காவியத்தலைவன் [2014]

10
காவியத்தலைவன்

துரை பாலசண்முகானந்த நாடக சபாவை நடத்தி வருபவர் சிவதாஸ் ஸ்வாமிகள் (நாசர்), அநாதையாக வந்து அங்கு சிறுவயதில் இணைபவர்கள் கோமதிநாயகம் (ப்ரித்விராஜ்) பின்னர் காளி(யப்பன்) (சித்தார்த்).

இந்த நாடக சபாவில் ராஜபார்ட்டாக நடிக்கும் பொன்வண்ணன் வழக்கமான மூத்த நடிகர் ஈகோ பிரச்சனையில் வெளியேற அந்த இடத்திற்கு யார் என்ற பிரச்சனையில் சித்தார்த் தேர்வாகிறார். Image Credit

தன்னை விட சித்தார்த் அனைத்திலும் சிறப்பானவராக வருவது ப்ரிதிவிராஜால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இறுதியில் என்ன ஆகிறது என்பது தான் காவியத்தலைவன்.

காவியத்தலைவன் 

நாடக சபா நாடகங்கள், நாடக சபாவினுள் நடிகர்களிடையே உள்ள போட்டி, ஈகோ, நாடகங்களுக்கு அப்போது இருக்கும் மதிப்பு.

மக்கள் நாடகக் கலைஞர்களுக்குக் கொடுக்கும் மரியாதை, சுதந்திர போராட்டத்தில் இவர்களின் பங்கு, குருவிற்கு மாணவர்கள் கொடுக்கும் மரியாதை.

என்று தற்போதைய தலைமுறை அறிந்திராத பல காட்சிகளைக் காண ஒரு வாய்ப்பாக அமைந்து இருக்கிறது.

நாசர் ஒரு சிறந்த நடிகர் என்பது அனைவரும் அறிந்தது ஆனால், அவரின் முழுமையான நடிப்பை வழங்க சமீப படங்கள் எதுவுமே துணை புரியவில்லை.

அந்தக் குறை இதில் தீர்க்கப்பட்டு இருக்கிறது என்று நம்பலாம். ஒரு ஆசிரியர் / குருவின் கம்பீரத்தை / அனுபவத்தை நம் முன் கொண்டு வருகிறார்.

நாடக சபா

கதை சுதந்திர காலத்திற்கு முன்பு நடந்தது என்பதால் அந்தக் காலகட்ட இடங்கள் பொருட்கள் போன்றவற்றிக்கு அதிகம் வேலை வைக்கவில்லை.

இவர்கள் படத்தில் பெரும்பாலும் காட்டுவது நாடக சபா, பழைய கட்டிடங்களுக்காக நாட்டுக் கோட்டை செட்டியார் வீடுகள், சாலைகள் என்று முடித்து விடுகிறார்கள், பட்ஜெட் காரணமாக இருக்கலாம்.

சுருக்கமாக மதராசப் பட்டிணம் படத்திற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் கூட இதில் இல்லை.

இது நம்மைக் குறிப்பிட்ட சில இடங்களுக்குள்ளேயே சுற்ற வைத்து இருப்பதால், சில இடங்களில் அலுப்புத் தட்ட ஒரு காரணமாகவும் இருக்கிறது.

சித்தார்த் ப்ரிதிவிராஜ்

சித்தார்த் ப்ரிதிவிராஜ் இருவரில் ப்ரித்விராஜ்க்கு தான் நடிப்பை வழங்க அதிக வாய்ப்பு.

ஒரு பேட்டியில் சித்தார்த் தன்னை விட ப்ரித்விராஜ்க்கு தான் நடிக்க அதிக வாய்ப்பு என்று கூறி இருந்தார், அது உண்மையும் கூட.

ப்ரித்விராஜ் நல்லவர் தான் ஆனால், தாழ்வுமனப்பான்மை.

திறமை இருந்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஏங்கும் கதாப்பாத்திரம். ப்ரித்விராஜ் நடிப்பில் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்.

தன் ஏமாற்றத்தை மறைத்து சிரிப்பதும் பின் நாசரிடம் சென்று ‘தனக்கு திறமையில்லையா? நான் நன்றாகத் தானே நடித்தேன்!‘ என்று பாவமாகக் கேட்கும் போது அனைவரையும் ஈர்த்து விடுகிறார்.

