பயணக் குறிப்புகள் [ஆகஸ்ட் 2016]

3

சுதந்திர தினத்தை ஒட்டிய விடுமுறையில் அனைவரும் ஊருக்குச் சென்று வந்தோம். கடந்த சில மாதங்களாக வீட்டுக்குத் தேவையான பொருட்களை (வார இறுதியில்) வாங்கிக்கொண்டு இருந்ததால், ஊருக்குச் செல்ல முடியவில்லை.

கோபியிலும் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெயில் பின்னி எடுக்குது. சென்னையில் வெயிலே இல்லையென்று சொல்லலாம் அளவுக்குப் பொளந்து கட்டுகிறது.

மழை இல்லாததால் வெயிலின் தாக்கம் அதிகம் என்றார்கள்.

தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு இருப்பதால், மழை பெய்யும் வெயிலின் தாக்கமும் குறையும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

உறவினர் வீடு உள்ள கணக்கம் பாளையம் சென்று வந்தோம். கோபியில் இருந்து கள்ளிப்பட்டி சாலை வழியாகச் சென்றால், முழுவதும் வயல் பகுதி நடுவில் சாலை. தூரத்தில் மலை. 

தற்போது நெல் அறுப்பு முடிந்து விட்டதால், வயலில் ஒன்றுமில்லை.

செம்மையா இருந்தது. நிழற்படக் கருவி இல்லையாததால் படம் எடுக்க முடியவில்லை. இச்சாலையில் எத்தனை முறை பயணம் செய்தாலும் அலுக்காது.

Read: ஒரு நாள் ஆட்டோ பயணம்! [படங்கள்]

தோட்டக்குடியான் பாளையம் முருகன்

எங்களுடைய குல தெய்வம் முருகன் கோவில் “தோட்டக்குடியான் பாளையம்” என்ற ஊரில் உள்ளது.

அத்தாணி / ஆப்பக்கூடல் அருகே உள்ளது. பாழடைந்து மிக மோசமான நிலையில் இருந்த கோவிலை உறவினர்கள் இணைந்து புதுப்பித்துக் கும்பாபிஷேகம் செய்தார்கள்.

என்னால் அந்தச் சமயத்தில் செல்ல முடியாததால் தற்போது சென்றேன்.

இங்கே உள்ள முருகன் சிலை 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றால் உங்களால் நம்ப முடியுமா?! இவ்வளவு சிறப்பு வாய்ந்த முருகன் சிலை கேட்பாரற்று இவ்வளவு நாளாக இருந்தது.

சோழர் காலத்தில் கட்டப்பட்டுத் திப்புச் சுல்தான் காலத்தில் இதற்கு மானியம் கொடுக்கப்பட்டதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளது.

சோழர் காலம் என்றதுமே “பொன்னியின் செல்வன்” மனதில் மின்னலாக வந்து ஆர்வத்தைத் தூண்டியது.

இங்குள்ள முருகன் தலை சாய்ந்து உள்ளது. இது போலச் சிலை வேறு எங்கும் இல்லையென்று கூறினார்கள்.

இந்தச் சிலை பழமை வாய்ந்ததா பழனி முருகன் சிலை பழமை வாய்ந்ததா என்று தெரியவில்லை.

இவ்வளவு பழமை வாய்ந்த முருகன் சிலை சிறப்புத் தெரியாமல் இவ்வளவு நாட்களாகப் பாழடைந்து கிடந்ததே என்று வருத்தமாக இருந்தது.

இங்கே மரக்கன்று வைத்து இயற்கை சூழலை கொண்டு வர எனக்கு விருப்பம். நம்ம கோவில் தானே.. பண்ணிடுவோம் 🙂 . அப்பத்தானே முருகன் கோவிலுக்கும் அழகு.

என் விருப்பக் கடவுள் முருகன். அதோட பல வரலாற்றுத் தகவல்கள் வேறு.. அனைத்தும் கையில் கிடைத்ததும் பக்காவா கட்டுரை எழுதிட்டு வருகிறேன் 🙂 .

