேண்டியது தானே!

மோடிக்கு பட்டியல் போடும் இவர் அத்தனை ஊழல் செய்த காங் க்கு எத்தனை கேள்விகள் கேட்டார்?

ஊழல் ஒழிய நீ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆனால், அதற்குப் போராடும் கெஜரிவாலை கேள்வி கேட்கிறாய்? என்கிறார்கள். சரி இவர்கள் கேட்பதின் படியே வருகிறேன்.

முழுமையாக 50 நாட்கள் ஆட்சி நடத்த திறமையில்லாத இவரால், தொடர்ந்து மூன்று முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரின் மேலாண்மையை குறை கூற என்ன தகுதி இருக்கிறது?

கடந்த பதிவில் “இவருக்கு அவசரப்பட்டு ஆதரவு கொடுக்க வேண்டாம். ஏற்கனவே பல சம்பவங்களில் அனுபவம் இருக்கிறது.

எனவே, டெல்லியில் இவர் எப்படி செய்கிறார் என்பதைப் பார்த்து விட்டுப் பின்னர் முடிவு செய்யலாம்” என்று கூறி இருந்தேன்.

உடனே, மக்களின் நம்பிக்கையை சிதைக்காதீர்கள், மோடி ஆதரவினால் தான் இப்படி கூறுகிறீர்கள் என்று கொடி பிடிக்கிறார்கள்.

மோடி ஆதரவு

நான் மோடி ஆதரவு தான், அதை மறைத்தெல்லாம் எழுதவில்லை, மறைக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை.

வெளிப்படையாகத் தான் கூறி இருக்கிறேன். அதோடு ஏன் என்பதையும் விளக்கி இருக்கிறேன்.

சரி தற்போது என்ன சொல்கிறீர்கள்? கெஜரிவால் டெல்லியில் செய்த சொதப்பலுக்கு என்ன பதில் கூறப் போகிறீர்கள்?

இது போல பாதி!!யில் ஓடினால் திரும்ப ஏற்படும் தேர்தல் செலவு என்ன என்பதை எல்லாம் இவர் யோசித்தாரா?

தற்போது லோக்சபா தேர்தல் வருவதால் அதனோடு சேர்த்து சட்டமன்ற தேர்தலையும் வைத்து விட்டார்கள் இல்லையென்றால் இதற்கென்று தனியாகத் தானே வைத்து இருக்க முடியும்!

மக்கள் பணத்தை அரசியல்வாதிகள் வீண் செய்கிறார்கள் என்று கூற கெஜரிவாலுக்கு என்ன தகுதி இருக்கிறது?

உண்மையிலேயே மக்கள் பணத்தை வீணடிக்கக் கூடாது என்று நினைத்து இருந்தால், காங் பாஜக தரும் குடைச்சல்களை சமாளித்து தன்னை நிரூபித்து இருக்க வேண்டாமா?!

இது இவரது கட்சியை நிரூபிக்க எவ்வளவு ஒரு அருமையான வாய்ப்பு!

ஊழல் எதிர்ப்பு ஆர்வக் கோளாறில் இதே தவறை நானும் முன்பு செய்து இருக்கிறேன் ஆனால், தவறை ஒத்துக்கொண்டு என் கருத்தை மாற்றிக் கொண்டேன்.

இதை அவமானமாக நினைக்கவில்லை.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு அக்கறை இருக்கிறதோ அதே அளவு எனக்கும் இருக்கிறது.

இதுவரை ஊழல், இலவசம் குறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதி இருக்கிறேன்.

மோடி கிட்ட ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது இல்லையென்று மறுக்கவில்லை மறுக்கவும் முடியாது ஆனால், வேறு நபர்கள் இல்லையே!

சின்ன நகரமான டெல்லியையே நிர்வகிக்க முடியாதவரை எப்படி நம்புவது?

அதோடு இவர் சொன்னதுக்கு எதிராகவே தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறாரே!

