குற்றம் குற்றமே (2022) | A underrated movie

5
குற்றம் குற்றமே

ர்மா, குற்ற உணர்வு போன்றவற்றை மையப்படுத்தி வந்த படமே குற்றம் குற்றமே.

குற்றம் குற்றமே

ஜெய்யின் மனைவி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இதற்குக் காரணம் ஜெய் குடும்பத்தினர் என்று ஜெய் மனைவியின் மாமா காவல் அதிகாரி ஹரிஷ் உத்தமன் குற்றம் சாட்டுகிறார். Image Credit

இறுதியில் எதனால், யாரால் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று தெரிய வருவதே குற்றம் குற்றமே.

ரொம்ப நல்ல படம் ஆனால், ஏன் கவனம் பெறவில்லை என்று புரியவில்லை! எங்கேயுமே இப்படம் பற்றிக் கேள்விப்படவில்லை.

பொழுதுபோகாமல் அரைகுறை மனதோடு பார்க்க ஆரம்பித்து, முடிக்கும் போது அட! இந்தப் படத்தை இவ்வளவு நாள் பார்க்காமல் போனோமே என்று தோன்றியது.

எளிமையான கதை, செலவில்லாத படமாக்கல்

நடிகர், நடிகையின் சம்பளம் மட்டுமே இப்படத்துக்கு அதிக முதலீடாக இருக்கும். ஜெய் வீடு மற்றும் சுற்றுப்புறம் மட்டுமே பெரும்பான்மை படம்.

வழக்கமாக ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டு இருந்தால், சலிப்பாக இருக்கும் ஆனால், நடிப்பு, திரைக்கதையால் அவ்வாறு தோன்றவில்லை.

கிராமத்து கதை, கிராமத்து மனிதர்கள், அரசியல், வழக்கம் என்று ரொம்ப இயல்பாக எடுக்கப்பட்டுள்ளது. இக்கதை சொல்லவரும் மையக்கருத்து அட்டகாசம்.

  • தவறு செய்தால் கண்டிப்பாகத் தண்டனை கிடைக்கும்.
  • உண்மையை ஒளித்து வைக்க முடியாது.
  • குற்ற உணர்வு நம்மை நிம்மதியாக இருக்க விடாது.

கர்மாவில் மிகப்பிடித்த வாசகம்

No need for revenge. Jus sit back and wait. Those who hurt you eventually screw up themselves and if you are lucky, god will let you watch.

நிறைய கர்மா சம்பவங்களைக் கடந்து வந்துள்ளேன்.

ஜெய் & பாரதிராஜா

இதில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்.

பாரதிராஜாக்கு மட்டும் ஓவர் பில்டப் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால், துவக்கத்தில் மட்டுமே. பின்னர் விசாரணை காட்சிகளில் மிக எதார்த்தமாக நடித்துள்ளார்.

ஜெய்கிட்ட சும்மா வந்துட்டு பேசிட்டுப் போனால் போதும்ன்னு கூறி இருப்பார்கள் போல 🙂 , ரொம்ப இயல்பாக நடித்துள்ளார். குறை கூற எந்தக்காரணமும் இல்லை.

ஒரு சராசரி மனைவி கதாப்பாத்திரத்தில் ஜெய் மனைவியாகத் திவ்யா. ஏதாவது கோபம் என்றால் உலுக்கி எடுத்து விடுகிறார் 🙂 .

முருகா! எப்படி இரண்டை சாமாளித்தே!” என்று ஜெய் புலம்புவது ரசிக்க வைக்கிறது.

ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர்

ஜெய் மாமாவாக வருபவர் ரொம்ப நல்ல நடிப்பு. அவர் ஜெய் தவறு செய்து இருக்க மாட்டார் என்று கூற, மற்றவர்கள் வற்புறுத்தலில் அரை மனதாக நடந்துகொள்கிறார்.

இவர்களோடு ஜெய் அத்தை, ஹரிஷ் உத்தமன், அருள்தாஸ், வேல்ராஜ் என்று அனைவருமே குறை கூற முடியாத நடிப்பு.

