அதிமுக பாஜக பிரிவு யாருக்கு இலாபம்?

2
அதிமுக பாஜக

பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என்று அதிமுக அறிவித்தது. அதன் பிறகு அதிமுக பாஜக வில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். Image Credit

கூட்டணி

அதிமுக பாஜக கூட்டணி துவக்கத்திலிருந்தே சர்ச்சைகள் இருந்தாலும், பிரச்சனை இல்லாமல் இருந்தது ஆனால், அண்ணாமலை வந்த பிறகு மாற்றம் துவங்கியது.

பாஜகவால் சிறுபான்மையினர் வாக்குகளை இழப்பதாகக் கருதுவதால், பாஜகவைச் சுமையாக எடப்பாடி கருதினார்.

இவற்றோடு முக்கியமாக அண்ணாமலையின் வளர்ச்சி அவரை எரிச்சலாக்கி இருந்தது. அதிமுகக்கு சமமாக பாஜக இருப்பதை எடப்பாடி விரும்பவில்லை.

தனக்கு அடங்கி இருக்கும் கட்சியாகவே விரும்புகிறார்.

கூட்டணி முறிவு

அண்ணாமலையின் வளர்ச்சி மற்றும் கட்சியை வளர்க்க அவரின் முயற்சிகள் ஆகியவை எடப்பாடியை மட்டுமல்ல, அவரது கட்சியினரையும் கடுப்பாகி இருந்தது.

ஆனால், அண்ணாமலை அதிமுகவை விமர்சிக்காமலிருந்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அவரை விமர்சித்த போது அதற்குப் பதிலடி கடுமையாகக் கொடுத்தது, இவர்களைக் காண்டாக்கியது. எனவே, தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் அண்ணாமலையை சீண்டிக்கொண்டு இருந்தனர்.

மதுரையில் அண்ணா, தேவர் நிகழ்வை அண்ணாமலை கூறியதற்கு திமுகவினரை விட அதிமுகவினரே அதிகம் கொந்தளித்தனர்.

திமுக அமைதியாக இருந்தது வியப்பை அளித்தது.

அதிமுக நிலை

அதிமுகவின் முடிவு அவசரப்பட்டு எடுத்த முடிவாகக் கருதுகிறேன், தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்பே கூட்டணி முறிவை அறிவித்து விட்டார்கள்.

இவற்றோடு எதற்காகக் கூட்டணியை முறித்தார்களோ அதற்கான வேலையை எடப்பாடி ஆரம்பித்தார்.

முஸ்லீம் தீவிரவாத கைதிகளின் விடுதலைக்கு ஆதரவாகப் பேசினார். தனது பல கால அடையாளமான திருநீறு வைப்பதையே நிறுத்தும் அளவுக்குச் சென்றார்.

உண்மையிலேயே எனக்குப் பேரதிர்ச்சி, இந்தளவுக்கு இறங்குவார் என்று எதிர்பார்க்கவில்லை. தற்போது திருநீறு வைத்துக் காணப்படுகிறார்.

சில சிறுபான்மை அமைப்புகளை வைத்துச் சிறுபான்மை காவலர் பட்டத்தை வைத்துக்கொண்டதெல்லாம், எந்த அளவுக்கு உதவும்?!

காரணம், சிறுபான்மையினர் தாங்கள் எவ்வளவு ஏமாந்தாலும் திமுகவுக்கே வாக்களிக்கின்றனர். அதிமுகவுக்கு பெருமளவில் வாக்களிப்பார்கள் என்று தோன்றவில்லை.

இந்துக்கள் வெட்கம், சொரணையற்றவர்கள், எப்படியும் பணத்தைக் கொடுத்தால் வாக்கு போட்டு விடுவார்கள் என்பதில் திமுக அதிமுக இருவரும் தெளிவாக உள்ளார்கள், உண்மையும் கூட.

எனவே தான் இவர்கள் கவனம் முழுக்க சிறுபான்மையினரை நோக்கி உள்ளது.

