ரத்தன் டாடா | அசரடிக்கும் மேலாண்மை

5
ratan tata book review ரத்தன் டாடா

டாடா’ என்ற பெயர் தெரியாத இந்தியர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்குப் பல ஆண்டுகளாகத் தொழில்துறையில் நீடித்து இன்றும் உச்சத்தில் இருக்கும் ஒரு தொழில் குழுமம். இதில் பார்க்கப் போவது ரத்தன் டாடா அவர்களை.

இல்லாத துறைகளே எனும் அளவுக்கு அவர்களின் சந்தை பரந்து விரிந்து உள்ளது.

ஜே.என்.டாடா

ஜே.என்.டாடா ஆரம்பித்த டாடா நிறுவனம், பல தலைமுறைகளைத் தாண்டி இன்றும் இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவிலும் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது.

என்னுடைய தலைமுறைக்கு ஜே.என்.டாடா பெயர் பழக்கமில்லை ஆனால், ஜே ஆர் டி டாடா பெயர் பரிட்சயம். தற்போது (2020) ரத்தன் டாடா.

தாஜ் ஹோட்டல்

ஜே. என். டாடா (ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்) ஒரு விடுதிக்குச் சென்ற போது இந்தியர்களுக்கு அனுமதியில்லை என்று மறுக்கப்பட்டது.

இதனால் கோபம் அடைந்த ஜே. என். டாடா உருவாக்கியதே தற்போது பிரபலமாக உள்ள தாஜ் ஹோட்டல்.

அசர வைக்கும் மேலாண்மை

ஜே. என். டாடா க்கு பிறகு 80 க்கும் அதிகமான டாடா நிறுவனங்களை ஜே ஆர் டி டாடா ஒருவரே மேலாண்மை செய்துள்ளார். மிரட்டியுள்ளார் என்று தான் கூறனும்.

எப்படிச் செய்தார்?! ஒன்றுமே புரியலை.

அலுவலகத்தில் ஒரு வேலை செய்துகொண்டு இருக்கும் போது நமக்கு இன்னொரு வேலையைக் கொடுத்தால், நம்மால் சரியாகக் கவனம் செலுத்த முடியாது.

அப்படியிருக்கையில் இத்தனை நிறுவனங்கள் என்றால், எவ்வளவு பிரச்னை? எவ்வளவு மேலாண்மை? எவ்வளவு சந்திப்புகள்?! யோசித்தால் தலை கிறுகிறுக்கிறது.

நேரம் இல்லை என்று சொல்ல நமக்கெல்லாம் தகுதியே இல்லை.

தலைமுறை பதவியல்ல

டாடா என்ற பெயரைப் பார்த்ததும் தலைமுறையாக ஒவ்வொருவராகப் பொறுப்பை ஏற்று இருப்பார்கள் என்று தான் நான் நினைத்து இருந்தேன் ஆனால், அப்படியில்லை.

டாடா நிறுவனத்தை நிர்வகிக்க டாடா குடும்பத்தினராக இருந்தால் மட்டுமே பொறுப்பை ஏற்று விட முடியாது. அதற்கான தகுதி இருந்தால் மட்டுமே சாத்தியம்.

இப்பதவியில் இருந்த ஜே ஆர் டி டாடா, ரத்தன் டாடா இருவருமே தங்களைப் பல கடுமையான நேரங்களில் நிரூபித்தே இந்த நிலையை அடைந்து இருக்கிறார்கள்.

ரத்தன் டாடா

ரத்தன்டாடா பணக்கார வாழ்க்கையை வெறுத்துள்ளார். இதனால், இதில் இருந்து ஒதுங்கி அமெரிக்கா சென்று அங்குச் சாதாரண வாழக்கையை வாழ்ந்துள்ளார்.

அவருடைய பாட்டி உடல்நிலை காரணமாக ஊருக்கு வந்தவர், பின்னர் இங்கேயே பணி புரிய ஜே ஆர் டி டாடா கண்ணில் பட்டு வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்.

