அம்பானி : ஒரு வெற்றிக்கதை | என். சொக்கன்

2
அம்பானி : ஒரு வெற்றிக்கதை

திருபாய் அம்பானி என்று அழைக்கப்படும் ‘திராஜ்லால் ஹிரா சந்த் அம்பானி‘ யின் வாழ்க்கையே அம்பானி : ஒரு வெற்றிக்கதை.

ஏழ்மை குடும்பத்தில் பிறந்து விடாமுயற்சியால், உயர்ந்த சிந்தனைகளால் எப்படி இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் ஆனார் என்று இந்நூல் விளக்குகிறது.

அம்பானி

அம்பானி குஜராத்தில் பிறந்து வறுமை காரணமாக ஏடன் (தற்போது ஏமன்) நாட்டுக்குப் பணிக்குச் சென்று தன் போராட்ட குணத்தாலும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தாலும் பல புதிய முயற்சிகளை மேற்கொள்கிறார்.

அங்கே சம்பாதித்த பணத்தைக்கொண்டு இந்தியாவில் தொழில் துவங்க நினைக்கிறார். அதை ரிஸ்க் எடுத்துச் செய்தும் விடுகிறார்.

துணிச்சலான முடிவு

அம்பானியின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்று துணிச்சலான முடிவு. தன்னால் முடியும் என்ற அவருடைய தன்னம்பிக்கை.

மற்றவர் செய்யத் தயங்கும் செயலைச் செய்வது.

புதிய முயற்சிகளில் இறங்குவது, செலவைக் குறைக்க என்ன செய்வது? என்ற அவரின் சிந்தனையே அவரை மிகப்பெரிய நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.

எல்லோரும் முன்னோக்கி சிந்தித்துப் பெரியாளானால், அம்பானி பின்னோக்கி சிந்தித்துப் பெரியாளாகி இருக்கிறார். ஆசியரின் எடுத்துக்காட்டு, சிறப்பு.

Backward Integration

அம்பானி ஒரு டீக்கடை நடத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

கடை இலாபமாகச் செல்கிறது ஆனால், பாலுக்கு அதிகம் செலவு ஆவதாக நினைத்த அம்பானி, மாட்டை வாங்கிப் பால் கறந்து விற்பனை செய்தால், கூடுதல் இலாபம் கிடைக்கும் எண்ணி அதைச் செயல்படுத்துகிறார்.

மாடு வாங்கியதில் இலாபம் அடைந்து அதன் எண்ணிக்கையை அதிகரிக்கிறார். அதை ஒரு தொழிலாக்கி அதிலும் வெற்றி பெறுகிறார்.

டீத்தூள் விலை அதிகம், தரமானதாக இல்லை.

எனவே, சிறியளவில் நாமே டீத்தூளை தயாரித்தால் என்ன?! என்று அதையும் ஆரம்பித்துப் பின்னர் அதைப் பெரியளவில் விரிவாக்குகிறார்.

தன்னிறைவு

தன் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள் உற்பத்தியைத் தானே தயாரித்துத் தன் தயாரிப்புக்கு மற்றவர்களைச் சார்ந்திராமல் தன்னிறைவு அடைகிறார்.

அம்பானி துவக்கத்தில் ஆரம்பித்தது பாலியஸ்டர் துணி இறக்குமதி, பின் இதைத் தானே தயாரித்தால் என்ன?! என்று யோசித்துத் தயாரித்து வெற்றி காண்கிறார்.

பின்னர் பாலியஸ்டர் தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்களையும் ஒவ்வொன்றாகத் தயாரிக்க ஆரம்பித்து இறுதியாக அதன் இறுதி மூலப்பொருளான பெட்ரோலியம் துறைக்கு வந்து தன்னிறைவை அடைகிறார்.

பங்கு வெளியீடு

தன் தொழிலுக்கு மற்றவர்களிடம் கடன் வாங்கித் தொழில் செய்யும் போது வட்டிக்கே அதிகப் பணம் போவதை உணர்கிறார்.

அதாவது தனது கடுமையான உழைப்பின் பலனை மற்றவர்கள் எடுத்துக்கொள்வதாக நினைக்கிறார்.

எனவே, தன் நிறுவன பங்குகளை வெளியிட்டு மக்களையே பங்குதாரர்களாக்கி, அவர்களையே முதலாளிகள் போல உணரச் செய்து அவர்களுக்கும் இலாபம் கொடுத்துத் தானும் மிகப்பெரிய அளவில் இலாபம் பெறுகிறார்.

