வளர்ப்பு பிராணிகளில் நாய்க்கு தனி இடமுண்டு. நாய் நன்றியுள்ளது என்பது மட்டுமல்ல பாதுகாப்பு என்று வந்தால் மிரட்டி எடுக்கும்.
பூனையும் நாயும் வளர்ப்புப் பிராணிகளில் முன்னணி வகித்தாலும் நாய்க்கு இருக்கும் மதிப்பே தனி தான்.
சிலருக்கு நாய் என்றால் உயிர்! சிலருக்கு அருவருப்பு. எனக்கு உயிர் 🙂 .
நாய் மீதான விருப்பம் என்பது ஜீனில் கூட இருக்கிறது. தலைமுறை தலைமுறையாக நாய் மீது விருப்பம் கொண்டுள்ளவர்கள் இருக்கிறார்கள்.
இது எங்கள் குடும்பத்திலேயே உண்டு.
நாய் நன்றியுள்ளது
எங்கள் குடும்பத்தில் நான்கு தலைமுறையாக நாய் மீது அன்பு கொண்டுள்ளவர்கள் இருக்கிறார்கள்.
தாத்தா காலத்தில் இருந்து என் தலைமுறை வரை எங்கள் வீட்டில் நாய் மீதான அன்பு பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருக்கிறது.
தற்போது என் பையனும் நாய் என்றால் பிரியமாக இருக்கிறான்.
கிராமத்தில் இருந்து நகருக்கு வந்ததால் எங்களால் தொடர்ந்து நாயை வளர்க்க முடியவில்லை.
காரணம், வேறு எங்காவது செல்லும் போது அதைப் பராமரிக்க, சாப்பாடு கொடுக்க என்ற நடைமுறை சிக்கல்கள் இருந்ததால், தொடர்ந்து வளர்க்க முடியவில்லை.
ஆனால், நாய் வளர்க்க முடியவில்லையே என்று எனக்கு இருக்கும் வருத்தம் அளவிடமுடியாதது.
இது ஒரு ஏக்கமாகவே மாறி விட்டது. எங்காவது நாய்க் குட்டியைப் பார்த்தால், கையில் எடுத்துக்கலாம், தடவிக் கொடுக்கலாம் என்று தோன்றும்.
நாட்டு நாய்கள்
கிராமத்தில் இருந்த போது ஒரே சமயத்தில் மூன்று நாய்கள் இருந்தன. ஒரு பொம்மரேரியன் மற்றும் இரு நாட்டு நாய்கள்.
நாட்டு நாய்கள் நீங்கள் எப்படி நடந்து கொண்டாலும் எப்போதும் ஒரே மாதிரி அன்பை வெளிப்படுத்தும் ஆனால், பொம்மரேரியன் பொறாமைக் குணம் கொண்டவை.
இவற்றைக் கண்டு கொள்ளாமல் நாட்டு நாயிடம் நாம் கொஞ்சினால் போதும் இவைகளுக்கு பொறுக்காது. உடனே அவற்றுடன் சண்டைக்கு வந்து விடும்.
நாய்கள் சைக்கலாஜி சுவாரசியமானவை 🙂 .
நாய்க் குட்டிகளின் சேட்டைகளை எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காது. முகத்தில் நவரச நடிப்பைக்காட்டி நம்மை அசத்தும்.
நாய்க் குட்டி இருந்தால், நமக்கு நேரம் போவதே தெரியாது. ஏதாவது சுட்டித்தனமாக செய்து கொண்டே இருக்கும்.
வீட்டில் இருக்கும் போது நாம் எங்கெல்லாம் செல்கிறோமோ அங்கெல்லாம் காலுக்குள்ளயே சுற்றிக்கொண்டு இருக்கும்.
தனிமையில் இருப்பவர்களுக்கு நாய் ஒரு வரப்பிரசாதம்.
டைகர்
தோட்டத்தில் வசித்த போது “டைகர்” என்ற நாட்டு நாய் வளர்த்தோம்.
ஒருவர் நன்றியுடன் இருந்தால், சம்பளம் கொடுக்காம நாய் மாதிரி சாப்பாடு போட்டு வளர்க்கிறார்கள் என்று கூறுவார்கள் அல்லவா. முற்றிலும் உண்மை.
