வியாபாரம், தொழில் செய்யத் தைரியம், தன்னம்பிக்கை மட்டுமல்லாது இதன் மீதான ஆர்வம், தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளும் திறமை ஆகியவையும் அவசியம். தொழில் துவங்க நினைக்கிறீர்களா? கட்டுரை இவற்றை விவரிக்கிறது.
Derby Vijay Kapoor
தமிழக மக்களுக்குப் பரிட்சயமான உடை Brand Derby. தனித்துவமான துணி வகைகளைக் கொண்ட Derby க்கு ரசிகர்கள் உள்ளார்கள். Image Credit
தொழில் துவங்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் உற்சாகம் அளிப்பதாகவும், எதைச் செய்யலாம் செய்யக் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக இந்நிறுவன உரிமையாளர் விஜய் கபூர் பேட்டி இருந்தது.
தான் கடந்து வந்த பாதையை மிகச் சுவாரசியமாகக் கூறி இருந்தார்.
வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறி வந்ததை, கேட்பவர்கள் காதில் ரத்தம் வரும்படியும் கூறலாம் இவர் கூறுவது போலவும் கூறலாம் 🙂 .
ஒரு பொருளைப் பேசி விற்க திறமை தனக்கு இருந்ததாகக் கூறும் இவர் பேசுவதைப் பார்த்தால், மறுக்கத் தோன்றாது.
ஏனென்றால், இவர் பேசுவது கேட்பவரை ஈர்க்கும்படியுள்ளது.
விஜய் கபூர் பஞ்சாபை சார்ந்தவர் ஆனால், தமிழகத்தில் வளர்ந்தவர். தமிழகத்தைப் பற்றி இவர் கூறும் கருத்துகள் நமக்குப் பெருமையளிக்கும் செய்தி.
தொழில் துவங்க நினைக்கிறீர்களா?
தொழில் துவங்க துவக்கத்தில் இருந்தே ஆர்வம், அதற்கான முனைப்பு இருக்க வேண்டும் என்கிறார். 20 – 30 வயது வரை தொழில் கற்று அதே நேரத்தில் 30% பணத்தைச் சேமிக்க அறிவுறுத்துகிறார்.
எந்தத் தொழிலில் இறங்கினாலும் அத்தொழில் பற்றிய அனைத்தையும் கற்றுக்கொள்வது அவசியம்.
அப்போது தான் நம்மை ஏதாவது காரணம் கூறி மற்றவர்கள் ஏமாற்ற முடியாது.
எனவே, 8 மணி நேர உழைப்பு இருக்க வேண்டிய இடத்தில் 16 மணி நேர உழைப்பைக் கொடுத்துக் கற்றுக் கொள்ள வேண்டும்.
புதிய வழிமுறைகளைக் கையாள வேண்டும், புதிய சிந்தனைகளைச் செயல்படுத்தி மக்களை ஈர்க்க வேண்டும்.
இலாபம் எப்போது கிடைக்கும்?
முதல் ஓரிரு வருடங்கள் இலாபத்தை எதிர்பார்க்க முடியாது.
காரணம், முதலீட்டைத் திரும்பப் பெற வேண்டும், நம் பொருள் / சேவை மற்றவர்களைச் சென்றடைய வேண்டும்.
எனவே, இடைப்பட்ட காலத்தில் கடுமையான உழைப்பை (இரு மடங்கு உழைப்பு) கொடுத்துச் செயல்பட வேண்டும்.
தொழில் துவங்கி விட்டால், விரைவில் வீட்டுக்குப் போவது, மதியம் தூங்கி விட்டு வருவது என்று அலட்சியமாக இருக்கக் கூடாது.
தொழில் வளரும் வரை இரு மடங்கு உழைப்பு அவசியம்.
இதன் பிறகே இலாபம் பற்றி யோசிக்க வேண்டும்.
Brand
நிறுவனத்தின் Brand மக்களைச் சென்றடைய என்னென்ன வழிகள் உள்ளதோ அவற்றைப் பின்பற்ற வேண்டும்.
நிறுவன இலாபத்தில் 10% விளம்பரத்துக்காக ஒதுக்கி விடுவதாகக் கூறுகிறார்.
துவக்கத்தில் சாதாரண டைலர் கடை வைத்து இருந்தவர், வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்காக Derby Brand ஆக மாறியிருக்கிறார்.
தனது Brand யைப் பிரபலப்படுத்த முயற்சிகளை எடுத்தது அதுவும் 90’s துவக்கத்தில் தன் Brand யைப் பிரபலப்படுத்த எடுத்த முயற்சிகள் சிறப்பு.
அதாவது இணையம், சமூகத்தளங்கள், தொழில்நுட்பம் பிரபலமாகாத சமயத்தில்.
இலாபம் / நட்டம்
தொழில் என்றால் இலாபம் நட்டம் இரண்டையும் கடந்து செல்ல வேண்டும்.
தான் சம்பாதித்த பணத்தை முதலீடாக வைத்து மற்ற மாநிலங்களிலும் கிளை பரப்பியுள்ளார் ஆனால், தமிழகத்தில் Derby பிரபலமாக உள்ளது போல மற்ற மாநிலங்களில் இல்லாததால் வெற்றியடையவில்லை.
இதனால் அனைத்து கிளைகளையும் மூடிப் பணத்தைத் திருப்பித் தந்ததில், அவர் சம்பாதித்த பணம் அனைத்தையும் கிட்டத்தட்ட இழந்துள்ளார்.
இதற்கு இவர் கூறும் காரணம் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தாலும், இது குறித்து யோசிக்காமல் எப்படி இவ்வளவு கிளைகளைத் திறந்தார் என்றும் தோன்றுகிறது.
