கொங்குநாடு சர்ச்சைக்குக் காரணங்கள் என்ன? [FAQ]

4
கொங்குநாடு I Love Kovai

த்திய இணை அமைச்சராகப் பதவி ஏற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த (முன்னாள்) பாஜக தலைவர் L. முருகன் சுயவிவரக் குறிப்பில் கொங்குநாடு, தமிழ்நாடு என்று இருந்தது விவாதமானது. Image Credit

கொங்குநாடு என்ற யூனியன் பிரதேசத்தை மத்திய அரசு உருவாக்குகிறது என்று தினமலர் நாளிதழ் தலைப்புச் செய்தியில் போட, பரபரப்பானது.

கொங்குநாடு

கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், நீலகிரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கியது கொங்குநாடு என்றழைக்கப்படுகிறது.

கொங்குத்தமிழ் இங்குப் பேசப்படுகிறது.

கொங்கு நாடு பேச்சு வந்த பிறகே கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களும் கொங்கு பகுதியைச் சார்ந்தவை என்று எனக்குத் தெரிய வந்தது.

ஒன்றியத்தால் வந்த சர்ச்சை

தேர்தலுக்கு முன்பு வரை மத்திய அரசு என்று கூறிக்கொண்டு இருந்த ஸ்டாலின் அவர்கள், திடீரென்று ஒன்றியத்துக்கு மாறினார்.

பாஜக வை வெறுப்பேற்ற என்பது தவிர வேறு எந்த நியாயமான காரணமும் இல்லை.

ஸ்டாலின் ஆரம்பித்து வைத்த பிறகு அவர் கட்சி சார்பு ஆதரவாளர்கள் அனைவரும் ஒன்றியம் என்று அழைக்கத் துவங்கினார்கள்.

சட்டசபையில் இது குறித்த கேள்வி வந்த போது..

ஒன்றியம் என்ற வார்த்தை குறித்து யாரும் மிரள வேண்டியதில்லை. இனி ஒன்றியம் என்றே தொடர்ந்து அழைப்போம்‘ என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சட்டசபையில் எரிபொருள் விலையேற்றம் குறித்துப் பேசிய நிதி அமைச்சர் PTR தியாகராஜன்,

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தைப் பற்றிப் பேசும் போது மத்திய அரசு என்றும் பாஜக அரசைப் பற்றிப் பேசும் போது ஒன்றியம் என்றும் குறிப்பிட்டு பேசினார்.

ஒன்றியம் என்பது தவறான வார்த்தையல்ல ஆனால், அது திணிக்கப்படும் விதமே இங்கே கேள்விக்குள்ளாகிறது.

அனைத்துக்கும் ஒருபடி மேலே சென்று 2022 முதல் பாடநூலில் ஒன்றியம் என்று மாற்றப்படும் என்று கூறப்பட்டது கடுப்பை வரவழைத்தது.

திமுக வினர் ஒன்றியம் என்று கூறினால், அது அவர்கள் விருப்பம், பாஜக வை வெறுப்பேற்ற கூறுகிறார்கள் என்பதோடு முடிந்து விடும்.

ஆனால், பள்ளி பாடப்புத்தகத்திலேயே மாற்றுவோம் என்பது தங்கள் எண்ணங்களை அடுத்தத் தலைமுறையினர் மீது திணிப்பது. இது எப்படிச் சரியாகும்?!

இதுபோலத் தொடர்ந்து திமுக ஆதரவாளர்கள் சீண்டிக்கொண்டு இருந்ததால், கடுப்பில் இருந்தவர்களுக்கு கொங்குநாடு சரியான வாய்ப்பாக அமைந்தது.

எது பிரிவினை?

கொங்குநாட்டை பிரிவினை என்பவர்கள் ஒன்றியம், திராவிடநாடு, தனித்தமிழ்நாடு எனப் பேசப்பட்டபோது ஆதரித்தவர்கள் அல்லது மவுனமாக ரசித்தவர்கள்.

