கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் எப்படியுள்ளது?

0
கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்

மிழகத்தில் அனைவரும் பெருமைப்படக்கூடிய மேம்பாலங்களில் ஒன்று கத்திப்பாரா. தற்போது கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் என்று மேம்படுத்தப்பட்டுள்ளது.

கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்

தமிழகத்தின் மிகச்சிறந்த பாலம் கட்டமைப்பில் முக்கியமானது, கத்திப்பாரா மேம்பாலம். கழுகுப்பார்வையில் பார்த்தால், வெளிநாட்டுப் பாலத்தைப் பார்ப்பது போல இருக்கும்.

கலைஞரின் ஆட்சியில் கட்டப்பட்ட இப்பாலமானது, மிகச்சிறந்த திட்டமிடுதலுடன் கட்டப்பட்ட பாலத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

எவ்வளவு அழகாக, திட்டமிட்டு அனைத்து வழிகளையும் இணைத்து அபாரமாகக் காட்டியுள்ளார்கள் என்ற வியப்பு இப்பாலத்தைக் கடக்கும் போது ஏற்படும், மிகப்பெருமையாகவும் இருக்கும்.

இது போல மிகச்சிறந்த பாலங்களில் சில அண்ணா மேம்பாலம், பாடி மேம்பாலம் ஆகியவற்றைக் கூறலாம். அதிலும் அண்ணா மேம்பாலம் அப்போதே திட்டமிட்டுக் கட்டப்பட்டது பெரிய விஷயம்.

அண்ணா மேம்பாலம் இல்லையென்றால், சென்னையே முடங்கி விடும்.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது மெட்ரோ நிறுவனத்துடன் இணைந்து 14.50 கோடி செலவில் கத்திப்பாரா பகுதியை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டது.

கொரோனா காரணமாகத் தள்ளிப்போடப்பட்டு ஒருவழியாக முடிந்து தற்போது முதல்வர் ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட்டது.

கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் எப்படியுள்ளது?

  • அ, ஆ, இ, ஈ உயிர் எழுத்துக்களை வரிசையாகப் பெரியளவில் வைத்துள்ளார்கள். இவை தமிழின் பெருமையை உணர்த்துவதாக உள்ளது.
  • தற்போது தான் மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளதால், மக்களை அனுமதிப்பது, வாகனங்களை நிறுத்துவதில், அனுமதிப்பதில் குழப்பமுள்ளது.
  • சாலையும் இதன் உள்ளே வருவதால், சில பேருந்துகளும் இதன் உள்ளே நுழையும் போது போக்குவரத்து நெரிசல் ஆகிறது.
  • கடைகள் பல கட்டப்பட்டுள்ளது ஆனால், இன்னும் சென்னை காஃபி தவிர (டிசம்பர் 26, 2021) வேறு யாரும் வரவில்லை.
  • இடையே பாலங்களின் தூண்கள் வருவதால், ஒரு முழுமையான பூங்காவாக இல்லாமல் இடைஞ்சல் உள்ளது ஆனால், இது தவிர்க்க முடியாதது.
  • விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் தாறுமாறாக உள்ளது. அங்குள்ள தற்காலிக கடைகள் திருவிழா உணர்வைக் கொடுத்தது.
  • வாகனங்களை நிறுத்த இடமுள்ளது ஆனால், பின்னர் இவை கூட்டம் காரணமாக மாற்றப்படலாம்.
  • தமிழகத்தின் சாபமாக எவ்வளவு சிறப்பாக எதைக்காட்டினாலும் பராமரிப்பு இருக்காது. இங்கே குப்பைத்தொட்டிகளே இல்லை.
  • இவ்வளவு பெரிய இடத்தில் ஒரே ஒரு இடத்தில் இருந்தது ஆனால், அதுவும் பலருக்கும் தெரியாத இடத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
  • தின்பண்டங்களைச் சாப்பிடுபவர்கள் குப்பை தொட்டி இருந்தாலே அங்கே போட மாட்டார்கள் ஆனால், குப்பை தொட்டிகள் இல்லை என்றால் எப்படி இருக்கும்!
  • கழிவறை பின்புறமாக இருப்பதால், தெரியாத சிலர் தங்கள் குழந்தைகளைத் தூண் அருகே சிறுநீர் கழிக்க வைத்தது கடுப்பாக இருந்தது.
  • கூட்டத்தைச் சமாளிக்கக்கூடிய அளவில் இடமில்லை. எனவே, முறைப்படுத்தவில்லையென்றால் வரும் காலங்களில் இங்கே போக்குவரத்து நெரிசல் ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
  • கடந்த வார இறுதியில் வந்த கூட்டத்தை வைத்து மக்களின் தேவைகள் என்னென்ன என்பதைப் புரிந்து இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
  • சென்னை மாநகராட்சி இதற்கென்று பொறுப்பாளர்களை அறிவித்து, அவர்கள் மூலமாகப் பூங்கா சரிவரப் பராமரிக்கப்பட வேண்டும்.
  • ஒருவேளை பராமரிப்பை மெட்ரோ நிறுவனம் வைத்து இருந்தால், அவர்கள் சரிவரப் பராமரிக்க வேண்டும்.
  • இல்லையென்றால், அழகு படுத்த, பொழுதுபோக்க, இளைப்பாற அமைக்கப்பட்ட இடம் அதற்கு நேரெதிரான நிலைமையிலேயே இருக்கும்.

குறைகள் இருந்தாலும், கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் மக்களுக்குச் சென்னையின் பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றை கூட்டியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மெரினா கடற்கரை சென்று வந்தது போல அனுபவத்தைக் கொடுக்கும். குடும்பத்துடன் செல்லப் பரிந்துரைக்கிறேன்.

தொடர்புடைய கட்டுரைகள்

சிங்காரச் சென்னை | Project Blue

சுவரொட்டி இல்லா சென்னை

சென்னை வெளி வட்டச் சாலை | Chennai Outer Ring Road

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!