The African Doctor (2016 French) | யாருமே வரலையே!

5
The African Doctor

றுப்பினத்தவரான Seyolo Zantoko இனப்பாகுபாடு காரணமாக புறக்கணிக்கப்படுகிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே The African Doctor.

The African Doctor

பிரான்ஸ் நாட்டில் மருத்துவப் படிப்பை முடித்த ஒரே கறுப்பினத்தவர் Seyolo Zantoko.

தன் நாட்டுக்குச் சென்றால், ஊழல் தலைவருக்குத் தனிப்பட்ட மருத்துவராக இருக்க வேண்டி வரும் என்ற சூழலால், பிரான்ஸ் நாட்டிலேயே குக்கிராமத்தில் சேவையைத் தொடர நினைக்கிறார். இக்கதைக்களம் நடக்கும் காலம் 1975. Image Credit

இவருக்கு மனைவி, ஒரு மகள், மகன்.

இவர்களையும் இங்கே அழைக்கிறார். பிரான்ஸ் என்றதும் ஈபிள் கோபுரம், பெரிய கட்டிடங்கள், நவீனமான இடங்கள் என்ற கற்பனையில் மிதக்கிறார் அவரது மனைவி.

நகரமல்ல என்று Seyolo Zantoko கூறுவதைக் காது கொடுத்துக் கேட்பதில்லை.

பச்சைக் கிளி பாடும் ஊரு பஞ்சு மெத்தை புள்ள பாரு‘ ன்னு கற்பனையில் மகேஸ்வரி வந்து வறட்சியான ஊரைப் பார்த்து அதிர்ச்சியாவது போல, நகரத்தை எதிர்பார்த்து வந்து கிராமத்தைப் பார்த்து அதிர்ச்சியாவது நகைச்சுவை.

குக்கிராமம் என்றாலும், இப்படிப்பட்ட இடத்தில் வாழ்ந்தால் எப்படியிருக்கும்! என்று நினைக்க வைக்கும் இடமே.

புறக்கணிப்பு

Seyolo Zantoko வை மருத்துவராக அழைத்து வரும் அந்த ஊர் வெள்ளைக்கார மேயர் மட்டுமே இவரிடம் அன்பாக இருப்பார்.

மற்றவர்கள் விலகியே இருப்பார்கள்.

மற்றவர்களிடம் பழக Seyolo Zantoko முயற்சி எடுத்து, சிலர் ஒத்து வந்தாலும், சிகிச்சைக்கு இவரிடம் வராமல், பக்கத்துக்கு ஊருக்குச் செல்வார்கள்.

ஒரு நோயாளி கூட வர மாட்டேங்குறாரே என்ற கவலையில் Seyolo Zantoko இருப்பார்.

நேர்மறை எண்ணங்களைக் கொண்ட Zantoko அனைவரிடமும் அன்பாகப் பழகுவார்.

எது கொண்டாட்டம்?

இந்நிலையில் இவர்களைக் காண Seyolo Zantoko குடும்பத்தினர் இவர்கள் கிராமத்துக்கு வர ஒரே களேபரம் ஆகி விடும் 🙂 .

வெள்ளையர்கள் மிக நாகரீகமாக நடந்து கொள்ள, ஊரில் இருந்த வந்த இவர் குடும்பத்தினரோ கொண்டாட்டமாக இருக்க, Seyolo Zantoko விழி பிதுங்கி விடுவார்.

ஏற்கனவே ஒருத்தரும் வரமாட்டேங்குறாங்க, இதுல இவர்கள் செய்யும் கலாட்டாவில் நம்ம சோலி சுத்தம் என்று கடுப்பாகி விடுவார்.

இது எப்படியென்றால், பணக்காரர்கள் நாகரீகம் என்ற பெயரில் அமைதியாக இருப்பார்கள் ஆனால், ஏழைகள் கொண்டாட்டமாக இருப்பார்கள்.

அது போல இங்கே நடக்கும். நமக்கும் பார்க்கச் செம நகைச்சுவையாக இருக்கும். இப்படித்தான் இருக்கணும் என்று தோன்றும்.

