பயணக் குறிப்புகள் – 2 [October – Nov 2014]

13
பயணக் குறிப்புகள் – 2 [October – Nov 2014]

ந்த விடுமுறையில் எதிர்பாரதவிதமாக கூடுதல் நாள் இருக்க வேண்டி வந்ததால், வீட்டிலிருந்தே பணி புரிய வேண்டிய நிலை.

இது வரை நான் வீட்டில் இருந்து பணி புரிந்ததில்லை அதோடு இது போல பணி புரிய ஒன்றிரண்டு நாட்கள் சமாளிக்கலாம் ஆனால், நிச்சயம் இரண்டரை வாரம் அல்ல.

ஏனென்றால் என் பணி முறை அப்படி. நான் அல்லது வேறொருவர் அலுவலகத்தில் எங்கள் துறை சார்ந்து இருந்தே ஆக வேண்டும்.

ஏர்டெல்

நல்ல வேளையாக நான் செய்த எதோ புண்ணியத்தில் எனக்கு எந்த நெருக்கடியும் வரவில்லை. Image Credit

நிஜமாகவே எனக்கு மிகப் பெரிய ஆச்சர்யம் இரண்டரை வாரம் நான் வீட்டில் இருந்து சமாளித்தது.

சிங்கப்பூர் / சென்னை அலுவலக நண்பர்கள் இதற்கு உதவினாலும் மிகப்பெரிய உதவி ஏர்டெல் தான் 🙂 .

மொபைல் ஹாட்ஸ்பாட் பயன்படுத்தித் தான் இணையம் மூலம் பணி புரிந்தேன். 17 நாட்களும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் 3G மிகச் சிறப்பாக வேலை செய்தது.

எனக்கு அலுவலகத்தில் பணி புரிவது போலவே வேகம் இருந்தது. தரவிறக்கம் மட்டும் வேகம் குறைவு ஆனால், அது எனக்கு அதிகம் தேவையில்லை.

எப்போதுமே மடிக்கணியை எடுத்து வர மாட்டேன் ஆனால், இந்த முறை என் அண்ணன் சில நிழல் படங்களைப் பார்க்க விரும்பி, கொண்டு வந்ததால் தப்பித்தேன்.

இல்லை என்றால் கடும் நெருக்கடி ஆகி இருக்கும். எனக்கென்னவோ இவையெல்லாம் நடக்கும் என்று தான் நான் மடிக்கணினி கொண்டு வரும் சூழ்நிலை ஏற்பட்டது என்று கருதுகிறேன்.

முன்னரே கூறி இருக்கிறேன், எப்போதெல்லாம் என்னால் இனி சமாளிக்க முடியாது என்ற நிலை வருகிறதோ அன்று எனக்கு எங்கிருந்தாவது உதவி கிடைக்கும் என்று.

இது மீண்டும் ஒருமுறை நிரூபணமானது. இதெல்லாம் நிச்சயம் சாதாரண விசயமல்ல. கர்மா கவனிக்கிறது 🙂 .

Read: கர்ம வினையும் இந்து மதமும்

தொலைக்காட்சி

ந்த விடுமுறையில் தான் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் என்னால் தொலைக்காட்சி பார்க்க முடிந்தது. 25 வருடங்களுக்குப் பிறகு இது நடந்து இருக்கிறது.

சிறுவனாக இருந்த போது நாங்கள் கிராமத்தில் தோட்டத்தில் இருந்தோம்.

வீடு கிராமத்தில் இருந்து தள்ளி இருந்ததால், கேபிள் இணைப்பு தெளிவாக இருக்காது. ஐந்து வருடம் முன்பு கோபி நகருக்கே வந்தோம்.

ஆனால், அங்கும் கேபிள் தெளிவாக இல்லை. என்னென்னமோ செய்தும் ஒன்றும் சரிப்பட்டுவரவில்லை.

பின் புது வீட்டிற்கு வந்து அங்கும் சரி இல்லை என்றதும் நிஜமாகவே வெறுத்து விட்டேன்.

பின்னர் பொறுமை இழந்து ஏர்டெல் DTH கடந்த விடுமுறையில் போட்டோம். இதன் பிறகு தான் பிரச்சனை சரியானது. தற்போது எந்தப் பிரச்சனையும் இல்லை, மிக மிகத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

நான் என் அம்மாகிட்ட அடிக்கடி நல்லா இருக்கு என்று சொல்லிட்டு இருந்ததால், “தம்பி! கண்ணு வைக்காதே! இதுவும் போய்டப் போகுது” என்றார்கள் 🙂 .