நாங்கள் தோட்டத்தில் இருந்ததால் இரவில் பாம்புகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். பாம்பை கொல்லப் / அடிக்கப் பயன்படுத்தும் கம்பு எப்போதும் தயாராக இருக்கும்.
பாம்பு வருகிறது என்றாலே டைகர் கத்தும் சத்தத்தில் வித்யாசத்தை உணரலாம்.
வழக்கமாக கத்துவதற்கும் பாம்பு போல ஒரு ஐந்து வந்தால், அதைப் பார்த்து கத்துவதற்கும் வித்யாசம் இருக்கும். இதை வைத்தே எச்சரிக்கையாகி விடுவோம்.
டைகருக்கு சாப்பாடு மட்டுமே போட்டோம் ஆனால், எங்களுக்கு இவன் செய்த உதவிக்கு நாங்கள் ஆயுளுக்கும் கடமைப்பட்டு இருக்கிறோம்.
வாசலில் கட்டி வைத்து இருப்போம். இதைத் தாண்டி எவரும் உள்ளே செல்ல முடியாது.
யார் வந்தாலும் கதவை திறக்கும் முன் டைகர் கட்டப்பட்டு உள்ளதா? என்று உறுதி செய்த பிறகே நுழைவார்கள். அந்தளவிற்கு மிரட்டலாக இருக்கும்.
அதன் வாழ்நாளில் குறைந்தது 50 பாம்பிற்கு மேல் கொன்று இருக்கும்.
இறுதியில் ஒரு பாம்புடன் சண்டை போட்டு இறந்தது எங்கள் குடும்பத்தில் எவராலும் தாங்க முடியவில்லை.
இதைப் புதைக்கும் போது சக மனிதருக்கு செய்யும் அனைத்து கடமைகளையும் செய்து புதைத்தோம்.
14 வயதாகியும் நல்ல உடல் நலத்துடன் இருந்த டைகர், பாம்புக் கடியால் விஷம் தாக்கி இறந்தது இன்று நினைத்தாலும் துக்கமாக இருக்கிறது.
டைகர் இறந்தாலும் பாம்பும் காலையில் இரண்டு துண்டாகக் கிடந்தது.
சிபி & கஃபி
இதன் பிறகு சிபி, கஃபி என்ற இரு நாய்கள் இருந்தன. இதில் சிபி என்பது பொம்மரேரியன், கஃபி நாட்டு நாய்.
சிபி போல ஒரு நாய் எங்களுக்கு திரும்ப கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
குழந்தையைப் போல குடும்பத்தினருடன் இருக்கும்.
நாங்கள் எங்காவது வெளியே சென்றால் நாங்கள் வரும் வரை வேறு எவரும் உணவு கொடுத்தால் கூட சாப்பிடாது. சோர்ந்து போய் இருக்கும்.
நாங்கள் வரும் சத்தம் கேட்டால் சிபி அடையும் மகிழ்ச்சியைப் பார்க்க கண்கள் கோடி வேண்டும்.
பொம்மரேரியனுக்கு ஒரு குணம் இருக்கிறது. எங்கே இருந்தாலும் ஏதாவது அடியில் தான் படுத்து இருக்கும். கட்டில் இருந்தால் கட்டில் அடியினுள் படுத்து இருக்கும்.
அம்மாவின் கட்டில் அடியில் தான் பெரும்பாலும் படுத்து இருக்கும். அம்மா / நாங்கள் யாரும் தூங்கும் போது வெளி ஆள் யாரும் நுழைய முடியாது.
முதலில் உர்ர்ர் என்ற சத்தம் மட்டும் வரும்.. அதையும் மீறி யாரும் சென்றால் கடி நிச்சயம் 🙂 .
அன்பு
நான் ஏழாம் வகுப்பில் இருந்து மாணவர் விடுதியில் தங்கிப் படித்தேன். எனவே, விடுமுறைக்கு மட்டுமே வீட்டில் இருப்பேன்.
இருப்பினும் இந்த நாய்கள் என் மீது வைத்து இருந்த அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
கஃபி க்கு கண்பார்வை மிகவும் உறுதி. விடுமுறையில் வரும் போது நான் தூரத்தில் நடந்து வரும் போதே என் நடையை வைத்தே கண்டு பிடித்து விடும்.