நாட்டையே சீரழித்த காங் ஊழல்களை / தவறான பொருளாதார கொள்கைகளைப் பற்றி வாயே திறக்காமல் இருக்கும் இவரை, ஊழலை எதிர்க்க வந்தவர் என்று கூறுவது சிரிப்பாக இருக்கிறது.

ஒரே வாய்ப்பு

நாடு இருக்கும் நிலைக்கு நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ மோடி தான் தற்போதைய ஒரே வாய்ப்பு.

மோடியை ஆதரிப்பதால் அவர் செய்யும் அனைத்தையும் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் இல்லை.

சுருக்கமாக, மோடி ஒன்றும் உத்தமபுத்திரன் என்று நான் சான்றிதழ் கொடுக்கவில்லை. எனக்கு வேறு வழியில்லை. இது பற்றி ஏற்கனவே விரிவாகக் கூறி இருக்கிறேன்.

மோடி வேண்டாம் என்பவர்களிடம் யாரை கையைக் காட்டுகிறீர்கள் என்றால் பதில் இல்லை.

தற்போதைக்கு நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு காங் / பாஜக. இது தான் நிதர்சனம்.

இதைப் புரிந்து கொள்ளாமல் உணர்ச்சிவசப்படுவதால் எதுவும் நடந்து விடப்போவதில்லை. கெஜரிவால் போன்றவர்கள் குட்டையைக் குழப்பி மேலும் சிக்கலை அதிகரிக்க மட்டுமே முடியும்.

இதையெல்லாம் கூறுவதால் வழக்கம் போல திட்டுகள் தான் வரும் என்பதை அறியாதவன் அல்ல.

இந்தக் கட்டுரையை எதிர்ப்பவர்கள் மோடி இல்லையென்றால் வேறு யாரை ஆதரிக்க வேண்டும்? என்பதை பட்டென்று தெளிவாகக் கூறி விட்டுப் பின் தங்கள் கருத்தை விளக்கவும்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

12 COMMENTS

 1. கிரி அவர்களே ,

  உங்கள் கருத்து மிகவும் சரியானதே .நான் கூட ஆரம்பத்தில் கெஜிரிவாலை அப்படிதான் நினைத்தேன் .காரணம் பணம் இருந்தால் மட்டுமே அரசியலில் இறங்கி ஜெயிக்க முடியும் என்ற நிலையை மாற்றி சாமானிய மக்களாலும் வெற்றி பெற முடியும் என்பதை உணர்த்தினர் .எப்பேர்பட்ட ஒரு மாற்றம் .எத்தகைய ஒரு மகத்தான வெற்றியை இவர்களுக்கு மக்கள் கொடுத்தார்கள்.ஆனால் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றினார் .

  மோடி இவரைபோல் வாயால் வடை சுட-வில்லை .சாதித்து விட்டுதான் பேசுகிறார். மோடி கூறியதை போல இவர் ஒரு காங்கிரஸ் agent .மேலும் ஒரு விளம்பர பிரியராகவே காட்சி தருகிறார் .நாட்டின் தலைவிதியை மாற்ற இதைவிட ஒரு பொன்னான ஒரு வாய்ப்பு நம் மக்களுக்கு கிடைக்காது .ஆகவே தாமரைக்கு வாக்களித்து மோடி-ஜி அவர்களை பிரதமர் ஆக்குவதே நாட்டின் முன்னேற்றத்துக்கு அவசியம் .மேலும் பிஜேபி -யின் ஆட்சியில் ஊழலே நடக்காது என்று கூறவில்லை .குறைந்த பட்சம் நம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஆட்சியாகவே இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.தற்போதய நிலைமையில் மோடியை தவிர யாரும் அப்பதவிக்கு பொருத்தமானவர்கள் இல்லை என்பது என் கருத்து.

 2. நல்ல பதிவு…

  //ஆனால், மோடியை மட்டுமே என்?! காங்கை திட்டுகிறார்..//
  புரியவில்லை…பிழை இருக்கான்னு தெரியல…

  நன்றி சாமிராஜன்.

