பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாகச் செய்திகள் வெளியான பிறகு பரபரப்பாகி விட்டது.
அண்ணாமலை
அரசியலில் அண்ணாமலைக்கு அனுபவமில்லை என்றாலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சாதிக்காத பாஜக தலைவர்களை விட அண்ணாமலை இரண்டு ஆண்டுகளில் சாதித்து உள்ளார் என்பதை மறுக்க முடியாது. Image Credit
அக்காலத்தில் இவ்வாறான நெருக்கடி வரவில்லை ஆனால், அண்ணாமலை வந்த போது அதற்கான அரசியல் சூழல் இருந்தது.
அதற்காக கட்சியை வளர்க்காததை சமாதானப்படுத்த முடியாது.
அண்ணாமலையைப் பிடிக்காதவர்கள் அப்படியென்ன கிழித்தார்? என்று கேட்கலாம் ஆனால், அவரவர் மனசாட்சிக்குத் தெரியும் என்ன செய்தார் என்று!
முன்னாள் மாநிலத்தலைவர்கள்
இதற்கு முன் இருந்த தலைவர்கள் பாஜகவும் முதன்மையான கட்சியாக வளர வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை.
குறிப்பாக மோடி பிரதமராக இருந்த துவக்க காலமான 6 வருட காலத்தைத் தமிழிசை வீணடித்து விட்டார். பாஜகவின் முக்கியமான காலகட்டம் இது.
இவரை ஒரு ட்ரோல் நபராகக் கருதியதும், அதற்கு இவர் தீனி போட்டதும் முக்கியக்காரணம்.
இதில் என்ன சோகம் என்றால், ஆளுநரான பிறகும் கூடச் சில நேரங்களில் அதே போல கிண்டலடிக்கும் படியான பேச்சுகளைத் தொடர்வது.
தமிழிசை நல்லவர் ஆனால், அது மட்டுமே அரசியலுக்குப் போதுமானது அல்ல.
L முருகன்
அண்ணாமலை செய்ததது சந்தேகத்திற்கிடம் இல்லாமல் சாதனையென்றாலும், அச்சாதனைக்கு அடித்தளமிட்டது முருகன் என்றால் மிகையல்ல.
ஏனென்றால், முருகன் வருகைக்கு முன்பு வரை தமிழக பாஜக எந்த முக்கியத்துவமும் இல்லாத கட்சியாக இருந்தது.
ஆனால், முருகன் பதவியேற்ற பிறகு பாஜகவில் மாற்றம் வந்தது.
அதாவது தமிழ்நாடு முழுக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளை, தொண்டர்களை நேரடியாகச் சந்தித்து வந்தார்.
எந்த அளவுக்கு என்றால், எங்கள் கோபி அருகே உள்ள கூகலூர் என்ற கிராமம் வரை வந்து கூட்டங்களில் கலந்து கொண்டார்.
உறவினர்கள் பலர் இதன் பிறகு பாஜகவில் இணைந்ததால், இந்நிகழ்வு பற்றி உறுதியாகத்தெரியும். இதன் பிறகு கட்சியை வளர்க்க பல கூட்டங்கள் நடத்தினார்.
இவருடைய வேல் யாத்திரை பாஜக வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாக இருந்தது.
எனவே, அண்ணாமலையைப் புகழ்பவர்கள் முருகன் அவர்கள் செய்த முயற்சிகளையும் மறந்து விடக் கூடாது.
மாநிலத்தலைவராகப் பதவியேற்கும் போது முருகன் யார் என்று கூடப் பலருக்குத்தெரியாது. கட்சித்தலைமை எதற்கு இவரையெல்லாம் மாநிலத்தலைவராக நியமிக்கிறார்கள் என்ற எண்ணமும் பலருக்கு (நான் உட்பட) இருந்தது.
ஆனால், அனைவரின் எண்ணங்களையும் தவிடுபொடியாக்கிப் பாஜகக்கு ஒரு மாற்றத்தை, கவனிப்பைக் கொண்டு வந்தார்.
சட்டமன்றத் தேர்தல்
2021 சட்டமன்றத்தேர்தலில் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு பாஜகக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டது ஆனால், பெரும்பாலானவை வெற்றி வாய்ப்பில்லாத இடங்கள்.
குஷ்பூ ஏராளமான பணிகளைச் செய்து இருந்தும், சேப்பாக்கம் மக்களோடு தொடர்பிலிருந்தும் அவருக்குச் சேப்பாக்கம் தொகுதி மறுக்கப்பட்டு ஆயிரம் விளக்குத் தொகுதி கொடுக்கப்பட்டது.
சேப்பாக்கம் தொகுதி பாமக க்கு வழங்கப்பட்டது.