அப்போது கத்த ஆரம்பித்தால், நான் வந்து அவிழ்த்து விடும் வரை இதைக் கட்டுப்படுத்த முடியாது.
நான் அவிழ்த்து விட்டவுடன் அது செய்யும் அட்டகாசத்தை நினைத்தால் இன்றும் ஏக்கமாக இருக்கிறது.
YouTube / Mobile Camera
அப்போது YouTube / Mobile Camera இல்லை. இருந்து இருந்தால், இவற்றை எல்லாம் காணொளியாக எடுத்து வைத்து இருப்பேன்.
நான் அவிழ்த்து விட்டவுடன் இதனால் மகிழ்ச்சியை கட்டுப்படுத்தவே முடியாது. என்ன செய்வது என்றும் தெரியாது.
வீட்டில் முன் பகுதி வாசல் தோட்ட வீடு என்பதால் நீளமாக இருக்கும். அதோடு நெல் போட்டு வைக்கும் பெரிய களமும் இருக்கும்.
இதில் என்ன செய்வதென்றே தெரியாமல் ஐந்து நிமிடமாவது ஓடி களைத்த பிறகு என்னிடம் வந்து என்னை ஒரு வழி ஆக்கி விட்டுத் தான் ஓயும்.
காணொளி எடுத்து இருந்தால், காலத்துக்கும் பார்த்து மகிழும் நிகழ்வாகயிருக்கும்.
மல்லி
வீட்டில் இருந்த மற்ற சில நாய்களின் பெயர்கள் மல்லி (காதலன் படத்தில் ரகுவரன் பெயர் மீது இருந்த விருப்பத்தில் வைத்தது), ரோனி (மேலே முதல் படத்தில் இருப்பது), Bப்ளேக்கி. இவையல்லாமல் சில நாய்கள் இருந்தன.
தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு பல வசதிகள் இழப்புகள் என்று இருந்தாலும், அப்போது கேமரா இருந்து இருந்தால், நூற்றுக்கணக்கில் நிழற் படங்கள் எடுத்து இருக்கலாம்.
ஒரு நாய்க்கு குறைந்தது 50 படங்கள் என்று வைத்துக்கொண்டாலும் கிட்டத்தட்ட 400 படங்களாவது இருந்து இருக்கும்.
தற்போது இருப்பது 4 / 5 படங்கள் மட்டுமே!
தற்போது இன்ஸ்டாகிராமில் நாய்களுக்கு என்றே ஏகப்பட்ட பக்கங்கள் இருக்கிறது.
இவற்றைப் பார்க்கும் போது நாம் இது போல எடுக்க முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தம் இருக்கவே செய்கிறது.
உண்மைச் சம்பவம்
நீங்கள் செய்திகளில் மட்டுமே படித்த ஒரு உண்மை சம்பவத்தைக் கூறுகிறேன்.
எங்கள் வீட்டில் இருந்த ஒரு நாய் ஊளையிடுகிறது என்று எங்கள் ஊர் தாண்டி பல கிலோ மீட்டர் தொலைவில் இன்னொரு இடத்தில் தெரிந்தவர்கள் தோட்டத்தில் (காட்டுப்பகுதி) விட்டு இருந்தோம்.
சில நாட்களுக்குப் பிறகு எப்படியோ அதுவே எங்கள் வீட்டிற்கு வந்து விட்டது.
இதை உங்களால் நம்பமுடியவில்லை என்றாலும் இது தான் உண்மை. இன்று வரை எங்கள் குடும்பத்தினராலும் நம்ப முடியவில்லை.
இதை எழுதும் போதும் அதே வியப்பு உள்ளது. இது எப்படி சாத்தியம்!
மூத்த அக்கா வீட்டில் இரு நாய்கள் இருக்கிறது (ஸ்கூபி, Bப்ளேக்கி). நான் எப்போது சென்றாலும் என்னிடம் அவ்வளவு அன்பாக நடந்து கொள்ளும்.
மாமா கூட கிண்டலாகக் கூறுவார்.. “நீ வந்தா இதுகளுக்கு எப்படித் தான் இருக்குமோ.. இப்படி குதிக்குதுங்க!” என்று கூறுவார்.
