அமுல் நிறுவனத்தின் தயாரிப்புக்கும் அதனுடைய விளம்பரத்துக்கும் ரசிகர் கூட்டம் உள்ளது. அமுல் நிறுவனம் பற்றித் தெரியாத, தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் அடங்கியது அமுல் : ஓர் அதிசய வெற்றிக் கதை.
அமுல் : ஓர் அதிசய வெற்றிக் கதை
தற்போது வரை நம்ப முடியாத செய்தி, அமுல் ஒரு கூட்டுறவு நிறுவனம் என்பது!
ஆமாம்.
அமுல் நிறுவனம் ‘ஒரு முதலாளி’ நிறுவனமல்ல, பலர் இணைந்து அவர்கள் கடும் உழைப்பில் உருவாகி, இந்தியாவின் அடையாளமாக விளங்கிக்கொண்டு உள்ளது.
மாடு வைத்துள்ளவர்களிடம் பாலை வாங்கி விற்பனையை ஆரம்பித்தவர்கள், பல்வேறு முயற்சிகளுக்கு, போராட்டங்களுக்குப் பிறகு வளர்ச்சியை அடைந்துள்ளனர்.
பால்ஸன் (Polson)
பம்பாயை சேர்ந்த பெஸ்டோன்ஜி எடுல்ஜி தலால் (Pestonji Edulji Dalal) தொழிலதிபர், தன் காஃபி நிறுவனத்துக்கு வைத்த பெயர் பால்சன்.
இந்தியர்களுக்கு ஆங்கிலத்தின் மீது இருந்த ஈர்ப்பை பயன்படுத்த வைத்த பெயரே பால்சன். பெயரோடு சுவையும் சிறப்பாக இருந்ததால், வெற்றியைப் பெற்றார்.
இந்தச் சமயத்தில் முதலாம் உலகப்போரில் கலந்து கொண்ட இராணுவ வீரர்களுக்குக் காஃபி பொட்டல தேவையைப் பெஸ்டோன்ஜி நிறைவேற்றிக் கொடுத்தார்.
இதன் பிறகு வெண்ணெய்களுக்கான தேவையும் இவரைத் தேடி வந்தது.
குஜராத், கேடா மாவட்டத்தில் அதிகம் கிடைத்த பாலை வாங்கி, அதன் மூலம் வெண்ணெய் என்று வியாபாரத்தை விரிவாக்கினார் பெஸ்டோன்ஜி.
இதனால், கேடா மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் அதிகம் பயனடைந்தனர் ஆனால், இடைத்தரகர்கள் மக்களின் உழைப்பை திருட ஆரம்பித்தார்கள்.
அதோடு இடைத்தரகர்கள் வைத்ததே விலை என்றானது.
திரிபுவன்தாஸ்
பால் உற்பத்தியாளர்கள் உழைப்பின் பலனை, இடைத்தரகர்கள், மற்ற நிறுவனங்கள் இல்லாமல் பால் உற்பத்தியாளர்களே அனுபவிக்க வேண்டும் என்று உருவாகியதே கேடா மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
துவக்கத்தில் வழக்கம் போலப் பல தடைகள், எதிர்ப்புகள் என வரிசைகட்டி வந்ததை சங்கத்துக்குப் பொறுப்பு ஏற்றத் திரிபுவன்தாஸ் நிலை நிறுத்துகிறார்.
வர்கீஸ் குரியன்
உலோகவியல் துறையில் நிபுணராக வேண்டும் என்ற ஆசை கொண்ட புத்திசாலி மாணவரான வர்கீஸுக்குச் சற்றும் பிடிக்காத பால் துறைக்கு வந்தது அவர் விதியே.
துவக்கத்தில் எந்த ஆர்வமும் இல்லாமல் இருந்தவருக்குத் திரிபுவன்தாஸ் நட்பு கிடைத்த பிறகு அவரின் ஆர்வத்துக்குத் தீனி போடும் வாய்ப்புக் கிடைக்கிறது.
