தொழில் துவங்கத் தமிழர்கள் தயங்குவது ஏன்?!

4
தொழில் துவங்கத் தமிழர்கள் தயங்குவது ஏன்?! RS Prabhu

RS பிரபு என்பவர் தொழில் துவங்கத் தமிழர்கள் தயங்குவது ஏன்?! என்பதைப் பற்றி எழுதி இருக்கிறார், இவர் எனக்கு அறிமுகமில்லை. இதை மிக முக்கியமான கட்டுரையாகக் கருதுவதால், இங்கே பகிர்கிறேன்.

மற்ற மாநில மக்களின் ஆதிக்கம்

தமிழகத்தில் மற்ற மாநில மக்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது குறிப்பாக வட மாநிலத்தவர். அது ஏன்? என்பதை விளக்கி இருக்கிறார்.

தமிழர்கள் பணிக்குச் செல்வதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள், தொழில் செய்ய முயல்வதில்லை, அதற்குப் பெற்றவர்களும், மற்றவர்களும் ஆதரவு கொடுப்பதில்லை.

வட மாநிலத்தவர் வேலை செய்வதை விட மேலாண்மை விஷயத்திலேயே திறமையானவர்கள்.

இதை ஐடி நிறுவனங்களில் பணி புரிபவர்கள் உணர்ந்து இருக்கலாம், பெரும்பாலான முக்கியப் பொறுப்புகளில் வட மாநிலத்தவரே இருப்பர். இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களின் முதலாளிகள் வட மாநிலத்தவரே!

நம்மவர்கள் அவர்களுக்குக் கீழே தான் பணி புரிவார்கள். நான் கூறுவது சதவீத அளவில்.

நம்மவர்கள் தொழில் துவங்க தயங்க முதல் காரணம், RISK எடுக்கத் தயக்கம்.

கட்டுரையின் ஃபேஸ்புக் முகவரிhttps://www.facebook.com/permalink.php?story_fbid=10156383858268773&id=595298772

இனி பிரபு என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்…

தொழில் துவங்கத் தமிழர்கள் தயங்குவது ஏன்?!

வட இந்திய வியாபாரிகள் தமிழகத்தின் பெருவாரியான வியாபாரத்தைப் பிடித்துக்கொண்டு விட்டனர் என்று அவ்வப்போது சிலர் அறச்சீற்றம் அடைவதைக் காண முடிகிறது.

உண்மைதான், கணிசமான எண்ணிக்கையில் வடமாநில வியாபாரிகள் தமிழகத்தின் சின்னச் சின்ன ஊர்கள் வரைக்கும் வந்து கடை போட்டிருக்கின்றனர்.

மேற்கு மாவட்டங்களில் ஒவ்வொரு நான்கு ரோடு சந்திப்பிலும் மலையாளிகள் பத்தாண்டுகளுக்கு முன்னரே பேக்கரி போட்டுவிட்டனர். தின்பண்டங்களில் இன்று சொந்த பிராண்டுகளில் வந்துவிட்டனர்.

தமிழகத்தில் எந்தக் கட்டிட உரிமையாளரும் சேட்டு பசங்களுக்குத்தான் கடை வாடகைக்குத் தருவேன் என்று சொல்வதில்லை.

கம்பெனிகள், சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்டுகள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் யாரும் ‘இந்திக்கார கடை ஓனர்களுக்கு மட்டும் சப்ளை செய்யப்படும்’ என்று போர்டு மாட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கவும் இல்லை.

ஆமை போன பாதையை வைத்துக் கடல்வழி மார்க்கம் கண்டுபிடித்து வாணிபம் செய்த்தாகச் சொல்லப்படும் இந்தத் தமிழ்குடிக்கு என்னதான் ஆயிற்று?

ரிஸ்க் எடுக்க அனுமதிப்பதில்லை

கணிசமாகப் படித்து வேலைக்குப் போன பெற்றோர்கள் தங்களது வாரிசுகள் வியாபாரம் என்ற பெயரில் தங்களது பணத்தை ரிஸ்க் எடுக்க அனுமதிப்பதில்லை.

எப்படியும் ஒரு வேலை கிடைத்துவிடும் என்ற சூழல் இருப்பதால் வியாபாரம் பண்ணித்தான் பிழைக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாததால் பாதுகாப்பான வருமானத்துக்கு வழி தேடுவது இளைஞர்களின் வழக்கமாகவே ஆகிவிட்டது.

