வாயுபுத்ரர் வாக்கு [அமுதமும் நஞ்சாகும்]

5
Vaayuputhrar Vaakku வாயுபுத்ரர் வாக்கு

சிவன் அறிமுகம், மெலுஹர்கள், நாகர்கள், வாயுபுத்திரர்கள் என்று தொடர்ந்து வாயுபுத்ரர் வாக்கு பாகத்தில் சோமரசம் (தேவர்கள் அமுதம்) பற்றி விளக்கமாகக் குறிப்பிட்டு தொடரை முடித்து இருக்கிறார்.

அமுதமும் நஞ்சாகும் என்பதே வாயுபுத்ரர் வாக்கு நாவலின் ஒரு வரிக்கதை.

துவக்கம்

முதல் 150 – 175 பக்கங்கள் சோமரசம் பற்றிய தீமையை அவர்களுக்கிடையே விளக்குவதிலேயே செல்கிறது. அதோடு காட்சிகளும் ஒரே இடத்தில் சுற்றுவதால் சலிப்பையே தந்தது.

எப்படா சோமரசம் பற்றிப் பேசி / விளக்கி முடிப்பாங்க என்று ஆகி விட்டது.

இதன் பிறகு துவங்கும் கதை சீராகச் சென்று பரபரப்பு போர் காட்சிகளுடன் ரணகளமாகி பின் அமைதியாக முடிகிறது. சிறப்பான புத்தகம் என்பதில் சந்தேகமில்லை.

இதில் வரும் போர் காட்சிகளும் அது தொடர்பான திட்டமிடுதல்களும் அசத்தலாக இருக்கிறது. சில திட்டங்கள் எனக்குப் புரியவில்லை என்றாலும் சுவாரசியமாக இருந்ததை மறுப்பதற்கில்லை.

விநாயகருக்கு ஏன் யானை முகம்?

ஆசிரியர் அமிஷ் சிவன், விநாயகர், முருகன், அமுதம் (சோமரசம்), தேவர்கள் போன்றவற்றை அவரது பாணியில் சிறப்பாகக் கட்டமைத்து இருக்கிறார்.

விநாயகர் யானை தலையுடன் இருப்பதை நாம் திரைப்படங்களில் ஏன் என்று பார்த்து இருப்போம். அதையே கொஞ்சம் லாஜிக்கலாகக் கூறியிருக்கிறார்.

இதுமட்டுமல்லாது நாம் புராணங்களில் படித்த செய்திகளையும் இதே போல விளக்கி இருக்கிறார்.

கவர்ந்த வசனங்கள்

இதில் என்னைக் கவர்ந்த சில வசனங்களையும் என்னுடைய பார்வையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம்.

வாசுதேவர் கோபால் என்பவருடன் சிவன் கலந்துரையாடுவார்.

சிவன், “தொடங்குன இடத்துக்குத் திரும்ப வருவதால் என்ன பயன்?

கோபால் “கடலில் இருந்து ஆவியாகும் தண்ணீர் நிலங்களில் பெய்து திரும்ப அது கடலையே வந்து அடைகிறது. இதன் காரணமாக மழை பெய்தால் என்ன பயன் என்று நினைக்க முடியுமா?!

அந்த மழை ஆறாகி பலரின் வாழ்க்கைக்குப் பயனாகிறது. விலங்குகள், செடி கொடிகள் என்று அனைத்துமே பயன் பெறுகின்றன” என்று விளக்குவார். இதைச் சிவனும் ஏற்றுக்கொள்வார்.

சராசரி மனிதர்களாகிய நமக்கு என்ன தோன்றுகிறது?!

படிக்க நிலத்தை விற்று அதன் மூலம் படித்து ஒரு நல்ல நிலைக்கு வந்து திரும்ப அதே நிலத்தை வாங்க படாதபாடு படுகிறோம். இறுதியில் என்ன சாதித்தோம் என்று திரும்பி பார்த்தால், விற்ற இடத்தை வாங்கி இருப்போம் அவ்வளவே!

இதற்காக நாம் ஏன் கண்டவன் கிட்ட எல்லாம் திட்டு வாங்கி, சண்டை போட்டு, சிரமப்பட்டுப் படித்து வேலை செய்ய வேண்டும். அப்படியே விட்டாலே போதுமே! என்று நினைப்போம்.

