இலங்கை அகதிகள் எவ்வாறு நாடு விட்டு நாடு செல்கிறார்கள் என்பதைக் கடவுள் தொடங்கிய இடம் விவரிக்கிறது.
கடவுள் தொடங்கிய இடம்
விடுதலைப்புலி இயக்கத்தில் தன் மகன் சேரப்போவதாக உணர்ந்த பெற்றோர், மகன் நிஷாந்தை கனடாக்கு தரகர் மூலமாக அனுப்புகின்றனர்.
நிஷாந் கனடா போய்ச் சேர்ந்தானா இல்லையா என்பதே கடவுள் தொடங்கிய இடம்.
அகதிகள் எவ்வாறு ஒவ்வொரு நாட்டையும் கடக்கிறார்கள், அதில் உள்ள பிரச்சனைகள் என்ன?, தரகர்கள் பங்கு என்ன? எவ்வளவு நாட்கள் ஆகலாம்? நடைமுறை பிரச்சனைகள் என்ன? என்பன விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
கதை 1992 ம் ஆண்டுத் துவங்குகிறது.
ஆசிரியர் அ.முத்துலிங்கம்
ஆசிரியர் பற்றி நண்பர் யாசின் கூறித்தான் தெரியும்.
அடிக்கடி சிலாகித்துக் கூறிக்கொண்டே இருப்பார். அப்படி என்ன தான் எழுதி இருக்கிறார் என்று அவர் எழுதிய புத்தகங்களை பார்க்கலாம் என்று தேடிய போது கிடைத்த நாவலே கடவுள் தொடங்கிய இடம்.
இவர் ஈழத்தமிழர் & எழுத்து நடை முழுக்க ஈழத்தமிழில் உள்ளது.
இயக்கம் என்று தான் இந்நாவலில் கூறுகிறார், விடுதலைப்புலிகள் என்று கூறவில்லை. ஒருவேளை ஈழத்தில் இப்படிக் கூறுவது தான் இயல்போ!
ஈழ ஆங்கிலம்
சிங்கப்பூருக்கு, மலையாளிகளுக்கு ஒரு ஆங்கிலம் இருப்பது போல, ஈழ தமிழர்களுக்கும் ஒரு ஆங்கிலம் உள்ளது.
பெரும்பாலும் O எழுத்தில் துவங்குபவற்றை மலையாளிகள் போலவே உச்சரிக்கிறார்கள்.
இவை மட்டுமல்ல பல ஆங்கிலச் சொற்களும் சரியான உச்சரிப்பாக இல்லாமல் மாறுபட்டு உள்ளது.
ஒரு மொழியின் உச்சரிப்பை நம் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றக் கூடாது.
எடுத்துக்காட்டுக்கு Louis Philippe என்பது லூயிஸ் பிலிப்பி என்று உச்சரிக்கக் கூடாது மாறாக லூயி பிலிப் என்று கூற வேண்டும்.
இது தெரியாமல் லூயிஸ் பிலிப்பி என்று உச்சரித்துக்கொண்டு இருந்தேன்.
பல நாடுகளிலும் ஆங்கில உச்சரிப்பு பிரச்சனை இருக்கிறது என்றாலும், ஈழத்தமிழர்கள் ஆங்கிலம் முற்றிலும் வேறாக உள்ளது.
அகதிகள்
இலங்கை உள்நாட்டு போர் காரணமாக ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களர்களும் கூட வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளார்கள்.
தங்கள் சொந்த நாட்டில் வாழ முடியாத நிலையில், வாழ முடியும் என்று தோன்றும் நாடுகளுக்கு அடைக்கலம் தேடி செல்பவர்களே அகதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு செல்லும் நாடு அவர்களை ஏற்றுக்கொண்டால் பிரச்சனையில்லை ஆனால், அவர்கள் உள்நாட்டுப் பிரச்சனைகள் காரணமாக ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் சிக்கலாகி விடுகிறது.
ஈழத்தமிழர்கள் விரும்பும் நாடாகக் கனடா மற்றும் ஐரோப்பா உள்ளது.
