மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இந்தியாவின் தேசிய மொழி இந்தி மற்றும் இந்தியால் தான் இந்தியா முன்னேறுகிறது என்ற பொய்யான தகவலைக் கொஞ்சம் கூடக் கூச்சம் இல்லாமல் பேசி இருக்கிறார். Image Credit
இதை இவர் மட்டுமல்ல, பல்வேறு வடமாநில தலைவர்களும் பேசி வருகிறார்கள். இப்படிப் பேசிப் பேசி அனைவரையும் மூளைச் சலவை செய்து வருகிறார்கள்.
இவர்கள் பேசுவதைக் கூட விட்டு விடலாம் ஆனால், தமிழகத்தில் உள்ளவர்களே கூட தமிழின், தமிழகத்தின் சிறப்பு அறியாமல் இந்தியைக் கட்டிக்கொண்டு அழுவதைப் பார்க்கும் போது கடுமையான வருத்தம் ஏற்படுகிறது.
GDP
தமிழகம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் [Gross domestic product (GDP)] இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களில் இரண்டு தென் மாநிலங்கள் உள்ளது. முதலிடத்தில் மஹாராஷ்ட்ரா.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மொழி அவசியமில்லை ஆனால், மொழியும் கூடுதல் பலம் அவ்வளவே.
இந்த வாதம் ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற ஒரு மொழி பேசும் நாடுகளுக்குப் பொருத்தமானது, பன்மொழி, பண்பாடுகள் கொண்ட இந்தியாக்கு பொருத்தமானதல்ல.
இதைப்படிக்கும் இந்தி ஆதரவாளர்கள், நீங்கள் இந்திக்கு எவ்வளவு வேண்டும் என்றாலும் முக்கியத்துவம் கொடுத்துக்கொள்ளுங்கள் அது உங்கள் விருப்பம்.
ஆனால், இந்தியை உயர்த்த தயவு செய்து பொய்யான தகவல்களைக் கொடுத்து மற்றவர்களை மூளைச் சலவை செய்யாதீர்கள்.
ஊழலில் இருந்தே தமிழகம் சிறப்பான இடம்
தமிழகம் கடந்த 30 வருடங்களில் எவ்வளவு மோசமான ஊழல்களில் சிக்கி வருகிறது என்பதை நாம் அறிவோம்.
இருப்பினும் நாம் இந்த அதீத வளர்ச்சியை உற்பத்தியில் பெற்று இருக்கிறோம் என்றால், நேர்மையான ஆட்சியாக இருந்தால், எப்படி இருக்கும்! என்ற கற்பனையை உங்களிடமே விடுகிறேன்.
தற்போதைய ஊழலில் எதிர்வரும் காலங்களில் வாய்ப்புகள் மிகக்குறைவு.
சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று பாருங்கள்
இந்தியைக் கண்டுகொள்ளாத தமிழகம் பின் தங்கி உள்ளதா! என்பதைக் காண எந்த ஒரு நாளும் எந்த நேரத்திலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று பாருங்கள்.
தினமும் பல்லாயிரக்கணக்கான வடமாநில மக்கள் பிழைப்பு தேடி சென்னையில் குவிந்து வருகின்றனர்.
இங்கே இருந்து பிரிந்து பல்வேறு தமிழக மாவட்டங்களுக்கும் சாரை சாரையாய் சென்று கொண்டு இருக்கிறார்கள்.
உங்களுக்கே சில நேரங்களில் இது சென்னை ரயில் நிலையமா அல்லது வட மாநில ரயில் நிலையமா! என்ற சந்தேகம் நிச்சயம் வரும்.
இந்தி படித்தால் முன்னேறலாம் என்று கூறும் அமைச்சர் வெங்கையாநாயுடு, முழுக்க இந்தி விரவி உள்ள அவர்கள் மாநிலங்களை விட்டு ஏன் பிழைப்புத் தேடி தமிழகம் வருகிறார்கள் என்பதற்கான காரணத்தைக் கூற முடியுமா?
அதிகரிக்கும் வட மாநில மக்களின் இடம்பெயர்வு
தமிழக மக்கள் பெற்றுள்ள படிப்பறிவு மற்றும் பொருளாதார மேம்பாடு காரணமாகத் தமிழக மக்கள் தொகை குறைந்து வருகிறது.
பொருளாதாரம் மேம்பாடு அடைவதால் செலவினங்களும் அதிகரித்து வருகிறது. எனவே, பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது
ஆனால், சமீப வருடங்களாக வட மாநில மக்களின் தமிழக இடம்பெயர்வு அதிகரித்து வருகிறது.
எதிர்காலத்தில் வெங்கையா நாயுடு கூற்று உண்மையாகும். என்னவென்றால் “இந்தி தெரிந்தால் முன்னேறலாம்” என்பது தமிழகத்தில் இருந்து சாத்தியமாகும்.
ஏனென்றால், எதிர்காலத்தில் வடமாநிலத்தவரே அதிகளவில் தமிழகத்தில் இருப்பார்கள். இது தான் எதார்த்தம்.
தற்போது அமைதியாக இருக்கும் இவர்கள் குறிப்பிட்ட சதவீத மக்கள் தொகையைப் பெற்ற பிறகு போராட்டம் நடத்தும் காலம் விரைவில் வரப்போகிறது.
