சென்னை வெளி வட்டச் சாலை | Chennai Outer Ring Road

3
சென்னை வெளி வட்டச் சாலை

2010 ல் அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களால் சென்னை வெளி வட்டச் சாலை துவங்கப்பட்டு ‘ஜெ‘ ஆட்சியில் 2014 ல் முதல் கட்டப்பணி நெமிலிச்சேரி வரை முடிந்தது.

2021 ல் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் இரண்டாம் கட்ட பணி மீஞ்சூர் வரை முடிக்கப்பட்டுப் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்பட்டது.

2014 ல் முதல் முதல்கட்ட வெளி வட்டச் சாலை பயன்பாட்டில் இருந்தாலும், தற்போது அதிகளவில் மக்களால் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாகக் கனரக வாகனங்கள்.

சென்னை வெளி வட்டச் சாலை

 • தாம்பரத்திலிருந்து வந்தால், வண்டலூர் மேம்பாலத்தில் வலது புறம் பிரிந்து வெளி வட்டச் சாலையை அடையலாம்.
 • கூடுவாஞ்சேரி வழியாக வந்தால், வண்டலூர் மிருகக்காட்சிசாலை அருகே துவங்கும் வெளி வட்டச் சாலை பாலத்தில் இடது புறம் செல்ல வேண்டும்.
 • ஆறு வழிச் சாலையாக உருவாக்கப்பட்டுள்ளது.
 • இடது வலது சாலைகளுக்கு நடுவே (Median) தோராயமாக 60+ அடி இடைவெளி விடப்பட்டுள்ளது.
 • சில இடங்களில் மரங்கள் வளர்ந்துள்ளன, சில இடங்களில் செடிகளாக உள்ளது, சில இடங்களில் எதுவுமே இல்லை.
 • காலி இடங்களில் மரங்களைக் குறிப்பாக மியாவாக்கி முறையில் வளர்ப்பது நன்மையைத் தரும்.
 • GST சாலையில் இடையில் நுழைவது போலச் சாலையின் நடுவே யாரும் நுழைய முடியாது, பாதுகாப்பானது.
 • சாலையின் இடையே உள்ள கிராமங்களுக்குப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பாலத்தின் அடியே தான் வாகனங்கள் கடக்க முடியும்.
 • சுருக்கமாகச் சித்தோடு (ஈரோடு) –> கோவை வழித்தடத்தில் உள்ள ஆறுவழிப்பாதை போல எங்கும் நிறுத்தாமல் செல்லலாம்.
 • கனரக வாகனங்களுக்கும், நான்கு சக்கர வாகனங்களுக்கும் வசதியாக வடிமைக்கப்பட்டுள்ளது.
 • இரு பக்கமும் Service Lane உள்ளது ஆனாலும், முதன்மை சாலையில் இரு சக்கர வாகனங்களில் சிலர் ஓரமாக எதிரில் வந்து கடுப்பேற்றுகிறார்கள்.
 • எட்டு வழிச்சாலையாக அமைத்து இருக்கலாம் காரணம், தற்போதே வாகனங்கள் அதிகளவில் உள்ளன. எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும்.

சுங்கச்சாவடி CCTV

 • சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தாலும், இன்னும் (ஜூன் 2021) பயன்பாட்டுக்கு வரவில்லை, தமிழக அரசின் ஒப்புதலுக்காகக் காத்துள்ளது.
 • சாலை முழுக்க விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது, இரவில் பயணிப்பதில் சிக்கல் இருக்காது.
 • சில இடங்களில் சாலையில் CCTV உள்ளது.
 • சாலையின் நடுவே தேனீர் கடைகள், பேக்கரிகள் உள்ளன. பெட்ரோல் நிலையம் எதையும் காணவில்லை, கவனிக்கத் தவறி இருக்கலாம்.
 • தொடர்ச்சியான வாகனப்போக்குவரத்தால், ஓரங்களில் சேரும் மண்ணை, சுத்தம் செய்யும் வாகனத்தின் மூலம் சுத்தம் செய்கிறார்கள்.
 • வண்டலூரிலிருந்து, மீஞ்சூர் வரையான தூரம் தோராயமாக 63 கிமீ வருகிறது.
 • குன்றத்தூர், பனிமலர் கல்லூரி, மதுரவயல், பட்டாபிராம், ஆவடி போன்ற இடங்களுக்கு இடையில் பிரியலாம்.
 • வண்டலூர் வழியாகக் குன்றத்தூர் செல்பவர்களுக்கு வெளி வட்டச் சாலை மிகப்பொருத்தமானது.
 • வெளி வட்டச் சாலையின் அருகேயே குன்றத்தூர் முருகன் கோவில் உள்ளது.
 • பெங்களூர் செல்பவர்கள் மதுரவயல் அருகே பிரிந்து கொள்ளலாம். இதன் மூலம் முழுமையான நகரத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்.
 • வெளி வட்டச் சாலை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மூலமாக அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய தகவல்கள் சென்னை வெளி வட்டச் சாலை குறித்த புரிதலைக் கொடுத்து இருக்கும் என்று நம்புகிறேன்.

