பயணக் குறிப்புகள் [ஜூலை 2018]

5
gobi

சுவரை இடிக்கிறது என்று வீட்டில் நாங்கள் விருப்பமாக வளர்த்த மரத்தை வெட்ட வேண்டியதாகி விட்டது. நிழலும், பூ நறுமணமும் அந்த இடத்தையே அழகுறச் செய்து இருந்தது.

சாக்கடை அமைக்கிறேன் என்று வீட்டின் முன்பு இருந்த பகுதியை புல்டோசர் விட்டு வாரி சுருட்டி விட்டார்கள். எனவே, மொட்டையாக இருந்த இடத்தில் கடந்த வாரம் மரக்கன்றுகளை நற்றோம்.

இன்னும் ஓரிரு வருடங்களில் எங்கள் வீடு மீண்டும் பழைய அழகைப் பெற்று விடும் 🙂 .

சாலை விரிவாக்கம்

கோபியில் சாலையை விரிவாக்கம் செய்யப்போவதாகக் கேள்விப்பட்டேன், உண்மையா என்று தெரியவில்லை. ரொம்ப வருடங்களாகக் கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

கோபியில் உள்ள சாலை போல அகலமான சாலையை நீங்கள் வழக்கமான நகரங்களில் கண்டு இருக்க முடியாது. அவ்வளவு பெரியதாக இருக்கும்.

தற்போது மேலும் அகலமாக்கப்போகிறார்கள், போக்குவரத்து நெரிசல் காரணமாக.

பவானி சாகர்

பவானி சாகர் வாய்க்கால் தண்ணீர் திறந்து விட்டார்கள், கோபி மீண்டும் பச்சை போர்வை போர்த்தி விடும்.

கோபியில் சமீபமாக மழையில்லை, இருப்பினும் ஆற்றுத் தண்ணீர் வந்தாலே எங்களுக்குப் போதுமானது. கோபியின் பசுமைக்குக் காரணம் பவானி சாகர் அணையே!

நடத்துநர் இல்லா பேருந்து

தமிழக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய நடத்துநர் இல்லா பேருந்து கோபி –> கோவை வழித்தடத்தில் செல்கிறது (₹80 கட்டணம்). கோபி பேருந்து நிலையத்தில் புறப்பட்டால், கோவை பேருந்து நிலையம் தான் நிற்கும், வழியில் எங்கும் நிற்காது.

KMCH, பீளமேடு எங்கும் நிறுத்தாமல் சென்றால், சிலர் இப்பேருந்தை புறக்கணிக்க வாய்ப்புண்டு.

உறவினர்கள்

அம்மாவை அழைத்துக்கொண்டு கோபி உறவினர்கள் வீட்டுக்கு சென்று இருந்தேன். பெரியவர்கள் பலரை சந்தித்ததில் மகிழ்ச்சி.  “அடையாளமே தெரியவில்லை.. அடிக்கடி வந்துட்டு போனாத்தானே தெரியும்!” என்று விசனப்பட்டுக் கொண்டார்கள்.

அதென்னமோ எனக்கு வயதானவர்கள் என்றால் ரொம்ப விருப்பம்.

இன்னும் எங்க கிராமத்தில் உள்ள சித்தப்பா வீடு மற்றும் எங்களின் தோட்ட வீடு செல்வது தள்ளிப்போய்க்கொண்டே உள்ளது. அம்மாவும் கேட்டுக்கொண்டே உள்ளார்கள்.

ஏற்காடு விரைவு ரயில்

சமீபமாக ஏற்காடு விரைவு ரயிலில் பயணச்சீட்டு கிடைப்பதே அரிதாகி வருகிறது. பேருந்தில் கட்டணம் அதிகம் என்பதால், பலரும் ரயில் பயணத்தைத் தேர்வு செய்கிறார்கள்.

முன்பு RAC என்றால், நிச்சயம் படுக்கை வசதி கிடைத்து விடும். தற்போது RAC 50 க்குள் இருந்தாலே கிடைக்கிறது, RAC 80 வரை ரயிலுக்கு வந்த பிறகு TTR கொடுத்தால் உண்டு.

கடந்த முறை யுவன் (இரண்டாவது பையன்) “அப்பா! நானும் வருகிறேன்” என்றான்.