ஓர் ஊழியருக்கான திறன்களை வளர்ப்பதில் நாம் படிக்கும் பள்ளி, கல்லூரிகள் காட்டும் ஆர்வத்தில் 10% கூடத் தொழில் முனைவோரை உருவாக்க காட்டுவதில்லை.

கேம்பஸ் இன்டர்வியூக்களில் வேலை பெற்றவர்களை, அதன்பின்னரும் பிரபல நிறுவனங்களில் சம்பளம் வாங்கும் ஊழியர்களை அடையாளம் கண்டு விளம்பரப்படுத்திக்கொள்ளும் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கங்களுக்கு எத்தனை பேர் தொழில் முனைவோர் ஆனார்கள் என்றே பெரும்பாலும் தெரிவதில்லை.

படித்து முடித்ததும் வேலை கிடைக்கவில்லை என்றால் உயர்கல்வி படிப்பது, திருமணமாகும்வரை உயர்கல்வி கற்பது எனப் பொழுதை ஓட்ட படிக்கப்போவது தமிழகத்தில் இப்போது ஃபேஷனாகி வருகிறது.

இந்தப் பிரிவினர் ஒருபோதும் தொழில் தொடங்குவதில்லை.

ஆர்வமா ஆர்வக்கோளாறா?

ஒருத்தர்கிட்ட கைநீட்டி சம்பளம் வாங்கக் கூடாது, எனக்கு நான்தான் பாஸ், இன்னொருத்தன் எனக்கு வேலை சொல்ற நிலைமைல நான் இருக்க கூடாது என்றெல்லாம் சுயதொழில் செய்வது குறித்து இருக்கும் மாயை.

இந்த நினைப்பில் தொழில் ஆரம்பிப்பவர்கள் வெகுசீக்கிரம் மண்ணைக் கவ்வுவதுடன் மற்றவர்களின் உற்சாகத்தைக் குறைக்கும் கல்லுக்கட்டு சித்தர்களாகி விடுகின்றனர்.

ஊரில் எவனாவது தொழில் செய்ய ஆரம்பித்தால் இத்தகைய நபர்களுடைய கதைகளைச் சொல்லிப் பலரும் பயமுறுத்துவது வழக்கம்.

வியாபாரத்துக்கு வந்துவிட்டால் நாலு காசு போட்டு நாலு காசு சம்பாதிக்கத்தான் வந்திருக்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் ஆண்டசாதி பெருமை பேசிக்கொண்டு ஒரு மொக்கையான வட்டத்தை மட்டும் வைத்துக்கொள்வதும் ஒரு காரணம்.

உள்ளூரில் உள்ள நபரால் தொடங்கி நடத்த முடியாத கடைகளை எப்படிச் சின்னச்சின்ன சேட்டுப் பையன்கள் எடுத்து வெற்றிகரமாக நடத்துகின்றனர் என்பதை விரிவாக அலசாமல் ‘அவனுங்கள்லாம் ஒற்றுமையாக இருக்கின்றனர்’ என்று எளிதாக முடித்துக்கொள்கிறோம்.

Frugal Management

எந்தத் தொழிலுக்கும் சிக்கனம் என்பது மிக முக்கியமான ஒன்று. Frugal management என்று எம்பிஏ-க்களில் படிப்பார்கள்.

மற்றவர்களுக்கு ஒரு மணிநேரம் முன்னதாகக் கடை திறக்கும் அவர்கள் ஒரு மணிநேரம் பின்னதாகச் சாத்துவதில் ஆரம்பித்து, மதிய உணவைக்கூடக் கல்லாவுக்குக் கீழே அமர்ந்து பதினைந்து நிமிடத்தில் முடித்துக்வொள்வது முதல் குறைவான இலாபத்தில் நிறைய விற்கும் கலை வரை பலவற்றை அந்தந்த ஊர் மக்களின் பழக்கவழக்கங்களை, தேவைகளைப் பார்த்துக் கற்றுக்கொள்கின்றனர்.

நல்ல அனுபவமிக்க வியாபாரிகளுடன் பழகும் போது அவர்களிடமிருந்து கிடைக்கும் தொழில் நுணுக்கங்கள், அணுகுமுறைகள் விலை மதிப்பற்றவை.

கல்லாவில் உட்கார்ந்திருக்கும் நீங்கள் மதிய உணவு சாப்பிடும்போது வாடிக்கையாளர் வந்தால் என்ன செய்வீர்கள்? கொஞ்சம் உட்காருங்கள் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறேன் என்றுதானே சொல்வீர்கள்.

