சில வருடங்களுக்கு முன்பு ஈரோடு “திண்டல் மலை முருகன்” கோவிலில் முதன் முதலாகச் செண்டை மேளம் பார்த்த (கேட்ட) போது “முருகன் கோவிலில் செண்டை மேளமா?!” என்றானது. Image Credit
இதைக் கண்டு சிறு அதிர்ச்சி இருந்தாலும், இசையை ரசித்து விட்டுச் சென்றேன்.
செண்டை மேளம்
மேளத்தின் மீது அலாதி பிரியம் எனவே, செண்டை மேளம் பிடித்ததில் வியப்பில்லை.
பின் ஆங்காங்கே செண்டை மேளத்தைப் பார்த்தாலும், பெரியளவில் உறுத்தவில்லை.
கடந்த ஒரு வருடமாக “கோபி” பகுதி கடைகளின் திறப்பு விழாக்களுக்குச் செண்டை மேளமே பயன்படுத்தப்படுகிறது.
“என்னடா இது! அதிகமாகி கொண்டே வருகிறதே!” என்று நினைத்தேன்.
கடந்த மாதம் சென்னையில் எங்க அலுவலகம் அருகே ஒரு உணவகம் திறக்கப்பட்டது, அதற்கும் கவன ஈர்ப்புக்குச் செண்டை மேளமே பயன்படுத்தப்பட்டது.
கடந்த வாரம் ஊருக்குச் சென்ற போது “தீர்த்த குடம்” எடுத்து வந்தவர்கள் முன்பு செண்டை மேளம் வாசித்துக் கொண்டு வந்த போது கடும் அதிர்ச்சியாகி விட்டது.
கடைகளில் செண்டை மேளத்தை சேர்ப்பதை ஒரு கணக்கில் எடுத்துக்கொண்டாலும், கோவில், கடவுள் சம்பந்தப்பட்ட நம்முடைய கலாச்சாரம் பின்பற்றப்படும் இடங்களில் கூடச் செண்டை மேளம் ஆக்கிரமித்து இருப்பது நல்லதாகப் படவில்லை.
எதனால் இந்த மாற்றம்?
செண்டை மேளம் இசை கவரும் படி இருப்பது தான் அதி முக்கியக்காரணம்.
அதோடு நம்முடைய நாதஸ்வரம், தவில் போன்றவற்றுக்கு வரவேற்பு குறைந்து வருவதும் காரணம்.
இதில் வேறு பிரச்சனைகள் உள்ளதா? என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை.
அதோடு செண்டை மேளத்துக்குக் கொடுக்கப்படும் வரவேற்பு, மதிப்பு நம்மூர் கலைஞர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
செண்டை மேள கலைஞர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள், அவர்களை நன்கு கவனிக்கிறார்கள், மதிப்பாக நடத்துகிறார்கள்.
பறையிசை
நம்முடைய பறையிசைக்கு ஈடு இணை எதுவுமில்லை.
பறையிசையைத் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே தொடர்கிறார்கள் ஆனால், அவர்களுக்குச் சமூகத்தில் கொடுக்கப்படும் மரியாதை ஒன்றுமே இல்லை.
தற்போதைய தலைமுறை சிலர் மட்டுமே பறையிசை தொடர்வார்கள், அடுத்து வரும் தலைமுறை பறையிசையைத் தொடராது.
காரணம் இவர்களுக்குக் கொடுக்கப்படும் “மரியாதை”.
காலம் மாறி வருகிறது, பொருளாதாரத்தில் உயர்ந்து வருகிறார்கள். எனவே, இவர்களுக்கும் மரியாதை இழந்து தங்கள் கலையை மற்றவர்களுக்குத் தொடர வேண்டிய கட்டாயமில்லை.
அப்படியே தொடர்ந்தாலும் அவர்கள் சமூகத்து நிகழ்வுகளுக்கு மட்டுமே இருக்கும்.
எதிர்காலத்தில் கோவில்கள், திருமண, துக்க நிகழ்வுகளில் பறையிசை என்ற ஒன்றே இருக்காது.
எதிர்காலம் இனி செண்டை மேளம் தான்
நான் கூறுவது உங்களுக்கு மிகையாக இருக்கலாம், இனி தமிழகத்தைச் செண்டை மேளமே ஆக்கிரமிக்கப் போகிறது.
இதைப் படித்த பலரும் நேரில் காணும் போது நான் கூறியதன் தீவிரத்தை உணர்வீர்கள்.
