குறிப்பு 1 : இக்கட்டுரையில் கூறப்படுவன அனைத்தும் என் தனிப்பட்ட கருத்துகளே! பொதுவான கருத்தாகக் கருத வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பு 2 : இங்கு உள்ளது அனைத்தும் அவசரப்பட்டு ஆர்வக் கோளாறில் உடனடியாக ஒரு மாத அனுபவத்தில் எழுதப்பட்டதல்ல. கடந்த 10 மாதங்களாக இந்திய வாழ்க்கையை அனுபவித்து, பிறகே எழுதுகிறேன். Image Credit
Foreign Return வாழ்க்கை
நான் சிங்கப்பூர் செல்லும் போதே எனக்கு நிரந்தரமாகத் தங்கும் எண்ணம் இல்லை.
எனவே, எனக்கு இருந்த கடன் பிரச்சனை முடிந்த பிறகு ஊருக்கே திரும்பி விட வேண்டும் என்ற முடிவில் இருந்தேன்.
2007 ல் சென்றேன் 2014 இறுதியில் திரும்ப வேண்டியது, சூழ்நிலை காரணமாகக் கூடுதலாக 10 மாதங்கள் ஆனது.
வெளிநாடு செல்பவர்கள் பெரும்பாலும் ஊருக்கு திரும்ப விரும்புவதில்லை. இதற்குக் காரணங்கள் எளிது.
வசதியான வாழ்க்கை, சிறப்பான கட்டமைப்பு போன்றவையும் மின்சாரம், தண்ணீர், சாலை, பாதுகாப்பு, அரசாங்கப்பணிகள் போன்றவை தடங்கல் இல்லாமல் கிடைப்பதும், லஞ்சம் போன்றவை அதிகளவில் இல்லாமல் இருப்பதும் காரணம்.
ஊருக்கு வந்தால் மேற்கூறிய அடிப்படை பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும், வசதியான கட்டமைப்பை இழக்க வேண்டி வரும், அதிகச் சம்பளம் கிடைக்காது என்பதால் இந்தியாக்கு வர அனைவரும் யோசிக்கிறார்கள்.
யோசிக்கிறார்கள் என்பதை விட, பலர் திரும்ப வரவே நினைப்பதில்லை என்பதே உண்மை.
ஒப்பீடு
இவை எல்லாவற்றையும் விட இங்கே ஏற்படும் செலவுகள் தான் வெளிநாட்டில் வசிப்பவர்களை அதிகம் கவலைக்குள்ளாக்குகிறது.
நீண்ட விடுமுறைக்குப் பின் இந்தியா வருபவர்கள் கடந்த முறைக்கும் இந்த முறைக்கும் ஏற்படும் செலவுகளை ஒப்பீடு செய்து பயப்படுகிறார்கள்.
இங்கே வந்தால் இந்தச் செலவுகளைச் சமாளிக்க முடியுமா?! என்ற பயம் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் சரியான பணி கிடைக்குமா என்பதும்.
வெளிநாடுகளில் எப்படியோ சமாளித்தாலும் இங்கே வந்தால் பணியில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை நினைத்து பயந்தும் வர யோசிக்கிறார்கள்.
அதோடு வெளிநாட்டில் பெறும் சம்பளத்தில் பாதியோ அல்லது அதைவிட குறைவாகவோ தான் இந்தியாவில் சம்பளம் கிடைக்கும்.
இவையே வெளிநாடுகளில் இருப்பவர்கள் இந்தியாக்கு வராமல் இருப்பதற்குக் கூறப்படும் முக்கியக் காரணங்களாக நான் வெளிநாட்டில் இருந்த போது அறிந்து கொண்டது.
முதலில் செலவு பற்றிப் பார்ப்போம்
ஊருக்கு வந்தால் ஆகும் முக்கிய அடிப்படை செலவுகள்
ஊருக்கு வரும் போது பசங்களுக்கு பள்ளி நன்கொடைக் கட்டணம் (இப்பெல்லாம் (2016) ஒரு குழந்தைக்கு 1.50 லட்சம் சாதாரணம்), பள்ளிக் கட்டணம், பள்ளி வாகனம், வாடகை வீடு என்றால் முன்பணம், அடிப்படை பொருட்கள் இல்லையென்றால் அவ்வளவையும் வாங்கணும்.
