சென்னையின் பிரபலமான திரையரங்கான “அபிராமி திரையரங்கம்” இடிக்கப்படுகிறது.
உரிமையாளர் அபிராமி ராமநாதன் அவர்கள், “அதிக இருக்கைகள் உள்ள திரையரங்குகளுக்கான வரவேற்பு குறைந்து வருவதால், அபிராமி திரையரங்கம் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் குறைந்த பார்வையாளர்கள் அமரும் சிறிய திரையரங்குகள் கட்டப்படும்.
மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளுடன், வணிக வளாகம் கீழ் பகுதியிலும் மேலே அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்படும்” என்று அறிவித்து இருக்கிறார்.
இப்பணி 2019 பிப் துவங்கி இரண்டு ஆண்டுகளில் முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
அபிராமி முதன்மை திரையரங்கம் 700+ இருக்கைகள் கொண்ட திரையரங்கம். தற்போது பிரபல நடிகர்களின் படம் வரும் போது மட்டுமே சில நாட்கள் இதுபோலப் பெரிய அரங்கு பயன்படுகிறது, மற்றபடி அரங்கம் நிரம்புவதற்கான வாய்ப்பில்லை.
இதற்குக் காரணம், மக்களுக்குப் படம் பார்க்கும் ஆர்வம் குறைந்து விட்டது என்பதல்ல, மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்தது, இணையத்தின் வளர்ச்சி.
முன்பு சென்னையில் தேவி, ஆல்பர்ட், அபிராமி, சாந்தி, சத்யம், உதயம், சங்கம் போன்றவை தான் படம் பார்க்க இருந்த முதன்மை திரையரங்குகள்.
தற்போது நிலையே தலைகீழாக உள்ளது.
தற்போது மாயாஜாலில் மட்டுமே ஒரே நாளில் 100 காட்சிகள் திரையிடப்படும் அளவுக்குள்ளது.
அபிராமி திரையரங்கம்
நான் மைலாப்பூர் பகுதியில் நண்பர்களுடன் இருந்ததால், எங்களுக்கு அருகே உள்ள திரையரங்குகளான அண்ணா சாலை தேவி, ஆல்பர்ட், சாந்தி, சத்யம், அண்ணா, ஆனந்த் மட்டுமே செல்வோம்.
புரசைவாக்கம் பகுதி அபிராமி செல்வதற்கான வாய்ப்புக் குறைவு.
முதன் முதலில் அபிராமியில் பார்த்த படம் “படையப்பா” (1999) ₹ 25 கட்டணம். கடைசியாகப் பார்த்த படம் “பேட்ட” (2019) ₹ 250 கட்டணம், வரியுடன் சேர்த்து.
அபிராமி திரையரங்கில் “படையப்பா” பார்த்த அனுபவம் மறக்கவே முடியாது.
சிவாஜி
மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் வரும் முன்பு ஒரு திரைப்படம் அதிகபட்சமாகச் சென்னையில் 6 திரையரங்குகளில் வெளியிடப்படும்.
6 x 4 = 24 காட்சிகள் ஒரு நாளைக்கு.
எனவே தான் முன்பு அதிக நாட்கள் ஓடும் படம் வெற்றிப்படமாக இருந்தது. சில படங்கள் ஓட்டப்பட்டன அது வேறு கதை.
சிவாஜி திரைப்படம் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டதால், சென்னை விநியோக உரிமை கூடுதலாக இருந்தது. அதிக திரையரங்குகளில் வெளியிட்டால் மட்டுமே போட்ட பணத்தை எடுக்க முடியும் என்ற நிலையிருந்தது.
சிவாஜி திரைப்படத்தின் சென்னை விநியோக உரிமையை அபிராமி ராமநாதன் பெற்று இருந்தார்.
தமிழ் திரையுலகில் முதன் முறையாகச் சென்னையில் 18 திரையரங்குகளில் சிவாஜி வெளியிடப்பட்டது. ரஜினி + ஷங்கர் + ரகுமான் என்று எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.
ராமநாதன் எதிர்பார்ப்பு போல அதிகத் திரையரங்குகளில் வெளியிட்ட முறை மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. சென்னையில் மிகப்பெரிய வசூலை அப்போது சிவாஜி வசூலித்தது.
