மெலூஹாவின் அமரர்கள்

10
meluhavin amarargal மெலூஹாவின் அமரர்கள்

ருவர் முதல் நாவலிலேயே இவ்வளவு மிரட்டலாக எழுத முடியுமா?! “முடியும்” என்று நிரூபித்து இருக்கிறார் அமிஷ். முதல் புத்தகம் மெலூஹாவின் அமரர்கள் 27.5 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா?!

சிலர் முதல் நாவலிலேயே வியப்படைய வைத்து, பிரம்மிப்பு ஏற்படுத்துகிறார்கள். அதில் அமிஷ் ஒருவர், இன்னொருவர் “அசுரன்” நாவல் எழுதிய நீல கண்டன்.

மெலுஹாவின் அமரர்கள்

இந்துக்களுக்கெல்லாம் இறைவன்களில் ஒருவராக இருக்கும் சிவனை ஒரு சாதாரண நபராக நம்மிடையே நடமாட விட்டால்… அது தான் “மெலுஹாவின் அமரர்கள்”

காட்டுவாசியான சிவனை, அவரின் மக்களை மெலூஹாவை சேர்ந்த நந்தி என்பவர் அவர்களுடைய நாகரிக “மெலூஹா” நகருக்கு அழைக்கிறார்.

அங்கே செல்லும் சிவனை அங்குள்ள மக்கள் தங்களைக் காப்பாற்ற வந்த கடவுளாக நினைக்கிறார்கள்.

அனைவரும் சிவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதையெல்லாம் சிவனால் நம்ப முடியாமல், “என்ன இழவு இங்க நடக்கிறது?” என்று குழம்புகிறார்.

இதன் பிறகு காதல், போர் என்று காட்சிகள் பரபர என்று செல்கிறது.

இங்கே இவர்கள் தயாரிக்கும் அமுதத்தை அருந்தினால் மூப்பு அடைய மாட்டார்கள், நோய் அண்டாது, எப்போதும் இளமையாக இருப்பார்கள்.

நமக்குத் தோன்றும் அனைத்துக் கேள்விகளையும் சிவனே கேட்பதால், நமக்குப் பதில் கிடைப்பதாக மனது நினைத்து நாவலைத் தொடர முடிகிறது.

வர்ணாசிரமம் பற்றியும் வருகிறது அதில் நமக்கு (பிராமணர்கள் அல்லாத அல்லாத இந்துக்கள்) தோன்றும் கேள்விகளைச் சிவன் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பது தான் இந்நாவலின் சிறப்பாகக் கருதுகிறேன்.

சிவன் கேட்கும் சில கேள்விகளைப் பாருங்கள் நான் கூறுவது புரியும்.

வர்ணாசிரமம்

எல்லாமே பேத்தலாக இருக்கு. கர்ப்பமாயிருக்கும் போது சரியாத் தன்னைக் கவனிச்சுக்காததினால கூட ஒரு பொண்ணுக்கு குழந்தை செத்துப் பிறக்கலாம், இல்லை ஏதாவது வியாதியா இருக்கலாம்.

போன ஜென்மப் பாவத்தோட பலன்னு எப்படிச் சொல்ல முடியும்?

ஒரு அந்தணருக்குப் பிறக்குற குழந்தைக்குக் கெடைக்கிற படிப்புக்கும் வசதிவாய்ப்புக்கும், ஒரு சூத்திர குழந்தைக்குக் கெடைக்கக் கூடியத்துக்கும் வித்யாசம் இருக்குமில்லையா?

அந்தணருக்குப் பிறக்கும் குழந்தை, சூத்திரக் குழந்தையை விட ஆற்றல்ல குறைவா இருந்தாலும், அந்தணனாத்தான் வளரும், அப்ப, சூத்திரக் குழந்தைக்கு நடக்குறது அநியாயம் இல்லையா? இந்த மாதிரி இயங்குற சமூகத்துல என்ன உசத்தி?

இந்து மதத்தில் பிடிக்காதது “வர்ணாசிரமம்”.

இதற்கு உயர் வகுப்பினர் ஆயிரம் காரணம் / சமாதானம் கூறலாம் ஆனால், இதனால் பாதிக்கப்படுவர்கள் மட்டுமே இது குறித்துக் கருத்துக் கூறத் தகுதியானவர்கள்.

இப்புத்தகத்தில் வரும் சிவன் போலக் கூற வேண்டும் என்றால், இந்த வர்ணாசிரம இழவு தான் சாதி என்ற பெயரில் இந்துக்களோட தற்போதைய அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம்.

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பிரச்சனையே இதில் இருந்து தான் வந்தது.

வர்ணாசிரமம் குறித்துத் தெரியாதவர்கள் இது குறித்துத் தேடிப்பாருங்கள். நீங்களே தேடிப்படித்தீர்கள் என்றால், பல புதிய செய்திகளைத் தெரிந்து கொள்வீர்கள்.

Read: அசுரன் – வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்

சாதாரண மனிதனாகச் சிவன்

அமிஷ் அட்டகாசமாக இப்புத்தகத்தைக் கொண்டு சென்று இருக்கிறார்.

ஒரு இடம் கூடச் சலிப்புத் தட்டவில்லை. சிவனை நம்மில் ஒருவராகக் காண்பதே வித்யாசமாக இருக்கிறது. அதுவும் நம்மைப் போலப் பேசுவது இயல்பாக இருக்கிறது.

இதில் வரும் போர் காட்சிகள்.. அவற்றைச் சிவன் முன்னெடுப்பதெல்லாம்… என்ன சொல்றது போங்க.. கலக்கல். அமிஷ் பின்னிப் பெடலெடுத்து இருக்கிறார்.

சிவனை இது போலச் சாதாரண நபராகக் காட்டுவதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?

அமிஷ்

அமிஷ் நாவல் எழுதுவதற்கு முன் வங்கிப் பணியில் இருந்து உள்ளார்.

அங்கு கற்றுக் கொண்ட “Marketing” உத்திகளைத் தன் முதல் நாவலுக்குப் பயன்படுத்திச் சிறப்பாக விளம்பரம் செய்து பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வெளியிட்டு உள்ளார்.

இதன் காரணமாக விற்பனை பெரியளவில் சென்று இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் புத்தகமும் அசத்தலாக வந்து இருப்பதே இவ்வளவு பெரிய வெற்றிக்குக் காரணம்.

இப்புத்தகத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தனது வங்கிப் பணியை விட்டு முழுநேர எழுத்தாளராகி விட்டார்.

மெலூஹாவின் அமரர்கள் பெரிய வெற்றிக்கு இன்னொரு காரணம், இந்நாவல் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

தமிழில் மொழி பெயர்த்த “பவித்ரா ஸ்ரீநிவாசன்” பாராட்டுக்குரியவர்.

