பயணக் குறிப்புகள் – 1 [October – Nov 2014]

13
பயணக் குறிப்புகள் - 1 [October - Nov 2014]

தீபாவளி விடுமுறை முடிந்து கிளம்பும் போது “மெட்ராஸ் ஐ” வந்து விட்டது.

“மெட்ராஸ் ஐ”

“மெட்ராஸ் ஐ” வந்த அன்று இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கண்ணில் பூச்சி அடித்து,  இதன் காரணமாக வலது கண்ணில் இரத்தம் கட்டி விட்டது.

விமான நிலையத்தில் கண்கள் சிகப்பாக இருந்தால் “மெட்ராஸ் ஐ” என்று அனுமதிக்க அனைவரையும் மறுத்ததாக செய்திகளில் வந்ததால், சரியாகும் வரை வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டியதாகி விட்டது.

முன்பதிவு செய்த பயணச்சீட்டை ரத்து செய்ய / மாற்ற முடியாததால் பணம் காலி.

எனக்கு தெரிந்தவர்கள் கூட மருத்துவர் சான்றிதழுடனே சென்றார்கள். எனக்கு “மெட்ராஸ் ஐ” நான்கு நாட்களில் சரியானாலும் இந்த சிகப்பால் தாமதமாகி விட்டது. Image Credit

இது பற்றி கூற இன்னும் கொஞ்சம் விஷயம் இருக்கு.. ஆனால், இதைப் பற்றிக் கேட்பவர்கள் அனைவரிடமும் கூறி எனக்கே சலிப்பாகி விட்டது.

எங்கள் கொங்குப் பகுதியில் யாராவது இறந்து விட்டால் அவரது வீட்டினரிடம் இறப்பு பற்றி சம்பிராதயமாக விலாவரியாகக் கேட்க வேண்டும்.

ஆண்களுக்கு அவ்வளவாக பிரச்சனையில்லை ஆனால், பெண்கள் நிலை பரிதாபம்.

அங்குள்ள பங்காளிகள் உட்பட அனைவரிடமும் எப்படி இறந்தார் என்ற முழு விவரமும் கேட்க வேண்டும்.. அனைவருக்கும் ஒரே பதில் தான்.

இந்த பதில் கேட்பவருக்கும் தெரிந்து இருக்கும் ஆனாலும் கேட்பார்கள்.

இப்படி ஆரம்பிப்பாங்க.. “ஏனுங் நல்லாத்தான இருந்தாங்…!” 🙂 அப்புறம் அப்படியே நகர்ந்து அடுத்தவரிடம் இதே கேள்வி. அவர் நல்லா இருந்தா எதுக்கு சங்கூதப் போறாரு 🙂 .

இந்த மாதிரி ஒரு பரிதாப நிலைக்கு நான் ஆளாகிட்டேன்.

“மெட்ராஸ் ஐ” என் பையன் வினய் கிட்ட இருந்து வந்து எங்கள் வீடு, என் மாமா வீடு, அக்கா வீடு என்று ஒரு சுழட்டு சுழட்டி விட்டது.

அதனால இது ஒன்னும் நாட்டுக்குத் தேவையான செய்தி இல்லை என்பதால்… எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.. நன்றாகத் தான் இருக்கிறேன் என்று அறிவித்து விட்டு பயணக் குறிப்புக்குள் நுழைகிறேன்.

சிலர் ஒரு மாதமா ஆளைக் காணோமே என்று நினைத்து இருக்கலாம். மின்னஞ்சல் மூலமாக விசாரித்தவர்களுக்கு நன்றி.

என் அலுவலக நண்பர் விஜயகுமார் “கிரி நீங்க Blog எழுதுங்க!” என்று கேட்டார்.. இல்லைங்க நான் ஊரில் இருக்கும் போது எழுத மாட்டேன் என்று கூறி விட்டேன்.

பின்னர் ஒரு வாரம் கழித்து “நீங்க எப்ப சிங்கப்பூர் போவீங்க” என்று கேட்டார்.. “ஹலோ! எதுக்குங்க என்னைத் துரத்துறீங்க?” என்றேன்.. “அப்போ தான் நீங்க Blog எழுதுவீங்க” என்றார்.

பார்ர்ர்ரா நமக்கு ஒரு தீவிர ரசிகர் இருக்கார் போலன்னு நினைத்துக்கிட்டேன் 🙂 .

BTW நான் சிறுவயதிலேயே வேலையில் சேர்ந்து விட்டேன். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு மாதம் வீட்டில் இருந்தது இதுவே முதல் முறை (அதிலும் இரண்டரை வாரம் வீட்டிலிருந்து வேலை செய்தேன்).

