எந்தப் பெரிய செலவும் இல்லாமல் அட்டாகாசமான மாஸ் மசாலா படத்தைக் கொடுத்து இருக்கிறார்கள் Kaduva படத்தில். Image Credit
Kaduva
பிரித்விராஜ் விவேக் ஓபராய் இருவரிடையே நடக்கும் ஈகோ யுத்தமே Kaduva. எந்த மிகை நடிப்பும் இல்லாமல் எடுத்துள்ளார்கள்.
உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது ஆனால், 5% உண்மைச் சம்பவம், மீதி புனைவு என்று கூறியுள்ளார்கள்.
1990 களில் நடக்கும் கதையாக உள்ளது. இதில் வரும் இடங்கள், வீடுகள் எல்லாம் அற்புதமாக உள்ளது.
பிரித்விராஜ்
நாயகன் பிரித்விராஜ் மனைவி குழந்தைகள் என்று அன்பான குடும்பம். பிரித்விராஜ் மனைவியாக வரும் சம்யுக்தா ஒரு சாயலில் சமந்தா போலவே உள்ளார்.
இது ஒரு மாஸ் படமாக இருந்தாலும், குடும்பம், பாசம் என்று சராசரி வாழ்க்கை பயணத்துடனே எடுத்துள்ளார்கள்.
பிரித்விராஜ் குடும்பம் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக இருந்தும், சராசரி நடுத்தரக் குடும்பம் போல நடந்து கொள்வது நம்மைப் படத்தோடு இணைக்கிறது.
பிரித்விராஜூக்கு எந்த நடிப்பு தான் வராது? எதைக்கொடுத்தாலும் கலக்குகிறார்.
இவரைப் பார்த்தால் மாஸ் நடிகர் போலவே இல்லை ஆனால், ஒவ்வொரு காட்சியிலும் செம மாஸ் காட்டியுள்ளார். சண்டைக்காட்சிகளில் வெளுத்து வாங்கியுள்ளார்.
இவருக்கு அனைத்துமே பொருத்தமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Koode என்ற படத்தில் அப்பிராணியாக நடித்தவரா இதில் இப்படி நடிக்கிறார்! என்று திகைக்க வைக்கிறார்.
சிறையில் நடக்கும் சண்டை, தவறு செய்த பாதிரியாரை மிரட்டுவது, கலாய்த்த காவலரைப் புரட்டி எடுப்பது என்று மிரட்டியுள்ளார்.
விவேக் ஓபராய்
ஈகோ காரணமாக, பிரித்விராஜ் சாம்ராஜ்யத்தைத் தனது காவல்துறை அதிகாரத்தால் அழிக்கும் விவேக் ஓபராய் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.
ஆளு தான் கொஞ்சம் எடை கூடி விட்டார்.
தன்னை அவமானப்படுத்திவிட்டார் என்று பிரித்விராஜ்க்கு அலட்டிக்கொள்ளாமல் குடைச்சல் மேல் குடைச்சல் கொடுக்கும் காட்சிகளில் கவர்கிறார்.
விவேக் ஓபராயிடம் தான் வசமாகச் சிக்கியுள்ளதை உணர்ந்த பிரித்விராஜ் அவசரப்படாமல் பொறுமையாகத் தன் திட்டங்களைச் செயல்படுத்துவது அசத்தல்.
எதைத் தனித்துக்குறிப்பிடுவது?!
சண்டைக்காட்சிகள், ஒளிப்பதிவு, பின்னணி இசை, பாடல்கள், திரைக்கதை, நடிப்பு என்று எதையுமே குறைத்து மதிப்பிட முடியாது, அனைத்துமே செம.
இறுதிப்பாடலும் அதைத் தொடர்ந்து வரும் சண்டையும் பட்டாசு. Slow motion காட்சிகள் படத்துக்கு ஒரு கெத்தை கொடுக்கிறது.
ஒரு படத்தில் எல்லாமே சரியாக அமையும். அதுபோலப் படமே Kaduva.
படம் பார்த்து இரு வாரங்கள் ஆகி விட்டது என்று மூன்றாவது முறை பார்த்து விமர்சனம் எழுதியுள்ளேன்.
அப்படியென்றால் எந்த அளவுக்குக் கவர்ந்து இருக்கும் பாருங்கள் 🙂 . எங்குமே சலிப்புத்தட்டாத திரைக்கதை, காட்சிகள்.
மேற்கூறியபடி அனைத்துமே சிறப்பாக இருப்பதால், எத்தனையாவது முறை பார்த்தாலும் சுவாரசியமாக உள்ளது.
பிரித்விராஜ் அரசியல்வாதிகளிடம் பேசி அனைத்தையுமே மாற்றுவது நம்புகிற மாதிரியில்லை என்றாலும், திரைக்கதை சுவாரசியத்தில் கவனிக்கத்தோன்றாது.
யார் பார்க்கலாம்?
அனைவரையும் பார்க்கப்பரிந்துரைக்கிறேன் குறிப்பாக மாஸ் படங்களை விரும்பிப்பார்ப்பவர்கள், சண்டைக்காட்சிகளை ரசிப்பவர்கள் தவறவிடக்கூடாத படம்.
சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் தாறுமாறு.
இசைக்கு மலையாளத்தில் தமன் அறிமுகமாக வேண்டியது தவறி விட்டது ஆனால், தமன் இசைத்து இருந்தாலும் இது போல வந்து இருக்குமா என்பது சந்தேகமே!
இந்தப்படத்தை ஏன் யாருமே எனக்குப் பரிந்துரைக்கவில்லை என்று வியப்பாக இருந்தது. ஆர்வமே இல்லாமல், பார்க்க ஆரம்பித்த படம் 🙂 .
இன்னொருமுறை கூடப் பார்க்கலாம், சலிக்காது. Kaduva என்றால் புலியாம்.
செலவே இல்லாமல் இப்படியும் ஒரு மாஸ் படம் எடுக்க முடியுமா என்று வியப்படைய வைக்கிறார்கள்! இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
Amazon Prime ல் காணலாம்.
Directed by Shaji Kailas
Written by Jinu V. Abraham
Produced by Supriya Menon, Listin Stephen
Starring Prithviraj Sukumaran, Vivek Oberoi, Samyuktha Menon
Cinematography Abinandhan Ramanujam
Edited by Shameer Muhammed
Music by Jakes Bejoy
Production companies Prithviraj Productions, Magic Frames
Release date 7 July 2022
Running time 154 minutes
Country India
Language Malayalam
தொடர்புடைய விமர்சனங்கள்
Bro Daddy (2022 மலையாளம்) | A Delicate Position
Ayyappanum Koshiyum (மலையாளம் 2020) | தெறிக்கும் ஈகோ
Driving Licence (மலையாளம் 2019)
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. நான் கடுவா படத்தை ரிலீஸ் ஆன போதே பார்த்தேன்.. படம் எனக்கு பிடித்து இருந்தது.. படத்தில் மிகவும் ரசித்தது போட்டோகிராபி தான்.. கேரளாவின் அழகை கண்ணின் முன் கொண்டு வந்து இருப்பார்கள்.. படம் ரிலீஸ்க்கு முன் பிரித்விராஜ் ஒரு நேர்காணலில் சொன்னது.. கடந்த சில படங்கள் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து கொண்டிருக்கிறேன்.. ஆனால் தமிழில் வருவது போல் ஒரு மாஸ் கதையமைப்பு கொண்ட படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்த போது, இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் முன்பு பல மாஸ் படங்கள் வந்துள்ளது..
தற்போது மலையாளத்தில் நல்ல வித்தியாசமான கதையம்சம் கொண்ட புது புது படங்கள் வந்து கொண்டிருக்கின்றது.. ஒரு வித்தியாசமான முயற்சியாக கடுவாவை (மாஸ் என்டேர்டைனேர்) ராக தேர்ந்தேடுத்தேன் என்று கூறினார்..கிரி உங்களுக்கு மலையாளம் தெரிந்தால் கடுவாவின் வசனத்தை இன்னும் ரசிக்கலாம்.. பிரிதிவ்ராஜின் உடல் மொழி, உடைகள், பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது.. நடிப்பு என்றால் நான் அவரை ரசிப்பது அய்யப்பனும் கோஷியும் தான்..
கடந்த வாரம் ரிலீஸ் ஆன Jaya Jaya Jaya Jaya Hey படம் நன்றாக இருப்பதாக என் அலுவலக மலையாள நண்பன் கூறினார்.. நான் இன்னும் பார்க்கவில்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@யாசின்
“கிரி.. நான் கடுவா படத்தை ரிலீஸ் ஆன போதே பார்த்தேன்.. படம் எனக்கு பிடித்து இருந்தது.”
யாசின் மலையாளப்படம் பார்க்க ஆரம்பித்துட்டீங்க போல 🙂
“படத்தில் மிகவும் ரசித்தது போட்டோகிராபி தான்.. கேரளாவின் அழகை கண்ணின் முன் கொண்டு வந்து இருப்பார்கள்.”
ஆமாம். அனைத்துமே சூப்பர்.
“கடந்த சில படங்கள் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து கொண்டிருக்கிறேன்.. ஆனால் தமிழில் வருவது போல் ஒரு மாஸ் கதையமைப்பு கொண்ட படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்த போது, இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் முன்பு பல மாஸ் படங்கள் வந்துள்ளது..”
அப்படியா!
ஆனால், தமிழ்ப்படங்களை விட இப்படம் நன்றாக உள்ளது. தமிழ்ப்படங்களில் திணிக்கப்பட்ட மாஸ் இருக்கும், இதிலும் உள்ளது ஆனால், மிகையாக இல்லை.
“பிரிதிவ்ராஜின் உடல் மொழி, உடைகள், பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது.. நடிப்பு என்றால் நான் அவரை ரசிப்பது அய்யப்பனும் கோஷியும் தான்..”
எனக்கு மும்பை போலீசில் அவரின் இருவேறுபட்ட நடிப்பு பிடிக்கும். இதற்கு விமர்சனம் எழுத வேண்டும் என்று ரொம்ப நாட்களாக நினைத்துக்கொண்டுள்ளேன்.