ஏனென்றால், எனக்கு எந்த இடத்திலும் இது மொழி மாற்றம் செய்யப்பட்ட நாவல் என்ற எண்ணம் வரவில்லை. நாவல் பேச்சு வழக்கிலேயே எழுதப்பட்டுள்ளது.

நாவலைப் பெரிய வெற்றி பெற வைக்க அனைவரிடமும் கொண்டு செல்ல மொழி மாற்றம் அவசியம் என்பதை அமிஷ் உணர்ந்து இருக்கிறார்.

இதைச் சரியாக நடைமுறைப்படுத்தி இருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக இரண்டு நாவல்களை எழுதி அவையும் பெரிய வெற்றி பெற்று இருக்கின்றன.

எனக்கு வர்ணாசிரமம் சுத்தமாகப் பிடிக்காது இருப்பினும் அதையெல்லாம் மறக்கடிக்கும் படி நாவல் செல்கிறது. குறிப்பாகச் சிவன் கதாப்பாத்திரம் பட்டாசாக உள்ளது.

எத்தனை முறைப் படித்தாலும் சலிக்காது போல அந்த அளவுக்கு “சிக்ஸ் பேக் சிவன்” என்னைக் கவர்ந்து விட்டார் 🙂 .

இதன் தொடர்ச்சியான “நாகர்களின் ரகசியம்” வாங்கி விட்டேன்.

புத்தகங்கள் நமக்குப் பல செய்திகளைக் கூறுகிறது, பல விசயங்களைத் தெரிந்து கொள்ள உதவுகிறது, சரியான புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து படிப்பதன் மூலம் நம்முடைய அனுபவங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

அனைவரையும் மெலூஹாவின் அமரர்கள் நாவலின் கற்பனைத் திறனுக்காகப் படிக்கப் பரிந்துரைக்கிறேன். நிச்சயம் வித்யாசமான அனுபவம் கிடைக்கும்.

அமேசானில் வாங்க –> மெலுஹாவின் அமரர்கள் Link 

தொடர்புடைய நாவல்கள்

நாகர்களின் இரகசியம்

வாயுபுத்ரர் வாக்கு [அமுதமும் நஞ்சாகும்]

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

10 COMMENTS

  1. இந்த புத்தகமும் எதிர்பாராமல் யவண ராணி புத்தகம் அறிமுகமானது போல் தான் எனக்கு கிடைத்தது. அதுவும் இல்லாமல் இந்திய புத்தக தளங்களை திறந்தால் இந்த புத்தகம்தான் முதலில் தெரியும். 3 வருடங்களுக்கு முன்பு நண்பர் கொடுத்த போது முதல் பாகத்தை படிக்க ஆரம்பித்தேன் (ஆங்கில புத்தகங்களே எனக்கு படிக்க பிடிக்காது), பக்கங்கள் செல்ல செல்ல விறுவிறுப்புடன் இருந்ததால் மூன்றே மாதத்தில் 3 பகுதிகளையும் முடித்துவிட்டேன். ஆங்கிலத்தில் படித்த ஒரே கதை புத்தகம் இதுதான் இன்று வரை. மிகவும் சுவாரசியம் நிறைந்தது.

  2. நீங்கள் ஒவ்வொரு முறை புதிய புத்தகத்தை பற்றி குறிப்பிடும் போதும் மகிழ்ச்சியாகவும், கொஞ்சம் மன சோர்வாகவும் இருக்கும். அலுவலகத்தில் 11/12 மணி நேரம் பணியில் இருப்பதால், மற்ற தேவைகளுக்கு நேரம் குறைவாக இருப்பது போல் தோன்றுகிறது.

    இதனால் புத்தகம் வாசிப்பு மிகவும் குறைந்து விட்டது. புத்தகங்களை இணையத்தில் வாசிப்பதை முற்றிலும் வெறுக்கிறேன். விருப்பமான புத்தகங்களும் அருகில் வாங்கக்கூடிய சூழல் இல்லை. இதனால் சில நேரங்களில் மன சோர்வும் ஏற்படுவதுண்டு. நீங்கள் தற்போது அதிக புத்தகங்களை வாசிப்பது, அதை குறித்து எழுதுவது ஒருவித தெம்பை எனக்கு தருகிறது. இந்த பணி தொடர வேண்டும்.. பகிர்ந்தமைக்கு நன்றி கிரி.

  3. பல தளங்களில் இந்த புத்தகத்தின் விளம்பரங்களை பார்த்து உள்ளேன். ஆனால் படித்ததில்லை.
    நீங்கள் கூறிய பிறகு முடிந்த பொழுது படிக்கலாம் என்று உள்ளேன்.

    ஹிந்து மதம் எதையும் தவறாக கூறாது என்பது தின்னம். மற்ற மதங்களும் அப்படியே. ஆனால் நான் அறிந்தது ஹிந்து மதம் பற்றியே ஆகையால் என்னால் உறுதியாக கூற முடியும்.

    வர்ணாசிரமம் பற்றி தாங்கள் கூறுவது மிகவும் தவறான கருத்தாகும், காரணம் ஹிந்து மதத்தில் எங்கும் வர்ணாசிரமத்தை வைத்து அனைவரையும் அடிமையாக்கு என்று எங்கும் கூறவில்லை. அதை சிலர் தவறாக உபயோக படுத்தினார்கள் என்பதாலேயே வர்ணாசிரமமே தவறு என்று கூறுவது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.

    ஏனெனில் அரசியலில் பல அரசியல்வாதிகள் தவறு செய்கிறார்கள் அதனால் அரசியலோ அல்லது அரசியல் அமைப்பு சட்டமோ தவறு என்று கூறிவிட முடியாது. அது போன்று தான் இதுவும்.
    அது மட்டுமல்லாமல் இந்த வர்ணாசிரமமே இல்லாத பல நாடுகளில் கூட பல மேல் தட்டு மக்கள் இங்கு நடந்ததை விட கொடுமையாக கீழ் தட்டு மக்களை அடிமைப்படுத்தி கொடுமைபடித்தி உள்ளனர். இதற்கு ஐரோப்பாவும், அமெரிக்காவும் கூட விதிவிலக்கு அல்ல. அங்கு கண்டிப்பாக வர்ணாசிரமம் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
    பிறகு அவர்களை எது இது போன்று நடக்க வைத்தது. அதுமட்டுமல்லாமல் வர்ணாசிரமம் தான் இன்று இருக்கும் சாதி பிரச்சினைகளுக்கு காரணம் என்றால் இன்றும் பல முஸ்லீம் நாடுகளிலும் பல சாதி போன்ற அமைப்புகள் உறுவாகி ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கின்றனர் அங்கு எந்த வர்ணாசிரமம் இருந்தது சாதி சண்டை வர, கிறிஸ்தவர்களுக்கு உள்ளும் பல சாதி போன்று அமைப்பு உள்ளது. அங்கும் அவர்களுக்கு உள்ளேயே சண்டை வர எது காரணம் வர்ணாசிரமமா இல்லயே….
    ஆகையால் வர்ணாசிரமம் யாரையும் தவறு செய்ய சொல்லவில்லை, தூண்டியும் விட வில்லை அவரவர்களின் மனமே அவர்களை இவ்வாறு தூண்டுகிறது. இன்றும் பணம், பதவி, அதிகாரம் உள்ளவர்கள் இல்லாதவர்களை அதன் மூலம் அடிமையாக்குகிறார்கள். அது போன்று தான் இதுவும்.
    ஆகையால் இதில் வர்ணாசிரமத்தையோ அல்லது ஹிந்து மதத்தையோ குறை சொல்வது தவறு.
    ஏனெனில் இங்கு மனிதர்களின் மனமே தவறு செய்ய சொல்கிறதே தவிர மதமோ அல்லது மதத்தில் சொல்லபட்ட கருத்துக்களோ அல்ல. ஹிந்து மதம் மட்டும் அல்ல, அனைத்து மதமுமே அப்படி தான்.

