சுவரொட்டி இல்லா சென்னை

2
சுவரொட்டி இல்லா சென்னை

சென்னையில் சுவரொட்டிகளை நீக்கிச் சுவரொட்டி இல்லா சென்னை என்று மாற்றச் சென்னை மாநகராட்சி முடிவு செய்து செயல்படுத்தி வருகிறது.

இதைப் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களும் உறுதிப்படுத்தினார். Image Credit

சுவரொட்டி இல்லா சென்னை

சென்னையின் மோசமான அடையாளமாகச் சுவரொட்டிகளும், ப்ளக்ஸ் பேனர்களும் எங்கும் ஆக்கிரமித்து இருக்கும். ஒரு சுவர், பாலம் விடாமல் அனைத்திலும் சுவரொட்டி மூலம் நாறடித்து இருப்பார்கள்.

பாலம் கட்டப்பட்டுப் புதுப்பொலிவுடன் இருக்கும் ஆனால், மனசாட்சியே இல்லாமல் சுவரொட்டியின் மூலம் நாசம் செய்து இருப்பார்கள்.

இதை நினைத்துக் கடுப்பாகாத சராசரி நபர் இருக்க முடியாது.

புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் அடுத்த நாளே குழி தோண்டி இருந்தால், வருமே ஒரு கடுப்பு, அது போல.

பெரும்பாலும் அரசியல், திரைப்படங்கள், இறந்தவர்கள் நினைவுக்காக, மற்ற விளம்பரங்கள் என்று போட்டி போட்டுக் கெடுத்து வைத்து இருப்பார்கள்.

இந்நிலை மாறாதா என்று எதிர்பார்ப்பவர்கள் பலர்.

எதிர்பார்த்தவர்களின் ஆவலை நிறைவேற்றும் விதமாகச் சென்னை மாநகராட்சி சார்பில் இதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் படி தினமும் ஒவ்வொரு பகுதியிலும் நீக்கப்படும் சுவரொட்டி எண்ணிக்கைகளை அவர்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

பல வருடங்களுக்குப் பிறகு, சென்னை அண்ணா மேம்பாலத்தில் சுவரொட்டி இல்லாத புதியதாக வெள்ளையடிக்கப்பட்ட தூண்களைப் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது.

இந்நிலை மாறுமா?

பலரும் பாராட்டுகளைத் தெரிவித்தாலும் சிலர் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் இல்லையென்றால், இந்நிலை மாறாது என்று கூறி வருகிறார்கள்.

ஓரளவு உண்மையென்றாலும், தொடர்ச்சியாக இதை மாநகராட்சி முன்னெடுத்து வரும் போது அனைவருக்கும் தெரிந்த ஒரு செயலாகி விடும்.

எனவே, சுவரொட்டியை நகர் முழுக்கச் செய்து வருபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு, ஒட்டக் கூடாது என்பதை நாளடைவில் அவர்களே உணர்வார்கள்.

இதற்குச் சில காலம் எடுக்கும் என்றாலும், நிச்சயம் மாற்றம் வரும் என நம்பலாம்.

அதோடு தற்போது பட்ஜெட்டில் நிதியமைச்சரே கூறி விட்டதால், கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

எனவே, நாளடைவில் சுவரொட்டி இல்லா சென்னையைக் காணலாம். சுவரொட்டி இல்லா பேருந்து நிறுத்த விளம்பர Electric Boards இரவில் அழகாக உள்ளன.

சுவரொட்டிகளை நீக்குவதோடு சுவற்றில் அழகான ஓவியங்களையும் தன்னார்வலர்கள் உதவியுடன் வரைந்து வருகிறார்கள். இதுவும் மிகச்சிறந்த முயற்சி.

இம்மாற்றத்தை சென்னையோடு சுருக்கிக்கொள்ளாமல் தமிழகம் முழுவதும் செயல்படுத்த வேண்டும்.

Gagandeep Singh Bedi

சென்னை மாநகராட்சி ஆணையராக Gagandeep Singh Bedi பொறுப்பேற்ற கொண்ட பிறகு சென்னையை மாற்றுவதில் மிக முக்கியப் பங்காற்றி வருகிறார்.

ஏதாவது ஒரு பணியைச் செய்து கொண்டே இருக்கிறார்.

Mass Cleaning, Miyawaki sapling plant, Encroachments removal, Lake / Pond restoration உட்படப் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல், Gagandeep Singh Bedi மட்டுமே இவற்றைச் செய்து விட முடியாது.

எனவே, சுதந்திரமாகப் பணி புரிவதற்கு உதவும் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.

என்ன தான் நல்லது செய்ய நினைத்தாலும், தலைமை ஒத்துழைக்கவில்லையென்றால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

ஸ்டாலின் அவர்களின் கனவு திட்டமான சிங்காரச் சென்னை 2.0 க்கு Gagandeep Singh Bedi மிக முக்கியப் பங்காற்றுவார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

மிகச்சிறந்த தேர்வான இவரை இடம் மாற்றம் செய்யாமல் இருக்க வேண்டும்.

தமிழகத்தின் தலைநகரை அனைவரும் வியக்கும் வண்ணம் மாற்ற வேண்டும், அதற்குப் பொதுமக்கள் உட்பட அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

தொடர்புடைய கட்டுரை

சுத்தமான சென்னை மெட்ரோ தூண்கள்

மியாவாக்கி காடு வளர்ப்பு முறை என்றால் என்ன?

கொசுறு

giriblog தளம் 15 ஆண்டுகளை நிறைவு செய்து 16 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

ஒரே மாதிரி விஷயங்களையே மாற்றி மாற்றி Anniversary நாளில் எழுத வேண்டி இருப்பதால், தனிக் கட்டுரையாக இந்த ஆண்டு எதையும் எழுதவில்லை.