சேப்பாக்கம் தொகுதியில் குஷ்பூ போட்டியிருந்தாலும் உதயநிதியை தோற்கடித்து இருக்க முடியாது என்றாலும், ஒரு போட்டியைக் கொடுத்து இருப்பார்.
அண்ணாமலை
இந்நேரத்தில் முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கொடுத்துப் பாஜக துணைத் தலைவராக இருந்த அண்ணாமலையை (ஜூலை 2021) தமிழகப் பாஜக மாநிலத்தலைவர் ஆக்கியது பாஜக தலைமை.
அண்ணாமலைக்கு ஏற்கனவே IPS, கண்டிப்பானவர், இளைஞர், பிரபலம் போன்ற தகுதிகள் இருந்ததால், எளிதில் கட்சியினரிடையே கலந்து விட்டார்.
குறிப்பாக இளைஞர்களிடையே.
அண்ணாமலை Aggressive ஆன நபராக இருக்கிறார். அவர் மீது வேறு எந்த (ஊழல், லஞ்சம்) குற்றச்சாட்டுகளும் இல்லை.
எந்த அரசியல் பின்னணியும், பணப் பின்புலமும், அரசியல் தொடர்பும் இல்லாத சாதாரண நபராகவும் உள்ளார்.
இவற்றோடு பக்கத்துக்கு மாநிலங்களான கேரளா, கர்நாடாகாவிலும் பலராலும் விரும்பப்படும் நபராக உள்ளார். ஒருபடி மேலே சென்று அண்ணாமலை கேரளா பாஜக மாநிலத் தலைவராக வேண்டும் என்று கேட்கிறார்கள்.
எனவே, மேற்கூறியவை அண்ணாமலைக்குச் சாதகமான விஷயங்களாக இருக்கிறது.
100% சரியான நபர் என்ற ஒருவர் கிடையாது. எனவே, அண்ணாமலையும் விதிவிலக்கல்ல. இவரிடமும் தவறுகள் இருக்கும் ஆனால், மற்றவர்களோடு ஒப்பிடுகையில் எப்படி செயல்படுகிறார் என்பதையே கருத்தில் கொள்ள வேண்டும்.
விஷயம் தெரிந்தவர்
இவற்றோடு தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்குச் செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை மிக விரிவாகப் புள்ளி விவரத்துடன் பேசுகிறார்.
மற்ற கட்சியினர் அனைவருமே மேலோட்டமான பதிலையே தருவர் காரணம், தமிழக / திராவிட அரசியலுக்கு என்று ஒரு பேச்சு உள்ளது.
ஆனால், முற்றிலும் மாறுபட்ட தெளிவான பதிலை அண்ணாமலையிடமிருந்து கேட்கும் போது பொதுமக்களுக்குப் புதிய அனுபவமாக உள்ளது.
அவர் செய்தியாளர் சந்திப்பைப் பார்த்தாலே, உறுதியாக ஏதாவது ஒரு புதிய விஷயம் தெரிந்து கொள்ள முடியும் என்கிற அளவுக்கு மக்களிடையே வரவேற்பை பெற்றார்.
தைரியமான விமர்சனம்
இதுநாள் வரை பாஜக தலைவர்கள் திமுக அதிமுகவை கடுமையாக விமர்சிக்க மாட்டார்கள். பட்டும் படாமலும் பேசி வந்தார்கள்.
ஆனால், அண்ணாமலைக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்பது போல எந்த நெருக்கடியும் இல்லாததால், அனைவரையும் பொளந்து வருகிறார்.
இப்படியொரு தலைவரைக் கண்டிராத பாஜக, வலது சாரி ஆதரவாளர்களுக்கு வராது வந்த மாமணி போல அண்ணாமலை தெரிந்ததில் வியப்பில்லை.
காரணம், இதுவரை அடிக்காத நபரே இல்லை என்கிற பரிதாப நிலையில் தான் தமிழகப் பாஜக இருந்தது.
இந்நிலையை மாற்றி நம்ம பக்கமும் அடிக்க ஒருத்தன் வந்துட்டான் என்ற உற்சாகக் கொண்டாட்டமே அண்ணாமலைக்குக் கிடைக்கும் தற்போதைய வரவேற்பு.
வடமாநில கட்சி
பாஜக என்றால் வடமாநில கட்சி என்ற எண்ணமே இருந்தது.
அதே போலப் பாஜக தலைவர்கள் பேச்சும் மாநில பிரச்சனைகளை விட தேசிய பிரச்சனைகளையே முன்னிறுத்தியது.
அதோடு பிராமணக் கட்சி என்ற பெயரும், மேல்தட்டு நபர்களுக்கான கட்சி என்ற எண்ணமும் பொதுவான கருத்தாக இருந்தது.