அப்படிச் சொல்லி, சாப்பிட்டு முடித்துக் கைக்கழுவிவிட்டுச் சென்று வியாபாரத்தை முடிக்கும்போது அந்த வாடிக்கையாளரையும் கைக்கழுவுகிறீர்கள்.

சாப்பாட்டைப் பாதியில் மூடி வைத்துவிட்டு வாடிக்கையாளரைக் கவனிக்கையில் உளவியல் ரீதியாக மிகச்சிறந்த பிணைப்பையும், நம்பிக்கையையும் உண்டாக்க முடியும் எனபது அனுபவஸ்தர்களுக்குத் தெரியும்.

போட்டிக்கு ஆள் இல்லாதவரை நமக்காக வாடிக்கையாளர் காத்திருப்பார்.

நாலு காசு சம்பாதிக்கத்தானே கடை போட்டு/கம்பெனி ஆரம்பித்து உட்கார்ந்திருக்கிறோம் என்று எளிமையாக எடுத்துக்கொண்டு மார்வாடி, சேட்டுப் பையன்கள் நடத்தும் கடைகளைக் கவனமாகப் பார்த்தால் இவையெல்லாம் ஒவ்வொன்றாகப் பிடிபடும்.

ஆடம்பரமும் வெட்டிச்செலவும்

ஓரளவுக்கு வியாபாரம் சூடு பிடித்து நாலு காசு புரள ஆரம்பித்தவுடன் ஏலச்சீட்டுப் பிடிக்கிறேன், ரியல் எஸ்டேட், நாட்டுமாடு வளர்க்கிறேன் என்று லினன் சட்டை மடிப்புக் கலையாமல் சப்ளையர்களுக்குக் கட்ட வேண்டிய பணத்தை எடுத்து ரொட்டேஷனில் விடுவது.

வார இறுதியில் சீமைச் சாராயத்துடன் தோப்புகளில் கேளிக்கை, கோச்சைக் கறி விருந்து, மாதக்கடைசி பில்லிங் முடித்தவுடன் ‘ஹேப்பி எண்டிங்’ கொண்டாட்டம்.

சிறப்பு ஸ்கீம் விற்பனைகள் மூலம் வருடத்துக்கு இரண்டுமுறை வெளிநாட்டுப் பயணம் எனத் திரிந்து 5-10 வருடங்களில் பெரும் நட்டத்தைச் சந்தித்து அவர்களைச் சுற்றியுள்ள உறவினர்களுக்கு, இளைஞர்களுக்குச் சொந்தத்தொழில் என்றாலே பெரும் பீதியை உண்டாக்கிவிடுவது.

ஆனால் மார்வாடிகள் சிறப்பு ஸ்கீம்களில் விற்ற புள்ளிகளைக் கிரெடிட் நோட் போட்டுச் சரக்காக எடுத்துக் காசாக்குவார்களே தவிரத் தாய்லாந்து பயணம் மேற்கொள்ள மாட்டார்கள்.

நம்மவர்கள் அவர்களது ஒட்டுமொத்த நடத்தை, சமூகத்தில் இயங்கும் விதம், பணத்தையும் நேரத்தையும் உறவுகளையும் கையாளும் விதம் என எதையுமே பார்க்காமல் அவர்களது கல்லாவில் காசு விழுவதை மட்டுமே பார்ப்பதில்தான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

பெண் தொழில் முனைவோர்

இந்தியாவில் தமிழகமும், குஜராத்தும்தான் பெண்களின் பெயரில் அதிகத் தொழில்முனைவோர்களைக் கொண்டவை.

ஏகப்பட்ட இளைஞர்கள் பணிபுரிந்தவாறே மனைவி பெயரில் தொழில் நடத்துவது தமிழகத்தில் மிக இயல்பான ஒன்று.

அவ்வாறு இல்லையே என்று தோன்றினால் நீங்கள் வேறு தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் பொருள்.

மூளைச் சலவையும் பாதுகாப்பும்

கார்ப்பரேட் எதிர்ப்பு என்ற பெயரில் சில லெட்டர் பேடு டம்ளர் கட்சிகள் இளைஞர்களைப் படுமுட்டாளாக்கும் செயல்களைச் செய்துகொண்டிருக்கின்றன.