உண்மையில் திராவிடநாடு, தனித்தமிழ்நாடு தான் பிரிவினை, மாநிலத்தைப் பிரிப்பது பிரிவினை அல்ல.

வளர்ச்சி இல்லையென்று ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட போது இதே போல எதிர்ப்புகள் எழுந்தன ஆனால், பிரிந்த பிறகு தெலங்கானா வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது.

குறிப்பாக நீர் சார்ந்த திட்டங்களால் உலகுக்கே எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.

அதோடு பல தொழில் வாய்ப்புகளைப் பெற்று வெகு விரைவிலேயே முதலீடுகளைப் பெறும் மாநிலங்களில் குறிப்பிடத் தக்க இடத்தைப் பெற்று விட்டது.

கொங்குநாடு சர்ச்சை ஏன் துவங்கியது?

கொங்குநாடு சர்ச்சை எப்படித் துவங்கியது என்று துவக்கத்தில் பார்த்தோம், அதற்கு முன் ட்விட்டரில் ஆரம்பித்தது.

2021 சட்டமன்றத்தேர்தலில் கோவையில் அதிமுக / பாஜக வெற்றி பெற்றதால், #முட்டாள்கோவையன்ஸ் என்று ட்ரெண்ட் செய்தார்கள்.

சர்ச்சைக்கு இதுவே ஆரம்பப்புள்ளி. அப்போதே இது தேவையற்ற வெறுப்புணர்வையே கொண்டு வரும் என்று அனைவராலும் கூறப்பட்டது.

இதன் பிறகு தடுப்பூசி விசயத்தில் சென்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, கோவைக்குத் தடுப்பூசி சரியான அளவில் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

அதற்குப் பதில் அளித்த திமுக ஆதரவாளர், ‘மோடி கிட்ட போய்க் கேளுங்க, எங்க கிட்ட ஏன் கேட்குறீங்க!‘ என்று கூறியது சர்ச்சையை அதிகப்படுத்தியது.

அதோடு சென்னைக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, கொங்கு பகுதியில் வளர்ச்சி திட்டங்கள் இல்லை என்பது.

#கொங்குநாடாவது_மயிராவது என்று ட்ரெண்ட் செய்தார்கள், கோமியமுத்தூர் என்றார்கள்.

இதெல்லாம் மேலும் வெறுப்புணர்வை அதிகரிக்கும், கொங்குநாட்டு கோரிக்கைக்கு வலு சேர்க்கும் என்பதை அறியாத முட்டாள்களாக உள்ளனர்.

சென்னைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் தவறில்லை ஆனால், மற்ற மாவட்டங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சென்னையில் பூங்கா அமைப்பதற்கு ₹2500 கோடி செலவிடப்பட்டு மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வேளச்சேரி மழைநீர் வடிகால் திட்டத்துக்கு ₹1400 கோடி ஒதுக்கப்பட உள்ளதாக கே என் நேரு தற்போது (ஜூலை 13, 2021) அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, சிங்காரச் சென்னை 2.0 உள்ள நிலையில், அடுத்த பெரிய அறிவிப்புகள் சென்னைக்கே எனும் போது மற்ற மாவட்ட மக்கள் கோபப்படுவது இயல்பு.

கொங்குப்பகுதியின் மிக முக்கியத் தேவையான பாசன / குடிநீர் அத்திக்கடவு திட்டமே கால் நூற்றாண்டு கடந்து தற்போது தான் வந்துள்ளது.

இச்சர்ச்சைகள் உள்ளூர நெருப்பாக இருந்தது, கொங்குநாடு வந்தவுடன் அனைவரும் பிடித்துக்கொண்டார்கள்.

கொங்குநாட்டை ஆதரிப்பவர்கள் யார்?

