நோட்டா | ஏன் வேண்டாம்?

3
நோட்டா

டந்த தேர்தலில் இருந்து நோட்டா விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளது.

நோட்டா

எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள், அதே சமயம் ஜனநாயக கடமையையும் ஆற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் பயன்படுத்துவது நோட்டா.

சில வருடங்களுக்கு முன்பு நானே நோட்டாவுக்கு வாக்களியுங்கள் என்று கூறி இருந்தேன் ஆனால், அதன் பிறகு மற்றவர்களின் விளக்கங்கள் கேட்கும் போது தவறான ஒரு முடிவை எழுதி விட்டோமே என்று தோன்றியது.

தவறை திருத்திக் கொள்வதில் தவறில்லையே! Image Credit

ஏன் நோட்டா சரியான தீர்வல்ல என்று நியாயமான காரணத்தோடு கூற விரும்புகிறேன்.

ஏன் நோட்டா வேண்டாம்?

நோட்டா வேண்டாமே தவிர உங்களை வாக்களிக்க வேண்டாம் என்று கூறவில்லை. அதற்குப் பதிலாக வேறு யாராவது தகுதியான சுயேட்சைக்கு வாக்களியுங்கள்.

சுயேட்சையாக நிற்பவர்கள் ஏற்கனவே, பல நல்ல செயல்களைச் செய்து கொண்டு இருக்கலாம், அவர்களுக்குத் தகுதியான ஒரு பதவி கிடைத்தால், இன்னும் சிறப்பாகச் செய்யலாம் என்று நினைத்து இருக்கலாம்.

தான் வெற்றி பெற மாட்டோம் என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்து இருந்தாலும், அவரால் பயன்பெற்ற சிலராவது வாக்களிப்பார்கள் என்று நம்பி இருக்கலாம்.

எனவே, இருக்கின்ற சுயேட்சையில் சரியான நபரை விசாரித்து வாக்களியுங்கள். குறைந்த பட்சம் தனக்குக் கிடைத்த ஒரு அங்கீகாரமாக நினைக்கலாம்.

குறைவான வாக்கு என்றாலும், அவருக்கு ஏதாவது உந்துதலைக் கொடுக்கலாம், யார் கண்டா?

ட்விட்டர் ஃபேஸ்புக்கில் லைக் விழுந்தால் தான் நமக்கே எழுத உற்சாகம் வருகிறது.

யாரோ ஒருவர் தன்னால் ஏதாவது செய்ய முடியும் என்று வரும் போது இது போல வாக்களித்து ஆதரிப்பதில் தவறு இல்லையென்று கருதுகிறேன்.

உங்கள் விருப்பம்!

இருபெரும் ஆளுமைகள் இல்லாத இத்தேர்தல் முடிவுகளைக் காண மிக ஆவலாக உள்ளேன் 🙂 .

அதிமுக

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திடீர் என்று வந்தாலும், அனைவரும் எதிர்பார்த்தது போல இல்லாமல், ஓரளவு மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்.

நான்கு மாதங்கள் கூடத் தாங்க மாட்டார்கள் என்று தான் நினைத்தேன். இவர் குறித்து அசால்ட்டாக நினைத்து விட்டேன் என்றே கருதுகிறேன்.

இவர் மீதுள்ள அரசியல் குற்றச்சாட்டுகளைத் தவிர்த்துப் பார்த்தால், வியப்பளித்த நபராகவே எனக்குத் தோன்றுகிறார்.

துவக்கத்தில் அதிமுக மீது இருந்த மக்களின் வெறுப்புத் தற்போது அந்தத் தீவிரத்தில் இல்லை.

ஆனாலும், ஜெ இல்லாததால், யாருக்கு வாக்களிப்பார்கள், இவர்களின் சொதப்பல்களை எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்பதைத் தேர்தல் முடிவுகள் தான் கூற வேண்டும்.

திமுக

கலைஞர் இல்லாத தேர்தலைச் சந்திக்கிறார் ஸ்டாலின்.

ஆளுங்கட்சி மீதான குற்றச்சாட்டுகள், எதிர்ப்புகள் இவருக்குச் சாதமாக உள்ளது.

இந்தி எதிர்ப்பாளராக இருந்தவர் இந்து எதிர்ப்பாளராக மாறியதால், தற்போது குறிப்பிட்ட சதவீத இந்து மக்களிடையே எதிர்ப்பைத் திமுக எதிர்நோக்கியுள்ளது.

மேடை பேச்சுகளில் “திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சியல்ல” என்று விளக்குவதே இவரது பதட்டத்துக்குச் சாட்சி.

