உச்சநீதிமன்ற நீதிபதி என்ன சொல்ல வருகிறார்?

10
உச்சநீதிமன்ற நீதிபதி

தொலைக்காட்சி விவாதத்தில் நுபுர் ஷர்மா கூறிய கருத்துக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகான்ட் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். Image Credit

கண்டனம்

ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கி விட்டதாக நுபுர் ஷர்மா மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்து இருந்தார்.

அதோடு நாட்டு மக்கள் முன்பு தொலைக்காட்சியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்துக்குச் சமூகத்தளங்களில் பலரும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள்.

இது ஒருதலைப்பட்சமான கருத்து என்று கூறி வருகிறார்கள். இதுவே என் கருத்தும்.

இதில் பல்வேறு நிகழ்வுகள், பிரச்சனைகளுள்ள போது விசாரணையே முடியாமல் நுபுர் ஷர்மாவை மட்டும் விமர்சனம் செய்து இருப்பது எப்படிச் சரியாகும்?

மத நம்பிக்கை

மதங்கள், கடவுள்கள் குறித்து விமர்சனம் வைப்பது தவறான ஒன்றாகும். அது யாராக இருந்தாலும், எந்த மதமாக இருந்தாலும்.

காரணம், மதங்கள் கடவுள்கள் தற்போது தோன்றியவை அல்ல, பல்லாயிரம் ஆண்டுகளாக உள்ளவை, அதன் நம்பிக்கைகள் பழமை வாய்ந்தவை.

அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துகள் இன்று மாற்றம் பெறுவதால் பழமையாகி விடுகிறது. எனவே, தற்காலத்தில் சில ஏற்றுக்கொள்ள முடியாதவையாக உள்ளது.

பலரின் நம்பிக்கைகளை, மரியாதைக்குரியதானவற்றைப் பற்றி விமர்சனம் வைப்பது நிச்சயம் பிரச்சனைகளையே ஏற்படுத்தும்.

தனி நபரின் கருத்துகளை விமர்சிக்கலாமே தவிர, கடவுள்களை, மதங்களை விமர்சிப்பது சரியல்ல.

அந்தச் சர்ச்சை விவாதத்தில் பேசிய Taslim Rahmani சிவலிங்க நம்பிக்கையை விமர்சித்துக் கூறினார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக நுபுர் ஷர்மா குரானிலிருந்து கூறியதாகக் கூறப்படுகிறது.

அந்த விவாதத்தைப் பார்க்கவில்லை, செய்திகளில் படித்தது மட்டுமே.

எல்லோரும் நீதிபதி உட்பட நுபுர் ஷர்மா கூறியதை மட்டும் விமர்சிக்கிறார்களே தவிரச் சிவலிங்க நம்பிக்கையை விமர்சித்த Taslim Rahmani பற்றிப் பேசவில்லை.

நுபுர் ஷர்மா பேசியது மட்டுமே உலகம் முழுக்க அனைவருக்கும் தெரிந்துள்ளது Taslim Rahmani பேசியது யாருக்கும் தெரியவில்லை, யாரும் அக்கறைப்படவுமில்லை.

சொல்லப்போனால் இவர் பெயர் கூடப் பெரும்பாலனவர்களுக்கு தெரியாது.

யார் பேசினாலும் தவறு தானே! அப்புறம் ஏன் எப்போதும் இந்து மதம் மட்டுமே குறி வைக்கப்படுகிறது.

Taslim Rahmani லிங்கத்தை விமர்சித்தால், அதற்குச் சட்ட ரீதியான முயற்சியில் ஈடுபடலாமே தவிர அவர் சொன்னார் நானும் சொன்னேன் என்று நுபுர் ஷர்மா நடந்துகொள்வது சரியான வழிமுறையல்ல.

நீதி அனைவருக்கும் பொது தானே!

நுபுர் ஷர்மா கூறிய கருத்துக்குப் பல இடங்களில் வன்முறை, கல் வீச்சுச் சம்பவங்கள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து உச்சகட்டமாக, நுபுர் ஷர்மா கருத்தை ஆதரித்ததற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள தையல்காரரின் கழுத்து அறுக்கப்பட்டது.

இதன் பிறகு விசாரணைக்கு வந்த நுபுர் ஷர்மா வழக்கில் கூறப்பட்டதே உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்து.