அவனுக்குப் பயணசீட்டு (5 வயது வரை) தேவையில்லை என்பதால், “சரி” என்றேன். பின்னர் பார்த்தால் RAC  படுக்கை வசதி உறுதி ஆகவில்லை என்று குறுந்தகவல் வந்தது.

எவ்வளவோ கூறிப் பார்த்தும் நானும் வருகிறேன் என்று அடம் பிடித்தான். எனக்கும் அவன் ஆர்வத்தைப் பார்த்து ஏமாற்றமளிக்க விரும்பவில்லை.

படுக்கை வசதி கிடைக்கவே இல்லை. வேற வழியில்லாமல் அவனைக் குறைந்த இடத்தில் படுக்கக் கூறி நான் ஓரமாக அமர்ந்து வந்தேன், இடுப்பு கழண்டு விட்டது.

TTR இவனைப்பார்த்து வயசு என்னன்னு கேட்க, நான் “5 ஆகப்போகுது“ன்னு சொன்னவுடன்.. “இல்லை.. 6 ஆச்சு“ன்னு சத்தமாக் கூறி  மானத்தை வாங்கிட்டான்.

TTR கேவலமான ஒரு பார்வை என்னைப் பார்த்து விட்டு.. “டேய்! என்ன படிக்கிறே” என்றவுடன், என்னமோ IPS அதிகாரி மாதிரி நெஞ்சை நிமிர்த்திட்டு “1st Standard” என்றான்.

உனக்கெல்லாம் டிக்கெட் இல்ல.. உட்காரு” என்று கப்பலேறிய மானத்தைக் காப்பாற்றினார் 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. கப்பலேறியமானம் காப்பாற்ற பட்டதில் மகிழ்ச்சி

  2. கூகிளில் பவானி சாகர் வாய்க்கால் கொடிவெறியில் தொடங்கி பாரியூரில் முடிகிறது. கோபியில் ஒரு சிறு பகுதியில்தான் போகிறது. அதனைக்கொண்டு உங்களின் ஊர் எப்படி செழிப்பாக இருக்கிறது. அத்துடன். கால்வாய்கள் குளத்தில்தான் முடிவடைவதாக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் பவானி சாகர் கால்வாய் அப்படி ஒன்றிலும் முடியவில்லையே. அது ஏன். வெள்ளப்பெருக்கு பவானி சாகர் ஆற்றில் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்.
    உங்கள் ஊரில் ஏன் நிறைய வைத்தியசாலைகள் உள்ளது. கூகிளில் மட்டும் 6 வைத்தியசாலைகள் உங்களின் தாலுகா அலுவலகத்தை சுற்றி உள்ளது. அதுதான் உங்களின் நகர மையமா? ராம் நகர் இலக்கம் 3 வீதியை மறித்தபடி அஸ்டன் அடையகம் உள்ளதே. பின்னர் மக்கள் எப்படி அந்த சாலையை பயன்படுத்துவார்கள். ? ஜெஜெ நகர் என்பது ஜெயலலிதா நியாபகார்த்தமாக வைக்கப்பட்ட பெயரா? தமிழ் படங்களில் சொல்லப்படும் காந்திபுரம் மார்க்கெட் என்பது உங்கள் ஊர் காந்திபுரமா? ஏதோ பட்த்தில் பார்த்த்து போல நியாபகமாக உள்ளது.
    லக்கம்பட்டி தொடங்கி கவுந்தம்பாடி வரைக்கும் புது காட்டுக்கு மேலே ஒரே பச்சையாக உள்ளதே? பாவனி சாகர் ஆறினால் செய்யப்படும் வயல்களா அது? பிஎஸ் என் எல் காலனி என்று ஒரு காலனி உங்களின் ஊரில் உள்ளதே, புதிதாக உருவாக்கப்பட்ட ஊரா இல்லை பெயர் மாற்றப்பட்ட ஊரா அது? கோபி பற்றிய கேள்விகள் தொடரும் 🙂

  3. //அதென்னமோ எனக்கு வயதானவர்கள் என்றால் ரொம்ப விருப்பம்.//

    எனக்கும்தான், அவர்களிடம் அமர்ந்து நாலு வார்த்தை பேசி அவர்கள் பேசும் பத்து வார்த்தையை கேட்டுவிட்டு வந்தால் அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

  4. @கார்த்தி & சோமேஸ்வரன் 🙂

    @ப்ரியா வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய புவியியல் அமைப்பு முறையில் எங்கள் ஊர் இல்லை.

