தனிமை யாருக்கு கடினமில்லை?! | எழுத்தாளர் கி ரா

4
தனிமை

மே மாதம் 2021 சாகித்ய அகாடமி விருதைப் பெற்ற எழுத்தாளரான கி ரா எனப்படும் கி.ராஜநாராயணன் வயது முதிர்வு காரணமாகக் காலமானார், வயது 99.

தமிழக அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்ததும், எழுத்தாளர் ஒருவருக்கு இத்தகைய மரியாதை கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

கி.ராஜநாராயணன்

கி ரா காலமான போது அவர் பற்றிய பல கட்டுரைகள் வெளி வந்தன. இதுவரை தெரியாதவர்களும் இவரைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது.

விகடன் எடுத்த பேட்டியில் கி ரா கூறியிருந்த ஒரு கருத்து, எனக்குத் தொடர்பானதாக இருந்ததால், அதை மட்டும் இங்கே பகிர்கிறேன். (நன்றி விகடன்)

"இசை தெரிஞ்சவனுக்கு ஏதய்யா தனிமை… அது துணைக்கிருக்குமே… எழுதத் தெரிஞ்சவன், படிக்கத் தெரிஞ்சவனுக்கெல்லாம் தனிமையே தெரியாது." 

தனிமை

பலரும் தனிமையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், ஓரிரு நாட்களிலேயே சலிப்பாகி விடுவார்கள். வசதிகள் இருந்தாலும், தனிமையை வெறுமையாகக் கருதுவார்கள்.

எனக்குத் தனிமை எப்போதும் வெறுத்தது இல்லை. ஏனென்றால், வாழ்க்கையில் பல காலங்கள் தனித்து இருக்க வேண்டிய சூழலே இருந்தது.

சென்னை, சிங்கப்பூர் என்று பெரும்பாலான வருடங்கள் தனிமையிலேயே இருக்க வேண்டியதாக இருந்தது.

சிறு வயதில் மாணவர் விடுதி என்று அனைத்து சூழ்நிலைகளுக்கும் பழக வேண்டிய சூழல் அமைந்து விட்டது.

கொரோனா இரு ஊரடங்கு காலத்திலும் குடும்பத்தினர் இல்லாமல், கிட்டத்தட்ட 2 + 2 மாதங்கள் தனிமையிலே இருக்க வேண்டிய சூழல்.

இருப்பினும், ஊரடங்கால் சாப்பிட பிரச்சனையானதே தவிரத் தனிமை பிரச்சனையாகவில்லை.

இசை

எங்கு இருந்தாலும் உடன் இருப்பது இசை.

சிறு வயதில் இருந்தே பழகி விட்டது. தற்போது இணைய வானொலிகள், செயலிகள் வந்த பிறகு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கின்றன.

அதோடு ஒலி சாதனம் (Speaker) இருப்பதால், எப்போதும் பாடிக்கொண்டே இருக்கும்.

அலுவலகலத்திலும் இசையோடு தான் இருப்பேன். மெல்லிய ஒலியில் மடிக்கணினியில் பாடிக்கொண்டே இருக்கும்.

திரைப்படங்கள்

சிறு வயதில் இருந்தே திரைப்படங்கள் மீதான ஆர்வம் அதிகம் என்றாலும், உலகப்படங்களைக் காணும் வாய்ப்பு சிங்கப்பூர் சென்ற பிறகே கிடைத்தது.

இதற்குக் கட்டற்ற இணையம் உதவியாக இருந்தது மிக முக்கியக்காரணம்.

தற்போது NETFLIX, Amazon, Hotstar போன்றவை வாய்ப்புகளை அதிகப்படுத்தியதால், ஏராளமான திரைப்படங்களைக் காணும் வாய்ப்பு எளிதாகக் கிடைத்துள்ளது.

அதோடு 3300 GB யை ACT Fibernet தருகிறது. என்ன பயன்படுத்தினாலும், ஒரு மாதத்துக்கு 350 GB யைத்தாண்டியதில்லை.

இவ்வளவுக்கும் ஒரே நாளில் 4 – 5 திரைப்படங்கள் கூடப் பார்ப்பேன்.

