Foreign Return ஆக நினைப்பவர்களின் கவனத்துக்கு!

8
Foreign Return

 

வெளிநாட்டு வாழ்க்கையை விரும்பாதவர்கள் மிகக்குறைவு, வெளிநாடு சென்றவர்கள் நம் நாடே (Foreign Return) திரும்புவது அரிது. அப்படியும் சிலர் நம்ம ஊரிலே இருக்கணும் என்றும் விரும்பி Foreign Return ஆவதுண்டு. Image Credit

Foreign Return

இக்கட்டுரை, வேறு வழி இல்லாமல் நம்ம ஊருக்கு வருபவர்களுக்கானது அல்ல, வெளிநாட்டிலேயே தொடர்ந்து இருக்க வாய்ப்புக்கிடைத்தும் வேண்டாம் என்று விரும்பி ஊருக்கு வருபவர்களுக்கானது.

செலவுகள்

நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் வரை, நம் ஊரில் நடக்கும் செலவுகள், பொறுப்புகள் பற்றிய எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாது.

ஓரிரு வார விடுமுறையில் வந்து செல்லும் போது உங்களுக்கு உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லவும், நண்பர்களைச் சந்திப்பதற்கும் மற்ற வேலைகளுக்குமே நேரம் சரியாக இருக்கும்.

உங்களால் குடும்ப விசயங்களில் அதிகம் கவனம் செலுத்த முடியாது, குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து பேசவும் வாய்ப்புக் கிடைக்காது.

வெளிநாட்டில் எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்குண்டான செலவுகள் ஊரிலே இருந்து கொண்டே இருக்கும்.

இது தான் பலரும் இந்தியா திரும்பி விடலாம் என்று கூறியும் ஒத்தி வைத்துக்கொண்டே இருப்பதற்கான காரணம்.

நிலம் வாங்குவது, வீடு வாங்குவது, திரும்ப வீடு, நிலம் வாங்குவது என்ற பேராசை, குடும்ப உறுப்பினர்களின் பொறுப்பற்ற செயலால் ஏற்படும் செலவுகள் ஆகியவற்றால், செலவுகள் கூடிக்கொண்டு செல்வதே எவ்வளவு சம்பாதித்தும் போதாதற்குக் காரணம்.

இதனாலே இந்தியா திரும்ப நினைப்பவர்கள் தங்கள் திட்டத்தை அடுத்த வருடம் அடுத்த வருடம் என்று ஒத்திப்போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

முதலில் தெளிவுபடுத்த வேண்டியது

ஊரிலே எவ்வளவு கடன் உள்ளது, நீங்கள் வாங்கிய நிலம், வீடுக்கான கடன் கட்டப்பட்டு விட்டது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஊருக்கு வருவதாக இருந்தால், கடன் இருக்கக் கூடாது என்பதைத் திரும்பும் முன் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து பேசி உறுதி செய்து கொள்ளுங்கள்.

இதையெல்லாம் தெளிவுபடுத்தாமல் அவசரப்பட்டு ஊருக்கு வந்தால், இதற்காக வருந்த நேரிடும்.

பணம் இருக்கும் போது பல விசயங்கள் பெரிய பிரச்சனையாகத் தோன்றாது, 10 ஆயிரம் செலவு செய்யக்கூடிய இடத்தில் ஒரு லட்சம் கூடச் செய்வோம்.

ஆனால், பணம் குறையும் போது தான் நாம் செய்த தவறுகள், உணர மறுத்த அறிவுரைகள் அனைத்தும் நினைவுக்கு வரும்.

நீங்கள் செய்ய வேண்டிய பெரிய செலவுகள் அனைத்தும் இந்தியா திரும்பும் முன்னரே கட்டாயம் முடித்து இருக்க வேண்டும்.

இந்தியா வந்த பிறகு செய்யலாம் என்ற யோசனை இருந்தால், கை விட்டு விடுங்கள். எதிர்பார்த்ததுக்கு மேல் செலவாகி, உங்கள் சேமிப்பை கரைத்து விடும்.

கட்டாய / உடனடிச் செலவுகள்

ஊருக்கு வந்தால் பள்ளி நன்கொடை, தற்காலிகமாக வாடகை வீடு என்றால் அதற்கான முன்பணம், மற்ற பொருட்களுக்கான தொகை என்று திட்டமிட்டுக்கொள்ளுங்கள்

வெளிநாட்டில் இருந்து வந்ததாலேயே அனைவரது பொறுப்புகளையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள்.

“வெளிநாட்டில் சம்பாதித்து வந்து இருக்கார், பணம் வைத்து இருப்பார் கொடுக்க வேண்டியது தானே!” என்ற நெருக்கடிகள் சில காலத்துக்கு வரும்.