குறிப்பாக இறுதியில் இருவரின் நடிப்பும் அருமை குறிப்பாக ப்ரித்விராஜ். இவர் நல்லவர் தான் ஆனால், எவரும் தனக்குக் கீழே இருக்க வேண்டும் என்று நினைக்கும் கதாப்பாத்திரம்.

கதாபாத்திரமாக இவரிடம் உள்ள ஒரே பிரச்சனை இவரின் மலையாளம் கலந்த தமிழ் உச்சரிப்பு மட்டுமே.

சித்தார்த்க்கு பெரிய பிரச்சனை 35 வயதாகியும் அவரின் சின்னப் பையன் போன்ற தோற்றம். உண்மையிலேயே இவரை நினைத்து வருத்தப்பட்டேன்.

சித்தார்த்துக்கு நடிப்பில் நிறைய சாதிக்கணும் வித்யாசமாக நடிக்கணும் என்று நடிகனாக ஆசை ஆனால், அவருடைய குழந்தை முகம் அதற்குப் பெரும் தடையாக இருந்து விடுகிறது.

நகைச்சுவை

காவியத்தலைவன் நாடகக் கதை எனும் போது படம் பார்ப்பவர்களை ஏதாவது ஒரு வகையில் பரபரப்பாக, நகைச்சுவையாக வைத்து இருந்தால் மட்டுமே முழுப் படமும் ஈர்க்க முடியும்.

இதே வழக்கமான தற்போதைய கதை என்றால் கூடுதல் மெனக்கெடத் தேவையில்லை.

ஆனால், இது பீரியட் படம் எனும் போது படம் தற்போதைய காலகட்ட மக்கள் பார்ப்பதற்கு எதையாவது புதுமையாக, அதிரடியாக, நகைச்சுவையாக இருந்தால் மட்டுமே இதைச் சரிகட்ட முடியும்.

ஆனால், முதல் பாதியில் ஓரளவு செய்து இருந்தாலும் இரண்டாம் பாதியில் அது போல எதுவும் இல்லாதது (இறுதிக் காட்சி தவிர) பெரும் குறை.

நகைச்சுவைக்குச் சிங்கம் புலி, தம்பி ராமையா இருந்தாலும் அவ்வளவாக எடுபடவில்லை.

இது போலப் படங்களில் வசனங்கள் ரொம்ப முக்கியம் ஆனால் எழுத்தாளர் ஜெயமோகன் இருந்தும் வசனங்கள் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

வசனங்களால் நிச்சயம் மிரட்டி இருக்க வேண்டும் ஆனால், எதுவும் நடக்கவில்லை.

எழுத்துப் போடும் போது “னை” போன்ற எழுத்துக்களில் பழைய சுழி முறையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நன்றாக இருந்தது.

ரகுமானின் பாடல்கள், காட்சிகளோடு பார்க்கும் போது மிகவும் சிறப்பாக இருக்கிறது.

பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் ஆனால், இசையை அந்தக் காலக்கட்டத்திற்கு ஏற்றது என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இளையராஜா போன்றோர் தான் இதில் சிறப்பாகச் செய்து இருக்க முடியும். இதற்கு எடுத்த்துக்காட்டாகப் பல படங்களைக் கூறலாம்.

கிராமத்து விவசாயி கோட் சூட் போட்டால் எப்படி இருக்கும்?! அது போலத் தான் எனக்கும் இருக்கிறது.

கேட்க வித்யாசமாக இருந்தாலும் அந்தக் காலகட்டத்து இசையுடன் ஒன்றிணைய முடியவில்லை.

ஒளிப்பதிவு நிரவ்ஷா. விளக்கமாக கூற எனக்கு விசயம் தெரியவில்லை.

வேதிகா இவர்கள் நாடக சபாவில் ஒரு பகுதியாக வருகிறார். துவக்கத்தில் நடித்துக் காட்டும் போது ஜோதிகாவை நினைவுபடுத்துவதை தவிர்க்க முடியவில்லை.

அழகாக இருக்கிறார் ஆனால், நடிப்பில் சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லை, வாய்ப்பு இருந்தும்.

கலைப்பயணம்

சிங்கப்பூர் மலேசியா இலங்கை உட்பட பல நாடுகளுக்கு கலைப் பயணமாக ப்ரித்விராஜ் குழு ஐந்து வருடம் சென்று வருவதாக வருகிறது.

