ராஜராஜ சோழன் | அரசர்களின் அரசன்

7
ராஜராஜ சோழன்

சோழர் காலத்தில் பல மன்னர்கள் ஆட்சி செய்து இருந்தாலும், ராஜராஜ சோழன் முக்கியத்துவம் வாய்ந்தவர். அவரின் சிறப்புகளை, செயல்களை, போர்களை விளக்கும் புத்தகமே இது.

ராஜராஜ சோழன்

அருண்மொழி வர்மன் என்ற ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் தான் சோழர்கள் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றார்கள்.

இக்காலக் கட்டத்திலேயே சோழப்பேரரசு மிகப்பெரிய அளவில் விரிவடைந்தது.

தனது அண்ணன் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதால், அரியணை ஏற வேண்டிய அருண்மொழி வர்மன், நியாயப்படி வாரிசாக வேண்டிய உத்தமசோழனை அரியணை ஏற்றுகிறார்.

இருப்பினும் மக்கள் அருண் மொழிவர்மனை அதிகம் விரும்புகிறார்கள். உத்தமசோழன் இறந்த பிறகே அருண்மொழி வர்மன் அரியணை ஏறினார்.

இதன் பிறகே ராஜராஜ சோழன் ஆகிறார்.

பொன்னியின் செல்வன்

சோழர் கால வரலாறு படிக்க வேண்டும் என்றால், அடிப்படையில் பொன்னியின் செல்வன் படித்து இருக்க வேண்டும். அப்போது தான் சோழர் காலம் பற்றிய எந்தப் புத்தகம் படித்தாலும் எளிதாகப் புரியும்.

காரணம், மிக எளிதாக, சுவாரசியமாக, மறக்க முடியாத கதாப்பாத்திரங்களாகக் கல்கி அனைவரையும் சித்தரித்து இருப்பார்.

ஆதித்த கரிகாலனை கொன்றது உத்தம சோழன், சோழர்களைத் துரோகிகளாகக் காட்ட வேண்டாம் என்பதற்காகவே கல்கி அதைக் கூறவில்லை என்று ஆசிரியர் கூறுகிறார்.

கல்வெட்டு விவரங்களை வைத்தே இவற்றைக் கூறியுள்ளார் ஆனாலும், யாராலும் தீர்க்க முடியாத பிரச்சனையாகவே உள்ளது.

15 மனைவிகள்

ராஜராஜ சோழனுக்குக் கிட்டத்தட்ட 15 மனைவிகள் இருந்ததாக ஆசிரியர் கூறுகிறார்.

பொன்னியின் செல்வனில் இது பற்றிய எந்தக்குறிப்பும் இல்லை. இது கற்பனை என்று கடந்து செல்ல முடியாதபடி மனைவிகள் அனைவரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

பண்டைய காலத்தில் ஒவ்வொரு பகுதியையும் பிடிக்க, நட்பை வளர்க்க மன்னர்கள் பல திருமணம் செய்து கொள்வார்கள்.

இதன் மூலம் எதிரிகளைக் குறைத்து அவர்கள் பேரரரசை விரிவாக்குவது ஒரு வகை.

ஆதாரம்

சோழர் காலத்தைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளச் செப்பு பட்டயங்களும், கல்வெட்டுகளுமே உதவியாக இருந்ததாகக் கூறுகிறார்.

ஆராய்ச்சியாளர்கள் இவற்றின் மூலமே சோழ காலத்தில் எப்படிப்பட்ட ஆட்சி நடந்தது, யாரை வெற்றி கொண்டார்கள், நிர்வாகம் எப்படி இருந்தது என்பதை அறிந்து கொண்டுள்ளார்கள்.

சமஸ்கிருதம்

1000 ஆண்டுகளுக்கு முன்பே சமஸ்கிருதம், தமிழ் வழக்கில் பயன்பாட்டில் இருந்துள்ளது வியப்பளித்தது.

எப்படி, எதனால் சமஸ்கிருதம் தமிழில் கலந்தது என்பது குறித்த ஆய்வுப் புத்தகம் ஏதாவது உள்ளதா? படிக்க விரும்புகிறேன்.

இலங்கை

இலங்கையை இதற்கு முன் தமிழகத்திலிருந்து சென்று பலர் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தாலும், சிறு பகுதியைத் தான் கைப்பற்றியுள்ளார்கள்.

