தமிழகத்தில் தேவை இருந்தும், அதைப் பயன்படுத்திக்கொள்ளாமல் தெனாவெட்டாக உள்ளனர் என்ற குற்றச்சாட்டைப் பரவலாகக் கேட்க முடிகிறது. Image Credit
கல்லூரி படித்து முடித்த தமிழ் மாணவர்களின் அனுபவங்களை மட்டுமே இக்கட்டுரை கூறுகிறது. மற்ற தொழிலாளர்கள் நிலையைத் தனிக்கட்டுரையாகக் கூறலாம்.
தமிழ் பசங்களுக்கு என்ன ஆச்சு?
நேர்முகத்தேர்வு நடத்துபவர்கள் பலர் ஆதங்கத்துடன் இதைக் குறிப்பிடுகிறார்கள்.
நம்ம பசங்களுக்கு வாய்ப்புக் கொடுக்கலாம் என்றால், அவர்கள் நடந்து கொள்ளும் முறை எரிச்சலூட்டும் படியுள்ளது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
கேம்பஸ் நேர்முகத்தேர்வு நடக்கும் இடங்களில் பல மாணவர்களுக்கு அவர்கள் துறை பற்றிய அடிப்படை அறிவே இல்லை.
100 நபர்களில் 10 பேர் கூட ஒழுங்காகச் செய்வதில்லை.
மற்ற மாநில மாணவர்கள் காட்டும் ஆர்வத்தையும் அக்கறையையும் தமிழக மாணவர்கள் காட்டுவதில்லை. அனைத்திலும் அலட்சியம் உள்ளது என்கின்றனர்.
யார் காரணம்?
மாணவர்கள் இது போல நடந்து கொள்ளக் காரணம், பெற்றோரா? கல்விமுறையா? கல்லூரி நிர்வாகமா?
தமிழகத்தில் ஐடி துறையில் ஏராளமான வாய்ப்புகள் தற்போது (2021) உள்ளன.
திறமையான மாணவர்களுக்கு உடனடியாக அதிகச் சம்பளத்துடன் வேலை கிடைக்கிறது.
ஆனால், மற்ற மாநில மாணவர்களுடன் ஒப்பிடும் போது பலர் மோசமாக உள்ளனர், தகுதி குறைவாக உள்ளனர்.
நேர்முகத்தேர்வு
நேர்முகத்தேர்வில் கேள்வி கேட்பவரையே கேள்வி கேட்கும் துர்பாக்கிய சம்பவங்களும் நடக்கிறது. யார் யாரை நேர்முகத்தேர்வு செய்கிறார்கள் என்பதே புரியவில்லை.
எதைக் கேட்கலாம் எதைக் கேட்கக் கூடாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லை. நேர்முகத்தேர்வுக்கு எப்படி வர வேண்டும் என்ற புரிதல் இல்லை.
தற்போது நேர்முகத்தேர்வு செய்துக்கொண்டுள்ளவர்கள் எவரையும் கேட்டுப்பாருங்கள், இக்குற்றச்சாட்டு இருக்கும்.
மெக்கானிக்கல் துறை
சில மாதங்களுக்கு முன் பொறியியல் (BE Mechanical) படித்த அக்கா பையன் ஐடி வேண்டாம் என்று அவன் விரும்பிய மெக்கானிக்கல் துறைக்கே பணிக்குச் சென்றான்.
அங்கே பெரும்பாலானவர்கள் இந்தி பேசுபவர்களாகவே உள்ளனர். எதனால், தமிழ் மாணவர்கள் அதிகம் இல்லை என்று புரியவில்லை என்றான்.
இவ்வளவுக்கும் கோவையில் உள்ள நிறுவனம்.
குறிப்பிடப்பட வேண்டியது, கேம்பஸ் நேர்முகத்தேர்வு இல்லாமல், Linkedin ல் தேடி நிறுவன இணைய தளத்தில் விண்ணப்பம் செய்து வேலையைப் பெற்றான்.
வேலை கிடைக்கலைனு சமூகத்தளங்களில் பலர் புலம்பிட்டு உள்ளார்கள். கிடைக்காததற்கு காரணம், இவர்கள் எதிர்பார்ப்பு அப்படி.
