ரஜினி அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட புத்தகம் ஒரு யோகியின் சுயசரிதம்.
ஒரு யோகியின் சுயசரிதம்
இதற்கு முன் சச்சிதானந்தா சுவாமிகள் எழுதிய பொன்னான நிகழ்காலம் புத்தகத்தை ரஜினி பரிந்துரைத்து இருந்தார். அப்புத்தகம் எளிமையாக, நம் தின வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி எழுதப்பட்டு இருந்தது. Image Credit
அந்த ஒரே புத்தகத்துக்குப் பல்வேறு தலைப்புகளில் அதன் ஒவ்வொரு கருத்து குறித்தும் அவ்வப்போது விமர்சனம் எழுதி வருகிறேன்.
பொன்னான நிகழ்காலம் அனைவருக்குமானது என்றால், ஒரு யோகியின் சுயசரிதம் Advanced Readers க்கானது. இதிலும் அனுபவங்களே உள்ளன என்றாலும், படிக்கப் பொறுமை வேண்டும்.
புத்தகம் வாங்கி இரு வருடங்களாகிறது. படிக்க ஐந்து முறை முயற்சித்தும் தோல்வியிலேயே முடிந்தது.
சமீபத்தில் முழுவதும் படித்து முடித்து விட்டேன். இப்புத்தகம் மிகப்பெரியது அதோடு அனைத்துப்பகுதிகளும் சுவாரசியமாக இருக்கும் என்று கூற முடியாது.
இந்த விமர்சனம் பொன்னியின் செல்வன் விமர்சனம் போலப் பெரியதாக இருக்கும். எனவே, விருப்பமுள்ளவர்கள் தொடரலாம், மற்றவர்கள் SKIM Read பண்ணலாம் அல்லது தவிர்க்கலாம்.
ரஜினி
இக்கதையின் நாயகனாக வரும் யோகானந்தர் சிறு வயது அனுபவங்களை பாபா படத்தில் காட்சிகளாக ரஜினி வைத்துள்ளார். குறிப்பாகப் பட்டம் விடுவது.
பாபாஜி அவர்களின் அற்புதங்களை, அவரது புகழை மேலும் பலரிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே பாபா படம் எடுக்கப்பட்டது.
ஆனால், இவ்வளவு அதிசயம் வாய்ந்த (புத்தகத்தைப் படித்தால் புரியும்) பாபாஜியைப் படமாகத் தயாரிக்கும் எண்ணம் சிறப்பானது என்றாலும், ஒரு படமாக மக்களிடையே கொண்டு செல்லத் தலைவர் தவறி விட்டார் என்பதே என் கருத்து.
பாபா தோல்வி அடைந்ததில் வருத்தமில்லை காரணம், தான் மிக மதிப்பு வைத்துள்ள கடவுளான ஸ்ரீ ராகவேந்திரரை படமாக எடுத்த போதும் வெற்றியைப்பெறவில்லை.
ஆனால், அப்படம் பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும், அற்புதமானது. ஸ்ரீ ராகவேந்திரருக்கு தரமான மரியாதையைச் செய்து இருக்கும்.
இது போன்ற படங்கள் கமர்சியல் வெற்றி பெறுவது முக்கியமல்ல. கூற வந்த கருத்துகள் மக்களிடையே சரியான முறையில் சென்றடைந்ததா என்பதே முக்கியம்.
ஆக்ரோஷமாக நடித்து வந்த ரஜினியா இப்படி நடித்தது! என்று தற்போது பார்த்தாலும் வியப்பாக இருக்கும். முகத்தில் அமைதி, சாந்தம், கருணை, பக்தி என்று அனைத்தையுமே கொண்டு வந்து இருப்பார்.
எப்படி இதுபோல ரஜினி நடித்தார்! என்று தற்போதும் வியக்கும் படம்.
பாபாஜி
பாபா என்ற பெயரை மக்களிடையே கொண்டு சென்றதில் வெற்றி பெற்று இருந்தாலும் பாபாஜிக்கு சரியான மரியாதையைச் செய்த படமாகக் கருதவில்லை.
இதை ஏன் கூறுகிறேன் என்றால், இப்புத்தகத்தில் படித்ததை வைத்துப் பார்த்தால், பாபாஜி மனித உருவில் இருந்த கடவுள் போலவே உள்ளார். Image Credit
பாபாஜியின் புகழை, யோகாவை யோகானந்தரின் குருக்கள் இந்தியாவில் பரப்புவர், யோகானந்தர் வெளிநாடுகளில் பரப்பத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இதுபோலக் காட்சி ஊடகமாக பரப்ப ரஜினிக்கு கிடைத்த வாய்ப்பு பாபா. இது கடவுளின் விருப்பமா அல்லது தற்செயலா என்று தெரியவில்லை.
அதை ரஜினி கமர்சியல் கலந்ததில் மற்றும் அப்போது பாபா படத்துக்கு இருந்த தாறுமாறான எதிர்பார்ப்பு படத்தின் நோக்கத்தை முழுமையடையவிடவில்லை.
உருவாக்கம் (Making) என்ற வகையில் ஏனோ தானோ என்று பொறுப்பற்ற முறையில் எடுக்கப்பட்ட படமாகவே பாபா உள்ளது.
