பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக காதலர்கள் நீண்ட தூர கார் பயணம் செய்யத் திட்டமிட்டது பாதியில் பயங்கரமான அனுபவமாக மாறுவதே Ishq. Image Credit
Ishq
Ishq என்றால் காதல் ஆனால், காதல் கதை அல்ல என்று துவக்கத்திலேயே கூறி விடுகிறார்கள். அதனால், என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது.
காதல் கதை இல்லையென்று கூறினாலும் காதலிக்கும் அனைவரையும் அரை மணி நேரம் கிறுகிறுக்க வைத்து விடுவார்கள். அப்படியொரு அழகான காதல் காட்சிகள்.
காதலிக்கும் / காதலித்த ஒவ்வொருவரையும் தங்கள் காதலித்த நாட்களை நினைக்க வைக்கும் விதமாக அற்புதமாக உள்ளது.
காதலனாக எப்போதும் சிரித்துக்கொண்டே பேசும் Shane Nigam சிறந்த நடிப்பு. இவருடைய முகபாவனைகள் ரசிக்கும்படி இருக்கும்.
சில காட்சிகளில் இவர் எப்படிப்பட்டவர் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார்கள், துவக்கத்தில் சாதாரணக் காட்சியாக உள்ளது ஆனால், இறுதியில் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது.
Kumbalangi Nights படத்தில் சாதாரண நடிப்பில் வந்து போவார் ஆனால், இதில் பட்டையைக் கிளப்பியுள்ளார்.
காதலியாக Ann Sheetal நாகரீகமான உடைகளில் அனைவர் மனதையும் கவர்கிறார், அதோடு இவருடைய காதல் / த்ரில்லர் நடிப்பு அட்டகாசம்.
நடிகையாக எண்ணாமல், நம்மில் ஒரு பெண்ணாகத் தோன்ற வைக்கிறார்.
திக் திக்
இவர்கள் இருவரும் வெளியே சுற்றும் போதே நமக்குச் சந்தேகம் வந்து விடும், எதோ சம்பவம் நடக்கப்போகிறது என்று. எனவே, திக் திக்கென்றே உள்ளது.
ஊகிக்க முடிகிற காட்சி தான் என்றாலும், என்ன நடக்குமோ என்ற பயம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
வில்லன் கதாப்பாத்திரமாக வரும் Shine Tom Chacko ரொம்பவே சோதித்து விடுவார், சில நேரங்களில் சைக்கோவோ! என்று நினைக்க வைக்கும்.
நாம் படம் தான் பார்க்கிறோம் என்றாலும், த்தா! இவனைப் பொளந்துடனும்ன்னு தோன்றும் அளவுக்கு ரணகளமாக நடித்துள்ளார் 🙂 .
நமக்கே அடேய்! பாவம்டா விட்டுடு என்று தோன்ற வைத்து விட்டார்கள். இப்பகுதி நீளத்தைக் குறைத்து இருக்கலாமோ என்று இருந்தது.
மிரட்டல் சம்பவம்
இறுதியில் வரும் ட்விஸ்ட் எனக்கு ஏற்புடையதாக இல்லை ஆனால், படம் தாறுமாறாக இருந்ததில் சந்தேகமில்லை.
சஸ்பென்ஸ், த்ரில்லர் படங்களில் காட்சிகளை எதனால் ஏற்புடையதாக இல்லையென்று கூறினால், கதையையே கூறி விடுவது போலாகி விடும்.
எனவே, யாரிடமும் மேலும் கதை கேட்காதீர்கள், முன்னோட்டத்தையும் பார்க்காதீர்கள். நேரடியாகப் படத்தைப் பார்க்கவும்.
ஒளிப்பதிவுக்கு அதிகக் காட்சிகள் இல்லை. சில இடங்களிலேயே மொத்தப் படமும் முடிந்து விடுகிறது.
ஆனால், காரின் உள்ளேயே சிறிய பகுதியில் பல கோணங்களில் ஒளிப்பதிவு செய்து இருப்பது, அசத்தல், மிகக்கடுமையான பணியாக இருந்து இருக்கும்.