  1. கொங்குப் பகுதியைக் கட்சிகள் புறக்கணிக்கின்றன என்ற வெறுப்பில் கொங்குநாடு கோரிக்கையை ஆதரிப்பவர்கள்.
  2. ஒன்றியம் என்ற வார்த்தைக்கும், திராவிடநாடு என்று கூறுபவர்களை வெறுப்பேற்ற கொங்குநாட்டை ஆதரிப்பவர்கள்.

எனவே, இனி திராவிட நாடு, ஒன்றியம் என்ற விவாதங்கள் இருக்கும் வரை கொங்கு நாடு கிடைக்கிறதோ இல்லையோ கொங்குநாடு விவாதமும் இருக்கும்.

பாஜக மட்டும் கொங்குநாடு என்பதை பேசுவதாக சிலர் நினைத்துக்கொண்டுள்ளார்கள்.

கொங்குநாட்டை ஆதரிப்பவர்களைச் சங்கிகள் என்று முட்டாள்தனமாக முத்திரை குத்தி வருகிறார்கள் ஆனால், இக்கோரிக்கை பல காலமாக உள்ளது.

தற்போது கொங்கு பகுதியில் இது குறித்த பேச்சு தான் பரவலாக உள்ளது.

கொங்குநாடு மனநிலைக்கு பலர் மாறிக்கொண்டுள்ளார்கள் ஆனால், அது எந்த அளவுக்கு நடைமுறையில் வரவேற்பு இருக்கும் என்பது தெரியாது.

கொங்குப் பகுதி புறக்கணிக்கப்படுகிறதா?

ஆம்.

கொங்குப்பகுதி மூலமாகத் தமிழகத்துக்குக் கிடைக்கும் வருமானம் அதிகம்.

எளிமையாகக் கூற, தமிழகத்தை இந்தியா என்று எடுத்துக்கொண்டால், கொங்குப் பகுதியை மஹாராஷ்டிராவாக எடுத்துக்கொள்ளலாம்.

இந்தியாவின் GDP யில் மஹாராஷ்டிரா முக்கியப்பங்கு வகிப்பது போல, தமிழகத்தின் வருமானத்தில் கொங்குப் பகுதி முக்கியத்துவம் வகிக்கிறது.

தமிழகத்தின் இரண்டாம் பெரிய நகரான கோவைக்கு இத்தனை வருடங்களில் இரண்டே பாலங்கள் தான் வந்துள்ளன.

சென்னையில் மட்டுமே மக்கள் அதிகரித்து வருவது சிக்கலையே ஏற்படுத்தும். அனைவரும் வாய்ப்புகளைத் தேடி ஒரே இடத்தில் குவிவது சரியல்ல.

கொங்குப் பகுதி சிறப்புகள்

தொழில் நகரங்களாக, திருப்பூர், கோவை, சேலம், ஈரோடு போன்றவை உள்ளன.

முட்டை ஏற்றுமதியில் நாமக்கல். கிருஷ்ணகிரியில் ஓலா நிறுவனம் மிகப்பெரிய அளவில் செயல்படப்போகிறது.

சுற்றுலா தலங்களாக ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை, மசினகுடி, கொடிவேரி, கொல்லிமலை, ஒகேனக்கல் ஆகியவை முக்கியப்பங்கை வகிக்கின்றன.

படிப்புக்கு ஏற்ற பகுதியாக கொங்குப்பகுதி விளங்குகிறது. சிறந்த பள்ளிகளும், கல்லூரிகளும் உள்ளன.

தென் இந்தியாவின் இரண்டாவது பணக்கார கோவிலான பழனி, பிரபலமான பண்ணாரி கோவில்கள் உள்ளன. பவானிசாகர், ஆழியார் அணைகள் உள்ளன.

தமிழ்நாட்டின் முக்கியப்பகுதிகள் பெரும்பாலானவை கொங்குப்பகுதியில் உள்ளன ஆனால், அதற்கான பலனைப் பெறுகிறதா என்றால், இல்லையென்பது தான் பதில்.

அரசு நினைத்தால், இப்பகுதிகளை மேம்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. புதிய வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வரலாம்.