புத்தகங்கள்

இழந்த புத்தக ஆர்வத்தை மீட்டெடுத்தது பொன்னியின் செல்வன், அதைத் தொடர்ந்து தக்க வைத்தது Amazon Kindle சாதனம்.

எங்கும் எடுத்துச் செல்லலாம், எவ்வளவு புத்தகங்கள் வேண்டும் என்றாலும் வைத்துக்கொள்ளலாம், இரவிலும் படிக்கலாம் என்பன போன்ற வசதிகள் பயனுள்ளதாக உள்ளது.

எனவே, திரைப்படங்கள் பார்க்க, எழுத எதுவும் இல்லாத நேரத்தில் புத்தகங்கள் உதவும். பயணங்களில் மிக உதவியாக இருக்கும்.

எழுத்து

2006 முதல் எழுதத் துவங்கி தற்போது (2021) வரை இடைவெளியின்றித் தொடர்வதால், எதையாவது எழுதிக்கொண்டே இருக்கத் தோன்றும்.

உடன் தொழில்நுட்பத்தில் ஆர்வம் என்பதால், இத்தளத்தை புதுப்பித்து, மேம்படுத்தி வருகிறேன்.

இது சுவாரசியமாக உள்ளதாலும், மேலும் புதிதாகக் கற்றுக்கொள்ள முடிவதாலும் சலிப்பை ஏற்படுத்துவதில்லை.

இணையத்தின் மூலமாகக் கண்டறிந்து பிறர் உதவி இல்லாமல் அதைச் செயல்படுத்தும் போது கிடைக்கும் திருப்தி அளவிட முடியாதது.

எனவே, இசை, எழுத்து, திரைப்படங்கள், புத்தகங்கள், இணையம் என்று எப்போதும் ஏதாவது ஒன்றில் ஈடுபடுத்த வாய்ப்புள்ளதால், தனிமையை உணருவதே இல்லை.

கி ரா அவர்கள் கூறுவது உண்மையே.

தனிமை ஏற்புடையதா?

எதோ ஒன்றை ரசிக்கத் தெரிந்தாலே தனிமையை உணர வேண்டியதில்லை எனும் போது எனக்கு ஐந்து வாய்ப்புகள் உள்ளதால், பிரச்சனையே இல்லை 🙂 .

தனிமை என்றில்லை, அனைத்து சூழ்நிலைகளுக்கும் தகுந்த மாதிரி மாற்றிக் கொள்ள முடிவது, எனக்குக் கடவுள் கொடுத்த வரமாகக் கருதுகிறேன்.

உங்களுக்குத் தனிமை ஏற்புடையதா? தனிமையை வெறுக்கிறீர்களா?

தனிமையை வரவேற்க வேண்டியதில்லை ஆனால், அச்சூழ்நிலை அமைந்தால், சமாளிக்க முடிகிறதா? பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

Sony HT-RT3 Real 5.1ch Dolby Digital Soundbar

அமேசான் Kindle ஏன் வாங்க வேண்டும்?!

NETFLIX Vs Amazon Prime Video Vs Hotstar எது சிறந்தது?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

 1. கி.ராஜநாராயணன் : கி.ரா என்று கேள்விபட்டிருக்கிறேன்.. ஆனால் இவரை பற்றி வேறு எதுவும் தெரியாது. இவர் எழுதிய எந்த புத்தகத்தையும் இதுவரை படித்ததில்லை.. இவரின் புத்தகம் ஏதும் நீங்கள் படித்து இருந்தால் அதை பற்றி கூறவும்.. நான் படிக்க முயற்சிக்கிறேன்.

  தனிமை : மிகவும் பிடிக்கும்.. என் வாழ்க்கையை எப்போதும் இரண்டு பகுதியாக பிரித்து பார்ப்பேன். திருமணத்திற்கு முன் & பின். இதில் அதிகம் தனிமையில் இருந்தது திருமணத்திற்கு முன் தான். ஒரு நேரத்தில் திருமணமே வேண்டாம், தனியாகவே இருந்து விடலாம் என்று எண்ணியதுண்டு.. ஊட்டி மலை மேல் ஒரு சின்ன வீடு, வீடு முழுவதும் புத்தகங்கள், நாள் முழுவதும் மெலிதாக ஒலித்து கொண்டிருக்கும் இசை, பிடித்ததை சமைத்து சாப்பிடுவது, பழைய நினைவுகளை அசை போடுவது.. என வாழ வேண்டுமென பல நாட்கள் நினைத்ததுண்டு..