பாஜக நிலை

அண்ணாமலை தனித்துப் போட்டியிடுவதில் ஆர்வம் கொண்டு இருந்தார்.

காரணம், தேர்தலில் அதிமுக வேட்பாளருக்குப் பாஜகவினர் வாக்களிக்கின்றனர் ஆனால், அதிமுகவினர் பாஜக வேட்பாளருக்கு வாக்களிப்பதில்லை.

அதிமுக கூட்டணியில் இருப்பதால், நோட்டா கட்சி, 3% கட்சி, அதிமுக துணையுடன் வெற்றி பெறும் கட்சி, அதிமுக போட்ட பிச்சை என்ற அவச்சொல்லும் கிடைக்கிறது.

எனவே, பாஜக தனியாகப் போட்டியிட்டு தங்களது வாக்கு சதவீதத்தை நிரூபிக்க முயல்கிறார். இதுவே கட்சியை வளர்க்கும் என நம்புகிறார்.

தலைமை அவசரப்படாமல் நிதானம் காட்டியது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வந்த பிறகு முடிவு செய்யலாம் என்று எண்ணியதாகக் கூறப்பட்டது.

இவற்றோடு பாஜக என்றுமே முடிவில் அவசரம் காட்டியதில்லை.

கூட்டணி முறிவால் யாருக்கு இலாபம்?

பாஜகவுக்கு இலாபம், அதை விடத் திமுகவுக்கு இலாபம்.

காரணம், பாஜக தெளிவான நிலையை எடுத்து அதன் போக்கில் கட்சிப் பணிகளைச் செய்ய முடிந்தது. தேர்தலுக்காக முன்கூட்டியே திட்டமிட முடிந்தது.

கட்சியினரிடையே என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் குழப்பமில்லாத உற்சாகத்தை ஏற்படுத்த முடிந்தது. மக்களும் வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர்.

முன்னரே கூறியபடி வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜக 15% க்கு மேல் வாக்குகளைப் பெறும். இது பாஜகவுக்கு உற்சாகத்தை அளிக்கும்.

கூட்டணி உடைந்ததால், பெரும்பான்மை இடங்களைத் திமுக கைப்பற்றும்.

பாஜகவுக்கு இழப்பா?

தற்காலிகமாக யோசித்தால், நிச்சயம் இழப்பே!

காரணம், அதிமுக பாஜக கூட்டணியாக இருந்தால், குறைந்தது 25+ இடங்களைப் பெற்று இருக்கும். காரணம், அந்த அளவுக்குத் திமுக எதிர்ப்பு மனநிலை உள்ளது.

ஆனால், அதிமுக கூட்டணி இல்லாமல் தொடர்வது கட்சியைப் பெரும் அளவில் வளர்க்க பாஜகவுக்கு உதவும். இதுவே கட்சியின் மீதான மதிப்பை உயர்த்த உதவும்.

முக்கியமாக, பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளைத் தைரியமாக அறிவிக்க முடியும்.

எடுத்துக்காட்டுக்கு, சட்டமன்ற தேர்தலில் இந்து அறநிலையத்துறையை நீக்குவதாகத் தேர்தல் வாக்குறுதி கொடுக்க முடியும். இதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது.

தேசிய கல்வித்திட்டத்தை, ஏழை மாணவர்களுக்குப் பலன் தரும் நவோதயா பள்ளிகளைத் தமிழகத்துக்குக் கொண்டு வருவதாகக் கூறலாம்.

இவையெல்லாம் அதிமுக கூட்டணியில் முடியாது. கூட்டணி என்றால், எடப்பாடியே முதல்வர் வேட்பாளர். எனவே, மேற்கூறியவை சாத்தியமில்லை.

கூட்டணியில் இருக்கும் வரை, 3% கட்சி, நோட்டா கட்சி, அதிமுக போட்ட பிச்சை என்ற அவப்பெயரையும் நீக்க முடியாது.