ஆனால், அண்ணாமலை வந்த பிறகு மாநில பிரச்சனைகளோடு தேசிய பிரச்சனைகளையும் எளிய மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் பேசினார்.
தமிழர்களில் ஒருவராகத் தன்னை (பாஜகவை) காட்டிக்கொண்டார். மண்ணின் மைந்தன், அவரின் கருப்பு வண்ணம் என்ற கூடுதல் அனுகூலங்கள் இருந்தன.
தற்போது பாஜக வடமாநில கட்சி என்ற எண்ணம் கிட்டத்தட்ட மறைந்து விட்டது.
திரும்பப் பாஜக வடமாநில கட்சி என்ற எண்ணத்தை மக்களிடையே திணிக்க வடமாநில தொழிலாளர்கள் பிரச்சனையில் முயன்ற போது திமுகக்கு Backfire ஆனது அனைவரும் அறிந்தது.
இம்முக்கியமான தருணத்தை அண்ணாமலை சிறப்பாகக் கையாண்டார்.
மோடி எதிர்ப்பு
லேடியா மோடியா என்று ஜெ போட்டிப்போட்டாலும், மோடியுடன் சுமூகமான உறவுடனே இருந்தார்.
ஆனால், ஜெ இறந்த பிறகு மோடிக்கு எதிரான வெறுப்புணர்வை திமுக முன்னெடுத்தது. அதைத் தனது கூட்டணி கட்சி தலைவர்களுடன் மிகத்திறமையாகக் கையாண்டது.
எனவே, 2019 ல் இந்தியா முழுக்க மோடிக்கு ஆதரவு இருந்த போது தமிழகத்தில் மட்டும் மோடிக்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்பலை இருந்தது.
எந்த அளவுக்கு என்றால், மோடி என்ற பெயரைச் சொன்னாலே வாக்கு கிடைக்காது என்று தேர்தலில் மோடி படங்களைக் கூடத் தவிர்க்கும் அளவுக்கு ஆனது.
ஆனால், மோடி திட்டங்களால் தமிழகம் பெற்ற பயன்கள் ஏராளம்.
மாறிய எண்ணங்கள்
மோடி எதிர்ப்பலை மோசமாக இருந்த நெருக்கடி காலத்தில் பொறுப்பேற்ற அண்ணாமலை, கடந்த இரு வருடங்களில் மிகப்பெரிய அளவில் மோடி எதிர்ப்பலையைக் குறைத்துள்ளார்.
கவனித்தவரை 70% – 80% வரை மோடி எதிர்ப்பு எண்ணங்களைக் குறைத்துள்ளார். இதை மற்ற தலைவர்கள் செய்யத்தவறி விட்டார்கள்.
செய்தியாளர் சந்திப்பு, கட்சி கூட்டங்களில் பேசும் போது மோடி செய்துவரும் வளர்ச்சி பணிகளைத் தொடர்ந்து பேசி மக்களின் எண்ணத்தை மாற்றியுள்ளார்.
இது சாதாரணச் செயல் கிடையாது.
ஜூலை 2023 அண்ணாமலை மாநிலத்தலைவர் பதவியேற்று இரு வருடங்கள் முடிகிறது ஆனால், அவர் செய்துள்ள மாற்றங்கள் இதுவரை எவரும் செய்யாதது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் தொகுதி உடன்பாடு சரி வரவில்லை என்பதாலும், தங்கள் பலம் என்னவென்று தெரிந்து கொள்வதற்காகவும் தனித்துப் பாஜக போட்டியிட்டது.
பாஜக இழப்பதற்கு எதுவுமில்லை என்பது முக்கியக்காரணம்.
மிகக்கடைசி நேரத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதால், பாஜகவால் இதற்குத் தயாராக முடியாமல் தமிழகம் முழுக்க வேட்பாளர்களை நிறுத்த முடியவில்லை.
நிறுத்திய வேட்பாளர்களை வைத்து எதிர்பார்க்காத அளவுக்கு வாக்குகளைப் பெற்றது, இதன் மூலம் பாஜக வாக்கு வங்கி எவ்வளவு என்று தெரியவில்லையென்றாலும், ஒரு கணிப்புக்கு வர முடிந்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரிந்து போட்டியிட்டாலும் அதிமுக பாஜக கூட்டணி தொடர்ந்தது.
கூட்டணி பிரச்சனைகள்
பாஜகவால் சிறுபான்மையினர் வாக்குகளை இழக்கிறோம் எனவே, பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டும் என்ற பேச்சு அதிமுகவில் எழுந்தது.
2021 சட்டமன்ற தேர்தலில் தோற்றத்துக்குப் பாஜக தான் காரணம் எனும்படியான அதிமுக பேச்சுகள், விவாதங்கள் தொடர்ந்தன.