இத்தேர்தலில் இவை பெரியளவில் எதிரொலிக்காது ஆனால், அடுத்த தேர்தலில் இருக்கலாம்.

தற்போது வரை திமுக வுக்கே ஆதரவு அதிகம் காணப்படுகிறது ஆனால், மக்கள் எப்படி வாக்களிக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

Read : ஸ்டாலினின் இந்து மத எதிர்ப்பு

பாமக

இவர்களுக்குப் பிரச்சனையே கடந்த முறை பேசிய அனைத்தையும் தோண்டி எடுத்து வந்து மற்றவர்கள் பேசுவதே!

அப்போது அப்படிச் சொன்னீங்க.. இப்போ இப்படிச் சொல்றீங்களே! என்பது தான் கேள்வியாக உள்ளது.

பல வருடங்களாகத் திமுக அதிமுக மாறி மாறிக் கூட்டணி வைத்தது இவர்களுக்குக் கெட்ட பெயர். அதோடு தனியாக முயற்சித்தும் அதுவும் பலனளிக்கவில்லை.

ஆரம்பத்தில் இவர்கள் செய்த தவறுகள் தற்போது இவர்களுக்குச் சிக்கலாக வந்துள்ளன.

பாமக திரிசங்கு நிலையிலேயே இருக்கிறார்கள். எந்தப்பக்கம் போவது? எதை நோக்கிக் கட்சியைக் கொண்டு செல்வது என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு எப்படி வாக்கு வரும் என்று பார்க்க ஆவலாக உள்ளேன். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிய வேண்டும்.

பாஜக

இவர்களுக்குத் தமிழகத்தில் நல்ல பெயரில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கடந்த முறை பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

சிவகங்கையில் H ராஜா போட்டியிடுகிறார். கார்த்திக்கும் நல்ல பெயரில்லை, சினேகனுக்கும் நல்ல பெயரில்லை. ராஜாவுக்கும் நல்ல பெயரில்லை.

அதனால் யார் வெற்றி பெறுவார்கள் என்று பார்க்கச் செம்ம ஆர்வமாக இருக்கிறேன்.

ஒருவேளை H ராஜா வெற்றி அடைந்து விட்டால், இணையத்தில் அவரைத் திட்டிக்கொண்டு இருந்தவர்களுக்குப் செம்ம அசிங்கம் ஆகி விடும் 🙂 .

சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கனிமொழியை விடத் தமிழிசை 100 மடங்கு சிறந்தவர்.

ஆனால், அவர் சார்ந்த கட்சியும், அக்கட்சியின் மாநிலத் தலைவருக்குண்டான பொறுப்பான பேச்சும் இல்லாதது பின்னடைவாக உள்ளது.

திமுக வுக்கு எதிராக இந்து மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருவது, ஒருவேளை பாஜக க்கு சாதகமாகலாம்.

மற்றபடி பாஜக க்கு சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லை.

அமமுக

அதிமுக வாக்குகளைப் பிரிப்பதோடு, குறிப்பிடத்தக்க அளவில் இடங்களைப் பெறலாம் என்று கூறப்படுகிறது.

அதிகளவில் பணத்தைக் கொடுப்பதும், பேட்டிகளில் தினகரனின் பதட்டமாகாத அசத்தலான பேச்சும் இவருக்குக் கூடுதல் பலம்.

சசிகலா தொடர்பு என்பது இவருக்கு இருக்கும் குறை.

குறிப்பிடத்தக்க வாக்குகள் பெற்றால், அடுத்த தேர்தல் கூட்டணியில் தவிர்க்க முடியாத நபராகி விடுவார்.  இத்தேர்தல் தினகரன் அரசியல் வாழ்விற்கு முக்கியமானது

எனவே, எவ்வளவு வாக்குகள் பெறுவார் என்று பார்க்க ஆவலாக உள்ளேன்.

மநீம

நான் ரஜினி ரசிகன் என்பதால், மநீம பற்றி என்ன கூறினாலும், தவறாகவே புரிந்து கொள்ளப்படும் என்பதால்,  தவிர்க்கிறேன். குறிப்பாகத் தேர்தல் நேரத்தில்.

நாதக

சீமானுக்குக் கடந்த தேர்தலை விட இத்தேர்தலில் கூட்டம் கூடியுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் 2000+ வாக்குகள் பெற்றது இவருக்கு வருத்தத்தைத் தந்தது. இத்தேர்தலில் போட்டியிடவில்லையென்றாலும் நம்பிக்கையாக உள்ளார்.