அதோடு மற்ற திரைப்படங்களுக்கு அதிகத் திரையரங்குகளில் வெளியிடும் முறையையும் வழியையும் அறிமுகம் செய்தது.
இதைப் பின்பற்றி அடுத்து வந்த பெரிய முதலீட்டுப் படங்கள், முன்னணி நடிகர்கள் திரைப்படங்கள் வெளியிடப்பட்டன.
மூன்று திரையரங்குகள்
அபிராமி, சக்தி அபிராமி, பால அபிராமி என்ற திரையரங்குகள் இருந்தன.
பின்னர் பல வருடங்களுக்கு முன்பு மேம்படுத்தப்பட்டு “அபிராமி மெகா மால்” என்று அபிராமி 7 ஸ்டார், ரோபோட் பால அபிராமி, ஸ்ரீ அன்னை, ஸ்வர்ண சக்தி என்று மாற்றம் பெற்றது. இதில் அபிராமி மட்டுமே பெரிய திரையரங்கு.
மாற்றம்
தற்போதைய முடிவு நல்ல முடிவு தான். இனி குறைந்தது 6 / 8 சிறிய திரையரங்குகளுடன் வர வாய்ப்புள்ளது.
முதன்மை திரையரங்கு 250 / 300 பேர் அமரும் படி இருக்கலாம்.
திரை ரசிகர்கள் அனைவரையும் இதுவரை மகிழ்வித்த அபிராமி திரையரங்கம் மீண்டும் புதுப் பொலிவுடன் வர வாழ்த்துகள்.
தொடர்புடைய கட்டுரைகள்
பயங்கரமான ஞாபக சக்தி உங்களுக்கு. தமிழக திரையரங்கம் முழுமையும் இன்னமும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வராமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் அபிராமி ராமநாதன் முக்கிய பங்கு வகிக்கின்றார்.
@ஜோதிஜி எனக்கு நியாபக சக்தியா.. 🙂 🙂 எனக்கு எல்லாமே மறந்து வருகிறது. கூகுள் செய்யும் வேலை.
இவை நினைவு இருக்க காரணம், முதல் நாள் பிளாக் ல வாங்காம அதே கட்டணத்துக்கு நண்பர் வாங்கி கொடுத்தார்.. அதனாலே நினைவு உள்ளது. அதோட சில அடிக்கடி நண்பர்களிடையே பேசியதால் நினைவுள்ளது.
நீங்க நினைப்பது போல எனக்கு நியாபக சக்தி இல்லை.. இருந்தால் நல்லா இருக்கும் 🙂
அபிராமி ராமநாதன் பற்றி நீங்கள் கூறியது எனக்கு தெரியாது. எனக்கு வெளியே நடக்கும் சம்பவங்கள், செய்திகளில் வருவது மட்டுமே தெரியும் 🙂
அபிராமி ராமநாதன் அவர்களின் சில நேர்காணல்களை சமீபத்தில் youtube இல் பார்த்து இருக்கிறேன்.. தெளிவான பேச்சு, நிறைய தகவல்கள், மொழியறிவு.. நிறைய விஷியங்கள் அவரை குறித்து தெரிந்த பின் உண்மையில் பிரமிக்க வைத்தது.. இதில் சிவாஜி படம் ரிலீஸ் குறித்து கூட அவர் பேசியதை பார்த்தேன்.. உண்மையில் அதிக விலை குடுத்து தான் வாங்கி இருக்கிறார்.. ஆனால் அவரின் வியாபார கணிப்பு பொய்த்து போகவில்லை.. எதிர்பார்த்ததை விட பல மடங்கு இலாபம் சிவாஜி படம் மூலம் சம்பாரித்துள்ளார்.. நேரம் இருப்பின் youtube இல் பார்க்கவும்…அவர் ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி என்பது கூடுதல் தகவல்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
அபிராமி ராமநாதனுக்கு ஏகப்பட்ட அனுபவமுள்ளது. ஜோதிஜி சொன்னது போல சில நமக்கு தெரியாததும் இருக்கலாம் 🙂 .