இந்திப் பிச்சை எடுக்கும் மத்திய அரசு
மத்திய அரசு இந்தியை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அநேக இடங்களில் திணித்துக் கேவலமாகப் பிச்சை எடுத்து வருகிறது.
இவர்கள் இதைச் செய்ய வெட்கப்படவே இல்லை.
நேர்மையாக இல்லாத இவர்கள் தாங்கள் செய்யும் தவறுக்காக வெட்கப்படாத போது நம் மொழியைக் காக்க நாம் குரல் கொடுப்பதில் என்ன தவறு?
எனவே, தமிழ் மொழியை எங்கும், யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத் தராதீர்கள் அதே சமயம் எந்த மொழிக்கும் தனித்தன்மை உண்டு, மற்ற மொழிகளை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
தாழ்வுமனப்பான்மை உள்ளவர்களே தாய் மொழித் தமிழை கீழிறக்கி இந்தியை உயர்த்துவார்கள்.
வெங்கையா நாயுடு போன்ற அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் பிழைப்புக்காக, பொய்யான தகவல்களைக் கூறித் திரிவது கேவலமான செயல்.
மொழியைக் காக்க நினைப்பவர்கள் வெறியர்கள் ஆனால், வெட்கமே இல்லாமல் திணிப்பவர்கள் தேசிய பற்றாளர்களா? நல்லா இருக்குயா நியாயம்.
தொடர்புடைய கட்டுரைகள்
உங்களுடைய கட்டுரை ஏற்றுக்கொள்ளத்தக்கதுதான். இந்தியா முன்னேறுவது அந்த அந்தப் பகுதி உழைக்கும் மக்களால்தான். ஒரு மொழியால் அல்ல
ஆனால், நம்மிடம் இப்போது வேலை செய்யும் முனைப்புடன் உள்ள தொழிலாளர்கள் இல்லை/குறைவு. வேலைக்கென்றுள்ள ஒழுங்கும் குறைகிறது. அதனால்தான் எல்லா இடங்களிலும் வட மானிலத்தவர் நுழைகின்றனர் (அவர்களை வேலைக்கு வைப்பவர்கள் தமிழர், கடை உரிமையாளர்கள்). இதன் காரணம், ஏஜென்சி மூலமாக இந்த வடவர்கள் வருகின்றனர். நிறைய உழைப்பு, ஓரளவு கூலி, வேலைக்கு டிமிக்கி கொடுக்கமுடியாது (கொடுத்தால், ஏஜென்ட் இன்னொரு ஆளை அனுப்பிவிடுவார்). இப்போது முதலாளிகளுக்கு லாபம் இருக்கும் ( நீங்கள் சென்னையில் எந்தக் கடையையும் பார்க்கலாம். வடவர்கள் மயம்தான். அடையாறு ஆனந்த பவன், நாதன்ஸ் ஸ்வீட், பெரும்பாலான உணவகங்கள்). நான் இவர்களிடம் காரணம் கேட்டிருக்கிறேன். நம்ம பசங்க, சடக்கென்று லீவு போடுவானுங்க, வேற வேலையைத் தேடிப்போயிருவானுங்க, ஒரு அளவுக்குமேல் வேலை பார்க்கமாட்டாங்க என்றெல்லாம் எல்லோரும் ஒரே காரணத்தைச் சொல்கிறார்கள். எனக்கு மனதில் தோன்றியது, கம்யூனிஸ்ட் கட்சிகள் இத்தகைய வடவர் தொழிலாளிகளின் உரிமைக்கு இப்போது முயலவில்லையென்றால், தமிழர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். கம்யூனிஸ்டுகள் மட்டும்தான் இதனைச் செய்யும் துணிபும் நேர்மையும் உடையவர்கள்.
ஆனால் வரும் காலங்களில் முற்றிலுமாக தமிழக உழைப்பாளிகள் பாதிக்கப்படும்போது, நிலைமை முற்றியிருக்கும். வடவர்கள் இங்கு கோலோச்சி, பெரிய வாக்குவங்கியாக மாறியிருப்பர். இதனால் பாதிக்கப்படுவது, கீழ் மத்தியதர வர்க்கம் மற்றும் அதற்குக்கீழ்.
கிரி, சத்தியமா புரியவில்லை. மொழியின் மூலம் ஒரு நாட்டின் வளர்ச்சி தீர்மானிக்கப்படும் என்று. அடிப்படையில் பல பிரச்சனைகள் இருக்கின்ற பட்சத்தில் அரசு அவைகளை களைந்து முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யவேண்டும். எதிர்காலத்தை நினைத்தாலே சற்று பயமாக தான் இருக்கிறது. விழிப்புணர்வுக்கு நன்றி கிரி.
@நெல்லைத்தமிழன் நீங்கள் கூறியதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். ஊருக்கு செல்லும் போது நீங்கள் குறிப்பிட்ட அனைத்து பிரச்சனைகளையும் ஊரில் உள்ளவர்கள் கூறுவார்கள்.
@யாசின் அரசு “இந்தி” கண்ணாடியை கழட்டினால் மட்டுமே மற்ற விஷயங்கள் தெரியும்.. ஆனால் அவர்கள் கழட்ட மாட்டார்கள்.