  திருமணத்திற்கு பின் தனிமையை வெறுக்கிறேன்.. (சில நாட்களில் தனிமையை ரசிப்பதும் உண்டு). கடந்த இரண்டு வருடமாக தனியாகத்தான் இருக்கிறேன்.. சில பொழுதுகள் சொர்க்கம், பல பொழுதுகள் நரகம்.. சமைக்க தெரியும் என்பதால் சாப்பாட்டிற்கு மட்டும் பிரச்சனை இல்லை.. தனிமையில் அதிக நேரம் செலவிடுவது கிரிக்கெட் விளையாடுவது & பழைய டெஸ்ட் போட்டிகளின் காணொளியை காண்பது.. (இரண்டுமே மனைவிக்கு பிடிக்காத ஒன்று. லைவ் மேட்ச் என்றால் பரவாயில்லை 20 / 30 வருட பழைய மேட்ச் அதுவும் பார்த்த மேட்ச் திரும்ப, திரும்ப பார்ப்பதில் என்ன இருக்குனே தெரியவில்லை என்பார்???) இதன் மகிழ்ச்சியை என்னால் மட்டும் உள்வாங்க முடியும்..

  இசை : இசை இல்லாத நாட்களை வெறுக்கிறேன்.. 2000 க்கு பின் வெளிவந்த பாடல்களில் 20 பாட்டுக்கள் கூட என்னுடைய விருப்ப பாடல்கள் இல்லை.. என் விருப்பம் எல்லாம் 1975 – 2000 குள் தான்.. குறிப்பாக 1980 – 1990 இளையராஜா சார் மட்டும் அல்ல, மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களையும் கேட்பேன். சில சமயம் 1960 பாடல்கள் கேட்க பிடிக்கும்.. எந்த மனநிலையில் இருக்கிறனோ அந்த மனநிலைக்கு தகுந்தவாறு பாடல்கள் கேட்பேன்.. சில பாடல்கள் என்றைக்கும் கேட்ட பிடிக்கும்.. முன்பு விரும்பிய பல பாடல்கள் தற்போது விரும்பி கேட்பதில்லை..

  (பழைய பாடல்களில் குறிப்பாக புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே… ஏன் பிறந்தாய் மகனே.. ஆறு மனமே ஆறு.. இன்னும் பல பாடல்கள் உள்ளன ) என்றுமே எந்த மனநிலையிலையும் விரும்பும் பாடல் : அமைதியான நதியினிலே ஓடம்.. எல்லா விஷியங்களும் இந்த பாடலில் அருமையாக இருக்கும்.. அதிகம் இசையில் பைத்தியமாக கூடாது என்று கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இருப்பேன்.. சில நேரங்களில் மீறியும் விடுவேன். கல்லூரி படிக்கும் போது என் வாழ்நாள் கனவே பயோனீர் CD பிளேயர் வாங்க வேண்டும் என்பது தான்.. மனைவிக்கு சத்தம் பிடிக்காது என்பதால் அது நிறைவேறாமலே போகி விட்டது.. தற்போது மனைவி கூட இல்லையென்றாலும் எனக்கு cd பிளேயர் மீது ஆர்வம் போகி விட்டது.