இதைக்கூறியதற்குத் தலைவர் ரசிகர்கள் கோபப்படலாம் ஆனால், இப்புத்தகத்தைப் படித்தால் நான் கூறுவது சரியா தவறா என்று புரியும்.
ராமர் மனித உருவில் கடவுளாக இருந்த அரசர் ஆனால், பாபாஜி மனித உருவில் கடவுளாக இருந்த ஆன்மீக மகான்.
பல நூற்றாண்டுகள் உயிருடன் இருந்தார். எங்கே வேண்டும் என்றாலும் அவரால் தோன்ற முடியும். கற்பனைக்கெட்டாத அற்புதங்களை நிகழ்த்தியவர்.
அப்படிப்பட்ட ஒருவரை கூறும் படம் என்றால் அதன் தரம் எப்படி இருக்க வேண்டும்?
பாபா பாடலில் வருவது போல ஆயிரம் அதிசயம் அமைந்தது பாபாஜி ஜாதகம். பழைய திரைப்படங்களில் கண்ட மாயாஜால காட்சிகளை இதில் படிக்கலாம்.
பாபாஜி வயது 2000+ ஆண்டுகள் என்று ரஜினி ஒருமுறை கூறியதாக நினைவு, அதைக் கிண்டல் செய்து சத்யராஜ் எதோ படத்தில் காட்சி வைத்து இருந்தார்.
இப்புத்தகத்தில் கூறப்பட்டவை உண்மையென்று நம்புகிறேன். ஏனென்றால், எந்த இடத்திலும் எனக்குப் போலித்தனமோ, மிகைத்தன்மையோ தோன்றவில்லை.
ரஜினியின் ஆன்மிகம்
உங்களில் பலருக்கு ரஜினி குறித்துப் பல்வேறு மாற்றுக்கருத்துகள் இருக்கலாம் ஆனால், அவருடைய ஆன்மீகத்தில் சந்தேகமிருக்காது என்று கருதுகிறேன்.
ரஜினியும் ஒரு அதிசயப்பிறவி மற்றும் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று முழுமையாக நம்புகிறேன். இதற்கு பல சம்பவங்களைக் கூறலாம்.
ஒருமுறை பத்திரிகை இதழில் ரஜினி தனது அனுபவங்களைக் கூறும் போது ஒரு ஒளி போலத் தோன்றி அவரை அடைந்ததாகக் கூறி இருந்தார்.
இதே போல அல்ல ஆனால், இது போல அர்த்தத்தில் கூறி இருந்தார், சரியாக நினைவில்லை. இப்புத்தகம் படிக்கும் போது இச்சம்பவங்களே நினைவுக்கு வந்தது.
ஏனென்றால், கிட்டத்தட்ட இதே போலப் பல நிகழ்வுகள் ஒரு யோகியின் சுயசரிதம் புத்தகத்தில் வருகிறது.
இப்புத்தகம் படித்தால் ரஜினி எந்த அளவுக்கு இப்புத்தகத்தால் அல்லது இதில் உள்ள குருக்களால் ஈர்க்கப்பட்டுள்ளார், அதை எப்படி மற்றவர்களுக்குத் தன் எளிமையான கருத்துகளால் பல்வேறு மேடைகளில் வெளிப்படுத்தியுள்ளார் என்பது புரியும்.
யோகானந்தர் குடும்பம்
1893 ஜனவரி 5ம் தேதி யோகானந்தர் பிறந்தார். நான்கு மகன்கள், நான்கு மகள்கள் என்று எட்டுக் குழந்தைகள்.
யோகானந்தர் இரண்டாவது மகன், நான்காவது குழந்தையாவார். வங்காளி குடும்பம்.
யோகானந்தர் தந்தை ஆங்கிலேய ஆட்சியில் ரயில்வே துறையில் பெரிய பதவியில் இருந்தவர். ஒரு சராசரி குடும்பம்.
கணவனிடம் (அப்பாவிடம்) ஒரு விவாதத்தில் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்குப் போகிறேன் என்று அவரது அம்மா கூறுவார்.
அக்காலம் முதல் இப்பிரச்சனை உள்ளதை யோகானந்தர் கூறுவது புன்னகைக்க வைக்கும். பெண்களுக்கே உள்ள மிகப்பெரிய ஆயுதங்களில் ஒன்று 🙂 .
இதே போல மனைவியுடன் பேசி வெற்றி பெற முடியாது என்பதையும் குறிப்பிடும்படியான நிகழ்வுகள் ரசிக்கும்படி இருக்கும்.
யோகானந்தர் அப்பா தனக்கு வந்த பெரியளவிலான பணி ஈட்டு தொகையை (₹1,25,000) பெறும் ஆர்வம் கூட இல்லாதவராக உள்ளார்.
பணம் அவருக்கு இரண்டாம் பட்சமே.
யோகானந்தர்
யோகானந்தர் தாயும் தந்தையும் லாஹிரி மகாசயர் மீது மிகுந்த பற்றுடையவர்கள். இதன் தாக்கமே யோகானந்தர் ஆன்மீகத்தில் ஆர்வம் கொள்ள முக்கியக் காரணம்.