இதன் பிறகு பாஜக இளைய தலைமுறையினர் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று கூற, இணையத்தில் சண்டையானது.
இதையொட்டி இரு தரப்பிலும் வாதங்கள், சண்டைகள் தொடர்ந்தன.
இந்நிலையில் பாஜக மூன்றாம் அணியாகப் போட்டியிட வேண்டும் என்று அண்ணாமலை கட்சி கூட்டத்தில் பேசியதாகச் செய்தி வந்ததையடுத்து மேலும் விவாதங்கள் சூடு பறந்தன.
இரு தரப்பிலும் பதிலடிகள் தற்போது வரை கொடுக்கப்பட்டு வருகிறது.
அண்ணாமலை கணக்கு சரியா?
அண்ணாமலை என்ன நினைக்கிறார் என்றால்,
அதிமுக கூட்டணியே தொடர்ந்தால் பாஜக என்ற கட்சி வளராது. காரணம், பாராளுமன்றத்தேர்தலில் 4 / 5 இடங்களை மட்டுமே அதிமுக கொடுப்பார்கள்.
அதோடு அந்த 4 / 5 இடங்களுக்கும் அதிமுகவினர் களத்தில் ஆதரவு கொடுக்க மாட்டார்கள்.
அதிமுக தோற்றால், பாஜகவால் தோற்றது என்று திரும்ப அதையே பேசுவார்கள்.
இவ்வாறு தொடரும்போது பாஜக 4 / 5 இடங்களுக்கான கட்சியாக ஒட்டிக்கொண்டு இருக்க முடியுமே தவிர ஆட்சியைப் பிடிக்கக்கூடிய கட்சியாக மாறாது.
காங்கிரஸ் போன்ற நிலையிலிருக்கத் தமிழகப் பாஜக விரும்பவில்லை, இதனால் எந்தப்பயனும் இல்லை என்று அண்ணாமலை கருதுகிறார்.
இது உண்மையா?
உண்மை என்றே நானும் கருதுகிறேன்.
ஏனென்றால், பாஜக தனித்து 2024 பாராளுமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட்டால் இடங்களைப் பெற முடியாமல் போகலாம் ஆனால், பாஜக என்ற கட்சியின் பலம் என்னவென்று தெரியும்.
எவ்வளவு சதவீத மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்று தெரியும். எனவே, எந்த நிலையில் இருக்கிறோம் என்பதைப் பாஜக தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
இதன் மூலம் அதிமுக கூறி வருவதைப் பொய் என்று நிரூபிக்க வாய்ப்புள்ளது.
ஒருவேளை எதிர்பார்த்த வாக்குச் சதவீதத்தைப் பெறவில்லை என்றால், எங்கெங்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தி விடும்.
அதோடு அதிமுகவுக்கும் தாங்கள் எந்த நிலையில் உள்ளோம் என்று புரியும்.
2023 ஏப்ரல் 14
2023 ஏப்ரல் 14 திமுக ஊழல்களை அறிவிக்கப்போவதாக அண்ணாமலை கூறுகிறார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பொறுப்பாளராக இருப்பதால், தேர்தல் முடிந்த பிறகு தமிழகப் பாஜக பாத யாத்திரையை அண்ணாமலை துவங்குகிறார்.
எனவே, பாத யாத்திரை மிகப்பெரிய அளவில் பாஜக ஆதரவை அதிகரிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
எனவே, இவை நிச்சயம் பாராளுமன்ற தேர்தலில் மாற்றத்தைக் கொடுக்கும்.
எடுத்துக்காட்டுக்கு, பாஜக தற்போதைய நிலையில் தனித்துப் போட்டியிட்டால் 0 இடங்களையே பெற முடியும் ஆனால், ஏப்ரல் 14 க்கு பிறகு நடக்கபோவதையும் கணக்கில் கொண்டால் சில இடங்களைப் பெறலாம்.
இக்கணிப்புகள் எந்த அளவுக்கு அண்ணாமலை பாத யாத்திரை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்து மாறும்.
காரணம், ராகுல் காந்தி சென்றது போன்ற பாத யாத்திரையல்லாமல் மக்களுடன் இணைந்து, கிராமம் கிராமமாகத் தீவிர கலந்துரையாடலாக இருக்கும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
எனவே, இதைக்குறைத்து மதிப்பிடவில்லை.
காரணம், அண்ணாமலைக்கு ஏற்கனவே மக்களிடையே நன்கு ஆதரவுள்ளது. அவருடைய பேச்சுகள் சாதாரண மக்களைக் கவர்ந்துள்ளது.