நான் அதிகம் பார்த்த சேனல் எது என்று வரிசைப்படுத்துகிறேன்

1. சன் மியூசிக். இதில் 30 நிமிட இடைவிடாத பாடல்கள், பேக் டு பேக், ப்ரேக் ஃப்ரீ போன்றவை அதிகம் பார்த்தேன்.

ஆனால், இதில் “வேலை இல்லாத பட்டதாரி” போன்ற சில படங்களின் பாடல்களே அடிக்கடி வந்தன. எவராவது பேசினால் சேனல் மாற்றி விட்டேன்.

2. டிஸ்கவரி தமிழ். இதற்கு அதி தீவிர ரசிகனாகிட்டேன். ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. இதில் Man Vs Wild ல Bear Grylls பண்ணுற அட்டகாசம் தான் தாங்க முடியல.

காட்டுல ஒரு விலங்கும் நடமாட முடியாது போல இருக்கு. இவரைப் போல சிலர் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்களைத் தடை செய்தால் தான் காட்டில் மிருகங்கள் பயம் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும் போல 🙂 .

How do they do it, What happened next, Destroyed in seconds, Food factory நிகழ்ச்சிகள் ரொம்ப அருமை.

இதில் சில நிகழ்சிகளில் பின்னணி இசை ரொம்ப அதிகமாக இருப்பதால், பேசுவது சரியாகப் புரியவில்லை. Top 20 என்று சில அதிரடிக் காட்சிகளை ஒளிபரப்புகிறார்கள், செம.

Dual Survival இரவு 9 மணிக்கு கடந்த வாரத்தில் இருந்து ஒளிபரப்புகிறார்கள் ஆனால், என்னால் பார்க்க முடியவில்லை.

இதற்கு அதிகளவில் விளம்பரம் செய்து கொண்டு இருந்தார்கள். இணையத்தில் இந்தச் சேனல் பார்க்க எதுவும் வழியுண்டா?

3. இசையருவி.

4. ஜெயா மூவீஸ்

5. முரசு. இதில் அதிக விளம்பரங்கள் இல்லை, டெலி ஷாப்பிங் சில நேரம் போடுகிறார்கள். இதில் முழுக்க பழைய பாடல்கள், படங்கள் தான் போடுகிறார்கள்.

பெரும்பாலும் மொக்கைப் பாடல்கள் தான் வருகிறது. இதில் மக்கள் திலகம் ஒரே ஆட்டமும் கொண்டாட்டமுமாக இருக்கிறார்.

நடிகர் திலகம் அழுது கொண்டே இருக்கிறார்.

எம்ஜிஆர், நடிகைகளை அங்கே திருப்பி, இங்கே திருப்பி, சாய்த்து, இழுத்து யப்பா.. எதோ ஒரு பாடலில் சரோஜா தேவியை ஒரு வழி ஆக்கிட்டார்.

அனேகமா பாடல் காட்சி முடிந்து சரோஜாதேவி “கோடரி தைலம்” போட்டு இருப்பாங்க என்று நினைக்கிறேன் 😀 .

6. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் – இதில் ISL போட்டிகள் சில பார்த்தேன், விறுவிறுப்பாக இருந்தது. அடுத்த ஆண்டு இதற்கு இன்னும் கூடுதல் வரவேற்பு இருக்கும் என்று நினைக்கிறேன்.

சென்னைக்கு கிரிக்கெட் / ஃபுட்பால் எதாக இருந்தாலும் ஒரு ராசி இருக்கிறது போல.

இலங்கையுடனான ஒருநாள் போட்டிகள் பார்த்தேன். ரோஹித் சர்மா எப்படி அடித்தாலும் பறக்கிறது. இறுதியில் சோர்வாகி சுற்றினாலும் அவர் எங்கோ அடிக்க இது எங்கேயோ சென்று 4 / 6 என்று போகிறது.

இனி போகிற போக்கைப் பார்த்தால் ஒரே ஆளே 300 எடுக்க ஆரம்பித்து விடுவார்கள் போல இருக்கிறது.

