செய்திகளில் அடிக்கடி ரெப்போ வட்டி விகிதம் என்ற வார்த்தையைப் படித்து / கேட்டு இருப்பீர்கள் ஆனால், அது பற்றிய புரிதல் பலருக்கு இருக்காது.
அது பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம். Image Credit
ரெப்போ வட்டி விகிதம்
ரிசர்வ் வங்கி தரும் குறுகிய கால, நீண்ட காலக் கடனை ரிசர்வ் வங்கியிடம் வணிக வங்கிகள் பெறுகின்றன.
இவ்வாறு பெறப்படும் குறுகிய காலக் கடனின் வட்டியே ரெப்போ வட்டி விகிதம் (Repo – ‘Repurchasing Option’ Rate) என அழைக்கப்படுகிறது.
நீண்ட காலக் கடன்களுக்கு விதிக்கும் வட்டி, பேங்க் ரேட் (Bank Rate) என அழைக்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி / மத்திய வங்கி
மக்களிடம் பணப்புழக்காட்டம் குறையும் போது மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், பொருளாதாரத்தை உயர்த்தவும் குறைந்த வட்டிக்கு ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்குக் கடனை வழங்கும்.
அக்கடனை வங்கிகள் மக்களுக்குக் குறைந்த வட்டியில் வழங்கும் போது மக்கள் அதிகளவில் கடன்களைப் பெறுவர்.
இதன் காரணமாக மக்கள் செலவுகளைச் செய்வார்கள், தொழில்கள் விருத்தியாகும், மக்களிடையே பணப்புழக்காட்டம் அதிகரித்துப் பொருளாதாரத்தை வளர்க்கும்.
பற்றாக்குறையால் தேவைகள் அதிகரித்து விலை உயரும் போது பணவீக்கம் ஏற்படும்.
பணவீக்கம்
பணவீக்கம் என்பது கச்சா எண்ணெய் விலை உயர்வு, மழை, வறட்சி காரணங்களால் ஏற்படும் தட்டுப்பாட்டால் காய்கறி, மளிகைப்பொருட்களின் விலை உயர்வு போன்றவை.
அடிப்படை செலவு அதிகரிக்கும் போது அதைச் சார்ந்து உள்ள அனைத்துப் பொருட்கள், சேவைகளின் விலை, கட்டணமும் உயரும்.
எடுத்துக்காட்டுக்கு எரிபொருள் விலை உயர்வு, பொருட்களை இன்னொரு இடத்துக்குப் பரிமாற்றம் செய்யச் செலவைக் கூட்டுகிறது, இதன் சுமை வாடிக்கையாளரிடம் சுமத்தப்படுகிறது.
பால் விலை உயர்ந்தால், காஃபி, டீ, பால் பொருட்களின் விலை உயர்கிறது. இதுவொரு சங்கிலித் தொடர்.
இவ்வாறு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் போது ஒரு குறிப்பிட்ட பொருளின் விலை அதன் மதிப்பினை விட அதிக விலைக்குச் சந்தையில் விற்கப்படும்.
எடுத்துக்காட்டுக்கு, கிலோ ₹10 விற்கப்பட்ட தக்காளி ₹140 க்கு விற்கப்படுகிறது. இதுவொரு பணவீக்கத்துக்கான காரணமாகும்.
இதையொட்டி உணவகங்கள் விலையை உயர்த்துகின்றன.
Demand and Supply
விலை உயர்ந்தாலும், மக்களிடையே உள்ள பணப்புழக்கத்தால், தேவைகளால் வாங்குவதைக் குறைக்காமல், நிறுத்தாமல் தொடர்ந்து வாங்கும் போது அதன் விலையும் உயருகிறது.
இந்நிலையில் மத்திய வங்கி பணவீக்கத்தைக் குறைக்க ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துகிறது. இதனால் மக்களுக்குக் கடன் கொடுத்த வங்கிகளும் உயர்த்துகின்றன.
வட்டி உயர்வால் தங்களுக்குப் பண நெருக்கடி வரும் போது மக்கள் வாங்குவதை / செலவைக் குறைக்கிறார்கள். இதனால், தேவை குறைந்து பொருட்களின் விலை குறைகிறது.
இதற்காகவே ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்படுகிறது.
வட்டி அதிகரிக்கும் போது பண நெருக்கடி காரணமாக மக்களின் தேவை குறைந்து பணவீக்கமும் குறைகிறது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை அதிகரிக்கும்போது கடனைப் பெற்றவர்களின் சுமையும் அதிகரிப்பது தவிர்க்க முடியாததாக உள்ளது.
வட்டி குறைப்பு, அதிகரிப்பு என்பது சங்கிலித்தொடர் போலப் பல இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கொசுறு
தக்காளி விலை உயர்ந்தால், மக்கள் புறக்கணிக்க / குறைக்கப் பழக வேண்டும்.
ஆனால், தக்காளி சாப்பிடவில்லையென்றால் உயிரே போய்விடுவதைப் போல, அடித்துப்பிடித்து வாங்குவது, பிரச்சனையை மேலும் அதிகரிக்கவே வழி வகுக்கும்.
இதைப் பயன்படுத்தித் தரகர்கள் சம்பாதிக்கிறார்கள். விவசாயிக்கும் பலன் இல்லை, மக்களுக்கும் பலன் இல்லை.
கிரி.. மிகவும் தெளிவாக, அழகாக எழுதி இருக்கீங்க..
===============================
தக்காளி விலை உயர்ந்தால், மக்கள் புறக்கணிக்க / குறைக்கப் பழக வேண்டும்.
ஆனால், தக்காளி சாப்பிடவில்லையென்றால் உயிரே போய்விடுவதைப் போல, அடித்துப்பிடித்து வாங்குவது, பிரச்சனையை மேலும் அதிகரிக்கவே வழி வகுக்கும்.
இதைப் பயன்படுத்தித் தரகர்கள் சம்பாதிக்கிறார்கள். விவசாயிக்கும் பலன் இல்லை, மக்களுக்கும் பலன் இல்லை.
===============================
செம்ம!!!! இதை விட தெளிவா, எளிமையா சொல்ல முடியாது.. பகிர்வுக்கு நன்றி கிரி..
நன்றி யாசின் 🙂