இது போல துவக்கச் செலவுகளுக்கு குறைந்தது 5 லட்சம் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
இதன் பிறகு ஏற்படும் செலவுகள் உங்கள் தேவைகளில் உள்ளது. தற்போது அனைத்து செலவுகளையும் முடித்து சராசரி சென்னை வாசியாக உள்ளேன்.
மிரட்டும் செலவுகள்
வெளிநாட்டில் வசித்தவன் என்ற முறையில் ஊருக்கு வந்தால் நானும் விலை உயர்வை கண்டு பயந்து இருக்கிறேன்.
இதற்குக் காரணம், வருடத்துக்கு இரண்டு முறை வரும் போது ஏற்படும் வித்யாசம் பிரம்மாண்டமாகத் தோன்றுகிறது.
வெளிநாடுகளில் குறைந்த பண மதிப்பில் வித்யாசம் காட்டும் போது தமிழ்நாட்டில் கடும் விலையேற்றம் போலத் தோற்றம் அளிக்கிறது.
நான் சிங்கப்பூரில் இருந்து நிரந்தரமாக ஊருக்கு வந்து என்னுடைய வழக்கமான தினசரி வாழ்க்கையைத் துவங்கிய பிறகு இந்தப் பயம் அர்த்தமற்றது என்று புரிந்தது.
வெளிநாட்டில் இருந்து வரும் போது நம்முடைய செலவுகள் அனைத்தும், வழக்கமான அடிப்படை செலவுகள் வீட்டுச் செலவுகளாக இல்லாமல் வெளிச்செலவாகவே இருக்கும்.
குறிப்பா உணவு விடுதிகள், பயணம், நண்பர்களுடன் பார்ட்டி போன்றவற்றிலேயே நாம் அதிகம் செலவு செய்வோம்.
இதுவே ஒரு போலியான பயத்தை நமக்குக் கொடுத்து தமிழ்நாடு என்றாலே விலை அதிகம் என்ற தோற்றத்தை உருவாக்கி விட்டது.
வெளிநாட்டில் இருந்து வந்து இருப்பதால், நாமே பெரும்பாலான செலவுகளை செய்வோம் அல்லது செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருப்போம்.
20 ரூபாய்க்கு ஒரு பழச்சாறு எட்டு வருடங்கள் முன்பு குடித்து விட்டு 100 ருபாய் என்று வரும் போது மனம் அந்த விலை உயர்வை மட்டுமே காண்கிறது. இது இயல்பு கூட.
15 ருபாய் தோசை 80 ருபாய் ஆகி விட்டது. ஒரு குடும்பம் சென்றால் 1500 ருபாய்ச் சாதாரணமாகச் செலவு ஆகிறது என்று மனம் கணக்குப் போட்டுப் பயப்படுகிறது.
உண்மையில் எத்தனை பேர் தின வாழ்க்கையில் இது போலச் செய்யப் போகிறோம்?
ஆடம்பரச் செலவுகளை குறைக்கலாம்
வீட்டிலேயே சாப்பிட்டு, அலுவலகத்துக்கு உணவு கொண்டு வந்து, வெளியே சாப்பிடுவதைக் குறைத்தால், மிகக் குறைவான செலவே ஆகிறது.
செலவை குறைக்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல் செயல்பட்டால் நிச்சயம் தமிழ்நாடு விலை உயர்வு மாநிலம் தான்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாடு விலை அதிகம் என்பதை மறுக்க முடியாது காரணம், எவ்வளவு விலை உயர்ந்தாலும் மக்கள் அதை வாங்கும் அளவு சம்பாதிக்கிறார்கள் அல்லது தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறார்கள்.
எனவே, செலவு செய்யத் தயங்குவதில்லை.
இது எப்போது முடியும் என்றால், எதற்கும் ஒரு எல்லை உள்ளது. அந்தக் கட்டத்தை மக்கள் நெருங்கும் போது இனி நம்மால் சமாளிக்க முடியாது என்று தோன்றும் போது தானாகவே செலவை குறைப்பார்கள்.