சிறு வயதிலேயே பல அற்புத நிகழ்வுகள் நடந்துள்ளது, சக்தியைப் பெற்றுள்ளார். எனவே, இதுவே ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டும் என்ற தீவிர எண்ணத்தை யோகானந்தருக்குத் தோற்றுவித்துள்ளது.
அதோடு கடும் நோயால் பாதிக்கப்பட்டு லாஹிரி மகாசயர் அருளால் காப்பாற்றப்பட்டவர்.
லாஹிரி மகாசயர் ஒளி வெள்ளத்துடன் பலமுறை அவர் முன் தோன்றியதாகவும், தொட முயலும் போது நிழற்படமாக மாறி விடுவதையும் குறிப்பிட்டுள்ளார்.
இயல்பாகவே ஆன்மீகத்தில் இருந்த ஈடுபாடு மற்றும் அவருக்கு ஏற்பட்ட ஆன்மீக சம்பவங்களால் ஆன்மீக பாதையைத் தேர்ந்தெடுத்தவர் யோகானந்தர்.
முகுந்தன் என்ற சாதாரண நபர் எப்படிப் பரமஹம்ஸ யோகானந்தர் ஆனார் என்பதை இப்புத்தகம் கூறுகிறது.
இப்புத்தகத்தில் இடையிடையே ஏராளமான குருக்கள் வருவார்கள். அனைவர் பெயரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி (ஆனந்தா) இருக்கும். எனவே, யாரை பற்றிக் கூறுகிறார்? யார் குரு? என்பதில் குழப்பம் ஏற்படும்.
எளிதாகப் புரிந்து கொள்ளப் பின்வரும் வரிசை தான் சரியானது.
பாபாஜி --> யோகவதார் லாஹிரி மகாசயர் --> ஞானவதார் சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் --> பிரேமவதார் பரமஹம்ஸ யோகானந்தர்.
பெயருடன் ஆனந்தா என்று இணைக்கப்படுவது ஆன்மீகத்தில் மதிப்பு மிக்கத் தருணமாகக் கருதப்படுகிறது.
தற்போது போலிகளும் இதைத் தங்கள் பெயருடன் இணைத்துக்கொள்வது ஆன்மீகத்துக்கு ஏற்பட்ட இழுக்கு.
லாஹிரி மகாசயர்
லாஹிரி மகாசயர் அற்புத சக்திகளைக் கொண்டவராக உள்ளார்.
அவர் அனுமதியின்றி யாராலும் அவரை நிழற்படம் கூட எடுக்க முடியாது. அப்படி எடுத்தாலும் நிழற்படத்தில் அவர் இருக்க மாட்டார்.
இது பொய் என்று நிரூபிக்கிறேன் என்று கங்காதர் என்ற நிழற்பட நிபுணர் மறைந்திருந்து லாஹிரி மகாசயர் தியானம் செய்வதை 12 முறை எடுக்கிறார்.
அனைத்திலும் மற்ற பொருட்கள் உள்ளன ஆனால், லாஹிரி மகாசயர் இல்லை.
தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட பிறகு எடுக்கப்பட்ட படத்தில் லாஹிரி மகாசயர் மறையாமல் உள்ளதே பலருக்கு நிழற்படமாகக் கிடைத்துள்ளது.
இதன் பிறகு இவரை யாரும் படம் எடுக்க(முடிய)வில்லை.
இந்தப்படம் தான் யோகானந்தர் வீட்டில் சிறு வயதில் இருந்த படம் ஆகும். இதுவே யோகானந்தரை கடும் நோயிலிருந்து காப்பாற்றியுள்ளது அதோடு அவரை ஒளி வெள்ளத்தில் வந்து தொடர்பு கொண்டுள்ளது.
செய்திகள்
ஒரு யோகியை கொள்ளைக்காரன் என நினைத்துக் காவலர் கையை வெட்டி விடுவார் ஆனால், பின் தவறை உணர்வார்.
யோகி தன் வெட்டப்பட்ட கையைத் திரும்ப ஒட்ட வைத்துக் கொண்டதோடு, இதற்காக வருத்தப்பட வேண்டாம் என்று மனமுடைந்த காவலருக்கு ஆறுதல் கூறுவார்.
இச்செய்தி பின்னர் யோகியின் தலையே வெட்டப்பட்டதாக வரும். அக்காலத்தில் இருந்தே ஊடகங்கள் பொய், மிகைசெய்திகளால் நிறைந்துள்ளது 🙂 .
செய்திகளைத் திரித்துக் கூறும் வழக்கம் இருந்ததாக யோகானந்தர் குறிப்பிடுகிறார்.
யுக்தேஸ்வர்
யோகானந்தரின் நேரடி ஆன்மீக குருவான யுக்தேஸ்வர் மற்ற குருக்களிலிருந்து தனித்து இருக்கிறார்.
அவர் தன் ஆசிரமத்தில் உள்ளவர்களின் தேவையைச் சரிவரப் பூர்த்திச் செய்யும் அளவுக்கான பொருளாதாரச் சுதந்திரத்தை கொண்டு இருந்தார்.
இதுவே யாரிடமும் கையேந்த விடவில்லை என்பதோடு யாருக்காகவும் அனுசரித்துச் செல்லாத நிலையை அவருக்குக் கொடுத்துள்ளது.
