மக்களைக் குறை கூறுவது சரியா? | தேர்தல் 2021

8
மக்களைக் குறை கூறுவது சரியா?

தேர்தல் முடிவுகள் வந்ததும் தங்களுக்குச் சாதகமாக வராத தொகுதிகளை விமர்சித்து வருகிறார்கள். மக்களைக் குறை கூறுவது சரியா? என்பதைப் பார்ப்போம்.

மக்களைக் குறை கூறுவது சரியா?

அனைவருக்குமே இவர் ஏன் தோற்றார்? இவர் எப்படி வெற்றி பெற்றார்? என்ற கேள்விகள், கோபம் இருக்கும்.

காரணம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணவோட்டத்தில் சிந்திப்பார்கள். யார் எப்படிச் சிந்தித்தாலும் வாக்களித்த மக்களைத் திட்டுவது சரியல்ல.

பணத்துக்காக வாக்களித்தவர்கள் இருப்பார்கள் ஆனால், அவர்களால் தேர்தல் முடிவுகள் சில தொகுதிகளில் மாறலாமே தவிர ஒட்டு மொத்த மாநிலத்துக்கும் பொருந்தாது. Image Credit

கோவை, சென்னை பகுதிகளில் அதிமுக திமுக பெரிய வெற்றி பெற்றதை வைத்து முட்டாள் கோவையன்ஸ், முட்டாள் சென்னையன்ஸ் என்று ட்ரெண்ட் செய்தார்கள்.

கொங்கு பகுதியைச் சார்ந்தவன் என்பதால் அப்பகுதியை பற்றி விரிவாகவும் மற்ற இடங்களைச் சுருக்கமாகவும் கூறுகிறேன்.

கொங்கு மண்டலம்

அதிமுக க்கு கொங்கு பகுதியில் பெரிய வெற்றி கிடைத்துள்ளதுக்குச் சாதி வாக்குகள் முக்கியக் காரணமாக விமர்சிக்கப்படுகிறது.

சாதி வாக்குகள் ஒரு காரணமாக இருக்கலாம் ஆனால், அதுவே காரணம் அல்ல.

காரணம், ஒரு சாதியினரின் வாக்கினால் மட்டுமே கொங்கு மண்டலம் முழுவதும் வெற்றி பெற முடியாது.

இதற்கு மற்ற காரணங்களையும் ஆராய வேண்டும்.

 • கொங்கு பகுதி சாதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக விமர்சிக்கப்பட்டாலும், மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது சாதுவானவர்களே (Not Aggressive).
 • துவக்கத்தில் இருந்தே திமுக அடாவடியானவர்கள் என்ற எண்ணம் பலரிடையே உள்ளது. அதோடு திமுக ஆட்சியில் கசப்பான நிகழ்வுகள் நடந்தன.
 • 2006 – 2011 ஆண்டுகளில் நடந்த மின்வெட்டு கோவை பகுதி நிறுவனங்களை அடியோடு சாய்த்தது, பலர் அதில் இருந்து மீளவே முடியவில்லை.
 • அமைச்சர்கள் பலர் நிறுவனங்களை மிரட்டித் தங்களுக்கு மாற்றினார்கள், திரும்ப நடக்கலாம் என்று பயப்படுகிறார்கள். இன்னும் ஆறா வடுவாக உள்ளது.
 • எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுக மீது கூடுதல் கரிசனம் உண்டு.
 • ஆ ராசா பேசிய பேச்சு, சென்டிமென்ட்டாகப் பலரை கோபப்படுத்தியது.
 • அத்திக்கடவு திட்டத்தைப் பழனிச்சாமி துவங்கியதுக்கு (80% முடிந்து விட்டதாகக் கூறப்படுகிறது) கொங்கு பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்புள்ளது.
 • சேலம் பகுதி வளர்ச்சி, குடிமராமத்து பணிகள் பரவலாக நடந்துள்ளன.
 • மொடக்குறிச்சியில் பாஜக வெற்றி பெற்றதுக்கு அதிமுகவினரின் வாக்குகள் மட்டுமே காரணமாக இருக்காது என்று நினைக்கிறேன்.
 • இன்னொரு வகையில் கூறுவதென்றால், கொங்கு பகுதியில் பாஜக ஆதரவு அதிகரித்துள்ளது, குறிப்பாகக் கவுண்டர் சமுதாயத்தில்.

இது போலப் பல காரணங்களைப் பட்டியலிட முடியும்.