    கடைசியாக பரமசிவன் தன் மனைவி பார்வதிக்கு சொன்ன அறிவுறையோடு முடித்துக் கொள்கிறேன்.

    அவர் கூறியதாவது: படிப்பு, பணம், இளமை, வீரம், பதவி, இவை அனைத்தும் நல்லவன் ஒருவனிடம் இருக்கும் போது அனைவருக்கும் நன்மைகளை செய்கிறது,
    இதுவே ஒரு தீயவனிடம் இருக்கும் போது அனைவருக்கும் தீமையை செய்கிறது ஆகையால் நல் விஷயமாயினும் இருப்பவனை பொருத்து செயல்கள் அமைகின்றன என்பதால் நன்மையோ தீமையோ அவரவர்களின் மனம் தான் காரணமே தவிர அவர்களிடம் உள்ள படிப்பு, பணம் போன்றவைகள் காரணம் அல்ல என்று கூறுகிறார்.

    மேலும் நான் வர்ணாசிரமத்தை வைத்து தவறு செய்தவர்களுக்கு சாதகமாக இவைகளை இங்கு சொல்லவில்லை. நீங்கள் கூறுவது போல் இவைகளுக்கு மதமோ, வர்ணாசிரமமோ காரணம் இல்லை என்றே கூறுகிறேன்.

  4. @பிரகாஷ்

    அவசியம் படிங்க.. ரொம்ப நன்றாக உள்ளது.. உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

    “வர்ணாசிரமம் பற்றி தாங்கள் கூறுவது மிகவும் தவறான கருத்தாகும், காரணம் ஹிந்து மதத்தில் எங்கும் வர்ணாசிரமத்தை வைத்து அனைவரையும் அடிமையாக்கு என்று எங்கும் கூறவில்லை. அதை சிலர் தவறாக உபயோக படுத்தினார்கள் என்பதாலேயே வர்ணாசிரமமே தவறு என்று கூறுவது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.”

    வர்ணாசிரமம் யாரையும் அடிமையாக்கு என்று கூறுகிறதோ இல்லையோ அது வேற விசயம் ஆனால், அதனால் தான் தற்போது பிரச்சனை நடந்து வருகிறது.

    முதலில் மனிதர்களை இது போல பிரிப்பதே தவறு அது எந்தக் காரணமாக இருந்தாலும். உங்களை “அசுரன்” நாவலை படிக்க பரிந்துரைக்கிறேன். அதில் இது போல பிரிக்கப்படும் போது மக்களின் நிலையை அசத்தலாக பிரதிபலித்து இருப்பார் ஆசிரியர். படியுங்கள் புரிந்து கொள்ள முடியும்.

    “வர்ணாசிரமமே இல்லாத பல நாடுகளில் கூட பல மேல் தட்டு மக்கள் இங்கு நடந்ததை விட கொடுமையாக கீழ் தட்டு மக்களை அடிமைப்படுத்தி கொடுமைபடித்தி உள்ளனர். இதற்கு ஐரோப்பாவும், அமெரிக்காவும் கூட விதிவிலக்கு அல்ல. அங்கு கண்டிப்பாக வர்ணாசிரமம் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
    பிறகு அவர்களை எது இது போன்று நடக்க வைத்தது. அதுமட்டுமல்லாமல் வர்ணாசிரமம் தான் இன்று இருக்கும் சாதி பிரச்சினைகளுக்கு காரணம் என்றால் இன்றும் பல முஸ்லீம் நாடுகளிலும் பல சாதி போன்ற அமைப்புகள் உறுவாகி ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கின்றனர் அங்கு எந்த வர்ணாசிரமம் இருந்தது சாதி சண்டை வர, கிறிஸ்தவர்களுக்கு உள்ளும் பல சாதி போன்று அமைப்பு உள்ளது. அங்கும் அவர்களுக்கு உள்ளேயே சண்டை வர எது காரணம் வர்ணாசிரமமா இல்லயே….”

    முழுவதும் ஏற்றுக் கொள்கிறேன்.

    அங்கெல்லாம் ஏற்ற தாழ்வுகள் இயல்பாக நடக்கிறது ஆனால், இங்கு மட்டும் தான் “வர்ணாசிரமம்” என்று இதற்கென்று பக்காவாக அனைத்தும் விளக்கப்பட்டு பிரிக்கப்பட்டு இருக்கிறது.

    “நான் வர்ணாசிரமத்தை வைத்து தவறு செய்தவர்களுக்கு சாதகமாக இவைகளை இங்கு சொல்லவில்லை. நீங்கள் கூறுவது போல் இவைகளுக்கு மதமோ, வர்ணாசிரமமோ காரணம் இல்லை என்றே கூறுகிறேன்.”

    பிரகாஷ் நீங்கள் நிச்சயம் தாழ்த்தப்பட்ட வகுப்பினராக இருக்க 100% வாய்ப்பில்லை.

    தீண்டாமை எப்போது ஒழியும்? https://www.giriblog.com/untouchability/ இதை படித்துப் பாருங்கள்.

    அடிபட்டவனுக்கு மட்டுமே வலி தெரியும். பாதிக்கப்படாதவர்கள் என்ன வேண்டும் என்றாலும் நியாயம் பேசலாம். அதற்கு 1000 விளக்கம் கூறலாம்.

    என்னுடைய பழைய “கர்மா”, “அர்த்தமுள்ள இந்து மதம்”கட்டுரைகளை எல்லாம் படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கும் இந்து மதம் ரொம்பப் பிடிக்கும். இந்து மதத்தில் இருக்கிறேன் என்ற பெருமையும் எனக்கு உண்டு.

