தமிழைத் திரும்பக்கொடுத்த “HDFC”

6
தமிழைத் திரும்பக்கொடுத்த

ங்கள் அலுவலகத்துக்கு என்றே தனி HDFC ATM உள்ளது, இதை நாங்களும் எங்கள் அலுவலகத்துக்கு வருபவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இரு மாதங்கள் முன்பு புது ATM இயந்திரம் மாற்றினார்கள். பார்க்க சிறியதாகவும், விரைவிலேயே பணம் எடுக்கக் கூடிய வகையில் எளிதாகவும் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

நான் பெரும்பாலும் இணையம், கடனட்டை மூலம் பரிவர்த்தனை செய்வதால் பணத்தின் தேவை குறைவால் ATM பயன்படுத்துவதில்லை.

மனைவி எப்பவாவது என்னைப் பணம் எடுத்துவரக்கூறினால் மட்டுமே செல்வேன்.

இரு மாதங்கள் முன்பு அப்படி எடுத்து வர கேட்டு இருந்தார்.

பணம் எடுக்கும் போது கவனித்தால், தமிழ் இல்லை. “சரி.. புது ATM எனவே, அதில் அனைத்தையும் கொண்டு வர சில நாட்கள் ஆகும்” என்று நினைத்துக் கண்டுகொள்ளவில்லை.

அதன் பிறகு மறந்து போனேன். பின்னர் திரும்ப இந்த மாத துவக்கத்தில் இதே போலக் கேட்டு இருந்தார் என்று ATM சென்றால், தமிழ் வரவில்லை.

ஏற்கனவே, ATM ல் தமிழை புறக்கணிக்கிறார்கள் என்பது பிரச்சனையானது உங்களில் பலருக்கு நினைவு இருக்கும்.

வாடிக்கையாளர் சேவை மையம்

பின்னர் HDFC வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி..

ஏன் தமிழ் இல்லை? ஆங்கிலம் இந்தி இருப்பதில் தவறில்லை ஆனால், மாநில மொழி இல்லாமல் வைத்திருப்பது சரியில்லை. தமிழைச் சேருங்கள்” என்று கேட்டேன்.

அதற்குச் “சரி செய்யப்படும்” என்ற வழக்கமான (Template) பதிலை அனுப்பி இருந்தார்கள்.

வாடிக்கையாளர் சேவை மையத்துடன் எனக்கு ஏற்கனவே நல்ல புரிதல் உள்ளது. அவர்கள் பதில் வைத்தே அதைச் செய்வார்களா அல்லது ஒப்புக்கு அனுப்பியுள்ளார்களா என்று தெரியும்.

எனவே, மீண்டும் இன்னும் கடுமையான மின்னஞ்சல் அனுப்பிய பிறகு, “உங்கள் கோரிக்கைக்குச் சிறப்புக் கவனம் கொடுத்து இருக்கிறோம். விரைவில் சரி செய்யப்படும்” என்ற பதில் வந்தது.

ஒரு வாரமானது பதிலைக் காணோம். நானும் இதை விடக்கூடாது என்ற முடிவில் இருந்தேன்.

மறுபடியும் திட்டி ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம் என்று நினைத்தேன். சரி… அதற்கு முன் ஒருமுறை பார்த்து விடுவோம் என்று ATM சென்றால், தமிழ் வந்து விட்டது 🙂 .

அவர்களுக்கு இது பெரிய வேலையில்லை, இணையம் வழியாக எளிதாகச் செய்யலாம் ஆனால், செய்யணும் அவ்வளவே. நாம் விட்டுத்தராமல் அவர்களைக் கேட்டுட்டே இருக்கணும்.

பின்னர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்களும் வழக்கமான பதிலை அனுப்பி முடித்துக்கொண்டார்கள்.

ATM

என் பரிவர்த்தனை பார்த்து விட்டு அவர்கள் நினைத்து இருக்கலாம், “இவன் ATM பயன்படுத்துவதே இல்லை.. அப்புறம் எதுக்கு இங்கே சண்டை போட்டுட்டு இருக்கான்” என்று 🙂 .

எனவே, நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் ATM களில் தமிழ் இல்லை என்றால், விடாதீர்கள்! நம் உரிமையை என்றும் விட்டுத்தரக்கூடாது.

அதோடு ATM சென்றால் தமிழை மட்டுமே தேர்ந்தெடுங்கள். தேவை இருந்தால் தான், அதற்கான மதிப்பும், கவனிப்பும் சரியாக இருக்கும்.

தொடர்புடைய கட்டுரைகள்

தமிழ் முக்கியத்துவம் குறைய நீங்களும் ஒரு காரணம்!

மற்றவரின் ATM அட்டையைப் பயன்படுத்துகிறீர்களா?