திராவிடக் காட்சிகள் போல அல்லாமல், பணம் கொடுக்காமலே மக்கள் கூட்டம் வருகிறது.
மத்திய அரசின் திட்டங்கள்
வருகிற கூட்டமெல்லாம் வாக்களிக்கும் என்ற உறுதி இல்லையென்றாலும், மக்கள் பேசுவதைக் கேட்கும் போது மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று உணர முடிகிறது.
பாதயாத்திரையில் மோடியின் திட்டங்களை மட்டும் கூறினாலே மிகப்பெரிய வரவேற்பை பெற முடியும்.
மத்திய அரசின் திட்டங்களுக்குத் திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டுள்ளதை மக்களிடையே கொண்டு சேர்த்தாலே மாற்றத்தை உணரலாம்.
அண்ணாமலைக்குப் பொய் கூற வேண்டிய அவசியமில்லை. காரணம், மோடி கொண்டு வந்த திட்டங்களின் பயன்களைக் கூறினாலே போதுமானது.
மத்திய அரசின் திட்டங்களால் அதிகப் பயன் பெற்ற மாநிலங்களில் முக்கிய இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
2026 சட்டமன்றத்தேர்தல்
இந்நிலை தொடர்ந்தால், பாஜக குறிப்பிடத் தக்க இடங்களைப் பெற முடியும்.
அதிமுகவுடன் கூட்டணி இல்லாததால், திமுகவே மீண்டும் 2026 ல் ஆட்சியைப் பிடிக்கும், பாஜக முக்கிய இடத்தில் இருக்கும்.
அதாவது அண்ணாமலை கூறிய வழியில் சென்றால், 2031 ல் பாஜக ஆட்சியைப் பிடிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளது.
ஆனால், திரும்ப அதிமுக கூட்டணி என்று தொடர்ந்தால், 2036 ம் ஆண்டுக் கூடப் பாஜக ஆட்சியைப் பிடிக்க முடியாது.
அண்ணாமலையின் விருப்பம் மோடி ஆட்சியிலிருக்கும் போதே பாஜக சார்பாக 2026 ல் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது.
வாய்ப்பு எப்படியுள்ளது?
2026 ல் சாத்தியமுள்ளதாகத் தற்போதைய நிலைக்கு வாய்ப்பில்லை ஆனால், 2031 ல் வாய்ப்புள்ளது.
மேற்கூறியவை அனைத்தும் தமிழகப் பாஜக 2023 / 24 / 25 ல் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பொறுத்து தலைவிதி தீர்மானிக்கப்படும்.
அண்ணாமலை Aggressive ஆக இருப்பதால், எதையும் நடக்காது என்று உறுதியாகக் கூற முடியவில்லை.
செய்திகளில் வருவது போல ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால், 2026 கூடப் பாஜகக்கு சாத்தியப்பட வாய்ப்புகள் உள்ளன.
எல்லாமே ஒரு அலை தான். அந்த அலை வந்தால், பாஜக வெற்றி பெறும். அது நடக்கவில்லையென்றால் பெரிய மாற்றம் இருக்காது.
கூட்டணி அறிவிப்பு
அண்ணாமலை கூட்டணி இல்லையென்று உறுதியாக முடிவு செய்து விட்டால், தலைமையிடம் பேசி அறிவித்து அதை நோக்கி நகர்வது நல்லது.
காரணம், தேர்தல் நேரத்தில் அறிவிப்பது பல்வேறு குழப்பங்களைக் கொண்டு வரும்.
குறைந்த பட்சம் 6 மாதங்களுக்கு முன்பே கூறி விட்டால், கட்சி தொண்டர்களின் மனநிலையும் அதற்குத் தயாராகி விடும். அதை நோக்கி அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும், தேர்தல் பணிகளைத் திட்டமிடுவது எளிதாக இருக்கும்.
மக்களும் அதற்கான மனநிலைக்குப் பழகி விடுவார்கள்.
மிகப்பெரிய தேசியக்கட்சிக்கு எதை எப்போது செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாதது எனக்குத் தெரியப்போவதில்லை.
வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்ட, கிறித்துவர்கள் அதிகமுள்ள வடகிழக்கு மாநிலங்களிலேயே வெற்றி பெற்றுள்ளார்கள் என்றால், அவர்களுக்குத் தெரியாதா? எதைச் செய்ய வேண்டும் செய்யக் கூடாது என்று.
எனவே, இதை ஒரு சாதாரண வலது சாரி ஆதரவாளனாகக் கூறுகிறன்.
தேர்தல் வாக்குறுதிகள்
அதிமுகவுடன் கூட்டணி என்றால் தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலும் அதிமுக தலைமையால் முடிவு செய்யப்படுவது.
எனவே, பாஜக தனித்தன்மையுடன் எதையும் கூற முடியாது.