இந்நிலையில் அனைவரும் மருத்துவத்துக்குப் பக்கத்துக்கு ஊருக்கே செல்ல, எப்படியாவது இவரிடம் வரமாட்டார்களா? என்று நமக்கே தோன்ற ஆரம்பித்து விடும்.

இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை.

யார் பார்க்கலாம்?

அனைவரையும் பார்க்கத் தாறுமாறாகப் பரிந்துரைக்கிறேன் 🙂 . இது ஒரு உண்மைக்கதை என்பது குறிப்பிடத்தக்கது.

படம் இன்னும் கொஞ்சம் நீளாதா? என்று நினைக்க வைக்கும்.

சில படங்கள் நமக்குப் பிடிக்கும் ஆனால், சில படங்களே திருப்தியை அளிக்கும். அது போன்ற படங்களில் ஒன்றே The African Doctor. தரமான படம்.

இதுபோலத் திருப்தியை கொடுத்த இன்னொரு படம் Ee Adutha Kaalathu. கதை சம்பந்தமில்லை என்றாலும், திருப்தி என்ற புள்ளியில் ஒன்றிணையும்.

NETFLIX ல் காணலாம்.

Directed by Julien Rambaldi
Produced by Pauline Duhault, Olivier Delbosc, Marc Missonnier
Screenplay by Julien Rambaldi, Kamini, Benoît Graffin
Music by Emmanuel Rambaldi
Cinematography Yannick Ressigeac
Edited by Stephane Pereira
Release date 8 June 2016
Running time 96 minutes
Country France
Language French

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. நண்பர் கிரி,
    “பச்சைக் கிளி பாடும் ஊரு பஞ்சு மெத்தை புள்ள பாரு”😂😂😂
    ஒரு முறை ஆனைமலைக்கு என் நண்பரின் பரிந்துரையில் சென்றிருந்தோம்,புலி வரும் மான் வரும் என்றார்கள் ஒன்றையும் காணோம்😤 காடு முழுவதும் வரண்டு சருகுகளாக கிடந்தது, சீசன் இல்லாத சமயத்தில் சென்று விட்டோம், இதற்காக கார் வைத்திருந்த நண்பரை தாஜ செய்து அழைத்துச் சென்றிருந்தோம் கடைசியில் அவர் எங்களை கண்டபடி திட்டியது தான் நினைவில் வருகின்றது. படம் நீங்கள் கூறுவதலேயே பார்க்கலாம்.

  2. கிரி, படத்தோட கதைக்களம் எனக்கு உண்மையில் பிடித்து இருக்கிறது.. காரணம் உண்மை கதை, அடுத்தது 1970 களில் நடக்கும் நிகழ்வுகளை கொண்ட கதை.. நான் வெகு குறைவாக ஆங்கில படங்களை பார்ப்பவன்.. (ஆர்வமும் ரொம்ப குறைவு),. சிறு வயதில் பார்த்த ராம்போ, அர்மர் ஆப் காட், டெர்மிண்டார்,ஜுராசிக் பார்க், டைட்டானிக், the shawshank redemption, புரூஸ் லீ , ஜாக்கிஜான், ஜெட்லீ படங்களின் feeling லே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

    இது தவிர்த்து நான் பார்த்த சில ஆங்கில படங்களும் நீங்கள் பரிந்துரைத்தது தான்.. ஒரு படம் உங்களை கவர்கிறது என்றால் நிச்சயம் எங்களையும் ஏமாற்றாது.. தற்போது நிறைய நல்ல வெப் சீரிஸ் வருகிறது .. இருப்பினும் எனக்கு வெப் சீரிஸ் பார்க்கும் அளவிற்க்கு நேரம் இல்லை.. அதனால் நல்ல சீரிஸ் இருந்தாலும் அந்த பக்கம் செல்ல வேண்டாம் என்ற கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன்..The African Doctor இந்த படத்தை நிச்சயம் பார்ப்பேன்.