உரிமையாளர் நிறுவனம், பங்காளி நிறுவனம், பிரைவேட் லிமிடெட் போன்றவை குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் உளறிக்கொண்டிருக்கின்றனர்.

கஷ்டப்பட்டுத் தொழில் நடத்தி வெற்றிகரமாக நடத்துகையில் சர்வதேச சூழல் அல்லது உள்ளூர் விதிமுறைகள் காரணமாகத் தொழில் நொடித்துவிட்டால் சோற்றுக்கு என்ன செய்வது என்ற புரிதல் இல்லாமல் பன்னாட்டு மாஃபியா, பனியா மாஃபியா, கார்ப்பரேட் மாஃபியா எனக் கற்பனை பயங்களை மற்றவர்களுக்கும் பரப்புவது இவர்களது வேலை.

உதாரணமாகப் பிளாஸ்டிக் கவர் செய்யும் இயந்திரங்களை இரண்டு கோடி ரூபாய்க்கு சொத்தை வங்கியில் அடகு வைத்து வியாபாரம் செய்கிறீர்கள்.

Break even இன்னும் ஒரு வருடத்தில் வந்துவிடும் என்ற சூழலில் அரசாங்கம் பிளாஸ்டிக்கைத் தடை செய்கிறது.

பக்கத்து மாநிலத்துக்குச் செல்வது அல்லது இங்கிருந்து விற்பது என எந்த முடிவு எடுத்தாலும் தொழிலைத் தொடர்வதற்கு மாதம் மூன்று நான்கு இலட்சம் ரூபாயை உள்ளே இறக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு கட்டத்தில் தொழில் நடத்த முடியாது எனும்போது Proprietor எனப்படும் முதலாளியாகப் பதிவு செய்து தொழில் நடத்தியவர் படிப்படியாக வளர்ந்திருந்தாலும் சொத்து முழுவதும் வங்கிக் கடனுடன் இணைக்கப்பட்டு நடுத்தெருவில் விடப்படுவார்.

அதேநேரத்தில் படிப்படியாக வளர்ந்து பிரைவேட் லிமிடெட் கம்பெனியாகப் பதிவு செய்து நடத்தியவரது வீடு வாசலாவது மிஞ்சும்.

இந்த மாதிரியான விரும்பத் தகாத சூழல்களில் சட்டப்பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணராமல் கார்ப்பரேட் எதிர்ப்புப் பேசிக்கொண்டிருக்கும் முட்டாள்களுக்கு மத்தியில் சேட்டான்கள் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் பதிவு செய்ய ஆரம்பித்து இன்று அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த வீரமிகு ஒறவுகள் விரைவில் அவர்களது கம்பெனிகளுக்கு வேலைக்குச் செல்லும் நாள் வரத்தான் போகிறது.

இளைஞர்களின் பிரச்சனைகள்

நமது இளைஞர்களின் மிகப்பெரிய பிரச்சினை சோம்பேறித்தனம்.

எதாச்சும் பண்ணனும் பாஸ் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்களே தவிர எதையும் ஆரம்பிக்கவே மாட்டார்கள்.

மந்திரத்தில் மாங்காய் காய்க்காது. ஆரம்பித்தால்தானே எப்படி இருக்கும் என்று தெரியும். சில பல இலட்சங்களை ஒரு தொழில் ஆரம்பித்து இழந்தால்தான் என்ன?

அந்த அனுபவத்தில் கிடைக்கும் புத்தி கொள்முதலுக்கு விலையே கிடையாது.

காமசூத்ரா படித்துக்கொண்டும் அதைப் பற்றி நாலு பேர் சொல்லும் கதைகளைப் கேட்டுக்கொண்டே இருந்தால் என்ன பயன் உண்டாகும்?

அதே போல்தான் அளவுக்கதிகமான சுய முன்னேற்ற நூல்களைப் படிப்பதும், வருவோர் போவோரிடமெல்லாம் ஆலோசனை கேட்டுக்கொண்டே இருப்பதும்.

பணம் இல்லாதது ஒரு பெரிய தடையே அல்ல. மனம் இல்லாததுதான் ஆகச்சிறந்த தடை. If you don’t do it, you won’t learn it.

நம் ஊரில் அவ்வளவு வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதைக் கண்ட வடக்கத்தியர்கள் இங்கே கடை விரிக்கும்போது நம்மைத் தடுப்பது எது?

விழித்துக்கொள் தமிழா!!