சுருக்கமாக, குறிப்பிடத்தக்க அளவில் தன் பங்கைத் தமிழகத்துக்கு கொங்குப் பகுதி வழங்கி வருகிற போது புறக்கணிக்கப்பட்டால் கோபம் வருவது இயற்கை தானே!

தென் மாவட்டங்கள்

முன்னரே கூறியபடி ஒருவேளை பிரிக்கப்பட வேண்டும் என்றால், அதிகம் கவனிக்கப்பட வேண்டியது தென் மாவட்டங்கள் தான்.

கொங்கு பகுதிக்கு பெரியளவில் வளர்ச்சி திட்டங்கள் இல்லையென்றாலும், இங்குள்ள வளம் காரணமாகவும், மக்களின் உழைப்பாலும் நல்ல நிலையில் தான் உள்ளனர்.

அதோடு சாலை மற்றும் அடிப்படை வசதிகளில் குறையில்லை.

ஆனால், இரு கட்சிகளுமே தொடர்ந்து தென் மாவட்டங்களைப் புறக்கணித்து வந்துள்ளன. இது மிகவும் மோசமான செயல்.

தென் மாவட்டங்களைப் பிரித்துத் தனி மாநிலமாக மாற்றினால் வளர்ச்சி பெறும் என்பது உண்மையே. முக்கியத்துவம் பெறும் போது பலன்களும் கிடைக்கும்.

தெலங்கானா எப்படி வளர்ச்சி பெற்றதோ அதே போலத் தென் மாவட்டங்களும் வளர்ச்சி பெறும்.

பிரிக்க வேண்டாம் என்றால், அரசுகள் தொழில் வாய்ப்புகளைத் தென் மாவட்டங்களுக்குக் கொடுக்க வேண்டும்.

கொங்கு நாடு வந்தால் என்ன ஆகும் தெரியுமா?

ஏற்கனவே வட மாநிலத்தவர் அதிகம் இங்கு உள்ளனர், எனவே, அவர்கள் கட்டுப்பாட்டில் கொங்கு நாடு போய் விடும் என்று சிலர் கூறியுள்ளார்கள்.

அதாவது வடமாநிலத்தவரே கடைகளில், நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று கூறுகிறார்கள்.

மறுக்க முடியாத உண்மை.

ஆனால், கொங்குநாடு உருவாகவில்லையென்றால், வடமாநிலத்தவர் திரும்ப இவர்கள் பகுதிக்கே சென்று விடப்போகிறார்களா? கிடையாது.

கொங்குநாடு வந்தாலும், வரவில்லையென்றாலும் இந்த மாற்றம் நடக்கும். இது காலத்தின் கட்டாயம்.

இது கொங்கு பகுதிக்கு மட்டுமல்ல, பொருளாதார ரீதியாக வளரும் அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும்.

சென்னையில் கடைகள், உணவகங்கள், பணியாளர்கள் எல்லோருமே வடமாநிலத்தவர் தான் உள்ளனர்.

சில நேரங்களில் தமிழ்நாட்டில் தான் இருக்கோமா! என்ற சந்தேகமே வருகிறது.

கசப்பான உண்மை

பொருளாதார ரீதியாக வளரும் மாவட்டங்களில், தனி நபர் வருமானம் உயர்ந்து இருக்கும். எனவே, அடிமட்ட வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள்.

தமிழர்கள் பொதுவாகத் தொழிலில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை அல்லது வட மாநிலத்தவர் அளவுக்குத் தொழிலில் திறமையானவர்கள் அல்ல.

எனவே, வட மாநிலத்தவர் எளிதாக இவ்விடங்களை நிரப்பி விடுகிறார்கள்.

வடமாநிலத்தவர் ஆதிக்கத்தை நாம் விரும்பவில்லையென்றாலும் எதிர்காலத்தில் நடந்தே தீரும் என்பது கசப்பான உண்மை. காரணம், ஊழியர்கள் பற்றாக்குறை.

