பயணக் குறிப்புகள் [மார்ச் 2018]

4
gobichettipalayam

 

ங்கள் குடும்ப நண்பர் ஹோண்டா ஆக்டிவா போல ஒரு யமஹா வண்டியை வாங்கி இருந்தார். ஓட்டிப்பார்த்தேன், செமையாக இருந்தது. எந்த அதிர்வும் இல்லை, சும்மா பூ மாதிரி போகுது!

தள்ளுபடி போக விலை ₹ 66,000. லிட்டருக்கு 65 கிலோமீட்டர் கொடுப்பதாகக் கூறினார். நாங்கள் வாகனம் வாங்கலாம் என்று இருந்தோம், இது தற்போது பரிசீலனையில் உள்ளது.

பவள மல்லி

எங்கள் வீட்டில் இருந்த மரம் சுவரைப் பெயர்க்கிறது என்று வெட்டி விட்டோம். எனக்கு மனசே கேட்கலை, வேறு வழியும் இல்லை. வெளியே வைக்கலாம் என்றால் மின்சார Line செல்கிறது.

எரிச்சலாக உள்ளது, எந்தப் பிரச்சனையும் இல்லாத வீட்டில் மரம் வைக்க விருப்பமில்லை, விருப்பமுள்ளவர்கள் வீட்டில் இதுபோல நடைமுறை பிரச்சனைகள்.

“பவள மல்லி” செடி சல்லி வேர் என்பதால் இதை வைக்கத் திட்டமிட்டு இருக்கிறேன். வீட்டுக்கு வெளியே உயரமாகச் செல்லாத ஆனால், நிழல் தரும் மரத்தை வைக்க முடிவு செய்துள்ளேன்.

வருகிறவர்கள் எல்லோரும், “என்னங்க.. இப்படி அழகான மரத்தை வெட்டிட்டீங்க!” என்று துக்கம் விசாரித்து வருகிறார்கள். அடுத்த முறை ஊருக்குச் செல்லும் போது வைத்து விடுவேன்.

என்னை யார் பார்த்துக்கொள்வார்கள்?

அப்பாவைப் பார்த்துக்கொள்ள ஒருத்தர் நிச்சயம் வேண்டும். தற்போது என்னுடைய அக்காக்கள் மற்றும் அம்மா கவனித்துக் கொள்கிறார்கள்.

Readஅக்காவின் அன்பு தெரியுமா?

அப்பாவைப் பார்க்க வரும் அவரது நண்பர்கள் அல்லது வயது மூத்தவர்கள் பெரும்பாலானோருக்கு அப்பாவின் நிலையைவிடத் தான் படுத்துக்கொண்டால், யார் கவனித்துக்கொள்வார்கள் என்ற நியாயமான கவலையே ஆட்டிப்படைக்கிறது.

உங்க அப்பாவைக் கவனித்துக்கொள்ள நீங்கெல்லாம் இருக்கீங்க! நாங்க படுத்தால் யார் பார்த்துக்கொள்வார்கள்?!” என்ற நடைமுறை எதார்த்தம் அவர்களைக் குழப்புகிறது.

பெற்றோரை உடனிருந்து கவனித்துக்கொள்ளும் கடைசித் தலைமுறையாக நாம் தான் இருப்போம், அதிகபட்சம் இன்னும் ஒரு தலைமுறை இருக்கலாம். அதன் பிறகு வயதானவர்களுக்குச் சிக்கலே! கூட்டுக்குடும்ப முறை அழிவின் நெருக்கடிகள்.

Readவயதானவர்களின் நிலை என்ன?

பாசம்

வினய் யுவன் இருவருக்கும் விடுமுறை என்பதால், கழுதைக மாதிரி ஆடிட்டு இருக்கானுங்க.

போனதும் வினய் “அப்பா! ஆயா தோட்டத்துல ஒரு நாய் இருக்கு! நாங்க அது கூடத்தான் விளையாடிட்டு இருந்தோம். என்கூடப் பிரென்ட் ஆகிடுச்சு!” ன்னு உற்சாகமாக விவரித்துக்கொண்டு இருந்தான்.

வினய் என்னைப்போலவே நாய் என்றால் தனிப்பாசம், உற்சாகமாகி விடுவான்.

யுவன் “ஆமாம்! நான் பக்கத்துல நின்னுட்டு இருந்தேன்” என்று என்னைப் பார்த்தான். இவனுக்கு வினய் அளவுக்கு நாய் மீது விருப்பமில்லை என்றாலும், அவன் அண்ணன் மீது விருப்பம்.

வினய் என்ன செய்கிறானோ அதை அப்படியே யுவனும் செய்து கொண்டு இருப்பான்.

சென்னையில் எங்கள் வீடு அருகே உள்ள நிறுவனத்தில் இரு நாய்கள் உள்ளது, அவை இவனுக்கு நண்பர்கள். நாய் மீதான அன்பு கூட ஜீன் வழியாகத் தொடர்கிறது 🙂 .

Readநாய் நன்றியுள்ளது மட்டுமல்ல அன்பும் மிகுந்தது!

திமுக மாநாடு

ஈரோட்டில் திமுக மாநாடு என்பதால், கோபியில் ஏகப்பட்ட திமுக உடன்பிறப்புகள் பரபரப்பாக இருந்தார்கள், எங்குப் பார்த்தாலும் திமுக கொடி வாகனங்கள் என்று இருந்தன.

ஈரோட்டில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் மாநாடு என்றாலும், எதுக்கு வம்பு என்று ஞாயிறு எப்போதும் கிளம்பும் நேரத்தை விட விரைவிலேயே கிளம்பி விட்டேன் ஆனால், எங்குமே நெரிசல் இல்லை, நல்ல வேளை.

