தமிழக அரசு கடந்த பொங்கல் சமயத்தில் புதிய பேருந்துகளைச் சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்தது.
1970 – 80 ஆண்டுகளில் இவ்வகைச் சிவப்புப் பேருந்துகள் இருந்ததாகவும், தற்போது இவற்றைக் காண்பது பழைய நினைவுகளை மீட்டெடுப்பதாக உள்ளது எனவும் படித்தேன்.
95 க்கு மேலும் ஓரிரு சிவப்பு நிறப் பேருந்துகள் வந்தன ஆனால், வரவேற்பை பெறவில்லை. அஞ்சலக பேருந்து போல உள்ளது என்று கிண்டலடிக்கப்பட்டது.
1990 – 2005 வரையுமே பச்சை நிற பேருந்துகள் தான் அதிகம் இருந்தன, இவை அளவில் பெரியதாகவும் அமர வசதியாகவும் இருந்தது. Image Credit
முட்டி பெயர்த்த பேருந்துகள்
எப்போது சென்னையில் பழுப்பு நிறப் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டதோ அன்றில் இருந்து சென்னை மக்களுக்குத் தலைவலி தான். பேருந்தின் அளவையும் குறைத்துக் கொஞ்சம் உயரமானவர்கள் முட்டியையும் பெயர்த்து விட்டார்கள்.
நிச்சயமாக இந்த வடிவமைப்புக்கு ஒப்புதல் கொடுத்த நபர் அடி முட்டாளாகவும், பயணிகள் வசதி பற்றிக் கொஞ்சம் கூட அக்கறையற்றவராகவும் தான் இருக்க வேண்டும்.
எனக்கு இப்பேருந்துகளில் பயணிக்கும் போதெல்லாம் இதை வடிவமைத்தவரையும் இதற்கு ஒப்புதல் கொடுத்தவரையும் இப்பேருந்தில் நாள் முழுக்க உட்கார வைத்து சுற்ற வைத்து முட்டியை உடைக்க வேண்டும் என்று விருப்பம். அவ்வளவு கொலகாண்டில் உள்ளேன்.
மூளை என்ற ஒன்றை கழட்டி வைத்தவர்களை எல்லாம் உயர் அதிகாரிகள் என்று வைத்துக்கொண்டுள்ளார்கள், நம்ம தலையெழுத்து.
பல நேரம் புதிய பேருந்து வந்தாலும் பின்னால் பழைய பச்சை நிறப் பேருந்து வந்தால், அதில் தான் செல்ல முயற்சிப்பேன்.
என்னைப் போன்றவர்களின் புலம்பலை யாரோ கேட்டு இந்த முறை இந்தச் சிவப்புப் பேருந்தில் சரி செய்து இருக்கிறார்கள்.
எதிர்பார்ப்பை நிறைவேற்றிய சிவப்பு பேருந்து
அமருவதற்கு இருக்கைகள் வசதியாக உள்ளன. தானியங்கிக் கதவுகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது வரும் பேருந்துகள் இது போலத் தான் வருகின்றன.
கதவு மூடாமல் இருந்தால், ஒலி எழுப்பியபடி உள்ளது. எனவே, கதவை மூடியே ஆக வேண்டும்.
ஒரு வேளை ஏதாவது பழுது காரணமாக மூடவில்லை என்றால், ஒலியை நிறுத்த முடியுமா? என்று தெரியவில்லை. அருகில் அமர்ந்து இருப்பவர்கள் நிலை தான் பரிதாபமாகி விடும்.
ஏனென்றால், பேருந்து தரம் தெரிந்தது தானே! வந்த இரண்டாம் நாளே பழுதாகி எங்காவது நின்று பொதுமக்களிடம் திட்டு வாங்கிக்கொண்டு இருக்கும்.
நடத்துநருக்கு இருக்கை இல்லை. பெண்கள் பகுதி அருகே நடத்துநர் என்று போட்டு இருக்கிறது.
“உங்களுக்கு இருக்கை இல்லையா?” என்று நடத்துநரிடம் கேட்ட போது பெண்கள் பக்கம் கையைக் காட்டினார். அங்கே அமர முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.
ஆண்களுக்கு என்று தனி இருக்கை கிடையாது
இன்னமும் சென்னையில் பலருக்கு ஆண்களுக்கென்று தனி இருக்கை கிடையாது என்பது தெரியவில்லை, அடிக்கடி இது பற்றிய சண்டை நடக்கும் 🙂 .
பேருந்தின் இடது பக்கமும், பின் பக்க வரிசையும் பெண்களுக்கானது. வலது பக்கமும், முன் பக்க ஓட்டுநர் பகுதி இருக்கைகளும் பொதுவானது அதாவது, ஆண்களும் பெண்களும் என்று எவரும் அமர்ந்து கொள்ளலாம்.
இதில் என்ன கொடுமை என்றால், பெண்கள் பகுதியில் இடம் இருந்தால் கூடப் பொதுப் பகுதியில் அமர்ந்து கொண்டு நகர மறுத்து தலைவலி கொடுக்கும் சில பெண்கள் தான்.
தற்போது நான் பேருந்தில் செல்வது குறைந்து விட்டாலும், இப்பேருந்து எப்படியுள்ளது பார்க்க வேண்டியே இதில் சென்றேன். வினய் யுவன் இருவரும் இப்பேருந்தில் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருந்ததும் ஒரு காரணம்.
சிவப்பு பேருந்து குறைகள் இருந்தாலும் சிறப்பான பேருந்து 🙂 .
தொடர்புடைய கட்டுரைகள்
கூட்டம் குறைந்த சென்னை மாநகரப் பேருந்து
கொசுறு
எல்லாத்தையும் தாங்கிக்கிறேன் ஆனால், சொகுசு பேருந்து என்ற பெயரில் ஒரு டப்பா பேருந்தை ஓட்டி அதிகக் கட்டணம் வசூலிப்பார்கள் பாருங்கள்…! வயித்தெரிச்சலாக இருக்கும்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
சென்னையில் ஓரிரு முறை மட்டுமே மாநகர பேருந்துகளில் பயணித்துளேன்.. பள்ளி பருவம் (மேனிலை) பயணம் முழுவதும் அரசு பேருந்துகளில் தான்.. கல்லூரி செல்லும் போது கூட பல தருணங்களில் அரசு பேருந்தில் பயணிந்துள்ளேன்.. இன்றும் அரசு பேருந்தில் பயணிக்க விரும்புகிறேன்.. நீண்ட தூர பயணத்தை எப்போதும் அதிகம் விரும்புபவன் நான்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
சென்னையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பாக சென்னை முழுக்க உள்ள முக்கியமான இடங்களை குளிர்சாதன வசதியில் அழைத்துச் சென்று நல்ல கட்டணத்துடன் இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன். அதைப் பற்றி விரிவாக எழுத முடியுமா? பாருங்கள் கிரி.
@யாசின் நீண்ட தூர பயணம் நம் ரசனைக்கேற்ற துணை இருந்தால் நன்றாக இருக்கும் 🙂 .
@ஜோதிஜி இது போல தனியார் பேருந்துகள் அழைத்து செல்கின்றன, அரசுப் பேருந்து குறித்து நான் கண்டதில்லை, விசாரித்துப் பார்க்கிறேன்.