இதன் பிறகு இவருடைய வாழ்க்கையே மாறி, திரிபுவன்தாஸ் உடன் இணைந்து அமுல் வெற்றிக்குப் பாடுபடுகிறார். அமுலே வாழ்க்கை என்றாகிறது.
தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி, வர்கீஸ் நான் படித்த கோபிசெட்டிபாளையம் ‘வைரவிழா மேல்நிலைப்பள்ளி‘ யில் படித்துள்ளார் 🙂 .
அமுல் விளம்பரம்

அமுல் பெயர் எப்படி வந்தது? அமுலின் விளம்பரத்தில் வரும் சிறுமி எப்படி வந்தார்? என்ற விவரங்கள் படு சுவாரசியமாக உள்ளன. Image Credit
தற்கால சூழ்நிலையை வைத்து வரும் அமுல் விளம்பர வாசகங்கள் மக்களிடையே வரவேற்பை பெறுகின்றன. இதற்கென்று ரசிகர் கூட்டமுள்ளது.
விளம்பரங்கள் ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இப்புத்தகத்தில் உணரலாம்.
எருமை பால் பவுடர்
எருமை பாலில் பால் பவுடர் தயாரிக்க முடியாது என்று உலகமே கூறிய நிலையில், எருமை பால் பவுடர் தயாரித்த தருணம், இந்தியர்களாகப் பெருமைப்படலாம்.
பலரும் கை விட்ட ஒரு செயலை, விடாமுயற்சியாகத் தொடர்ந்து கடும் சோதனைகளுக்குப் பிறகு வெற்றியை அடைவது சாதனை தானே!
நிறுவனங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது
இப்புத்தகம் படித்த பிறகு அமுல் தயாரிப்பை, விளம்பரங்களைக் காணும் போது இப்புத்தகத்தில் படித்த விவரங்கள் நினைவில் வந்து செல்கிறது.
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் புதிய சிந்தனைகள், போராட்டங்கள், நேர்மறை எண்ணங்கள், ஒற்றுமை, மற்றவர்களின் ஆலோசனைக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் எவ்வளவு முக்கியம் என்பதை இதில் அறியலாம்.
இப்புத்தக விமர்சனம் எழுதும் வரை அமுல் ஒரு கூட்டுறவு நிறுவனம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
அனைவரும் இப்புத்தகத்தைப் படிக்கப் பரிந்துரைக்கிறேன் குறிப்பாகத் தொழில் துறையினர், நிறுவனம் நடத்துபவர்கள்.
அமேசானில் வாங்க –> அமுல் : ஓர் அதிசய வெற்றிக் கதை Link
தொடர்புடைய கட்டுரைகள்
கிரி, சின்ன வயசுல அமுல் என்ற விளம்பரத்தை பார்க்கும் போதே ஒரு வித உற்சாகம் பிறக்கும்.. அமுல் நிறுவனத்தை பற்றி நிறைய விவரம் தெரியாது.. ஆனால் எளியவர்களுக்கான நிறுவனம் என்று நான் நினைத்ததுண்டு.. இந்திய பசுமை புரட்சியை குறித்து நம்மாழ்வார் அய்யாவின் புத்தகம் மூலம் நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன்.. பள்ளியில் நான் படித்த பசுமை புரட்சிக்கும், அய்யாவின் புத்தகம் மூலம் தெரிந்த தகவல்கள் என்னை மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது.. ஆனால் வெண்மை புரட்சியை குறித்து அதிக தகவல்கள் எனக்கு தெரியாது.. ஆனால் இது போல புத்தகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.. படித்து விட்டு என் கருத்தை பகிர்கிறேன்.. நன்றி கிரி..
படித்துப் பாருங்க யாசின்.. எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு நிறுவனத்தைக் கொண்டு வந்துள்ளார்கள் என்பது வியப்பளிக்கும்.