எனவே, கூட்டணி முறிவு பாஜகவுக்குத் தற்காலிகமாக நட்டம் ஆனால், நீண்ட கால அளவில் கட்சியை வளர்க்கக் கூட்டணி முறிவு மிகப்பெரிய இலாபம்.

தானாக வந்த வாய்ப்பு

அதிமுகவை எப்படிக் கழட்டி விடுவது என்று நினைத்துக் கொண்டு இருந்த அண்ணாமலைக்கு, அதிமுகவே அறிவித்தது மகிழ்ச்சியைக் கொடுத்து இருக்கும்.

அதுவும் முன்னரே அறிவித்தது கூடுதல் இலாபம்.

காரணம், கடைசி நேரத்தில் அறிவித்தால், தொண்டர்கள், மக்கள் மனநிலையில் குழப்பம் ஏற்படும். இது தேர்தலில் சேதாரத்தை ஏற்படுத்தும்.

எடப்பாடியும் தன்னை முன்னிறுத்தி கட்சியை வளர்க்க நினைக்கிறார் ஆனால், இவ்வளவு விரைவாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை.

பாஜக எந்த விமர்சனத்தையும் முன் வைக்கவில்லை என்றாலும், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதைத் திரும்பத்திரும்ப அதிமுக கூறி வருகிறது.

எடப்பாடி எண்ணம் நிறைவேறுமா?

சிறுபான்மையினர் வாக்குக்காகவே பாஜக உறவைத் துண்டித்தார் ஆனால், அது நடக்குமா நடக்காதா என்பது தேர்தல் முடிவே கூறும்.

காங், விசிக கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்று நினைத்தார் ஆனால், யாருமே வரவில்லை என்பது அதிமுகவுக்கு அதிர்ச்சியோ இல்லையோ எனக்கு வியப்பு.

ஏதாவது ஒரு பெரிய கட்சி வரும் என்று நினைத்தேன் ஆனால், திமுகவிடம் இரண்டு இடங்களாவது பெற்றுத் தொடர முடிவு செய்து விட்டார்கள்.

காரணம், அதிமுகவிடம் 10 இடங்கள் கிடைத்தாலும் வெற்றி உறுதியில்லை ஆனால், 2 இடங்கள் பெற்றாலும் திமுக கூட்டணியில் வெற்றி பெறலாம்.

எனவே, இங்கேயே தொடர முடிவு செய்து விட்டார்கள். காங் வரும் என்று இன்னமும் அதிமுக நம்பிக்கொண்டுள்ளது.

புரட்சி பாரதம் கட்சி மட்டுமே அதிகாரப்பூர்வமாக அதிமுகவை ஆதரித்துள்ளது.

எனக்கு என்ன பயம் என்றால், திரும்பப் பாஜக கூடக் கூட்டணி என்று அறிவித்துப் பல்டி போட்டு விடக் கூடாது 🙂 .

அண்ணாமலையின் உழைப்பு வீணாகி விடும். ஒருவேளை அதிமுக திரும்பக் கூட்டணிக்கு வந்தாலும், தனித்து போட்டியிடும் அண்ணாமலை முடிவுக்குப் பாஜக தலைமை ஆதரவாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஏனென்றால், இது போன்ற வாய்ப்பு பாஜக க்கு திரும்பக்கிடைக்காது. கிடைத்தாலும், கால விரயம் ஆகி இருக்கும். இதுவே 2026 சட்டமன்றத்தேர்தலுக்கு தயாராகப் பொருத்தமான காலம்.

பாராளுமன்றக்கூட்டணி

பாராளுமன்றத்தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பலமாக உள்ளது ஆனால், லஞ்சம், ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, கொலை, கொள்ளை ஆகியவற்றால் அதிருப்தி உள்ளது. எனவே, திமுக கூட்டணி வாக்கு இழப்பைச் சந்திக்கும்.