சன் தொலைக்காட்சி என் அம்மா பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

அதில் ஒரு சீரியலில் “மச்சான்.. மச்சாசாசான்…..னு” ஒரு பொண்ணு பேசுறதைப் பார்த்தாலே செம கடுப்பாகுது. ஒரு கருமாந்திரமான கதை.

அவ்வப்போது இரவில் Star Movies Action, Movies Now, HBO, WB பார்த்தேன். விளம்பரங்கள் படம் பார்க்கும் ஆர்வத்தை குறைக்கிறது.

அக்னி ஸ்டீல்

நீங்கள் விளம்பரங்களில் பார்க்கும் “அக்னி ஸ்டீல்” நிறுவனத்தின் உரிமையாளர்களில் எங்கள் ஊரைச் சார்ந்த ஒருவரும் இருக்கிறார், என் அப்பாவிற்கு மிகவும் பழக்கம்.

இரும்பை உருக்கி எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்று நீண்ட வருடங்களாக எனக்கு ஆசை இருந்தது.

தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்ததுண்டு.

இரும்பு உருகி தண்ணீர் போல ஓடுவதைப் பார்க்கும் போது திகிலாக இருக்கும்.

எங்கள் குடும்பத்திற்கும் இவருக்கும் நெருக்கமான நபர் ஒருவர், தான் தொழிற்சாலை அழைத்துச் செல்வதாகக் கூறினார்.

இது போல பல முறை திட்டமிட்டும் எதோ சில காரணங்களால் என்னால் செல்ல முடியவில்லை.

இந்தமுறை சென்று விட வேண்டும் என்று உறுதியாக இருந்தேன் ஆனால், கிளம்பும் நாளுக்கு முந்தைய நாள் “மெட்ராஸ் ஐ” வந்ததால் இந்த முறையும் செல்ல முடியவில்லை. எனக்கு பெருத்த ஏமாற்றம்.

இவற்றை விரிவாகக் கேட்டு Blog எழுதணும் என்று ஆர்வமாக இருந்தேன்.

அக்னி ஸ்டீல் உரிமையாளரும் உடன் வருவதாகக் கூறி இருந்தார் அதனால் இவருடன் சென்றால் கூடுதலாகப் பார்க்கலாம் என்பதால், பல திட்டங்கள் வைத்து இருந்தேன் ஆனால், அனைத்தையும் “மெட்ராஸ் ஐ” சொதப்பி விட்டது.

அடுத்த முறை தான் இங்கே செல்ல முடியும் போல.

தாமதமானாலும் நிச்சயம் அங்கே சென்று எப்படி செய்கிறார்கள் என்று டிஸ்கவரி சேனல் “How do they do it” மாதிரி எழுதி விட வேண்டும் 🙂 .

முதியோர் உதவித்தொகை

டந்த வாரம் தினமலரில் வந்த ஒரு செய்தியை நீங்கள் கவனித்து இருந்து இருக்கலாம். முதியோர் உதவித்தொகை பெறுவதில் அலையவிட்டு கமிசன் அடிக்கிறார்கள் என்று ஒரு பாட்டி “என்னை பிச்சைக்காரி ஆக்கி விட்டீர்களே!” என்று திட்டியது பற்றி வந்து இருந்தது.

இதன் பிறகு அங்கு இருந்த தபால்காரர்கள் இருவரை வேறு இடத்திற்கு மாற்றல் செய்ததாகவும் வந்தது. இதெல்லாம் ஒரு கண்துடைப்பு / எக்காலத்திலும் இது சரியாகாது.

தமிழகம் முழுக்க பல ஆண்டுகளாக இது தான் நடைபெற்று வருகிறது. முதியோர் உதவித் தொகை மட்டுமல்ல 100 நாட்கள் வேலை வாய்ப்புத் திட்டத்திலும் இதே போலத் தான்.

எங்கள் ஊர்ப் பகுதியில் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் இதே தான் நடந்து கொண்டு இருக்கிறது.

தற்போது அனைவருக்கும் வங்கிக் கணக்கு மோடி திட்டம் இந்த ஊழலை தடுக்க / குறைக்க உதவும் என்று நினைக்கிறேன்.

கை மாறிச் செல்வதால் தான் இறந்தவர்களுக்குக் கூட பணம் கொடுத்ததாக ஆட்டையைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

உதவித்தொகை / சம்பளத்தை வங்கியிலேயே நேரடியாக இருப்பு வைத்தால், இதை நிச்சயம் குறைக்க முடியும்.