சுருக்கமாக, எந்தக்கட்சி வந்தாலும் வழக்கமாக இருக்கும் லஞ்சம் ஊழல் இருந்தாலும், சாதாரணப் பொதுமக்கள் பெரியளவில் பாதிக்கப்படவில்லை.

அதாவது அமைச்சர், MLA வந்து மிரட்டுவார், நிறுவனத்தை முடக்குவார், நிலத்தை மிரட்டி எழுதி வாங்குவார்கள் என்ற நிலை இல்லை.

சிறு தொழில் செய்பவர்கள் ஆளுங்கட்சி தொல்லை இல்லாமல் இருந்தார்கள்.

மேற்கூறிய சம்பவங்கள் நடந்து இருக்கலாம் ஆனால், விவாதப்பொருளாக மாறி விவாதிக்கும் அளவுக்கு அதிகளவில் நடக்கவில்லை.

கோவை

வானதி ஸ்ரீநிவாசன் வெற்றி பெற்றதுக்குக் கமல் ஆதரவாளர்களும், பாஜக எதிர்ப்பாளர்களும் முட்டாள் கோவையன்ஸ் என்று திட்டிக்கொண்டுள்ளார்கள்.

பல காலமாக வானதி ஸ்ரீநிவாசன் மக்கள் பிரச்சனைகளுக்காக உடனிருப்பவர், உதவிகள் செய்தவர், அப்பகுதியை சார்ந்தவர்.

இவரும் எடுத்தவுடனே வெற்றி பெறவில்லை, பல தோல்விகளுக்குப் பிறகே இவ்வெற்றியை அடைந்துள்ளார்.

வேற்று இடத்தில் இருந்து வந்து கமல் போட்டியிட்டுள்ளார். அதோடு இப்பகுதிக்கு என்று கமல் என்ன செய்துள்ளார்? கோவை பகுதிக்கான இவருடைய பங்கு என்ன?

கமல் தற்போதுள்ள மன நிலையில் வானதி ஸ்ரீனிவாசனும் பல முறை இருந்தவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

போட்டியிட்ட அனைவருக்குமே வெற்றி எளிதாகக் கிடைத்து விடுவதில்லை.

வானதி ஸ்ரீநிவாசன் மட்டுமல்ல, கோவைப் பகுதியில் வெற்றி பெற்ற மற்ற அதிமுக வினருக்கும் மேற்கூறிய கொங்கு பகுதிக்கான காரணங்கள் பொருந்தும்.

இதையெல்லாம் எதுவுமே புரிந்து கொள்ளாமல், கொங்கு மக்களைத் திட்டிக்கொண்டு இருப்பது சரியல்ல.

சென்னை

சென்னை எப்போதுமே திமுக கோட்டையாக இருந்துள்ளது. ஏன் திமுக வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று இங்குள்ள மக்களுக்குத் தான் தெரியும்.

அதிமுக க்கு வாக்களிக்கவில்லை என்று முட்டாள் சென்னையன்ஸ் என்று கூறுவதா?

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த அதிமுக வெற்றி பெறவில்லை ஆனால், மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டத்தில் கையெழுத்திட்ட திமுக வெற்றி.

இவற்றை வைத்து அவர்களைத் திட்ட முடியுமா? இதையும் மீறி வாக்களித்துள்ளார்கள் என்றால், வேறு காரணங்கள் உள்ளது என்பதை உணர வேண்டும்.

எதனால் அதிமுக க்கு வாக்களிக்கவில்லை என்ற பிரச்சனையை ஆராய்ந்து சரி செய்ய வேண்டும். அதைச் செய்யாமல் மக்களைத் திட்டுவது சரியா?!

திருச்சி அனைத்து தொகுதிகளிலும் திமுக க்கு வாக்களித்துள்ளார்கள். அதனால் முட்டாள் திருச்சியன்ஸ் என்று கூறுவதா?

எதனால் வாக்கைப் பெற முடியவில்லை என்பதைக் கட்சிகள் ஆராய வேண்டும். அதை விடுத்து மக்களைக் குறை கூறுவது சரியல்ல.

இது அனைத்து இடங்களுக்கும், மாவட்டங்களும் பொருந்தும்.

வெறுப்புணர்வு வேண்டாம்

வாக்களிக்காத மக்களைத் திட்டுவது வெறுப்புணர்வையே கொண்டு வரும். இதுவே இந்த மண்டலம் இந்தக் கட்சிக்கு என்ற உணர்வைக் கொண்டு வரும்.

