கூகுளுக்கும் சமூகத்தளங்களுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. அடிபட்டும் திருந்தாத கூகுள், சமூகத்தளங்களில் செய்யும் கோமாளித்தனங்களை கூகுள் ரசிகனாகக் காண்பதற்கு வருத்தமாக இருக்கிறது. Image Credit
அடிபட்டும் திருந்தாத கூகுள்
ஆர்குட்
கூகுள் ஒரு காலத்தில் “ஆர்குட்” சமூகத்தளத்தில் கொடிகட்டிப் பறந்தது. இதைப் பயன்படுத்தியவர்களுக்கு இதன் கொண்டாட்டமான காலங்கள் என்றுமே மறக்காது.
தற்போது சமூகத்தளங்களில் போடும் சண்டைகளுக்கு, போலி கணக்குகளுக்கு முன்னோடி ஆர்குட் தான்.
எப்போது ஃபேஸ்புக் வந்ததோ அப்போது ஆரம்பித்தது கூகுளுக்குத் தலைவலி. அப்போது விழுந்த அடிக்குப் பிறகு இன்று வரை எழுந்திருக்கவில்லை.
Google Buzz
மிகவும் பின் தங்கி விட்டோம் என்று கூகுள் மிகத் தாமதமாக உணர்ந்து, பின் மீண்டும் ஃபேஸ்புக்கை குறைத்து மதிப்பிட்டு Google Buzz என்ற சமூகத்தளத்தை ஜிமெயிலுடன் இணைத்து வெளியிட்டது.
இதை வலைப்பதிவர்கள் தவிர வேறு ஒருவரும் மதிக்கவில்லை காரணம், இது தனித்தளமாக இல்லாமல் ஜிமெயிலுடன் இணைத்து வந்ததால்.
அதோடு ஜிமெயில் பயன்படுத்தாதவர்கள் மற்ற மின்னஞ்சலை Google Buzz க்காகப் பயன்படுத்த விரும்பவில்லை.
எனவே, படு தோல்வி அடைந்தது.
Wave
தான் என்ன வெளியிட்டாலும் மக்கள் பயன்படுத்துவார்கள் என்று கூகுள் நினைத்ததோ என்னவோ!
இதன் பிறகு Wave என்ற வசதி வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் ஆனது.
இந்த இடைப்பட்ட காலங்களில் ஃபேஸ்புக் தன்னைச் சிறப்பாக நிலை நிறுத்திக்கொண்டது.
ட்விட்டரும் களத்தில் குதித்துக் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்து விட்டது.
கூகுள்+
இதன் பிறகு கூகுள் அடுத்த ஆயுதமாகக் கூகுள்+ கொண்டு வந்தது. இதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கூகுள்+ “facebook killer” என்று கூறப்பட்டது.
இதனால் ஃபேஸ்புக் பயந்து பல்வேறு புது வசதிகளைக் கொண்டு வந்தது.
கூகுள்+ கிட்டத்தட்ட ஃபேஸ்புக்கை பிரதி எடுத்து வடிவமைக்கப்பட்டது போல உருவாக்கப்பட்டு எந்தத் தனிச்சிறப்பும் இல்லாமல் வெளியானது.
குறிப்பிடத்தக்க வசதியாக Public, Group, Particular Person என்று பிரித்துப் பகிர முடிந்தது.
இதை ஃபேஸ்புக் பிரதி எடுத்துத் தனது தளத்தில் சேர்த்துக் கொண்டது.
துவக்கத்தில் சில நாட்கள் பரபரப்பாகப் பேசப்பட்டாலும், இதைப் பயன்படுத்திய கொஞ்சப் பயனாளர்களின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து விட்டது.
தமிழில் வலைப்பதிவர்கள் மட்டுமே தீவிரமாகப் பயன்படுத்தினார்கள்.
அனைவரையும் பயன்படுத்த வைக்க வேண்டும் என்று YouTube comments, Google Photos போன்றவற்றைக் கூகுள்+ ல் இணைத்து அனைவரிடமும் வாங்கிக் கட்டிக்கொண்டது. பின்னர் தவறை உணர்ந்து பிரித்தது.
கூடா நட்பு கேடா முடியும் என்பது போல தனது பிற சேவைகளையும் கூகுள்+ ல் இணைத்ததாலும், தாமதமாக இதை உணர்ந்ததாலும் தற்போது கூகுள்+ தோல்வியடைந்த சேவையாகி விட்டது.
விரைவில் இதற்கும் மூடு விழா நடத்தப்படலாம்.
Google Photo’s
கூகுள்+ ல் இருந்து Google Photos தனியாகப் பிரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட பிறகு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.
சமூகத்தளங்களில் கூகுளுக்குக் கிடைத்த ஒரே வெற்றி Google Photo’s தான்.
தற்போது சிறப்பாக மேம்படுத்தி வருகிறது. இது குறித்துத் தனியாகவே எழுதலாம், அந்த அளவுக்கு இதில் சிறப்புகள் உள்ளன.