அகதிகளால் என்ன பிரச்சனை?
அகதிகள் இன்னொரு நாட்டுக்குச் செல்லும் போது அமைதியாக, வாழ இடம் கிடைத்தால் போதும் என்று மனநிலையில் செல்கிறார்கள்.
ஆனால், பலர் சேர்ந்து எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அவர்கள் சொந்த நாட்டிலிருந்த உரிமைகளைக் கேட்டுப் போராடுகிறார்கள்.
சில நேரங்களில் உள்நாட்டு மக்களுக்கு எதிராகவே செயல்படுகிறார்கள்.
இது அந்நாட்டு சொந்த மக்களுக்குக் கோபத்தை வரவழைக்கிறது. இதுவே தற்போதைய பிரச்சனை.
ஐரோப்பா தற்போது இப்பிரச்னையில் தான் சிக்கியுள்ளது. எதிர்காலத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைக்கு இந்நாடுகள் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
தரகர்கள்
இந்நாவல் அகதிகள் பிரச்சனைகளைக் குறிப்பாக இலங்கையிலிருந்து செல்பவர்கள் நிலையை மிகச்சிறப்பாக விளக்கியுள்ளது.
அகதிகள் எப்படிச் செல்கிறார்கள் என்று செய்திகளில் படித்துப் புரிந்தாலும், இதில் இவ்வளவு சிக்கல்கள் உள்ளதா?! என்று திகைக்க வைத்து விட்டது.
பிரச்சனைகளின் தீவிரத்தை பொறுத்து ஒரு நபர் நினைத்த நாட்டுக்குச் செல்ல 5 வருடங்கள் கூட ஆகிறது என்பது புதிய தகவல்.
தரகர்கள் ஒவ்வொரு நாட்டிலிருந்து அகதிகளைச் சமயம் பார்த்து அனுப்புகிறார்கள். இதிலும் ஏராளமான வழிமுறைகள் உள்ளன.
சில நேரங்களில் சரியான நாளுக்காக வருட கணக்கில் இன்னொரு நாட்டில் இருக்க வேண்டியது வரும் என்பது படிக்க வியப்பாக இருக்கலாம்.
போலி விவரங்களைத் தயார் செய்து அனுப்புகிறார்கள்.
அதுவரை அகதியாகச் சென்றவர் செலவுகளைச் சமாளிக்க குடும்பத்தினர் ஊரிலிருந்து நிலத்தை விற்றுப் பணம் அனுப்புகிறார்கள்.
இவ்வாறு தரகர்கள் அனுப்பும் போது அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே இன்னொரு நாட்டின் எல்லையைத் தாண்ட முடியும். இல்லையென்றால், இராணுவத்திடம் மாட்டிக்கொள்ள நேரிடும்.
அப்படி மாட்டினால் சிறை தான். மிக ஆபத்தான திகில் பயணமே.
இதில் ஒரு தரகர் தன்னிடம் உள்ள அகதிகளை வேறொரு தரகருக்கு மாற்றி விடுவது இயல்பாக நடக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவர் விருப்பம் எதுவுமில்லை.
சம்பவங்கள்
நாவலில் 50% வரை இதே தான் உள்ளது ஆனால், சலிப்பாக்காமல் நாவல் நகர்கிறது.
ஒரே மாதிரியாக உள்ளது என்று நினைக்க முடியாதபடி, அகதிகளிடையே நடைபெறும் பிரச்சனைகளை விவரிப்பதால், ஏதாவது ஒரு பரபரப்பு, எதிர்பார்ப்பு இருந்துகொண்டே உள்ளது.
இக்காலங்களில் இரக்கம், அன்பு, துரோகம், காதல், அதிர்ச்சி, நட்பு, கண்ணீர், ஏமாற்றம், பயம், சலிப்பு என்று அனைத்துமே இருக்கும்.
