திராவிடரா? தமிழரா? | எதில் பெருமை?

2
திராவிடரா? தமிழரா?

திராவிடக் கட்சிகள் என்பதாலேயே திராவிடம் என்பது பேச்சாக இருந்தாலும், திமுக 2021 ல் ஆட்சிக்கு வந்த பிறகே திராவிடரா? தமிழரா? என்பது குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. Image Credit

இக்கட்டுரை தமிழராக இருப்பதே பெருமை என்பதை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளது.

திராவிடர்

மாநிலங்களாகப் பிரிக்கப்படுவதற்கு முன்பு தென்னிந்திய மக்கள் திராவிடர் என்ற வட்டத்தில் குறிப்பிடப்பட்டனர்.

மாநிலங்கள் மொழி அடிப்படையில் பிரிந்ததால், அவரவர் தனித்தனியாகத் தங்கள் மொழிகளுக்குண்டான சிறப்பில் கவனம் செலுத்த துவங்கி விட்டனர்.

சுருக்கமாகத் தனிக்குடித்தனம் போலச் சென்று விட்டனர்.

அக்காலத்தில் மதராஸ் மாகாணம் அனைத்துக்கும் மத்திய இடமாக இருந்தது. எனவே, அனைத்துக்கும் மதராஸ் வரவேண்டியது இருந்தது, முக்கியத்துவம் இருந்தது.

எடுத்துக்காட்டுக்கு, திரைப்படத்துறையை எடுத்துக்கொண்டால், தென்னிந்திய நடிகர் சங்கம் என்று இருந்தது, இதில் அனைத்து தென்னிந்திய மாநில நடிகர்களும் உறுப்பினர்களாக இருந்தனர்.

பிரிக்கப்பட்ட பிறகு அவரவர் தனித்தனியாகத் தங்களுக்கென்று சங்கத்தை உருவாக்கிக்கொண்டனர் ஆனால், தமிழகத்தில் இன்னும் அதே பெயரே உள்ளது.

கடந்த நடிகர் சங்க தேர்தலின் போது ரஜினி அவர்கள், தென்னிந்திய நடிகர் சங்க பெயரைத் தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

இது போல ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கென்று கொள்கைகள், அரசியல் பார்வை, கருத்துகள் என்று விலகி விட்டனர்.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளைத்தவிர வேறு எந்த மாநிலமும் திராவிடம் என்று கூறுவதில்லை.

திராவிடன் என்பதில் என்ன பெருமை?

இந்தியன் என்பதில் பெருமைப்படலாம், தமிழன் என்பதில் பெருமைப்படலாம் ஆனால், திராவிடன் என்பதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?!

தமிழக அரசியல் கட்சிகளைத்தவிர வேறு எந்தத் தென்னிந்திய மாநிலமும் திராவிடத்தைப் பற்றிப் பேசுவதில்லை, அரசியலுக்காகக் கூட மதிப்பதில்லை.

திராவிடக் கர்நாடகா, கேரளா தண்ணீர் தருவதில்லை, ஆந்திரா தெலங்கானா மட்டும் போனால் போகிறதென்று தண்ணீர் கொடுத்து வருகிறது.

கேரளா ஒருபடி மேலே சென்று அங்குள்ள மருத்துவக் கழிவுகளை எல்லாம் தமிழக எல்லை மாவட்டங்களில் கொட்டி வருகிறது.

கோவை சிறுவாணி, பெரியாறு அணை தண்ணீரை வேண்டும் என்றே திறந்து விட்டுப் பிரச்சனை செய்கிறது.

கர்நாடகா தண்ணீர் பிரச்னை உச்சநீதிமன்ற தலையீட்டாலும், தற்போது மழை பெய்து வருவதாலும் அமைதியாக உள்ளது.

இவ்வாறு மற்ற தென்னிந்திய மாநிலங்கள் பிரச்சனை செய்யும் போது திராவிடன் என்று பெருமை பீத்துவதில் என்ன அர்த்தமுள்ளது?!

இந்த லட்சணத்தில் என்னமோ தமிழ்நாட்டைப் பிரித்து விட்டால் அப்படியே அறுத்துத் தள்ளி விடுவது போலப் பேச்சு!

திராவிட மாடல்

இருப்பதிலேயே திராவிட மாடல் என்று கூறுவது தான் கடுப்பை கிளப்புகிறது.

காமராஜர் ஆட்சியிலும், விமர்சனங்கள் இருந்தாலும் திமுக அதிமுக ஆட்சியிலும் தமிழகத்தை வளர்த்தது தமிழக அரசியல் கட்சிகளே!

தமிழகம் வளர்வதற்கு எந்த மாநில திராவிடர் வந்து உதவினார்கள்?!

தமிழக மக்கள் புத்திசாலியானவர்கள். எனவே, தமிழக மக்களின் பெருமையை, சிறப்பைத் தமிழர்களுக்குக் கொடுக்காமல், யாருமே மதிக்காத திராவிடத்துக்குக் கொடுப்பது என்ன நியாயம்?

தமிழ், தமிழன் என்றால் உலகம் முழுக்கத் தெரியும் ஆனால், திராவிடம் என்றால் இந்தியாவில் உள்ளவர்கள் பலருக்கே தெரியாது.

தமிழ்நாடு மாடல் என்று கூறும் போது நம் மாநிலத்துக்கு, மொழிக்கு ஒரு Brand கிடைக்கிறது ஆனால், திராவிட மாடல் என்று கூறுவதில் என்ன Brand உள்ளது?

நம் உழைப்பை எதோ ஒரு கொள்கைக்காகப் பிடிவாதமாக வேறு உதவாத பெயருக்குத் தாரை வார்ப்பது எந்த விதத்தில் சரி?!