பாடல் காட்சிகளும் அதற்குண்டான இசையும் அற்புதம். மான்டேஜ் காட்சிகள் அழகுற ரசனையாக எடுக்கப்பட்டுள்ளன.
Ishq இயக்கியது அறிமுக இயக்குநர் அனுராஜ் மனோகர்.
யார் பார்க்கலாம்?
அனைவரும் பார்க்கலாம், பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.
பரிந்துரைத்தது யாசின். Amazon Prime ல் காணலாம்.
Directed by Anuraj Manohar
Produced by Mukesh R Mehta, A.V. Anoop, C.V. Sarathi
Written by Ratheesh Ravi
Starring Shane Nigam, Ann Sheetal
Music by Jakes Bejoy
Cinematography Ansarsha
Edited by Kiran Das
Release date 17 May 2019
Running time 134 minutes
Country India
Language Malayalam
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
சூப்பர் படம் கிரி. பரிந்துரைக்கு நன்றி.
கிரி, எந்த மொழி படமாக இருந்தாலும் அந்த படத்தை பார்த்த பிறகு ஒரு FEELING உள்ளுக்குள்ள கண்டிப்பாக வர வேண்டும் என்பது என் எண்ணம். மனதில் எவ்வளவு தான் குழப்பங்கள் / பிரச்சனைகள் இருந்தாலும் இந்த FEELING மட்டும் உள்ளுக்குளே இருக்கும்.
இது குறைந்த பட்சம் ஒரு சில தினங்களாவது தொடரும். தொடரனும். அதிலும் குறிப்பா படத்தோட எந்த வித தகவலும் தெரியாமல், எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் படத்தை பார்த்த பிறகு (படம் செம்மையா இருக்கும் போது) வர பீலிங் இருக்குதே!!! எப்பா அதை சொல்ல வார்த்தைகள் இல்லை. அந்த பீலிங் எனக்கு இந்த படம் கொடுத்துச்சு..தற்போது பார்க்கிற பெரும்பான்மை மலையாள படங்கள் கொடுக்கிறது..
எப்படி பட்ட படங்களாக இருந்தாலும் நிறை குறைகள் இருப்பது யதார்த்தம்.. எல்லோருடைய பார்வையும் ஒரே மாதிரி அல்ல.. ஒரு படம் பார்க்கும் போது ஒரு சில குறைகள் இருந்தாலும், சில நல்ல காட்சிகள் அந்த குறைகளை எளிதில் மறக்கடிக்க வைத்து விடும்..அதை நான் இந்த படத்தில் உணர்ந்தேன். நாயகனின் நடிப்பு நன்றாக இருந்தாலும் நாயகியின் படிப்பு, செம்மையா இருந்தது. சம்பவத்திற்கு பின் அவரின் நடிப்பு மிகவும் யதார்த்தம்.. படத்தில் ஒரு துளி கூட ஆபாசம் இல்லை..
சில காட்சியமைப்பில் Shine Tom Chacko பட்டைய கிளப்பி இருப்பார்.. சம்பவத்துக்கு பின் மீண்டும் Shane Nigam தை காணும் போது Shine Tom Chacko நடிப்பு மிக மிக யதார்த்தம்.. நிறைய காட்சிகளை சொல்லலாம்.. ஆனால் படத்தோட சுவாரசியம் குறைந்து விடும்..
(இப்பகுதி நீளத்தைக் குறைத்து இருக்கலாமோ) : உங்கள் கருத்துடன் ஒத்து போகிறேன். இதே same feeling நான் நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்திலும் (திருமண வரவேற்பின் போது) உணர்ந்தேன்.. ஆனால் அந்த காட்சி நகைச்சுவையாக சென்றதால் எல்லோராலும் ரசிக்க முடித்தது.
2019 ல ஒரே ஒரு கைதி படத்தை பார்த்து விட்டு எப்பா !!! என்ன கதை?? படம் எப்படி??? செம்ம இல்ல?? எந்த சேட்டா கைதி களி நோக்கியா???? மரண களி??