WhatsApp / Instagram
கூகுள் செய்த மிகப்பெரிய தவறு, வாய்ப்பிருந்தும் WhatsApp / Instagram சமூகத்தளங்களைக் கை விட்டு விட்டது.
தற்போது இவையே சமூகத்தளங்களில் சக்கைப் போடு போட்டு வருகின்றன.
WhatsApp / Instagram வாங்காமல் கூகுள் சிறந்த வாய்ப்பைத் தவறவிட்டது.
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் இவற்றைக் கையகப்படுத்தி இன்று மிகப்பெரிய வெற்றியாளர்களுள் ஒருவராகி விட்டார்.
இவை மட்டும் கூகுளிடம் இருந்தால், கூகுள் சமூகத்தளங்களில் இருக்கும் நிலையே வேறு!
கூகுளின் மிகச் சிறப்பான கையகப்படுத்தல் மற்றும் அபரிமிதமான வெற்றி என்றால் அவை இன்று வரை Android மற்றும் YouTube தான்.
Google Duo / Allo
WhatsApp க்கும் குறுந்தகவல் (SMS) சேவைக்கும் இருந்த வரவேற்பைக் கண்டு ஒழுங்காக இருந்த Google chat யை நிறுத்தி Hangout என்று மாற்றிச் சொதப்பியது.
இருந்த கொஞ்ச நஞ்ச பயனாளர்களும் WhatsApp, Hike என்று நகர்ந்து விட்டனர்.
தற்போது நிறுவனங்கள் மட்டுமே Hangout வசதியைப் பயன்படுத்துகின்றன. மற்றவர்கள் வேண்டா வெறுப்பாக Hangout பயன்படுத்தி வருகின்றனர்.
ஒழுங்காக WhatsApp யை வாங்கி இருந்தால், இந்நேரம் கலக்கி கொண்டு இருந்து இருக்கலாம்.
தற்போது வெட்டியாகச் செலவு செய்து புதிய வசதியான Video calling என்ற Duo செயலியையும் Allo என்ற குறுந்தகவல் சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
அடிபட்டும் திருந்தாத கூகுள்
கூகுள் என்றாலே எளிமை தான், புதிதாகக் கூற வேண்டியதில்லை. இதைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் இதனுடைய எளிமை மற்றும் சிறப்புப் புரியும்.
அப்படிப்பட்ட கூகுள், தனது சேவைகளை ஒன்றிணைக்காமல் தனித்தனியாகச் செயலியை (App) வெளியிட்டுள்ளது.
இப்பெல்லாம் அனைத்துமே ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்று பயனாளர்கள் நினைக்கிறார்கள்.
இந்நிலையில் Video calling, குறுந்தகவல் சேவைகளை இணைத்து வெளியிடாமல் தனித் தனிச் செயலியாக (Duo, Allo) வெளியிட்டுச் சொதப்பி வைத்து இருக்கிறது.
ஏற்கனவே, இதற்கெல்லாம் செயலிகள் பிரபலமாகவும் செயல்பாட்டிலும் உள்ள நிலையில் இதை யார் விரும்புவர்?!
விரும்ப வேண்டும் என்றால், புதிய வசதிகள் வேண்டும், அனைத்தும் ஒரே செயலியாக ஒருங்கிணைக்கப்பட்டு இருக்க வேண்டும் ஆனால், அப்படி நடக்கவில்லை.
தரவிறக்கம் (Download) செய்யப்பட்ட எண்ணிக்கை மட்டுமே அதிகம் மற்றபடி பயன்படுத்துபவர்கள் மிகக்குறைவு. உங்கள் நண்பர்கள் வட்டத்திலேயே எவ்வளவு பேர் இதைப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்?
பலருக்கு இப்படி ஒன்று வந்து இருப்பதே தெரியாது என்பதே உண்மை.
அதோடு இதில் Voice calling வசதியைக் கொண்டு வந்து இருந்தால், நிச்சயம் பலரிடையே விரைவாகச் சென்று இருக்கும்.
ஆனால், இதைப் பின்னர் செய்வதாகத் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகளில் வந்தது. இது மிகப்பெரிய தவறு.
Google Talk & Google Chat
ஏற்கனவே இருந்த Google Talk மற்றும் Google Chat யை மேம்படுத்திக் கொண்டு வந்து இருந்தால், பழைய Google Chat பயனாளர்கள் பழைய பாசத்திலும் ஏற்கனவே பயன்படுத்திய விருப்பத்திலும் இதை முயற்சித்து இருப்பார்கள்.
கூகுளுக்கு அறிவுரை கூற தகுதியில்லை ஆனால், தொடர்ச்சியாகத் தவறு செய்து வருவதால், என்ன தான் பிரச்சனை!! என்ற ஆதங்கத்தில் இதைக் கூறினேன்.
செயலி ஒருங்கிணைப்பு
விரைவில் Duo & Allo செயலிகளை இணைக்கப்போவதாகச் செய்திகளில் வந்தது.
இது உண்மையில்லை என்றால், யாருமே இல்லாத கடையில் கூகுள் டீ ஆற்றிக்கொண்டு இருக்க வேண்டியது தான்.