கொசுறு

பட்டாபிராமில் பிரிந்து, ஆவடி வழியாக சென்னை உள்ளே வரும் வழியில், புனரமைக்கப்பட்ட பருத்திப்பட்டு ஏரி யைக் காண முயற்சித்தும், பார்வை நேரம் கடந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை

ஆவடியின் ஓரத்தில் ஏரி இருக்கும் என்று நினைத்தால், நகரத்தின் நடுவே, வீடுகளுக்கு நடுவே உள்ளது. பூங்காவின் வழியே மட்டுமே உள்ளே செல்ல முடியும் போல.

இம்முறையே ஏரி பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் இருப்பதை உறுதிப்படுத்தும்.

3 COMMENTS

 1. சென்னையில் உள்ள பல இடங்களை சுற்றி பார்க்க வேண்டும்.. ஏதாவது திரையரங்கிற்கு சென்று நல்ல தரமான படம் பார்க்க வேண்டும், நல்ல உணவகத்தில் உண்ண வேண்டும், அப்படியே மெரினா பீச், கிரிக்கெட் மைதானம், வண்டலூர் zoo, தாம்பரத்தில் என் அம்மா, அப்பா வசித்த இடத்தை காண வேண்டும்..etc… என சென்னையை குறித்து பல நிறைவேறாத ஆசைகள் உள்ளது.. 2004 இல் ஒரு நேர்காணலுக்காக மட்டும் சென்னை வந்தேன்.. (இடையில் ஒரு முறை 2009 இல் SAP புத்தகம் வாங்க வேண்டி வந்தேன்.. வந்த இடம் நினைவிலில்லை.)

  மற்றபடி என் சென்னை பயணம் எல்லாம் விமான நிலையத்தோடு முடித்து விடுகிறது.. சக்தியுடன் குறைந்தபட்சம் ஒரு நாளாவது சென்னையை சுற்றி பார்க்க வேண்டும்.. நீங்கள் சென்னையில் பல வருடமாக இருப்பதால் சென்னையை மிகவும் நேசிப்பீங்க என்று தெரியும்.. உங்களிடம் ஒரு கேள்வி??நீங்கள் முதன்முதலில் சென்னையில் பேருந்தை விட்டு இறங்கிய போது உங்கள் மன நிலை என்ன ??? இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எப்படி உணர்கிறீர்கள்???? பகிர்வுக்கு நன்றி கிரி..

 2. @யாசின்

  “சக்தியுடன் குறைந்தபட்சம் ஒரு நாளாவது சென்னையை சுற்றி பார்க்க வேண்டும்”

  கார் / பைக் இருந்தால் வசதியாக இருக்கும்.

  “நீங்கள் சென்னையில் பல வருடமாக இருப்பதால் சென்னையை மிகவும் நேசிப்பீங்க என்று தெரியும்”

  சந்தேகமே இல்லை 🙂 .

  “நீங்கள் முதன்முதலில் சென்னையில் பேருந்தை விட்டு இறங்கிய போது உங்கள் மன நிலை என்ன ??? இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எப்படி உணர்கிறீர்கள்?”

  சுவாரசியமான கேள்வி யாசின் 🙂 .

