பண்ணாரி அம்மன் கோவில் செல்ல முடிவு செய்யக் காரணம் கடவுளை வணங்க அல்ல.
அக்கா ஊர் அரியப்பம்பாளையத்தில் (சத்தி) இருந்து இரு சக்கர வாகனத்தில் பண்ணாரி செல்வது என்பது அசத்தலான அனுபவம்.
அழகான, தரமான சாலை, இரு புறமும் காடு, போக்குவரத்து நெரிசலற்ற சாலை என்று சுகமான பயண அனுபவமாக இருக்கும்.
பண்ணாரி அம்மன்
கோவில் சென்று விரைவில் சாமி கும்பிட்டுவிட்டு மீதி நேரம் கோவிலைச் சுற்றிச் செலவழிப்பது என்று முடிவு செய்து இருந்தேன்.
தற்போது கும்பாபிஷேகம் நடைபெற்று இருப்பதால், புதுப்பிப்பு பணிகளும், மறு சீரமைப்புப் பணிகளும் நடைபெற்று இருந்தன.
கோவிலைச் சுற்றி மதில்கள், பிரகாரங்கள் என்று பிரம்மாண்டமாக இருந்தது.
பண்ணாரிக்கு ஒரு சிறப்பம்சம் இங்கே கோவிலைத் தவிர வேறு ஒன்றுமே அப்பகுதியில் இருக்காது.
இன்னும் வணிக நோக்கில் நாசமாகாத ஒரு பகுதியாகத் தொடர்கிறது.
உணவு விடுதிகளோ, தங்கும் விடுதிகளோ அல்லது வணிகக் கடைகளோ, வீடோ எதுவுமே இருக்காது காரணம், காட்டுப் பகுதி என்பதால்.
திருவிழாவின் போது அதிகக் கடைகள் வரும், சில கடைகள் மட்டுமே நிரந்தரமாக இருக்கும். மற்றபடி அமைதியான இயற்கை சூழ்ந்த (கெடுக்காத) கோவில்.
இது போல ஒரு இடத்தைக் கற்பனை செய்து பாருங்கள்! நினைத்தாலே சுகமாக இருக்கிறது அல்லவா! 🙂 நம்முடைய நாகரீகம் பெரியளவில் பாதிக்காத இடம்.
யானை
இங்கே யானை மற்றும் ஆபத்தான மிருகங்கள் வர வாய்ப்புள்ளதாலே இன்னும் இதன் இயற்கைத் தன்மையை இழக்காமல் இருக்கிறது.
இல்லையென்றால், மனிதர்கள் அதிகரித்து, கட்டிடங்கள் உருவாகி இயற்கைக் காடுகள் அழிந்து கட்டிடக் காடுகளாகி நாசமாகி இருக்கும்.
“தாளவாடி” வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் பண்ணாரி வழியாகத் தான் செல்லும். செல்பவர்கள் கோவிலுக்குச் சென்று வணங்கிச் செல்வார்கள்.
சத்தியில் (சத்தியமங்கலம்) இருந்து சிறப்புப் பேருந்துகள் பண்ணாரிக்கு வரும் அதோடு மைசூர் செல்லும் பேருந்துகளும் வரும்.
எனவே, தற்காலிக இடமாக இருப்பதால் மட்டுமே பண்ணாரி தப்பித்து வருகிறது. இப்படியே தொடர வேண்டும் என்பதே எங்கள் மக்களின் விருப்பம்.
50 நிமிடப்பயணம்
எங்கள் வீட்டில் இருந்து அதிகபட்சம் 50 நிமிடங்களிலும், அக்கா வீட்டில் இருந்து 25 நிமிடங்களிலும் பண்ணாரிக்குச் செல்லலாம்.
கோவிலில் மதில்கள் கட்டப்பட்டு அழகுபடுத்தப்பட்டு இருந்தாலும், முன்பு இருந்த இயற்கை அழகு குறைந்தது போல உள்ளது.
முன்பு பரந்தவெளியாகக் கட்டுப்பாடற்று இருக்கும். தற்போது கட்டுப்பாடு வந்தது போல உணர்வு இருப்பினும் அழகாக உள்ளதை மறுக்க முடியாது.
இங்கே வந்ததே இயற்கையை ரசிக்கத்தான். எனவே, சாமியை விரைவாகக் கும்பிட்டு விட்டு வெளியேறலாம் என்று வந்தால், வரிசை நகராமல் இருந்தது.
அக்காவிடம் “பேசாம வெளியவே நின்று கும்பிட்டு போயிடுவோம்” என்று கூறினேன். இல்லை, கூட்டம் நகர்ந்து விடும் என்று கூறி நிற்கக் கூறினார்.
பின்னர், அது 6 மணி பூசைக்காக நின்ற கூட்டம், வெளியேற முடியாதபடி பின்னால் கூட்டம் அமர்ந்து விட்டது. வேறு வழியே இல்லாமல், நிற்க வேண்டியதாகி 1 மணி நேரம் கடந்து விட்டது.