நாய் அன்பு தான் ஆனால், நான் கூறுவது பழகின நாய். பழகாத நாய் / தெரு நாய் கிட்ட கொஞ்சிடாதீங்க, தொடைல கொஞ்சக் கறியை எடுத்து விடும் 🙂 .
விக்கி
இதற்கு முன்னாடி “விக்கி” என்ற நாய் இருந்தது, நான் வந்தால் கட்டப்பட்டுள்ள சங்கிலி பிய்ந்து விடும் அளவிற்கு இழுத்துக்கொண்டு இருக்கும்.
கழுத்தே இறுகி விடுமோ! என்று பயப்படும் அளவுக்கு என்னை நோக்கி வரும்.
வந்தவுடன் இதை தடவிக்கொடுத்து சில நிமிடங்கள் செலவழிக்கவில்லை என்றால், நான் வரும் வரை கத்தி எவரையும் பேச விடாது.
சில வருடங்கள் முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டது. இதன் இறப்பிற்கு பிறகு வந்த இரு நாய்கள் தான் மேற்கூறியவை.
நாய்களிடம் ஒரு பழக்கம் இருக்கிறது தங்கள் அன்புக்குரியவரை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்க நேர்ந்தால் மகிழ்ச்சியில் அவற்றிக்கு தலைகால் புரியாது.
கட்டப்பட்டு இருந்தால் அவிழ்த்து விடுவதற்குள் உணர்ச்சி வேகத்தில் சிறுநீர் கழித்து விடும் 🙂 .
கொஞ்சம் ஏமாந்தால் நம் ஆடையின் மீதே சர்ர்னு அடித்து விடும்.
நாயை பிடிக்காதவர்களுக்கு இது ஒரு அருவருப்பான விசயம் ஆனால், நாய் மீது அன்பு கொண்டுள்ளவர்கள் இதன் அன்பை புரிந்துகொள்ள முடியும்.
தலைமுறை கடந்தும் தொடரும் பந்தம்
நாய் மீதான பிரியமானது ஜீனிலேயே இருக்கிறது என்று கூறி இருந்தேன்.
இதற்கு ஒரு எடுத்துக்காட்டு, என் பையன் வினய் பிறந்ததில் இருந்து நாய் கூட பழக்கமே இல்லை.
இவன் பிறப்பதற்கு முன்பே நாங்கள் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்து விட்டோம் அதனால், நடைமுறை பிரச்சனைகள் காரணமாக நாய் வளர்க்க முடியவில்லை.
இருந்தும் இயல்பாகவே அவனுக்கு நாய் என்றால் பிடிக்கிறது. நான் எதுவும் அவனிடம் கூறவில்லை. அவனாகவே நாய் குட்டி எங்கே பார்த்தாலும் ஒட்டிக் கொள்கிறான்.
“அப்பா! நாமும் ஒரு நாய்க் குட்டி வாங்கிக்கலாமா?” என்று கேட்டுக்கொண்டு இருக்கிறான் 🙂 .
சித்தப்பா வீட்டில் (கிராமத்தில்) நாய் இருக்கிறது. இங்கே சென்றால் அங்குள்ள ஒரு நாயும் கூடவே சுற்றிக்கொண்டு இருக்கும்.
சென்னையில் வீட்டு அருகே உள்ள நாய்கள் கூட இவன் என்றால் பிரியம்.
என்றுமே மறக்காது
எங்குமே நான் பல மாதங்களுக்குப் பிறகே விடுமுறையில் செல்கிறேன் ஆனால், வருடங்களானாலும் என்றுமே மறக்காது.
மனிதர்களுக்கு மட்டுமல்ல நாய்களுக்கும் எண்ண அலைகள் ஒத்துப் போகிறது என்று நினைக்கிறேன்.
ஏனென்றால் நாய் மீது பிரியமாக இருப்பவர்கள் எங்கே சென்றாலும் அங்குள்ள நாயுடன் எளிதில் பழகி விடுவார்கள். உறவினர்கள் கூட இது பற்றி குறிப்பிடுவதுண்டு.
“உன் கிட்ட ஒட்டிக்கிச்சே!” என்று வியப்பாகக் கேட்பார்கள்.
இதோட ஓரளவிற்கு நாய் சைக்காலஜியும் தெரியும் என்பதால், கடித்து விடும் என்று தெரிந்தால் உஷாராக ஒதுங்கி விடுவேன்.
