தமிழக அரசு ‘Smart City‘ திட்டத்தில் 40 கோடி செலவில் சென்னையின் அடையாளங்களில் ஒன்றான தியாகராய நகரின் பாண்டிபஜாரை புதுப்பித்துள்ளது.
சென்னை பாண்டிபஜார்
இதை எப்ப ஆரம்பித்தாங்க என்றே தெரியலை, பல காலமாக வேலை செய்து கொண்டு இருந்தார்கள். பாண்டிபஜார் என்றாலே அதனுடைய மர நிழலும், நடைபாதை வியாபாரிகளும் தான் அடையாளம்.
நடைபாதை வியாபாரிகளை முன்பே தூக்கி விட்டார்கள், நல்லவேளை மரங்கள் தப்பித்து விட்டன.
இதை வெட்டாமல் மேம்படுத்த வேண்டும் என்ற மக்களின் வேண்டுகோளை ஏற்று மரங்களை அப்படியே விட்டு அழகுபடுத்தியுள்ளார்கள்.
தற்போது நடைபாதை பகுதியை மிகப்பெரிய சாலை அளவுக்கு விரிவு செய்துள்ளார்கள். எதற்கு இவ்வளவு பெரிய பாதை என்று தெரியவில்லை.
ஒருவேளை நடப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார்களோ என்னவோ!
ஏனென்றால், இங்குள்ள ஒரு வழிப்பாதையை விட நடைபாதை மிகப்பெரியது.
இப்பகுதி திறக்கப்பட்ட உடனே சென்றதால், வாகனத்தை நிறுத்தி நிழற்படம் எடுக்க முடியவில்லை.
புது வழி மாற்றங்கள் என்பதால், அதைச் சரி செய்யக் காவலர்கள் நின்று கொண்டு இருந்ததால், வாகனத்தை ஓரமாக நிறுத்த அனுமதிக்கவில்லை.
எனவே, இப்படங்களை அவசரத்தில் மட்டுமே எடுக்க முடிந்தது.
பாண்டிபஜாருக்கும் எனக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. படிக்கச் சென்னை முதன் முதலில் வந்த போது இப்பகுதியில் தான் இரண்டு வருடங்கள் படித்தேன்.
எனவே, பெரும்பாலும் தினமும் இங்கே தான் சுற்றிக்கொண்டு இருப்பேன்.
என்னுடன் படித்த நண்பன் பாலாஜி வீடு தியாகராயநகரில் உள்ளது, அதோட அவன் நிரந்தர சென்னைவாசி.
எனவே, நடைபாதை கடைகளில் ஏதாவது வாங்க வேண்டும் என்றால் இவனைத் தான் அழைத்துச் செல்வேன்.
பேரம்
கடைக்காரர் துணியை ₹200 கூறினால், ₹150 க்கு கேட்கலாமா என்று யோசித்துக்கொண்டு இருந்தால், ‘₹50 ரூபாய்க்கு கொடுங்க‘ என்று பீதியை கிளப்புவான் 😀 .
‘டேய்! என்னடா மனசாட்சியே இல்லாம விலை சொல்றே..‘ என்றால், ‘அப்பத்தான்டா இவங்க ₹80 க்கு வருவாங்க‘ என்று கிறுகிறுக்க வைப்பான்.
என் வாழ்க்கையில் இவன மாதிரி விலை அடித்துப் பேசி யாரையும் பார்த்தது இல்லை.
சாதாரணமாகப் பேசிக்கொண்டு இருக்கும் கடைக்காரரே இவன் கேட்ட விலையையால் ஜெர்க்காகி ‘யார்ரா இவன்‘ என்று கொலைவெறியோடு திரும்புவார்.
எனக்கு வயிற்றைக் கலக்கி விடும்.. ‘டேய்! வாடா போலாம்‘னு இழுத்தால்.. ‘இருடா‘ன்னு.. பேசி.. அவர் சொன்ன விலையை விட 50% – 60% குறைத்து வாங்கி சிரித்து திகிலாக்குவான்.