    அதற்காக அனைத்தையும் சரி என்று ஏற்றுக் கொள்ள முடியாது. “அசுரன்” புத்தகம் தான் என் மனதில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. வர்ணாசிரமத்தின் பிரச்னையை வலியை சரியாகப் புரிந்து கொள்ள உதவியது.

    உங்கள் கருத்தை மதிக்கிறேன் ஆனால், எனக்கு அதில் உடன்பாடில்லை.

    • நீங்கள் பரிந்துரைத்தப்படி படிப்பதற்காக அசுரன் நாவல் எதை பற்றி கூறியுள்ளது என்று இணையத்தில் தேடினேன்.

      அதில் நீங்கள் முன்னமேயே(2015) அதை பற்றி தளத்தில் விரிவாக எழுதி உள்ளதையும் நானும் பின்னூட்டம் இட்டதையும் படித்தேன். உங்களின் அசுரன் நாவலை பற்றிய கட்டுரையை மீண்டும் படித்த பிறகு நினைத்தேன், நல்ல வேலையாக அந்த புத்தகத்தை நாம் படிக்க வில்லை என்று.

      காரணம் அதில் சாதிகளை திட்டி இருப்பதால், நான் படிக்க வேண்டாம் என்று நினைக்க வில்லை.

      ஒருவர் எந்த சாதியையும் திட்டட்டும், அல்லது அது போன்று எழுதி புத்தகங்கள் போடட்டும். ஆனால் சுத்தமாக எந்தவொரு உண்மையும், மனசாட்சியும் இல்லாமல் ராமாயணத்தில் வரும் ராமர் முதலியவர்களை கண்டமேனிக்கு திட்டுவதென்பது அதுவும் சாதி ரீதியாக எழுதுவது என்பது ஒரு வெறிச் செயல். அயோத்தியில் நாவலில் வருவது போன்று இருந்ததற்கு சான்று உண்டா? அல்லது இலங்கையில் வருவது போன்று இருந்ததற்கு சான்று உண்டா?

      நாவல் ஆசிரியர் எழுதி இருப்பதை நீங்கள் விவரிக்கும் போதே மிகவும் வேதனையாக இருந்தது. அதற்கு இரு காரணம் உண்டு.

      ஒன்று: ஹிந்துக்கள் தெய்வமாக வணங்குபவர்களை இது போன்று ஆதாரம் அற்று கீழ்த்தரமாக எழுதுவது.
      மற்றொன்று: எதையும் சிந்தித்து எழுத கூடிய நீங்களே (கிரி) அதை கண்மூடித்தனமாக நம்பி எழுதுயிருப்பதை பார்த்து.

      ராமாயணமோ, மகாபாரதமோ, பொய்/புனயப்பட்டது என்று நினைத்தீர்களானால், அது தவறு, மேலும் அவைகள் உண்மை என்று என்னால் நிரூபிக்கவும் முடியும்.

      நீங்கள் அசுரன் நாவலை புகழ்ந்து எழுதி, தி. க வினரை விட நாசூக்காக எழுதியுள்ளார் என்று போற்றுகிறீர்கள். ஒரு சாதியை வைத்து எழுதுவதே முதலில் நாசூக்கற்றது அது எந்த சாதியாயினும். மேலும் ஒரு மதத்தினர் தெய்வமாக வணங்குபவர்களை இது போன்று கீழ்த்தரமாக எழுதுவது என்பது சுத்தமாக நாசூக்கற்றது.

      நாசூக்காக எழுதுவது என்பது பாரதியாரின் பாடலை போன்று இருக்க வேண்டும்.

      ” சாதிகள் இல்லையடி பாப்பா; – குலத்
      தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
      நீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு
      நிறைய உடையவர்கள் மேலோர்.

      உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; – தெய்வம்
      உண்மையென்று தானறிதல் வேணும்;
      வயிர முடைய நெஞ்சு வேணும்; – இது
      வாழும் முறைமையடி பாப்பா”

      நாசூக் என்பது இது போன்று எழுதுவது தான். ஆகையால் தான் குழந்தைகளின் பாலபாடத்திலேயே இந்த பாடலை கற்றுக் கொடுக்கிறோம்.

      அசுரன் நாவலில் எழுதியிருப்பது வெறும் வெறிச்செயலே.

      மேலும் திரும்ப திரும்ப கூறுகிறேன் நான் எந்த சாதியினருக்கும் வக்காலத்து வாங்க வில்லை. சாதிகளை வைத்து நம் மதத்தையும் கடவுள்களையும் தவறாக சித்தரிக்காதீர்கள் என்றே கூறுகிறேன். ஆனால் நான் சொல்வது கிரி உங்களுக்கே புரியவில்லை என்று நினைக்கிறேன்.
      ஏனெனில் நான் நம் மதத்தை பற்றி பேசினால் நீங்கள் கூறுபவனான நான் எந்த சாதியாக இருக்கும் என்று நினைத்து, நான் கூறுவதை அந்த கண்ணோட்டத்திலேயே எடுத்துக் கொள்கிறீர்கள்.

      மேலும் சாதி என்பது என்ன? எப்படி உருவாயிற்று என்பதை சுருக்கமாக கூற நினைக்கிறேன்.

      முதலில் சாதி என்பது மனிதர்களை தரத்திற்கு ஏற்றவாறு பிரிப்பதற்காக ஏற்றப்பட்டது அல்ல. தொழிலை பொறுத்தே சாதிகள் அமைந்தன. புரியும்படி கூறவேண்டும் என்றால், 400/500 வருடங்களுக்கு முன் இன்று உள்ளது போன்று engineering படிப்போ, அது சார்ந்த தொழிலோ கிடையாது.
      நம் முன்னோர்களின் பரம்பரை தொழிலே நமது தொழிலாகவும் இருந்தது. பரம்பரையாக தொழில் செய்பவர்கள் ஒரு இயக்கம் போன்று உருவாகியதே சாதி என்பது.

      அதுவே பின்னர் மனிதர்களின் கீழ்த்தரமான மன எண்ணங்களால் உயர் சாதி கீழ் சாதி என்ற பிரிவினைகளும் இன்னும் பிற தவறுகளும் ஏற்ப்பட்டனவே அன்றி இவைகளை ஹிந்து மதமோ, மத நூல்களோ, ஹிந்து கடவுள்களாலோ, ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.
      அப்படி இருக்க இது போன்ற நூல்களில் எவ்வாறு கடவுள்களை இழிவு படுத்தலாம்.

      இவர்களின் சாதி வெறியையும், வெறுப்பையும், தீர்த்துக் கொள்ள இது போன்ற உண்மைக்கு புறம்பான நூல்களை கண்ட மேனிக்கு எழுதி தீர்த்துக் கொள்கிறார்கள்.

      ஆகவே இது போன்ற மத கடவுள்களை (எந்த மதமாயினும்) இழிவு படுத்தும் நூல்களை ஆதரிக்காதீர்கள்.