சில பார்த்தாலே… உர்ர்ன்னு பல்லைக் காட்டும் 🙂 .
நாய்களுக்கு ஒரு முறை பழக்கமானால், தான் சாகும் வரை மறக்காது. மோப்ப சக்தி, நடை, குரல் இவற்றை வைத்து உடனடியாக கண்டுபிடித்து விடும்.
நாம் யார் என்று தெரிந்து கொண்டு மகிழ்ச்சியில் வாலை ஆட்டும் பாருங்கள்..! இதெல்லாம் அனுபவிப்பவர்களாலே புரிந்து கொள்ள முடியும்.
அனைத்து நாய்களுமே சிறப்பாக அமைந்து விடாது. சில தொல்லையாக இருக்கும், யாருக்கும் கட்டுப்படாமல் சமாளிப்பது என்பதே பெரும் சிக்கலாகி விடும்.
நாய் அமைவதும் ஒரு அதிர்ஷ்டம் தான். நாய் வாங்கும் போது நாயின் அம்மா அப்பா தாத்தா வரைக்கும் பார்த்து வாங்குபவர்கள் இருக்கிறார்கள்.
இதைப் பற்றி விளக்கினால், தனிக் கட்டுரை எழுதும் அளவிற்கு விஷயம் உள்ளது.
நாய் திரும்ப வளர்க்கும் வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று அந்த நாளை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
நாயை கவுரவ சிம்பலாக வைத்துக்கொண்டு பந்தா காட்டுபவர்களுக்கு இக்கட்டுரை பொருந்தாது. நாயை மனதில் இருந்து நேசிப்பவர்களுக்கு மட்டும் சமர்ப்பணம்.
ஹிமாலயன்
இக்காணொளி மிகப் பிரபலமானது நீங்கள் ஏற்கனவே பார்த்து இருக்கக் கூடும். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காணொளி / கண்கலங்கவும் வைக்கும்.
Down Syndrome பிரச்சனையால் பாதிக்கப்பட்ட இக்குழந்தையின் பெயர் Hernan, இந்நாயின் பெயர் ஹிமாலயன்.
ஐந்தறிவு நாய்களுக்கு இருக்கும் புரிந்துணர்வு சில மனிதர்களுக்குக் கூட கிடையாது. ஆம்! நாய் நன்றியுள்ளது மட்டுமல்ல அன்பும் மிகுந்தது!
நாய் வளர்க்கும் வாய்ப்பு திரும்ப எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்….
https://www.facebook.com/giriblog
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
அருமையாகச் சொன்னீர்கள் சார், நாயை விரும்புகிறவர்களுக்கு மட்டும் தான் அதன் அன்பு புரியும்….
உண்மையில் என்னை பிரமிக்க வைத்த பதிவு கிரி.. சிறு வயதில் நாய்களுடன் அதிக பழக்கம் இல்லாமல் வளர்ந்த்தால் நாய்கள் என்றாலே கொஞ்சம் ஜர்க்கு தான்..(சிறு வயதில் ஒரு முறை 50 கிராம் கறி மிஸ்ஸிங்).. ஆனால் புறாக்களின் மீது கொண்ட காதல் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை… ஆறாம் வகுப்பிலிருந்து 12 வகுப்பு வரை நான் அதிக அளவில் நேரத்தை செலவிட்டது புறாக்களுடன் மட்டுமே!!! இன்றும் அமீரகத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் புறாக்களின் சப்தம் கேட்டால், ஒரு நிமிடம் நின்று பார்த்து விட்டு தான் செல்வேன்..
எதிர்காலத்தில்நிறைய புறாக்கள் வளர்க்க வேண்டும் என்ற ஆசை அதிக அளவில் உள்ளது… நாய்கள் நன்றி உள்ளவை என்று கேள்வி மட்டுமே பட்டு இருந்தேன், ஆனால் உங்கள் குடும்பத்துக்கு இத்தனை உதவிகள் புரிந்து உள்ளதது என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக உள்ளது… இனி நாய்கள் என்றாலே கிரியின் நினைவுகள் தான் வரும்…பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி..