அதோடு தமிழகத்தில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது.

கொங்கு பகுதி வன்முறை, பந்த் போன்றவை நடக்காத பகுதி என்பதாலும் வியாபாரத்துக்கு ஏற்றதாக உள்ளது. எனவே, அமைதியாக தொழில் நடத்த விரும்புகிறவர்கள் இங்கே வருகிறார்கள்.

வடமாநிலத்தவர் என்றல்ல, மற்ற மாவட்டத்தினரும் இங்கே அதிகரித்துள்ளனர்.

மலையாளிகளும் அதிகளவில் கோவையில் உள்ளனர்.

பல இடங்களில் தமிழ் ஆங்கிலத்துடன் மலையாள அறிவிப்பும் இருக்கும் அளவு அவர்கள் எண்ணிக்கை அதிகம்.

கொங்குநாடு கேட்பது சரியா?

கொங்குப்பகுதியை சார்ந்தவன் என்றாலும் தமிழ்நாட்டைப் பிரிப்பது எனக்கு உடன்பாடில்லை. ஒருங்கிணைந்த மாநிலமாக இருப்பதே நமக்குப் பெருமை, பலம்.

கொங்குநாடு என்று பிரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கருதவில்லை.

மாவட்டங்களில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் களையப்பட்டு அனைத்து மாவட்டத்தினருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்.

கொங்குநாடு ஏன் வேண்டும் என்கிறார்கள் என்பதன் காரணத்தை அறிந்து அதைச் சரி செய்யாமல் கொங்கு மக்களைத் திட்டுவதால் எந்தப்பயனுமில்லை.

இவையல்லாமல் பிரிவினை பேசியவர்களைக் கொங்குநாடு விவாதம் ஒற்றுமையை வலியுறுத்தத் தூண்டியுள்ளது நேர்மறையான விஷயம்.

ஒன்றியத்தை, திராவிட நாட்டை மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டாடியவர்கள், கொங்கு நாடு விவகாரத்தில் கடுப்பை அடைந்து உள்ளார்கள்.

இரத்தம் தக்காளி சட்னி தான். அவரவருக்கு வந்தால் தான் அதன் வலி புரிகிறது.

இரட்டை நிலையில் பேசுபவர்களை மனதில் வைத்து வாட்சப், சமூகத்தளங்களில் சுற்றும் ஒரு வசனத்தை முன் வைக்க விரும்புகிறேன்.

'இந்திய நாடு என்றால், நாங்களும் இந்திய நாடு. ஒன்றியம், திராவிட நாடு என்றால் கொங்கு நாடு.' 

Case Closed!

தொடர்புடைய கட்டுரைகள்

ஒன்றியம் தமிழகம் என்பது சரியா? தவறா?

மக்களைக் குறை கூறுவது சரியா? | தேர்தல் 2021

தொழில் துவங்கத் தமிழர்கள் தயங்குவது ஏன்?!

தொழில் துவங்க நினைக்கிறீர்களா? | Derby Vijay Kapoor

சிங்கப்பூரும் கோயம்புத்தூரும்

சிங்காரச் சென்னை | Project Blue

திராவிட அரசியல் தமிழகத்தை சீரழித்ததா?

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel .

4 COMMENTS

  1. கிரி, எனக்கு தற்போது வருகின்ற பல செய்திகள் மிகவும் அதிர்ச்சியாகவும், அதே சமயத்தில் ஆச்சரியமாகவும் இருக்கிறது.. எந்த மாதிரியான பிரச்சனைகளை உலகம் சந்தித்து கொண்டிருக்கின்றது..??? எதிர்காலம் எவ்வாறு போகும் என்று தெரியாமல், தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து மக்கள் தவித்து கொண்டிருக்கின்றனர்.. வளர்ந்த நாடுகளே தடுமாறுகின்ற போது நாமெல்லால் அவர்களுக்கு முன்னால் ஒன்றுமே கிடையாது.. தற்போதுள்ள நிலை எப்போது சரியாகும்??? எத்தனை வருடங்கள் பிடிக்கும் என்று தெரியவில்லை…??? உலகத்தில் உள்ள 10% மக்கள் கூட மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை என்பது தான் நிஜம்.. இது போல தீவிரமான பிரச்சனைகள் இருக்கும் போது ஒன்றியம், கொங்குநாடு இதெல்லாம் அவசியமா என்று தெரியவில்லை கிரி.. மீடியாவை நினைக்கும் போது எப்பா!!!! கண்ணை கட்டுது !!!! ஒன்னுமே புரியல கிரி…