அதாவது, தமிழகத்தில் எப்படிப் பல நிலப்பரப்புகளைப் பல மன்னர்கள் ஆண்டர்களோ அதே போல அங்கேயும் தமிழ் மன்னர்கள் உட்படப் பலர் ஆண்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் வெற்றிகொண்டு ராஜராஜ சோழன் மட்டுமே முழுமையாக 24 வருடங்கள் இலங்கையை ஆண்டார்.

இதற்கு அங்குள்ள மக்களை அரவணைத்து, அவர்களின் மதங்களை அழிக்க நினைக்காமல், சேதமான புத்தர் சிலைகளைப் புதிதாக நிர்மாணித்துள்ளார்.

இதன் தாக்கமாகத் தமிழகத்திலும் புத்த விகாரம் போன்றவற்றை அமைத்துள்ளார் (பொன்னியின் செல்வனில் இப்பகுதி சுவாரசியமாக இருக்கும்).

ஏரிகள்

ராஜராஜ சோழனுக்குப் போரில்லை என்றால், ஏரிகள் அமைப்பதையே முக்கியப்பணியாக வைத்துள்ளார்.

முதலாம் பராந்தகன் காலத்தில் வீராணம் ஏரி கட்டப்பட்டது.

படையெடுத்துச் சென்ற காலத்தில், போர் நடைபெறாத போது வீரர்கள் சோம்பேறியாகி விடக் கூடாது என்பதற்காகக் கட்டப்பட்ட ஏரி இதுவென்று கூறினால் நம்பக் கடினமாக இருக்கும்.

ராஜராஜ சோழன் ஏரிகளை எவ்வளவுக்கெவ்வளவு கட்ட முடியுமோ அந்த அளவுக்கு ஏரிகளைக் கட்டியுள்ளார்.

நிர்வாகம்

ராஜராஜ சோழன் மிகப்பெரிய அளவில் சோழப்பேரரசை நிறுவினாலும், மக்களைப் பாதுகாப்பதில் அவர்களுக்குச் சரியான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

நீதி அமைப்புகள், வரி அமைப்புகள் என்று சிறப்பாக நிர்வகித்துள்ளார்.

ராஜராஜ சோழன் காலத்தில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.

தஞ்சை பெரிய கோவில்

பல்லவர்களின் கட்டிடக்கலையைப் பார்த்து அனைவரும் வியக்கும் வண்ணம், நாமும் ஒரு கட்டிடத்தை நிறுவ வேண்டும் என்று நிறுவியதே 1000+ ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவில்.

ராஜராஜ சோழன் மற்றவர்களின் கலையை அழிக்காமல், அதைவிடச் சிறந்ததாகக் கட்ட நினைத்தார்.

தஞ்சை பெரிய கோவில் பற்றி எழுதினாலே தனிக்கட்டுரை எழுதும் அளவுக்குச் செய்திகள் உள்ளன. உடையார் புத்தகத்தில் விரிவாக இருப்பதாகக் கூறியுள்ளார்கள் ஆனால், Kindle ல் இல்லாததால் இன்னும் படிக்காமல் உள்ளேன்.

சிவனை முதன்மை தெய்வமாகவும், சைவ வழிமுறையையும் பின்பற்றியுள்ளார்கள்.

பாண்டியர்கள்

சோழர்களுக்கு ஜென்ம விரோதியாகப் பாண்டியர்களே இருந்துள்ளார்கள். வெட்ட வெட்ட முளைப்பது போல, எப்படி அழித்தாலும் மீண்டு வந்துள்ளார்கள்.

மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த குலசேகரப் பாண்டியனோடு மூன்றாம் குலோத்துங்க சோழன் போரிட்டு அவரைத் தோற்கடித்தார்.

அதன் பிறகும் வெறியடங்காமல் மதுரையையும், அரண்மனைகளையும் அழித்தார்.

இதன் பிறகு மூன்றாம் குலோத்துங்க சோழன் இறந்த பிறகு தஞ்சை முக்கியத்துவம் இழந்தது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் போர் தொடுத்து தஞ்சையை அழித்தார்.

இதில் ராஜராஜ சோழனின் அரண்மனைகளும் அழிக்கப்பட்டன. தஞ்சை கோவில் மட்டும் தப்பித்தது. ஒரே போரில் சர்வநாசம் செய்து விட்டார்கள்.

வட மாநிலங்களில் இன்னும் ஏராளமான மன்னர் அரண்மனைகள் இருக்க, தமிழ்நாட்டில் அது போல அரண்மனைகள் இல்லாமல் போனது நமது துரதிர்ஷ்டம்.