அந்தச் சமயத்தில் பொருட்களின் விலை உயர்வும் மட்டுப்படும். தேவை இருக்கும் வரை விலை உயர்வும் இருந்து கொண்டே இருக்கும்.
என்னை எடுத்துக்கொண்டால், வரவுக்கு மீறி நான் செலவு செய்வதில்லை.
வாழ்க்கையில் அடிபட்டு இருப்பதால், எதைச் செய்யலாம், செய்யக்கூடாது, எது ஆடம்பரம் என்பதை நான் உணர்ந்து இருப்பதால், எனக்கு எந்தச் சிரமும் இல்லை.
முக்கியமாக நம்முடைய ஆசைகளை, தேவைகளை அதிகரித்துக்கொண்டே செல்வதே நம்முடைய பிரச்சனைகளுக்குக் காரணம். இதை உணர்ந்தால் எங்கு வேண்டும் என்றாலும் வாழலாம்.
Read: நம் பிரச்சனைகளுக்கு யார் காரணம்?
குடும்பத்தினர் ஒத்துழைப்பு
இவற்றோடு நம் குடும்பத்தினர் எவ்வாறு நமக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள் என்பது முக்கியம்.
நான் சிங்கப்பூரில் இருந்த போதும் என்னுடைய பசங்க இருவரையும் கட்டுப்பாட்டினுள் வைத்து இருந்தேன்.
பணம் இருந்தது என்று அவர்களுக்குப் பணத்தின் மதிப்பை உணரச்செய்யாமல் செலவு செய்ததில்லை. அது தற்போது எனக்கு உதவியாக உள்ளது.
அவர்களும் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்பதில்லை. கேட்டாலும் அதற்கான விளக்கத்தைக் கொடுத்தால் புரிந்து கொள்கிறார்கள்.
பணத்தின் மதிப்புப் புரியும் போது அவர்கள் கேட்பதை செய்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இருக்காது.
இவை எல்லாவற்றையும் விட நம்முடைய வாழ்க்கைத் துணை எப்படி ஒத்துழைப்பு கொடுக்கிறார் என்பது மிக மிக முக்கியம்.
மனைவி எவ்வளவு பணம் கேட்டாலும் கேள்வி கேட்காமல் (இருந்தால்) கொடுப்பேன்.
ஏனென்றால், அனாவசியமாகச் செலவு செய்ய மாட்டார் என்ற நம்பிக்கையுள்ளது.
எப்போது நம்பிக்கை குறைகிறதோ அப்போது தான் கேள்விகள் அதிகரிக்கும்.
அதிகமாக வாங்கினாலும், மிச்சமானாலும் அதையும் எங்காவது சேமித்துத் தான் வைத்து இருப்பார். எனவே, பணம் வீணாகி விடும் என்ற கவலையே இல்லை.
மனைவி நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்தவர்.
ஏற்கனவே அவரது பெற்றோர் பணத்தின் அருமையை உணர்த்தி இருந்ததால், எனக்கு சிரமமான காலங்களில் மிக உதவிகரமாக இருந்தார்.
அனாவசிய செலவுகளைச் செய்யவே மாட்டார். நான் கூடச் சில சமயம் செய்து விடுவேன் ஆனால், இவர் செய்ய மாட்டார்.
இதுவும் நான் சென்னை வந்த போது உதவியாக இருந்தது.
எனவே, இந்தியா வந்தால், செலவு அதிகம் சமாளிக்க முடியாது என்று பயந்து கொண்டு இருப்பதெல்லாம் நம் கற்பனையே!
நம்மை விட எவ்வளவோ குறைந்த ஊதியத்தில் இருப்பவர்கள் எல்லாம் சமாளிக்கும் போது நம்மால் முடியாது என்று நினைத்தால், நம் மீதும் நம் குடும்பத்தினர் மீதும் நம்பிக்கையில்லை என்றே அர்த்தம்.