Read: அழகன் முருகன்

வேட்டி

முன்பே கூறி இருக்கிறேன், ஊருக்குச் சென்றால் வேட்டி தான் கட்டுவேன் என்று. இந்த முறை சென்ற போது வேட்டி கட்டுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறினார்கள்.

சில தகவல்களைத் திரட்டி இருக்கிறேன். தனிக் கட்டுரையாக எழுதுகிறேன் 🙂 .

பிற்சேர்க்கைபிரபலமாகி வரும் “வேட்டி”

மரம் வளர்ப்பதே மற்றவர்கள் வெட்டத்தானோ!

என் வீட்டில் ஆசை ஆசையாக வளர்த்த மரத்தை மின்சாரக் கம்பி கம்பம் நடுபவர்கள் ஒரு பாதியை வெட்டி விட்டார்கள். பார்த்தவுடன் கண்ணீர் விடாத குறை.

குறிப்பிட்ட இடத்தை மட்டும் வெட்டாமல் பாதிப் பக்கத்தையே காலி செய்து விட்டார்கள். படுபாவிகள்!

மரம் வளர்க்காதவர்கள் பக்கம் மின்சாரக் கம்பி செல்வதில்லை ஆனால், மரம் வளர்ப்பவர்கள் பக்கம் எப்போதுமே செல்கிறது.

என்னுடைய வீட்டை வைத்துக் கூறவில்லை, இதுவரை கவனித்தவரை கூறுகிறேன். (படம் –  வெட்டப்படும் முன்)

அந்தப் பக்கம் செல்பவர்கள் எல்லாம் “ஏன் மரத்தை வெட்டி விட்டீர்கள்?” என்று என் அம்மாவை துக்கம் விசாரிக்கிறார்கள்.

இதை விட என் உறவினர் எங்கள் வீட்டையே தாண்டிச் சென்று விட்டார்.. மரத்தை அடையாளமாகக் கொண்டு வந்ததால் 🙁 .

கோபியிலும் நிறைய மரத்தை சாலை விரிவாக்கத்தில் வெட்டி விட்டார்கள். வெயில் வேற கொளுத்துது.

கோபியில் நிறைய மரங்களை எப்படியாவது யாருடைய உதவியிலாவது வளர்க்க முயற்சி எடுக்க வேண்டும்.

மத நல்லிணக்கம்

நான் எப்போது ஊருக்குச் சென்றாலும் வழக்கமாகச் செல்லும் “கருங்கரடு முருகன் கோவில்” சென்று விட்டுக் கீழே வரும் போது ஒரு முஸ்லீம் பெண்ணுக்குக் கோவில் மூத்த ஐயர் உடல் நலம் குணமாக எதோ தைலம் கொடுத்துட்டு இருந்தார்.

எங்கள் ஊரில் முஸ்லீம்களிடம் இருந்து குழந்தைகளுக்கு “கோரி” என்ற இடத்தில் மந்திரித்து ஒரு தாயத்து வாங்கிக் கட்டுவோம்.

இது குழந்தைகள் நலங்கி விடாமல் இருப்பதற்காக என்று கூறப்படும்.

அதாவது உடல்நிலை எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் காக்கும் என்ற நம்பிக்கை. தற்போது கூட என் மகனுக்காக வாங்கினேன்.

கிராமத்தில் எல்லாம் இது போல ஒற்றுமையாக இருக்கிறார்கள் ஆனால், இணையத்தில் தான் மாறி மாறி அனைவரும் அடித்துக் கொள்கிறார்கள்.

போதுமடா பகல் நேர ரயில் பயணம்!

திங்கள் இரவு கிளம்பி வந்தால், ஏற்காடு விரைவு ரயிலில் அதி காலையில் வந்து பசங்க பள்ளிக்குக் கிளம்பத் தாமதமாகும் அல்லது தூங்கி விடுவார்கள் என்பதால், பகல் நேர கோவை விரைவு ரயிலில் சென்று, இரவு வீட்டுக்கே சென்று விடலாம் என்று வந்தோம்.