ராஜேந்திர சோழன்

ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழன் திறமையைப் பெரியளவில் குறிப்பிடவில்லை ஆனால், ராஜேந்திர சோழன் மிகப்பெரிய சாதனைகள் செய்துள்ளதாகப் படித்துள்ளேன்.

இவர் இந்தோனேசியா நாட்டின் பக்கம் போர் தொடுக்க ஆர்வம் காட்டியதால் கஜினி முகமது இந்தியா வந்த போது அவருடன் போரிடவில்லை.

ஒருவேளை ராஜேந்திர சோழன் கஜினி முகமதுடன் போரிட்டு வெற்றி பெற்று இருந்தால், வரலாறே மாறியிருக்கும்.

இதன்பிறகே வரலாற்றின் மிகக் கொடூரமான அரசரர்களில் ஒருவரான மங்கோலிய அரசன் (மொகல் பரம்பரை) தைமூர் போரிட்டு டெல்லியை ரத்தக்களரி ஆக்கினார்.

சோழர்கள் காலத்தில், இலங்கை, இந்தோனேசியா, மாலத்தீவு, தாய்லாந்து, கம்போடியா, மியான்மர் வரை சென்று போரிட்டு வென்றுள்ளார்கள்.

பல நூறு பாய்மரக் கப்பலில் சென்று இச்சாதனைகளை செய்துள்ளார்கள் என்று படிக்கும் போது வியப்பாக உள்ளது.

யார் படிக்கலாம்?

ஆசிரியர் கண்ணன் தன் கருத்துகளைத் திணிக்காமல், இயல்பாகக் கூறிச்செல்கிறார்.

ராஜராஜ சோழன் பற்றியும் சோழ பேரரசு பற்றியும் தெரிந்துகொள்ள இப்புத்தகம் பயனுள்ளதாக இருக்கும்.

அனைவரும் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.

அமேசானில் புத்தகத்தை வாங்க இங்கே செல்லவும்.

கொசுறு

வரலாறு என்பதே பலரின் ஆய்வுகள், கோணங்கள் கொண்டது.

எனவே, வரலாற்றுப் புத்தகங்களைப் பொறுத்தவரை ஒன்றை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

பல புத்தகங்களைப் படிக்கும் போது நம்மால் ஓரளவு நடந்தவற்றைப் புரிந்து, இப்படி நடந்து இருக்கலாம் என்ற ஊகத்துக்கு வர முடியும்.

ஒரு புத்தகத்தைப் படித்து அது தான் சோழ வரலாறு என்று எதையும் உறுதி செய்து கொள்ள முடியாது என்பதே உண்மை.

இது அனைத்து வரலாற்று புத்தகங்களுக்கும் பொருந்தும்.

ஒவ்வொருவரும் அவரவர் ஆய்வு, எண்ண ஓட்டங்களுக்கு ஏற்பவே எழுதுவார்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

பொன்னியின் செல்வன்

சிவகாமியின் சபதம்

சங்கதாரா – ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?

வந்தார்கள் வென்றார்கள்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

 1. @Ganesh இப்புத்தகத்தில் அருண்மொழி வர்மன் என்றும், பொன்னியின் செல்வனில் அருள்மொழி வர்மன் என்றும் வருகிறது.

  அருண்மொழி வர்மன் என்பதே சரி என்று கருதுகிறேன். உறுதியாகத்தெரியவில்லை.

 2. கிரி, வரலாற்றை தெரிந்து கொள்ள எனக்கு ஏற்படும் ஆர்வம் போல்,வேறு எதிலும் கிடையாது.. பள்ளி பருவத்தில் ஆறாம் வகுப்பின் போது ஏற்பட்ட ஆர்வம் இது. குறிப்பாக இந்தியாவையும், உலகையும் ஆண்ட பல அரசர்களின் வரலாற்றை படித்து இருக்கிறேன்.. படிக்கும் போது நானே பெயரிடப்படாத ஒரு தேசத்துக்கு அரசனாக உணர்ந்திருக்கிறேன்.. நான் பலரது வரலாற்றை படித்து இருந்தாலும் செங்கிஸ்கான் குறித்து நான் படித்த தகவல்களின் வியப்பிலிருந்து இன்னும் வெளிவரவில்லை.