உயிர்களுக்குப் பசி, பயம், பாலுணர்வு உணர்ச்சிகள் தவிர்க்க முடியாது என்றும் ஆனால், விதிவிலக்குகள் உள்ளதாக ஒரு கதாப்பாத்திரம் கூறுவது சிறப்பு.
இந்நாவலில் சில சுவாரசியமான தகவல்களைக் குறித்து வைத்து அவற்றை எழுத வேண்டும் என்று நினைத்து இருந்தேன் ஆனால், இதுவே பெரிதாக வந்து விட்டது.
சுவாரசியமான பகுதிகளைப் படித்துத்தெரிந்து கொள்ளுங்கள்.
யார் படிக்கலாம்?
அனைவரையும் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.
அகதிகள் பற்றி ஒவ்வொருவருக்கும் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம் ஆனால், அவர்கள் எப்படியான பயணத்தை, வாழ்க்கை முறையை மேற்கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
சொந்த நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் செல்ல என்னென்ன இடர்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை ஆசிரியர் மிக இயல்பாகக் கூறுகிறார்.
இந்நாவல் மூலம் ஏராளமான புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
இறுதியில் ஆசிரியர் நாவலை முடித்தது மட்டும் நிறைவை கொடுக்கவில்லை. நாவலே முடியும் நேரத்தில் இருட்டில் விட்டது போலாகி விட்டது 🙂 .
அமேசானில் வாங்க இங்கே செல்லலாம்.
கொசுறு
இவ்விமர்சனம் எழுதும் போது பழைய நினைவுகள் வந்தது 🙂 .
2008 ம் ஆண்டில் ஈழத்தமிழர்கள், அவர்கள் வாழ்க்கைமுறை பற்றித் தெரிந்து கொள்ளும் பொருட்டு கேள்விகளாக ஒரு கட்டுரை எழுதினேன்.
அப்போது தான் எழுத (Blog) வந்து இருந்தேன், எந்த முன் அனுபவமும் இல்லை. எனக்கு என்னென்ன சந்தேகங்கள் இருந்ததோ அவற்றைக் கேட்டு இருந்தேன்.
எதோ குழுமத்தில் லிங்க் பகிர்ந்து விட்டார்கள் போல, திமுதிமுன்னு ஏராளமானோர் வந்துட்டாங்க.
இதெல்லாம் கூடவா தெரியாது என்று ஈழத்தமிழர்கள் என்னைக் கொத்துக்கறி போட்டு விட்டனர் 😀 . அப்போது வலையுலகில் பரபரப்பான செய்தியாகி விட்டது.
எனக்குப் பரிந்து பேசியும் சில ஈழத்தமிழர்கள் வந்தனர்.
வடிவேல் ஒரு படத்துல ‘அப்படி என்ன கேட்டுட்டேன்னு என்னைத் துரத்துறாங்க‘ என்று ஒளிந்து கொண்டு பார்ப்பாரே! அது மாதிரி ஆகிட்டேன்.
அப்போதெல்லாம் ஈழம், இலங்கை பிரச்சனைகள், மக்கள் பற்றி எதுவுமே தெரியாது. ஒரு சராசரி தமிழ்நாட்டு தமிழனாகக் கேட்டு இருந்தேன்.
என்ன கோபத்துல இருந்தார்களோ போட்டுப் பொளந்துட்டாங்க 🙂 .
அதன் பிறகு ஈழம் தொடர்பாக நிறைய எழுதி இருந்தாலும், இக்கட்டுரை மட்டும் என் எழுத்து வாழ்க்கையில் மறக்க முடியாததாகி விட்டது.
அக்கட்டுரையை Private செய்து விட்டேன் 🙂 .
தொடர்புடைய கட்டுரைகள்
ஐரோப்பாவைத் திணறடிக்கும் அகதிகள் பிரச்சனை [FAQ]
Comrade in America (2017 – மலையாளம்)
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி, நான் உங்களை பின் தொடர்ந்த அதே காலக்கட்டத்தில் தான் அ.முத்துலிங்கம் ஐயாவையும் பின் தொடர்ந்து வருகிறேன். எழுத்துலகில் நீங்கள் இருவரும் வெவ்வேறு துருவங்கள். உங்கள் இருவரின் பதிவுகளை மட்டும் நான் தொடர்ந்து, தொடர்ச்சியாக வாசிக்க பல காரணங்கள் இருக்கின்றன.