திராவிட மாடல் தான் தற்போது தமிழக மக்களைக் குடிகார மக்களாக, கஞ்சா போதையில் தள்ளாடுபவர்களாக மாற்றிவைத்துள்ளது. இதை வேண்டும் என்றால் திராவிட மாடலில் பெருமையாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

பிரிவினை

பாஜகவை எதிர்க்க, தனித்துத் தங்களைக் காட்ட திராவிடம் என்பதைப் பிடித்துத் தொங்கிக்கொண்டுள்ளார்கள், வேறு எதுவும் காரணம் இருப்பதாகத் தோன்றவில்லை.

தனித்தமிழ்நாடு, திராவிட நாடு என்பதை அண்ணாவே ஏறக்கட்டி விட்டார் ஆனால், திமுக இதை வைத்து வடை சுட்டுக்கொண்டுள்ளார்கள்.

கலைஞர் இருந்தவரை பிரிவினை செய்திகளில் ஆர்வம் காட்டவில்லை, ஆதரிக்கவில்லை.

ஆனால், ஸ்டாலின் கட்சித்தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு பிரிவினை பேச்சுகளை நேரடியாகப் பேசுவதில்லையென்றாலும், கட்சியினர் பேசுவதைத் தடுப்பதில்லை.

நேரடியாக இல்லாமல் சுயாட்சி என்ற பெயரில் பிரிவினை பேசிவருகிறார் ஸ்டாலின். ஒன்றியம் என்ற வார்த்தையை வீம்புக்கென்றே பயன்படுத்துகிறார்.

இவர்கள் அனைவரும் இந்தியன் என்று பெருமை கொள்வதே கிடையாது, மாறாகத் திராவிடன் என்பதிலேயே பெருமையடைகிறார்கள்.

திராவிடம் என்பதே பிரிவினை வாதம் தான்.

மொழி அரசியலுக்கு மட்டுமே தமிழை பயன்படுத்தி வருகிறார்கள் ஆனால், தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்தார்கள் என்றால் தேடித்தான் பார்க்க வேண்டும்.

நாட்டின் மீது பற்றாக இல்லாதவர்கள் பேசுவதே திராவிடமாகும்.

எதில் பெருமை?

தமிழரின் பெருமையை, சிறப்பை மழுங்கடிக்க முன்னிறுத்தப்படுவதே திராவிடம்.

எந்தத் தென்னிந்திய மாநிலமும் கண்டுகொள்ளாத திராவிடத்தை வைத்துத் திராவிட மாடல் என்று கூறுவதில், பெருமைப்படுவதில் யாருக்கு இலாபம்?

திராவிட மாடல் என்று கூறுவதற்கு மட்டுமே திராவிடம் பயன்படுகிறது. மற்றபடி சமூகநீதி உட்பட எந்த அடிப்படை கொள்கையிலும் மாடலைச் செயல்படுத்துவதில்லை.

மற்றவர்களும் மதிப்பதில்லை, தானும் பின்பற்றுவதில்லை ஆனால், பேசுவது மட்டுமே திராவிடம், திராவிட மாடல்.

தேசியம் பேசுவதை இழுக்காக நினைப்பவர்களுக்கு ஆப்படிக்கும் காலம் வரும். அப்போது வாக்குக்காக தேசியத்தைத் தூக்கிப்பிடிக்க வேண்டிய நிலை வரும்.

அப்போது திராவிடம் என்று கூறுவதைக் கேட்க அவர்கள் கட்சியினர் மட்டுமே இருப்பார்கள். அதுவே சந்தேகம்!

தேசியத்திலிருந்து விலகியதால் காங்கிரஸ் எப்படி ஒன்றும் இல்லாமல் போனதோ அதே போலத் தேசியத்தை புறக்கணிக்கும் தமிழகக் கட்சிகளின் நிலையும் எதிர்காலத்தில் மாறும்.

இந்தியத் தமிழராகப் பெருமைப்படுங்கள், அதை நோக்கிப் பயணப்படுங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

திராவிட அரசியல் தமிழகத்தை சீரழித்ததா?

ஒன்றியம் தமிழகம் என்பது சரியா? தவறா?

நடராஜரை இழிவுபடுத்திய திராவிடன் ஸ்டாக்குகள்

சமூகநீதி என்ற தமிழக வடை!

திராவிட மாடல் உருட்டல்கள்

கொங்குநாடு சர்ச்சைக்குக் காரணங்கள் என்ன? [FAQ]

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

 1. இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்..
  இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்…

  பள்ளி பருவத்தில் பாட புத்தகத்தில் படித்த வாக்கியம் இது.. என் வாழ்நாள் முடியும் வரை என் நிலை இதுதான்.. எந்நிலையிலும் மாற்றம் இல்லை.. இன்று என் பெயர் சில பேருக்கு மட்டும் தெரியலாம்.. என்றாவது ஒரு நாள், இந்தியாவிலோ அல்லது ஏதாவது ஒரு தேசத்திலோ என்னுடைய சாதனைகள் மூலம் நான் அறியப்படும் போது ” ஒரு இந்தியனாக” அறியப்படவேண்டும்.. இது தான் என் விருப்பம்..

 2. “இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்..”

  இதைப் பலர் உணர்வதில்லை யாசின்.. பார்க்கவே கடுப்பாக உள்ளது.

  எப்படி இவர்களால் இவ்வாறு இருக்க முடிகிறது என்று தோன்றிக்கொண்டே இருக்கும். சொந்த நாட்டையே இழிவு செய்கிறார்கள்.

  எப்போதுமே இங்கே இருக்கும் வரை அதன் அருமை தெரியாது. வேறு நாட்டுக்குச் சென்றால் தான் இந்தியா எவ்வளவு சிறப்பானது என்று புரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here