காரணம், சிலர் தங்கள் ஆசிரம தேவைக்கான நிதி வேண்டும் என்பதற்காகச் சிலரை அனுசரித்து / புகழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அது போன்ற நிலை இவருக்கு அமையவில்லை.
இதைப்படித்ததும் ரஜினிக்கு அவரது அப்பா கூறிய அறிவுரை நினைவுக்கு வந்தது.
நாம் வாழ்வதற்குத் தேவையான வருமான வழிகளை ஏற்படுத்திக்கொண்டால் மட்டுமே எந்த ஒரு விசயத்திலும் தைரியமாக இறங்க முடியும்.
இல்லையென்றால், நமக்கான தேவை நம்மைக் கோழையாக்கி எந்தத் தைரியமான முயற்சிகளையும் எடுக்க விடாது என்று கூறி இருந்தார்.
எடுத்துக்காட்டுக்கு, ஒரு சம்பளக்காரர் முழுக்கத் தன் மாத சம்பளத்தை நம்பியே இருக்கும் போது அவரால் ரிஸ்க் எடுத்து இன்னொரு வேலைக்கு அல்லது அடுத்தக் கட்ட முயற்சியை தைரியமாகச் செய்ய முடியாது.
காரணம், மாறும் போது பிரச்சனையாகி இந்த வேலையும் இல்லையென்றால், குடும்பத்தைக் காப்பாற்றுவது எப்படி? என்ற கவலை, பயம் இருக்கும்.
ஆனால், அதே நமக்கு இன்னொரு வழியில் வருமானம் வருகிறது, சம்பளத்தை நம்பி இல்லையென்றால், பல்வேறு முயற்சிகளைத் தைரியமாக மேற்கொள்ளலாம்.
Read : நடுத்தர வகுப்பு மக்கள் என்பவர்கள் யார்? ☝️
யுக்தேஸ்வர் கண்டிப்புடன் இருப்பவர், அதோடு எதையும் சமரசம் செய்து கொள்ளாதவர்.
யோகானந்தர் குறிப்பிடும் போது, யுக்தேஸ்வர் கடுமையைக் குறைத்து, தவறுகளை மன்னித்துக் கொஞ்சம் இலகுவாக நடந்து இருந்தால், பலரும் அறிந்த பிரபலமான நபராகி இருப்பார் என்று கூறியுள்ளார்.
ஆனால், யுக்தேஸ்வர் அதையெல்லாம் எதிர்பார்த்து இல்லை என்பதையே யோகானந்தரும் குறிப்பிடுகிறார். தனக்குச் சரி என்பதைச் செய்கிறார், மற்றவர் பாராட்டை எதிர்பார்த்து எதையும் செய்வதில்லை.
பிரச்சனையைத் தைரியமாக எதிர் கொள்
யுக்தேஸ்வர் தன் சிறு வயது அனுபவத்தை யோகானந்தருக்கு கூறுகிறார்.
சிறு வயதில் யுக்தேஸ்வரை பயமுறுத்த அவரது அன்னை, அறையில் பிசாசு இருப்பதாகக் கூற, இவர் அறையில் சென்று பார்த்து எதுவுமில்லை என்று ஏமாற்றத்தை அன்னையிடம் வெளியிடுகிறார்.
இதன் பிறகு அவரது அன்னை பயமுறுத்துவதையே நிறுத்தி விட்டதாகக் கூறுகிறார்.
இதிலிருந்து படிப்பினையாக ‘பயத்தை நேருக்கு நேர் எதிர்கொள். அது உன்னைத் தொந்தரவு செய்வதை நிறுத்தி விடும்‘ என்று அறிவுறுத்தியுள்ளார்.
இது 100% சரி. பயந்துகொண்டு இருப்பதால், பிரச்சனை முடியப்போவதில்லை. என்ன ஆகிவிடும்? பார்த்து விடுவோம் என்று இறங்கினால் ஒன்றுமே இல்லாமல் ஆகி விடும்.
கடவுளைக் காண வேண்டும்
யோகானந்தருக்கு கடவுளைக் காண வேண்டும், அதற்கு இமயமலை செல்ல வேண்டும் என்ற பெரிய ஆவல்.
‘கடவுள் இங்கேயே இருக்கிறார். இங்கே காண முடியாத கடவுளை மலைகளில் தேடி பயனில்லை. தனக்குள் இருப்பதையே அறிய முடியாதவன், உடலை அங்கும் இங்கும் கொண்டு செல்வதால் கண்டுபிடித்து விட முடியாது‘ என்று யுக்தேஸ்வர் கூறுவார்.
ஆனால், யோகானந்தருக்கு சமாதானமில்லை. எனவே, யுக்தேஸ்வருக்கு விருப்பம் இல்லையென்றாலும் கடவுளைத் தேடி இமயமலை பயணிக்கிறார்.
செல்லும் வழியில் சந்திக்கும் யோகி ஒருவர், யுக்தேஸ்வர் கூறியதையே கூறி அவருக்கு விளக்கத்தை அளித்ததால், தவறை உணர்ந்து திரும்பி வந்து விடுகிறார்.
பைபிள் / இயேசு
இப்புத்தகம் படிக்கும் போது பல நேரங்களில் இந்து ஆன்மீகத்தைப் படிக்கிறோமா அல்லது கிறித்துவம் / இயேசுவை பற்றிப் படிக்கிறோமா என்ற சந்தேகம் வரும்.