இதைப் பார்த்த போது மிகவும் வியப்பாக இருந்தது.

அந்தகாலத்தில் ஒரு குழுவே கலைப்பயணம் ஐந்து வருடம் சென்று இருந்து இருக்கிறது என்று நினைத்தாலே பிரம்மிப்பாக இருந்தது.

காவியத்தலைவன் படம் இது போன்ற பீரியட் கதையை, இயக்கத்தை ரசிப்பவர்களுக்கானது.

Directed by Vasanthabalan
Produced by Varun Manian, S. Sashikanth
Written by Jeyamohan (Dialogue)
Screenplay by Jeyamohan, Vasanthabalan
Story by Jeyamohan
Starring Siddharth, Prithviraj, Nassar, Vedhicka, Anaika Soti
Music by A. R. Rahman
Cinematography Nirav Shah
Edited by Praveen K. L.
Production company Y NOT Studios, Radiance Media Group
Distributed by Dream Factory
Release dates 28 November 2014 India
Running time 150 minutes

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

10 COMMENTS

  1. அரவாண் படம் பார்த்த நாள் முதலே, வசந்தபாலன் எனக்கு பிடித்தமான இயக்குனராக மாறி விட்டார் … நான் மிகவும் விரும்பியும், ரசித்தும் பார்த்த படம் அரவாண்.. காவிய தலைவன் இன்னும் பார்க்கவில்லை.. அடுத்த வாரம் கண்டிப்பாக பார்ப்பேன்.. காவியத் தலைவன் படம் இது போன்ற பீரியட் கதையை, இயக்கத்தை ரசிப்பவர்களுக்கானது. சத்தியமான வரிகள் கிரி. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. கிரி,
    விமர்சனம் நல்லா இருக்கு
    படம் பார்க்கல, பெருசா ஆர்வமும் இல்லை எனக்கு இந்த படத்து மேல…

    பதிவுக்கு பகிர்வுக்கும் நன்றி தல

    – அருண்

  3. படம் ஒடுமா கிரி? இல்லே award மட்டும் தானா ?பெரும் முயர்சி எடுத்து படம் ஓடலேன்னா வருத்தம் தான் . அல்லது இருவர் போல் நினைவில் நின்றவையாக இருக்க வேண்டும் .

  4. நடு நிலையான, நேர்மையான விமர்சனம் கிரி. நானும் இன்று படம் பார்த்து விட்டேன். எனக்குப் பிடித்திருந்தது.

  5. @யாசின் அரவான் ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை.

    @அருண் ரைட்டு 🙂

    @ஆனந்த் படம் ஓரளவு ஓடும்.. பெரிய வெற்றியைப் பெற முடியாது.

    @ஸ்ரீநிவாசன்.. சீக்கிரம் பார்த்துட்டீங்க போல 🙂

  6. giri,

    Saw a review in another site also.. was not good.. you should applaud the effort put in by Vasantha balan.. Ellam therintha Ekaambaram mathiri ezhuthakkoodathu.. not u but the other guy who wrote the review.. anyway your review will make it a interesting watch for me.. I have already listened to the songs the one with some pure tamil is too good and yarumilla song was too good too.. will download it soon. btw LINGA is releasing in Botswana on 12th so FDFS of SS movie after so many years.

  7. பார்ரா.. லிங்கா FDFS பார்க்கப்போறீங்களா..! கலக்குங்க 🙂 இது தான் முதல் ரஜினி படமா..அல்லது ஏற்கனவே வெளியாகி இருக்கிறதா? ஏற்கனவே சொன்னீங்க.. நான் மறந்துட்டேன்.

    • giri,

      previously I watched Enthiran but not FDFS but this time Linga is getting released on 12th itself I think its evening show… so grand celebration I will be distributing sweets and all those things for the people typical ss fan..
      after long time … this I did it for Padayappa and baba..