  நான் அப்பாவுடன் சிறு வயதிலேயே அடிக்கடி சென்னை வந்துள்ளேன். ரயிலில் பயணிப்பது எனக்கு முன்பு இருந்தே பிடித்தமானது.

  சென்னை வர வேண்டும் என்றால், ரயிலில் பயணிக்கலாம் என்ற ஒரே காரணத்துக்காக அப்பாவுடன் வருவேன்.

  ஆட்டோல கூட்டிட்டு போகணும் என்றெல்லாம் கேட்க கூடாது என்ற கட்டுப்பாடுடன் அழைத்துச் செல்வார். எங்கே செல்ல வேண்டும் என்றாலும் பேருந்து & நடை தான்.

  இதன் பிறகு 12 முடித்த பிறகு கல்லூரி செல்லாமல் கம்ப்யூட்டர் டிப்ளமோ படிக்க சென்னை போக அறிவுறுத்தினார்.

  எனக்கு கோவை PSG கல்லூரியில் BBM படிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால், சென்னை என்றால் ரயிலில் செல்லலாமே என்ற ஒரே காரணத்துக்காக அப்பா கேட்டதுக்கு சரி என்றேன்.

  அப்பாவுடன் தான் சென்னை வந்தேன், பின்னர் அக்கா கணவரின் (அப்போது திருமணம் நடைபெறவில்லை) நண்பரின் அறையில் தங்கிக்கொண்டேன்.

  இப்படித்தான் எனக்கு சென்னை முறையாக அறிமுகமாகியது.

  அப்பாவுடன் வந்த போது தெரியாத கடினம், தனியாக இருக்கும் போது வெறுப்பாக இருந்தது. அப்போது அனைத்துக்கும் கோபப்படுவேன்.

  ஏன்டா சென்னை வந்தோம் என்றாகி விட்டது.

  பின்னர் சரியான நண்பர்கள் அமைந்தார்கள், அனைத்துமே அமைந்தது. எனக்கு வாழ்க்கை கொடுத்த நகரம் என்றால் சென்னை.

  எனவே, சென்னையை எவர் பழித்து பேசினாலும் கோபம் அடைந்து விடுவேன்.

  இன்னொன்று நான் எங்கு செல்கிறேனோ அந்த இடத்துக்கு பழகி விடுவேன். அந்த இடத்துக்கு நேர்மையாக, பாசமாக இருப்பேன்.

  சிங்கப்பூர் சென்ற போது அதே போல தான் நினைத்தேன்.

  சொந்த நாட்டுக்கு என்ன மரியாதை, அன்பை கொடுத்தேனோ அதே அளவு மரியாதை அன்பை என் வாழ்க்கையை உயர்த்திய சிங்கப்பூருக்கும் கொடுத்தேன், இப்பவும் கொடுக்கிறேன்.

  பிழைக்க வந்த ஊரை, வைத்த ஊரை சிலர் இழிவாக பேசும் போது கடும் கோபம் வரும்.

  இப்பவும் எனக்கு கோபி, கோவை தான் பிடிக்கும் ஆனால், எப்போதுமே சென்னைக்கு என் மனதில் தனி இடமுள்ளது.

  சென்னையில் ஏதாவது ஒரு வளர்ச்சி முன்னேற்றம் அடைந்தால் என் மனம் மகிழ்ச்சி கொள்ளும் காரணம், இது என் ஊர்.

  இதை என் எழுத்திலும் கவனித்தால் உணர முடியும்.

  சென்னை பற்றி நான் கூறுவது அனைத்துமே என் ஆழ் மனதிலிருந்து வருபவையே. எந்த கலப்படமுமில்லை.

 3. உங்கள் பதிலுக்கு நன்றி கிரி.. (சென்னையில் ஏதாவது ஒரு வளர்ச்சி முன்னேற்றம் அடைந்தால் என் மனம் மகிழ்ச்சி கொள்ளும் காரணம், இது என் ஊர்).. செம்ம!!! செம்ம!!! (சென்னை பற்றி நான் கூறுவது அனைத்துமே என் ஆழ் மனதிலிருந்து வருபவையே. எந்த கலப்படமுமில்லை.) தலை வணங்குகிறேன்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here