      மேலும் ஹிந்து மதத்தை பற்றி முழுமையாக அறிய கிரி உங்களை திரு சோ ராமசாமி எழுதிய “ஹிந்து மஹா சமுத்திரம்” என்ற புத்தகத்தை படிக்கும்படி பரிந்துரைக்கிறேன்.

      ராமாயணத்தை பற்றி அறிய “நீதியரசர் திரு மு. மு இஸ்மாயில்” அவர்களின் புத்தகங்களையும் படிக்கும்படி பரிந்துரைக்கிறேன்.

      இது போன்று நான் கூறுவதால் என்னை “பா.ஜ.க, rss, அல்லது இன்னும் பிற இந்து இயக்கங்களை சேர்ந்தவன் என்று நிணைக்க வேண்டாம்.
      இது போன்ற இயக்கங்களில் அடிப்படை உறுப்பினராக கூட நான் இல்லை.

      இது போன்ற நூல்களில் ஹிந்து மத கடவுள்களை இழிவுபடுத்தி இருந்ததால், ஒரு ஹிந்து என்கிற முறையில் ஏற்ப்பட்ட வேதனையின் காரணமாக, தாங்களும் ஒரு ஹிந்து, கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்ற காரணத்தினாலும், தங்களின் தளத்தை 6 வருடங்களாக படித்து வருவதாலுமே இதை எழுதி உள்ளேன்.

      என் வயது முப்பதுக்கும் குறைவு என்பதால் தங்களை காட்டிலும் இளையவன் என்றே எண்ணுகிறேன். ஆகையால் தவறாக ஏதாவது கூறியிருந்தால் மன்னிக்கவும்.

      நன்றி

  5. @சோமேஸ்வரன்

    என்னது மூன்று மாதமா? ரொம்ம்ம்ம்ம்ம்ப மெதுவா படிப்பீங்களோ! நான் ஒரு புத்தகத்தை மூன்று நாளில் முடித்தேன்.

    @யாசின்

    எனக்கும் இணையத்தில் படிப்பது பிடிக்காது. புத்தகத்தில் படித்தால் தான் படித்த உணர்வே இருக்கும்.

    Kindle ல் படிக்க துவங்கலாமா என்ற எண்ணமும் உள்ளது. இப்படியே புத்தகங்கள் சேர்ந்து கொண்டே சென்றால், வீட்டில் வைக்க இடமே இல்லை. ஏற்கனவே அலமாரியில் ஒரு பகுதி முழுமையடைந்து விட்டது.

    யாரிடமாவது Kindle ல் படித்துப் பார்த்து நன்றாக உள்ளது என்றால், வாங்கலாம்னு இருக்கிறேன்.

  6. @பிரகாஷ்

    “உங்களின் அசுரன் நாவலை பற்றிய கட்டுரையை மீண்டும் படித்த பிறகு நினைத்தேன், நல்ல வேலையாக அந்த புத்தகத்தை நாம் படிக்க வில்லை என்று.”

    ஒரு புத்தகத்தை படிக்காமலே விமர்சனத்தை உத்தேசமாக கணித்து விமர்சனம் செய்வது தவறான செயல்.

    “காரணம் அதில் சாதிகளை திட்டி இருப்பதால், நான் படிக்க வேண்டாம் என்று நினைக்க வில்லை.”

    இதில் எந்த சாதியையும் திட்டவில்லை அப்படி திட்டியதாக நான் குறிப்பிடவும் இல்லை. சம்பவங்களாக மட்டுமே வருகிறதே தவிர தனிப்பட்ட முறையில் எந்த சாதியையும் குறிப்பிட்டு திட்டவில்லை.

    “சுத்தமாக எந்தவொரு உண்மையும், மனசாட்சியும் இல்லாமல் ராமாயணத்தில் வரும் ராமர் முதலியவர்களை கண்டமேனிக்கு திட்டுவதென்பது அதுவும் சாதி ரீதியாக எழுதுவது என்பது ஒரு வெறிச் செயல்.”

    இதில் யாரையும் கண்டமேனிக்கு திட்டவில்லை பிரகாஷ். அவர்களுடைய பார்வையில் புத்தகம் எழுதப்பட்டுள்ளது அவ்வளவே!

    ராமாயணம் என்பது நீங்கள் கூறுவது போல உண்மையாகவே இருந்தாலும் யாரும் அருகில் இருந்து பார்க்கவில்லை.

    சம்பவங்களை தங்களின் கற்பனை வளத்துக்கு ஏற்ப எழுதி இருக்கிறார்கள்.

    ராமனின் பார்வையில் ராமாயணம் எப்படி எழுதப்பட்டதோ அது போல ராவணனின் பார்வையில் அசுரன் எழுதப்பட்டு இருக்கிறது. அவ்வளவே!

    இதில் கொந்தளிக்க ஒன்றுமே இல்லை. விருமாண்டிப் படத்தில் ஒரு சம்பவத்தை இருவர் தங்கள் பார்வையில் கூறுவது போலத்தான். அதில் எது சரி எது தவறு என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.

    “ஹிந்துக்கள் தெய்வமாக வணங்குபவர்களை இது போன்று ஆதாரம் அற்று கீழ்த்தரமாக எழுதுவது. மற்றொன்று: எதையும் சிந்தித்து எழுத கூடிய நீங்களே (கிரி) அதை கண்மூடித்தனமாக நம்பி எழுதுயிருப்பதை பார்த்து.”

    பிரகாஷ் நீங்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறீர்கள் என்று கருதுகிறேன்.

    இந்நாவல் ராவணன் பார்வையில் எழுதப்பட்டுள்ளது, வேண்டும் என்றே எதையும் இங்கே அநாகரிகமாக ஆசிரியர் விமர்சிக்கவில்லை.

    உண்மையில் அநாகரிகம் என்பது என்ன தெரியுமா?

    கொஞ்ச நாள் முன்பு ஒருவர் கருத்துரிமை என்ற பெயரில் “ராமனை செருப்பால் அடிப்பேன்” என்று கூறினார் தெரியுமா.. அது தான் தவறான செயல்.

    அதை கருத்துரிமை என்று அதற்கு ஆதரவாக கொடி பிடித்தார்களே அது தான் தவறு.

    கருத்துரிமையை சரியாக பயன்படுத்தியது அசுரன் ஆசிரியர் ஆனால், அதை தவறாக பயன்படுத்தியது ராமனை செருப்பால் அடிப்பேன் என்று (உதாரணமாக) கூறியவர்

    இதையே ராமனை கூறாமல் மற்ற மதத்தினர் கடவுளாக வணங்கும் ஒருவரை, இது போல கூறி கருத்துரிமை என்று பேசினால் தற்போது கருத்துரிமைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் இது போல ஏற்றுக் கொள்வார்களா!

    மாட்டார்கள்.

    இது தான் கீழ்த்தரமாக நடந்து கொள்வது.