எந்த வேலையும் தகுதி குறைவான வேலை இல்லை, எடுத்தவுடனே மாதம் ஒரு லட்சத்தில் சம்பளம் வேண்டும் என்பது போலப் பலருக்கு நினைப்பு உள்ளது.
எதிர்பார்ப்பு, சம்பளம் எல்லாமே கற்பனைக்கு எட்டாத உயரத்தில் உள்ளது. இதுவே குறைந்த சம்பளத்துக்கு வேலைக்குச் செல்லாமல், காத்திருக்க வைக்கிறது.
BE யில் படித்தது கம்ப்யூட்டர் இல்லையென்றாலும், சம்பளம் காரணமாக ஐடி துறைக்கே பலர் செல்ல விரும்புகிறார்கள்.
அவர்களுடைய Core படிப்பு பணிக்குச் செல்வதில்லை.
ஐடி துறை
சென்னையில் தன் நிறுவன கிளையைத் துவங்கிய நண்பன் நொந்து போய்ச் சொன்னது..
‘நம்ம பசங்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு எவ்வளவோ முயற்சி செய்தேன் ஆனால், வருகிறவர்கள் வட மாநில மற்றும் மற்ற மாநில நபர்களாகவே இருந்தனர்.
என்னால் 20% தான் நம்ம பசங்களையே எடுக்க முடிந்தது.
அதிலும் ஒருத்தன் திருமண மண்டபத்துல உட்கார்ந்து Video Call போடுறான், செம கடுப்பாகி விட்டது. அணுகுமுறை (Attitude) சுத்தமா இல்லை.
என்னிடம் வந்த ஒருத்தனிடமும் ஃபயர் இல்லை. சாதிக்கணும்னு வெறி இல்லை. என்னால இதை ஜீரணிக்கவே முடியவில்லை என்று மிக வருத்தப்பட்டுப் பேசினான்.‘
தமிழ் பசங்களுக்கு என்ன ஆச்சு? நம்ம பசங்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தைப் பேச்சில் உணர முடிந்தது.
கஷ்டம் தெரியாமல் வளர்ப்பு
தற்போதைய 2K கிட்ஸ் பெற்றோர்கள் முன்பு வாழ்க்கையில் சிரமப்பட்டு, பொருளாதார நிலையில் தற்போது மேம்பட்டு உள்ளார்கள்.
எனவே, நாம் பட்ட சிரமத்தை நம்ம பசங்க படக் கூடாது என்று பணத்தோட அருமையே தெரியாமல் வளர்த்து வைத்துள்ளார்கள்.
கஷ்டம் என்றால் கிலோ என்ன விலை? தான்
உடல் உழைப்புச் செய்ய வேண்டிய வேலை என்றால், அந்தப்பக்கமே போவது கிடையாது. சொகுசா வேலை பண்ணனும், இலட்சக்கணக்குல சம்பாதிக்கணும், ஜாலியா இருக்கணும் இது தான் எண்ணம்.
சுருக்கமா, பசங்களிடம் ஃபயர் இல்லை, நிறையச் சம்பாதிக்கணும் என்ற விருப்பம் உள்ளதே தவிரச் சாதிக்கணும் என்ற வெறி இல்லை.
பணத்தோட அருமையும், பணியின் முக்கியத்துவமும் பலருக்கு இன்னும் புரியவில்லை.
மத்திய பிரதேஷ், பீஹார், அசாம் போன்ற இடங்களில் இருந்து வரும் பசங்களுக்கு அதிகம் தெரியவில்லை, ஸ்மார்ட்டாகவும் இல்லை.
ஆனால், அவர்களிடம் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற வெறி உள்ளது.
மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதற்காகக் கடுமையாக உழைக்கிறார்கள், சொகுசாக இருக்க நினைப்பதில்லை.
இது ஏன் நம்ம பசங்களிடம் இல்லை என்பதே பலரின் ஆதங்கம்.