குடும்பத்தினரிடம் குடும்பச் சூழ்நிலையை விளக்கி அவர்களின் ஒத்துழைப்பை பெற வேண்டும். இல்லையென்றால், இந்தியா மட்டுமல்ல உலகத்தில் எங்கே இருந்தாலும் சிக்கலே!
வேலை கிடைக்குமா? அலுவலக அரசியல் சமாளிக்க முடியுமா?
அங்கேயே இருந்து பணி உறுதி பெற்று பிறகு இங்கே வந்து சேர்ந்து கொள்ளலாம். இது குறித்து ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளேன்.
Read: ஐடி துறை : 35 – 40 வயதுக்கான எச்சரிக்கை!
வேலை போனால் என்ன செய்வது? என்ற பயம், நல்ல வேலை கிடைக்குமா? இந்தியாவில் நிலவும் அலுவலக அரசியலை சமாளிக்க முடியுமா? என்ற பயங்கள் உங்களுடைய தனிப்பட்ட மன உறுதி, தைரியத்தைப் பொறுத்தது.
வெளிநாட்டில் வேலை பறிபோனால் எப்படி ஒரு நிலை ஏற்படுகிறதோ அதே தான் இங்கேயும். சில வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால், கிட்டத்தட்ட ஒன்று தான்.
இதற்கெல்லாம் பயந்து கொண்டு இருந்தால், வாழ்க்கையில் எதுவுமே செய்ய முடியாது.
என்ன பிரச்சனை வந்தாலும், நமக்கு உதவ யாராவது இருப்பார்கள். எங்கே இருந்தாவது உதவி வரும். இதை நான் முழுமையாக நம்புகிறேன்.
எனவே, நான் இதை நினைத்து பயப்படுவதில்லை. இதன் பிறகு யோசிப்பது உங்கள் மன உறுதியைப் பொறுத்தது.
ஊருக்கு திரும்ப யாரால் வர முடியும்?
உண்மையிலேயே நீங்கள் இந்தியாவை, தமிழகத்தை, உங்கள் சொந்த ஊரை நேசித்தால் மட்டுமே சாத்தியம்.
அதோடு இங்கே உள்ள நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்கள், கோவில் திருவிழாக்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள் இவற்றைத் தவற விடுகிறீர்கள் என்று கருதினால் மட்டுமே வர முடியும்.
நான் சிங்கப்பூரில் இருந்த போது சென்னையை, எங்கள் ஊரை ரொம்பத் தவறவிட்டேன்.
சிங்கப்பூர் நல்ல நாடு / ஊர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால், நம்ம ஊருக்கு இணை எந்த ஊருமில்லை.
இதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட வார்த்தையாகத் தோன்றினால், நான் நம்ம ஊரின் மீது, நண்பர்கள் மீது, குடும்பத்தினர் மீது வைத்துள்ள அன்பு உங்களுக்குப் புரியாது என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.
இன்னும் ஒரு வருடம், இரு வருடங்கள் சம்பாதித்த பிறகு வரலாம் என்பது கனவில் மட்டுமே நடக்கும்.
எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கான செலவு இந்தியாவில் தயாராக இருக்கும். எனவே, இதற்கு முடிவு என்பதே கிடையாது.
சொகுசான வாழ்க்கையும், பணமும், பல நாடுகளைச் சுற்றுவதும் மட்டுமே நிம்மதியான வாழ்க்கை என்று நினைப்பவர்கள் உண்மையில் வேறு உலகத்தில் வாழ்பவர்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
ஏன் நாங்க இருக்கும் நாட்டில் நண்பர்கள் இல்லையா, உறவினர்கள் இல்லையா, பண்டிகைகள் கொண்டாடப்படுவதில்லையா? என்று நியாயப்படுத்தலாம்.
ஆனால், குக்கரில் வைக்கப்படும் பொங்கலுக்கும் பானையில் வைக்கப்படும் பொங்கலுக்கும் என்ன வித்யாசமோ அது தான் வெளிநாட்டு வாழ்க்கைக்கும் உள்ளூர் வாழ்க்கைக்கும் உள்ள வித்யாசம்.