ஆனால், பாஜக தலைமையில் கூட்டணி என்றால், தேர்தல் வாக்குறுதிகளை முடிவு செய்வது பாஜக தலைமை. எனவே, வழக்கமான திராவிட வாக்குறுதிகளாக இல்லாமல் மாற்றமாக கொடுக்கலாம்.
பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்து அறநிலையத்துறையை நீக்கப்போவதாக அண்ணாமலை கூறினார். இதை அதிமுக கூட்டணியில் அறிவிப்பது எளிதல்ல.
மத்தியில் பாஜக அரசு இருப்பதால், மாநில வளர்ச்சிக்கான திட்டங்களைத் தேர்தல் வாக்குறுதிகளாக தமிழக பாஜகவால் அறிவிக்க முடியும்.
தேசிய கல்வித்திட்டத்தை, ஏழை மாணவர்களுக்கு பலன் தரும் நவோதயா பள்ளிகளைத் தமிழகத்துக்கு கொண்டு வருவதாக கூறலாம்.
இது போன்ற அனுகூலங்கள் பாஜக தலைமை கூட்டணிக்கு உள்ளது.
விலகும் பாஜகவினர்
அண்ணாமலையின் தலைமையினால் பல வருடங்களாக தேசிய சித்தாந்தத்தில் உள்ளவர்களே திராவிட கட்சிகளுக்கு செல்லும்படியாகி விட்டது என்று வெளியேறுபவர்கள் கூறுகிறார்கள்.
தேசிய சித்தாந்தத்தில் உள்ளவர்கள் இது தொடர்பான கட்சிகளுக்கு சென்றால், யாரும் சந்தேகிக்க மாட்டார்கள்.
ஆனால், திராவிட கட்சிகளுக்கு மாறினால், அண்ணாமலையை குறை கூற இவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை.
காரணம், திராவிட கட்சிகள் இந்து மதத்தை கேவலமாக பேசுகிறார்கள், பிரிவினைவாதம் பேசுகிறார்கள், நாட்டுப்பற்றை கிண்டலடிக்கிறார்கள்.
நேசித்தவர்களால் முடியாது
இவ்வளவு காலம் தேசிய சித்தாந்தத்தில் இருந்தவர்களால் எவ்வாறு எதிராக செயல்பட பேச முடியும்? அவ்வாறு பேசுபவர்களுடன் கைக்கோர்க்க முடியும்?
அப்படி செயல்பட்டால் அவர்கள் தேசிய / RSS சித்தாந்தத்துக்காக உண்மையாகப் பாடுபட்டவர்கள் என்று எப்படிக் கூற முடியும்?
அண்ணாமலை பிடிக்கலைன்னா கட்சியை விட்டு விலகி இருக்கணும் அல்லது தேசியம் தொடர்பான கட்சியில் / அமைப்பில் இணைந்து இருக்கனும்.
அதைச் செய்யாமல் திராவிட கட்சியில் இணைந்துட்டு நியாயம் பேசுறதெல்லாம் வேற லெவல் அரசியல்.
இவ்வளவு வருடம் பாஜகவில் இருந்தவர்களே விலகுகிறார்கள் என்று கூறுவதெல்லாம் அரசியல் மட்டுமே! தேசிய சித்தாந்தத்தை நேசித்த ஒருவரால் அதற்கு நேரெதிரான கொள்கைகளைக் கொண்ட கட்சிக்குச் செல்ல முடியாது.
சென்றால், இவ்வளவு நாள் அவர்கள் சித்தாந்தத்துக்கு உண்மையாக இல்லை, எதோ ஒரு எதிர்பார்ப்புக்காக இருந்துள்ளார்கள் என்றே அர்த்தம்.
எனவே, இவர்களும் வழக்கமான கட்சி தாவுபவர்களே! “இவர்களே செல்கிறார்கள்” என்று கூறும் அளவுக்குத் தகுதியானவர்கள் கிடையாது.
பாஜக உட்கட்சி பூசல்
அண்ணாமலைக்கு எதிர்ப்பு வரக்காரணம், தற்போது வந்தவன் நம்மைக் கேள்வி கேட்பதா? அறிவுரை சொல்வதா? வழி நடத்துவதா? என்ற எண்ணமே.
இத்தனை காலமாகக் கட்சிக்காக உழைத்தவர்களை மதிப்பதில்லை என்ற விமர்சனம்.
கட்சியில் இருப்பதால் மட்டுமே ஒருவர் தகுதியுடையவராகி விடுவாரா? அவரால் கட்சிக்கு இதுவரை என்ன பலன் கிடைத்தது?
கட்சியால் பலன் பெற்றார்களே தவிர, இவர்களால் கட்சி பலன் பெறவில்லை.