இது தவறான போக்கு.

எனக்குக் கொங்கு பகுதி சொந்த ஊர் என்றால், சென்னை வாழ்க்கை கொடுத்த ஊர். எப்போதுமே ஒரே தமிழகம் தான், பிரித்துப் பார்த்தது இல்லை.

கொங்கு பகுதியைச் சார்ந்தவன் என்பதால், கொங்கு பகுதியைப் பெருமையாகக் கூறி இருப்பேனே தவிர மற்ற பகுதிகளை இகழ்ந்ததில்லை.

தமிழகம் இந்தியாவின் பெருமைகளுள் ஒன்று, அதைச் சென்னை கோவை என்று சுருக்கி விடாதீர்கள்.

உங்கள் ஆதரவு கட்சிக்கு ஆதரவாக மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை என்பதை ஆராய்ந்து சரி செய்வதை விட்டுட்டு வெறுப்புணர்வை பரப்பாதீர்கள்.

ஒவ்வொரு மண்டலத்துக்கும், மாவட்டத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு, பிரச்சனைகள், உளவியல், கலாச்சாரம், எதிர்பார்ப்பு உண்டு.

எனவே, இவற்றைப் புரிந்து கொள்ளாமல், எல்லாம் தெரிந்தது போல மக்களை விமர்சிக்காதீர்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 | முடிவுக்குப் பின்

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது [2015]

மாநகரம் [2017] த்தா… இது சென்னைடா!

சின்னக் கோடம்பாக்கம் கோபி வயல்வெளி காட்சிகள்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

 1. “நீங்க என்ன ஆளுங்க” ன்ற கேள்வியை நீங்கள் எப்போதாவது எதிர்கொண்டு இருக்கிறீர்களா? அண்ணா. நான் எதிர்கொண்டிருக்கிறேன் கோவையில். 2015-2016 வருடம் கோவை கணியூரில். அப்புறம் இந்த கோவை காரங்க எப்பவும் வட மாவட்டம் தென் மாவட்ட மக்களை ஒரு ஏளனாமான பார்வை பாப்பாங்க. செம காண்டாகும். இந்த 2 ம் தான் எனக்கு கொங்கு மீது வெறுப்பு இருக்க காரணம். நான் இப்போது சென்னையில் வேலை பார்த்தாலும் அவ்வப்போது கோவையில் இருக்கும் நண்பனை பார்க்க போவேன்.

  அப்போது எந்த கோவையினிடமும் முகம் கொடுத்து பேச மாட்டேன். அரசியல் ரீதியா எனக்கு கோவை மீது எந்த கோபமும் கிடையாது. தனிப்பட்ட ரீதியில் தான்.

 2. அமைச்சர்கள் பலர் நிறுவனங்களை மிரட்டித் தங்களுக்கு மாற்றினார்கள், திரும்ப நடக்கலாம் என்று பயப்படுகிறார்கள். இன்னும் ஆறா வடுவாக உள்ளது. *இது உன்மையெனில் வழக்கு தொடுக்கலாம் இந்த பிரச்சினை எல்லா ஆட்சியிலும் உள்ளது* இது தவறான விமர்சனம் கிரி

 3. கிரி, மக்கள் மன நிலையை புரிந்து கொள்வது மிக கடினம்.. எங்கள் பகுதியை பொறுத்தவரை நெருக்கடியான காலங்களில் மக்கள் சிரமமாக இருந்தபோது மக்களின் கஷ்டங்களை உணர்ந்தவர் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சி.. உண்மையில் கட்சிக்கும் / கட்சியின் சின்னத்திற்கு ஒட்டு போடுவதற்கு பதில் யார் உங்கள் பகுதில் நேர்மையாக / உண்மையாக இருப்பவர்கள் தேர்தலில் நிற்கும் போது அவர்களை ஆதரிப்பது நல்லது.. புதுசேரியில் முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து யானம் பகுதில் 28 வயது சுயேட்சை நபர் வெற்றி பெற்று இருப்பது, ஆச்சரியமாக இருந்தாலும் அந்த பகுதி மக்களை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.. இந்த மாற்றம் தான் எல்லா இடத்திலும் நிகழ வேண்டும்.. மக்கள் ஒன்று கூடி ஒரு MLA வை தேர்ந்தேடுகின்றார், அவரின் தேவைக்காக சிறிது நாட்களுக்கு பின் அவர் வேறு கட்சிக்கு சென்று விடுகிறது.. ஆனால் ஒட்டு போட்ட மக்களின் நிலை???? தற்போது இது தான் ட்ரெண்ட்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 4. @கார்த்திக் உனக்கு இது போல சம்பவம் நேர்ந்ததுக்கு வருந்துகிறேன்.