மலையாளத்துல இப்படி படம் இருக்கா??? என்ன??.. ஒரு காட்டையும் , ஒரு ஏரியையும், 4 ஆளுங்களையும், ஒரு டீ கடையையும் வச்சியே படத்தை முடிச்சிடுவிங்க!!! என நான் நக்கலாக என் மலையாள நண்பர்களுடன் விவாதித்து இருக்கிறேன்.. என்னுடையது முட்டாள்தனமான விவாதம் என தற்போது உணர்கிறேன்.. சேட்டாகளிடம் மன்னிப்பும் கேட்டு கொள்கிறேன்..
தற்போது நான் பார்க்கின்ற ஒவ்வொரு மலையாள படமும் கைதியை விடவும் சிறந்ததாக இருக்கிறது.. குறிப்பாக அறிமுக இயக்குனர்களின் எல்லா படமும் தருமாறு!!! வித்தியாசமான கதைகளங்கள் /சிந்தனைகள்.. நம்முடைய உச்ச நட்சத்திரங்களையும் / இயக்குனரையும் தற்போது நினைக்கும் போது தயாரிப்பாளர்களின் பரிதாபம் புரிகிறது..
சமீபத்தில் நான் பார்த்த Parava படம் (2017) என்னை வேறு உலகில் பறக்க வைத்து கொண்டிருக்கிறது.. படத்தை பார்த்த அந்த பீலிங்லிருந்து இன்னும் என்னால் வெளியில் வர முடியவில்லை.. படத்தின் இயக்குனர் Soubin Shahir மிக சிறந்த நடிகர்.. Kumbalangi Nights படத்தில் ஷாஜி பாத்திரத்தில் நடித்தவர்.. அற்புதமான துணை நடிகர்.. இயக்குனராக இவருக்கு முதல் படம் இது .. படத்தில் ஒளிப்பதிவு மிக மிக அற்புதம்.. படம் உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்..பார்க்க முயற்சிக்கவும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@ஸ்ரீனிவாசன் 🙂
@யாசின்
“அதிலும் குறிப்பா படத்தோட எந்த வித தகவலும் தெரியாமல், எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் படத்தை பார்த்த பிறகு (படம் செம்மையா இருக்கும் போது) வர பீலிங் இருக்குதே!”
உண்மை தான். எதிர்பாராமல் கிடைக்கும் சஸ்பென்ஸ், மகிழ்ச்சி. The African Doctor அது மாதிரியான படம். இங்கி பிங்கி போட்டு பார்த்து இந்தப்படத்தை போட்டேன் 😀
“அவரின் நடிப்பு மிகவும் யதார்த்தம்.. படத்தில் ஒரு துளி கூட ஆபாசம் இல்லை..”
ஆமாம். அவருடைய உடைகளும் அழகாக இருந்தது.
“அந்த காட்சி நகைச்சுவையாக சென்றதால் எல்லோராலும் ரசிக்க முடித்தது.”
ஆமாம். சரியா சொன்னீங்க.
“குறிப்பாக அறிமுக இயக்குனர்களின் எல்லா படமும் தருமாறு!!!”
நான் இங்கே எழுதிய பல விமர்சனங்கள் அறிமுக இயக்குனர்கள் படங்களே
“நம்முடைய உச்ச நட்சத்திரங்களையும் / இயக்குனரையும் தற்போது நினைக்கும் போது தயாரிப்பாளர்களின் பரிதாபம் புரிகிறது..”
தயாரிப்பாளர் பரிதாபம் இல்லை யாசின். அவர்களின் பேராசை.
பணம் போடுவது இவர்களே, இவர்களே அனைத்தையும் தீர்மானிக்க வேண்டும் ஆனால், பணத்துக்காக இப்படி அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்.
இவர்களின் மோசமான நிலைக்குத் தயாரிப்பாளர்களே காரணம்.
இது குறித்து முன்னர் எழுதிய கட்டுரை https://www.giriblog.com/tamil-cine-field/
“சமீபத்தில் நான் பார்த்த Parava படம் (2017) என்னை வேறு உலகில் பறக்க வைத்து கொண்டிருக்கிறது”
ஏற்கனவே யாரோ கூறி இப்படம் பார்த்ததாக நினைவு.. திரும்ப பார்க்கிறேன்.