ஏனென்றால், இதில் வரும் அனைத்து குருக்களும் இந்து மதத்தோடு கிறித்துவத்தை, இயேசுவை பற்றி உயர்வாகக் குறிப்பிடுகிறார்கள்.
பல்வேறு இடங்களில் இது பற்றிய குறிப்புகள் வருகின்றன.
தலைவர் ரஜினி வீட்டில் ஒரு இயேசு கிறிஸ்து படம் ஒன்றும் இருக்கும். ஒருவேளை இப்புத்தகத்தின் பாதிப்பா அல்லது ஏற்கனவே இருந்ததா என்று தெரியவில்லை.
இதோடு யோகானந்தர் அமெரிக்கா உட்பட மேலை நாடுகளுக்குப் பயணம் செல்லும் போது கிறித்துவம் / இயேசு குறித்து அதிகச் செய்திகளைப் பகிர்ந்துள்ளார்.
இயேசு சம்பந்தப்பட்ட பல அதிசய நிகழ்வுகளையும் பகிர்ந்துள்ளார்.
பாபர்
ஒரு யோகியால் அடுத்தவருக்குள்ள நோயை, தான் பெற முடியும் என்று யோகானந்தர் கூறுகிறார். இதற்குப் பல சம்பவங்களையும் எடுத்துக்காட்டுகளாகக் கூறுகிறார்.
அதாவது, சிலருக்கு தன் சக்தியால் நோயைக் குணப்படுத்துவதோடு மற்றவர் நோயைத் தான் ஏற்றுக்கொண்ட சம்பவங்களும் உண்டு.
இதுபற்றிக் கூறும் போது மொகலாயச் சாம்ராஜ்யத்தை நிறுவிய பாபர் அனுபவங்களைக் கூறுகிறார்.
ஹிமாயூன் கடும் நோயால் அவதிப்பட்டதால் துயருற்ற பாபர், தான் அந்நோயை ஏற்றுக்கொள்வதாகவும், தன் மகனைக் காப்பாற்ற கடவுளிடம் வேண்டுவார்.
இதன் பிறகு அந்நோய் பாபருக்கு வந்து இறந்து விடுவார் ஆனால், ஹிமாயூன் பிழைத்து விடுவார். இது வரலாறு.
பிரார்த்தனைகளுக்குப் பலன், சக்தி உண்டு என்பதை விளக்க இதைக்கூறுவார்.
ஒரு குருவின் உடல் சுகவீனமுற்றிருந்தால், தெய்வீக சக்திகள் அற்றவர் என்று சொல்வதற்கில்லை. ஒரு குருவின் விஷேச தகுதிகள் ஆன்மீக தகுதிகளே அன்றி உடல் தகுதிகள் அல்ல என்று குறிப்பிடுகிறார்.
கிரி பாலா
50+ வருடங்களுக்கும் மேலாகக் கிரி பாலா என்ற அம்மையார் உணவு, நீர் எதையும் உட்கொள்ளாமல் உயிருடன் இருப்பதை அறிந்து வியப்படைந்த யோகானந்தர், அவரைக் காண விரும்புகிறார்.
இதற்காகக் கடும் சிரமத்துக்கு இடையே காட்டுப்பகுதிகளைக் தாண்டி ஒரு கிராமத்தில் வசிக்கும் கிரி பாலாவை சந்திக்கிறார்.
அவரிடம் நேரிடையாக, ‘அம்மா! நீங்கள் உணவே உட்கொள்வதில்லையா? நீர் அருந்துவதில்லையா? இதை உங்கள் வாயால் உறுதி செய்யுங்கள்‘ என்று கூறுகிறார்.
அந்த அம்மையாரும் உண்மையென்று ஒப்புக்கொள்கிறார்.
‘அம்மா! இந்த இரகசியத்தை நீங்கள் ஏழை மக்களுக்குக் கூறினால், பசியால் வாடும் அவர்கள் பசி இல்லாமல் இருப்பார்களே!‘ என்று கேட்டதற்குக் கிரி பாலா கூறும் பதில் சிறப்பாக இருக்கும்.
அந்த வயதுக்குண்டான அடையாளங்கள் தென்பட்டாலும் அந்தம்மையார் ஆரோக்கியமாகவும் பொலிவுற்றவராகவும் இருந்ததாக யோகானந்தர் கூறுகிறார்.
மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூரை சந்தித்தது, விவேகானந்தர் கூறியதை குறித்தும் விரிவாகக் கூறியுள்ளார்.
வெளிநாட்டுப் பயணம்
பாபாஜி மற்றும் குருக்களின் புகழைப்பரப்ப யோகானந்தர் அமெரிக்கா செல்வார்.
யோகானந்தர் அனுபவங்கள் பெரும்பாலும் அறிவியல் சார்ந்த விளக்கங்களாக உள்ளது. அறிவியல் குறித்த ஆராய்ச்சிகளும் அதிகளவில் உள்ளன.
இப்பகுதி படிக்கக் கடினமாக உள்ளது. லாஹிரி மகாசயர், யுக்தேஸ்வர் அனுபவங்களைப் போல எளிமையான அனுபவங்களாக இல்லை.