  பள்ளி பருவத்தில் சேர, சோழ, பாண்டிய நாட்டு மன்னர்களின் வரலாற்றை படிக்கும் போது பாண்டிய நாடு மட்டும் மிகவும் பிடிக்கும்.. என்ன காரணம் என்று என்னால் கூற தெரியவில்லை.. ராஜராஜன் அரசனை குறித்து படித்தும், கேட்டும் இருக்கிறேன்.. ஆனால் ஒரு புத்தகத்தில் முழுமையாக அவரை பற்றி படித்ததில்லை. சரித்திர பக்கங்களை புரட்டும் போது ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் பொற்காலமாக இருந்திருக்கிறது..மிகவும் சரியான கட்டமைப்பு கொண்ட ஆட்சியை புரிந்துள்ளார்.. கடல் கடந்து முதன் முதலில் இலங்கை, மாலத்தீவு, இந்தோனீசிய, கம்போடியா என பல இடங்களை கைப்பற்றி உள்ளார். என்ன துணிச்சல்?? நிச்சயம் மிக பெரிய படையாக இருந்திருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம்.. நினைக்கும் போதே பிரமிப்பாக இருக்கிறது..

  ஒரு மிக பெரிய படையை கட்டி காப்பது, போருக்கு தயார் செய்வது, ஏரி குளங்கள் வெட்டுவது, கோவில் கட்டுவது, உணவு தானியம் சேமிப்பது, இலக்கியம் வளர்ப்பது, இன்னும் பல, பல என்பதெல்லாம் எவ்வாறு சாத்தியம் என்பதே புரியவில்லை கிரி..நிச்சயம் இது போல ஒரு தொன்மையான வரலாறு மேற்கத்திய நாட்டினருக்கு இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று தான் கூற வேண்டும்..கடந்த சில நுறு ஆண்டுகளில் வேண்டுமானால் அவர்கள் நம்மை விட மேம்பட்ற்றிருக்கலாம், ஆனால் பண்டைய சரித்திரத்தை புரட்டும் போது தான் நாம் முன்னோர்களின் சாதனை அவர்களுக்கு தெரியவரும்.. பகிர்வுக்கு நன்றி கிரி.

 3. @யாசின்

  “படிக்கும் போது நானே பெயரிடப்படாத ஒரு தேசத்துக்கு அரசனாக உணர்ந்திருக்கிறேன்”

  இது போன்ற கற்பனைகள் சுவாரசியமானது. இது போல இல்லையென்றாலும், வேறு மாதிரியான கற்பனைகள் உண்டு.

  நடக்காது என்று தெரிந்தாலும், கற்பனை சுவாரசியமே 🙂

  “சரித்திர பக்கங்களை புரட்டும் போது ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் பொற்காலமாக இருந்திருக்கிறது.”

  பள்ளியில் வரலாறு எனக்கு பிடிக்கும். கணக்கு வராது என்பதால், 11 & 12 ம் வகுப்பில் வரலாறு தான் தேர்வு செய்தேன்.

  ஆனால், பொன்னியின் செல்வன் புத்தகத்தில் தான் நிறைய தெரிந்து கொண்டேன்.

  “நிச்சயம் மிக பெரிய படையாக இருந்திருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம்.. நினைக்கும் போதே பிரமிப்பாக இருக்கிறது..”

  உண்மை. இவ்வ்ளவு பேரை அழைத்துக்கொண்டு கடல் கடந்து பல ஆயிரம் கிலோமீட்டர் பயணித்துத் தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே இவற்றைச் செய்துள்ளது சாதனையே.

  “நிச்சயம் இது போல ஒரு தொன்மையான வரலாறு மேற்கத்திய நாட்டினருக்கு இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று தான் கூற வேண்டும்.”

  சில ஆங்கிலப்படங்களில் பார்க்கும் போது அவர்களிடையேயும் பல திறமைகள் உள்ளன என்று தெரிகிறது ஆனால், அனைவருக்கும் சவால் விடும் அளவுக்கே சோழர்களும் இருந்துள்ளார்கள் என்பது பெருமையே.

 4. “எப்படி, எதனால் சமஸ்கிருதம் தமிழில் கலந்தது என்பது குறித்த ஆய்வுப் புத்தகம் ஏதாவது உள்ளதா? படிக்க விரும்புகிறேன்.”