பண்ணாரி அம்மனை அருகே சென்று பார்த்து விட்டே சென்றோம். “அதெப்படி அவ்வளோ சீக்கிரம் நீ போவே!” என்று பண்ணாரி அம்மன் நினைத்ததோ! 🙂 .
இருளாகி விட்டதால், வழியில் யானை வர வாய்ப்புள்ளதால் அதிக நேரம் இருக்க முடியாமல் கிளம்ப வேண்டியதாகி விட்டது.
“கிளம்பிட்டீங்களா! கிளம்பிட்டீங்களா!” என்று அம்மா தொலைபேசியில் அழைக்க ஆரம்பித்து விட்டார். யானை பயம் 🙂 .
கொசுறு
கோபி, சத்தி, திருப்பூர், ஈரோடு, கோவை பகுதி மக்கள் பேருந்தில் குறைந்த பட்சம் பாட்டு இருந்தாலே ஏறுவார்கள்.
பேருந்தும் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு இருக்க வேண்டும். இல்லையென்றால், மதிக்கமாட்டார்கள்.
எனவே, எங்கள் பகுதியில் தொலைக்காட்சியுடன் தான் பெரும்பாலும் தனியார் பேருந்துகள் இருக்கும். அரசுப் பேருந்துகளில் கூடப் பாடல்கள் ஒலிக்கும்.
நானும் வினயும் சத்தியில் இருந்து கோபி சென்ற பேருந்தில் தொலைக்காட்சி. பிரபு மீனா நாசர் நடித்த படம். மீனாவை நாசர் கடத்த, பிரபு குதிரையில் துரத்துவார்.
வினய், குதிரையைப் பார்த்து “அப்பா! எனக்குக் குதிரை வாங்கிக்கொடுங்க!” என்றான்.
இது என்னடா வம்பா இருக்கு! என்று பார்த்துட்டு இருக்கும் போது பாலத்தில் வெடிகுண்டு வைத்து நாசர், பிரபுவைக் குதிரையோடு காலி செய்துடுவார்.
பிரபு அவ்வளோ தான் என்று நினைத்தால், பிரபு மட்டும் எழுந்து வந்துட்டார்.
சரி என்று “டேய்! பார்த்தியா குதிரை வாங்குனா இந்த மாதிரி ஆகிடும் அதனால குதிரை வேண்டாம்” என்றேன்.
“ம்ம்ம் அப்படின்னா எனக்கு “சிங்கம்” வாங்கிக்கொடுங்க!” என்றான். இது ஆவரதுக்கில்ல என்று “பேசாம மீனா அத்தையைப் பாரு” என்று கூறி விட்டேன்.
அடுத்த நாள், எப்போது ஊருக்குச் சென்றாலும் செல்லும் “கருங்கரடு முருகன் கோவில்” சென்று, இவன் கேட்டான் என்று எங்கள் தோட்டத்துக்குச் சென்று வந்தோம்.
அங்கே மாடு, கோழி, தண்ணீர் தொட்டி, மீன் மற்றும் மாட்டுக்குத் தீன் என்று ஓடிக்கொண்டு இருந்தான்.
வெயில் தான் கடுமையாக இருந்தது. இப்படிங்கறதுக்குள்ள இரண்டு நாள் ஓடி விட்டது. வினய் இரண்டு நாள் மகிழ்ச்சியாக இருந்தான்.
பயணம் அவனுக்குப் புத்துணர்வை அளித்து இருக்கும் என்று நம்புகிறேன், உற்சாகமாக இருந்தான்.
அடுத்த மாதம் திரும்ப இது போல வரலாமா என்றேன்.. பெரிதாகத் தலையை ஆட்டினான். எனவே, இது சிறப்பான பயணமே!
எனக்கும் இது தான் முதல் பயணம், இவனைத் தனியாக அழைத்து வருவது.
சிங்கப்பூரில் இருந்து இந்தியா வந்த பிறகு என் வாழ்க்கை முறையே மாறி விட்டது. இழந்த அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டு இருக்கிறேன்.
என்ன தான் சொல்லுங்க.. நம்ம ஊரோட மகிழ்ச்சியே தனி தான்!
இந்த மாத இறுதியுடன் சிங்கப்பூரில் இருந்து வந்து ஒரு வருடம் நிறைவு பெறுகிறது. இப்பத்தான் வந்த மாதிரி இருக்கு அதுக்குள்ளே ஒரு வருடம்!!
Read: “Foreign Return” வாழ்க்கை எப்படி இருக்கு?!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
//“பேசாம மீனா அத்தையைப் பாரு”//
🙂 🙂 🙂
மாளவிகா படம் ஓடியிருந்தால் என்ன சொல்லியிருப்பீங்க கிரி?
சக்தியுடன் இரு முறை பண்ணாரிக்கு சென்றதுண்டு.. எப்படியும் பத்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். இந்த நிகழ்வு உண்மையில் வியப்பாகவும், மகிழ்வாகவும் இருக்கிறது. நம்முடைய கலாச்சாரத்தை, பழக்கவழக்கத்தை நம் குழந்தைகளுக்கு யார் கற்று கொடுப்பது???? கற்று கொடுக்க வேண்டிய சமூகமும், பள்ளிகளின் நிலையும் தலைகீழாக இருக்கிறது.நமது பொறுப்பு மிக முக்கியமாக இருக்கிறது.