நண்பன் நந்தகோபால் உணவு & தங்கும் விடுதி இங்கே இருந்தது (சரவணபவன் உணவகம் அருகே). எனவே, அவன் கூட மேல் மாடி சென்று அமர்ந்து இருப்பேன்.
அவன் பயம் இல்லாமல் அவ்வளவு உயரத்தில் சிறிய கைப்பிடி சுவரில் அமர்ந்து இருப்பான்.
அங்கே இருந்து கீழே பார்த்தாலே எனக்கு வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும், அடி வயிற்றில் ஜிலீர்னு இருக்கும். உயரம் என்றால் எனக்கு உதறல்.
இங்குள்ள உணவகங்கள், அஞ்சல் அலுவலகம், நடேசன் பூங்கா, ரங்கநாதன் தெரு, பனகல் பூங்கா, நான் இன்று வரை (17+ வருடங்களாக) செல்லும் முடி திருத்தகம் ‘ராஜ் பாண்டியன்’ என அனைத்துமே என் மனதுக்கு நெருக்கமானவை.
Read : தலைக்கு மேலே வேலை
பனகல் பூங்காவிலும், பாண்டிபஜாரிலும் விஜய் நடித்த ‘கோயமுத்தூர் மாப்பிள்ளை’ படக் காட்சி எடுத்தார்கள் 🙂 . அப்போது விஜய் வளர்ந்து வரும் நடிகர்.
40 கோடி
இப்பகுதியை புதுப்பிக்க 40 கோடி ஆனதாகக் கூறியுள்ளார்கள். இதைப் புதுப்பிக்க 40 கோடி என்பது அநியாயமாக உள்ளது. அவ்வளவு செலவுக்கு இங்கே என்ன நடந்தது?!
இவையல்லாமல் சாலை மேம்பாட்டுக்குக் கூடுதல் கோடிகளாம். ஏற்கனவே இங்கே வந்தவர்கள் 40 கோடிக்கு என்ன செய்யப்பட்டுள்ளது? என்று சிந்தித்துப் பாருங்கள்.
மக்கள் வரிப்பணம் வரைமுறையே இல்லாமல் அனைத்து இடங்களிலும் வீணடிக்கப்படுகிறது.
புதுப்பிக்கப்பட்ட சென்னை பாண்டிபஜார் பற்றித் தினமலர் செய்தித்தளம் காணொளி வெளியிட்டுள்ளது. இதைப்பார்த்தால் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி அந்த பனகல் பார்க் எதிரே இருக்கும் ராமகிருஷ்ணா மெயின் ஸ்கூலில் தான் நான் படித்தேன். அப்போ எல்லாம் இந்த மாதிரி ஷாப்பிங் சென்டர் கெடயாது . ஒரு முறை ஒரு திருமணத்துக்கு என் அம்மா என்னுடன் வந்த போது திரும்பி செல்ல பஸ் இல்லாமலும் அதே சமயம் ஆள் அரவாற்றும் இல்லாமல் ரொம்பவும் பயந்து பயந்து வீடு திரும்பியது ஞாபகம் இருக்கு… எனக்கு தெரிஞ்சு ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் ரோட்ல தான் நெறய கடைகள் அதுவும் இப்போ பிரிட்ஜ் கட்டின பிறகு வந்து இருக்கு அதுக்கு ஏதாச்சும் செய்வாங்கன்னு பாத்தா … 40 கோடி எல்லாம் டூ த்ரீ மச்
ஓ அந்த பள்ளியா! 🙂 ரொம்ப பக்கம். இப்பெல்லாம் இரவு முழுக்க பரபரப்பாக தான் இருக்கிறது. மிகப்பெரிய மாற்றம்.
இரவு உணவு சாப்பிட வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
40 கோடி அநியாயம் தான்.