  திரைப்படங்கள் : கோவையில் பணி புரிந்த போது சக்தியுடன் நிறைய படங்களை பார்த்தேன். நான் முதன்முதலில் இரவு காட்சிக்கு சென்றதே அன்னுரில் தான்..அது குறித்து கூட சக்தியுடன் பேசும் போது (என்னை படம் பார்க்க வைத்து கெடுத்துடீங்க என விளையாட்டாக சொல்வேன்) ஒரு சமயத்தில் தினமும் திரையரங்கிற்கு செல்வோம். வார விடுமுறையில் புதிய படம்.. மற்ற நாட்களில் டூரிங் டாக்கீஸ் இல் தினமும் பழைய 1980/1990 ஸ் படங்கள் பார்ப்போம்.. எல்லாவற்றிக்கும் ஸ்பான்ஸர் சக்தி தான்..இரவு சாப்பாடு வாங்கி கொடுத்து, திரையரங்கில் டிக்கெட் எடுத்து கொடுத்து, படம் பார்த்து விட்டு இரவு திரும்பும் போது சூடான பாதம் பால் வாங்கி கொடுத்த என் தளபதியை போல ஒருத்தரை நான் உலகில் இன்னும் பல பகுதிகளுக்கு பயணம் செய்தாலும் காண இயலாது.. (இந்த கடனை எந்த ஜென்மத்தில் அடைப்பேன் என்று தெரியவில்லை..)..

  இங்கு மனைவி 8 வருடங்கள் கூட இருந்த போது டிவி இல்லாததால் படங்கள் பார்ப்பது மிக மிக குறைவு.. மனைவி ஊருக்கு சென்ற பின் தற்போது கூடுதலாக படம் பார்க்கிறேன்.. சமீபத்தில் பார்ப்பது எல்லாம் மலையாள படங்கள் மட்டுமே..

  புத்தகங்கள் : எனக்கு புத்தகம் படிப்பதில் ரொம்ப, ரொம்ப ஆர்வம்.. ஆனால் இடையில் அந்த ஆர்வம் குறைந்து விட்டது. அலுவலக பணி நேரம் மிக அதிகம்.. சில நல்ல புத்தகங்களின் அறிமுகம் கிடைக்கும் போது அதை உடனே வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் நான் இங்கு இருப்பதால் என்னால் வேண்டிய புத்தகங்களை வாங்கி படிக்க முடிவதில்லை. கடந்த முறை ஊரிலிருந்து வரும் போது நம்மாழ்வார் அய்யா எழுதிய எல்லா புத்தகங்களையும் வாங்கி வந்து படித்தது தான் நான் கடந்த வருடம் நான் செய்த சாதனை..

  அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துக்களை மட்டும் நான் பல வருடமாக படித்து வருகிறேன்.. நான் அதிகம் விரும்புவது இவரை மட்டும் தான்.. இவரை விட சிறந்த பல எழுத்தாளர்கள் இருந்தாலும் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லை.. எழுத்துக்களில் இவரின் வயதுக்கு மீறிய நகைச்சுவை உணர்வு என்னை வெகுவாக கவர்ந்து விட்டது.. kindle கருவி வைத்து இருந்தாலும் என்னால் அதிக அளவில் படிக்க முடிவதில்லை.

  எழுத்து : பல கடினமான சூழ்நிலைகளை கடந்து இந்த எழுத்து பணியை நீங்கள் சிறப்பாக செய்து வருவதை கண்டு, உங்களை பார்க்கும் போது சில சமயம் கொஞ்சம் பொறாமையாக கூட இருக்கும்.. நானும் கல்லூரி சமயத்தில் சில கவிதைகளும், கட்டுரைகளும் எழுதியதுண்டு.. என் முதல் கவிதை :

  தலைப்பு : தொடரல்..

  “உன்னையே நான் தொடர்ந்து
  கொண்டிருப்பதால் தான் என்னவோ,
  என் பரிட்சையும் என்னை தொடர்ந்து
  கொண்டே வருகிறதோ என்னவோ!!!!”

  (கண்டிப்பா கூகுளில் தேடினால் கிடைக்காது ஏனென்றால் அம்மா சாத்தியமா நான் எழுதியது)..

  தனிமை ஏற்புடையதா? : கண்டிப்பாக தனிமையை விரும்புகிறேன்.. சில சமயம் பிரிவினால் காதல் இன்னும் கூடலாம்.. அருகில் இருந்த போது அலட்சியம் செய்த அன்பு தனிமையின் தவிப்பில் பின்பு இரட்டிப்பாகலாம்.. கிரி உங்களுக்கு இருப்பது போல் வாய்ப்பு எல்லோருக்கும் இருக்கும் என கூற முடியாது.. என்னை பொறுத்தவரை நம்மை நாம் தான் மகிழ வைக்க வேண்டும்.. அதற்கான சூழ்நிலையை நாம் தான் உருவாக்க வேண்டும். மன மகிழ்ச்சி என்பது நம்மிடம் தான் இருக்கிறது..

