புத்துயிர் பெறும் தமிழக ஏரி குளங்கள்

2
புத்துயிர் பெறும் தமிழக ஏரி குளங்கள்

டந்த சில வருடங்களாக ஏரி குளங்கள் புனரமைப்பதில் தமிழகம் முன்னேற்றம் கண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. Image Credit

புத்துயிர் பெறும் தமிழக ஏரி குளங்கள்

தமிழகத்தில் குடிமராமத்து, ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் ஏரி குளங்களைச் சீரமைத்து வருகிறார்கள்.

குறிப்பிடத்தக்க மாற்றமாக ஆவடி பருத்திப்பட்டு ஏரியையும், விரைவில் திறக்கப்படப்போகும் வில்லிவாக்கம் ஏரியையும் கூறலாம்.

இவை தவிரத் தமிழகம் முழுக்கப் பல ஏரி குளங்கள் சீர்படுத்தப்பட்டுள்ளன.

ஏரி குளங்கள் மீதான அக்கறையை இரு அரசுகளும் பல காலமாகப் புறக்கணித்ததால் ஆக்கிரமிப்புகள் தோன்றி, ஏரி குளம் பரப்பளவு பெருமளவில் குறைந்து விட்டது.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தாலும், அதைச் செயல்படுத்துவதில் அரசுகள் அரசியல் காரணங்களால் நடவடிக்கை எடுக்காமல் இருந்தன.

தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டு வருவது மகிழ்ச்சி.

தவறவிடப்பட்ட வாய்ப்பு

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் ஏராளமான ஏரி குளங்கள் புனரமைக்கப்பட்டன.

2019 ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சி காரணமாகச் சென்னை பூண்டி, புழல் ஏரிகள் வற்றியது. தூர்வாரக் கிடைத்த சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி அரசு செய்த நிர்வாகத் தாமதத்தால் குறைவான பகுதியையே தூர் வார முடிந்தது.

இக்காலத்தைப் பயன்படுத்தி ஆழப்படுத்தியிருந்தால், எதிர்காலத்தில் கூடுதல் மழை நீரை சேமித்து இருக்க முடியும், பலர் பயன் பெற்று இருப்பார்கள்.

வேளச்சேரி, போரூர் ஏரிகள்

சென்னையில் தற்போதைய உடனடி தேவையாக வேளச்சேரி, போரூர் ஏரிகளைச் சீர்படுத்த வேண்டியது அவசியம்.

வேளச்சேரி ஏரியின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிலைகளை மீட்டெடுத்தே ஆக வேண்டும்.

200 ஏக்கர் இருந்தது தற்போது 50 ஏக்கர் அளவு மட்டுமே உள்ளது. அதுவும் படுமோசமான நிலையில் உள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க பகுதி ஏரியை, குடிசை மாற்று வாரியம் அழித்து வீடுகளைக் கட்டி விட்டது, மீதி ஆக்கிரமிப்பில் உள்ளது.

சமீபத்தில் போரூர் ஏரியில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவதாகப் புகார் வந்ததால், ஆய்வு செய்த சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் இதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

போரூர் ஏரியின் பரப்பளவு 252 ஏக்கர் ஆனால், தண்ணீர் உள்ள பகுதி 60 ஏக்கர் என்றும் மீதி கருவேல மரம் மற்றும் ஆக்கிரமிப்புகளால் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளது என்றார்.

இவற்றை அகற்றி, ஏரி ஆழப்படுத்தப்பட்டு, சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுச் சீரமைக்கப்படும் என்று கூறிய இவர் வார்த்தைகள் நம்பிக்கை அளிக்கிறது.

ஏற்கனவே, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல சீரமைப்புகளைச் செய்து வரும் நிலையில் போரூர் ஏரியையும் சீரமைக்க வேண்டும்.

சென்னை வெளி வட்டச் சாலையில் உள்ள ஏரி குளங்களைத் தற்போது தூர் வாரி வருகிறார்கள்.

முன்மாதிரி நகரமாகக் கோவை

ஏரி குளங்களைப் பாதுகாப்பதில், சீரமைப்பதில் அனைத்து மாவட்டங்களுக்கும் முன்மாதிரியான மாவட்டம் என்றால் கோவையைக் கூறலாம்.

இங்குச் சிறுதுளி அமைப்பு முதல் ஏராளமான தன்னார்வல அமைப்புகள் உள்ளன. இவர்கள் அனைவரும் தனித்தனியாகவும், ஒருங்கிணைந்தும் சீரமைத்தனர்.

கோவையில் குளங்கள், ஏரிகள் நல்ல நிலைமையில் இருக்கப் பெரும்பான்மை காரணம் இவர்களே. இவர்களுக்கு மாநகராட்சியும் ஒத்துழைப்புக் கொடுத்தது.

நொய்யல் ஆற்றைச் சீரமைக்க இது போல முயற்சி எடுக்கப்பட்டு அதில் மாற்றம் கொண்டு வந்துள்ளார்கள்.

தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அனைத்து ஏரி குளங்களும் மாற்றம் கண்டு வருகின்றன.

சமீபத்தில் முத்தண்ணன் குளத்தில் 100 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்டன.

கிட்டத்தட்ட 1500+ வீடுகள் கடைகள் அகற்றப்பட்டன. இங்கே இருந்த கோவிலை அகற்றியதுக்குத் தான் போராட்டம் நடைபெற்றது.

நீர் நிலை ஆக்கிரமிப்பில் கோவிலோ, மசூதியோ, தேவாலயமோ எது இருந்தாலும் அகற்றப்பட வேண்டும்.

