மெலூஹாவின் அமரர்கள் நாவலின் இரண்டாம் பாகம் தான் நாகர்களின் இரகசியம்.
முதல் பாகத்தைப் படித்தவர்கள், மற்ற இரு பாகங்களை தவிர்க்க முடியாது 🙂 .
சூர்யவம்சி சந்திரவம்சி நாகர்கள்
சூர்யவம்சி, சந்திரவம்சிக்குப் பிறகு தற்போது நாகர்களைப் பற்றிய கதை / விளக்கம்.
இந்த நாவலில் தொடக்கத்தில் இருந்து ஒன்று தொடர்ந்து வருகிறது. துவக்கத்தில் சூர்யவம்சிகள் மீது சந்தேகம் வரும் பின் அவர்கள் நல்லவர்கள் என்று தெரிய வரும்.
பின் சந்திரவம்சி மோசமானவர்களாகக் காட்டப்படும் பின் அவர்களும் அப்படிப்பட்டவர்களாக இல்லை என்பதாகக் கதை செல்லும்.
இவர்கள் இருவரைப் பற்றிக் எளிமையாகக் கூறுவது என்றால்…
சிங்கப்பூர் எப்படியோ அப்படி சூர்யவம்சிகள். அதாவது எதிலும் ஒரு ஒழுக்கம், சிறப்பான கட்டமைப்பு, திட்டமிடல் ஆனால், கட்டுப்பாடான வாழ்க்கை.
இந்தியா எப்படியோ சந்திரவம்சி அது போல. தங்கள் விருப்பம் போல வாழ்பவர்கள், விதிமுறைகளை மதிக்காதவர்கள், சுதந்திரமானவர்கள். சிரமங்கள் இருந்தாலும், அதையும் ரசிப்பவர்கள்.
இதில் நாகர்கள் என்பவர்கள் கொடூரமானவர்களாக, எதையும் செய்யக்கூடியவர்களாகக் காட்டப்பட்டு இருக்கிறார்கள்.
இரண்டாம் பாகத்தில் இவர்களுக்கும் ஒரு பக்கம் உள்ளது, நியாயம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
தத்துவம் மிகுந்த ஆரம்பம்
இப்புத்தகத்தின் துவக்கத்தில் சில பகுதிகள் தத்துவமாக வருகிறது. படிக்க ரொம்பச் சலிப்பாக இருந்தது.
இதைப் படிக்கும் போது நான் நினைத்தது, “முதல் பாகத்தின் வெற்றி இவருக்குத் தலைக்கனத்தைக் கொடுத்து இவரை மாற்றுகிறதோ!” என்று நினைத்தேன்.
ஏனென்றால், முதல் பாகம் அப்படியொரு விறுவிறுப்பாக எளிமையாக இருக்கும் அதனால், அதே எதிர்பார்ப்போடு படித்தேன்.
துவக்கத்தில் சவசவன்னு சென்றாலும், கொஞ்ச நேரத்தில் ஹரி திரைப்படம் போலச் சர்ர்னு போகுது.
சும்மா சொல்லக் கூடாது.. சிவன், நடைமுறை எதார்த்தம், நீதி, பாசம், காதல், போர், ரகசிய இயந்திரங்கள் என்று மனுசன் பட்டையைக் கிளப்பி இருக்கார்.
இப்புத்தகத்தைக் காலையில் ஆரம்பித்து அதே நாள் இரவில் முடித்து விட்டேன்.
சிவன் வழக்கம் போல நாவல் முழுவதும் தன் சகாக்கள், நந்தி, வீரபத்ரா, நந்தி, பகீரதன், பர்வேஸ்வரர் போன்றோருடன் அசத்தி இருக்கிறார்.
தெரிந்து கொள்ளப் பல செய்திகள்
இந்த நாவலிலும் நாம் தெரிந்து கொள்ளப் பல செய்திகள் இருக்கின்றன.
முடிவு எடுக்கும் முன்பு அவசரப்படக் கூடாது என்பதையும், தீர விசாரிக்காமல் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்பதையும் அழகாக விளக்கி இருக்கிறார்.
கப்பல் கட்டுவது, அக்கப்பலை பிரங்கர்கள் எனப்படுபவர்கள் பகுதிக்குக் கொண்டு செல்லும் போது அவர்களின் பாதுகாப்புகள் அவர்கள் பயன்படுத்தும் இயந்திரங்கள் என்று ஒவ்வொன்றும் பிரம்மிப்பு தான்.
இதில் பயணம் செல்வது போல வரும் காலங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக ஒரு வருடம் இரு வருடங்கள் என்று வருகிறது.
போர் காட்சிகள் திறம்பட விளக்கப்பட்டுள்ளன. சில காட்சிகள் எனக்குப் சிவகாமியின் சபதம் நாவலை நினைவு படுத்தியது.
கடினமான கதைக்கரு எளிமையான வர்ணிப்பு
ஆசிரியர் அமிஷ் எப்படி இரண்டு புத்தகங்களிலேயே கடினமான கதைக் கருவை எடுத்துக்கொண்டு அதை எளிமையாகக் கூறியிருக்கிறார் என்று வியப்பாக இருந்தது.
சிவன் பிள்ளையாகக் கணேஷ் (விநாயகர்) வரும் போது அது எவ்வாறு எதார்த்தமாக இருக்கும் என்ற ஆர்வத்தை வீணாக்காமல் பொருத்தமாகக் கொண்டு வந்தது சிறப்பு. கணேஷின் பக்குவம் ரசிக்கும் படி இருக்கும்.