டாடா நிறுவனத்தில் ரத்தன் டாடா சேர்ந்தாலும், சாதாரணத் தொழிலாளி போலத் தான் இருந்துள்ளார். சொல்லப்போனால் டாடா என்ற பெயரால் நெருக்கடியே அதிகம்.

டாடா என்பது குடும்பப் பெயர்.

எனவே, நேரடி மகன் கிடையாது ஆனால், ரத்த சொந்தம். இவர்கள் சொந்தத்தைப் படிக்கும் போது யார் யாருக்கு மகன், மகள் என்று குழப்பம் வரும் 🙂 .

ஜே ஆர் டி டாடா ஒரு அரசன் போல இருந்துள்ளார்.

அவருக்குப் பிறகு பொறுப்பை ஏற்க பலர் இருக்க, யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்திலேயே இதைத் தள்ளிக்கொண்டு வந்துள்ளார்.

இறுதியில் காலமும் சூழ்நிலையும் ரத்தன் டாடா வை சேர்மன் ஆக்கியுள்ளது.

ரத்தன் டாடா சீர்திருத்தங்கள்

தலைமை போட்டி அரசியலில் நிறுவனத்தில் மற்றவர்களின் அரசியல் எல்லாம் படிக்கும் போது சுவாரசியமாக இருந்தது.

ரத்தன்டாடா க்கு இப்பதவியில் எந்த எதிர்பார்ப்பும் இல்லையென்றாலும், இறுதியில் அவருக்கே வந்துள்ளது.

ஒருவரின் திறமையைச் சோதிக்க வேண்டும் என்றால், நட்டத்தில் ஓடும் நிறுவனத்தைப் பார்க்க டாடா நிறுவனத்தில் வலியுறுத்துவார்கள்.

இது போல இரு நிறுவனங்களை ரத்தன் டாடா க்கு கொடுத்து ஜே ஆர் டி டாடா அவரைச் சோதித்துள்ளார்.

ரத்தன்டாடா சேர்மன் பொறுப்புக்கு வந்து அமர்வது ஒரு ஒரு திரைப்படம் போலவே உள்ளது.

இவர் எடுக்கும் நடவடிக்கைகள், சீர்திருத்தங்கள் ஆகியவை டாடா நிறுவனத்தை மேலும் வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளது.

இவரை விமர்சித்தவர்கள், குறைத்து மதிப்பிட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

ஜே ஆர் டி டாடா வின் முடிவை ரத்தன் டாடா நியாயப்படுத்தியுள்ளார்.

தொழிற்சங்கம்

என்னை வியக்க வைத்த ஒரு சம்பவம், ரத்தன் டாடா எதிர்கொண்ட தொழிலாளர் பிரச்சனை. ‘ராஜன் நாயர்’ என்ற தொழிற்சங்க தலைவர் டாடா நிறுவனத்தையே மிரட்டியுள்ளார்.

நிறுவனம் அவரைப் பணி நீக்கம் செய்தும், தன்னை மீறி எதுவும் நடந்து விட முடியாது என்று தொழிலாளர்களைத் தன் பக்கம் கொண்டு வந்து போராட்டங்களைத் தூண்டி பல மாதங்கள் நிறுவனத்தையே முடக்கியுள்ளார்.

பின்னர் அவர் எப்படி வழிக்குக் கொண்டு வரப்பட்டார் என்பது சுவாரசியம்.

கேரளாவில் எல்லாத்துக்கும் போராட்டம் செய்வார்கள். அதனால் தான், அங்கு எந்த நிறுவனமும் தொழில் நடத்த முடியாமல், மற்ற மாநிலங்களுக்குச் செல்கிறார்கள்.

டாடா இண்டிகா & டாடா நானோ

ரத்தன் டாடா, கார் தயாரிக்க வேண்டும் என்று ‘டாடா இண்டிகா’ கொண்டு வந்து வெற்றிப் பெற்றது, அதன் பிறகு ஒரு லட்சத்தில் ‘டாடா நானோ’ கொண்டு வந்தது.