நீங்கள் ஐயாவின் புத்தகத்தை படித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.. நீங்கள் இன்னும் பல பதிவுகளை படிக்கும் போது உள்ளுக்குள் ஒரு உற்சாகம் நிச்சயம் பிறக்கும். நான் அவரின் எழுத்தில் மிகவும் ரசிப்பது அவரின் (80 வயதை கடந்த பிறகும்) நகைச்சுவை உணர்வை தான்.
அது போல அவரின் சொந்த அனுபவங்களை (உலகில் பல பகுதிகளில் வசித்து இருந்ததால்) எழுத்தில் அவர் கூறும் விதம் அருமையாக இருக்கும். எல்லா சிறுகதை, கட்டுரைகளில் கடைசி நாலு வரி முக்கியமானதாக இருக்கும்.
அந்த கடைசி வரிகள் சில சமயம் மனதை இறுக்கமாகி விடும், சில நேரம் நம்மை சிரிக்க வைத்து விடும். சில சமயம் நம்மை சிந்திக்க வைக்கும்.. நான் சோர்வாக இருக்கும் பல தருணங்களில் அய்யாவின் பழைய படித்த பதிவுகளை மீண்டும் மீண்டும் படிக்கும் போது எனக்குள் ஒரு உற்சாகம் பிறக்கும்..
சமீபத்தில் கூட கர்னல் கிட்டு அவர்கள் பற்றி முத்துலிங்கம் ஐயா எழுதிய பழைய பதிவை படித்து மனது கணத்து விட்டது..
https://rb.gy/1cy6tn
மேற்குறிய பதிவை படித்த அடுத்த கணம் கீழே உள்ள இந்த பதிவை படிக்கும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை!!! ஓய்வான தருணங்களில் இந்த பதிவுகளை படித்து பார்க்கவும்..
https://rb.gy/cqlszv
அருமையான விமர்சனம். எனக்கு மிகவும் பரிச்சயமான எழுத்தாளர் அ.முத்துலிங்கம். என் தொகுப்பில் அவருடைய சில புத்தகங்கள் இடம் பிடித்துள்ளன.
கிரி, ஒரு வருடத்திற்கு முன்பு இந்த நாவலை வாசித்தேன். அகதிகள் படும் இன்னல்களை மிக சிறப்பாக எழுதிருப்பார்.பல துயரங்களை கடந்த
நிஷாந்த் 2 ஆண்டுகள் வெறுமனே கனடாவில் கழிக்கும் போது எனக்கு ஒருவகையான ஒவ்வாமை இருந்தது. நடைமுறையில் நாம் முழு ஊக்கத்துடன் வெறியுடன் போராடி பெரும் இடத்தில் பெரும்பாலானோர் தேங்கி விடுகின்றனர். பெரும்பாலும் அடுத்த இலக்கை நோக்கி நகர்வதற்கு
முன்பு சோம்பல் தழுவி கொள்கிறது அதை கடந்து செல்பவர்கள் தான் பெரும் சாதனை செய்கிறார்கள். எனக்கு நாவல் முடியும் தருணம் பிடித்துஇருந்தது.
இளையராஜா அவர்களின் முதல் காம்போசிங்கில்
கரண்ட் போனதாக சொல்வார்கள் , படிக்கும் போது
இந்த நிகழ்வை நினைத்து கொண்டேன்.
எவ்வளவு பெரிய துயரமாக இருந்தாலும் அதனோடு நகைச்சுவை கலந்து சொல்வதில் வித்தகர். அதனாலே அவர் தமிழ் இலக்கிய வட்டத்தில் தனித்து தெரிகிறார்.