  8. சென்ற நூற்றாண்டில் திரைப்படத்தின் ஆதிக்கம் வலுப்பெறுவதற்கு முன்புவரை நாடகமே தமிழர்களின் பிரதானப் பொழுதுபோக்குச் சாதனமாக இருந்துவந்தது. நாடக ஆசிரியர்கள், நாடகக் குழுக்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இசைக் கலைஞர்கள் எனப் பலரும் மேடை நாடகங்களையே வாழ்ந்துவந்தார்கள். நாடகம் கோலோச்சிய அந்தக் காலகட்டத்தையும் சூழலையும் பின்புலமாகக் கொண்ட படம் என்னும் கட்டியத்துடன் வெளியான காவியத்தலைவன் நாடக நினைவுகளைப் புதுப்பிக்கும் எனக் கருதப்பட்டது. இன்றுள்ள தலைமுறையினருக்கு அன்றைய நாடகச் சூழலை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    சிவதாச சுவாமிகளின் நாடகக் குழுவின் பயிற்சிகளைக் காட்சிப்படுத்தும் தொடக்கம் இந்த எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது. நாடக மேடை, நடிப்பு ஆகியவை குறித்த வசனங்களும் பாத்திரச் சித்தரிப்புகளும் படத்துக்கு வலுவான அஸ்திவாரத்தை வழங்குகின்றன. நேரம் செல்லச்செல்லப் படம் இந்த அஸ்திவாரத்தை விட்டு நகர்கிறது. நாடகம் என்னும் பின்புலம் நாடக மேடையின் பின் திரைபோல மாறிவிடுகிறது. மேடையின் உயிர்ப்போ, அதில் சங்கமமாகும் கலைகளின் கோலாகலமோ, அந்தக் கால ஒப்பனைகளின் அழகியலோ, இசைக் கோலங்களோ, மேடைக்குப் பின் இயங்கும் வாழ்வின் இயக்கங்களோ இல்லாமல் தட்டையான கதையாக மாறிவிடுகிறது.

    பிரதானப் பாத்திரங்கள் அனைவரும் நாடக மேடையுடன் தொடர்புகொண்டவர்கள். நாடக மேடையில் சிறந்து விளங்கும் கனவுடன் வாழ்ந்துவருபவர்கள். நாடகம் சார்ந்த சிக்கல்களையும் சவால்களையும் கொண்டவர்கள். அவர்களது தனிப்பட்ட பிரச்சினைகளும் அவர்களது நாடக வாழ்வையே பாதிக்கின்றன. இவ்வளவு இருந்தும் நாடகத்தைக் காணவில்லை. நாடகத்தைப் பற்றிய பேச்சு இருக்கிறது. நாடகம் இல்லை. நடிப்பின் நுட்பங்கள் பற்றிய வசனங்கள் உள்ளன. நடிப்பைக் காணவில்லை.

    நாடகம் என்னும் பின்புலம் கதைக்குப் பின் திரையாகத் தொங்கு கிறது.

    சிவதாச ஸ்வாமிகள் தரும் பயிற்சியும் வைக்கும் சோதனைகளும் அவரது குழுவினர் நிகழ்த்தக்கூடிய நாடகம் குறித்துப் பெரிய கற்பனைகளை உருவாக்குகின்றன. நடிப்பு பற்றியும் கலையுணர்வு பற்றியும் ஜெயமோகன் எழுதியுள்ள வசனங்களும் அந்தக் கற்பனைக்கு உரமூட்டுகின்றன. ஆனால் குழு மேடையேறியதுமே இந்தக் கற்பனைகளும் எதிர்பார்ப்புகளும் விரல் பட்ட நீர்க்குமிழிகள்போல உடைந்துபோகின்றன. நடிப்பு பற்றி தரப்படும் விவரணைகளுக்குச் சற்றும் தொடர்பில்லாத வகையில் நடிப்பு உள்ளது. சித்தரிக்கப்படும் மேடை நாடகங்கள் பள்ளி நாடகங்களை ஒத்திருக்கின்றன. பகத்சிங் நாடகத்தில் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ முழக்கம் கூடக் கேட்கவில்லை. ஒப்பனைகளிலும் நடன அமைப்புகளிலும் அந்தக் கால வாசனை இல்லை. மரபு சார்ந்த நடிப்பு பணிக்கும் நவீன பாணிக்கும் இடையேயான முரணியக்கமாகக் கதை வளர்ந்திருக்கக்கூடிய சாத்தியத்தையும் இயக்குநர் வீணடிக்கிறார்.

    நாடகக் கலைஞர்களின் வாழ்வு, அவர்களது போராட்டம், நாடக வாழ்வின் பரவசமும் வலியும் நிரம்பிய தருணங்கள், அவர்கள் பயன்படுத்திய இசைக் கருவிகள், ஒப்பனை முறைகள், பயன்படுத்திய வண்ணங்கள், நடன வகைகள், எடுத்தாண்ட பாடல்கள், கதைகள் ஆகியவற்றைப் படத்தில் எந்த இடத்திலும் உணர முடியவில்லை. மேடையில் ஹார்மோனியம்கூட இல்லை.