மழை

ந்த முறை சூடான!! பரபரப்பு பேச்சு எங்கள் பகுதியில் என்னவென்றால், மழை தான். சும்மா பின்னி பெடலெடுத்து விட்டது.

நீங்கள் செய்திகளில் அடிக்கடி பார்த்து இருக்கலாம் கோபியில் பலத்த மழை என்று. 10 வருடங்களுக்குப் பிறகு கோபியில் இது போல ஒரு மழை.

முன்பெல்லாம் தீபாவளிக்கு பட்டாசை வெயிலில் காய வைக்கவே முடியாது, அந்த அளவிற்கு மழை பெய்து கொண்டே இருக்கும். அது போல ஒரு நிலை இந்த வருடம் தான் எனக்குக் கிட்டியது.

சத்தியில் (சத்தியமங்கலம்) செம மழை (குறிப்பாக “கெஞ்சனூர்” “அரியப்பம் பாளையம்” பகுதியில்) அதுவும் 35 வருடங்களுக்குப் பிறகு.

என் அக்கா கணவர் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டு இருந்தார்.

தீவனம் இல்லாததால் மாட்டை விற்று விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தார்கள். தற்போது போதும் போதும் என்கிற அளவிற்கு மழை பெய்து அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்தி விட்டது.

எங்கள் உறவினர் இறப்பு பற்றி (மேலே கூறியதை மறுபடியும் படித்துக்குங்க) கேட்க என் மனைவியுடன் சென்று இருந்தேன். அவர்கள் வீடு தோட்டத்தில் இருந்தது.

பைக்கில் சென்றால்… போகவே முடியலை.

வழி முழுவதும் கெண்டைக்கால் வரை தண்ணீர் சாலையில் ஓடுகிறது.. பிறகு வண்டியை நிறுத்தி விட்டு நடந்தே தான் சென்றோம்.

இங்கே இருந்த உறவினர் ஒருவர் கூறினார்.. இங்கே இருந்த குளத்தை எங்க MLA ஆழப்படுத்தி இருந்ததால் தண்ணீர் நிரம்பி ஊத்து எடுக்க ஆரம்பித்து விட்டது.

அதிலிருந்து வரும் தண்ணீர் தான் இங்கே நீங்கள் பார்த்தது என்றார்.

செய்திகளில் மட்டுமே டகால்டி செய்தியாக குளத்தை ஆழப்படுத்துவது பற்றி படித்து இருந்ததால், ஒரு ஆர்வத்தில் “பரவாயில்லையே குளத்தை ஆழப்படுத்தும் நல்ல முயற்சியில் கூட உங்க MLA செயல்படுகிறாரே!!” என்று கூறினேன்.

அதற்கு அவர் சிரித்து விட்டு “இல்லைங்க.. இவர் MLA ஆனதும் இவரது பள்ளமான இடத்தை மேடாக்க குளத்திலிருந்து மண்ணை எடுத்து இங்கே நிரப்பிக்கொண்டார்.

அதனால் குளம் ஆழம் ஆனது” என்றார். எப்படியோ நல்லது நடந்தால் சரியென்று நினைத்துக்கொண்டேன்.

விவசாயம்

விவசாயிகளைப் பொருத்தவரை மழை பெய்தும் கெடுக்கும், பெய்யாமலும் கெடுக்கும். இந்த முறை பெய்து 🙁 .

இந்த வருடம் நெல் அமோக விளைச்சல், சில இடங்களில் 16 பொதி வரை எடுத்தார்கள். ஒரு பொதி Rs 4400 வரை இருந்தும் அதிக மழையால் எல்லாம் சாய்ந்து விட்டது.

இதனால் பலர் 3100 – 3300 க்கு தான் ஒரு பொதியை விற்பனை செய்தார்கள். இன்னும் பலருக்கு சுத்தமாக அடி. அனைத்தும் மழையில் ஊறி முளைப்பு வந்து விட்டது.

முன்னரே தண்ணீர் திறந்து விட்டு இருந்தால் தப்பித்து இருந்து இருக்கலாம் என்று கூறினார்கள். பாவமாக இருந்தது.

இதில் விவசாயத்திற்கு ஆள் கிடைப்பதில்லை. அனைவரும் மில்லுக்கு / 100 நாள் வேலை!! வாய்ப்புத் திட்டத்திற்கு சென்று விடுகிறார்கள் அதனால், விவசாயம் செய்வதே சிரமமாக உள்ளது என்கிறார்கள்.

அடுத்த போகத்திற்கு தண்ணீர் “பவானி சாகர்” அணையில் இருப்பதால் விவசாயிகள் கொஞ்சம் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு பலர் இரண்டாவது போகம் அறுவடையைப் பார்க்கப் போகிறார்கள்.