நீதிபதி நுபுர் ஷர்மாவை கண்டித்த போது அதே விவாதத்தில் சிவலிங்கத்தை அவமதித்த Taslim Rahmani யையும் கண்டித்து இருக்க வேண்டாமா? அவரையும் பொதுவெளியில் மன்னிப்பு கேட்கக் கூறி இருக்க வேண்டாமா?

அவ்வாறு கூறுவது தானே நியாயம்! நீதி!

இந்துக் கடவுளை விமர்சனம் செய்தவரைப் பற்றியும், வன்முறை செய்தவர்களையும், தலையை வெட்டியவர்களையும் பற்றி எந்தக் கருத்தும் இல்லை ஆனால், நுபுர் ஷர்மா மட்டும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இந்துக் கடவுள்களை யாரும் எப்படியும் அவமானப்படுத்தலாம் ஆனால், மற்ற மதக் கடவுள்களைப் பற்றி எதுவும் கூற கூடாது!

இந்தியா முழுக்கப் பலர் குறிப்பாகத் தமிழகத்தில் இந்து மதத்தையும், இந்துக்கடவுளையும் தொடர்ச்சியாக ஆபாசமாகப் பேசி வருகிறார்கள் ஆனால், அரசாங்கமோ நீதித்துறையோ கண்டு கொள்வதில்லை.

உச்சநீதிமன்ற நீதிபதி என்ன சொல்ல வருகிறார்?

நீதி என்றால், அனைவருக்கும் பொதுவானதாகத் தானே இருக்க வேண்டும். யார் பேசினாலும் தவறு தானே! அப்புறம் ஏன் இந்து மதத்துக்கு மட்டும் ஓர வஞ்சனை?!

சிவனைக் கிண்டலடித்து யுடியூபர் பேசிய போது பல ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இந்துக்களும் இதே போலச் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டால் தான் இந்துக் கடவுளை விமர்சித்தவரை கண்டிப்பார்களா?!

அமைதியான போராட்டங்களுக்கு எதிர்ப்புகளுக்கு மதிப்பில்லையா?!

திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் இஸ்லாம் நிகழ்ச்சியில் கூறுகிறார் “முகமதுவை யார் என்ன கூறினாலும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்” என்று.

நல்ல விஷயம். தவறாகப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், எந்த மாற்றுக்கருத்துமில்லை.

ஆனால், இவர் கட்சி ஆதரவாளர் யு டு ப்ரூட்டஸ் யுடியூபர் சிவனை விமர்சித்த போது புகார் கொடுத்தும் கண்டுக்காமல் இருக்கிறார்களே அது எந்தக் கணக்கில் வரும்?!

இந்து மதம், இந்துக் கடவுள், இந்துக்கள் என்றால் கண்டுகொள்ள மாட்டோம் என்பது என்ன மாதிரியான மனநிலை?!

தொடர்ச்சியான ஒருதலைப்பட்சமான கருத்துகள், விமர்சனங்கள், எதிர்ப்புகள் அனைத்தும் சொரணையற்ற இந்துக்களைக் கொஞ்சமாவது சிந்திக்க வைத்து வருகிறது என்பது மட்டுமே தற்போதைய ஒரே ஆறுதல்.

கொசுறு

உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகான்ட் கூறியது தனிப்பட்ட கருத்தாகும் காரணம், இது நீதிமன்ற விசாரணை குறிப்பில் அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்படவில்லை.

தொடர்புடைய கட்டுரை

நடராஜரை இழிவுபடுத்திய திராவிடன் ஸ்டாக்குகள்

இந்து மதத்துக்கு யாரால் ஆபத்து?

10 COMMENTS

  1. கிரி, கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இந்த பிரச்சனையை பற்றி நான் அதிகம் எந்த செய்திகளையும் பார்க்கவில்லை.. காரணம் ஊடகங்களில் சிறிய செய்திகளை கூட இவர்கள் பேசி பேசியே ஊதி பெரியதாகி உலக அளவில் பார்வையை கொண்டு வந்து விடுவார்கள்.. கிட்டத்திட்ட இந்த பிரச்சனையில் நடந்ததும் இது தான்.. மீடியா, (வடிவேல் சொல்வது போல தான், “இவங்க புடுங்கறது எல்லாம் தேவையில்லாத ஆணிதான்”..).