  இது போல பிரச்சனைகள் அனைத்து ஊர்களிலும் உள்ளது கோவை மட்டுமல்ல.

  நான் இது போலத் தர்மசங்கடமான சூழ்நிலையை இந்தியாவில் சந்தித்தது இல்லை ஆனால், சிங்கப்பூரில் அவங்க நாட்டினருடன் சந்தித்தது உண்டு.

  “அப்போது எந்த கோவையினிடமும் முகம் கொடுத்து பேச மாட்டேன்.”

  இது தவறான புரிதல் கார்த்திக்.

  அனைவரும் நீ நினைப்பது போல கிடையாது, சிலர் இருந்து இருக்கலாம் அதற்காக இதையே மனதில் வைத்துக்கொண்டு இருக்க வேண்டாம்.

  பின்னர் ஒருவேளை நாம் தவறாகப் புரிந்து நடந்து கொண்டு விட்டோம் என்று நினைக்கலாம், இடைப்பட்ட காலத்தில் நீ அதிகம் இழந்து இருக்கலாம்.

  இது கோவைக்கு மட்டுமல்ல, எந்த இடத்துக்கும் பொருந்தும்.

  எனக்கு வட நாட்டினரை பிடிக்காது ஆனால், அவர்களிடையேயும் பல நல்ல நண்பர்கள் எனக்கு உள்ளனர்.

 5. @Mohamed Salih M

  “*இது உன்மையெனில் வழக்கு தொடுக்கலாம்”

  வழக்கா?! 🙂 . நாம் இந்தியாவில் இருக்கிறோம் Salih. அரசியல்வாதிகளைப் பகைத்துக்கொண்டெல்லாம் தொழில் செய்ய முடியாது / வாழ முடியாது.

  நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள்.

  இதெல்லாம் திரைப்படங்களுக்குப் பொருந்தலாம் அல்லது இலட்சத்தில் ஒருவர் எதிர்க்கலாம். நடைமுறையில் அனைவருக்கும் சாத்தியமில்லை.

  ” இந்த பிரச்சினை எல்லா ஆட்சியிலும் உள்ளது*

  இதைக்கூடவா புரிந்து கொள்ளாமல் எழுதுவேன். அதிமுக உத்தமர்கள் என்று கூறுவது என் நோக்கமல்ல, அதை கூற முடியாது, கூறினாலும் நகைப்பாகி விடும்.

  இதைக் கட்டுரையிலேயே குறிப்பிட்டுள்ளேனே! நீங்கள் கவனிக்க தவறி இருக்கலாம்.

  *****சுருக்கமாக, எந்தக்கட்சி வந்தாலும் வழக்கமாக இருக்கும் லஞ்சம் ஊழல் இருந்தாலும், சாதாரணப் பொதுமக்கள் பெரியளவில் பாதிக்கப்படவில்லை.

  அதாவது அமைச்சர், MLA வந்து மிரட்டுவார், நிறுவனத்தை முடக்குவார், நிலத்தை மிரட்டி எழுதி வாங்குவார்கள் என்ற நிலை இல்லை.

  சிறு தொழில் செய்பவர்கள் ஆளுங்கட்சி தொல்லை இல்லாமல் இருந்தார்கள்.

  மேற்கூறிய சம்பவங்கள் நடந்து இருக்கலாம் ஆனால், விவாதப்பொருளாக மாறி விவாதிக்கும் அளவுக்கு அதிகளவில் நடக்கவில்லை.*****

  “இது தவறான விமர்சனம் கிரி”

  உங்கள் எண்ணவோட்டத்துக்கு கருத்துகள் இல்லையாததால், உங்களுக்கு அவ்வாறு தோன்றி இருக்கலாம்.

  எப்படி இருந்தாலும், என் கருத்தை நாகரீகமாக முன் வைக்கிறேன், கேள்வி கேட்டால் பதில் அளிக்கிறேன். ஒதுங்கி ஓடுவதில்லையே!

  என் மனசாட்சி படி எழுதுகிறேன் அதனால், எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்க முடியும். தவறு என்றால், ஒத்துக்கொள்ள முடியும்.