    உங்களிடம் எனக்கு ஒரு கேள்வி கேட்க வேண்டும்.. ஒரு படத்தை பார்க்க வேண்டும் என்று நீங்கள் எப்படி முடிவு செய்கிறீர்கள்?? (சில படங்களை நண்பர்கள் பரிந்துரைக்கலாம் அதை தவிர்த்து..) அது போல பார்க்கும் எல்லா படங்களை குறித்து எழுதுவது இல்லை என்று நினைக்கிறேன்?? ஒரு நல்ல படத்தை குறித்து எழுதவேண்டும் என்று உங்களை தூண்டுவது எது??? குறிப்பாக தமிழ் தவிர்த்து மற்ற மொழி திரைப்படங்களை பார்ப்பதை குறித்து எப்படி முடிவு செய்கிறீர்கள்?? சில படத்தை பற்றி எதுவுமே தெரியாமல் படங்களை பார்க்கும் போது இடையில் படம் படு மொக்கையாக செல்லும் போது போது வரும் எரிச்சல் இருக்கிறதே?? அந்த வலியினை கூற உலகில் எந்த மொழிகளிலும் வார்த்தைகள் இல்லை.. இதை எப்படி கடந்து போகிறீர்கள்??? பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. @கார்த்திக் நாங்க மசினகுடி சென்றோம். அங்கும் இதே நிலை. யானை, மான் மட்டுமே பார்க்கக் கிடைத்தது 🙂 .

  4. @யாசின் “சிறு வயதில் பார்த்த ராம்போ, அர்மர் ஆப் காட், டெர்மிண்டார்,ஜுராசிக் பார்க், டைட்டானிக், the shawshank redemption, புரூஸ் லீ , ஜாக்கிஜான், ஜெட்லீ படங்களின் feeling லே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

    நான் இன்னும் அவற்றைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் 😀 . சலிப்பதே இல்லை.

    நீங்கள் கேட்டுள்ள கேள்விகள் எனக்கு பிடித்துள்ளது, பதிலளிக்க சுவாரசியமாகவும் உள்ளதால் விரிவாகக் கூறுகிறேன்.

    “ஒரு படத்தை பார்க்க வேண்டும் என்று நீங்கள் எப்படி முடிவு செய்கிறீர்கள்??”

    சில பரிந்துரைப்பதால், சில எங்கயாவது படிக்க நேரிட்டால்.

    முன்பு கூகுளில் டாப் 10 படங்கள் என்று தேடி பார்ப்பேன்.

    தற்போது பெரும்பாலும் NETFLIX, Amazon ல் ரேண்டமாக தேடி பார்ப்பேன். அதன் உள்ளடக்கம் எப்படி உள்ளது என்பதை பொறுத்து முடிவு செய்வேன்.

    எனக்கு அனைத்து வகைப்படங்களும் பிடிக்கும், இருப்பினும் த்ரில்லர், சஸ்பென்ஸ், சண்டை, பழிவாங்குதல் படங்களை விரும்பிப் பார்ப்பேன்.

    இவற்றில் தேடி எது பொருந்துகிறதோ அதை பார்ப்பேன்.

    NETFLIX ல் கிட்டத்தட்ட அனைத்து முக்கியப் படங்களையம் பார்த்து விட்டேன். எதை பார்த்தாலும் ஏற்கனவே பார்த்ததாக உள்ளது.

    “அது போல பார்க்கும் எல்லா படங்களை குறித்து எழுதுவது இல்லை என்று நினைக்கிறேன்??”

    ஆமாம். தோராயமாக 5 – 8 படங்களைப் பார்த்தால், அதில் ஒன்றை தான் எழுதுவேன்.

    “ஒரு நல்ல படத்தை குறித்து எழுதவேண்டும் என்று உங்களை தூண்டுவது எது?”

    அருமையான கேள்வி 🙂 .

    நல்ல திரைக்கதை தான். திரைக்கதை சரியாக இருந்தால், அனைத்துமே சரியாக இருக்கும்.

    சில படங்கள் மிக மெதுவாக செல்லும் ஆனால், திரைக்கதை சிறப்பாக இருக்கும். எனவே, நம்மை தொடர்ந்து பார்க்க வைக்கும்.