இனி உங்கள் கண்களில் அடிக்கடி செண்டை மேளத்தைக் காண வாய்ப்புக் கிடைக்கும், அது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும்.
கேரளாவை விடத் தமிழகத்திலேயே செண்டை மேள கலைஞர்களுக்கு வருமானம் அதிகம் கிடைத்தாலும் வியப்பில்லை.
வாய்ப்புக் கொடுங்கள்
எனக்குச் செண்டை மேளம் இசை ரொம்பப்பிடிக்கும் அதில் சிறு சந்தேகம் கூட இல்லை ஆனால், நம்ம கலாச்சாரத்தை, கலைஞர்களை விட்டுவிட மனசில்லை.
நம்மூர் கலைஞர்களுக்கு மதிப்புக் கொடுங்கள், அவர்களை ஆதரியுங்கள். நம்முடைய இசையில் மாற்றம் கொண்டு வந்து மக்களை எப்படிக் கவரலாம் என்று யோசியுங்கள்.
கவர்ச்சியில் மயங்கி நம் நாதஸ்வரம், தவில், பறையிசை கலைஞர்களைக் கை விடாதீர்கள்.
அங்கீகாரம், மரியாதை இல்லாத கலை வளராது
பொழுதுபோக்குக்கு ஃபேஸ்புக், ட்விட்டர், Tik Tok, இன்ஸ்டாகிராமில் இருக்கும் நமக்கே Like, Comment என்ற அங்கீகாரம் இல்லையென்றால், சோர்ந்து விடுகிறோம்.
இதையே பிழைப்பாக, கனவாக, உயிராக வைத்து இருப்பவர்களுக்கு எப்படி இருக்கும்?! அவர்கள் நிலையில் இருந்து எண்ணிப் பாருங்கள். வருத்தமாக உள்ளது
புறக்கணிப்பின் வலி மிக மோசமானது.
கொசுறு
கடந்த வாரம் சென்னை செல்ல வீட்டிலிருந்து கோபி பேருந்து நிலையம் சென்று கொண்டு இருந்தேன்.
வழியில் கோபியில் “மெரினா” துணிக்கடையில் எதோ நிகழ்வுக்காகப் பறையிசை மற்றும் ட்ரம்ஸ் எல்லாம் வைத்து நொறுக்கிக்கொண்டு இருந்தார்கள்.
எனக்கு இந்த இசையைக் கேட்டாலே தலையெல்லாம் கிறுகிறுத்து விடும், நின்று கேட்டே ஆக வேண்டும் ஆனால், பேருந்துக்கு நேரமானதால் வேறு வழி இல்லாமல் கடந்து செல்ல வேண்டியதாகி விட்டது.
கொஞ்ச தூரம் சென்றவுடன் சாமியைத் தேரில் வைத்து அழைத்து வந்து கொண்டு இருந்தார்கள். அதன் முன் செண்டை மேளம் அடித்துக்கொண்டு இருந்தார்கள்.
இவர்கள் “மெரினா” வழியாகத்தான் செல்ல வேண்டும். செண்டை மேளம் & பறையிசை ட்ரம்ஸ் இரண்டுமே அருகருகே சந்தித்து இருப்பார்கள்.
இருவருமே போட்டி காரணமாகப் பட்டையைக் கிளப்பி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
ஒரு அருமையான நிகழ்வைக் காணும் வாய்ப்பைத் தவறவிடும்படியானது மிக வருத்தம். செமையா இருந்து இருக்கும்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி, பாரம்பரியம் மதிப்பிழந்து, புதுமைகள் உள்ளே போகும் எந்த நிகழ்வும் எனக்கு விருப்பமான ஒன்று இல்லை!!! நீங்கள் குறிப்பிட்ட இந்த நிகழ்வு மட்டும் அல்ல பல நிகழ்வுகள் மாற்றம் நடந்து கொண்டு இருக்கிறது!!! இவைகள் எல்லாம் நிச்சயம் ஆரோக்கியமான ஒன்றாக தெரியவில்லை.. இருப்பினும் பல சந்தர்ப்பங்களில் மாற்றங்களை ஏற்று கொள்ளாமலும் இருக்க முடியாது.. முன்னோர்களின் பழக்க வழக்கங்கள் நாம் கற்றது போல், நமது பழக்க வழக்கங்கள் நம் சந்ததியினருக்கும் கற்று கொடுக்க வேண்டியது முதன்மையான ஒன்று.. பகிர்வுக்கு நன்றி கிரி.
என்னமோ போங்க யாசின்..