ஆனால், அதிமுக பாஜக கூட்டணி முறிவால், வாக்கு பிரிவதால், திமுக கூட்டணியே பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும்.

அதிமுகவுடன் யார் கூட்டணி அமைப்பார்கள் என்றே தெரியவில்லை. நாதக தனித்து போட்டி, பாமக & தேமுதிக என்ன முடிவு என்று தெரியவில்லை!

ஆனால், பாஜகவுக்குச் சிறு கட்சிகளும், லெட்டர் Pad கட்சிகளும் ஆதரவாக உள்ளன குறிப்பாகத் தென் மாவட்டங்களில்.

இவர்களால் பெரிய அளவில் இலாபம் இல்லையென்றாலும், வந்தவரைக்கும் இலாபம் என்றே உள்ளது. பாஜகவுக்கு இழக்க எதுவுமில்லை என்பது அனுகூலம்.

அமமுக, பன்னீர் ஆதரவு இருந்தால் கூடுதல் பலம், இவர்கள் இணைவார்கள் என்று நினைக்கிறன் ஆனால், தினகரன் அவ்வப்போது திமுக சாதகமாகப் பேசுகிறார்.

இவற்றோடு மோடியை முன்னிறுத்த முடிவது பாஜகவுக்குக் கூடுதல் பலம், அதிமுகவுக்கு இது இல்லை. என்ன கூறி வாக்கு கேட்பார்கள்?

இலாபமா நட்டமா?

ஒரு இடத்தில் வெற்றி பெற்றால் கூட, பாஜக வளர்ச்சி அடைந்து விட்டது எனக்கொள்ளலாம்.

வெற்றி பெறவில்லையென்றாலும், 15% வாக்குகளைப் பெறுவது உறுதி என்பதால், பாஜக வளர்ச்சிக்கு உறுதியாக உதவும், மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும்.

எனவே, எப்படிப்பார்த்தாலும் பாராளுமன்றத்தேர்தல் பாஜகக்கு இலாபமே! அதிமுகக்கு இத்தேர்தல் வாக்கு இழப்பை ஏற்படுத்தும் என்று கருதுகிறேன்.

அதிமுக பாஜக கூட்டணி முறிவை பாண்டே எதனால் விமர்சிக்கிறார் என்றே புரியவில்லை. அதிமுக பாஜகக்கு நட்டம் என்றே கூறி வருகிறார்.

அதிமுக பாஜகக்கு இழப்பு, திமுகக்கு இலாபம் என்பதை அரசியல் அறிவு இல்லாதவர்கள் கூட ஏற்றுக்கொள்வார்களே! இதைக்கூற பாண்டே எதற்கு?

கூட்டணி பிரிவு நீண்ட கால பாஜக வளர்ச்சிக்கு உதவும் என்பதே முக்கியம் என்பதை ஏன் பாண்டே பேச மறுக்கிறார் என்பது புரியவில்லை.

பேசும் ஒவ்வொரு பேட்டியிலும் இதைக்கூறுகிறார்.

என்ன ஆகும்?

பிடிக்கவில்லையென்றாலும், கடுப்பாக இருந்தாலும் பாராளுமன்றத்தேர்தலில் திமுகவே அதிக இடங்களைப் பெறப் போகிறது, இதுவே எதார்த்தம்.

இவ்வாறு நடக்கவில்லையென்றால், இதைவிடக்கேவலம் திமுகக்கு இல்லை.

கடந்த 2021 சட்டமன்றத்தேர்தலில் அதிமுக கூட்டணியை, 10 வருடங்கள் கழித்து வெற்றி பெற்ற திமுக கூட்டணி வாக்கு 3% தான் அதிகம் என்பதை மறக்கக் கூடாது.

பாராளுமன்றத்தேர்தலில் வாக்கு சதவீதம் குறைவது அதிமுகக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும். வாக்கு சதவீதம் உயர்வது பாஜகக்கு உற்சாகத்தை அளிக்கும்.