இதுபோல பாதுகாப்பான அனுபவ பயணங்கள் தொடர வேண்டும். சற்று நகர வாழ்க்கைக்கு விடை கொடுத்து விட்டு கிராமத்தையும் ரசிக்க குழந்தைகள் கற்று கொள்வார்கள். சிறு வயதிலே இதை கற்று கொள்ளவில்லை எனில் பின் மிக கடினம். கிராமம் என்றாலே ஏதோ அழுக்கு படிந்த சுத்தமற்ற இடம் என்ற மனநிலை வரலாம்.
REAL PLAY STATION நமது கண்ணுக்கு முன் கிராமத்தில் உள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும். உங்கள் முயற்சி பாராட்டப்படவேண்டிய ஒன்று. நேரம் இருப்பின் The Way Home (2002 film) கொரிய படத்தை இதுவரை பார்க்கவில்லை என்றால் பார்க்கவும். இந்த பதிவை கண்டு ஒரு கிராமத்தானாக மிகவும் மகிழ்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி கிரி.
//“பேசாம மீனா அத்தையைப் பாரு” //
என்னது மீனா அத்தையா? அய்யகோ இது என்ன அநியாயம். இதெல்லாம் என்னால
தாங்க முடியாது.
பண்ணாரி அம்மனை தரிசித்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது அண்ணா. சபரிமலை செல்லும்போது தான் எங்களுக்கு தரிசனம் செய்ய வாய்ப்புக் கிடைக்கும். நான்கு வருடங்களாக நான் சபரிமலை பயணம் மேற்கொள்ளவில்லை.
சில பல மாதங்கள் நான் மேற்கு மாவட்டங்களில் வேலை நிமித்தமாக தங்கி இருந்தபோது செல்லலாம் என்று நினைத்ததுண்டு. ஆனால் செல்லமுடியவில்லை.
இப்போது இருக்கும் ஆலயம் நன்றாக அழகாக இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். உறுதிப்படுத்திவிட்டீர்கள்.
உங்கள் பால்ய நண்பருக்கும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் அண்ணா.
அப்புறம் இந்த “கருங்கரடு முருகன் கோவில்” எங்கு உள்ளது அண்ணா. கொஞ்சம் விளக்கம் கொடுத்தால் நாங்களும் தரிசனம் செய்வோம்.
@காத்தவராயன் மாளு வந்து இருந்தால், நான் எதுவுமே சொல்ல வேண்டியதில்லை.. அவனே மாளுக் குட்டி ன்னு சொல்லி இருப்பான்.. அப்படித்தான் சொல்லி வைத்து இருக்கிறேன் 🙂 🙂
@யாசின்
” நம்முடைய கலாச்சாரத்தை, பழக்கவழக்கத்தை நம் குழந்தைகளுக்கு யார் கற்று கொடுப்பது???? கற்று கொடுக்க வேண்டிய சமூகமும், பள்ளிகளின் நிலையும் தலைகீழாக இருக்கிறது.நமது பொறுப்பு மிக முக்கியமாக இருக்கிறது.
பாதுகாப்பான அனுபவ பயணங்கள் தொடர வேண்டும். சற்று நகர வாழ்க்கைக்கு விடை கொடுத்து விட்டு கிராமத்தையும் ரசிக்க குழந்தைகள் கற்று கொள்வார்கள். ”
சரியா சொன்னீங்க யாசின். அவனுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கமே நான் இவனை அழைத்துச் சென்றது.
இப்படம் பார்க்க முயற்சிக்கிறேன்.
@கார்த்தி
“என்னது மீனா அத்தையா? அய்யகோ இது என்ன அநியாயம். இதெல்லாம் என்னால
தாங்க முடியாது.”
கார்த்தி பின்ன இவன் என்ன அக்கான்னா சொல்ல முடியும். இப்ப மீனாவோட பெண்ணுக்கே என் பையன் வயசு ஆகுது 🙂
பண்ணாரி கோவில் செமையா இருக்கு இப்ப.
கார்த்தி, கருங்கரடு கோவில் கோபியில் இருந்து அந்தியூர் செல்லும் வழியில் உள்ளது. வாய்ப்புக் கிடைத்தால் சென்று வா.
இந்த சுட்டியில் படங்கள் உள்ளது https://www.giriblog.com/my-home-and-village
நன்றி அண்ணா ……..
தல நான் ஏற்கனவே சொன்ன மாதிரி எப்ப பயண குறிப்பு புக் போட போறீங்க
புக் exhibition வர போகுது 🙂
எப்பவுமே உங்க பயண குறிப்பு கு நான் தீவிர ரசிகன் காரணம் அதோட nativity மாறாம குடுப்பீங்க
வாழ்த்துக்கள் தல
– அருண்