  எல்லோரும் அனைத்து சூழ்நிலைகளுக்கும் தகுந்த மாதிரி மாற்றிக் கொள்ள வேண்டிய யுத்தியை கற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு தனிமை ஏற்புடையதாக இருக்கிறது சில நேரம் தவிர்த்து.. (தனிமையை வரவேற்க வேண்டியதில்லை ஆனால், அச்சூழ்நிலை அமைந்தால், சமாளிக்க முடிகிறதா?) கண்டிப்பாக சரக்கு, சைடுஷ் என எதுவுமே இல்லாமல் தனிமையை சமாளிக்கும் பக்குவம் இருக்கிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  பின்குறிப்பு : கட்டுரை அளவிற்கு பின்னுட்டம் எழுதியதற்கு மன்னிக்கவும்.. சில சமயம் அது போல அமைந்து விடுகிறது.. பல சமயம் யோசிக்கும் போது இப்படி செய்வது சரியா??? தவறா ?? என்று கூட தோன்றும். பின்பு கிரி தானே, என்னை பற்றி ஓரளவுக்கு தெரியும் என்பதால் தவறாக எடுத்து கொள்ளமாட்டார் என்று உள் மனதுக்குள் தோன்றும்..சரிதானே!!!!

 2. நண்பர் கிரி,தங்கள் தளம் இருக்கும்போது தனிமை உணர்வா?!,நான் சிறு வயது முதலே தனிமையில் வளர்ந்ததால் என்வோ தனிமையை பெரிதாக உணர்ந்ததில்லை (தோட்டப் பகுதி என்பதால் வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தான் இருக்கும்),சிறு வயதில் காமிக்ஸ் புத்தகம் அதிகம் படிப்பேன், பிறகு கிரைம் நாவல், என புத்தகம் இல்லாமல் இருந்ததில்லை, ஒரு முறை பொன்னியின் செல்வன் புத்தகம் படிக்கக் கிடைத்தது ஆனால் அதன் பக்கங்களின் எண்ணிக்கை பார்த்தவுடன் படிப்பதற்கே தோன்றவில்லை, அதன் பிறகு தாங்கள் ஒரு முறை இந்த புத்தகத்தை பரிந்துரைத்ததால் படிக்க ஆரம்பித்தேன், இது போன்ற புத்தகத்தின் சுவையை உணர்திய உங்களுக்கு நன்றிகள் பல🙏, கைபேசியில் இணையம் வந்த பிறகு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தளங்களில் தேடித் தேடிப் படித்தேன்,அப்படித்தான் தங்கள் தளம் எனக்கு அறிமுகம் ஆனது,புத்தகம் ஒரு சிறந்த நண்பன்போல என்றும் நமக்கு தனிமையை உணர்த்தாது.
  ப்பா🤯 பின்னூட்டம் இடுவதற்ககே மூளையில் இருந்து புகை தள்ளுகிறது, நீங்கள் தொடர்ந்து தங்கள் தளத்தில் பதிவு எழுதுவதை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது,இதில் நண்பர் யாசின் வேறு பின்னூட்டத்திலேயே ஒரு பதிவு எழுதி விடுகிறார்😀.தங்கள் பதிவும் , நண்பர் யாஷினின் பின்னூட்டமும்
  “ஒரு கல்லில் இரண்டு மாங்காய் போல”🤩.

 3. @யாசின் “இவர் எழுதிய எந்த புத்தகத்தையும் இதுவரை படித்ததில்லை..”

  எனக்கும் தெரியாது. இவரைப் பார்த்துள்ளேன், முகம் நினைவுள்ளது ஆனால், யார் என்று தெரியாது.

