Ram – Scion of Ikshvaku

3
Ram - Scion of Ikshvaku

மிகப்பிரபலமான எழுத்தாளர் அமிஷ் எழுதிய புத்தகங்களின் முதல் பகுதி Ram – Scion of Ikshvaku.

அசுரன் நாவலில் ராமனை ஒரு வழியாக்கினார் ஆசிரியர் நீலகண்டன். அசுரன் இராவணனை புகழ்ந்து எழுதப்பட்ட நாவல் என்பதால், இராமனுக்குக் கிட்டத்தட்ட எதிராக இருந்தது.

இப்புத்தக விமர்சனத்தைப் படித்து வாசகர் பிரகாஷ் (மெலுஹா விமர்சனத்தில்) விவாதம் செய்து கோவித்துட்டு போய்ட்டார். திரும்ப இத்தளம் வந்தது போலத் தெரியவில்லை 🙂 .

Ram – Scion of Ikshvaku

‘Ram’ புத்தகம் இராமனைப் பற்றி என்பதால், அவரை உயர்த்தி எழுதப்பட்டு இருந்தது, உடன் குறைகளையும் சுட்டிக்காட்டி.

இராமன் மீது விருப்பமோ, எதிர்ப்போ இல்லாததால், இரு புத்தகங்களையுமே ரசிக்க முடிந்தது. விமர்சனங்களில் இருந்தும், அவரின் நல்ல குணங்களில் இருந்தும் என்னால் எனக்குத் தேவையான கருத்துகளை எடுத்துக்கொள்ள முடிந்தது.

அசுரன் புத்தகத்தில் பல கருத்துகள் பலவற்றை எனக்குப் புரிய வைத்தது, Ram புத்தகத்தில் பல அனுபவங்கள் கிடைத்தது. எனவே, என்னைப்பொறுத்தவரை இரு புத்தகங்களுமே ஒவ்வொருவகையில் சிறந்தது.

அதிர்ஷ்டம் இல்லாதவர்

தசரதர் இராவணனிடம் தோல்வி அடையும் நேரத்தில் இராமன் பிறப்பதால், அதிர்ஷ்டம் இல்லாத பெயருடனும், அப்பாவின் பாசமும் இல்லாமல் இராமன் வளர்கிறார். குருகுல கல்வி மூலம் அனைத்தையும் கற்கிறார்.

சட்டமே முதன்மை

இராமன் எப்படி என்றால், அந்நியன் பட அம்பி மாதிரி ஆனால், அசடு அல்ல.

அனைத்துக்கும் விதிமுறைகளைப் பின்பற்றுவார். விதிகளை மீறி எதையும் செய்ய மாட்டார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறுவது இவர்களது ஆதிக்க அமைப்பிலே உள்ளவர்களுக்கே கடுப்பைக் கிளப்பும்.

நிர்பயா வழக்கில் ஒரு குற்றவாளி வயது குறைவாக இருந்ததால், தூக்கில் இருந்து தப்பித்தது, பலருக்கு கடும் கோபத்தைக் கொடுத்தது ஆனால், சட்டம் அதைத்தான் அனுமதிக்கிறது.

இதே நிலை, காட்சி இப்புத்தகத்தில் வரும். அனைவரும் அவனைக் கொல்லத் துடிக்கும் போது இராமன் சட்டப்படி நடந்து கொள்ள வலியுறுத்துவார்.

தற்போது உங்களுக்குப் புரிந்து இருக்கும் இராமன் சட்டங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று.

இராமனிடம் பரதன் விளையாட்டாக, ‘உன்னைத் திருமணம் செய்யப்போகும் பெண் பாவம், ரொம்பச் சுவாரஸ்யமற்ற வாழ்க்கையைத் தான் வாழ்வார்‘ என்று கூறுவார் 🙂 .

லட்சுமணன்

லட்சுமணன் தசரதரின் மூன்றாவது மனைவி சுமித்ராவின் மகன் என்றாலும், முதல் மனைவி கௌசல்யா மகனான இராமன் தான் லட்சுமணனுக்கு எல்லாமே! எப்போதுமே இராமன் உடன் இருப்பார்.

லட்சுமணன் எப்போதுமே அவசரப்படுபவராகவும், கோபப்படுபவராகவும், இராமன் மீது அதீத அன்பு கொண்டவராகவும் காட்டப்பட்டுள்ளது.

சுருக்கமாக, நமக்கு இப்படியொரு தம்பி இருந்தால், எப்படி இருக்கும்! என்று எண்ணவைக்கும் அளவுக்கு இராமனை நேசிப்பார்.

மிரட்டல் கைகேயி

இராவணனுடன் ஏற்பட்ட திடீர் மோதலில், இராவணனை குறைத்து மதிப்பிட்டுத் தசரதர் போரிட்டு தோல்வியடைந்து விடுவார்.

அவரின் இரண்டாம் மனைவி கைகேயி அவரைப் போர்க்களத்திலிருந்து காப்பாற்றி அழைத்து வரும் காட்சி மிரட்டலாக இருந்தது.

இக்காட்சியைப் படிக்கும் போது எனக்கு ஒரு திரைப்படமே ஓடியது போல இருந்தது. அட்டகாசமான வர்ணனை.

தசரதரை காப்பாற்றியதால் அவர் கொடுத்த இரு வரங்களை வைத்துதான் கைகேயி இராமரை காட்டுக்கு அனுப்பி மகன் பரதனை அரசனாக்குவார்.

இராமன் ஏற்கனவே, தான் தவிர்க்க முடியாமல் செய்த செயலுக்காகக் காட்டுக்கு வனவாசம் செல்ல ஏற்கனவே முடிவில் இருப்பார். கைகேயி சொல்லவில்லை என்றாலும், சென்று இருப்பார் என்பதாகத்தான் இதில் வருகிறது.