நம்முடைய சிரமங்கள் ஒரு நாள் நமக்குக் கடுப்பை தரும் போது… சில நேரங்களில் எனக்கு இது தோன்றி இருக்கிறது

எனக்கு இவர்கள் உரையாடும் போது மேற்கூறிய நினைவு வந்து சென்றது 🙂 .

ஒழுங்கும் கூடச் சில நேரங்களில் சலிப்பையே தரும்

மெலுஹா என்ற நகரம் சிங்கப்பூர் போலச் சிறப்பான கட்டமைப்பையும் ஒழுங்கையும் கொண்ட ஒரு நாடு / நகரம்.

இங்கே வாழ அனைவரும் விரும்புவார்கள். ஏனென்றால், அனைத்தும் ஒழுங்கோடு இருப்பதால், எதற்கும் சிரமப்பட வேண்டியதில்லை.

இதில் மெலுஹா வந்தும் சிலர் பிடிக்காமல் தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பி செல்வார்கள். காரணம், இதில் உள்ள ஒழுங்கை விட அவர்கள் ஊரில் பிரச்சனைகள் இருந்தாலும் சுதந்திரம் இருப்பதாகக் கருதுவார்கள் என்று கூறப்படும்.

இதுவும் சரியே! என்னையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். நான் சிங்கப்பூரில் 8 வருடங்கள் இருந்தேன் ஆனாலும் எனக்குச் சென்னையே நிம்மதியையும் திருப்தியையும் தந்தது.

சிங்கப்பூரில் இருந்த போது எப்போது ஊருக்குச் செல்வோம் என்று எண்ணமே மேலோங்கி இருக்கும்.

நான் சென்னை வந்து கிட்டத்தட்ட 20 மாதங்கள் ஆகி இருக்கிறது ஆனால், இங்கே பல்வேறு பிரச்சனைகளைத் தினமும் சந்தித்தாலும் நம்ம ஊரே எனக்குச் சொர்க்கமாக உள்ளது.

நாவலில் வரும் கூற்று சரியே!

பாராட்டவும் மனது வேண்டும்

சிவன் சூரபத்மனை மனம் திறந்து பாராட்டுவார் அதற்குச் சூரபத்மன்,

அபூர்வ தன்னம்பிக்கை கொண்டவனால் மட்டுமே இன்னொரு மனிதனின் திறமையை மனம் திறந்து பாராட்ட முடியும்” என்று கூறுவார்.

உண்மையில் ஒருவரைப் முழு மனதுடன் பாராட்ட முடியும் என்பது எளிதான ஒன்றல்ல அதிலும் குறிப்பாக நமக்குப் போட்டியாளரான ஒருவரை.

ஓரத்தில் நிச்சயம் பொறாமை துளியாவது இருக்கும் 🙂 .

செய்ய வேண்டியது ஒன்று விருப்பம் ஒன்று

சிவனிடம் கோபால் கூறுவார், “செய்ய வேண்டிய பணியை விடுத்துச் செய்ய விரும்பும் பணியில் கவனம் செலுத்துவது தானே மக்கள் இயல்பு?” என்று.

இதைத் தான் நாம் ஒவ்வொருவரும் செய்து கொண்டு இருக்கிறோம்.

நம்முடைய படிப்புக்கும் பணிக்கும் சமபந்தம் இருக்கிறதா?! நம்முடைய விருப்பத்துக்கும் பணிக்கும் சம்பந்தம் இருக்கிறதா?! இல்லை என்பதே பெரும்பாலானவர்கள் பதிலாக இருக்கும்.

வெற்றி பெற்றவர்கள் கருத்தே உண்மையென உலகம் நம்புகிறது

காளி சதியிடம் கூறுவார்,

ஜெயித்தவங்களை மட்டும் தான் உலகம் நினைவில் வச்சுக்கும். வெற்றியடைஞ்சவங்க தானே வரலாற்றை எழுதறாங்க? அதை எப்படியும் எழுதிக்கலாம்.

ஜெயிச்சவங்க வடிக்கிறபடி தான் தோத்தவங்களை எல்லோரும் நியாபகம் வெச்சுப்பாங்க

முதலில் என்ன கூறப்படுகிறதோ, கட்டமைக்கப்படுகிறதோ, தெரிய வருகிறதோ அதையே நாம் அனைவரும் உண்மை என்று நம்புகிறோம்.