கிரி.. எனது ஊர் சென்னைக்கு கொஞ்சம் அருகில் இருந்தாலும், தந்தையின் இறப்பிற்கு பின் எனக்கும் சென்னைக்குமான தொடர்பு மிக குறைந்து விட்டது.. பேரம் பேசி வாங்கற மேட்டர சொல்லி இருந்திங்க இல்ல!!! என்னோட அனுபவத்தை பகிர்கிறேன். என் நிறுவன முதலாளி 10 ஆண்டுகளுக்கு முன், நான் வேலைக்கு வந்த புதிதில், என் நண்பனை ஒரு ஈமெயில் அனுப்பச் சொன்னார்..அவர் என்ன சொன்னார்னு நண்பனுக்கு புரியவில்லை.. சரி சரி என்று தலையாட்டிவிட்டு என்னிடம் வந்து விஷியத்தை கூறினான்..
நானும் குத்து மதிப்பா ஒரு லெட்டர் டைப் பண்ணி ட்ராப்ட் அவர் கிட்ட காட்டு, அப்ப என்ன சொல்லி இருப்பார்னு புரிஞ்சிக்கலனு, நீ லெட்டர் கரெக்ட் பண்ணிக்கலாம் என்று ஆலோசனை கூறினேன்.. ட்ராப்ட் நான் தான் ரெடி பண்ணேன். மேட்டர் என்னன்னா, ஒரு நிறுவனம் திவால் ஆகிவிட்டது..அதோட சரக்கோட (ஆட்டோமொபைல் உதிரி பாகம்) மொத்த மதிப்பு 10 லட்சம் டாலர்.. என்னோட முதலாளி, 30 % என நண்பனிடம் கூற, நாங்க புரிந்து கொண்டது 10 லட்சம் சரக்கை 30 % தள்ளுபடி போக 7 லட்சத்துக்கு கேட்கற மாதிரி லெட்டர் ட்ராப்ட் அடிச்சி நண்பன் எடுத்துக்கொண்டு போனான்..
அவரோட முகம் சிவந்து போச்சி!!! நடந்து என்னன்னா, 10 லட்சம் சரக்க வெறும் 30000 டொலரருக்கு எங்க முதலாளி கேட்டு லெட்டர் அடிக்க சொல்லி இருக்கார்… இவன் லெட்டர்ல 7 லட்சம் டாலர் இருக்கறத பார்த்து டென்ஷன் ஆகிட்டார்.. 200 பொருளை 50 கேட்ட உங்க நண்பன் எங்க…!!! 10 லட்சம் சரக்க வெறும் 300000 கேட்ட எங்க முதலாளி எங்க!!!! .. நானும் நண்பனும் முதலாளி தண்ணியிலே தயிர் எடுப்பார்னு நாங்க நக்கலா சிரிச்சோம்!!!
இதுல கொடுமை என்னனா??? அந்த ஆர்டர் எங்களுக்கு கிடைக்கல.. ஆனால் 4 வருசத்துக்கு அப்பறம் அதே சரக்க, வெறும் 15000 டாலருக்கு நாங்க தான் அதை வாங்கினோம்.. முதலாளியோட திறமையை கண்டு வியந்தோம் .. இன்றும் வியக்கிறேன்.. அவரை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.. அவ்வளவு அனுபவம்.. பகிர்வு நன்றி கிரி.
செம.. ஆனால், அந்தப்பொருளுக்கு அதே மதிப்பு இருக்காது அல்லவா!
சில நேரங்களில் சிலர் எடுக்கும் முடிவுகள் பார்த்து அப்போது சாதாரணமாக நினைத்து பின்னர் அடேங்கப்பா! என்று நினைக்க தோன்றுகிறது.
சிலர் வியாபாரத்தில் கரை கண்டவர்கள் 🙂
ஆட்டோமொபைல் உதிரிபாகம் என்பதால் பழையப்பொருளுக்கு மதிப்பு எப்போதும் அதிகம் தான்.. மதிப்பு என்றும் குறையாது.. EXPIRY தேதியும் கிடையாது.. சில குறிப்பிட்ட பொருட்களை தவிர்த்து..
சூப்பர் 🙂