அசுரன் + Ram இரு புத்தகத்திலும் இராமன் கருப்பு நிறத்தவராகவே சித்தரிக்கப்பட்டுள்ளார் ஆனால், நமக்குத் தெரிந்த இராமன் அப்படியில்லை.

பக்குவப்பட்ட இராமன்

இராமன் அதிகம் பேசாதவராகவும், சட்டத்தின் மீது நம்பிக்கையுள்ளவராகவும், மிகைத்திறமையானவராகவும் இப்புத்தகத்தில் காட்டப்பட்டுள்ளார்.

சீதாவை இவர் அணுகும் விதமும், சீதா எவ்வாறு இராமனை எண்ணுகிறார் என்பதும் சுவாரசியமாக உள்ளது.

இவர்கள் இருவரும் பேசும் காட்சிகள் மிக எளிமையாக, எதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இராமருடைய நிதானம், அவசரப்படாமல் இருப்பது, உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமல் இருப்பது, திறமையை விளம்பரப்படுத்திக்கொள்ளாமல் இருப்பது, மன உறுதி ஆகியவை ரொம்ப ரொம்பப் பிடித்தது.

இப்புத்தகம் படித்துச் சிலவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

அதிரடி இராவணன்

சுயம்வரத்தில் இராவணன் தன் பாதுகாவலர்கள் சூழ வந்து இருக்கையின் மீது ஒரு காலை வைத்து, தொடையின் மீது ஒரு கையை வைத்துத் திமிராகப் பேசும் காட்சி ரணகளம் 🙂 .

கற்பனை செய்து பார்த்தால், அட்டகாசம்.

இராவணன் பெரும் அரசனாகவும், விமானம் வைத்து இருப்பவராகவும், கட்டுப்பாடற்றவராகவும், மிகப்பெரும் படையைக்கொண்டவராகவும் காட்டப்பட்டுள்ளார்.

இராவணன் காட்சிகள் எப்போதும் பரபரப்பாகவே உள்ளது. நம்ம ஊர் அரசியல்வாதிகள் வந்தால் ஒரு அலப்பறை இருக்குமே அது போல 🙂 .

நம்ம அரசியல்வாதிகள் கோமாளிகளைப் போல இருந்தால், இராவணன் மிரட்டலாக இருப்பார்.

எனக்குத் தமிழ் தான் பிடிக்கும் என்றாலும், ஆங்கிலத்தை மேலும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகப் பிடிவாதமாக ஆங்கிலப் பதிப்பில் தான் படித்தேன்.

புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள முடிந்தது, Kindle என்பதால், உடனடியாக வார்த்தைக்கான அர்த்தம் தெரிந்து கொள்ள முடிகிறது.

சில பக்கங்களைத் தவிர்த்துச் சுவாரசியமான புத்தகம், படிக்கப் பரிந்துரைக்கிறேன்.

அமேசானில் ஆங்கிலத்தில் படிக்க –> Ram – Scion of Ikshvaku Link

தொடர்புடைய கட்டுரை

அசுரன் – வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்

3 COMMENTS

 1. கிரி,
  ராமர் மட்டும் அல்ல கிருஷ்ணர் கூட கருப்பு தான் . ஏன் என்றல் பெருமாள் கருப்பு நிறத்தவர். இவர்கள் அவரடூய அவதாரங்கள் ஆனால் அவ்வாறு காட்ட முடியாததால் படங்களில் இருவரும் நீல வண்ணத்தில் காட்டுவார்கள். மேலும் தென் மாநிலங்களில் கருங்கல் கொண்டு சிலைகள் செய்தார்கள் . வாடா மாநிலங்களில் maarble செய்தார்கள் . அவர்களால் ராமர் மற்றும் கிருஷ்ணர் கருப்பு என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை. அம்மையப்பனும் கருப்பு தான் …
  ராவணன் நிஜமாகவே அதிரடியானவர். தந்தை பிராமின் தயார் அசுரர் என்ற கலவை. 64 கலைகள் கற்று தேர்ந்தவர். சிறந்த சிவபக்தர் இன்னும் பல சிறப்பு கொண்டவர். ஹெலிகாப்டர் வைத்து இருந்தார் (சிரிக்காதீர்கள் ஆனால் அது தான் உண்மை) புஷ்பக விமானம் என்று கூறப்படும்

 2. @சரவணன் “இவர்கள் அவரடூய அவதாரங்கள் ஆனால் அவ்வாறு காட்ட முடியாததால் படங்களில் இருவரும் நீல வண்ணத்தில் காட்டுவார்கள்.”

  அட! இதை நான் யோசிக்கவே இல்லையே..!

  “மேலும் தென் மாநிலங்களில் கருங்கல் கொண்டு சிலைகள் செய்தார்கள் . வாடா மாநிலங்களில் maarble செய்தார்கள் . அவர்களால் ராமர் மற்றும் கிருஷ்ணர் கருப்பு என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை.”

  நீங்க கூறுவது லாஜிக்காக உள்ளது.

  “ராவணன் நிஜமாகவே அதிரடியானவர். தந்தை பிராமின் தயார் அசுரர் என்ற கலவை”

  அசுரன் புத்தகம் படித்த பிறகு தான் எனக்குத் தெரியும்.

  “ஹெலிகாப்டர் வைத்து இருந்தார் (சிரிக்காதீர்கள் ஆனால் அது தான் உண்மை) புஷ்பக விமானம் என்று கூறப்படும்”

  இந்நாவலில் 100 பேர் செல்வதாக வரும்.. கொஞ்சம் பெரிய ஹெலிஹாப்டரோ! 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here