யப்பா.. புழிஞ்சு எடுத்துட்டானுக. முன் பதிவு செய்யாதவர்கள், காத்திருப்புப் பட்டியலில் இருந்தவர்கள் அனைவரும் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறிக்கொண்டார்கள்.

கொடுமை! நான் நடைபாதை அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தேன்.

நடப்பவர்கள் நிற்பவர்கள் என்று தோள் சப்பையவே கழட்டிட்டானுக. ஏன்டா வந்தோம் என்றாகி விட்டது. போதாதற்குப் பசங்க வேற படுத்தி எடுக்குறானுக. இனிமேல் பகல் நேர ரயில் பயணத்திற்குப் பெரிய கும்பிடு.

அப்படியே வந்தாலும் குளிர் சாதன பெட்டியில் தான் வரணும்.

ஆறு மணி நேரத்தில் அனுபவித்த கொடுமையை ஆறு கட்டுரையாக எழுதலாம், அந்த அளவுக்கு நொந்து நூடுல்ஸ் ஆகிட்டேன். இனி இரவு நேர ஏற்காடு வண்டி தான் நமக்கு எப்போதும் போல!

ஓரளவு மதிக்கிற!! நம்ம ஊரிலேயே இப்படின்னா வட மாநிலங்கள் ரயிலில் சென்றால்… யம்மாடி… கற்பனையே திகிலூட்டுகிறது.

பொங்கலுக்கு எதிர்பார்ப்பு

தீபாவளிக்கு அடுத்த வாரம், எங்கள் சித்தப்பா பையன் திருமணம் வருவதால், தீபாவளிக்கு ஊருக்குச் செல்லவில்லை.

அதோட கடந்த ஆண்டிலிருந்து தீபாவளியை விடப் பொங்கலை தான் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்துள்ளேன்.

எனவே, 2017 பொங்கல் பட்டையைக் கிளப்பப்போகுது 🙂 . ஊரில் எங்கள் தோட்டத்தில் உள்ளவர்களிடம் பொங்கலுக்குக் கலக்குறோம் என்று கூறியிருக்கிறேன் 🙂 .

3 COMMENTS

 1. பயண குறிப்புக்கள் – பதிவை பார்த்து ரொம்ம நாள் ஆகி விட்டது கிரி, அந்தளவுக்கு வேலைப்பளுவும், புதிய சுழலும் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.. வெயிலின் கொடுமை இன்னும் அதிகமாக இருப்பது கவலையை தருகிறது.. ரயில் பயணம் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்து இருப்பது உங்கள் எழுத்தில் தெரிகிறது… பகிர்வுக்கு நன்றி கிரி.

 2. //மரம் வளர்ப்பதே மற்றவர்கள் வெட்டத்தானோ//

  வேதனையில் பிறந்த கவிதை.

  // மரம் வளர்க்காதவர்கள் பக்கம் மின்சாரக் கம்பி செல்வதில்லை ஆனால், மரம் வளர்ப்பவர்கள் பக்கம் எப்போதுமே செல்கிறது. என்னுடைய வீட்டை வைத்துக் கூறவில்லை, இதுவரை கவனித்தவரை கூறுகிறேன்.//

  உன்மையிலும் உன்மை.

  புதிதாக வரும் மின்சாரக் கம்பிகளும் மரம் இருக்கும் இடமாய் பார்த்தே வருகிறது. இது எங்கள் வயல் அனுபவம் நான்கு தென்னை மரத்தை பலி கொடுக்க வேண்டியது இருந்தது.

  மூன்று வருடங்களுக்கு முன்னர் கோவை சக்தி சாலையில் பகல் நேரத்தில் பயனிக்க நேர்ந்தது.
  தமிழகம் எங்கும் அநேக சாலைகளில் வெட்டப்பட்டுவிட்ட ; கருப்பு வெள்ளை வர்ணம் பூசிய சாலையோர புளியமரங்கள் எச்சங்களாய் நின்று அழகு சேர்த்துக் கொண்டிருந்தன, இப்போ இருக்குதோ என்னவோ? 🙁

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here