நினைத்த மாதிரியே ஈரோடு ரயில்நிலையம் கழகத்தினரால் நிரம்பி வழிந்தது, சிலர் போதையுடன் இருந்தார்கள். என்னுடைய Coach ல் 30 பேருக்கு மேல் இருந்தனர்.

ஒருத்தர் பேசிட்டே இருந்தார் திடீரென வாந்தி எடுத்து விட்டார், இன்னொருத்தர் யாரையோ “பொன்மொழிகளால்” திட்டிக்கொண்டு இருந்தார், சத்தமாக இருந்தது.

ரயில் 9 மணிக்குக் கிளம்பி சேலம் தாண்டியதும் பலர் அமைதியானார்கள். ஒரு இடத்தில் மட்டும் பெப்சியில் சரக்கு கலந்து குடித்துச் சத்தமாக இருந்தது, பின் அவர்களும் தூங்கி விட்டனர்.

கும்பலாக வருபவர்கள் சமயத்தில் இவை எல்லாம் வழக்கமானது என்பதால், பெரியளவில் அதிர்ச்சியில்லை.

நடுவில் சிக்கிய பெண்கள் தான் நெளிந்து கொண்டு இருந்தார்கள். 11.30 க்கு மேல் பேரமைதி, ரயிலின் “தடக் தடக்” சத்தம் மட்டுமே! 🙂 .

Readரயில் பயணங்கள்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. என்ன கில்லாடி மரத்தை வெட்டிட்டீங்களா 🙁

    சரிதான். நாம தான் கடைசி கூட்டுக்குடும்ப வாசிகள்.
    கொசுறு எழுதுங்க கில். விட்டுறாதிங்க

  2. கிரி தோழா
    fiverr online job பற்றி உங்களால் முழுப்பதிவு இட முடியுமா?
    100 வீதம் நம்பகத்தன்மை வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. பலபேருக்கு என்னையும் சேர்த்து வேலை கிடைக்கும்.

  3. பவள மல்லி : இந்த பெயர் என்னை சரித்திர காலத்திற்கு இழுத்து சென்றது.. கல்கி எழுதிய சோலைமலை இளவரசி நாவலில் முக்கிய கதாபாத்திரம்..

    கடைசி தலைமுறை : கூட்டு குடும்ப முறையில் வளர்ந்த நான், என்றும் இந்த அமைப்பை விரும்புபவன்… நீங்கள் அதிஷ்டசாலி… எல்லோருக்கும் இந்த வாய்ப்பு அமையாது..

    வினய், யுவன் : கோடைகால வெயிலை கரைத்து குடிங்க ராஜாக்களே!!! நவீனம் என்ற தொழில்நுட்ப சிறையில் அடைபடாதீர் குழந்தைகளே!!! REAL PLAY STATION உங்கள் கண்முன் கிராமத்தில் தான் உள்ளது.. பிடித்ததை விளையாடுங்கள், நிறைய நண்பர்களை ஏற்படுத்தி கொள்ளுங்கள்..

    கிரிக்கு : சிறையில் இருப்பவர்கள் கூட தினமும் அரைமணி நேரம் நடக்கவும் விளையாடவும் அனுமதிக்கபடுகிறார்கள். ஆனால் நம் வீட்டு பிள்ளைகள் கோடை விடுமுறையிலும் எதையாவது படிக்க மட்டுமே வேண்டும் என்ற மனப்பாங்கே நம்மிடம் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் விளையாட்டின் மீது நமக்கு விருப்பமேயில்லை.

    விளையாட்டை இழந்த சிறுவனுக்குள் என்ன தான் நினைவுகள் இருக்கும். விளையாட்டு வெறும் பொழுது போக்கு மட்டுமில்லை .அது வெற்றி, தோல்வியை புரிய வைக்கிறது போராட கற்று தருகிறது போட்டி மனப்பான்மையின் அவசியத்தை புரிந்து கொள்ள வைக்கிறது. தனித்திறன்களை வெளிப்படுத்த வைக்கிறது. கற்று தருகிறது. கற்க வைக்கிறது. புதிய நட்பை உருவாக்குகிறது. புதிய வெற்றிகளை பரிசாக தருகிறது. வீரத்தழும்புகளை உருவாக்குகிறது. அதுவரை இருந்த நமது அடையாளங்களை புதுப்பித்து மாற்றுவடிவம் தருகிறது.

    வீடுகளுக்குள் ஒடுங்கி இருந்து சுருங்கி போன சிறுவர்களுக்கு முடிவில்லாத வெட்ட வெளியை, மரங்களை, அணில்களை, பறவைகளை, ஆகாசத்தை, இரவு நேரத்தின் அடர்ந்த நட்சத்திரங்களை காட்டுவது நம் கடமை.. பகிர்வுக்கு நன்றி கிரி

  4. @விஜய் ஆமாங்க கேப்டன்.. வேற வழியில்லை 🙁

    கூட்டுக்குடும்பம் கதை முடிந்து வருகிறது.

    @pratheeoan இது பற்றி எனக்குத் தெரியாது. விசாரித்துப் பார்க்கிறேன்.

    @யாசின் பவளமல்லி நல்லா இருக்கு 🙂

    நான் பசங்களை வீட்டுல இருக்காமல் வெளியே விளையாடத்தான் கூறுவேன். சென்னை வீட்டருகில் நண்பர்கள் இல்லை. இப்பத்தான் பிடிச்சு இருக்கானுங்க. ஊருல நிறைய இருக்காங்க.

    அது தான் ஆடிட்டு இருக்கானுங்க 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!