Boss, enakum naigal’na romba ishtam, ana athoda age 7 yrsnu nenaichu tha vaangama eruka…atleast 10 yrs’na kooda enaku ok…avalavu pasama valathitu athu saagumbothu vara valiya enaku anubavika bayama eruku athunala tha na ipa varaikum valakavey try panunathu ila…ana evalavu muratu naya erunthalum rendu naal’la enaku frnd aakiduva..so pls athoda living age evalavunu detaila sona nala erukum boss…i want reply for this comment…..
அட்டகாசமான பதிவு
உங்களுக்கு நாய் புடிக்கும்னு எனக்கு தெரியாம போச்சே
ஒரு ஆம்பளை த்ரிஷா வா தெரியுறீங்க போங்க .. சும்மா சொன்னேன்
எனக்கு நாய் நா உயிர் தல
3 நாய் வளத்து இருக்கேன் – மணி, டைகர் , மணி-2 (மணி மறக்க முடியல அதனால). நாம எங்க இருந்தாலும் கண்டு புடிச்சு வரும் பாருங்க அதோட அன்புக்கு இணையே இல்லை
Down Syndrome வீடியோ கண் கலங்க வைக்குது .. பதிவு ரொம்ப ரசிச்சு எழுதி இருக்கீங்க .. நல்லா இருக்கு
இந்த படம் பாக்கலே நா கண்டிப்பா பாருங்க – “Hachi: A Dog’s Tale”
என்னோட நாய் ஞாபகம் வந்த கண்டிப்பா நான் பாக்குற படம் இது.
“நாய் வளர்க்கும் வாய்ப்பு திரும்ப எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்….” – ME TOO.. உங்க நல்ல மனசுக்கு கண்டிப்பா உங்களுக்கு கிடைக்கும் நு நம்பிக்கை இருக்கு
ஒரு தப்பு மட்டும் செஞ்சு இருக்கேன் நாய் வளர்க்கும் போது அது செம நாய் நு காட்ட அது ரோடு ல யாராவது துரத்தினா கொஞ்சும் லேட் டா தான் போயி தடுப்பேன் … அதுக்கு ரொம்ப வருத்த பட்டு இருக்கேன் பின்னாடி .. அந்த தப்ப மட்டும் செய்ய மாட்டேன்
– அருண்
நல்ல பதிர்வு. சீக்கிரமே நாய் வளர்க்கும் வாய்ப்புக் கிடைக்க வாழ்த்துகள்:).
நாங்கள் ஒரே ஒருநாய் வளர்த்திருக்கிறோம். ரெக்ஸ் என்று பெயர். இதே காரணத்துக்காக.. ஊளையிடுகிறதென வேறொரு ஊருக்குக் கொண்டு விட்டு விட்டார்கள். 2 ஆண்டுகள் கழித்து அந்த ஊர் கோவிலுக்குத் தாத்தா சென்றிருந்தபோது காரை அடையாளம் கண்டு பாதி வழி (20 கி.மீ) வரை பின்னாலேயே ஓடி வர, கவனித்து விட்டு வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்கள். ஒவ்வொருவரையும் பார்த்து அது கண்ணீர் விட்டு அழுதது மறக்க முடியாத நெகிழ்வான நிகழ்வு.
உங்கள் பதிவைப் படிக்கப் படிக்க நாங்கள் வளர்த்த ஜாக்கியும் நினைவுக்கு வந்தான். இடையில் கொஞ்சநேரம் படிப்பதை நிறுத்தி விட்டேன். கண்ணீரோடு கலங்கினேன். எங்கள் ஜாக்கி இறந்து வரும் 29 ஆம் தேதியுடன் ஒரு வருடம் ஆகப் போகிறது. அது இறந்தபோது ஜாக்கியின் நினைவாக எழுதிய எனது பதிவு ….
ஜென்மம் நிறைந்தது – சென்றது “ஜாக்கி”
http://tthamizhelango.blogspot.com/2013/09/blog-post_30.html
@ஜெயசீலன் 🙂
@யாசின் புறா ரசிகரா நீங்க.. ரைட்டு.
@ஷங்கர் இதற்காகவே யோசித்துட்டு இருந்தீங்க.. நாய் சராசரியாக 10 வருடங்கள் இருக்கும். நல்ல உடல் நிலையுடன் இருந்தால் 15 வருடங்கள் கூட இருக்கும். நீங்கள் தாராளமாக ஒரு நாய்க்குட்டி வாங்கி அதனுடன் சந்தோசமாக இருங்கள்.