    அதோட ஒரு கதை பெரும்பாலானவர்களுக்கு பார்க்க சுவாரசியமாக இருக்கும் என்று நம்பிக்கையளித்தால் மட்டுமே பரிந்துரைப்பேன்.

    சில திரைப்படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால், மற்றவர்களுக்கு பிடிக்காது என்று தெரியும் போது. யார் பார்க்கலாம்? பகுதியில் அதற்குண்டான விளக்கத்தை கொடுத்து விடுவேன்.

    எனவே, அதை வைத்து பார்க்கலாமா வேண்டாமா என்று படிப்பவர்கள் முடிவு செய்து கொள்வார்கள்.

    எடுத்துக்காட்டுக்கு Hostel திரைப்படம் எனக்கு பிடித்தமானது ஆனால், அனைவராலும் அதை பார்க்க முடியாது. எனவே, அதற்குண்டான எச்சரிக்கையை கொடுத்து விடுவேன்.

    சுருக்கமாக கூறினால், திரைக்கதை, common sense சிறப்பாக உள்ள திரைப்படங்களே எனது விருப்பம். ஒரு லாஜிக் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பேன்.

    சில படங்கள் லாஜிக் இருக்காது ஆனால், திரைக்கதை சிறப்பாக சுவாரசியமாக இருக்கும்.

    எடுத்துக்காட்டு, பையா, தூள் போன்றவை. நடைமுறையில் சாத்தியமில்லாதவை ஆனால், சுவாரசியமான திரைக்கதையால் வெற்றி பெற்றவை.

    “குறிப்பாக தமிழ் தவிர்த்து மற்ற மொழி திரைப்படங்களை பார்ப்பதை குறித்து எப்படி முடிவு செய்கிறீர்கள்?”

    உண்மையைக் கூறினால், சமீப தமிழ் படங்களை வெறுக்கிறேன்.

    போராளிகள் படமாக மாறி வருகிறது, ஹீரோயிசம் அதிகரித்து வருகிறது. இயல்பு வாழ்க்கையிலிருந்து விலகிச் சென்று கொண்டுள்ளது.

    மலையாளப்படங்கள் இதற்கு எதிராக வந்து கொண்டுள்ளது. அற்புதமான படங்களாக எடுக்கிறார்கள்.

    “சில படத்தை பற்றி எதுவுமே தெரியாமல் படங்களை பார்க்கும் போது இடையில் படம் படு மொக்கையாக செல்லும் போது போது வரும் எரிச்சல் இருக்கிறதே?”

    சில படங்கள் அரை மணி நேரத்திலேயே தெரிந்து விடும். சில படங்கள் அதையும் தாண்டி கூடச் செல்லலாம். A Quiet Place அது மாதிரியான படம்.

    சில படங்கள் படம் முடிந்த பிறகும் நமக்குப் புரியாது. இது தான் இருப்பதிலேயே கொடுமையானது.

    இப்ப கோபம் வரும் பாருங்க.. இது தான் உண்மையிலேயே கடுப்பானது. நேற்று கூட இப்படியொரு படத்துக்கு ஆனது.

    2+ மணி நேரம் வீண். எனவே, ஒரு விமர்சனம் எழுதப் பல குப்பைகளைப் பார்க்க வேண்டியதாக உள்ளது.

    சில படங்களை எப்படி? எந்தத் தைரியத்தில் படம்னு எடுக்கறாங்கன்னும் தோன்றும். ஒருவேளை இதற்கு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கலாம் என்று நினைத்துக்கொள்வேன்.

    ஏனென்றால், உலகம் முழுக்க கருத்து வேறுபாடுகள் இருக்கும். ஒருத்தருக்கு பிடிப்பது மற்றவருக்குப் பிடிப்பதில்லை. இது திரைப்படம் மட்டுமல்ல, அனைத்துக்கும் பொருந்தும்.

    “அந்த வலியினை கூற உலகில் எந்த மொழிகளிலும் வார்த்தைகள் இல்லை..”

    😀 சரியா சொன்னீங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here