தண்ணீர் இல்லாததால் விவசாயத்தை தற்காலிகமாக நிறுத்தியவர்கள் மீண்டும் திரும்பியதால் விளைச்சல் அதிகமாகி விலை குறைந்து விட்டது என்று கூறினார்கள்.

நம்மைப் போன்றவர்களுக்கு மாதமானால் சம்பளம் வந்து விடுகிறது ஆனால், இவர்கள் நிலையோ மிகப் பரிதாபமாக இருக்கிறது.

பலர் வேறு என்ன வேலை செய்வது என்றே தெரியாமல் நட்டம் ஆனாலும் பரவாயில்லை என்று விவசாயம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

கதலி

ன் மாமா (மனைவியின் அப்பா) வாழை போட்டு இருக்கிறார் (நெல் ஓரளவிற்கு லாபம் எடுத்து விட்டார்). “கதலி” என்று கூறினார். தேன் வாழைப் பழம் போல இனிப்பாக இருந்தது.

ரொம்ப சுவையாக இருந்ததால் நிறைய சாப்பிட்டேன். எங்கள் அலுவலகம் மற்றும் பக்கத்து வீட்டினருக்கும் கொண்டு வந்து கொடுத்தேன்.

இந்த கதலி பழம் பெங்களூருவில் தான் விற்பனை ஆகிறதாம். எங்கள் கோபிப் பகுதியில் பழத்தை யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை என்று கூறினார்.

பெட்டிக் கடைகளில் மட்டுமே விற்பனை ஆகிறது என்றார், எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

வாழை மரம் அதன் வாழ்க்கையில் (ஒரு வருடம்) ஒரே ஒரு முறை மட்டுமே குலை கொடுக்கும் அதன் பிறகு அதை வெட்டி விட வேண்டியது தான் என்றார்.

நாம் விற்கும் சமயத்தில் விலை இருந்தால் அதிர்ஷ்டம் இல்லையென்றால் நட்டம் தான் ஆகும் என்று குறிப்பிட்டார்.

நான் கூட வாழை மரம் இரண்டு மூன்று முறை வாழைத்தார் கொடுக்கும் என்று நினைத்தேன்.

இவ்வளவுக்கும் நானும் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன் தான்.

என் நிலைமை இப்படி இருக்கிறது..! கொஞ்சம் வெறுப்பாகவும் இருந்தது.. இது கூடத் தெரியாமல் இருந்ததற்கு.

சாலை

கோபியில் உள்ள சாலை மிகப் பிரபலமானது காரணம் அதன் அகலம் மற்றும் சுத்தம். இது போல அகலமான சாலையை நகரினுள் நீங்கள் காண்பது அரிது.

தற்போது இதை நான்கு வழிப் பாதையாக மாற்றப் போவதால் இன்னும் அகலமாக்க திட்டமிட்டுள்ளதால் சாலையில் உள்ள பல கடைகள் காலியாகப் போகிறது.

இப்பவே மிகப் பெரிய சாலையாக உள்ளது இதை மேலும் பெரிதாக்கினால் விளையாட்டு மைதானம் போலத்தான் இருக்கும்.

சாலையோரத்தில் இவ்வளவு வருடங்களாக கடை வைத்து இருந்தவர்களுக்கு செம அடி. என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

சாலை என்றதும் இன்னொன்று நினைவிற்கு வருகிறது. எங்கள் ஈரோடு மாவட்டப் பகுதியில் சாலைகள் அனைத்தும் கலக்கலாக இருக்கும். எந்தப் பகுதி சென்றாலும் சிறப்பான சாலையமைத்து இருப்பார்கள்.

நான் சிங்கப்பூர் கிளம்ப இரண்டு நாள் இருக்கும் போது என் அக்காவுடன் பைக்கில் என் நண்பன் வீட்டிற்குச் சென்றேன். பவானி சாகர் என்ற இடத்தில் உள்ளது, நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம்.

இங்குள்ள “பவானி சாகர்” அணை தான் எங்கள் நீர் ஆதாரம். நாங்கள் சென்ற சாலை காட்டுப் பகுதி வழியாகச் சென்றது.

சாலையும் அருமை சுற்றிலும் அடர்ந்த காடும் அருமை. யானை அல்லது வேறு விலங்கு வந்து விட்டால் என்ன செய்வது என்ற பயமும் இருந்தது.

என் அக்கா தான் “தம்பி! யானை வந்துடப் போகுது சீக்கிரம் போய்டலாம்” என்று பயந்து கொண்டே வந்தார்கள்.. எனக்கும் கொஞ்சம் உதறல் இருந்தது.

பைக்கில் நாங்கள் செல்லும் போது மாலை 6 ஆகி விட்டது.

இதனால் இருட்டாகி விடும் என்று வேகமாகச் சென்றதால் அந்த சூழ்நிலையை, சாலையை முழுமையாக அனுபவிக்க முடியலை.