யோகானந்தருக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் அதிகம் பிடித்துள்ளது போன்று அவரது அனுபவங்கள், கருத்துகள் உள்ளன.
யோகானந்தர் முக்தி நிலையை அடைவதும் அமெரிக்காவில் தான்.
அனைத்து குருக்களுக்கும் தான் எப்போது இறப்போம் என்பது தெரிந்துள்ளது. எனவே, தங்கள் கடமைகளை அதற்கு முன் சரிவர நிறைவேற்றி விடுகிறார்கள்.
அதோடு இறந்தாலும், தனக்கு விருப்பமானவர்கள் முன் தோன்றும் சக்தியையும் பெற்றுள்ளார்கள். இதில் யோகானந்தர் மட்டும் அது போலத் தோன்றியதாக இல்லை.
காரணம், இப்புத்தகம் எழுதியதே யோகானந்தர். எனவே, அவர் இறப்புக்கு பிறகு நடந்தவற்றை இப்புத்தகத்தில் பதிவு செய்ய முடியவில்லை.
ஆனால், இறந்த பிறகு 20 நாட்களுக்குப் பிறகும் யோகானந்தர் உடல் கெடாமல் மலர்ச்சியுடன் இருந்ததாக புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
யார் படிக்கலாம்?
ஆன்மீகத்தை விரும்புபவர்கள் தவற விடக்கூடாத புத்தகம்.
இதில் கூறப்பட்டுள்ள அனுபவங்கள், அற்புதங்கள், அதிசயங்கள் படிப்பவர்களுக்கு இப்படியெல்லாம் கூட நடக்குமா! என்ற வியப்பை ஏற்படுத்தும்.
புத்தகத்தின் மையக்கருத்தை தலைப்பைப் பார்த்தாலே உணர முடியும் என்பதால், வேறு எதிர்பார்ப்புகள் உள்ளவர்கள் தவிர்த்து விடலாம்.
இப்புத்தகம் படிக்க ஆன்மீகத்தில் கொஞ்சமாவது ஆர்வம் இருந்தால் நல்லது. அதோடு பெரிய புத்தகம் என்பதால், படிக்க மிகப்பொறுமை வேண்டும்.
க்ரியா யோகாவின் முக்கியத்துவம் புத்தகம் நெடுக உள்ளது. க்ரியா யோகா முடித்தவர்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கண்டுள்ளார்கள்.
க்ரியா யோகாவை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது பல வருட விருப்பம் ஆனால், அதற்கான வாய்ப்பு இன்னும் அமையவில்லை.
மேற்கூறிய குறிப்புகளில் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் படிக்க வலியுறுத்துகிறேன்.
Amazon Kindle
இப்புத்தகத்தை அமேசான் கிண்டிலில் படித்தேன். படிக்க மிக எளிதாக இருந்தது.
எழுத்துப்பிழைகள் வெகுசொற்பம், சிறப்பான தமிழாக்கம்.
ஒரு யோகியின் சுயசரிதம் புத்தகத்துக்கு தமிழில் விரிவான விமர்சனம் ஒலி மற்றும் காணொளியாக உள்ளது ஆனால், எழுத்தில் இல்லை.
பாபாஜி மற்றும் அவரைத் தொடர்ந்த குருக்களின் அனுபவங்களை நானும் சிலருக்குக் கொண்டு சேர்த்துள்ளேன் என்பது திருப்தியளிக்கிறது.
இந்த விமர்சனத்தை முழுமையாகப் படித்தவர்களுக்கும், இப்புத்தகத்தைப் பரிந்துரைத்த தலைவர் ரஜினி அவர்களுக்கும் நன்றி 🙂 .
ஒரு யோகியின் சுயசரிதம் புத்தகம் அமேசானில் வாங்க –> இங்கே செல்லவும்.
தொடர்புடைய கட்டுரை
பொன்னான நிகழ்காலம் – மகிழ்ச்சியின் இரகசியம்
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி, என்னை பொறுத்தவரை கடவுள் நம்பிக்கை கொண்டவன் நான்.. ஆனால் வாழ்வின் எந்த நிலையிலும் யாரவது ஒரு ஆன்மிக தலைவரை பின்பற்ற வேண்டும் என்ற கோட்பாடு கொண்டவன் அல்ல.. என் பார்வையில் கடவுள் வேறு.. (என்றுமே மாறாதது, நிலையானது, எல்லோருக்கும் பொதுவானது) ஆனால் மனிதன் என்பவன் வேறு (எப்போதும் மாறக்கூடியவன், நிலையானவன் அல்ல).
கண்ணதாசனையும், பாரதியையும் பிடிக்கும்.. அவர்கள் வாழ்வியில், கோட்பாடுகள், நெறிமுறைகள் பிடிக்கும்.. ஆனால் அதற்க்காக அவர்கள் கூறிய எல்லாம் சரி என முழுமையாக என்னால் ஏற்று கொள்ள முடியாது.. அவர்கள் கூறியதில் என் பார்வைக்கு சரியாக தோன்றுபவைகளை மட்டும் நான் எடுத்து கொள்வேன்.. மற்றதை விட்டு விடுவேன்..