@அருண் மணி 2 🙂 நீங்கள் வைத்தது போல நாங்களும் ஒரே பெயர் வைத்து இருக்கிறோம். Hachi: A Dog’s Tale செம்ம படம். இது போல படங்கள் நிறைய இருக்கு. இதில் வயதான நாய்க்கு வேற நாயை வைத்து விட்டார்கள்.. அதற்கே கொஞ்சம் ஒப்பனை செய்து நடிக்க வைத்து இருக்கலாம்.
இந்தப் படமெல்லாம் கண்ணீர் வராமல் பார்க்கவே முடியாது.
பின்னாடி வருத்தப்பட்டு இருக்கேன்னு சொல்லி இருக்கீங்களே.. கடி வாங்கினவங்க பின்னாடியா 🙂
@ராமலக்ஷ்மி அடேங்கப்பா!
@தமிழ் இளங்கோ நாயின் பிரிவு எப்போதுமே துயரமானது தான். எனக்கு நிறைய அனுபவம் இருக்கிறது.
படிச்சதல்லாம் விடுதியில் அப்புறம் வேலைக்காக வெளியூர் நாய் வளர்பதற்கான சந்தர்ப்பம் சிறிதும் கிடைத்தது கிடையாது.
மிக அருமையான பதிவு கிரி 🙂
இது போல படங்கள் நிறைய இருக்கு.
List please
– arun
awesome post anna..singam puli na kuda bayam illa..but dog na romba bayam..but after reading this konjam mindset maari iruku..thats good:)
@கமலக்கண்ணன் ரைட்டு 🙂
@அருண் Eight Below (2006), Hachi: A Dog’s Tale (2009) இது நீங்க பார்த்துட்டீங்க, K-9 (1989), A Tale of Mari and Three Puppies (2004) It is based on a true story in the 2004 Chūetsu earthquake. இவையல்லாமல் சில படங்கள் இருக்கிறது ஆனால், இவையே நான் ரொம்ப ரசித்தவை. இதில் A Tale of Mari and Three Puppies பற்றி ஏற்கனவே விமர்சனம் எழுதி இருக்கிறேன் நீங்க பார்க்கிறேன் என்று கூறி இருக்கீங்க..பார்த்தீங்களா என்று தெரியவில்லை.
@ஜானகி என்னது சிங்கம் புலி கூட பயமில்லையா.. டெல்லி ஜூ போகிற யோசனை இருக்கா 🙂
A Tale of Mari and Three Puppies – படம், விமர்சனம் ரெண்டுமே பாக்கல
பாத்துட்டு சொல்லுறேன் தல
டைம் இருந்தா இந்த list பாருங்க – cujo decent thriller
http://www.ranker.com/list/the-best-dog-movies/all-genre-movies-lists
– அருண்
மிக உணர்ச்சிப் பூர்வமான பதிவு கிரி. லைட்டா கண்ணு கலங்கிடுச்சு. எனக்கு பெரிய சைஸ் நாய்களைக் கண்டால் ரொம்ப பயம்..அதுவும் குலைச்சா அவ்வளோ தான்.. பப்பினா ரொம்பப் பிடிக்கும். எனக்கும் குட்டில இருந்து வளர்க்கணும்னு ரொம்ப நாளா ஆசை ஆனால் வாய்ப்புக் கிடைக்கலை. நிச்சயம் ஒரு நாள் வளர்க்கணும்.
கருவாயன், கருவாச்சி, நயன்தாரா, தங்கப்பாண்டி, அப்பு, காஞ்ச்சனா, குல்பி,சஞ்சய், விஜய், விக்கி, மணி, பாரதி, இவையெல்லாம் எங்கள் இருந்த நாய்கள் அண்ணா… இதில் இப்போது குல்பி மட்டும் உயிரோடு இருக்கிறது அண்ணா…
இதில் நயன்தாரா தங்கப்பாண்டி அப்பு காஞ்ச்சனா ஆகியோர் கருவாச்சி க்கு பிறந்தவர்கள் .
குல்பி விஜய் விக்கி சஞ்சாய் ஆகியோர் நயன்தாராவுக்கு பிறந்தவர்கள் அண்ணா …
அருமையான பதிவுங்க சகோ.