 3. நான் என்ன சொல்ல நினைக்கிறேனோ / சொல்லிக்கொண்டு இருக்கிறேனோ, அதையே நீங்க இந்த பதிவில் கூறிவிட்டீர்கள் கிரி. இதை படித்தாவது AAP ஆதரவாளர்கள் கொஞ்சம் யோசிக்கட்டும்.

 4. //தற்போது லோக்சபா தேர்தல் வருவதால் அதனோடு சேர்த்து சட்டமன்ற தேர்தலையும் வைத்து விட்டார்கள் இல்லையென்றால் இதற்கென்று தனியாகத் தானே வைத்து இருக்க முடியும்!//

  டெல்லியில் சட்டமன்ற தேர்தல் இப்பொழுது இல்லை.

  அரவிந்த் ஒரு மோசமானவர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளனர் பல விடயங்களை நீங்கள் விட்டு விட்டீர்கள்.

  இருப்பினும் இது ஒரு நல்ல பதிவு

 5. முழு நேர மோடி பிரச்சாகர் ஆகிவிட்டீர்கழள் போல. கெஜ்ரிவாலை திட்டுகின்றேன்ற பேர்ல மோடிக்கு ஒட்டு கேக்குறீங்க. பேருக்கு மோடியும் உத்தமன் இல்ல ஆனா எனக்கு வேரு வழி இல்லைனு சப்ப கட்டு எதுக்கு?. இதுல நடு நிலை வேசம் வேற.

 6. //தற்போது லோக்சபா தேர்தல் வருவதால் அதனோடு சேர்த்து சட்டமன்ற தேர்தலையும் வைத்து விட்டார்கள் இல்லையென்றால் இதற்கென்று தனியாகத் தானே வைத்து இருக்க முடியும்!//

  Delhi la Ipa president rule than nadakuthu….. Nichayama Makkal Panam waste than…. Kejirival ithuvaraikum Sonia, raja, salmon kurshid ethira yaarayum vetpaalara niruthala….

 7. Naam onrum seiya vendam kejriwal thaanaga ve azhivaar.azhinthu kondu irukiraar.adutha lok sabha therthalil kejriwal udan yaarum iruka maatargal. kejrival kuda nirka maatar. ipave kejriwal katchi il irupavargal verum veshadharigal thaan,kejriwalum serthu.so dnt worry.

 8. என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
  என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
  என்ற பாரதியின் வரிகள தான் நினைவுக்கு வருகிறது… இருட்டில் வாங்கிய சுதந்திரம் இன்னும் விடியவே இல்லை என்பது உண்மையே!!!!

  என்ன சொல்வது என்பதே தெரியவில்லை கிரி…

 9. நாங்க கமெண்டு போடுற அளவுக்காவது கொஞ்சம் செய்திய குறைங்க கிரி – இப்படி நாங்க சொல்ல வந்ததை எல்லாத்தையும் நீங்க சொல்லிட்டா நாங்க எப்படி கமெண்டு போடுறது.
  பதவிக்கு அல்லது சமூகத்தில் ஒரு அந்தஸ்துக்கு வந்ததுக்கு அப்புறம் வருமே ஒரு மரியாதை அந்த போதையில் திளைத்து விட்டால் அப்புறம் எது எக்கேடு கெட்டுபோனால் என்ன அந்த மரியாதை தான் முக்கியம் என்று ஆடும் ஆட்டத்தில் தான் ஒருவர் சுயரூபமே வெளிப்படுகிறது. அதிலும் அவர் அதை தக்கவைக்க போராடுவதில் நேர்மையை என்றும் கடைபிடிப்பதில்லை…
  உதாரணத்துக்கு : சினிமா நடிகைகள் / அரசியல் வாதிகள் / பல அலுவலக மேலதிகாரிகள்