    “நீங்கள் அசுரன் நாவலை புகழ்ந்து எழுதி, தி. க வினரை விட நாசூக்காக எழுதியுள்ளார் என்று போற்றுகிறீர்கள். ஒரு சாதியை வைத்து எழுதுவதே முதலில் நாசூக்கற்றது அது எந்த சாதியாயினும். மேலும் ஒரு மதத்தினர் தெய்வமாக வணங்குபவர்களை இது போன்று கீழ்த்தரமாக எழுதுவது என்பது சுத்தமாக நாசூக்கற்றது.”

    திரும்ப ஒருமுறை கூறுகிறேன் புத்தகம் படிக்காமலே விமர்சிப்பது தவறான செயல்.

    ஆனால், நீங்கள் முன் முடிவுக்கு வந்து விட்டதால், இனி நாவலைப் படித்தாலும் பயனில்லை.

    தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை விளக்கும் நாவலாக படித்தால், இது ஒரு அற்புதமான நாவல். ராமனை இழிவுபடுத்துவதாகக் கருதிப் படித்தால், படிப்பதே வீண்.

    எப்போதுமே ஒரு பிரச்சனையின் இரண்டு பக்கங்களையும் தெரிந்து கொள்வதே நல்லது. ஒரு பக்கம் மட்டுமே தெரிந்து கொண்டு அதுவே சரி என்று கூறுவது, நம்மை எந்த விதத்திலும் மேம்படுத்தாது.

    “அசுரன் நாவலில் எழுதியிருப்பது வெறும் வெறிச்செயலே.”

    🙂 உண்மையிலே வியப்பாக இருக்கிறது. இது திரைப்படத்தைப் பார்க்காமலே விமர்சிப்பது போல உள்ளது. படிக்காமலே எப்படி உங்களால் இந்த அளவுக்கு விமர்சிக்க முடிகிறது என்று எனக்கு வியப்பாக உள்ளது.

    “நான் சொல்வது கிரி உங்களுக்கே புரியவில்லை என்று நினைக்கிறேன்.”

    பிரகாஷ் இதையே நான் உங்களிடம் கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா!

    நீங்கள் என்னை உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளும்படி எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நடந்தால், நான் புரிந்து கொண்டதாக நினைப்பீர்கள்.

    இது தான் உண்மை.

    ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டக் கருத்து இருக்கும். ஒவ்வொருவருக்கும் அவரவர் கூறுவது தான் சரி என்று இருக்கும். விவாதங்கள், பல புத்தகங்கள் படிக்கும் போது நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் நம்மை எது சரி எது தவறு என்று உணர்த்துகிறது.

    எனக்கு உங்களை போன்ற எண்ணங்கள் இருந்தது அது இப்புத்தகத்தை எந்த முன் முடிவும் இல்லாமல் படித்ததால், மாற்றங்கள் தோன்றியது. சில கருத்துகள் மாற்றம் பெற்றன.

    இதில் “உங்களுக்கே புரியவில்லை” என்று கூறியிருக்கிறீர்கள். நான் கொஞ்சம் வாழ்க்கையில் அடி வாங்கியதால், சில கட்டுரைகளில் என்னுடைய அனுபவங்களை பகிர்ந்து இருப்பேன் ஆனால், அனுபவங்கள் என்பது முடிவில்லாதது.

    நானும் தவறுகள் செய்பவன் தான்.. ஆனால், அனுபவங்களில் இருந்து கற்று வருகிறேன் அதனால், “உங்களுக்கே” என்று கூறும் அளவுக்கு நான் ஒன்றுமில்லை.

    “இவர்களின் சாதி வெறியையும், வெறுப்பையும், தீர்த்துக் கொள்ள இது போன்ற உண்மைக்கு புறம்பான நூல்களை கண்ட மேனிக்கு எழுதி தீர்த்துக் கொள்கிறார்கள்.”

    இதில் எழுதியவர் ஒரு பிராமினே! இவர் வேண்டும் என்றே எழுதியது போன்று எனக்குத் தோன்றவில்லை.

    அனுபவித்து ஒவ்வொரு பகுதியாக எழுதியிருக்கிறார்.

    “ஹிந்து மதத்தை பற்றி முழுமையாக அறிய கிரி உங்களை திரு சோ ராமசாமி எழுதிய “ஹிந்து மஹா சமுத்திரம்” என்ற புத்தகத்தை படிக்கும்படி பரிந்துரைக்கிறேன்.”

    இதை படிக்க நிச்சயம் முயற்சிக்கிறேன் ஆனால், ராமாயணம் படிக்கும் எண்ணமில்லை.

    “இது போன்று நான் கூறுவதால் என்னை “பா.ஜ.க, rss, அல்லது இன்னும் பிற இந்து இயக்கங்களை சேர்ந்தவன் என்று நிணைக்க வேண்டாம். இது போன்ற இயக்கங்களில் அடிப்படை உறுப்பினராக கூட நான் இல்லை.”

    நானும் எந்த இயக்கத்திலும் இல்லை 🙂 .

    “இது போன்ற நூல்களில் ஹிந்து மத கடவுள்களை இழிவுபடுத்தி இருந்ததால், ஒரு ஹிந்து என்கிற முறையில் ஏற்ப்பட்ட வேதனையின் காரணமாக, தாங்களும் ஒரு ஹிந்து, கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்ற காரணத்தினாலும், தங்களின் தளத்தை 6 வருடங்களாக படித்து வருவதாலுமே இதை எழுதி உள்ளேன்.”

    பிரகாஷ் இந்து மதத்தை இழிவுபடுத்தி இருந்தால், நான் நிச்சயம் இதைப் பற்றி எழுதியே இருக்க மாட்டேன்.

    நான் இந்து மதம் குறித்து எழுதிய கட்டுரைகளை நீங்கள் படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நான் இந்து மதத்தை மதிக்கிறேன் ரசிக்கிறேன் ஆனால், கண்மூடித்தனமாக அல்ல. அவ்வளவே!

    பின்வரும் கட்டுரைகள் உதாரணங்கள்.

    https://www.giriblog.com/arthamulla-indu-matham-book-review/

    https://www.giriblog.com/karma/

    “என் வயது முப்பதுக்கும் குறைவு என்பதால் தங்களை காட்டிலும் இளையவன் என்றே எண்ணுகிறேன். ஆகையால் தவறாக ஏதாவது கூறியிருந்தால் மன்னிக்கவும்.”

    நாகரிகமாக விவாதம் செய்ய விமர்சிக்க வயது தடையல்ல. அனுபவங்களே முக்கியம்.

    வயது முதிர்ந்தவர்கள் கூட சிறியவர்களைப் போல பொறுப்பற்று நடந்து கொள்கிறார்கள். எனவே வயதுக்கும் அனுபவத்துக்கும் சம்பந்தமில்லை.