பின்வரும் விவாதம் எனக்கு ரொம்பப் பிடித்தது
முகத்தில் ஆத்திரமோ, வெறுப்போ தென்படுகிறதா என்று கணேஷைத் தீவிரமாக ஆராய்ந்தாள். எதுவுமில்லை.
“பழி வாங்கணும்னு தோணலை? அநியாயம்னு படலை?”
“அப்படியெல்லாம் எதுவுமில்ல, க்ருத்திகா,” என்றான் கணேஷ். “நீதின்னு ஒண்ணு இருக்கறதுக்கு அவசியம் என்ன? பிரபஞ்சத்தோட நன்மைக்காகத்தான்.
ஒரு சமநிலை கொண்டுவரதுக்குத்தானேயொழிய. மனுஷங்களுக்கிடையில வெறுப்பைத் தூண்ட இல்லை.
அதுவுமில்லாம, ************ தண்டிக்கிற அதிகாரம் எனக்கில்லை; பிரபஞ்சத்துக்கிட்டத்தான் இருக்கு. காலமும் நேரமும் கூடி வர்றப்ப, நீதி கிடைக்கும். அது இந்தப் பிறவியாவும் இருக்கலாம். அடுத்ததாவும் இருக்கலாம்.”
“பழிவாங்கினா,” பரசுராமன் இடைமறித்தான்.
“மனசுக்காவது திருப்தியா இருக்குமில்ல?”
“நீ ஆசைப்பட்டபடி பழி தீர்த்துக்கிட்டியே?” என்றான் கணேஷ். “மனசுக்கு இதமாகவா இருந்தது?”
பரசுராமன் ஆழமாய் மூச்சுவிட்டான். இல்லை தான்.
“ஆக, ********** எதுவும் ஆகணும்னு நீங்க விரும்பலை? என்றான் வீரபத்ரா.
கணேஷின் கண்கள் சிறுத்தன. “எனக்கு அக்கறையில்லை.”
நாகர்கள் இடத்தைத் தேடி சூர்ய, சந்திர வம்சிகள் மற்றும் பலர் காட்டில் பயணம் செய்வது ஒரு திகில் பட அனுபவத்தைத் தந்தது.
நீண்ட நாட்கள் ஒன்றுமே நடக்காமல் இருந்தாலும், என்னமோ நடக்கப்போகிறது என்ற பயத்தைக் கூடவே வைத்து இருந்தது.
எதிர்பார்த்தது போலவே நான் நினைத்த இடத்தில் தொடரும் போட்டு விட்டார் 🙂 . மூன்றாம் பாகம் “வாயு புத்ரர் வாக்கு” வாங்கி விட்டேன். விரைவில் படித்து விடுவேன்.
இப்புத்தகங்களை வாங்க விரும்புவர்கள் அமேசானில் மூன்றையும் சேர்த்து தள்ளுபடி விலையில் வரும் போது வாங்கி விடுங்கள். தனித் தனியாக வாங்கினால் கூடுதல் விலை வரும்.
அமேசானில் வாங்க –> நாகர்களின் இரகசியம் Link
தொடர்புடைய நாவல்கள்
வாயுபுத்ரர் வாக்கு [அமுதமும் நஞ்சாகும்]
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, இதுவரை அறியாத நாவல் இது. வேற லெவலுக்கு போய்க்கொண்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நல்ல விஷியம். என்னுடைய நிலையை நினைத்தால் எனக்கே பாவமாக இருக்கிறது. படிக்க விரும்பிய புத்தகமும் இல்லை, ஒய்வு நேரமும் வெகு குறைவு. மனதிலும் நாட்டம் குறைந்து கொண்டே செல்கிறது. உங்கள் புத்தக பயணம் இன்னும் பல மைல்கள் கடக்க என் வாழ்த்துக்கள்.
கல்லூரி பருவத்தில் பொது நூல் நிலையம் சென்று காலை 9 மணி முதல் (மதிய உணவை துறந்து) தொடர்ச்சியாக இரவு 8 மணிவரை படித்த பசுமையான நினைவுகள் இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை. இதைத் தான் படிக்கவேண்டும், படிக்கக்கூடாது என்ற வரைமுறையே மனதிற்கு கிடையாது. என்ன படிக்க பிடிக்கிறதோ, அதை மட்டும் படிப்பது. உலகம், அரசியல், இலக்கியம், வரலாறு, துணுக்குகள், சினிமா, என பட்டியல் நீளும்…பகிர்வுக்கு நன்றி கிரி.
யாசின் நீங்க புத்தகம் படித்த திரும்ப ஆரம்பித்தால், உங்களுக்கு பழைய வேகம் வந்து விடும்.. நானெல்லாம் 20 வருடங்களுக்கு மேலாக படிப்பதையே நிறுத்தி இருந்தேன். பொன்னியின் செல்வன் தான் என்னுடைய படிக்கும் ஆர்வத்தை மீட்டது.
மெலூஹாவின் அமரர்கள் நாவலை நானும் ஒரே நாளில் படித்து முடித்தேன். அருமையான அனுபவம். நாகர்களின் ரகசியம் படிக்கத்தான் நேரம் கிடைக்கவில்லை.