இந்தித் திணிப்பு அழிக்கும் தமிழ் அடையாளம்! [FAQ]

“இந்தி”யால் இந்தியா முன்னேறுகிறதா?

க்யாரே இந்தி யா..? தமிழ் போலோ

இந்தித் திணிப்பும் மொழி அழிப்பும்

கொசுறு

HDFC, ஏர்டெல் இந்த இரண்டு நிறுவனங்களும் என்கிட்டே மாட்டிட்டு படாதபாடு படுகிறார்கள். அடிக்கடி சண்டை நடக்கும் ஆனால், எனக்கு மிகப்பிடித்தவர்களும் இவர்கள் தான்.

இவர்களிடம் சில குறைகள் இருந்தாலும், புகார் தெரிவித்தால், நிச்சயம் கவனம் எடுப்பார்கள். மற்றவர்களுக்கு எப்படியோ! நான் எப்போதுமே சண்டை போட்டு வாங்கி விடுவேன்.

சமீபத்தில் கூட ஏர்டெல் கூடச் சண்டை போட்டுக் கோபியில் மொபைல் டேட்டா வேகத்தை அதிகப்படுத்தினேன்.

வர வர நான் கொஞ்சம் டிராபிக் ராமசாமி அவர்கள் மாதிரி ஆகிட்டு வரேன் 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

  1. இந்த குணாசியத்தை கடைசி வரைக்கும் மாற்றிக் கொள்ளாதீங்க. இந்த முயற்சி பலருக்கும் பயன்படும். ஆனால் அது உங்களுக்கு தெரிய வராது.

  2. கோபி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஆக்கப்பட வாழ்த்துக்கள். உங்களை போன்றவர்கள் ரஜினியுடன் இருந்தால்தான் அவர் முதல்வராகும்போது தமிழ் நாட்டு சிஸ்டத்தை சரி செய்ய முடியும்.

  3. @ஜோதிஜி “அது உங்களுக்கு தெரிய வராது” . நச்சுன்னு சொன்னீங்க.

    அறிவுக்கு தெரிவது மனதுக்கு தெரிவதில்லையே 🙂

    @ப்ரியா எத்தனை கட்டுரைகள் எழுதி இருக்கேன்.. திரும்ப ரஜினிக்கே வரியே..! அதுவும் ஒரு மாசம் முன்னாடி எழுதிய கட்டுரைக்கு அதற்கு சம்பந்தமே இல்லாத கட்டுரையில்.. நானே ரஜினியை விட்டாலும் நீ விட மாட்டே போல 🙂

    சரி எப்படி இருக்கே.. ரொம்ப மாசமா ஆளைக் காணோம்.. ரொம்ப பிசி போல. உங்க பிரதமர் பொங்கல் வாழ்த்தெல்லாம் விட்டு கலக்குறாரு.

    @விஜய் கேப்டன் ஏன் இப்படி…

  4. கிரி, உங்களின் சில முயற்சிகள் உண்மையில் சிந்திக்க வைக்கிறது.. எப்போதும் நான் செல்லும் பாதையில் உண்மையையும், நேர்மையையும், பொறுமையையும் கொண்டு தான் செல்வேன்.. பல நேரங்களில் அலுவலகத்தில் சுற்றி நடக்கும் தவறுகளை, காணும் போது சக ஊழியர்கள் மீது கோபம் அதிகம் வரும், ஆனால் என்றும் கோபத்தை வெளிப்படுத்தியது கிடையாது..

    குடும்பதிலும் சரி தேவையில்லாமல் கோபப்படுவது கிடையாது.. ஆனால் என்னுடைய இந்த குணத்திற்கு முதல் எதிரி என் மனைவி.. எல்லாவற்றிலும் ரூல்ஸ் கடைபிடிப்பது அவங்களுக்கு பிடிக்காது.. அலுவலத்தில் கூட என்னை பல நேரங்களில் நேரடியாகவே நண்பர்கள் கேலி செய்வார்கள்…

    சில நேரங்களில் எனக்கே என் மீது சிறிய சந்தேகம் வரும்.. நான் செய்வது சரிதானா என்று??? உங்களை நினைக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது.. இந்த பழக்கத்தை என்றும் தொடரவும்.. உங்களுக்கு சொல்லவே வேண்டாம்.. நிச்சயம் செய்வீர்கள் என நம்புகிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  5. யாசின் நம்முடைய செயல் நியாயமாக இருக்கும் வரை யாருக்கும் கவலைபபட வேண்டியதில்லை. சிலவற்றை சில நேரங்களில் பின்பற்ற முடியாது ஆனால், அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. முடிந்தவரை சரியாக இருக்க முயற்சிப்போம்.

    நன்றி 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here