இது மட்டுமல்ல அரசு அலுவலகங்களில் நேரடியாக பணம் வாங்குவதை / கொடுப்பதையே தடை செய்ய வேண்டும்.

அனைத்தையும் வங்கிப் பரிவர்த்தனை மூலமாக அரசு செய்தால் தான் இது போல பிடுங்கித் திங்கும் பிச்சைக்காரர்கள் குறைவார்கள்.

வயதானவர்களிடம் கூட பிடுங்கி தின்பவர்கள் மிக மிகக் கேவலமானவர்கள்.

இந்தியன் படத்தில் மனோரமா தூற்றுவாரே அது தான் இதைப் படித்ததும் நினைவிற்கு வந்தது. இவனு/ளுகளுக்கெல்லாம் நல்ல சாவே வராது.

நானோ சிம்

ன்னுடைய மொபைல் எண்ணின் வீட்டு முகவரியை மாற்ற வேண்டும் என்று முன்பே முடிவு செய்து இருந்தேன்.

கோபியில் உள்ள ஒரு முகவரிடம் கேட்டால் “நீங்கள் முகவரியை மாற்றவே முடியாது.

முதலில் எந்த முகவரியை வைத்து இருந்தீர்களோ அதே தான் இருக்கும்!!” என்றார்.

“வீடு மாறினால் எப்படி மாற்றுவது?” என்று கேட்டால், அதெல்லாம் மாற்ற முடியாது என்றார்.

இது ஆவறதுக்கு இல்லை என்று ஈரோடு “பிரப்” சாலையில் உள்ள ஏர்டெல் அலுவலகம் சென்றேன்.

அங்கே இரண்டு பொண்ணுக மற்றும் இன்னும் இரு ஆண்கள் இருந்தார்கள். சந்தைக்கடை மாதிரி இருந்தது. பொறுப்பான பதில் இல்லை, ஒரு ஒழுங்கும் அங்கு இல்லை.

அங்கே இருந்த பெண்ணிடம் முகவரி மாற்றக் கேட்டால் “அதில் பிரச்சனை இருக்கிறது அதனால் இன்னும் ஒரு மாதம் ஆகும் உங்கள் எண்ணைக் கொடுத்துச் செல்லுங்கள் நாங்கள் அழைத்துக் கூறுகிறோம்” என்றார், கடுப்பாகி விட்டது.

நானோ சிம் கார்டு மாற்றலாம் என்றால் 100 ₹ என்றார். இதை மாற்ற முகவரி பழைய வீட்டு முகவரியில் இருக்கிறது.

எப்படி மாற்றுவது? இது சரிப்பட்டு வராது என்று எரிச்சலாகி கிளம்பி விட்டேன். இனி அடுத்த பிரம்மாஸ்திரமாக கோவை செல்லலாம் என்று முடிவு செய்தேன்.

ஏனென்றால் ப்ரூக் ஃபீல்ட் வணிக வளாகம் சென்று இருந்த போது அங்கே இருந்த ஏர்டெல் அலுவலகத்தில் இது பற்றி கேட்ட போது “தகவல்களை எடுத்து வாருங்கள் மாற்றிக் கொள்ளலாம்” என்று கூறி இருந்தார்கள்.

சரி கடைசியாக இங்கே செல்லலாம் என்று முடிவானது.

நான் கோவை அடிக்கடி செல்வதால் எனக்கு இங்கே செல்வது பிரச்சனையில்லை.

இங்கே புதிய வீட்டு முகவரிக்கான சான்றிதழ்களைக் கொடுத்தவுடன் 5 நிமிடத்தில் மாற்றிக் கொடுத்து விட்டார்கள்.

நானோ சிம் கார்டு 25 ₹ க்கே மாற்றிக்கொடுத்து (ஈரோட்டில் 100 ₹ கேட்டார்கள்) இரண்டு மணி நேரத்தில் அதைச் செயல்படுத்தியும் கொடுத்து விட்டார்கள்.

இங்கே ஏர்டெல் அலுவலகம் Professional ஆக இருந்தது அதோடு கேட்கும் கேள்விகளுக்கு பொறுப்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொண்டு பதில் கூறினார்கள்.