  2. கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக பிரிக்கும் கோரிக்கையை நான் ஆதரிக்கவில்லை. நிர்வாக சார்பாக பிரிக்க வேண்டும் என்பதும் ஏற்கும் படியாகயில்லை. திமுக வின் ஒன்றிய வார்த்தைக்கு பதிலடியாக பிஜேபி இந்த கருத்துஉருவாக்கத்தை கொண்டு வந்துள்ளது.நான் சேலத்தை சேர்ந்தவன்.நானே இப்பொழுது தான் தனி கொங்கு மாநில கோரிக்கையை அறிகிறேன். இந்த கோரிக்கையை முன்னியெடுத்த கட்சியையோ அமைப்பையோ நான் அறிந்தவரையில் எவரும் இல்லை என நினைக்கிறேன்.

    தமிழக அரசு இந்த வெற்று அரசியலை விட்டுவிட்டு வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்கலாம். அவர்கள் எதிர் கட்சிபோல இன்னும் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள். இது தொடர்ந்தால் மக்கள் பிஜேபி பக்கம் திரும்ப அதிகம் வாய்ப்புள்ளது. இப்போதே மக்கள் நினைக்க தொடங்கிவிட்டார்கள். தமிழ்நாடு பங்கில்லாமலே பிஜேபி மத்தியில் ஆட்சி அமைக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஏன் திமுக எளிதில் தோற்க்ககூடிய களத்தில் சண்டை இடுகிறது என தெரியவில்லை. தமிழ்நாட்டு அமைச்சர்கள் மத்தியில் இருந்தால் நம் மாநிலத்துக்கு தான் நன்மை. பல திட்டங்களை இங்கே கொண்டுவரலாம்.தற்போது உள்ள 39 மத்திய அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை.

    பிஜேபி கட்சியினர் பேசுவதை விட திமுக உடன் பிறப்புகள் தான் இதை ஊதி பெரிதாக்குகிறார்கள். தனி மாநிலத்தால் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு தான் நஷ்டம். அதிமுக கொங்கு மண்டலத்தில் சுருங்கி விடும். திமுக எளிதில் மற்ற இடத்தில் ஆட்சி அமைக்கலாம். ஆனால் பெரும் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.கட்சிக்கு நிதி வரவும் குறைந்து விடும்.

    அண்ணாமலை பிஜேபின் தலைவராக இன்று பொறுப்பேற்கிறார். முன்பு போல பிஜேபி செயல்படாது. அவர் எப்படி அரசியலை முன்னியெடுப்பார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

  3. @யாசின்

    “ஒன்றியம், கொங்குநாடு இதெல்லாம் அவசியமா என்று தெரியவில்லை கிரி”

    சந்தேகத்திற்கு இடமில்லாமல் தேவையில்லாத ஆணி தான் யாசின் 🙂 .

    “மீடியாவை நினைக்கும் போது எப்பா!!!! கண்ணை கட்டுது !”

    தமிழ்நாட்டில் / இந்தியாவில் ஊடகங்களாலே பல பிரச்சனைகள்.

  4. @மணிகண்டன்

    “நான் சேலத்தை சேர்ந்தவன்.நானே இப்பொழுது தான் தனி கொங்கு மாநில கோரிக்கையை அறிகிறேன். இந்த கோரிக்கையை முன்னியெடுத்த கட்சியையோ அமைப்பையோ நான் அறிந்தவரையில் எவரும் இல்லை என நினைக்கிறேன்.”