- இவர்கள் கட்சிக்காக உழைத்தார்கள் என்றால், இவ்வளவு காலமாகக் கட்சி வளர்ச்சிக்கு என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?
- பூத் கமிட்டி கூட அமைக்கவில்லையே!
- மோடி எதிர்ப்பலையின் போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
- எதனால் பாராளுமன்றத்தேர்தல், சட்டமன்றத்தேர்தலில் பாஜக கூடுதல் இடங்களை கேட்டுப் பெற முடியவில்லை?
- இதுவரை எத்தனை போராட்டங்களை நடத்தி ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்கள்?
- எதனால், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கட்சியின் வளர்ச்சி இருந்தது?
- சமூகத்தளங்களில் எதனால் பலம் பெற முடியவில்லை?
- வடமாநில கட்சி என்ற விமர்சனம் இருந்த போது அதை மாற்ற என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
- எதனால் மாநில முழுவதும் கூட்டங்கள் நடத்தி மக்களைத் திரட்ட முடியவில்லை?
செயலில் காட்டுபவருக்கே மதிப்பு
இவற்றை 30 வருடங்கள் செய்யாத நிலையில், இவ்வளவையும் இரு வருடங்களுக்கும் குறைவான நாளில் அண்ணாமலை செய்து இருக்கிறார்.
இவரை விமர்சிப்பதில் கட்சியினருக்கு ஏதாவது தர்மம் உள்ளதா?
அண்ணாமலையை விமர்சிக்கும் முன் கட்சியின் வளர்ச்சிக்காகத் தான் என்ன செய்தோம் என்பதை யோசித்தாலே விமர்சிப்பது தவறு என்று புரியும்.
தன் செயல் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை உணராதவர் எப்படிக் கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபடுபவராக இருக்க முடியும்?
அண்ணாமலைக்குச் சான்றிதழ் தருவது என் நோக்கமல்ல. எனக்கும் அண்ணாமலையைச் செய்திகளின் மூலம் மட்டுமே தெரியும். அவர் எப்படிப்பட்டவர் என்று தனிப்பட்ட முறையில் எனக்குத்தெரியாது.
ஆனால், அவர் தானே மாற்றத்தைக் கொண்டு வருகிறார். செயலில் காட்டுபவரைத்தானே உலகம் போற்றும்.
நிறுவனமும் கட்சியும்
அலுவலகத்தில் ஒருவர் பல காலமாக பணி புரிந்து இருக்கலாம் ஆனால், புதிதாக வந்தவர் திறமையாக பணி புரிந்தால் நிறுவனம் அவருக்கே முக்கியத்துவம் கொடுக்கும். Simple Logic.
நான் பல காலமாக இந்நிறுவனத்தில் ஊழியராக உள்ளேன் எனவே, எனக்குதான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விமர்சித்து நிறுவனத்துக்கு எதிராக செயல்பட முடியாது. அதை நிறுவனத்தின் மேலிடமும் அனுமதிக்காது.
ஒரு நிறுவனத்தில் பணி புரிபவர் நிறுவனத்தில் உள்ளவர்களைப் பற்றிச் சமூகத்தளங்களில் விமர்சித்து வந்தால், அவர் பணி நீக்கம் செய்யப்படுவார் காரணம், இது நிறுவன விதிமுறைகளுக்கு எதிரானது.
சக ஊழியருடன் பிரச்னையென்றால், மேலதிகாரியிடம் கூற வேண்டும் அல்லது தலைமைக்கு எடுத்துச் செல்ல வேண்டும், சமூகத்தளத்தில் விமர்சிக்கக் கூடாது.
இது அரசியல் கட்சிக்கும் பொருந்தும்.
தலைமையே இறுதி முடிவு
சின்னப் பையன் தற்போது வந்தவன் பெயர் வாங்குகிறானே என்ற பொறாமை பலருக்கு உள்ளது. எனவே, குறைகளைத் தேடுகிறார்கள்.
தற்போது மத்திய அமைச்சர் பதவியைப் பெற முடியாவிட்டால், இனி எப்போதும் பெற முடியாது என்ற அவசரத்தில் பலர்.
இவர்களே தனித்துப் போட்டியிட எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.
தமிழகப் பாஜக, திராவிட எதிர்ப்பு என்றாலும், பாஜக தலைவர்கள் பலர் மறைமுகமாக இவர்களுடன் தொடர்பிலேயே உள்ளனர்.
இவர்கள் கட்சியின் வளர்ச்சியைத்தான் பார்க்க வேண்டுமே தவிரத் தனிப்பட்ட நபரின் வளர்ச்சியை அல்ல. பாஜக அப்படியான கட்சியும் அல்ல.