எனக்கு என் நண்பனும் அக்காவும் என்னுடைய நெருக்கடி காலங்களில் உதவினார்கள். எனவே, பெரிய சிரமம் இல்லாமல் தப்பித்து விட்டேன்.

சரியான திட்டமிடலும் எச்சரிக்கையும் இல்லையென்றால் எத்தனை லட்சங்கள் கொண்டு வந்தாலும், அனைத்தும் பனிக்கட்டியாகக் கரைந்து விடும்.

2.5 வருடங்கள் கடந்த வாழ்க்கை எப்படி இருக்கு?!

இந்தியா திரும்பி விடவேண்டும் என்று சிங்கப்பூர் செல்லும் போதே முடிவு செய்து விட்டேன். வெளிநாட்டு வாழ்க்கையில் துவக்கத்தில் இருந்தே விருப்பமில்லை.

மற்ற நாடுகளுக்குச் சென்று அங்குள்ள கலாச்சாரம், புதிய இடங்கள் பற்றித் தெரிந்து கொள்ள மட்டுமே விருப்பம், அங்கேயே தொடர்ச்சியாக இருக்க விருப்பமில்லை.

எனவே, வந்த நாள் முதல் இன்று வரை நான் வெளிநாட்டு வாழ்க்கையை இழந்ததாக ஒரு முறை கூட நினைத்ததில்லை என்று கூறினால், நம்பித்தான் ஆகணும்.

எனக்கு நம்ம ஊர் தான் பிடித்துள்ளது. இங்கு எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், இங்குக் கிடைக்கும் மனநிறைவு வேறு எங்கும் கிடைக்கவில்லை.

வெளிநாட்டில் இருந்தால், நான் மூன்றாம் மனிதன் என்ற சுதந்திரமில்லா உணர்வு உறுத்திக்கொண்டே இருக்கிறது, அது எனக்குப் பிடிக்கவில்லை.

என்ன தான் உறவினர் வீட்டில் வசதிகள் இருந்தாலும், நம்ம வீட்டில் இருப்பது போல வருமா!

என்ன பிரச்சனை இருந்தாலும், நம்ம ஊரு என்ற தைரியம், மன நிறைவு உள்ளது.

முக்கியமாகப் பெற்றோருக்கு வயதாகி விட்டது, அக்காக்கள் அவங்க பசங்களோட இருக்கணும் என்று தான் விருப்பப்பட்டு வந்தேன்.

ஆனால், கடந்த 5 மாதங்களுக்கு முன் அப்பாக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனதால், நான் வந்தது சரியான வேளை என்றாகி விட்டது.

ஒருவேளை வராமல் இருந்து இருந்தால், குற்ற உணர்வாகவே இருந்து இருக்கும். அப்பாவின் நிதி கணக்குகளைத் தீர்க்கவும் இங்கே வந்தது உதவியாக இருந்தது.

நினைத்தால், அவசரம் என்றால் சென்னையில் இருந்து ஊருக்குச் செல்ல முடிகிறது. தற்போது கிட்டத்தட்ட மாதத்தில் இரண்டு / மூன்று முறை ஊருக்குச் செல்கிறேன்.

இதெல்லாம் வெளிநாட்டில் இருந்தால் எனக்குச் சாத்தியமே இல்லை. தேவைகள் முடிந்தது அதனால் மேலும் நீட்டிக்காமல் இங்கே வந்து விட்டேன், அவ்வளவே!

ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் இந்தியா தாங்க எனக்குச் சொர்க்கம் 🙂 .

பல மாதங்களாக இக்கட்டுரையை எழுதணும் என்று நினைத்து ஒரு வழியாக எழுதி விட்டேன் 🙂 .

கொசுறு

இது கட்டுரைக்குச் சம்பந்தமில்லாதது ஆனால், கடந்த இரு வருடங்களாகச் சொல்ல நினைத்தது.

வெளிநாட்டில் வாழ்பவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக, கொண்டாட்டமாக, எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறார்கள் என்று நினைப்பில் இருந்தால் தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள்.

நீங்கள் நினைப்பவர்களைப் போல உள்ளவர்கள் இருக்கிறார்கள் ஆனால், அவர்கள் குறிப்பிட்ட சதவீதத்தினர், பிரிவினர் தான்.

குடும்ப நலனுக்காக வெளிநாட்டில் இருந்தாலும், பலர் தங்கள் மகிழ்ச்சியைத் தொலைத்து, வயதாகியும் திருமணம் செய்யாமல் அக்கா, அண்ணன், தம்பி, தங்கை திருமணம் / படிப்பு, அப்பா கடன், மற்ற குடும்பத்தேவைகள் என்று ஓடாகத் தேய்ந்து உழைத்து வருகிறார்கள்.

