சென்னையின் சுற்றலாத்தலங்களில் தவிர்க்க முடியாத இடம் முட்டுக்காடு படகுத்துறை. கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாகத் திட்டமிட்டால் நிச்சயம் இந்த இடமும் பட்டியலில் இருக்கும்.
முட்டுக்காடு படகுத்துறை
15 வருடங்களுக்கு முன்பு வந்த நினைவு. அதன் பிறகு இந்த வழியாகப் பலமுறை சென்றாலும் இங்கே செல்வதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை.
முன்பு பார்த்ததுக்கும் தற்போதைய முட்டுக்காடு படகுத்துறை நிலைக்கும் மலைக்கும், மடுவுக்குமான வித்யாசம்.
தமிழகச் சுற்றுலாத்துறை மிகச்சிறப்பாக இந்த இடத்தைப் புதுப்பித்து இருக்கிறார்கள்.
நவீன பூங்காக்கள், அமரும் இடம், பாதுகாப்பு வசதிகள், உணவக வசதி என்று அசத்தலாக மாற்றி இருக்கிறார்கள். உண்மையில் சிறு இன்ப அதிர்ச்சியே!
படகுக் கட்டணம்
படகில் செல்லும் போது ஓட்டுபவர் படகை ஆட்டிச் சாய்த்துக் கொஞ்சம் நமக்கு உற்சாகத்தை அளிக்கிறார்.
கூடுதல் பணம் கொடுத்தால் இன்னும் கொஞ்சம் தூரம் அழைத்துச் செல்கிறார்கள். இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்.
கரைகளின் ஓரங்களில் தேவையற்ற புதர்களும் மரங்களுமே மண்டி இருக்கின்றன.
இவற்றை நீக்கித் தரமான, பறவைகள் விரும்பும் மரங்களைக் கரை ஓரங்களில் வைத்தால், பறவைகள் கூடுதலாக வரும், அதோடு பார்க்கவும் அழகாக இருக்கும்.
சீரமைத்தால் பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
வாய்ப்பிருந்தும் அதைப் பயன்படுத்தாமல் இருக்கிறார்களே! என்ற வருத்தமே அதிகம் இருந்தது.
உணவகம் இருப்பதால், வருபவர்கள் சாப்பிட, இளைப்பாற, பேச மிகச்சிறந்த இடம். தண்ணீரை பார்த்தபடி அமர இருக்கை, பாதைகள் அமைத்து இருக்கிறார்கள்.
நண்பனிடம் “அப்புறம் நாம பைக்கில் வந்து இங்கே சில மணி நேரங்கள் இருந்து செல்வோம்” என்று கூறியுள்ளேன். ரொம்பப் பிடித்து இருந்தது.
பேசுவதற்கு இயற்கையை ரசிப்பதற்குச் சிறந்த இடம், குறிப்பாக அமைதியான இடம்.
Read : “Royal Enfield” ECR Ride 🙂
சாலை மாற்றம்
இந்த இடத்துக்குச் சாலை மாற்றத்தில் படகுத்துறை செல்வதற்கான வழியே மறைந்து விட்டது, பலர் கவனிக்காமல் தாண்டிச் சென்று விடுகிறார்கள்.
இதனால் கூட்டம் குறைந்து விட்டது என்று படகோட்டி வருத்தப்பட்டார்.
சென்னை, புதுச்சேரி செல்பவர்கள் அனைவரும் எளிதாகப் படகுத்துறை செல்லும் படி ஒரு பாலம் அமைத்துக் கொடுத்தால் 100% கூட்டம் அதிகரிக்கும்.
வசதி செய்து கொடுத்தாலே பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
சென்னையில் உள்ளவர்களைக் குடும்பத்துடன், நண்பர்களுடன் சென்று வரவும், மற்றவர்கள் சென்னை வரும் போது செல்லத் திட்டமிடவும் பரிந்துரைக்கிறேன்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, இந்த மாதிரி ஒரு இடம் இருக்கிறது என்பது எனக்கு இதுவரை தெரியாது.. தகவலுக்கு நன்றி!!! விடுமுறையில் ஊருக்கு செல்லும் போது பல விதமான திட்டங்களுடன் செல்கிறேன்.. ஆனால் 50 % கூட நான் நினைத்ததை செயல்படுத்த முடியவில்லை.. அடுத்தமுறை ஊருக்கு செல்லும் போது இந்த இடத்திற்கு பயணம் மேற்கொள்ள முயற்சிக்கிறேன்.. புதிய புதிய பல இடங்களுக்கு செல்ல எனக்கு எப்போதும் விருப்பம் உண்டு.. ஆனால் திருமணத்திற்கு பின் நம்முடைய விருப்பங்களுக்கு, ஆசைக்கும் நேரம் ஒதுக்க முடியாமல் போவது வருத்தமான ஒன்று!!! பகிர்வுக்கு நன்றி கிரி..
சென்னை வரும் போது முயற்சித்துப் பாருங்கள் யாசின்