ஒரு கதைக்கு / சம்பவத்துக்கு இன்னொரு பக்கம் உள்ளது என்பதையும் அது சரியோ தவறோ ஆனால், அதைக் காது கொடுத்துக் கூடக் கேட்க நாம் ஒப்புக்கொள்வதில்லை.

இந்த விசயத்தில் அசுரன் நாவல் எனக்கு இராவணன் குறித்த இன்னொரு பக்கத்தைக் கூறியது அதோடு எனக்குப் பல அனுபவங்களைக் கொடுத்தது என்றால் மிகையில்லை.

Readஅசுரன் – வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்

தர்மமும் நியாயம் கூடச் சிக்கலை ஏற்படுத்தலாம்

சிவன் கூறுவார்,

செல்வம், புகழ்ங்கிற கவர்ச்சிகள் இல்லைனாலும், தர்மம் நியாயம்ங்கிற பேர்ல நம்மில் ரொம்பச் சிறந்தவர்கள் வழித்தவறிப் போக வாய்ப்பு இருக்கு” என்பார்.

இது உண்மை பேசுகிறோம் என்று நம் வீட்டில் ஒளிந்துள்ளவரை துரத்தும் கொலைகாரனிடம் ஒப்புவிக்கும் ஒரு உதாரணத்தை நினைவுபடுத்தியது.

அனைத்து நேரங்களிலும் நல்லவனாக இருக்க முடியாது அப்படி முயற்சித்தால் அது சரியாக இருக்காது.

மனசாட்சியின் இம்சை

சிவன் சதியிடம் கூறுவார்,

ஏற்கனவே வாழ்க்கையில் நாம செய்யுற தப்புக்களாலே உண்டாகிற சேதங்கள் எத்தனையோ, அதைப் பத்தியெல்லாம் குற்ற உணர்ச்சி படு; அது நியாயம்.

ஆனா, உன் கையை மீறின சம்பவங்களுக்குப் பொறுப்பெடுத்துட்டு குற்றவாளியாக்கிக்கிட்டு, உன்னை நீயே வதைச்சுக்கிறதுல அர்த்தமேயில்ல” என்பார்.

எனக்கு என்னுடைய மனசாட்சியைக் கண்டு ரொம்பப் பயம் 🙂 . இது சனியன் மாதிரி உட்கார்ந்துட்டு பல நேரங்களில் என்னைப் படாதபாடு படுத்தி இருக்கு.. படுத்திட்டு இருக்கு. இந்த விளக்கம் எனக்கே சொன்னது போல இருந்தது.

போர் காட்சிகள்

நாவலில் வரும் போர் காட்சிகள் உண்மையிலேயே பிரம்மிக்க வைக்கிறது. போர் காட்சிகள் என்றாலே எனக்கு எப்போது வரும் சந்தேகம் இதிலும் வந்தது.

எப்படி லட்சக்கணக்கான வீரர்கள், யானைகள், குதிரைகளுக்கு உணவு தயாரிப்பார்கள்? படைகள் பல காலம் பயணிப்பதாக வருகிறது. எனவே, இந்தச் சந்தேகமும் எனக்கு வழக்கம் போலத் தொடர்ந்து கொண்டே இருந்தது.

இதில் சிவனின் மனைவி சதி போர் புரியும் காட்சி வரும்.. ப்ப்பா செம்மையாக வர்ணிக்கப்பட்டு இருக்கிறது.

கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டு இருந்தாலும் வர்ணிக்கப்பட்ட காட்சிகள் நம்மைப் பரபரப்புக்கு உள்ளாக்குவது என்னவோ உண்மை.

சராசரி நபராகச் சிவன் 

சிவன் பேசும் போது ஒரு சராசரி நபரின் எண்ணங்களையே பிரதிபலிப்பதால், நம்மால் கதையோடு ஒன்ற முடிகிறது. நமக்குத் தோன்றும் கேள்விகளையே சிவனும் கேட்கிறார்.

நீலகண்டர் என்ற பெயருடைய சிவன், சதி மீது வைத்து இருக்கும் அன்பு நமக்குத் தெரியும் என்றாலும் இறுதியில் அது புலப்படும் விதம் மிரட்டலாகக் கூறப்பட்டு இருக்கிறது.