    இந்தியா போன்ற பரந்து விரிந்த ஒரு தேசத்தில் பல மதங்கள், பல கோட்பாடுகள், பல சட்டதிட்டங்கள், பல சடங்குகள் என இருக்கிறது.. இது சரியா? தவறா? என்பதை அந்தந்த மதத்தை பின்பற்றுபவர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷியம்..இதெல்லாம் ஒரு நாளில் ஏற்பட்டது இல்லை.. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பவைகள்..

    ஒரு மதத்தை சேர்ந்தவர்கள், மற்ற மதங்களின் கோட்பாடுகளை மதிக்க வேண்டும்.. அதை விட்டு உங்கள் மதம், பெரிதா, எங்கள் மதம் பெரிதா என்ற வீண் தர்க்கம் தேவையில்லை.. இது வரம்பு மீறும் போது தேவையில்லாத குழப்பங்களும் சர்ச்சைகளும் ஏற்படுகிறது.. இது தொடரும் பட்சத்தில் அது கலவரமாகவும் சில சமயம் மாறி விடுகிறது.. இதில் பெரும்பாலும் பாதிக்கபடுவது ஒன்றுமே செய்யாத அப்பாவி பொது மக்கள் தான்..

    என்னை பொறுத்தவரை எல்லா மதத்தினரையும் சகோதர்களாக மதிக்க வேண்டும்..அவர்களுடன் நட்பு பாரட்ட வேண்டும்.. என் தந்தை,பாட்டன், பூட்டன் இவ்வாறு தான் வாழ்ந்தார்கள்.. நானும் அவ்வாறு தான் வாழ விரும்புகிறேன்.. என் சந்ததிக்கும் இதை தான் கற்று கொடுப்பேன்..

    நண்பர் சக்தி இந்து மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், கிட்டத்திட்ட 17 ஆண்டுகளுக்கு மேல் நட்பு பாராட்டி வருகிறோம்.. எங்கள் இருவருக்குள்ளும் மதம் சம்பந்தபட்ட, விவாதமோ, தர்க்கமோ என்றுமே ஏற்பட்டதில்லை.. இனியும் வராது என்பதில் இருவரும் உறுதியாக இருக்கிறோம்..

  2. ஒவ்வொருவரும் பிற மதத்தை பற்றி எந்த ஒரு கருத்தும் கூறாமல் சகிப்பு தன்மையுடன் நடந்தாலே இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த காலத்தில் இன கலவரங்கள் மிகுதியாக நடந்ததாகவும் கடுமையான சட்டங்கள் மூலம் அந்நாட்டு அரசாங்கம் சமநிலையை கொண்டுவந்ததாகவும் அறிந்திருக்கிறேன்…ஆனால் இந்த நாட்டு அரசாங்கத்திடம் இருந்து அப்படிப்பட்ட வலிமையான நடவடிக்கைகளை எதிர்பாக்க முடியாது ….

  3. கிரி. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் கன்ஹையா லால் கொலையை பற்றி உங்கள் கருத்து என்ன? அதை பற்றி நீங்கள் கட்டுரை எழுதுவீர்கள் என நினைத்தேன். மிக மோசமான சகிப்புத்தன்மையற்ற இஸ்லாமிய மதவெறியர்களால் நடத்தப்பட்ட கொடூர கொலை. அந்த வீடியோவை பார்த்தாலே பதைபதைக்கிறது.

  4. Harish சொல்வது போல் பா.ஜ.க. உறுப்பினர்களான உதய்பூர் கன்ஹையா லால் கொலையாளிகள் பற்றி நன்றாக எழுதுங்கள் கிரி. பா.ஜ.க. வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துங்கள். உங்களைப் போன்ற நியாயமான எழுத்தாளர்கள் தான் இதற்கு முன் வர வேண்டும்.

  5. @யாசின்

    “ஊடகங்களில் சிறிய செய்திகளை கூட இவர்கள் பேசி பேசியே ஊதி பெரியதாகி உலக அளவில் பார்வையை கொண்டு வந்து விடுவார்கள்.. கிட்டத்திட்ட இந்த பிரச்சனையில் நடந்ததும் இது தான்”

    சரியாகக் கூறினீர்கள். ஊடகங்களே நாட்டின் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு காரணம்.