    கோபி சுற்றுப்புற பகுதிக்கு மிக முக்கிய நகரம். எனவே, 25 கிமீ சுற்றளவுக்கு உள்ள நகர, கிராம மக்கள் வைத்தியத்துக்கு இங்கே தான் வருவார்கள். எனவே, மருத்துவமனைகள் அதிகம்.

    நகர மையம் என்பது கச்சேரி சாலை என்ற இடம். இதன் அருகே தான் அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளன.

    ஜெ ஜெ நகர் அமைச்சர் செங்கோட்டையன் ஆரம்பித்து வைத்த நகர்.

    கோபி சுற்றுவட்டாரப் பகுதி முழுக்க பச்சையாக இருக்க காரணம், அங்கே மிகப்பெரிய பரப்பளவில் உள்ள வயல்கள் தான்.

    நீ கேட்ட நேரமோ என்னமோ.. சரியா எனக்கு WhatsApp ல் பின்வரும் செய்தி வந்தது 🙂

  5. கோபிசெட்டிப்பாளையம், இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஒரு முக்கிய நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.

    இந்த நகரம் ஈரோடு மாவட்டத்தில் ஒரு தாலுகாவின் தலைமையகம் ஆகும். இது கடல் மட்டத்தில் இருந்து 213 மீட்டர் உயரத்தில், மாவட்ட தலைமையகம் ஈரோட்டில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

    #கோபிசெட்டிபாளையம்_சின்ன_கோடம்பாக்கம்’ அல்லது ‘#மினி_கோலிவுட்’ என்று அழைக்கப் படுகிறது, ஏனெனில் இங்குப் படப்பிடிப்பு அதிகமாக நடைபெறும் என்று அறியப்படுகிறது.

    #வரலாறு

    தற்போது உள்ள கோபிசெட்டிபாளையம் முன்னர் ஒரு முக்கியப் பகுதியாக வீரபாண்டி கிராமம் என்று அழைக்கப் பட்டது. அரசு ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் இன்னும் அந்தப் பெயரையே பயன்படுத்தகின்றன.

    இந்த நகரம் கோபிசெட்டி புல்லான் என்ற பழைய அறிஞர் பெயரால் கோபிசெட்டிபாளையம் எனப் பெயரிடப்பட்டது.

    இந்த இடம் முன்னர்க் கடை எழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னர் ஆட்சி நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர்ச் சேர மன்னர்களால் கை பற்றபட்டு ஆட்சி செய்யப்பட்டது.

    அதன் பிறகு திப்புச் சுல்தான் இந்த ஊரை தனதாக்கி கொண்டான். முடிவில் ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்டனர்.

    #புவியியல்_மற்றும்_காலநிலை

    கோபிசெட்டிபாளையம் தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியான கொங்கு நாட்டில் அமைந்துள்ளது. சென்னை சுமார் 390 கி.மீ தொலைவில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை சூழ்ந்து, பவானி ஆற்றுக் கரையில் அமைந்துள்ளது.

    இங்கு வெப்பநிலை சூடாக இருக்கும். கோடை மாதங்களில் தவிர, மற்ற மாதங்களில் மிதமான வெப்பமும், அதிக மழையளவும் கொண்டு இருக்கும்.

    #நகராட்சி

    கோபிசெட்டிபாளையம் நகராட்சி, தமிழ்நாடு அரசு கணக்கெடுப்பின் படி 60,279 ஜனத்தொகை கொண்டுள்ளது. இதில் ஆண்கள் 51% மற்றும் பெண்கள் 49% ஆவார்கள்”.

    2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 74% எழுத்தறிவு விகிதம் உள்ளது: ஆண் எழுத்தறிவு விகிதம் 80%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும்.” கொங்கு வேளாளர் சமூக மக்கள் அதிகமாக இங்கு வாழ்கிறார்கள்.

    #கலாச்சாரம்

    கொங்கு தமிழ், தமிழ் மொழியின் ஒரு கிளை ஆகும். இதுவே பெரும்பான்மை மக்களின் பேச்சு மொழி. ஆங்கிலமும் தமிழும் சேர்த்து ஒரு உத்தியோகபூர்வ மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது.

    மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளும் பேசப்படுகின்றன. உணவு பெரும்பாலும் தென் இந்திய அடிப்படையில் அரிசி சார்ந்தது ஆகும்.