இதில் எந்தப் பாகுபாடும் காட்டக் கூடாது. நீர் நிலை ஆக்கிரமிப்புகள் மீது கருணை காட்டக் கூடாது.

இவ்வாறு மீட்கப்படும் இடங்கள் முழுமையாகத் தண்ணீர் சேமிப்பு பயன்பாட்டுக்கு வருகிறதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

சென்னையில் ஏன் கண்டு கொள்ளப்படவில்லை?

சென்னையில் கோவை போல மக்கள் / தன்னார்வலர்கள் நடவடிக்கை எடுக்காததற்குக் காரணம், சென்னை அவர்களுக்குச் சொந்த ஊர் அல்ல.

கோவையில் உள்ளவர்கள் அவர்கள் சொந்த ஊர் என்பதால், கூடுதல் அக்கறையுடன் செயல்படுகிறார்கள்.

ஆனால், சென்னையில் உள்ளவர்கள் பெரும்பாலும் மற்ற மாவட்டங்களிலிருந்து வந்து வசிப்பவர்கள். எனவே, கோவையைப் போல முயற்சிகளை எடுக்கவில்லை.

இருப்பினும், பல்வேறு பகுதிகளில் தூர்வாருவது உட்படப் பல நடவடிக்கைகளை எடுத்தார்கள் ஆனாலும், அதைச் சரியாகப் பராமரிக்க முடியவில்லை.

தற்போது அரசே ஆர்வத்துடன் நீர்நிலைகளைச் சீரமைத்து வருவது குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் செய்து வருவது நம்பிக்கையளிக்கிறது.

ஏரியை எப்படிப் பாதுகாப்பது?

குளம், ஏரியை ஆக்கிரமிப்பு மற்றும் குப்பைகள் கொட்டுவதிலிருந்து பாதுகாக்க சிறந்த வழி சுற்றுச்சுவர் அமைப்பது, நடைபாதை பூங்கா அமைத்துப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடுவது.

சுற்றுச்சுவர், பொதுமக்கள் நடமாட்டம், பூங்கா போன்றவை இருந்தால் மட்டுமே ஆக்கிரமிப்புச் செய்ய முடியாது.

மக்கள் நடை பயிற்சி செய்ய இடமில்லை.

எனவே, இவ்வாறு அமைப்பதன் மூலம் ஏரி, குளங்களைப் பாதுகாப்பதோடு மக்களின் உடற்பயிற்சி பழக்கங்களையும் ஊக்கப்படுத்தலாம்.

அதோடு ஏரி குளங்களுக்கு ஒரே ஒரு வழியை மட்டுமே அனுமதிக்க வேண்டும். பருத்திப்பட்டு ஏரி இது போல உள்ளது.

இங்கே ஒரு வழியில் மட்டுமே பொதுமக்கள் உள்ளே நுழைய முடியும்.

இவற்றைச் செய்யவில்லையென்றால், எவ்வளவு கோடி செலவழித்துப் புனரமைக்கப்பட்டாலும் சில காலங்களில் திரும்ப ஆக்கிரமிப்பு, சீர்கேடு, குப்பை என்ற பழைய நிலையையே அடையும்.

ஆக்கிரமிப்பில் இருந்தவர்களுக்கு நீர், மின்சாரம் கொடுத்ததுக்குக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ஆனால், இவை எப்போதும் கண்டுகொள்ளப்படுவதில்லை.

ஏரி குளங்கள் புனரமைப்புக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள், நிதி ஒதுக்கீடு பெருமளவில் உதவி வருகிறது.

திமுக அரசு (2021) தற்போது வரை சிறப்பாகச் செய்து வருகிறது. இனி வரும் நாட்களில் மேலும் பல ஏரி குளங்களைப் புனரமைக்கும் என்று நம்பலாம்.

கொசுறு

ஏரி குளங்கள் மேம்படுத்துவது அல்லாமல், மியாவாக்கி முறையில் காடுகளை அமைத்து வருகிறார்கள். இதுபற்றிப் பின்னர் ஒரு கட்டுரையில் காண்போம்.

தொடர்புடைய கட்டுரைகள்

ஏரி குளம் தூர்வாருவது எளிதல்ல!

ஆக்கிரமிப்பால் அழியும் சென்னை!

தூர்வாரும் பணியில் இளைஞர்கள்

சென்னை வெளி வட்டச் சாலை

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி, மற்ற நாடுகளை காணும் போது இயற்கை நமக்கு கொடுத்துள்ளது பெரும் கொடை.. பல நாடுகளில் நிறைய பணம் செலவு செய்து செயற்கையாக (மழை, காடுகள், ஆறுகள், ஏரிகள்,தோட்டங்கள்) உருவாக்குகிறார்கள்.. ஆனால் நமக்கு இயற்கை எல்லாவற்றையும் இலவசமாக வழங்கி உள்ளது.. அதற்க்கு நன்றி செலுத்தவில்லை என்றாலும் பரவாயில்லை.. குறைந்த பட்சம் இயற்கையை பாழக்காமல் இருந்தாலே போதும்.. மேலை நாடுகளில் இயற்கைக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை கண்டு பல முறை வியந்து இருக்கிறேன்.. இங்கு அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனுமதியின்றி அணுவும் அசையாது என்பது தான் உண்மை!!! பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. தமிழகத்தில் தற்போது ஏரி குளம் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. அதோடு மத்திய மாநில அரசுகளும் இதற்கு முக்கியத்துவம் தந்து வருகின்றன.

    இன்னும் ஓரிரு வருடங்கள் சென்றால் இதில் சிறப்பான முன்னேற்றம் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here