உண்மையான கொண்டாட்டம் என்பது எனக்கு இந்தியாவில் தான் கிடைக்கிறது.
நினைத்தால் ஊருக்குச் செல்ல முடிகிறது, திருவிழாவை மகிழ்ச்சியாகக் கொண்டாட முடிகிறது, நினைத்தால் விடுமுறை எடுத்து சென்று வர முடிகிறது.
குடும்பத்தினர் உறவினர்களுடன் நண்பர்களுடன் கலந்துரையாட முடிகிறது. எனக்கு வேறு என்ன வேண்டும்?!
Read: பொங்கல் கொண்டாட்டம்
எங்கே விருப்பமோ அங்கே இருங்கள்
வெளிநாட்டில் இருக்க விருப்பப்பட்டால், அங்கேயே இருங்கள் ஆனால், அதற்காக இந்தியாவையோ தமிழகத்தையோ குறை கூறாதீர்கள்.
இங்குள்ளவர்களுக்குத் தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும், இங்கே உள்ள பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தெரியும்!
இந்தியா எத்தனையோ பிரச்சனைகளைத் தினமும் சந்தித்தாலும் உலகோடு போட்டி போட்டுக்கொண்டு தான் இருக்கிறது.
எனவே, யார் இந்தியாவை விட்டுச் சென்றாலும், பழித்தாலும் தொடர்ந்து சிறப்பாக இயங்கி கொண்டே இருக்கும்.
யாரையும் நம்பி இந்தியா இல்லை.
எனவே, உங்களுக்குத் தற்போதுள்ள நாடு பிடித்து இருக்கிறதா? அங்கேயே இருக்க விரும்புகிறீர்களா? மகிழ்ச்சி, தொடர்ந்து இருங்கள்.
இந்தியா வர விரும்புகிறீர்களா? மகிழ்ச்சி. அனைவரையும் இந்தியா அன்புடன் வரவேற்கிறது.
Read: சிங்கப்பூர் போதுங்க!
Read: Bye Bye சிங்கப்பூர்
என் சிறந்த முடிவுகளில் ஒன்று
இந்தியா திரும்ப நான் எடுத்த முடிவு, நான் இதுவரை எடுத்த சிறப்பான முடிவுகளில் ஒன்றாகக் கருதுகிறேன்.
பலர், “கிரி! ஏன் ஊருக்குப் போறீங்க.. மறு பரிசீலனை செய்யுங்க..” என்று கூறி இருக்கிறார்கள். நான் ஊருக்குப் போவதாகக் கூறியதை விளையாட்டுக்குச் சொன்னதாக நினைத்தவர்கள் கூட உண்டு.
என் குடும்பத்தினர் “இன்னும் இரண்டு வருடம் இருந்து உனக்கும் சம்பாதித்து வா! சம்பாதித்தது எல்லாம் கடன் கட்டவே சரியாகி விட்டது” என்று எனக்காக வருத்தப்பட்டார்கள்.
இருந்தும் சமாளிக்கலாம் என்று பிடிவாதமாக வந்தேன். சில சிரமங்கள் இருந்தாலும், என் முடிவு தவறாகவில்லை என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
இங்கே 8 வருடங்களாக இல்லாமல் என் வாழ்க்கையில் நிறையத் தவறவிட்டு விட்டேன் ஆனால், அவை அனைத்துமே தவிர்க்க முடியாத காரணங்களாலே!
கடனை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். எனவே, அதற்காகவே வெளிநாடு சென்றேன்.
சொல்லப்போனால் முழுவதும் அடைக்கும் முன்பே ஊருக்கு வந்தேன் ஆனால், அதை முடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அதே போலப் பல வழிகளில் முயன்று கடந்த 8 மாதங்களில் முடித்தேன்.
இது என் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்!
எனவே, வாழ்க்கையில் சிரமம், சமாளிக்க முடியாது என்று நினைத்தால், எதுவுமே முடியாது.
முடியும், நமக்கு உதவக் கடவுள் இருக்கிறார் என்று நம்பினால், சிரமம் இருந்தாலும் நிச்சயம் அனைத்தையும் நம்பிக்கையாக எதிர்கொள்ள முடியும்.