தனித்துபோட்டியிடுவதால் உடனடி பலன் கிடைக்காது என்றாலும், நிச்சயம் நீண்ட காலப்பயன் என்ற அளவில் வரவேற்பு இருக்கும்.
கூட்டி கழிச்சுப் பாருங்க அண்ணாமலை கணக்கு சரியாகவும் இருக்கலாம்.
முன்னரே கூறியபடி, பாஜக தலைமைக்குத் தெரியும், எதை எப்போது எப்படி செய்ய வேண்டும் என்று. எனவே, பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
சூப்பர். தனித்துப்போட்டியிட்டால் 2026 அல பாஜக ஆட்சி என்பது கூட மிக அதிகம் என தோன்றுகிறது. ரங்கராஜ் பாண்டே 2036 இல பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு அதிகம் என்று கூறுகிறார்.
பாஜக கட்சி விதியின்படி ஒருவர் 2 முறை மட்டுமே தலைவராக இருக்க முடியும். ஒரு முறை தலைமை காலம் 3 வருடம் ஆக மொத்தம் ஆறு வருடம்.
அதிகபட்சம் அண்ணாமலை 2027 ஜூலை வரை மட்டுமே கட்சி தலைவராக இருக்க முடியும். அதன் பிறகு அவர் தொடர கட்சிவிதிப்படி வாய்ப்பே இல்லை. அவர் தலைவராக இல்லாத போது கட்சி எப்படி 2031 இல் ஆட்சியை பிடிக்கும்.
இது எனக்கு ஆரம்பத்தில் இருந்து வரும் சந்தேகம். தமிழக முட்டாள் மக்கள் பாஜகவை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
இங்கொன்று அங்கொன்றாக வெற்றி பெறுவார்களே தவிர ஆட்சி பிடிக்கும் அளவிற்கு எல்லாம் இங்கு தமிழக முட்டாள் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். 35% ஓட்டு வாங்கினால் மட்டுமே ஆட்சியை பிடிக்க முடியும்.
இலவசம். இடதுசாரி சிந்தனை. நிறைந்து உள்ள தமிழகத்தில் 6 வருடம் மட்டுமே கட்சி தலைவராக இருக்கப்போகும் அண்ணாமலையால் எப்படி மாற்றம் கொண்டு வரமுடியும். அதிமுக கிட்டதட்ட அழிந்துவிட்டது.
திமுகவிற்கு தற்போது போட்டியே இல்லை. அவர்கள் நிச்சயம் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பார்கள். 2030 இல தான் திமுகவை வீழ்த்த முடியுமா என சொல்ல முடியும்.
பாஜகவை தமிழக மக்கள் பெறுவாரியாக ஆதரித்து ஆட்சியில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு தமிழக மக்களிடத்தில் இல்லை.
@வசந்த்
“அவர் தலைவராக இல்லாத போது கட்சி எப்படி 2031 இல் ஆட்சியை பிடிக்கும்.”
அவருக்கு கட்சி மிக முக்கிய பொறுப்பை கொடுக்கும்.
பிரச்னையென்னவென்றால், அண்ணாமலை ஒரு Benchmark செட் செய்து விட்டார். இதை அடுத்து வரும் தலைவர்கள் தொடுவது எளிதல்ல.
“இலவசம். இடதுசாரி சிந்தனை. நிறைந்து உள்ள தமிழகத்தில் 6 வருடம் மட்டுமே கட்சி தலைவராக இருக்கப்போகும் அண்ணாமலையால் எப்படி மாற்றம் கொண்டு வரமுடியும். ”
தற்போதே எதையும் முடிவு செய்ய முடியாது.
அண்ணாமலை வரும் முன் இதை பற்றி நினைத்து இருப்போமா! தற்போது இந்த அளவுக்கு நினைக்கும் படியான சூழ்நிலை மாறியதுள்ளது என்றால், அதே போல பின்னாளிலும் மாறுவதற்கான வாய்ப்புள்ளது.
“திமுகவிற்கு தற்போது போட்டியே இல்லை. அவர்கள் நிச்சயம் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பார்கள். 2030 இல தான் திமுகவை வீழ்த்த முடியுமா என சொல்ல முடியும்.”
எதையும் தற்போதே முடிவு செய்ய முடியாது.
இரண்டு வருடங்களிலேயே மக்களிடையே வெறுப்பை சம்பாதித்து விட்டார்கள். இன்னும் மூன்று வருடங்கள் உள்ளது.
“பாஜகவை தமிழக மக்கள் பெறுவாரியாக ஆதரித்து ஆட்சியில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு தமிழக மக்களிடத்தில் இல்லை.”
நம்பிக்கைதானே வாழ்க்கை. பார்ப்போம். 🙂