    #பொருளாதாரம்

    நகரம் விரைவாகத் தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது. விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் 31%, வர்த்தக மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் 56% மற்றும் 13% “இரு செயல்பாடு” என்று அரசாங்கம் விவரிக்கிறது.

    விவசாயம் பொருளாதார வளசிக்கு பெரும் பங்காற்றுகிறது. நெல். கரும்பு, வாழை, புகையிலை மற்றும் மஞ்சள் முக்கியப் பயிர்கள் ஆகும். வெண் பட்டு மற்றும் தறி உற்பத்தியிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.

    #ஊடக_மற்றும்_தகவல்_தொடர்பு

    நான்கு முக்கிய ஆங்கில மொழி செய்தித்தாள்கள் தி இந்து, தி டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் குரோனிக்கிள் மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நகரில் கிடைகின்றன.

    தமிழ் செய்தித்தாள்கள் தினமலர், தினதந்தி, தினமணி, தினகரன் (அனைத்து காலை செய்தித்தாள்கள்) மற்றும் தமிழ் முரசு மற்றும் மாலை மலர் (இரண்டும் மாலை செய்தித்தாள்கள்) ஆகியவன அடங்கும்.

    ஒரு நடுத்தர அலை இயக்கப்படும் வானொலி நிலையம் ஆல் இந்தியா ரேடியோ மற்றும் ஐந்து பண்பலை வானொலி நிலையங்களின் சேவை இங்கு உள்ளது.

    அனைத்து முக்கியக் கைபேசி சேவை வழங்குநர்களும் இங்குச் சேவை வழங்குகின்றனர்.

    #சுகாதாரம்

    நகரில் அரசு மருத்துவமனை தவிரப் பல முக்கிய மருத்துவமனைகள் உள்ளன.

    #அரசியல்

    கோபிச்செட்டிபாளையம் 2008 வரை ஒரு பாராளுமன்ற தொகுதியாக இருந்தது. இப்பொது திருப்பூர் தொகுதியின் ஒரு பாகமாக இருக்கின்றது.

    #கல்வி

    கோபிச்செட்டிபாளையம் ஒரு நல்ல கல்வி உள்கட்டமைப்பு உள்ள நகரமாக விளங்குகிறது. இது ஒவ்வொரு ஆண்டும், மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு இரண்டாவது மிக உயர்ந்த அளவில் மாணவர்களை அனுப்புகிறது.

    தரமான கல்வி வழங்கும் பள்ளிகள் உள்ளன.

    #போக்குவரத்து

    கோபிச்செட்டிபாளையம் நகராட்சி சாலைகள் மொத்தம் 67.604 கி.மீ. நீளம் ஆகும். மாநில நெடுஞ்சாலைகள் இவற்றில் 6.6 கிமீ உள்ளது.

    தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் சார்பில் ஒரு பெரிய மத்திய பேருந்து நிலையம் இயக்கபடுகிறது.

    அருகில் உள்ள ரயில் நிலையம் ஈரோடு சந்திப்பு ஆகும். இது 38 கிமீ தொலைவில் அமைந்து உள்ள ஒரு பெரிய ரயில் நிலையம் ஆகும்.

    அருகில் உள்ள விமான நிலையம் 74 கிமீ தொலைவில் இருக்கும் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் ஆகும்.

    #சுற்றுலா_இடங்கள்

    கொடிவேரி அணை கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பவானி ஆறு மேல் உள்ள பவானிசாகர் அணை மற்றொரு முக்கிய அணை ஆகும்.

    இது கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

    சத்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகள் சுமார் 25 கிமீ தொலைவில் உள்ளது.

    இங்கு உள்ள பல முக்கியக் கோவில்களில் சிறப்பானது, பாரியூரில் அமைந்துள்ள அருள்மிகு கொண்டத்து காளியம்மன் கோவில் ஆகும்.

    இங்கு மார்கழி மாதத்தில் குண்டம் மற்றும் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    மேலும் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட அமரபணீஸ்வரர் திருக்கோயில், ஆதி நாராயணப் பெருமாள் திருக்கோயில் மற்றும் முருக பெருமான் கோவில்களான பச்சை மலை மற்றும் பவள மலை விசேஷம் வாய்ந்தவை…

    ஒவ்வொருத்தவங்கலோட சொந்த மண்ணுக்கும் ஒரு வரலாறு உண்டு…!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here