எனக்குச் சிரமம் வரும் போதெல்லாம் எங்காவது இருந்து எனக்கு உதவி வருகிறது.
எனவே, நான் ஏன் கவலைப்பட வேண்டும்?! உதவ நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள், முழுவதும் புரிந்து கொண்ட குடும்பத்தினர் இருக்கிறார்கள்.
இதை விட எனக்கு வேறு என்ன வேண்டும்?
Read: கர்ம வினையும் இந்து மதமும்
எதில் மகிழ்ச்சி?
ஒவ்வொருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது இரு வகைகளில் உள்ளது என்று நினைக்கிறார்கள்.
- பணம், சொகுசு, ஆடம்பரமான வாழ்க்கை.
- புரிந்து கொண்ட குடும்பம், நண்பர்கள், கொண்டாட்டமான திருவிழாக்கள், கடனில்லாத வாழ்க்கை.
இதில் நான் இரண்டாவது வகை.
முடிவுகள் முக்கியமானது
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முடிவு எடுப்பது மிக முக்கியமானது.
அவசரப்பட்டு எடுக்காமல், நிதானமாக யோசித்து நம்மால் நம் முடிவை தைரியமாக எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே இறுதி செய்ய வேண்டும்.
மேலே நான் கூறியதை தற்போது வெளிநாட்டில் இருப்பவர்கள் படித்தால், ஊருக்கே வர வேண்டும் என்ற ஆசை ஏற்படலாம்.
ஆனால், மேற்கூறியவை அனைத்தும் என்னை வைத்துக் கூறியவை, பொதுவான கருத்துகள் அல்ல.
எனவே, நான் எளிதாக எடுத்துக் கொண்ட விசயங்கள் பலருக்கு மிகக் கடுமையாக இருக்கலாம்.
நீங்கள் நம்புகிறீர்களா இல்லையோ சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த அடுத்த நாள் முதல் சிங்கப்பூரை தவறவிட்டதாகவோ சொகுசை இழந்ததாகவோ நினைக்கவில்லை.
அப்படியே சென்னை வாழ்க்கைக்குப் பொருந்திக் கொண்டேன்.
இது அல்லாமல் சென்னை வந்த சில நாட்கள் கழித்துச் சென்னை பெரு மழையில் சிக்கியது.
ஒருவாரம் மழையில் மாட்டிக்கொண்டு படாதபாடு பட்டேன் ஆனாலும், அவை என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை, வெறுப்பைக் கொண்டு வரவில்லை.
இது அனைத்துமே சென்னையை, நம்ம ஊரை அதிகம் காதலித்ததாலே சாத்தியம் ஆனது.
கடனை தீர்க்க சிங்கப்பூர் உதவியது என்றால், அதற்கு முன்பு எனக்குச் சென்னை தான் வாழ்க்கையே கொடுத்தது.
எனவே,
இது போன்ற பெரிய முடிவுகளை எடுக்கும் போது உணர்ச்சிவசப்பட்டு எடுக்காமல், நம்மால் சமாளிக்க முடியும், வெளிநாட்டுச் சொகுசை இழக்க முடியும், இந்திய வாழ்க்கையில் பொருந்த முடியும் என்று உங்களுக்கு, உங்கள் குடும்பத்தினருக்கு நம்பிக்கை இருந்தால், இந்தியா வாருங்கள்.
இல்லையா.. உங்களுக்கு மகிழ்ச்சி தரும் இடம் எதுவோ அங்கேயே இருங்கள். எந்தத் தவறுமில்லை ஆனால், மறந்தும் இந்தியாவை இகழாதீர்கள்.
நம் நாட்டை, தமிழை, நம் ஊரை எங்கே இருந்தாலும், யார் கூறினாலும் மற்றவர்கள் முன் விட்டுத் தர உடன்படக்கூடாது. கிண்டலுக்காகக் கூட!