ஒருமுறை தவறு செய்தால், ஏற்றுக்கொள்ளளலாம் ஆனால், கூகுள் சமூகத்தளங்களில் இது வரை நான்கு முறை தவறு செய்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எளிமைகளின் சிகரமான கூகுள், மோசமான திட்டமிடுதலால் இப்படித் தொடர்ச்சியாகச் சமூகத்தளங்களில் அடி வாங்கிக்கொண்டு இருப்பதை ஒரு கூகுள் ரசிகனாகக் காண மிக மிக வருத்தமாக இருக்கிறது 🙁 .
ட்விட்டர் கையகப்படுத்தல்
விரைவில் ட்விட்டர் தனது தளத்தை விற்கப்போவதாகவும் அதைக் கூகுள் வாங்கப்போவதாகவும் பேச்சு அடிபடுகிறது.
ட்விட்டர் தற்போது ஃபேஸ்புக்குடன் போட்டி போட முடியாததாலே விற்க முயற்சிக்கிறது.
எனவே, கூகுளுக்கு இது எந்த அளவு லாபமானதாக இருக்கும் என்று புரியவில்லை. தன் தேடல் சேவை மூலம் இதை மேம்படுத்தி வெற்றிகரமாக்கலாம்.
கூகுள் ட்விட்டரை வாங்குவது ஒன்றுமே இல்லாததுக்கு ஆறுதல்!
கூகுள் Allo சேவையிலேயே குறுந்தகவல், Voice calling, Video calling போன்ற வசதிகளை ஒருங்கிணைக்கவில்லை என்றால், இதனுடைய முந்தைய சேவைகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலையே இவற்றுக்கும் ஏற்படும்.
இன்று கூகுளுக்குப் பிறந்த நாள் 🙂 .
தொடர்புடைய கட்டுரைகள்
கூகுளுக்குத் தலைவலியாகும் ஃபேஸ்புக்
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
Hangout இருக்கும்போதே messenger என்ற எஸ்எம்எஸ் ஆப் வெளியிட்டுள்ளது.
மிகுந்த ஆர்வத்துடன் கூகுள் ஆல்லோ இன்ஸ்டால் செய்தேன். தற்போது அதில் கூகுள் அசிஸ்டன்ட்டிடம் மட்டும் சாட் செய்து வருகிறேன். 🙂
நல்ல விவரமான பதிவு. என்னைக் கேட்டால் கூகுளை + ஐ மூடி விடுவது நல்லது.
ஐயா கூகுள்+ அருமையான ஆப்ஸ் பேஸ் புக் போன்று ,சுய தம்பட்டம் கிடையாதெ அறிவார்ந்த செய்திகள் நிரம்பியது…
இந்த பதிவில் குறிப்பிட்ட பல விஷியங்கள் எனக்கு புதியது. WhatsApp நிறுவனத்தை facebook மிக அதிக அளவிலான தொகையை கொடுத்து கையகப்படுத்தியது. உலகில் அதிக தொகையை கொடுத்து ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் கையகப்படுத்தியது, இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன்.. சில முயற்சிகள் சறுக்கலாம், சில முயற்சிகள் வெற்றி அடையலாம்.. அது அவர்களின் திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள் பொறுத்து அமையும்.
ஆறு / ஏழு ஆண்டுகளுக்கு முன் டாடா நிறுவனம், landrover / jaguar uk நிறுவனத்தை பெரும் தொகையை கொடுத்து கைப்பற்றியது. நான் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் இருப்பதால் நிறைய நண்பர்கள் டாட்டாவுக்கு இது வேண்டாத வேலை என்று கூறினார்கள். ஆனால் இன்று நிலைமை தலைகீழ்.. landrover / jaguar நிறுவனம் டாட்டாவின் தலைமையில் மிக சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
1/2 ஆண்டுகள் திட்டமிட்டு எடுக்கின்ற படத்தை, படம் சரியில்லாத போது பார்த்துவிட்டு ஒரு நொடியில் மொக்கை படம் என்று கூறுகிறோம். ஓவ்வொரு புதிய தயாரிப்புக்கு பின், அதை சந்தையிட்டு வெற்றி காண்பது என்பது எந்த துறையாக இருந்தாலும் மிக பெரிய திறனே!!!! பல நேரங்களில் பிரமிப்பாக இருக்கும் பெரிய நிறுவனத்தில் உள்ள உயர் அதிகாரிகளின் திறனை (நிலையை) நினைத்து. பல புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி கிரி.
I’m only using hike forget whatsapp
அனைவரின் வருகைக்கும் நன்றி
@பசித்
“மிகுந்த ஆர்வத்துடன் கூகுள் ஆல்லோ இன்ஸ்டால் செய்தேன். தற்போது அதில் கூகுள் அசிஸ்டன்ட்டிடம் மட்டும் சாட் செய்து வருகிறேன்”
ஹா ஹா பலர் இது தான் செய்து கொண்டு இருக்கிறார்கள் 🙂 🙂
@யாசின்
தலைமை சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக நடக்கும் 🙂