  நீங்கள் கருத்திட்ட பல கட்டுரைகளில் சம்பந்தமே இல்லாமல், ரஜினியை அநாகரீகமாக விமர்சித்து இருப்பீர்கள். அது உங்களுக்குத் தவறான விமர்சனமாகத் தோன்றியதில்லையா?!

  இதை நான் கேட்க விரும்பவில்லை ஆனால், உங்கள் கேள்வி கேட்க வைத்து விட்டது.

 6. @யாசின்

  கிரி, மக்கள் மன நிலையை புரிந்து கொள்வது மிக கடினம்.. எங்கள் பகுதியை பொறுத்தவரை நெருக்கடியான காலங்களில் மக்கள் சிரமமாக இருந்தபோது மக்களின் கஷ்டங்களை உணர்ந்தவர் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சி”

  மகிழ்ச்சி யாசின். உங்கள் பகுதிக்கு நல்லது செய்வார் என்று நம்புகிறேன்.

  “உண்மையில் கட்சிக்கும் / கட்சியின் சின்னத்திற்கு ஒட்டு போடுவதற்கு பதில் யார் உங்கள் பகுதில் நேர்மையாக / உண்மையாக இருப்பவர்கள் தேர்தலில் நிற்கும் போது அவர்களை ஆதரிப்பது நல்லது..”

  இது சரியானது என்றாலும் நடைமுறைக்கு ஒத்து வராது யாசின்.

  தலைமை எப்படியோ அதையொட்டியே ஆட்சியும் அமையும். ஆளுங்கட்சி ஆதரவு இல்லாமல், எந்த MLA வும் பெரியளவில் மக்களுக்கு உதவி செய்து விட முடியாது.

  தலைமை சரியில்லையென்றால், அனைத்துமே தவறாக செல்லும். எனவே, இங்கே தலைமையே முக்கியத்துவம் பெறுகிறது.

  திமுக தொங்கு சட்டமன்றமாக இல்லாதது மகிழ்ச்சி. இல்லையென்றால், கூட்டணி கட்சியினரின் மிரட்டலுக்கு பணிந்து எதையும் தைரியமாகச் செய்ய முடியாது.

  ஸ்டாலின் வந்ததில் எனக்கு விருப்பம் இல்லையென்றாலும், தனிப்பெரும்பான்மை பெற்றது நல்லது, தமிழகத்துக்கு ரொம்ப நல்லது.

  “புதுசேரியில் முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து யானம் பகுதில் 28 வயது சுயேட்சை நபர் வெற்றி பெற்று இருப்பது, ஆச்சரியமாக இருந்தாலும் அந்த பகுதி மக்களை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது”

  நீங்கள் கூறிய பிறகே விசாரித்துப் பார்த்தேன்.

  புதுச்சேரியின் கட்டுப்பாட்டில் ஆந்திராவில் ஒரு பகுதி இருப்பதே தற்போது தான் எனக்குத் தெரியும். மாநிலமே வேறு என்பதால், சுயேச்சை வெற்றி பெற்று இருக்க வாய்ப்புள்ளது.

  முதலில் இரு இடங்களில் போட்டியிடுவதற்கு தடை கொண்டு வர வேண்டும்.

  இங்கே சுயேச்சை வெற்றி பெற்றதால் பரவாயில்லை, இல்லையென்றால், இன்னொரு தேர்தலை இங்கே நடத்தி இருக்க வேண்டியதிருக்கும்.

  “மக்கள் ஒன்று கூடி ஒரு MLA வை தேர்ந்தேடுகின்றார், அவரின் தேவைக்காக சிறிது நாட்களுக்கு பின் அவர் வேறு கட்சிக்கு சென்று விடுகிறது.. ஆனால் ஒட்டு போட்ட மக்களின் நிலை????”

  கட்சி மாறல் தடை சட்டம் உள்ளது ஆனால், அதன் நிலை என்னவென்று விரிவாகத் தெரியவில்லை.

 7. Arumayana padivu. Naan Tiruvallur karan anal Kovai meedu kadhal kondavan. Coimbatore karakalin kanivu solli maladu, chennaiyilo engal orilo edirparka mudiyadu

 8. @மனோஜ் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்புள்ளது. அதனால், நாம் காணாததை இன்னொரு இடத்தில காணும் போது அதன் மீது பிரம்மிப்பு, விருப்பம் உண்டாகிறது.

  நான் கோவையைச் சார்ந்தவன் என்றாலும் சென்னை மீது அதிக காதல் கொண்டவன் 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here