சுழலுக்குப் பிறகு ஹரிஷ் உத்தமனுக்கு பொருத்தமான கதாப்பாத்திரம்.

ஜெய் அக்கா பெண், தான் ஜெய்யை தீவிரமாகக் காதலிப்பதை ஏன் முன்பே கூறி வலியுறுத்தவில்லை என்பதும், ஹரிஷ் உத்தமன் ஏன் தன் அக்காவிடம் முன்பே தன் விருப்பதைக் கூறவில்லை என்பதும் புரியவில்லை.

தன் அக்கா பெண் தன்னை விரும்பவில்லை என்று கூறுவதற்கான நியாயமான காரணங்கள் எதுவுமே காட்சிகளாக இல்லை. காட்சிகள் நீக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

தன் மாமா மீது உயிரை வைத்துள்ள கதாப்பாத்திரமாக ஜெய் அக்கா பெண் ஸ்மிருதி.

மதுரை முத்து சில நகைச்சுவைகள் முகம் சுழிக்கும்படியாக உள்ளதை தவிர்த்து இருக்கலாம்.

ஒரு காட்சியில் ஆதாரத்தைத் தடவியலுக்கு அனுப்பி இருப்பதாக ஹரிஷ் உத்தமன் கூறுகிறார் ஆனால், பாரதிராஜா வரும் போது அங்கேயே அனைத்தும் உள்ளது.

ஒளிப்பதிவு பின்னணி இசை

ஒளிப்பதிவு டாப் டக்கர். எங்குமே செயற்கைத்தன்மை இல்லாமல், கிராமத்து மனிதர்களை, வழக்கங்களை, காடுகளை அப்படியே காண்பித்துள்ளார்கள்.

பின்னணி இசையும் ரொம்ப நன்றாக உள்ளது. பாடல் இல்லையென்றாலும், பின்னணி இசை படம் பார்ப்பவர்களைப் பரபரப்பாக வைத்துள்ளது.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடுக்குப் பிறகு திருப்தியான படம் குற்றம் குற்றமே.

இறுதியில் ஜெய்க்குப் பாராதிராஜா கூறும் அறிவுரைகள் எதார்த்தமாக இருந்தது.

இப்படம் சுசீந்திரன் இயக்கத்தில் வந்த வீரபாண்டியபுரம் போல இருப்பதாகக் குற்றச்சாட்டுள்ளது ஆனால், இன்னும் அதைப் பார்க்கவில்லை.

யார் பார்க்கலாம்?

அனைவரையும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

சில கேள்விகள், சந்தேகங்கள் இருந்தாலும் இப்படம் சொல்லவரும் கருத்துக்காகவும், எதார்த்தமான படமாக்கலுக்காகவும் இவற்றை மன்னிக்கலாம்.

இக்கதையின் மையக்கருத்தில் அதிக நம்பிக்கையுள்ளதால், இப்படம் என்னைக்கவர்ந்ததில் வியப்பில்லை. உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் 🙂 .

இப்படம் OTT வெளியீட்டுக்குப் பொருத்தமானது.

இது போன்ற குறைந்த முதலீட்டில் நல்ல கதையம்சம் உள்ள படங்களை OTT யில் வெளியிடத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் முயற்சிக்கலாம்.

Amazon Prime ல் காணலாம்.

கடைசீல பிரியாணி, Joji படமும் OTT வெளியீட்டுக்காகவே எடுக்கப்பட்டது, அதை நியாயப்படுத்தியும் இருந்தது.

Written by Suseenthiran
Directed by Suseenthiran
Starring Jai, Bharathiraja, Harish Uthaman, Smruthi Venkat, Divya Duraisamy
Music by Ajesh
Original language Tamil
Cinematography R. Velraj
Editor Kasi Viswanathan
Production Company D Company
Distributor Axess Film Factory, Kalaignar TV, Amazon Prime Video
Original release 14 April 2022

தொடர்புடைய விமர்சனம்

வினோதய சித்தம்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. பகவத்கீதையில் க்ருஷ்ணர் சொன்னது.