  ஸ்ரீநிவாச ஐயர் எழுதிய History of Tamils https://www.amazon.in/History-Tamils-P-Srinivasa-Iyengar/dp/8121235510/ref=sr_1_1?keywords=History+of+the+Tamils&qid=1662994341&sr=8-1 நூல் ஒரு நல்ல தொடக்கம்.

  இது அவரின் 1930 களில் செய்த ஆய்வு கட்டுரைகளின அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு நூல். வரலாற்று புத்தகங்கள் பொதுவாக வாசிபதற்க்கு கடினமானவை.

  இங்கே வட மொழி கலப்பு என்பது இரண்டாயிரம் ஆண்டுகளிறிக்கு அதிகமான கால ஓட்டத்தில் மெது மெதுவாக நடந்தது என்பதை நிறுவ முயற்சிக்கிறார்.

  சங்க இலக்கியங்களில் எவ்வாறு வட மொழி மற்றும் வேதாந்த சிந்தனை வடிவங்கள் கால ஓட்டதில் அதிகரித்து செல்கின்றது என்பதை ஆதார பூர்வமாக விளக்குகின்றார்.

  தமிழ்நாடு பலம் மிக்க குப்தா, மௌரிய பேரரசு காலங்களில் கூட அவர்களின் ஆளுமைக்குள் வராமல் தனது சுதந்திரத்தை பேணி வந்துள்ளது. அதனால் சமஸ்கிருதம் என்பது எமக்குள் அதிகாரம் மூலமாக திணிக்க படவில்லை. இது ஒரு கலாச்சார ஆக்கிரமிப்பு. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மெல்ல மெல்ல நடந்துவரும் ஆக்கிரமிப்பு இது.

  ஆங்கிலம் எமக்குள் அதிகாரதால் திணிக்க பட்டது. பொருளாதார காரணங்களிற்காக நாம் அதை இனி தவிர்க்க முடியாது.

  ஆனால் பெயர் என்று வரும்போது எமக்கு ஏன் “ஸ், ஷ, ஜ ” போன்ற எழுத்துக்களில் ஒரு போதை. இந்தியாவில் கல்வி, பொருளாதார மற்றும் நல்வாழ்வு ரீதியில் தமிழ் நாடு மிக சிறந்த மாநிலங்களில் ஒன்று . ஹிந்தி பேசும் மாநிலங்கள் உண்மையில் பொருளாதார ரீதியில் தென் இந்திய உழைப்பால் நன்மை பெறுகிறார்கள்(transfer of money to central government). நிலவரம் அப்படி இருக்க ஏன் அவர்கள் மொழி மீது ஒரு மோகம் எம்மவர்க்கு.

  இது எனக்கா அவர் புரியாத புதிர்.

 5. @Tamil Panda புத்தக விலை மிக அதிகமாக உள்ளது அதோடு Kindle version இல்லை.

  “இது ஒரு கலாச்சார ஆக்கிரமிப்பு. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மெல்ல மெல்ல நடந்துவரும் ஆக்கிரமிப்பு இது.

  ஆங்கிலம் எமக்குள் அதிகாரதால் திணிக்க பட்டது. பொருளாதார காரணங்களிற்காக நாம் அதை இனி தவிர்க்க முடியாது.”

  மிகச்சரியாக கூறினீர்கள். மாற்றுக்கருத்து இல்லாமல் ஏற்றுக்கொள்கிறேன்.

  “ஆனால் பெயர் என்று வரும்போது எமக்கு ஏன் “ஸ், ஷ, ஜ ” போன்ற எழுத்துக்களில் ஒரு போதை.”

  இதில் என்ன கொடுமை என்றால், தமிழுக்கு கொடி பிடிப்பவர்களே அவர்கள் பிள்ளைகளுக்கு தமிழ் பெயர் வைக்காமல், சம்ஸ்கிருத பெயர் வைக்கிறார்கள்.

  “நிலவரம் அப்படி இருக்க ஏன் அவர்கள் மொழி மீது ஒரு மோகம் எம்மவர்க்கு.”

  காரணம் பெரியதாக ஒன்றுமில்லை. ஸ்டைலிஷாக இல்லை என்பதே!

  தமிழ்ப்பெயர்கள் பழமையாக உள்ளது, தற்காலத்துக்கு ஏற்றது போல இல்லை என்ற பெற்றோரின் எண்ணமே காரணம்.

  தமிழிலும் பல பெயர்கள் உள்ளன ஆனால், தேடி வைக்க வேண்டும்.

  விரிவான கருத்துக்கு நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here