நம்ம பசங்க ஸ்மார்ட், மற்ற மாநிலத்தவர் புரிந்து கொள்வதை விட இவர்கள் புரிந்து, செயலாற்றுவது அதிகம் ஆனால், எதோ ஒரு தடை இவர்களைக் கீழே இழுக்கிறது.
எச்சரிக்கை தேவை
பள்ளி கல்வி பாடத் திட்ட முறை மாற்றம் பலரிடையே வரவேற்பை பெற்றது போல, கல்லூரி பாடத்திட்டத்திலும், மாணவர்களின் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் கல்விமுறையைக் கொண்டு வர வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கஷ்டம் தெரியாமல் வளர்க்கக் கூடாது. இது அவர்களின் எதிர்காலத்துக்குச் செய்யும் துரோகம்.
பணம் இருக்கும் வரை பிரச்சனையில்லை ஆனால், இல்லாத போது அவர்களால் சமாளிக்க முடியாது.
வாழ்க்கையின் சிரமங்களை எதிர்கொள்ளத் தைரியம் இருக்காது.
பரவலான குற்றச்சாட்டு
கண்டிப்பாக இக்குற்றச்சாட்டு அனைவருக்கும் பொருந்தாது என்றாலும், பரவலான விமர்சனம் இது தான்.
ஐடி நிறுவனங்களில் கேம்பஸ் நேர்முகத்தேர்வு செய்பவர்கள், வழக்கமான நேர்முகத்தேர்வு செய்பவர்களைக் கேட்டால், கதை கதையாகக் கூறுவார்கள்.
தமிழை, தமிழகத்தைத் தாறுமாறாக நேசிக்கும் எனக்கு, கண் முன்னே தமிழக மாணவர்களின் தரம் குறைந்து வருவதை பார்க்கையில் கவலையளிக்கிறது.
இப்படியே தொடர்ந்தால், தமிழகத்தில் மற்ற மாநிலத்தவர் ஆதிக்கம் தான் நிறுவனங்களில் இருக்கும். ஏற்கனவே, கிட்டத்தட்ட அப்படி வந்து விட்டது.
இதற்கு முழுக்காரணமும் நாம் தான் என்பதை உணராமல், சும்மா தமிழ்டா, தமிழன்டா என்று கூவிக்கொண்டு இருப்பதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை.
பிரச்சனையை நம்மிடம் வைத்துக்கொண்டு மற்றவர்களைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை.
தொடர்புடைய கட்டுரை
கிரி, உண்மையில் இந்த கட்டுரையை படிக்கும் போது உள்ளுக்குள் ஒரு வலி ஏற்படுகிறது.. அதே சமயம் நீங்கள் கூறிய உண்மையும் புரிகிறது. கடந்த சில வருடங்களில் நிறைய மாற்றங்கள் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது.. எல்லாமே இந்த தலைமுறைக்கு டேக் இட் ஈசி என்ற மன நிலையில் இருப்பதாக உணர்கிறேன். நன்றாக அலசி விவரித்து இருக்கிறீர்கள்.. என் நண்பன் ஆரம்பித்த டைல்ஸ் நிறுவன நேர்காணலுக்கு ஒரு இளைஞன் லுங்கி யோடு வந்து விட்டானாம்.. என்னடா இது என்ற போது , அவனின் பதில் இது என்ன அம்பானி கம்பெனியா ?? புது நிறுவனம் தானே, வேலை கொடுத்த குடுங்க!! இல்ல விடுங்க!!! என்றானாம். நண்பன் கூறிய போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.. நான் வேலை தேடிய சமயத்தில் சம்பளம் வேண்டும், அனுபவத்திற்காக வேலைக்கு வருகிறேன்.. வேலைக்கு எடுத்து கொள்ளுங்கள் என்ற போது கூட சில நிறுவனம் எடுக்க வில்லை.. (நம்ம சரக்கு அவ்வளவு தான்).. பகிர்வுக்கு நன்றி கிரி.
தற்போதைய தலைமுறையினர் பெற்றோர் நல்ல நிலையில் உள்ளார்கள். உடனே வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை இவர்களுக்கு இல்லை.
கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை இல்லை.
எனவே, நெருக்கடி இல்லாததால், அலட்சிய மனோபாவம் உள்ளது.