இலங்கை போரை பற்றி அவர் பெரும்பாலும் எழுதவில்லை என்பதே அவர் மேலேயுள்ள பொது விமர்சனம். இந்த நாவலை கார்த்திக் சுப்பாராஜ் படமாக எடுக்க வாய்ப்புள்ளது, படமாக மாற்ற அவர் முத்துலிங்கம் அய்யாவிடம் இருந்து உரிமையை பெற்று இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
நேரம் இருந்தால் “அங்கே இப்போ என்ன நேரம்?” புத்தகத்தை வாசிக்கவும். அவருடைய பயணங்களை, சந்திப்புகளை , அனுபவங்களை கட்டூரைகளாக தொகுத்து உள்ளார். படிக்க சுவாரசியமாக இருக்கும்.
@யாசின்
“நீங்கள் இன்னும் பல பதிவுகளை படிக்கும் போது உள்ளுக்குள் ஒரு உற்சாகம் நிச்சயம் பிறக்கும். நான் அவரின் எழுத்தில் மிகவும் ரசிப்பது அவரின் (80 வயதை கடந்த பிறகும்) நகைச்சுவை உணர்வை தான்.”
படிக்க முயற்சிக்கிறேன் யாசின்.
“நான் சோர்வாக இருக்கும் பல தருணங்களில் அய்யாவின் பழைய படித்த பதிவுகளை மீண்டும் மீண்டும் படிக்கும் போது எனக்குள் ஒரு உற்சாகம் பிறக்கும்..”
பல தருணங்களில் கூறி உள்ளீர்கள்.
நீங்கள் கொடுத்துள்ளவற்றை படிக்க முயற்சிக்கிறேன். நன்றி 🙂
@ஸ்ரீனிவாசன்
உங்கள் தளத்தால் பல ஆசிரியர்கள், நூல்கள் அறிமுகம் கிடைத்தது. தற்போது நீங்கள் பதிவிடாததால் வருத்தமே!
@மணிகண்டன்
“நடைமுறையில் நாம் முழு ஊக்கத்துடன் வெறியுடன் போராடி பெரும் இடத்தில் பெரும்பாலானோர் தேங்கி விடுகின்றனர். பெரும்பாலும் அடுத்த இலக்கை நோக்கி நகர்வதற்கு
முன்பு சோம்பல் தழுவி கொள்கிறது அதை கடந்து செல்பவர்கள் தான் பெரும் சாதனை செய்கிறார்கள். ”
சரியாகக் கூறினீர்கள்.
எப்படி இது போல இரண்டு வருடங்களை வீணடித்தான் என்று புரியவில்லை.
“எனக்கு நாவல் முடியும் தருணம் பிடித்துஇருந்தது”
எனக்கு பிடிக்கலைனு சொல்ல முடியலை.. ஆனால், திருப்தியாக இல்லை.
“எவ்வளவு பெரிய துயரமாக இருந்தாலும் அதனோடு நகைச்சுவை கலந்து சொல்வதில் வித்தகர். அதனாலே அவர் தமிழ் இலக்கிய வட்டத்தில் தனித்து தெரிகிறார்.”
இது ஒரு தனித்திறமை அனைவருக்கும் அமைந்து விடாது.
“இலங்கை போரை பற்றி அவர் பெரும்பாலும் எழுதவில்லை என்பதே அவர் மேலேயுள்ள பொது விமர்சனம்.”
ஓ!
“இந்த நாவலை கார்த்திக் சுப்பாராஜ் படமாக எடுக்க வாய்ப்புள்ளது, படமாக மாற்ற அவர் முத்துலிங்கம் அய்யாவிடம் இருந்து உரிமையை பெற்று இருக்கிறார் என்று நினைக்கிறேன்.”
இதை படமாக எடுத்தால், செலவு அதிகம் அதே போல, அனைவரையும் கவரும்படி எடுப்பது கடினம்.
“நேரம் இருந்தால் “அங்கே இப்போ என்ன நேரம்?” புத்தகத்தை வாசிக்கவும்.”
Kindle ல் இல்லை 🙁