    நீங்கள் எது வேண்டும் என்றாலும் நாகரிகமாக உங்கள் கருத்தை முன் வைக்கலாம். நிச்சயம் பதில் அளிப்பேன் காரணம், நான் மனசாட்சி படி தான் எழுதுகிறேன் எனவே எதற்கும் பயப்பட மாட்டேன்.

    எதைக் கேட்டாலும் என்னால் பதில் கூற முடியும். தவறு என்றால் ஒப்புக்கொள்ள முடியும்.

    எனவே எனக்கு எந்தக் கவலையுமில்லை.

    நீண்ட வருடங்களுக்கு பிறகு இது போல ஒரு விவாத வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியே!

    நன்றி

  7. சூப்பர் தல படிச்சுட்டு சொல்லுறேன்
    பகிர்வுக்கு நன்றி

  8. அசுரன் நாவலை பற்றி தாங்கள் முதலில் குறிப்பிடுவதே

    “இப்புத்தகம் இராவணனை உயர்த்தி பிராமணர்கள், ராம லக்ஷ்மண அனுமன், இந்து
    மத வர்ணாசிரமத்தை விமர்சிக்கும் புத்தகம்.”
    இதற்கு மேல் தனியாக வேறு திட்டவோ அல்லது
    விமர்சனம் செய்யவோ வேண்டுமா என்ன?

    “இதில் எந்த சாதியையும் திட்டவில்லை அப்படி திட்டியதாக நான்
    குறிப்பிடவும் இல்லை. சம்பவங்களாக மட்டுமே வருகிறதே தவிர தனிப்பட்ட
    முறையில் எந்த சாதியையும் குறிப்பிட்டு திட்டவில்லை” மேலும்
    “ஆனால், அனுமன் தீ வைத்த பிறகு அப்பாவி மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள்,
    அதனால் ஏற்பட்ட சேதங்கள் போன்றவற்றைப் படிக்கும் போது அனுமன் மீது நமக்கே
    ஒரு வெறுப்பு வந்து விடும்.”

    “போர் விதிமுறைகளைப் பின்பற்றாத இவன் எல்லாம் ஒரு ஆளு?! என்கிற அளவில்
    தான் இராவணன் நினைத்துக் கொண்டு இருப்பான். இதை ராம பக்தர்கள் படித்தால்
    இரத்தக் கொதிப்பு வந்தாலும் வந்து விடும் ”
    இது போன்றைவைகளை தான் நான் கூறுகிறேன் கடவுள்களை இழுக்காதீர்கள் என்று.
    ராமனும் அனுமனும் நம் கடவுள் ஆகையால்…

    “ராமனின் பார்வையில் ராமாயணம் எப்படி எழுதப்பட்டதோ அது போல ராவணனின்
    பார்வையில் அசுரன் எழுதப்பட்டு இருக்கிறது. அவ்வளவே!”

    இது போன்று எழுதினால் நாம் அனைத்தையும்
    நியாயப்படுத்தலாம். உலகில் தவறே யாரும் செய்யவில்லை என்றாகிவிடும்.
    உதாரணத்திற்கு delhi நிர்பயா சம்பவம், நீங்கள் பலமாக எதிர்த்து, ஆதரிக்கும்
    ஜல்லிக்கட்டு போன்ற அனைத்தையும் இவர்கள் பக்கத்திலிருந்து எப்படி இவை
    நியாயமானது என்று எழுதினால், உலகில் எவருமே குற்றவாளிகளே அல்ல. அனைத்தும்
    அவரவர் பார்வையில் சரியே.

    ராமாயணத்தை உண்மை என்று நம்பமாட்டீர்கள் அதில் சொல்லபட்ட சம்பவங்களை உண்மை
    என்று நம்பமாட்டீர்கள்,
    மேலும் ராமாயணம் சொல்லாமல் நமக்கு ராமனையும் தெரியாது, ராவணனையும் தெரியாது.
    ஆனால் ராமாயணம் புனயப்பட்டது. அருகில் இருந்து பார்த்தவர்கள் யாருமில்லை
    ஆகையால் நம்ப முடியாது. ஆனால் ராவணன் மட்டும் உண்மை. அதை மட்டும்
    ஏற்றுக்கொள்வீர்கள்.

    நான் அசுரன் நாவலை படிக்காமல் தான் விமர்சித்தேன், ஏனெனில் அதில் கூறியவற்றை
    விமர்சனமாக நீங்களே விரிவாக எழுதி விட்டீர்கள். நீங்கள் எழுதிய விமர்சனமே
    விரிவாக இருந்ததால் புத்தகம் எதை நோக்கி செல்கிறது என்று என்னால் புரிந்து
    கொள்ள முடிந்தது. மேலும் ஆசிரியரின் நோக்கமும் தெரிந்தது. ஆகவே என்னுடைய
    விமர்சனம் நீங்கள் எழுதிய அசுரன் விமர்சன கட்டுரைக்கே.

    ஆனால் நீங்கள் ராமாயணத்தை முழுமையாக படிக்கவும் இல்லை படிக்கும் எண்ணமும்
    இல்லை. ஆனால் ராமாயணத்தில் வரும் முக்கிய கதாபாத்திரமான ராவணனை பற்றி அவனின்
    பார்வையில் என்று இஷ்டத்திற்கு எழுதலாம், அல்லது எழுதியதை (வேறொறு நாவலில்
    கூறியதை) ஆதரிக்கலாம்.

    ” ராமாயணம் என்பது நீங்கள் கூறுவது போல உண்மையாகவே இருந்தாலும் யாரும்
    அருகில் இருந்து பார்க்கவில்லை.”

    இப்பொழுது நீங்கள் தான் ஒரு புத்தகத்தை (ராமாயணத்தை) படிக்காமலேயே
    அதில் வரும் முக்கிய கதாபாத்திரமான ராவணனின் பார்வையில் என்று மொத்தமாக
    ராமனையும், ராமாயணத்தையும் ராவணனையும் சேர்த்து விமர்சிக்கிறீர்கள்.

    ஏனெனில் நீங்கள் கூறுவது போல் (“சம்பவங்களை தங்களின் கற்பனை வளத்துக்கு
    ஏற்ப எழுதி இருக்கிறார்கள்.”)
    என்பது ராமாயணத்தை படிக்காமலேயே
    விமர்சிக்கும் செயல். ராமாயணம் ராமன் இருக்கும் பொழுதெ வால்மீகி என்பவரால்
    எழுதப்பட்டது. பொய்யாக புனயப்பட்டது அல்ல. ராமன் இருக்கும் பொழுதெ அவரை பற்றி
    அறிந்து, அதை காவியமாக எழுத வேண்டும் என்று விரும்பி எழுதியது.
    ராமர் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்தவர் தான் வால்மீகி. மேலும் சீதை காட்டில்
    இருக்கும் பொழுது இவருடைய ஆஸ்ரமத்திலெயே வாழ்ந்தாள்.