மேற்கூறிய அனைத்து நடவடிக்கைகளுக்கும், வெற்றிகளுக்கும் மூலக்காரணமாக இருப்பது, எப்படிச் செலவைக் குறைப்பது? என்ற அவரின் சிந்தனை தான்.

ஏற்றுமதிக்கு முக்கியத்துவம்

அம்பானி இறக்குமதியை குறைத்து ஏற்றுமதியை அதிகப்படுத்துவதிலேயே விருப்பம் கொண்டு இருந்தார். அதற்கான முயற்சிகளையே எப்போதும் தொடர்ந்தார்.

இந்தியா என்ற நாட்டின் மீதும் அதைச் சிறந்த தொழில் நாடாகக் கொண்டு வரும் முயற்சியிலும் ஆர்வம் கொண்டு இருந்தார்.

அம்பானிக்கு ஆங்கிலம் அதிகம் தெரியாது ஆனால், அக்குறைகளையெல்லாம் தன் தனித்திறமைகளால் மறைத்து விடுகிறார்.

ஆங்கிலம் நன்றாகத் தெரியாததைத் தகுதிக்குறைவாகக் கருதி தாழ்வுமனப்பான்மை அடையவில்லை.

முகேஷ் அம்பானி அனில் அம்பானி

திருபாய் அம்பானி 1986 ல் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது அவருடைய தொழில்களை முகேஷ் மற்றும் அனில் திறம்பட நடத்தியிருக்கிறார்கள்.

இங்கே குறிப்பிடப்பட வேண்டியது, முகேஷ் அனில் இருவரும், தன் அப்பா மிகப்பெரிய தொழிலதிபர் என்பதால், எளிதாக வரும் பதவியை எடுத்துக்கொண்டதாகக் கூற முடியாது.

திருபாய் அம்பானிக்கு 1986 ல் இருந்தே தனது 25 வயது முதலே மிகவும் உதவியிருக்கிறார்கள். அதாவது தகுதியுடனே பொறுப்பை ஏற்றுள்ளார்கள்.

நெருக்கடிகள்

அம்பானிக்கு அவருடைய தொழில் போட்டியாளர்கள் பல நெருக்கடிகளைக் கொடுத்துள்ளார்கள், அரசியல் பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளார்கள்.

ஆனால், அவற்றைப் படிக்கற்களாக மாற்றி வெற்றிப் பெற்றுள்ளார்.

தொழிலதிபர் என்றாலே சட்டத்துக்குப் புறம்பாக அல்லது தங்களுக்குச் சாதமாக மாற்றிச் சில காரியங்களைச் செய்யாமல் இந்தியாவில் வெற்றி பெற முடியாது.

அவ்வாறு அம்பானியும் செய்து இருப்பதைப் பெரியளவில் கூறாமல் ஆசிரியர் கடந்து சென்று விடுகிறார்.

80% அம்பானி வாழ்க்கையில் நடந்ததையும் 20% அவருடைய பெருமைகள், சாதனைகளையும் இப்புத்தகம் கூறுகிறது.

திருப்தியடையாத மனம்

ஏடன் நாட்டில் நன்கு சம்பளம் கிடைக்கிறது என்று திருப்தி அடைந்து இருந்தால், ஒரு அம்பானி நமக்குக் கிடைத்து இருக்க மாட்டார்.

அடுத்து என்ன? என்ற எண்ணங்களும், விடா முயற்சியும், புதிய சிந்தனையும், திருப்தியடையாத மனமும் மிக உயர்ந்த இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.

இப்புத்தகம் படிக்கும் போது ஒரு நிறுவனத்தை நடத்தாமல் சம்பளத்தை வாங்கிட்டு இருக்கிறோமே என்ற எண்ணம் சம்பளக்காரர்களுக்கு வந்து செல்லாமல் இருக்காது.

தொழில் வளத்தின் முக்கியத்துவம்

ஒரு நாட்டுக்குத் தொழில்வளம் எவ்வளவு முக்கியம் என்பதைச் சிறப்பாக அம்பானியின் வாழ்க்கை விளக்குகிறது.