எனக்கு நானோ சிம் கார்டு தற்போது தேவையில்லை என்றாலும் (1100 தான் ஊரில் பயன்படுத்துகிறேன்) நாளை அவசரமாகத் தேவைப்பட்டால் சிம்கார்டை வெட்டிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் பயன்படுத்த எளிதாக இருக்கும் என்று இதை வாங்கி கன்வர்டர் போட்டுக்கொண்டேன்.

ஒரு பிரச்சனையும் இல்லை நன்றாக வேலை செய்கிறது. கன்வர்டர் நம்ம ஊரில் 5 ₹ க்கு கிடைக்கிறது. சிங்கப்பூரில் இதை ஒரு சமயத்தில் நம்ம ஊர் பணத்தில் 450 ₹ (10 SGD) க்கு விற்பனை செய்தார்கள்.

லிங்கா பாடல்கள் பிடிக்கவில்லை

ரில் இருந்தால் ஃபேஸ்புக், WhatsApp என்று எதுவும் பயன்படுத்த மாட்டேன். இதனால் என்ன நடக்கிறதே என்றே தெரியவில்லை.

குறிப்பாக “லிங்கா” பாடல் வெளியீடு சமயத்தில் பரபரப்பாக இருந்த போது செய்தித்தாள் மட்டுமே துணை.

எதுவும் தெரியாமல் இருப்பதும் சுவாரசியமாக இருக்கிறது.

கோவை நண்பர் பிரபு மட்டும் அவ்வப்போது அழைத்து விவரங்கள் கூறினார்.

எனக்கு லிங்கா பாடல்களும், ட்ரைலர் பின்னணி இசையும் பிடிக்கவில்லை. படத்தோடு பார்த்தால் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

“விண்ணைத்தாண்டி வருவாயா” க்கு இப்படித் தான் பல்ப் வாங்கினேன். படம் பார்த்த பிறகு பாடல்கள் ரொம்பப் பிடித்து விட்டது.

“உண்மை ஒரு நாள் வெல்லும்” பாடல் ஹரிசரண் குரலில் நன்றாக இருக்கிறது. “சுட்டாலும் சங்கு நிறம்” என்று வரும் போது குரலும் இசையின் அமைதியும் ரொம்ப அருமை.

“மோனா கசோலினா” பாடலை ரஜினி கேட்டு “யோவ்! என்னையா இந்த மாதிரி பாட்டு போட்டு வைத்து இருக்கீங்க!” என்றாராம். இதை ரகுமான் கூறினார் 🙂 .

தலைவர் படம் எப்படி இருக்கும் என்று வழக்கம்போல பயம் கலந்த ஆர்வம் இருக்கிறது.

இன்னும் கூற ஏகப்பட்டது இருக்கிறது என்றாலும், படிக்க யாரும் இருப்பாங்களா என்று சந்தேகமானதால் பயணக் குறிப்புகளை இதோட முடித்துக் கொள்கிறேன் 🙂 .

Read: பயணக் குறிப்புகள் – 1 [October – Nov 2014]

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

13 COMMENTS

  1. கிரி.. கோவையில் நான் வேலை பார்த்த நிறுவனமும் இரும்பை உருக்கும் ஆலையே.. அங்கு பணி புரிந்த நாட்கள் மிக அழகானவை.. நிச்சயம் நீங்கள் அக்னி ஸ்டீல்” நிறுவனத்திற்கு செல்லும் போது ஒரு புதுவித அனுபவத்தை தரும்.. பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி..

  2. //சன் தொலைக்காட்சி என் அம்மா பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அதில் ஒரு சீரியலில் “மச்சான்.. மச்சாசாசான்…..னு” ஒரு பொண்ணு பேசுறதைப் பார்த்தாலே செம கடுப்பாகுது.//

    வம்சம்… ???? 🙂

  3. எப்போதெல்லாம் என்னால் இனி சமாளிக்க முடியாது என்ற நிலை வருகிறதோ அன்று எனக்கு எங்கிருந்தாவது உதவி கிடைக்கும் என்று. இது மீண்டும் ஒருமுறை நிரூபணமானது. இதெல்லாம் நிச்சயம் சாதாரண விசயமல்ல. கர்மா கவனிக்கிறது

    ஒரு கஷ்டத்திலிருந்து மீண்டு வர நம்மால் முடியுமட்டும் முயற்சித்து விட்டு தளர்ந்து போய்,

    இதற்கு மேல் முடியாது என்ற நிலை வரும் போது தான் கடவுள் கை கொடுக்கிறார்.