    சீதா-ராமரின் புதல்வர்களுக்கு இவரே தான் இயற்றிய ராமாயணத்தை கற்பித்து
    அதன்மூலம் மீண்டும் சீதையையும் அவரின் புதல்வர்களையும் ராமனிடம் சேர்த்தவரும்
    இவர் தான். உண்மை இப்படி இருக்க ராமனை அருகில் இருந்து யாரும் பார்க்கவில்லை,
    ஆகையால் அனைத்தும் கற்பனையே என்றால் எப்படி ஒப்புக் கொள்வது.
    இவைகளை நிரூபிக்க வால்மீகியே உயிருடன் இருந்தா ஒவ்வொருவருக்கும் நிரூபிக்க
    முடியும்.

    வால்மீகி எழுதிய ராமாயணம் தான் கற்பனை கலக்காமல் ராமர் இருக்கும் பொழுதெ
    எழுதப்பட்டது. பின்னர் வந்த பல கவிஞர்கள் அவரவர்களின் கற்பனைகளையும் கலந்து பல
    மொழிகளிலும் எழுதினார்கள். (கம்ப ராமாயணம் போன்றவை… )
    இது தான் உண்மை. இவைகளை தான் என்னை போன்ற பல ஹிந்துக்கள் திடமாக நம்புகிறோம்.

    “பிரகாஷ் நீங்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறீர்கள் என்று கருதுகிறேன்”
    இருக்கலாம். காரணம் ஒரு ஹிந்து மத நம்பிக்கை உள்ள ஒருவரே ஹிந்து மத
    கடவுள்களின் கதைகளை புனயப்பட்டது என்று கூறினால் பல ஹிந்துக்களின் நம்பிக்கையை
    குறை கூறுவது போல் உள்ளதால்.

    “நீங்கள் என்னை உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளும்படி
    எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நடந்தால், நான் புரிந்து கொண்டதாக
    நினைப்பீர்கள்.”

    ஆம்!.. ஆனால் ராமாயணம் புனயப்பட்டது என்று நீங்கள் கூறுவதை
    மறுத்து, அது புனயப்பட்டது அல்ல. உண்மை என்பதையே நான் உங்களை ஏற்றுக் கொள்ள
    சொல்கிறேன். என் சொந்த கருத்தை அல்ல. கடவுள் நம்பிக்கை உள்ளவருக்கு ஏற்றுக்
    கொள்ள என்ன தயக்கம் என்றே நான் கேட்கிறேன். உண்மையா என சந்தேகம் இருப்பின்
    விரிவாக விவாதிப்போம்.
    ஆனால் ராமாயணத்தை பற்றி ஒன்றும் அறியாமலேயே அது பொய், புனயப்பட்டது என்று
    கூறாதீர்கள் என்றே கூறுகிறேன்.

    “பிரகாஷ் இதையே நான் உங்களிடம் கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா!”
    கண்டிப்பாக. நீங்கள் கூறுவது உண்மையாய் இருப்பின் ஏற்றுக்
    கொள்வேன்.

    “இதில் எழுதியவர் ஒரு பிராமினே! இவர் வேண்டும் என்றே எழுதியது போன்று
    எனக்குத் தோன்றவில்லை.”

    பிராமினாய் இருந்து எழுதி இருப்பதாலேயே அவர் எழுதியுள்ள அனைத்தும்
    உண்மை என்று ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் ஹிந்து மதத்தில் இருந்து கொண்டே
    கடவுள்களையும் வணங்கி கொண்டே கூட பலர் கடவுளே இல்லை என்று கூறுவதையும்
    பார்க்கிறோம்.

    ஆசிரியரின் அடுத்த புத்தகம் துர்யோதனன். இதிலிருந்தே ஆசிரியரின் எண்ணம்
    புரிகிறது. மகாபாரதத்தில் கூற எத்தனை நல் விஷயங்கள் இருக்க துர்யோதனன்
    பார்வையில் என்று க்ருஷணர் முதற்கொண்டு அனைவரையும் விமர்சிப்பார் என்றே
    எண்ணுகிறேன்.

    கடைசியாக ஒன்றை புரிந்து கொண்டேன். ஆசிரியருக்கோ, உங்கள்ளுக்கோ ஹிந்து மத
    கடவுள்களை இழிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருக்கலாம்.
    ஆனால் பிராமணர்களை பற்றி ஏதாவது கூற வேண்டும் என்று நினைக்கிறீர்கள். தாராளமாக
    கூறிக் கொள்ளுங்கள். ஆனால் கடவுள்களை வைத்து அவைகளை கூற வேண்டாம். தனியாக
    அவர்களை பற்றி எத்தனை புத்தகம் வேண்டும் என்றாலும் எழுதுங்கள் / ஆதரியுங்கள்.
    மீண்டும் ஒருமுறை கூறுகிறேன்… ஏனெனில் ராமனும் அனுமனும் நம் கடவுள் ஆகையால்…

    இவ்வாறு நான் ராமாயணம் போன்றவைகள் புனயப்பட்டது அல்ல என்று ஆணித்தரமாக
    கூறுவதற்கு காரணம், நான் பல புராணங்களையும், தமிழ் இலக்கியங்களை பற்றியும்
    சிறு தேடல் (ஆராய்ச்சி) புரிந்து வருவதாலேயே கூறுகிறேன்.

    ராமாயணம், மகாபாரதம் போன்றவைகளை பற்றி அருமையான விளக்கம் கொடுத்து இருக்கிறார்
    மறைந்த துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்கள்.
    சுலபமாக புரிவதற்கு கண்டிப்பாக பார்க்கவும்…

    ஒரு மாதம் முன்பே இதை எழுதி பதிவிட மறந்து விட்டேன். அதனால் பதில் தாமதமாகி
    விட்டது. மேலும் உங்களின் பதிலையும் எதிர்பார்க்கிறேன்.

  9. பிரகாஷ் என்னுடைய நிலையை ஏற்கனவே விளக்கமாக கூறி விட்டேன்.

    என்னுடைய கருத்தில் மாற்றமில்லை. உங்களின் கற்பனையான புரிதல் ஒவ்வொன்றையும் விளக்குவது என்பது சலிப்பாக உள்ளது.

    உங்களுக்கு உங்கள் கருத்தில் எவ்வளவு நியாயம் உள்ளது என்று கருதுகிறீர்களா அதே அளவு எனக்கும் உள்ளது.

    சில நேரங்களில் அனைத்தையும் அனைவருக்கும் ஏற்புடையதாக விளக்குவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. இது எனக்கும் பொருந்தும் உங்களுக்கும் பொருந்தும்.

    இதுகுறித்த என்னுடைய விவாதத்தை இதோடு முடித்துக் கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here