வெளியே இருந்து பார்க்கும் போது பகட்டாகத் தெரியும் அவர்கள் உலகத்தினுள் சென்று பார்த்தீர்கள் என்றால், எவ்வளவு இழப்புகள், கண்ணீர், கவலைகள், வலிகள் என்று புரியும்.

எனவே, உலகம் இக்கரைக்கு அக்கரை பச்சை தான்!

தொடர்புடைய கட்டுரைகள்

நடுத்தர வகுப்பு மக்கள் என்பவர்கள் யார்?

“Foreign Return” வாழ்க்கை எப்படி இருக்கு?!

Bye Bye சிங்கப்பூர்

நம் பிரச்சனைகளுக்கு யார் காரணம்?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

  1. இந்த கட்டுரை ஏற்கனவே எழுதிய “Foreign Return” ஆக நினைப்பவர்களின் கவனத்துக்கு!கட்டுரையின் சுருக்கமா?

  2. இந்த கட்டுரை ஏற்கனவே எழுதிய “Foreign Return” கட்டுரையின் சுருக்கமா?

  3. Glad to see ads on your blog after a long journey of your blogging experience. Please select relevant ads to the article so that viewers are not frustrated with irrelevant ads.
    Congrats for adding your blog in Newshunt app.

  4. @ராஜேஷ் ஆமாம், சுருக்கப்பட்ட கட்டுரை ஆனால், மற்றதையெல்லாம் தவிர்த்து சொல்ல வேண்டியதை மட்டும் குறிப்பிட்ட கருத்து.

    சுருக்கமாக, திட்டமிடல் & எச்சரிக்கை.

    @Balaji Thanks for your wish. Regarding Ads, me too thought same but Google is doing auto Ads and am not setting up.

    I’m also new to this so has to explore. Hope will fix it later.

  5. கிரி, ஒவ்வொருவரின் வாழ்வின் சூழலும் ஒவ்வொருவிதமானது.. என்னுடைய அனுபவத்தில் 90 % திரும்பி செல்லத்தான் எண்ணுகின்றனர்.. ஆனால் குடும்ப சூழல், பொறுப்புகள், கடமைகள் என ஒவ்வொருவருக்கும் பல விதமான பிரச்சனைகள்… எல்லாவற்றிற்கும் மேல் 5 / 10 / 15 வருட வெளிநாட்டு வாழ்க்கைக்கு பின் ஊருக்கு சென்று என்ன செய்வது???? உள்ளூரில் வேலைக்கு செல்வதா???

    சொந்த தொழில் செய்வதா??? இந்த ரெண்டு கேள்விக்கான பதிலை கண்டு பிடிப்பது கடினம்.. 10 ஆண்டுகள் முடிந்தும் என்னால் இன்னும் முடிவெடுக்க முடியவில்லை.. சத்தியமா முடியல!!! எதிர்காலத்தை நினைத்தாலே ஒரு இனம் புரியாத பயம் நெஞ்சை விட்டு நீங்க வில்லை..

    பகட்டு, விளம்பரம், ஆடம்பரம் என வாழ்பவர்கள் 20 % வேண்டுமானால் இருக்கலாம்… 80 % சாதாரண மக்களே… உள்ளூரில் கிடைக்கும் வருமானத்தை விட குறைவான ஊதியம் வாங்குபவர்கள் ஏராளம்… இந்த வெளிநாட்டு வலியை சொன்னால் புரியாது.. அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.. அந்த வலி உங்களுக்கும் தெரியும்… பகிர்வுக்கு நன்றி கிரி.

  6. “”வெளியே இருந்து பார்க்கும் போது பகட்டாகத் தெரியும் அவர்கள் உலகத்தினுள் சென்று பார்த்தீர்கள் என்றால், எவ்வளவு இழப்புகள், கண்ணீர், கவலைகள், வலிகள் என்று புரியும்””
    சரியாய் சொன்னிங்க கில்லாடி, நம்மளோட வலி நமக்கு தான் தெரியும்.
    நானும் திட்டமிட்டு கொண்டே இருக்கிறேன். ஆனாலும் எதாவது ஒரு செலவு வந்துகொண்டே இருக்கிறது.
    நன்றி கில்லாடி

  7. @யாசின் உங்களின் சூழ்நிலை புரிகிறது. பலருக்கு இந்தியா வந்தால் என்ன செய்வது என்ற குழப்பமே! எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடுக்கிறது.

    @விஜய் அது என்னமோ தெரியல என்ன மாயமோ புரியல.. ஏதாவது செலவு வந்துட்டே இருக்கு. எதுவுமே அனாவசிய செலவே இல்லை. இது எல்லோருக்கும் நடக்கும் போல 🙂

    @ராஜேஷ் ஆமாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here