    இக்கோரிக்கை பல காலமாக உள்ளது. தற்போது திமுக செய்த புறக்கணிப்பால் கவனம் பெற்றுள்ளது.

    “அவர்கள் எதிர் கட்சிபோல இன்னும் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள். ”

    சரியா சொன்னீங்க.. மத்திய அரசுடன் இணக்கமாக சென்று காரியங்களை சாதித்துக்கொள்ளாமல், சண்டையிட்டு கொண்டுள்ளனர்.

    “இது தொடர்ந்தால் மக்கள் பிஜேபி பக்கம் திரும்ப அதிகம் வாய்ப்புள்ளது. இப்போதே மக்கள் நினைக்க தொடங்கிவிட்டார்கள்.”

    தற்போதைய நிலைக்கு வாய்ப்பில்லை. அண்ணாமலை எப்படி செயல்படுகிறார், எதிர்கால திட்டங்கள் வழிமுறைகள் என்ன என்பதை பொறுத்து மாறலாம்.

    “தமிழ்நாடு பங்கில்லாமலே பிஜேபி மத்தியில் ஆட்சி அமைக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஏன் திமுக எளிதில் தோற்க்ககூடிய களத்தில் சண்டை இடுகிறது என தெரியவில்லை”

    காரணம், எதிர்காலத்தில் திமுக க்கு போட்டியாக மாநில அரசியலில் வந்து விடக்கூடாது என்பதற்காகவே தங்கள் ஊடகங்கள் மூலம் அவர்களை டம்மி பீஸ் போல கட்டிக்கொண்டுள்ளார்கள்.

    தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி அவர்கள் மீதான வெறுப்பு எண்ணத்தை தொடர்ந்து கொண்டுள்ளார்கள்.

    பாஜக வும் உருப்படியான திட்டங்களை முன்னெடுக்காமல் அவர்களுக்கு தகுந்த மாதிரி நடந்து கொண்டுள்ளது. அதாவது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

    அண்ணாமலை நம்பிக்கையளிக்கிறார்.

    “தமிழ்நாட்டு அமைச்சர்கள் மத்தியில் இருந்தால் நம் மாநிலத்துக்கு தான் நன்மை. பல திட்டங்களை இங்கே கொண்டு வரலாம்.தற்போது உள்ள 39 மத்திய அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை.”

    டெல்லிக்கு பயணம் போவது மட்டுமே அவர்கள் வேலை. உருப்படியா எதுவும் செய்வதில்லை. இது அதிமுக வாக இருந்தாலும் இதே தான்.

    “தனி மாநிலத்தால் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு தான் நஷ்டம். அதிமுக கொங்கு மண்டலத்தில் சுருங்கி விடும்.”

    ஆம்.

    “பெரும் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.கட்சிக்கு நிதி வரவும் குறைந்து விடும்.”

    கொங்குநாடு உருவானால் நிதி நெருக்கடி ஏற்படும் என்பது உண்மை தான். கட்சிக்கு நிதி இங்கு இருந்து அதிகம் செல்வதாக நான் கருதவில்லை.

    “அண்ணாமலை பிஜேபின் தலைவராக இன்று பொறுப்பேற்கிறார். முன்பு போல பிஜேபி செயல்படாது. அவர் எப்படி அரசியலை முன்னியெடுப்பார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.”

    நானும் காத்திருக்கிறேன். மத்திய அரசின் திட்டங்களை சரியாக மக்களிடையே கொண்டு செல்வார் என்று நம்புகிறேன்.

    மத்திய அரசின் திட்டங்களுக்கு எல்லாம் மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டி விட்டது. பலருக்கு இன்னமும் பல திட்டங்களை மத்திய அரசு செய்தது என்பது தெரியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!