பிரிவினை வாதம், வந்தேறி பேச்சுகள் பின்விளைவுகளை ஏற்படுத்தியதால், சமீபமாக இது போன்ற பேச்சுகளைத் தவிர்த்து வருகிறார், தொடர்ந்தால் நல்ல விஷயம்.

இவருடைய பேச்சுக்கள், செய்கைகள் முட்டாள்தனமாகத் தோன்றினாலும், இவருடைய பேச்சைக் கேட்பதற்குப் பலர் விருப்பமாக உள்ளார்கள்.

இப்படி விருப்பமாகக் கேட்பவர்கள் எல்லாம் வாக்களிப்பார்களா என்பது தேர்தல் முடிவுகள் வந்தால் தான் தெரியும்.

நடப்பது பாராளுமன்றத் தேர்தல் என்றாலும், மக்கள் பார்ப்பது சட்டமன்றத் தேர்தல் போலவே!

எவ்வளவு வாக்குகள்?

ஒவ்வொரு கட்சிகளும் எவ்வளவு வாக்குகள் பெறப்போகின்ற என்பதைக் காண மிக ஆவலாக உள்ளேன்.

மக்கள் என்ன நினைக்கிறார்கள்? கட்சிக்கும் நமக்கும் என்ன அதிர்ச்சியைக் கொடுக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள விருப்பமாக உள்ளேன் 🙂 .

இத்தேர்தல் முடிவுகள் ஓரளவு மக்கள் மனநிலையை வெளிக்கொண்டு வரும் என்று கருதுகிறேன்.

கொசுறு

வாக்களிக்க இன்று இரவு ஊருக்குக் கிளம்புகிறேன் 🙂 . நீங்களும் உங்கள் கடமையைத் தவறாமல் செய்யுங்கள்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. கிரி,

    மிக அழகாக, மிகவும் பொறுப்புடன் –
    நல்ல தமிழில், தெளிவாக எழுதுகிறீர்கள்.
    வாழ்த்துகள்.

    எந்த இசத்’திற்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல்,
    எந்த கட்சி வலையிலும் மாட்டிக்கொள்ளாமல்
    உங்கள் கருத்துகளை வெளிப்படையாக
    சொல்கிறீர்கள்.

    உங்களைப்போன்ற தெளிவான சிந்தனையும்,
    அழகான தமிழ் நடையும் உள்ளவர்கள் –
    வலைத்தளத்தில் இன்னும் நிறைய பேர்
    வர வேண்டும் என்று விரும்புகிறேன்.

    நீங்கள் நிறைய எழுத வேண்டுமென்றும்
    விரும்புகிறேன்.

    -உள்ளம் நிறைந்த வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  2. கிரி, பதிவு ரொம்ப சிறிதாகவும்,நேர்த்தியாகவும்,அழகாகவும் இருந்தது.. என்னால் வாக்களிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது.. பெரிய அரசியல் கட்சிகளாலே தேர்தலின் முடிவை சரியாக கணிக்க முடியாத போது, ஒரு சாமானியனாக என்னால் தேர்தல் முடிவுகளை குறித்து யோசிக்க கூட முடியவில்லை.. ஆனால் நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் கவனிக்கப்படும் கட்சியாக இருக்கும் என் யூகிக்கிறேன்.. வரும் சட்டமன்ற தேர்தலில் இவர்களின் பலம் என்னும் கூடும் என்பது என் கணிப்பு..

    சகாயம் ஐயா அரசியலுக்கு வரவேண்டும் என்பது பலரது விருப்பம்.. என் விருப்பம் கூட.. அவருடைய ஒரு சில காணொளிகளை கண்டு பிரமித்து விட்டேன்.. என்ன காரணமோ தெரியவில்லை??? அவருக்கு அரசியலில் விருப்பம் இல்லை.. நிர்வாகத்தில் நல்ல அனுபவம் இருப்பதால் இவர் வந்தால் ஒரு நல்லாட்சி அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை… பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. @காவிரி மைந்தன் நன்றி சார் 🙂 உங்களைபோன்றவர்களின் வாழ்த்துகள், என்னை மேலும் எழுதத் தூண்டும்.

    உண்மை தான் சார்.. நான் எதிலும் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. என்னால் சுதந்திரமாக எழுத முடியாது.. ரஜினி ரசிகன் என்ற ஒரே அடையாளம் மட்டுமே! வேறு எதிலும் நான் இல்லை, விருப்பமும் இல்லை.

    @யாசின் நன்றி 🙂 இத்தேர்தல் முடிவுகள் பலருக்கு அதிர்ச்சியை தரலாம். முடிவைக் காண மிக ஆர்வமாக உள்ளேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here