 10. நாங்க கமெண்டு போடுற அளவுக்காவது கொஞ்சம் செய்திய குறைங்க கிரி – இப்படி நாங்க சொல்ல வந்ததை எல்லாத்தையும் நீங்க சொல்லிட்டா நாங்க எப்படி கமெண்டு போடுறது.
  பதவிக்கு அல்லது சமூகத்தில் ஒரு அந்தஸ்துக்கு வந்ததுக்கு அப்புறம் வருமே ஒரு மரியாதை அந்த போதையில் திளைத்து விட்டால் அப்புறம் எது எக்கேடு கெட்டுபோனால் என்ன அந்த மரியாதை தான் முக்கியம் என்று ஆடும் ஆட்டத்தில் தான் ஒருவர் சுயரூபமே வெளிப்படுகிறது. அதிலும் அவர் அதை தக்கவைக்க போராடுவதில் நேர்மையை என்றும் கடைபிடிப்பதில்லை…
  உதாரணத்துக்கு : சினிமா நடிகைகள் / அரசியல் வாதிகள் / பல அலுவலக மேலதிகாரிகள்.
  ஒருத்தன் நமக்கு வணக்கம் வச்சாலே ஒரு குருகுருப்பு வருமே – அதுதான் ஆரம்பம்.

 11. அனைவரின் வருகைக்கும் நன்றி

  @சாமி ராஜன் அது “ஏன்” என்று இருந்து இருக்க வேண்டும். மாற்றி விடுகிறேன் நன்றி.

  @புரட்சிமணி நான் கூறாமல் விட்டதை நீங்கள் கூறலாமே!

  @SNA நான் தான் தெளிவாக மோடியை ஆதரிக்கிறேன் என்று கூறி விட்டேன். அப்படி இருக்கும் போது நான் எப்படி நடுநிலை வேஷம் போடமுடியும்? நான் யாரையும் ஆதரிக்கவில்லை என்று கூறவில்லையே.

  நடுநிலை என்ற ஒன்றே உலகில் கிடையாது. ஏதாவது ஒரு பக்கம் தான் இருக்க முடியும். நடுநிலை என்ற பெயரில் இருப்பவர்கள் குழப்பவாதிகள். தாங்களும் குழம்பி அடுத்தவரையும் குழப்பி தெளிவான முடிவு எடுக்காதவர்கள். இவர்களால் எந்தப் பயனும் இல்லை. நல்லதோ கெட்டதோ ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டும். நான் மோடியை ஆதரிக்கிறேன் என்று தெளிவாகக் கூறி விட்டேன் பின்னர் நான் எப்படி நடு நிலையில் வர முடியும்.

  சரி! நான் கேட்ட கேள்விக்கு பதில் நீங்கள் கூறவில்லையே! மோடி இல்லையென்றால் யாரை ஆதரிக்க சொல்கிறீர்கள்?

  @யாசின் நீங்க இது கூறியதே பெரிய விஷயம்.

  @ராஜ்குமார் நீங்க இப்படி சொல்றீங்க புரட்சிமணி நான் நிறைய கூறாமல் விட்டுட்டேன் என்று கூறுகிறார் 🙂

  இவர் அதிகார போதை என்பதையும் தாண்டி கொஞ்சம் சிக்கலான ஆளா தோன்றுகிறது.

 12. It’s pretty that you don’t have basic understanding of Lokpal. In Karnataka Former CM Yeddyurappa is sacked because of Lokayukta is in practice in Karnataka. Regarding selection of candidate try to select based on candidate not on party’s, If you are not satisfied with anyone then try NOTA. BJP manifesto’s released today and they have mentioned that they will build Ram Temple in Ayodhya…Is it a secularism they follow. Is this any way help for the development of India. Does it stands anything against corruption? What kind of Safety and Security does Minorities will have under BJP’s rule?
  Last week Cobra post sting operation revealed that Babri demolition was planned by BJP, What more evidence do we want about BJP?? Also they have mentioned cancellation of Article 370…There is no much difference between Ellam and Kashmir

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here