என் விருப்பம், ஒரே ஒரு தொகுதியாவது பாஜக வெற்றி பெற்றால் மகிழ்ச்சி.

முன்னரே கூறியபடி எதிர்காலம் திராவிடம் Vs தேசியம் தான்.

தேசியத்தின் பின்னே மக்கள் திரளுவது தமிழ்நாட்டுக்கு நல்லது ஆனால், அதற்கு காலம் எடுக்கும், தோராயமாக 2031.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

கொசுறு

திராவிடம் எந்த அளவுக்கு 60+ வருடங்களாகத் தமிழக மக்களை மூளைச் சலவை செய்துள்ளது என்பதை உணரும் போது வியப்பாக உள்ளது.

தமிழகத்தைத் திராவிடம் எப்படிச் சீரழித்தது, சீரழிக்கிறது என்பதை எழுத ஏராளமான விஷயங்கள் உள்ளன.

எதுவுமே மிகைப்படுத்தப்படாத, உண்மையான செய்திகள், சம்பவங்கள்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

 1. கிரி.. அம்மாவின் மறைவுக்கு பின்பு யார் தலைவர் என்பதிலே இன்னும் குழப்பம் தீரவில்லை.. எடப்பாடி மற்றும் பன்னிர் செல்வம் இடையில் சசிகலா, தினகரன் என பல பேர் மத்தியில் அதிமுகவின் தலைமையில் பல குழப்பங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டு வருகிறது. இந்த குழப்பத்தை முற்றிலும் தீர்த்தால் மட்டுமே எதிர்காலத்தில் ஆட்சி அமைப்பதை குறித்து அதிமுக யோசிக்க முடியும். கட்சியின் பேனர்களில் MGR படமும், அம்மாவின் படமும் இவர்கள் முன்னிலை படுத்துவதில்லை.

  பாஜக இவர்களின் கூட்டணியில் இருந்து விலகியது பாஜகவுக்கு எதிர்காலத்தில் நன்மையான ஒன்று தான். இரு கட்சிகளும் தங்களின் பலத்தை தெரிந்து கொள்ள எதுவாக இருக்கும். குறிப்பாக அடுத்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக வின் பலம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் கூறுவது போல மீண்டும் கூட்டணிக்கு வருகிறோம் என்று அறிக்கை கொடுக்கலாம் இருந்தால் சரி. அரசியலில் எல்லாம் சாதாரண மப்பா!!! என்று இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..

 2. @யாசின்

  “அம்மாவின் மறைவுக்கு பின்பு யார் தலைவர் என்பதிலே இன்னும் குழப்பம் தீரவில்லை.”

  நீதிமன்றம் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு கொடுத்துள்ளது.

  “கட்சியின் பேனர்களில் MGR படமும், அம்மாவின் படமும் இவர்கள் முன்னிலை படுத்துவதில்லை.”

  ஆமாம் 🙂 தேர்தல் நேரத்தின் போது மட்டும் முன்னிலைப் படுத்தப்படுவார்கள்.

  “இரு கட்சிகளும் தங்களின் பலத்தை தெரிந்து கொள்ள எதுவாக இருக்கும். குறிப்பாக அடுத்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக வின் பலம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.”

  இத்தேர்தல் முடிவுகள் பல விஷயங்களை பலருக்கு புரிய வைக்கும்.

  “மீண்டும் கூட்டணிக்கு வருகிறோம் என்று அறிக்கை கொடுக்கலாம் இருந்தால் சரி. அரசியலில் எல்லாம் சாதாரண மப்பா!!! என்று இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.”

  எடப்பாடி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் எனவே வாய்ப்பில்லை என்றே நினைக்கிறன்.

  இதை வைத்து முஸ்லிம் கட்சிகளுடன் எதோ ஒப்பந்தம் போட்டு இருப்பது போல உள்ளது. எனவே, இனி பின்வாங்கினால் சிக்கலாக வாய்ப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here