காரணம், முதலீடு அதிகம் எனும் போது சாதகபாதகங்களை அலசி ஆராய்ந்த பிறகே செய்ய முடியும்.
தமிழகமும் வியாபாரமும்
துவக்கத்தில் பலர் பொருளாதாரத்தில் சிரமமாக இருந்தால், தமிழகத்தில் தொழில் துவங்க முதலீடு இல்லை என்ற நெருக்கடி காரணமாக முடியாமல் போனது.
ஆனால், தற்போது மக்கள் பொருளாதார ரீதியாக மேம்பட்டுள்ளார்கள்.
அதோடு மத்திய அரசும் சுயசார்பு தொழில் முன்னேற்றத்தில் அதிக ஆர்வம் காட்டுகிறது. வங்கிகள் மூலமாகக் கடன், சலுகைகள் வழங்குகிறது.
தற்போது பலர் இந்தியளவில் தொழில் துவங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
Startup நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியும் பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் இளைஞர்கள் தொழில் துவங்கும் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், மற்ற மாநிலத்தவர் தமிழகத்தில் தொழில்களைத் துவங்கி வெற்றி பெறுகிறார்கள்.
ஏராளமான வாய்ப்புகளும், ஆதரவு தரும் மக்களும் இருந்தும் நம் மாநிலத்தவர் பயன்படுத்திக்கொள்ளாதது வேதனை அளிக்கிறது.
விஜய் கபூர் குறிப்பிட்டது போலத் தினமும் 16 மணி நேர கடும் உழைப்பு தேவை.
இதற்கு நம் இளைஞர்கள் தயாராக இல்லையென்பதாகத்தான் சமீப காலச் சம்பவங்கள் உணர்த்துகிறது.
இந்நிலை மாறித் தமிழகமும் பல நிறுவனங்களைத் துவங்கி, வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று வேண்டுவோம்.
விஜய் கபூர் பேச்சு அதிக தன்னடக்கமாகவும் இல்லாமல், கடந்து வந்த பாதையை மிக அழகாக, கேட்பவருக்கு உற்சாகம் தரும் வகையிலும் இருந்தது சிறப்பு.
பேட்டியெடுத்த ஆவுடையப்பன் அனைவரும் கேட்க நினைத்த கேள்விகளைக் கேட்டது மகிழ்ச்சி.
தொழில் துவங்க நினைக்கும், தொழில் செய்து கொண்டு இருக்கும் ஒவ்வொருவரும் இப்பேட்டியை பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.
பேட்டி பரிந்துரை – சூர்யா
தொடர்புடைய கட்டுரைகள்
தொழில் துவங்கத் தமிழர்கள் தயங்குவது ஏன்?!
ரத்தன் டாடா | அசரடிக்கும் மேலாண்மை
அமுல் : ஓர் அதிசய வெற்றிக் கதை
கிரி, இவரோட நேர்காணலை பார்த்த பிறகு எனக்கும் உள்ளுக்குள்ள ஏதோ ஒரு உற்சாகம் பிறக்கிறது.. தற்போது சக்தி தொழில் தொடங்கும் நிலையை இருப்பதால் அவர்க்கு நிச்சயம் இந்த காணொளி பயன்படும்.. நான் இங்கு ஆரம்பித்த இரண்டு தொழில்களில் ஒன்றை விட்டு விட்டேன்.. இன்னொன்று இலாபமில்லாமல் கையையும் கடிக்காமல் சென்று கொண்டிருக்கிறது..
ஆனால் யோசித்து பார்க்கும் போது நான் செய்த தவறுகள் எனக்கு தற்போது தெளிவாக புரிகிறது.. நான் ஆய்வு மேற்கொண்டது ஒரு தொழில், போதிய முதலீடு இல்லாமல் போனதால் செய்தது வேறு தொழில்.. ஆரம்பமே சறுக்கியது இங்கு தான்.. எல்லாம் ஒரு அனுபவமாக எண்ணி கொண்டாலும் என்னுடைய மொத்த சேமிப்பும் கரைந்ததில் வருத்தம் தான்..
அடுத்த அடியை கொஞ்சம் மெதுவாக, கவனமாக எடுத்து வைக்க வேண்டியதால் கொஞ்சம் தயக்கமாகவே இருக்கிறது.. கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் மனைவிக்கு சொந்த தொழில் சுத்தமாக விருப்பம் இல்லை.. உறவுகளுடன் , நண்பர்களுடனும் சேர்ந்து செய்ய மனம் யோசிக்கிறது..
நிறைய யோசனை, குழப்பம், ஆலோசனை, பிரச்சனை, தீர்வு என என் நாட்கள் நகர்ந்து கொண்டே செல்கிறது.. உணவகம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்கால ஆசை உண்டு.. இவரின் பேச்சை கேட்ட பின் ஒருவித நம்பிக்கை எனக்கு ஏற்படுகிறது.. பகிர்ந்தமைக்கு நன்றி கிரி.
தொழில் துவங்குவது எளிதல்ல ஆனால், சரியான திட்டமிடல் விசாரிப்புடன் துவங்குவது சரியான செயல்.
துவங்கும் தொழில் பற்றிய முழுமையான புரிதல் இருப்பது அவசியம்.
இவையெல்லாவற்றோடு கொஞ்சம் அதிர்ஷ்டமும் உடன் இருக்க வேண்டும். கடந்த வருட துவக்கத்தில் தொழில் துவங்கியவர்கள் அனைவரின் நிலையும் கொரோனா காரணமாகப் பரிதாபமாகி விட்டது.
சக்தி தொழில் துவங்குவது எனக்கு செய்தி.. அவரிடம் பேசுகிறேன் 🙂 .