எழுதுவதன் மீதான ஆர்வம் சற்றும் குறையவில்லை. அதற்குப் பதிலாக, புதிதாக என்ன செய்யலாம் என்ற ஆர்வம் தான் உள்ளது.

தொழில்நுட்பத்தில் ஆர்வம் அதிகம் என்பதால், இத்தளம் எனக்கு அதற்குத் தீனி போடுவதாக உணர்கிறேன்.

தளத்தின் வேகத்தை அதிகரிப்பது பரிசோதனையில் உள்ளது. இதில் உள்ள தொழில்நுட்ப பிரச்சனைகளைச் சரி செய்த பிறகு கூறுகிறேன்.

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் மிக்க நன்றி, யாசினுக்குச் சிறப்பு நன்றி. பலர் 12 / 14 வருடங்களுக்கு மேலாக தொடர்வது மகிழ்ச்சி 🙏.

தொடர்பில் இருங்கள் 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

 1. சென்னையில் சுவரொட்டிகளை நீக்கிச் சுவரொட்டி இல்லா சென்னை என்று மாற்றச் சென்னை மாநகராட்சி முடிவு செய்து செயல்படுத்தி வருகிறது .. மிகவும் சிறப்பான ஒன்று.. வெளிமாநிலங்களிருந்தும் / வெளிநாடுகளிலிருந்தும் வருபவர்களுக்கு சென்னையை பற்றி நல்ல எண்ணம் முதலில் உருவாகும்..

  இம்மாற்றத்தை சென்னையோடு சுருக்கிக்கொள்ளாமல் தமிழகம் முழுவதும் செயல்படுத்த வேண்டும். கண்டிப்பாக இதை தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளவேண்டும்.. குறிப்பாக எல்லா அரசியல் கட்சியும் ஒத்துழைக்க வேண்டும்.. இவர்கள் ஒத்துழைத்தாலே பாதி பிரச்சனை முடிந்து விடும்..

  Gagandeep Singh Bedi : நான் படிக்கும் போது கடலூர் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்தார்.. மிக சிறந்த மனிதர் மற்றும் ஆட்சியாளர்.. எங்கள் மாவட்டத்தில் பல மாற்றங்கள் நிகழ காரணமாக இருந்தவர்.. சுனாமியின் சமயத்தில் அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டு பிரச்சனையை அருமையாக கையாண்டார்.. தற்போது சென்னையில் இவரது ஒவ்வொரு முயற்சியும் பாராட்டும் படி இருக்கிறது.. அரசும் ஒத்துழைப்பது கூடுதல் மகிழ்ச்சி..

  தமிழகத்தின் தலைநகரை அனைவரும் வியக்கும் வண்ணம் மாற்ற வேண்டும், அதற்குப் பொதுமக்கள் உட்பட அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.உண்மை கிரி.. என்னதான் அரசு முயற்சித்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது..

  கொசுறு : தளம் தற்போதே வேகமாகத்தான் இருக்கிறது.. கூடுதல் வேகம் இன்னும் மகிழ்ச்சி.. சிரத்தை எடுத்து கொண்டு வெவ்வேறு தலைப்புகளில் கட்டுரை எழுதி எங்களை மகிழ்விப்பதால் உங்களுக்கும் நன்றி..

  சினிமா : நேற்று Shershaah ஹிந்தி படம் பிரைம் இல் பார்த்தேன்.. செம்ம படம்.. இயக்குனர் விஷ்ணுவர்தன்.. படத்தில் சில காட்சிகளை எப்படி எடுத்தார்கள் என்றே தெரியவில்லை.. 1999 கார்கில் போரின் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுத்துள்ளார்கள்.. படத்தில் ஒளிப்பதிவு மிகவும் அருமை.. படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. பார்க்கவும்..

 2. @யாசின்

  “கடலூர் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்தார்.. மிக சிறந்த மனிதர் மற்றும் ஆட்சியாளர்.. எங்கள் மாவட்டத்தில் பல மாற்றங்கள் நிகழ காரணமாக இருந்தவர்”

  பலரும் இவர் பணி பற்றி கூறியுள்ளார்கள்.

  “தளம் தற்போதே வேகமாகத்தான் இருக்கிறது.. கூடுதல் வேகம் இன்னும் மகிழ்ச்சி.”

  வேகமுள்ளது யாசின் ஆனால், Cache பிரச்சனையுள்ளது. இதைச் சம்பந்தப்பட்ட நிறுவனம் மட்டுமே சரி செய்ய முடியும். எனவே, அவர்கள் செய்வதற்காக காத்துள்ளேன்.

  “வெவ்வேறு தலைப்புகளில் கட்டுரை எழுதி எங்களை மகிழ்விப்பதால் உங்களுக்கும் நன்றி”

  நன்றி 🙂

  “நேற்று Shershaah ஹிந்தி படம் பிரைம் இல் பார்த்தேன்.. செம்ம படம்.. இயக்குனர் விஷ்ணுவர்தன்”

  பரிந்துரைக்கு நன்றி. விஷ்ணுவர்தன் படம் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. ரொம்ப வருடங்களாக ஆளே காணாமல் போய் இருந்தார்.

  நான் படம் பார்த்தேன் ஒரு மாதத்துக்கும் மேலாகி விட்டது. இன்னும் அடுத்த இரு வாரங்களுக்குப் பார்ப்பது சிரமம்.

  விரைவில் அனைத்துப் படங்களையும் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here