=========================

இதில் கூறப்பட்டுள்ள சிலவற்றைக் குறித்து எனக்குத் தெரியாது ஆனால், பெரும்பாலான கருத்துகளுடன் உடன்படுகிறேன். ஒன்றை உறுதியாகக் கூற முடியும்.

அது! பலரைப் போல எனக்கு RISK எடுக்கப் பயமுள்ளது.

இது குறித்த அல்லது இது தொடர்பான கட்டுரை பின்வருவது. அவசியம் படியுங்கள். நடுத்தர மக்களுக்கே உள்ள முக்கியப் பிரச்னை.

Read : நடுத்தர வகுப்பு மக்கள் என்பவர்கள் யார்?

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

4 COMMENTS

  1. நான் தொடர்ந்து அவரின் எழுத்துக்களை வாசித்து வருகின்றேன். என் வலைதளத்தில் எடுத்து போடலாம் என்று வைத்திருந்தேன். முந்திவிட்டீர்கள். நன்றி.

  2. கிரி, பல வருடங்களாக உங்களை தொடர்பவன் என்ற அடிப்படையில், இதுபோல ஒரு கட்டுரையை நான் உங்கள் தளத்தில் படித்ததாக நியாபகம் இல்லை.. உண்மையில் நான் தற்போது இருக்கும் சூழ்நிலையில் எனக்காக எழுதியுள்ளதாகவே தோன்றுகிறது… வெளிநாட்டிற்கு வந்து 11 ஆண்டுகள் கடந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சுயதொழில், இரண்டு நண்பர்களுடன் இணைத்து மூவருமாக நான் என்னுடைய பணியில் தொடர்ந்து கொண்டே) தொழில் ஆரம்பித்தோம்..

    இன்று வரை எங்களுக்குள் எந்த பிணக்கும் இல்லை.. ஒரே நேரத்தில் இரண்டு தொழில் தொடங்கினோம்.. தற்போது ஒரு தொழிலில் முழுக்க நட்டம்.. அந்த தொழிலை விட்டு விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டோம்.. கிட்டத்தட்ட என்னுடைய ஒரு ஆண்டு சம்பளத்தை முதலீடாக தொழிலில் போட்டுள்ளேன்.. ஆரம்பம் செய்யும் முன், மனைவியின் முதல் அர்ச்சனை : (உங்களுக்கு என் வீண் வேலை) என்பதில் தான் ஆரம்பமாயிற்று.. முதலீடு முழுக்க என்னுடைய சொந்த பணம்..

    பல ஆண்டுகள் யோசித்து, தீர்மானமாக ஒரு முடிவு எடுக்கும் போது, நமது கணிப்பு பொய்ப்பித்து போவதை ஏற்று கொண்டாலும், மனதின் ஒரு ஓரத்தில் வலி ஏற்படுகிறது.. குடும்பத்தின் அனேகமாக எல்லா கடமைகளையும் முடித்து, எதிர்காலத்தை கணக்கில் கொண்டு நான் சுயமாக எடுத்த முடிவு (சுய தொழில்) ஆனால் என்னால் அதில் வெற்றி பெற முடியவில்லை என்பதால், சில நேரம் என்னுடைய அடுத்த அடிகளை எடுத்து வைக்கும் போது இன்னும் கவனம் தேவை என்பதை உணர்த்துகிறது…
    =========================
    மந்திரத்தில் மாங்காய் காய்க்காது. ஆரம்பித்தால்தானே எப்படி இருக்கும் என்று தெரியும். சில பல இலட்சங்களை ஒரு தொழில் ஆரம்பித்து இழந்தால்தான் என்ன?

    அந்த அனுபவத்தில் கிடைக்கும் புத்தி கொள்முதலுக்கு விலையே கிடையாது.
    ========================
    சத்தியமான வார்த்தைகள்.. எனக்காகவே எழுதியது போல் உள்ளது.. நேரில் சந்திக்கும் நிறைய விஷியங்கள் பேசலாம் கிரி.. இந்த கட்டுரையை படித்த பின் ஒருவித புதுவிதமான தன்னம்பிக்கை உருவாகிறது..அவர் கூறிய நிறைய கருத்துகளுக்குடன் நானும் ஒத்து போகிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. @ஜோதிஜி 🙂

    @யாசின் நான் எழுதியதில்லை காரணம் நான் சுய தொழில் செய்தது இல்லை.

    உங்களுக்கு நிச்சயம் நிறைய அனுபவம் கிடைத்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!