அம்பானியின் மீதான விமர்சனங்களை ஒதுக்கி, எப்படி அவர் வளர்ச்சியடைந்தார் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அனைவரையும் இப்புத்தகம் படிக்கும் படி வலியுறுத்துகிறேன் குறிப்பாகச் சிறு தொழில் செய்பவர்கள், நிறுவனங்களை நடத்துபவர்கள்.

அம்பானி : ஒரு வெற்றிக்கதை புத்தகத்தை வாங்க –> Link

தொடர்புடைய கட்டுரைகள்

ரத்தன் டாடா | அசரடிக்கும் மேலாண்மை

FBI : அமெரிக்கப் புலனாய்வுத் துறை

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி, பொதுவாக வரலாற்று புத்தகங்கள் மீது அதீத ஆர்வம் கொண்டவன் நான்.. அதிலும் தனி மனிதனாக எந்த துறையில் சாதித்து இருந்தாலும் எனக்கு அவர்கள் மீது ஒரு மரியாதை எப்போதும் இருக்கும்.. 2007 மே மாதம் திண்டுகல்லில் வேலையை விட்டு விட்டு வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருந்த போது இந்த புத்தகத்தை வாங்கி படித்தேன்.. மன ரீதியாக ரொம்ப நொடிந்த நிலையில் இருந்த எனக்கு இவரின் வாழ்க்கை ஒரு உத்வேகத்தை கொடுத்தது..

    புத்தகத்தில் படித்த சில நிகழ்வுகள் மறக்க முடியாதது.. ஒரு முறை நண்பர்களிடம் பந்தயம் கட்டிவிட்டு (சாத்தியம் இல்லாத தூரத்தை) கடலில் நீச்சல் அடித்து வெற்றி பெற்றது, மற்றொன்று ஓமனுக்கு இந்தியாவிலிருந்து மண்ணை (மன்னர் அரண்மனையில் தோட்டத்தில் செடி வளர்க்க) ஏற்றுமதி செய்தது..ரிலையன்ஸ் என்ற பெயர் வர காரணம்.., ஏற்றுமதி / இறக்குமதியில் செய்த புரட்சி.. தில்லியில் ஹோட்டலில் அறை எடுக்காமலே சமாளித்தது.., என பல நிகழ்வுகளை கூறிக்கொண்டேபோகலாம்.. ஒரு சிறிய முதலீட்டில் தொடங்கிய தொழிலில் ஏற்பட்ட வளர்ச்சியினால் இன்று அவரது அடுத்த தலைமுறை 700 கோடி மதிப்புள்ள வீட்டில் வசிக்கின்றனர் .. விதை திருபாய் அம்பானி இட்டது..

    என் மனைவி வேண்டாம் என்ற போதும், நானும் ஒரு தொழிலதிபராகலாம் என்றென்னி இரண்டு தொழில் செய்தேன்.. சில லட்சங்களை இழந்து பல கோடி பெறுமுள்ள அனுபவங்களை பெற்றேன்.. சிறிது நாட்களுக்கு பின் தற்போது மீண்டும் ஏதாவது தொழில் செய்யலாம் என்று நண்பர்களுடன் தொலைப்பேசியில் உரையாடி கொண்டிருக்கும் போதே (உள் அறையிலிருந்து) மனைவியின் குரல் கேட்கிறது எடு அந்த செருப்ப!!!!! பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. யாசின் நீங்க செம 🙂 . 2007 லேயே படித்து இன்னும் மறக்காமல் பல சம்பவங்களைக் கூறுகிறீர்கள். பெரிய விஷயம் தான். இவ்வளவு தூரம் நினைவு வைத்துக் கூறுவது என்றால், நிச்சயம் உங்களுக்கு இப்புத்தகம் பாதிப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

    தொழில் என்பது அனைவருக்கும் அமைந்து விடுவதில்லை.. சிலர் என்ன முயற்சித்தாலும் தோல்வியே அடைகிறார்கள். அதில் உள்ள நுணுக்கம், சூட்சுமம் அனைவருக்கும் பிடிபட்டுவிடுவதில்லை.

    அதோடு நேரமும் என்று உள்ளது. இது சரியில்லை என்றால், என்ன முயற்சித்தாலும் பலனில்லை.

    உங்க மனைவி பற்றிக் கூறுவது செம சிரிப்பை வரவழைக்கிறது 🙂 . ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஒவ்வொரு கதை வைத்து இருக்கீங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!