    “வடிவேல் சொல்வது போல தான், “இவங்க புடுங்கறது எல்லாம் தேவையில்லாத ஆணிதான்”

    🙂

    “இந்தியா போன்ற பரந்து விரிந்த ஒரு தேசத்தில் பல மதங்கள், பல கோட்பாடுகள், பல சட்டதிட்டங்கள், பல சடங்குகள் என இருக்கிறது.. இது சரியா? தவறா? என்பதை அந்தந்த மதத்தை பின்பற்றுபவர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷியம்..இதெல்லாம் ஒரு நாளில் ஏற்பட்டது இல்லை.. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பவைகள்..”

    மாற்றுக்கருத்தில்லாமல் ஏற்றுக்கொள்கிறேன்.

    “ஒரு மதத்தை சேர்ந்தவர்கள், மற்ற மதங்களின் கோட்பாடுகளை மதிக்க வேண்டும்.. அதை விட்டு உங்கள் மதம், பெரிதா, எங்கள் மதம் பெரிதா என்ற வீண் தர்க்கம் தேவையில்லை”

    இது தான் உண்மை ஆனால், இப்பிரச்சனையை தடுக்க முடியாது என்பது கசப்பான உண்மை.

    “என்னை பொறுத்தவரை எல்லா மதத்தினரையும் சகோதர்களாக மதிக்க வேண்டும்..”

    எல்லோரும் உங்களைப் போலவே இருந்து விட்டால், நாட்டில் பிரச்சனைகளே இருக்காது ஆனால், உங்களைப்போல உள்ளவர்கள் சதவீதம் வெகு குறைவே.

    “எங்கள் இருவருக்குள்ளும் மதம் சம்பந்தபட்ட, விவாதமோ, தர்க்கமோ என்றுமே ஏற்பட்டதில்லை.. இனியும் வராது என்பதில் இருவரும் உறுதியாக இருக்கிறோம்.”

    மகிழ்ச்சி யாசின் 🙂 . இதே போலவே தொடர வேண்டும் என்பதே என் விருப்பமும்.

    என் மனதிலும் உங்களுக்கு எப்போது ஒரு இடம் இருக்கும் யாசின். உங்களை போன்றவர்களின் நட்பை இழக்க நான் என்றுமே நினைத்ததில்லை.

    சக்தி போலவே நம் நட்பும் தொடர இறைவனை வேண்டுகிறேன்.

    • உங்கள் வேண்டுதல் நிச்சயம் பலனளிக்கும் கிரி.. சக்தி மற்றும் கிரி, உங்கள் இருவர் மீதும் நான் கொண்ட நட்பு எந்த பிணக்கும் இல்லாமல் என் உயிருள்ளவரை தொடரும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்..

  6. @payapulla

    “ஒவ்வொருவரும் பிற மதத்தை பற்றி எந்த ஒரு கருத்தும் கூறாமல் சகிப்பு தன்மையுடன் நடந்தாலே இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.”

    மிகச்சரி. அவரவர் மதம் அவரவருக்குச் சிறப்பு. தேவையற்ற கருத்துகளைத் தவிர்க்க வேண்டும்.

    “சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த காலத்தில் இன கலவரங்கள் மிகுதியாக நடந்ததாகவும் கடுமையான சட்டங்கள் மூலம் அந்நாட்டு அரசாங்கம் சமநிலையை கொண்டுவந்ததாகவும் அறிந்திருக்கிறேன்”

    இது போல நடந்து கொள்ளும் நபர்களை வெளுத்து, ஐந்து / பத்து வருடங்கள் என்று சிறையில் தள்ளினால் எல்லோரும் மூடிட்டு இருப்பானுக.

    கடுமையான தண்டனை இல்லாததே இது போல நடக்க காரணம்.

    “இந்த நாட்டு அரசாங்கத்திடம் இருந்து அப்படிப்பட்ட வலிமையான நடவடிக்கைகளை எதிர்பாக்க முடியாது ….”

    இந்தியாவில் அப்படி முடியாது காரணம், சிங்கப்பூர் ஜனநாயக நாடாக இருந்தாலும் கட்டுப்பாடான ஜனநாயகமே உள்ளது.

    இந்தியாவில் நடந்து கொள்வது போல, பேசுவது போல இருக்க முடியாது.