நன்றி
சிங்கப்பூருக்கு (திரு “லீ குவான் யூ”) நானும் என் குடும்பத்தினரும் காலம் முழுக்க நன்றி கடன் பட்டு இருக்கிறோம். பணக் கடனை கழிக்க வந்து நன்றி கடனை சுமந்து சென்றேன். “நன்றி” என்ற ஒரு வார்த்தை அவற்றை ஈடு செய்யாது.
Image Credit – www.pinterest.com
உலக வரலாற்றில் இடம் பிடித்த திரு “லீ குவான் யூ” அவர்களின் இறுதி மரியாதையில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது எனக்குக் கிடைத்த பெரும் பேறு.
நவீன சிங்கப்பூரின் தந்தை திரு “லீ குவான் யூ” அவர்கள் காலமான போது அஞ்சலிக் கட்டுரை எழுதியிருந்தேன். என்னுடைய தளத்தில் நான் இன்றுவரை எழுதிய கட்டுரைகளில் என்னைப் பாதித்த கட்டுரையாகக் கருதுகிறேன்.
Read: நவீன சிங்கப்பூரின் தந்தை திரு “லீ குவான் யூ”
எப்போது படித்தாலும் நான் கண் கலங்குவது இன்று வரை எனக்கு ஆச்சர்யமே!
“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று“
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
எனக்கும் இதே அனுபவம் உண்டு. ஒரே ஒரு வித்யாசம். இந்தியாவின் ஒரு மூலையில் இருக்கும் மாநிலத்தில் இருந்தபோது எனக்கு தோன்றியதும் இதுவேதான். நம் மொழி, இனம், வாழ்க்கை முறை என்ற பாரம்பரிய கருத்தாக்கங்கள் மீது எனக்கு ஈடுபாடு வந்தது அப்போதுதான். இனி கனவில் கூட தமிழ் நாட்டைவிட்டு வெளியே செல்லும் எண்ணம் எனக்கு ஏற்படாது என்று தோன்றுகிறது.
வெளிநாடுகளில் இருந்துகொண்டு நம் நாட்டைப் பற்றி இகழ்வாக பேசும் சிலரைப் பார்க்கும் போது முதலில் கடுமையான கோபமும் எரிச்சலும் உண்டாகும். இப்போது அவர்களைப் பார்த்து பரிதாபப்பட மட்டுமே முடிகிறது.
நீங்க ஒரு தெய்வ பிறவி கிரி. எனக்கு ஒப்பந்தம் சீக்கிரம் முடியுது ஆனா முடியுதேனு வருத்தமா இருக்கு. நீங்க சொன்னதுக்கு மேல… எனக்கு என் உழைப்பில் வந்த சம்பளம் பாதிக்கு மேல குறைவது ரொம்ப வருத்தமா இருக்கு. 🙁
கிரி……….
அருமையாக சொன்னீர்கள்…சென்னை வாழ்க்கை எப்படி என்று?
நானே உங்களை கேட்கலாம் என்றிருந்தேன்….இதோ சொல்லிவிட்டிர்கள்..
நன்றிகள் பல….
பில்லா
அவரவர் சூழலைப் பொறுத்து முடிவுகளும் நண்பரே. அழகா சொல்லிருக்கீங்க.
நன்றி கிரி அவர்களே… உங்கள் அனுபவம் நெகிழ்ச்சியாக இருந்தது…
அருமையான பதிவு கிரி. உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
சூப்பர் post…
சூப்பர் போஸ்ட்…
பயனுள்ள பதிவு.
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! பயனுள்ள பதிவு. நன்றி
வெளிநாட்டு தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அருமையான பதிவு.ஆழ்ந்து அனுபவித்து எழுதிய பதிவு
வெளிநாட்டு தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அருமையான பதிவு.ஆழ்ந்து அனுபவித்து எழுதிய பதிவு அப்பா எதைபற்றியாவது அறிந்தால் மற்றவர்களும் அதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதையும் உறவுகள் தொடரவேண்டும் என்பதையும் போல் உங்கள் கட்டுரை அமைந்துள்ளது மாப்பிள்ளை வாழ்த்துகள் வாழ்க நலமுடன் வளமுடன்
arumayana pathivu velinadu sella thayaraga irukkum yenaku oru thelivai koduthathu