அதற்கு மேற்கு வங்கம் அரசியல் பிரச்சனையை ஏற்படுத்தியது என்று பல தகவல்கள் உள்ளது.

டாடா நானோ பெரியளவில் வெற்றி பெறவில்லையென்றாலும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திச் செய்தது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

என்னுடைய நண்பன் இன்னும் பயன்படுத்துகிறான். நடுத்தர குடும்பத்துக்கு ஏற்றப் பொருத்தமான வாகனம்.

முன்னோக்கிய திட்டங்கள்

தொழில்நுட்பம் மீது ரத்தன்டாடா கொண்டு இருந்த ஆர்வம், எதிர்காலத் தேவைகள் குறித்த கணிப்புகள், நிறுவனத்தை நிர்வகிக்க வேண்டிய வழிமுறைகள் என்று பிரம்மிப்பு ஏற்படுத்துகிறார்.

வெளிநாட்டு நிறுவனங்களை மிகப்பெரிய விலைக்குக் கையகப்படுத்தி வெற்றிபெற்றுள்ளார்.

இவர் கொடுத்த விலையை விமர்சித்தவர்கள் பலர் பின்னர் அதன் வெற்றியைக் கண்டு அமைதியாகி உள்ளனர்.

வெளிநாட்டில் புதிய நிறுவனத்தைத் துவங்கி வாடிக்கையாளர்களைப் பிடிக்கக் காலமெடுக்கும் என்பதால், இந்த முறையைப் பின்பற்றியுள்ளனர், அது ரத்தன்டாடா க்கு வெற்றியையும் கொடுத்துள்ளது.

தொழில் செய்யும் அனைவரும், செய்யலாம் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் டாடா நிறுவனம் பற்றியும் அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களையும் அதை எவ்வாறு வெற்றிகரமாகக் கடந்து வந்தார்கள் என்பதையும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.

நிச்சயம் ஒரு உந்துதலாக இருக்கும்.

சமீப நிகழ்வு ஒன்றில் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி அவர்கள் ரத்தன் டாடா அவர்களின் காலைத் தொட்டு ஆசிர்வாதம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இது அனைவராலும் சிலாகித்து பேசப்பட்டது. மேன்மக்கள் மேன்மக்களே!

புத்தகத்தை ஆசிரியர் சொக்கன் சுவாரசியம் குறையாமல் எழுதியுள்ளார்.

தொடர்புடைய கட்டுரை

எழுதாப் பயணம் – ஆட்டிசம்

அமேசானில் வாங்க –> ரத்தன் டாடா Link

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. சுவாரஸ்யமான, புத்தகத்தை வாங்கத் தூண்டும் விமர்சனம்.

  2. கிரி, இந்த பதிவை படிச்சாலே தலை சுத்துது!!! பின்ன எங்க புத்தகத்தை படிக்கிறது.. இணையத்தில் ரொம்ப நாட்களுக்கு முன்பு படித்தது, இங்கு சொன்ன பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்..

    “ஒருவன் அடைந்ததை எண்ணி பொறாமை கொள்ளாதீர்கள்!!! அவன் அதை அடைய முயன்ற போது இழந்தவைகள் உங்களுக்கு தெரியாது!!! அது உங்களுக்கு தெரிந்தால் அடையவேண்டும் என்ற எண்ணமே உங்களுக்கு வராது!!! எவ்வளவு ஆழமாக பொருள் கொண்ட வரிகள்!!!

  3. @LETCHUMANAN DURAISAMY நன்றி

    @தேவா நலமா? 🙂

    @யாசின் இதைப்படிக்க முயற்சி செய்யுங்க.. உங்க துறை சார்ந்து உள்ளது. எனவே, உங்களுக்கு சுவாரசியமா இருக்கும்.

  4. சுவையான அறிமுகத்துக்கு நன்றி கிரி.

    இந்தப் புத்தகம் இப்போது கிண்டில் ஈபுக் வடிவிலும் கிடைக்கிறது: https://amzn.to/3qFZSH6 (Affiliate Link)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here