    (न कर्तृत्वं न कर्माणि लोकस्य सृजति प्रभुः।

    न कर्मफलसंयोगं स्वभावस्तु प्रवर्तते।।5.14।।)

    ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு:।
    ந கர்மபலஸம்யோகம் ஸ்வபாவஸ்து ப்ரவர்ததே॥ 5.14 ॥

    செயல்கள், செயல்களுக்கான பொறுப்பு, செயலின் பலன்களை ஏற்றல் என்று எதையும் இறைவன் நமக்காக வைக்கவில்லை. அனைத்தையும் அவனவன் செய்த கர்மாவே செய்கிறது

  2. போத்தனூர் தபால் நிலையம் படம் பாருங்க. செமையா இருக்கும். 1980 ல நடக்குற கதை. எல்லாருமே புது முகம். ஆஹா OTT Aha Ott ல இருக்கு. டைரக்டா ஓடிடி ல தான் ரிலீஸ் ஆச்சு. திரைக்கதை அவ்வளவு நல்லா இருக்கும்.

  3. போத்தனூர் தபால் நிலையம் படம் நாளை 07.08.2022 மதியம் 2 மணிக்கு colors Tamil சேனலில் போடுகிறார்கள்.

  4. கிரி, எதார்த்தமான இருக்கும் எந்த கதைகளும் எனக்கு விருப்பமானவைகள்.. நீங்க குறிப்பிட்ட இந்த படத்தை இது வரை பார்க்கவில்லை. நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன். ஜெய் எனக்கு பிடித்த நடிகர்.. குறிப்பாக அவரின் அப்பாவி தானமான நடிப்பு பிடிக்கும்..

    தற்போதும் சில சமயங்களில் எங்கேயும் எப்போதும் படத்தின் காணொளிகளை காண்பேன்.. அஞ்சலியின் பாத்திரத்தில் கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங் இருக்கும்.. ஆனால் ஜெய்யோட பாத்திரத்தில் அப்பாவித்தனமான நடிப்பு மட்டும் வெளிப்படும்..

    இத்தனை ஆண்டுகள் திரைத்துறையில் இருந்த ஜெய் நிச்சயம் தனக்கான இடத்தை பிடித்து இருக்க வேண்டும்.. சில காரணங்களால் அது தள்ளி போய் கொண்டே இருக்கிறது.. ஒரு தலைசிறந்த நடிகராக ஜெய் திரைத்துறையில் வலம் வர வேண்டும் என்பது என் விருப்பம்.. காத்திருப்போம்..

  5. @ஹரிஷ்

    “போத்தனூர் தபால் நிலையம் படம் பாருங்க”

    பார்க்க முயற்சிக்கிறேன். இதில் என் Subscripition முடிந்து விட்டது, புதுப்பிக்க வேண்டும்.

    “போத்தனூர் தபால் நிலையம் படம் நாளை 07.08.2022 மதியம் 2 மணிக்கு colors Tamil சேனலில் போடுகிறார்கள்.”

    நான் OTT மட்டுமே. DTH ரத்து செய்து விட்டேன்.

    @யாசின்

    “அஞ்சலியின் பாத்திரத்தில் கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங் இருக்கும்.. ஆனால் ஜெய்யோட பாத்திரத்தில் அப்பாவித்தனமான நடிப்பு மட்டும் வெளிப்படும்..”

    மிக உண்மை.

    “இத்தனை ஆண்டுகள் திரைத்துறையில் இருந்த ஜெய் நிச்சயம் தனக்கான இடத்தை பிடித்து இருக்க வேண்டும்.. சில காரணங்களால் அது தள்ளி போய் கொண்டே இருக்கிறது..”

    அதற்கு காரணம் அவருடைய attitude தான் யாசின். தொழில் பக்தி இல்லை. இதனாலயே பலர் புறக்கணிக்கக் காரணம் ஆகி விடுகிறார்.

    சிம்பு திறமையான நடிகர் ஆனால், அவர் attitude காரணமாக வளர்ச்சி இல்லாமல் உள்ளார். இதே காரணம் தான் ஜெய் க்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here