    ஒருவகையில் நல்லது, ஒருவகையில் கெட்டது.

    அங்கே சில வருடங்கள் வசித்தவன் என்ற முறையில் கூறுகிறேன். பிரச்சனைகள் இருந்தாலும் எனக்கு இந்தியாவே பிடித்துள்ளது.

  7. @ஹரிஷ்

    “கிரி. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் கன்ஹையா லால் கொலையை பற்றி உங்கள் கருத்து என்ன? அதை பற்றி நீங்கள் கட்டுரை எழுதுவீர்கள் என நினைத்தேன்”

    இது போன்ற உணர்ச்சிகரமான நிகழ்வுகளில் உடனே கருத்து கூறுவதில்லை என்பதை சில வருடங்களாக பின்பற்றி வருகிறேன்.

    காரணம், இவ்வாறு கூறி சில காரணங்களால் பின்னர் நாம அவசரப்பட்டு கூறி விட்டோமே என்று நினைத்துள்ளேன். எனவே, முன்பு போன்று தற்போது எழுதுவதில்லை.

    கொஞ்சம் தெளிவான நிலைக்கு வந்த பிறகு, மனம் தெளிவடைந்து ஆசுவாசமான பிறகு மொத்தப் பிரச்சனையையும் கூறும் போது மற்றவற்றையும் ஒரு பகுதியாக கூறி விடுகிறேன்.

    இக்கட்டுரையில் கூறியது போல.

    பலரும் உணர்ச்சிகரமாக இருக்கும் மன நிலையில் நாமும் அதைத் தூண்டும் நபராக இருந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையே காரணம், வேறு எதுவுமில்லை.

    ஆனால், நான் கூற நினைக்கும் கருத்தை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக கூறுவேன் காரணம், நான் யாரையும் திருப்தி செய்ய நினைப்பதில்லை.

    என் மனசாட்சிக்கு மட்டுமே பயப்படுவேன். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது பற்றி கவலையில்லை.

  8. @Muhammad Fahim

    ரொம்ப வருடங்களுக்குப் பிறகு வருகிறீர்கள் என்று நினைக்கிறன்.

    “Harish சொல்வது போல் பா.ஜ.க. உறுப்பினர்களான உதய்பூர் கன்ஹையா லால் கொலையாளிகள் பற்றி நன்றாக எழுதுங்கள் கிரி. பா.ஜ.க. வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துங்கள்”

    நான் யாருங்க அம்பலப்படுத்த.. எனக்கு என்ன தெரியும்? செய்திகளில் வந்ததை வைத்து எழுதுகிறேன் அவ்வளவே.

    வழக்கு பதியப்பட்டுள்ளது. நீதிமன்றம் விசாரணை செய்து தீர்ப்பை வழங்கப்போகிறார்கள். வரும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம், அவ்வளவே.

    “உங்களைப் போன்ற நியாயமான எழுத்தாளர்கள் தான் இதற்கு முன் வர வேண்டும்.”

    கலாய்க்கிறீர்களா உண்மையாக கூறுகிறீர்களா என்று தெரியவில்லை 🙂 .

    ரொம்ப வருடங்களுக்கு பிறகு வந்துள்ளீர்கள் என்பதால், நான் எழுதிய கட்டுரைகளை தவற விட்டு இருக்கலாம்.

    எனவே இக்கட்டுரையை படித்துப் பாருங்கள். நியாயமான எழுத்தாளர்கள், நபர்கள் என்று உலகில் எவரும் இல்லை என்பதே என் கருத்து.

    https://www.giriblog.com/neautral-is-possible-or-not/

  9. கிரி நீங்கள் மேலே குறிப்பிட்ட கட்டுரையை முன்பே வாசித்து இருக்கிறேன். உங்கள் நிலைப்பாடு புரிகிறது. நபிகள் நாயகத்திடம் ஒருவர் வந்து ஒருவர் தமது சமூகத்தை ஆதரிப்பது இனவாதமாக ஆகுமா என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் இனவாதமாக ஆகாது. ஆனால் ஒரு சமூகம் தவறு செய்தால் அதை‌ நமது சமூகம் என்பதற்காக ஆதரிப்பது இனவாதமா கும் என்றார்கள். இந்த உண்மையை எல்லாரும் விளங்கி நடந்தால் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here