    இது பற்றி கடவுளிடம் கேட்டால் என்ன பதில் சொல்லியிருப்பார்.

    “ஆரம்பத்திலேயே நான் வந்திருந்தால் கஷ்டங்களை எதிர்த்து போராடும் தன்மை உன்னிடம் இருப்பதை நீ அறிந்திருக்க மாட்டாய்.”

    என் அனுபவ சிந்தனைகள்.

  4. please watch complete episodes for “LIFE” program. possible try to watch complete DVD in tamil.

    Now will livecast discovery tamil in other titles Giri…

  5. இன்னும் சில வருடங்கள் கழித்து இந்தக் குறிப்புகளை நாமே படிக்கும் போது நம்முள் உருவாகி உள்ள சிந்தனை மாறுதல்களை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

  6. “தற்போது அனைவருக்கும் வங்கிக் கணக்கு மோடி திட்டம் இந்த ஊழலை தடுக்க / குறைக்க உதவும் என்று நினைக்கிறேன்.”

    இதில் வேறு விதமாக ஆட்டைய போடுகிறார்கள் கிரி . எங்கள் ஊரில் ஒரு தேசிய மயமாக்க பட்ட வங்கியின் கிரமத்து கிளை ஒரு வங்கி ஊழியரால் நிவகிக்க படுகிறது அந்த பெண்மணியும் இந்த நூறு நாள் வேலை திட்டதில் பணம் எடுப்பவர்களிடம் ஒரு முறைக்கு முப்பது ரூபாய் என எடுத்து கொண்டு தான் கொடுக்கிறார். இதில் இவர்கள் கேட்டு கோடா எடுபதில்லை தண்டல்காரன் போல் இவர்களே எடுத்து கொண்டு கொடுகிறார்கள்.
    உங்கள் முந்தய ஒரு பதிவில் சொன்னது போல் இவர்களாக பார்த்து திருந்தினால் மட்டுமே!!!! அரசாங்கம் என்ன நடைமுறைகளை கொண்டுவந்தாலும் இவர்கள் மாறினால் மட்டுமே சாத்தியம் ….

  7. Interesting article on your travel, including previous one.

    Modi efforts will pay dividends. Like ARR songs, if we have bit of patience.

    Lingaa songs are very good. You only need to listen few times and all the songs( as usual for ARR) slowly grow on you. As Vairamuthu said, Lingaa songs “aarambathil konjam pidikkum, apparam neraiya pidikkum, apparam paithiyam pidikkum”

  8. பயணக் குறிப்புகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கிரி.. சில நாள்கள் இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவை படிப்பதில் மிக்க மகிழ்ச்சி !!

  9. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @யாசின் அப்படியா! நான் சென்று வந்த பிறகு எழுதியதைப் படித்து உங்கள் கருத்தைக் கூறுங்கள்.

    @தமிழ்செல்வன் பெயர் தெரியவில்லை.. 🙂

    @சரவணன் உண்மை தான்

    @அஷரஃப் நான் இந்தக் காணொளிகளைப் பார்த்தேன். நன்றி பகிர்ந்தமைக்கு.

    @அருண் சுட்டிக்கு நன்றி.

    லிங்கா உண்மை தான் இப்ப கேட்க கேட்க பரவாயில்லை ஆனாலும் எனக்கு மோனா பாட்டு சுத்தமாகப் பிடிக்கலை. படம் பார்த்தால் பிடிக்குமோ என்னவோ.

    @ஜோதிஜி உண்மை தான்.. இது போல பழைய பதிவுகளைப் படிக்கும் போது தோன்றும்.

    @பாலா அடப்பாவிகளா! இது வேற பண்ணுறாங்களா.. தற்போது இந்தத் திட்டத்தை நிறுத்தப் போவதாகப் படித்தேன். இது பற்றி ஒரு கட்டுரை எழுதும் எண்ணம் இருக்கிறது.

    @Ananth Thanks . Yes I liked the songs now except Mona 🙂

    @ விஜய், சரத் ரைட்டு 🙂

  10. கிரி,
    என்னோட ரிங் டோனே mona gasolina பாட்டு தான் 🙂

    -அருண்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here