இங்கு பிரச்சனை என்னவென்றால் எல்லா மதங்களிலும் கடவுளுக்கு இடையில் இருப்பவர்கள் தான்… இவர்கள் மூலமாக தான் கடவுளை அணுக முடியும் என்ற ஒரு எழுதப்படாத விதியை இவர்கள் பிழைப்புக்காக உருவாக்கி விட்டனர்.. இது எல்லா மதத்திலும் இருக்கிறது..என்னுடைய தேவையை நான் எனக்கு விருப்பமான கடவுளிடம் கேட்பதற்கு கூட ஏன் இடையில் ஒருவர்??? அப்படி இவர்கள் மூலமாக தான் கடவுளை அடைய முடியும் என்றால் “அப்படிபட்ட கடவுளே வேண்டாம்” என்று ஒதுங்கி விடுவேன்..இது தான் என் நிலைப்பாடு..
==============================
தெய்வங்களும் என்னை விட்டு விலகின
பொழுதில் ஒரு தேவதையாய் வந்து
என்னை தாங்கியவள் ஜென்னி!!!
(காரல் மார்ஸ் தன் மனைவி பற்றி கூறியது)..
==============================
சாதாரண மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் எல்லாவற்றையும் இழந்து தங்களில் இறுதி நம்பிக்கை கடவுள் மட்டும் தான், என்ற நிலையில் இருக்கும் போது அவர்களில் பல்ஸையும் இந்த இடைத்தரகர்கள் பிடித்து பணம் கறக்கிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை!!! நீண்ட நாட்களாக பரவலாக எல்லா இடத்திலும் இது தான் நடந்து கொண்டிருக்கிறது.. மக்களும் எத்தனை முறை அடிபட்டு விழுந்தாலும், மீண்டும் இவர்கள் வசம் தஞ்சம் அடைவார்கள் என்பது ஏமாற்றக்காரர்களின் அதீத நம்பிக்கை.. அவர்கள் நம்பிக்கையும் வீண் போகாமல் தான் இருக்கிறது..
மேனிலை பள்ளி / இளங்கலை பட்டப்படிப்பு படித்தது கிருத்துவ பள்ளி / கல்லூரியில், அந்த சமயத்தில் கிருத்துவ மதத்தை குறித்த புரிதல் இருந்தது.. பழகிய மனிதர்களும் வித்தியாசமாக தெரிந்தர்கள்.. சில சமயம் மதத்தை கூட மாற்றிவிடலாம் என்று யோசித்தது உண்டு.. நாட்கள் செல்ல, செல்ல அனுபவங்கள் வர, வர.. சில கசப்பான அனுபவங்களுக்கு பின் என் நிலையை மாற்றி கொண்டேன்..நான் மதத்தை மாற்றி இருந்தால் வாழ்வில் நான் செய்த மிக பெரிய தவறாக இருந்து இருக்கும்.. அனுபவமே நல்ல ஆசான் என்பதை நான் உணர்ந்து கொண்ட தருணம் அது..
முதுகலை பட்டப்படிப்பு அரசு கல்லூரியில் படித்தேன்.. அந்த சமயத்தில் கம்யூனிசத்தை பற்றிய சிந்தனை அதிகம் இருந்தது .. வெறித்தனமாக புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன்.. பாட புத்தகத்தை வெறுத்தேன், நாள் முழுவதும் நூலகத்தில் கிடந்தேன்.. விடுமுறையிலும் நூலகம் செல்லும் பழக்கத்தை உருவாக்கி கொண்டேன்.. அரசியல், வரலாறு, இலக்கியம், கவிதை,புராணம், புரிந்தது, புரியாதது என எல்லா புத்தகத்தையும், நாளிதழையும், படிக்க ஆரம்பித்தேன்.. குறிப்பிட்ட சில காலம் ஒரு இந்த நிலை தொடர்ந்தது..
காதல் தோல்வியில் வேறு துவண்ட சமயம் அது.. புத்தகங்கள் தான் அரவணைத்து கொண்டது.. என் வலிக்கு அது ஒரு களிம்பாக இருந்தது.. வாழ்க்கையில் ஒரு காதல் மட்டும் தான், என்று எண்ணிய எனக்கு காதலை மீறிய வாழ்க்கையும் இருக்கிறது என் உணர்த்தியது புத்தகங்கள் தான் .. சாராயம், தண்ணி என எதிலும் நுழைய விடாமல் புத்தகம் என்னை வேறு பாதையில் பயணிக்க வைத்தது..
காதலை விட புத்தகம் மிக பெரிய போதையை புத்தகங்கள் கொடுத்தது.. இந்த தருணத்தில் எனக்குள் ஒரு மிக பெரிய மாற்றத்தை உணர்தேன்.. நான் மட்டும் உலகில் வாழ்வதாக உணர்ந்து கொண்டேன்.. இந்த உலகமே எனக்காக மட்டும் படைக்கப்பட்டு இருப்பதாக நினைத்து மாய உலகில் வாழ்ந்து கொண்டிருந்தேன்.. அது உண்மையில் ஒரு வசந்தகாலம்..