    மேடைக்கு வெளியிலும் பல உறுத்தல்கள். ஜமீன்தார் பெண் காளியிடம் காதலை வெளிப்படுத்திய கணத்தில் காளியாக நடிக்கும் சித்தார்த் ‘பாய்ஸ்’ படப் பாணியில் எகிறிக் குதிக்கிறார். காதல் வலுவாகச் சித்தரிக்கப்படவில்லை. காளியின் மறுவருகை செயற்கையின் உச்சம். அவனுடைய வீழ்ச்சியும் கோமதியின் வளர்ச்சியும் நம்பகத்தன்மையுடன் உருப்பெறவில்லை. காளி திடீரென்று தேசபக்த அவதாரம் எடுப்பதும் இயல்பாக இல்லை. இரு நண்பர்களில் ஒருவன் பொறாமை, வன்மம் ஆகியவற்றின் உருவகமாக இருக்க, இன்னொருவன் மகாத்மாவாக இருக்கிறான். தான் பழகும் பெண்களின் வயிற்றில் குழந்தையைக் கொடுக்கும் தன்மையில் மட்டும் ‘மனித’னாக இருக்கிறான். சக நடிகையின் நடிப்பைக் குறைகூறும் காளி ஒரு இடத்திலாவது நன்றாக நடித்துக் காட்ட வேண்டாமா?

    படத்தில் சிறப்பான அம்சங்கள் பிருத்விராஜின் நடிப்பும் ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் ஜெயமோகனின் சில வசனங்களும். பிருத்விராஜ் மேடையில் சோபிக்கவில்லை. தொடர்ந்து தோற்றுக்கொண்டிருக்கும் கோமதி நாயகம் பிள்ளையின் உணர்வுக் குமுறல்களை வெளிப்படுத்தும் இடங்களில் பிருத்விராஜ் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

    ரஹ்மானின் இசையைத் தனியாகக் கேட்கும்போது ரசிக்க முடிகிறது. படத்தின் பின்புலத்தோடு அவ்வளவாக ஒட்டவில்லை. வடிவு (வேதிகா) அறிமுகமாகும் காட்சியில் வரும் பாடல் அற்புதமாக ஒலிக்கிறது. நடிப்பைப் பற்றிய விவரணைகள், காளிக்கும் குருவுக்கும் இடையில் எழும் முரண்கள், காளியைக் கோமதி அடித்து விரட்டும் இடம் ஆகியவற்றில் ஜெயமோகனின் எழுத்தாளுமையை உணர முடிகிறது.

    இந்த வலிமைகள் வெறும் ஆறுதல்களாகத் தங்கிவிடும் அளவுக்குப் படத்தின் பிரதான ஓட்டம் வலுவற்றிருக்கிறது. நாடகச் சூழல் என்னும் பின்புலத்துக்கு நியாயம் சேர்க்காத திரைக்கதையில் பின்புலம் என்னும் பாவனையைக் கழித்துவிட்டால் மிஞ்சுவது என்ன? நண்பர்களிடையே எழும் சிக்கல்களும் நிறைவேறாத காதல்களும். இதைச் சொல்ல இந்தப் பின்புலமும் இத்தனை மெனக்கெடல்களும் உரிமைகோரல்களும் எதற்காக? பின்புலமும் கதையும் ஒன்றையொன்று வலுப்படுத்தவில்லை என்றால் இரண்டையும் இணைக்கும் கண்ணிதான் என்ன? இயக்குநரின் பாவனைகளா? அது போதுமா ஒரு படத்தைக் காப்பாற்ற?

    நவராத்திரி என்று ஒரு படம். வெளிவந்து அரை நூற்றாண்டு ஆகப்போகிறது. அதில் நாடகக் காட்சி ஒன்று இடம்பெறும். அதில் சிவாஜி கணேசனும் சாவித்திரியும் நாற்பதுகளின் நாடக மேடையின் ஒரு வகைமையைத் துல்லியமாகவும் படைப்பூக்கத்துடனும் சித்தரித்திருப்பர்கள். காவியத் தலைவன் படம் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய காட்சி அது.

    தொடர்புக்கு:aravindan.di@thehindutamil.co.in

    rgds/mani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!