  ” ஊட்டி மலை மேல் ஒரு சின்ன வீடு, வீடு முழுவதும் புத்தகங்கள், நாள் முழுவதும் மெலிதாக ஒலித்து கொண்டிருக்கும் இசை, பிடித்ததை சமைத்து சாப்பிடுவது, பழைய நினைவுகளை அசை போடுவது”

  🙂 . நினைப்பதெல்லாம் நடப்பதில்லை.

  “கடந்த இரண்டு வருடமாக தனியாகத்தான் இருக்கிறேன்.. சில பொழுதுகள் சொர்க்கம், பல பொழுதுகள் நரகம்..”

  அப்படியா!

  எனக்குச் சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை.. சாதாரணமாக இருக்கும்.

  “இரண்டுமே மனைவிக்கு பிடிக்காத ஒன்று”

  பெரிய பிரச்சனை தான் 🙂 .

  “என் விருப்பம் எல்லாம் 1975 – 2000 குள் தான்”

  எனக்கும் தான். பெரும்பாலும் 90 களில் அனைத்து இசையமைப்பாளர்கள் இசையும் பிடிக்கும்.

  “மனைவிக்கு சத்தம் பிடிக்காது என்பதால் அது நிறைவேறாமலே போகி விட்டது”

  மனைவிகளுக்குச் சத்தம் கேட்கப் பிடிக்காது ஆனால், சத்தம் போடப் பிடிக்கும் 😀

  “படம் பார்த்து விட்டு இரவு திரும்பும் போது சூடான பாதம் பால் வாங்கி கொடுத்த என் தளபதியை போல ஒருத்தரை நான் உலகில் இன்னும் பல பகுதிகளுக்கு பயணம் செய்தாலும் காண இயலாது”

  🙂 🙂

  “அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துக்களை மட்டும் நான் பல வருடமாக படித்து வருகிறேன்”

  ஏற்கனவே பல முறை கூறி இருக்கீங்க.

  “kindle கருவி வைத்து இருந்தாலும் என்னால் அதிக அளவில் படிக்க முடிவதில்லை.”

  என்ன இப்படி சொல்லிட்டீங்க?!

  “கண்டிப்பா கூகுளில் தேடினால் கிடைக்காது ஏனென்றால் அம்மா சத்தியமா நான் எழுதியது”

  இல்லையே கூகுளில் கிடைத்து விட்டதே! 😀 ஆனால், அது என் தளம் தான் 🙂 .

  உங்கள் கவிதை என் தளத்தில் தான் வெளியாகியுள்ளது ஹி ஹி

  “கண்டிப்பாக சரக்கு, சைடுஷ் என எதுவுமே இல்லாமல் தனிமையை சமாளிக்கும் பக்குவம் இருக்கிறது”

  எனக்கும் ஆனால், நான் மேற்கூறியவற்றில் ஏதாவது ஒன்று தேவை.

  “பின்பு கிரி தானே, என்னை பற்றி ஓரளவுக்கு தெரியும் என்பதால் தவறாக எடுத்து கொள்ளமாட்டார் என்று உள் மனதுக்குள் தோன்றும்..சரிதானே!”

  கருத்தே வருவதில்லைன்னு உள்ள நேரத்தில் யாராவது நினைக்க முடியுமா 🙂 .. அதுவும் யாசினை. எத்தனை பத்தி என்றாலும் ஓகே.

 4. @கார்த்திக்

  “தோட்டப் பகுதி என்பதால் வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தான் இருக்கும்”

  என் சிறுவயதில் தோட்டத்தில் தான் இருந்தேன். எங்க வீட்டு பகுதியில் எவருமே இருக்க மாட்டார்கள்.

  “தாங்கள் ஒரு முறை இந்த புத்தகத்தை பரிந்துரைத்ததால் படிக்க ஆரம்பித்தேன்”

  ஆமாம். அட்டகாசமான புத்தகம். யாசின் இன்னமும் படிக்காமல் உள்ளார்.

  “புத்தகம் ஒரு சிறந்த நண்பன்போல என்றும் நமக்கு தனிமையை உணர்த்தாது.”

  உண்மையே! ஆனால், எனக்குத் திரைப்படங்களில் புத்தகத்தை விட அதிக ஆர்வம் என்பதால், படிப்பது குறைந்து விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here