கல்லூரி முடிந்தது, அடுத்து என்ன என்ற கேள்வி பிறந்த போது தான்.. எதிர்காலத்தை குறித்து சிந்திக்க ஆரம்பித்தேன்.. பின்பு கோவையில் வேலை, சக்தியின் நட்பு, திண்டுக்கல்லில் வேலை, தற்போது இங்கு.. என வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.. இவ்வளவு தூரம் பயணப்பட்டு வந்திருந்தாலும் ஆன்மிகத்தை பொறுத்தவரை இன்னும் அடிப்படை நிலையியே இருக்கிறேன்.. அதன் அடுத்தகட்டத்தை நோக்கி பயணப்பட முற்றிலும் விருப்பம் இல்லை.. நல்லதோ, கெட்டதோ என் வாழ்க்கையை நான் வடிவமைக்க முயற்சிக்கிறேன்.. அதன் படி மட்டும் வாழ மட்டும் ஆசைப்படுகிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
நமக்கு நாமே உண்மையாக இருக்கும்பட்சத்தில் யாருடை ய துணையும் தேவைப்படாது.living with Himalayan master இதுவும் இது போன்ற புத்தகமே.இதில் உள்ள பல கதாபாத்திரங்கள் வரும்.சுவாமி ராமா அவர்களின் வாழ்க்கை வரலாறு.முன்பு இருந்த சாமீயார்கள் ஆன்மீகவாதியாக இருந்தார்கள்.இப்போது உள்ளவர்கள் அரசியல்வாதியாக உள்ளனர்.
@யாசின்
“அவர்கள் கூறிய எல்லாம் சரி என முழுமையாக என்னால் ஏற்று கொள்ள முடியாது.. அவர்கள் கூறியதில் என் பார்வைக்கு சரியாக தோன்றுபவைகளை மட்டும் நான் எடுத்து கொள்வேன்.. மற்றதை விட்டு விடுவேன்.”
இதே தான் குருக்களுக்கும் யாசின்.
ஜாதகம் பார்ப்பது ஒரு நம்பிக்கை. அதை ஒரு சிறு வழிகாட்டியாக எடுத்துக்கொள்ளலாம், அதற்காக அதையே நம்பிக்கொண்டு இருப்பது தவறு.
குருவும் அப்படித்தான். அந்தக்காலத்தில் குருவை நம்பி முழுமையாக பின்பற்றினார்கள் என்றால், அதற்கான சூழ்நிலை மக்கள் இருந்தார்கள்.
தற்போது அது போல ஒரு சூழ்நிலை, நம்பிக்கையான நபர் இல்லை.
எனவே, ஒரு வழிகாட்டுதலுக்கு நம்முடைய எண்ணங்களுக்கு சரி வரும் ஒருவரின் ஆலோசனையைக் கேட்பதில் தவறில்லை.
கேட்பதாலையே அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதில்லை.
ரஜினிக்கே பல குருக்கள் உள்ளனர். காரணம், அவரின் தேடலே. ஒருவர் மட்டும் சொன்னதையே கேட்டு இருந்தால், பல குருக்களை ரஜினி பெற்று இருக்க மாட்டார்.
என் நண்பர்கள் பலரும் எனக்கு நெருக்கம் தான் ஆனால், அதற்காக ஒருவர் கூறுவதையே ஏற்று அதையே பின்பற்ற மாட்டேன்.
எனக்கு சரி என்று தோன்றுவதை பலரிடம் இருந்து ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வேன்.
நிதி விஷயத்தில் நான் ஒருவரின் ஆலோசனையோடு நிறுத்துவதில்லை. ஒரு நண்பன் ஆலோசனை சிறப்பாக இருக்கும். இன்னொருத்தன் வேறு ஒன்றை கூறுவான்.
இதே போலவே தான் குருக்களும்.
கார்பரேட் சாமியார்களிடம் சில நல்ல கருத்துகள் உள்ளன. அவற்றை ஏற்றுக்கொண்டு, வணிக ரீதியான திணித்தல்களை புறக்கணித்து விடலாம்.
ஒருவேளை கருத்தே சரியில்லை என்றால், தவிர்த்து விடலாம்.
குருக்கள் என்பவர் வழிகாட்டி போல. அவர் கூறுவது சரியானதாக இல்லையென்றால், வேறு ஒருவரிடம் கேட்கலாம் அவ்வளவே.
எதையும் ஒரேடியாக புறக்கணிக்க வேண்டியதில்லை. தேவையானதை எடுத்துக்கொண்டு தேவையற்றதை தவிர்த்து விடலாம்.
நம்மை யாரும் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த அனுமதிக்கக்கூடாது.
எதையும் ஒரேடியாக புறக்கணிக்க வேண்டியதில்லை. தேவையானதை எடுத்துக்கொண்டு தேவையற்றதை தவிர்த்து விடலாம்.
நம்மை யாரும் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த அனுமதிக்கக்கூடாது.
=================================================
100% உண்மை.. உங்கள் கருத்தை ஏற்று கொள்கிறேன் கிரி.. நன்றி..
@விஜயகுமார்
Himalayan master படிக்க உத்தேசித்துள்ளேன். இதற்கு தமிழில் Kindle Edition இன்னும் வரவில்லை.
“முன்பு இருந்த சாமீயார்கள் ஆன்மீகவாதியாக இருந்தார்கள்.இப்போது உள்ளவர்கள் அரசியல்வாதியாக உள்ளனர்.”
திருட்டுப்பயல்களாவும் உள்ளனர் 🙂 . அரசியல்வாதியிலேயே இது அடங்கி விடும் இருந்தாலும்.. 🙂 .