நாவலில் இரு சம்பவங்கள் நான் வேறு மாதிரி இருக்கும் என்று ஊகித்தேன். என் நினைப்புக்கு மாறாக இருந்தது, ஏமாற்றமாக இருந்தது.

முதல் இரண்டு நாவல்களில் சம்பவங்கள் அதிகம் எனவே பரபரப்பு அதிகம். இதில் சம்பவங்கள் (போர் காட்சிகள் தவிர்த்து) குறைவு பேச்சு அதிகம் இருப்பினும் பல்வேறு கருத்துகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

ஆசிரியர் அமீஷ் உண்மையிலேயே பிரம்மிக்க வைக்கிறார். அவரின் அறிவும் விளக்கமும் அனுபவமும் வியப்படைய வைக்கிறது.

மூன்று தொகுதிகளையும் அனைவரும் படிக்கப் பரிந்துரைக்கிறேன். அமேசானில் மூன்றையும் சேர்த்து வாங்கினால் விலை குறைவு.

அமேசானில் வாயுபுத்ரர் வாக்கு வாங்க –> Link

தொடர்புடைய நாவல்கள்

மெலூஹாவின் அமரர்கள்

நாகர்களின் இரகசியம்

அசுரன் – வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. அருமையான நாவல், தத்துவார்த்தமாக விவாதிக்க ஆசிரியர் அங்கங்கு களம் ஏற்படுத்தி தந்துள்ளார்.

    //படிக்க நிலத்தை விற்று அதன் மூலம் படித்து ஒரு நல்ல நிலைக்கு வந்து திரும்ப அதே நிலத்தை வாங்க படாதபாடு படுகிறோம். இறுதியில் என்ன சாதித்தோம் என்று திரும்பி பார்த்தால், விற்ற இடத்தை வாங்கி இருப்போம் அவ்வளவே//

    அனைத்தும் முடிந்து திரும்பி பார்க்கும் போது நம்மிடம் எஞ்சி இருப்பது நமது நினனைவுகள்/அனுபவங்கள் மட்டுமே.

  2. கையில காசு இல்ல அண்ணா அப்புறமா படிச்சுக்கிறேன்

  3. நண்பர் கிரி, இந்த நாவலை பற்றிக் கூறிய உங்களுக்கு மிக்க நன்றி, தாங்கள் கூறிய பிறகு தான் இந்நாவலைப் படிக்க ஆரம்பித்தேன், பொன்னியின் செல்வன், நந்திபுரத்து நாயகிக்குப் பிறகு ஒரு சுவரஸ்சியமான நாவல் “ஒரு பாகுபலி ” நாகர்களை அசுரர்களாக சித்தரித்தும்,கடவுள்களை மனிதர்களாகச் சித்தரித்து அதன் தொடர்ச்சியாக செல்லும் சிவனின் சாகாசப்பயணம் அருமை, மேலும் நகரங்களின் அமைப்பையும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை நிலையையும் கூறியவிதம் அற்புதம் ,கதையின் கருப்பொருளை சுருக்கமாகச் சொல்வதேன்றால் “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்” ஒரு பிரம்மாண்டமான படம் பார்த்த அனுபவத்தை இந்நாவல் ஏற்படுத்தியது, இந்நாவலைப் படைத்த ஆசிரியர் அமீஷ்க்கு மிக்க நன்றி.

  4. படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் எனக்கு நீண்டு கொண்டே போகிறது. அதில் இதையும் சேர்க்க வேண்டியதுதான். நீங்கள் தொடர்ந்து வாசித்து வருவது மகிழ்வை தருகிறது. பகிர்வுக்கு நன்றி கிரி.

  5. @சோமேஸ்வரன் உண்மை

    @கார்த்திக் சென்னை வாழ்க்கை எப்படி இருக்கு ?

    @கார்த்திக் நீங்க சொல்வது போல ஒரு திரைப்படத்தையே பார்த்த அனுபவத்தை தந்தது குறிப்பாக முதல் இரண்டு பாகங்கள்.

    @யாசின் எனக்கு படிக்க ஒரு நேரம் வந்தது போல உங்களுக்கும் ஒரு நேரம் வரும் 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here