இன்னொரு நாள் பொறுமையாக சென்று வர வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.

வண்டி சும்மா சல்லுனு வெண்ணெயில வழுக்கிட்டு போகிற மாதிரி போகிறது (பறக்கிறது). இங்கே போகும் போது தான் கண்ணில் பூச்சிக் கடி வாங்கி வந்தேன் 🙂 .

ஹெல்மெட் போடாமல் சென்றதற்கு தண்டனை (மறந்துட்டேன்).

கேரளா

ங்களுக்கு தெரிந்த ஒருவரைப் பார்க்கக் கேரளா சென்று இருந்தோம்.

எங்கள் ஊரில் இருந்து கேரளா பக்கம் என்பதால் செல்வது எளிது. கோவையிலிருந்து பாலக்காடு வரை சாலை படு மோசம் (ஆறு வழிச் சாலை பணி நடைபெறுகிறது). அதன் பிறகு ரொம்ப நன்றாக இருந்தது.

காரில் தான் சென்றோம். செல்கிற வழியில் Sign board எங்காவது ஒன்று தான் தென்படுகிறது. இதனால் நிறுத்தி நிறுத்திக் கேட்டுச் செல்ல வேண்டியதாகி விட்டது.

இந்த விசயத்தில் கேரளாவை நினைத்துக் கடுப்பாக இருந்தது.

எங்கள் ஈரோடு கோவை மாவட்டப் பகுதியில் பகுதியில் ஏகப்பட்ட sign board வைத்து இருப்பார்கள் உடன் எத்தனை கிலோ மீட்டர் என்ற விவரத்துடன்.

இங்கே அதற்கு அப்படியே எதிர்ப்பதமாக உள்ளது.

நம்ம ஊரிலேயே செம மழை அங்கே கேட்க வேண்டுமா! மழை பெய்து எர்வா மார்டின் அமேசான்!! காடு போல உள்ளது.

சாலை மட்டுமே கறுப்பாக உள்ளது மற்றபடி அனைத்தும் பச்சை பச்சை தான்.

சாலையில் குழி இருந்தால் அங்கே நிழல் இருக்கும். அங்கே உள்ள மரங்களிலிருந்து மழைத் தண்ணீர் சொட்டிக்கொண்டே இருப்பதால், அந்த இடத்தில் எல்லாம் பள்ளம்.

சாலையில் அடர்த்தியான நிழல் இருக்கிறது என்றால் (ஊர் பக்கம் மட்டும், நெடுஞ்சாலையில் அல்ல) அங்கே பள்ளமும் இருக்கும். எனக்கு கேரளாவில் இருக்கும் போது ஒரு அந்நியத்தன்மை இருந்தது.

திரும்பக் கோவை வந்த பிறகு தான் திருப்தியே ஆனது. என்ன தான் சொல்லுங்க.. நம்ம ஊருக்கு வந்தால் தான் ஒரு நிம்மதியும் தைரியமும் வருகிறது.

கோவைக்கு வந்தவுடன்.. “ஏனுங் இப்த் தா(ன்) வந்தீங்ளா” என்று தெரிந்தவர்கள் கேட்கும் போது, அட்ரா சக்கை! இதுக்காவே கோவையிலேயே குந்திக்கலாம் போல 🙂 .

இன்னும் கூற இருக்கிறது.. அடுத்த பதிவில் கூறுகிறேன்.

குறிப்பு: ஸ்பாம் பின்னூட்டங்கள் (கமெண்ட்) ஆயிரக்கணக்கில் இருந்ததால், சரி பார்க்காமல் அனைத்தையும் நீக்கி விட்டேன்.

ஒருவேளை நீங்கள் பின்னூட்டம் இட்டு அது வெளியாகி இருக்கவில்லை என்றால், ஸ்பாம்க்கு சென்று இருக்கலாம், மன்னித்தருள்க.

Read: பயணக் குறிப்புகள் – 2 [October – Nov 2014]

13 COMMENTS

 1. வாழ்த்துக்கள் கிரி. உங்கள் விடுமுறை வலைத்தளத்திற்கு பலமுறை படையெடுத்தவர்களில் நானும் ஒருவன்

 2. //“ஏனுங் நல்லாத்தான இருந்தாங்…!” அப்புறம் அப்படியே நகர்ந்து அடுத்தவரிடம் இதே கேள்வி.
  ella oorlayum indha kelvi keppanga pola..ans ah loop la potra vendiyadhu dhan:)
  u know anna elanthapalam season start ayiduchu..ungaluku amma kuduthu anuplaya..nan kuda pongal ku poren ipove amma kitta solliten elanthavada senju vainga nu…nw itself counting days for pongal:)

  //நான் கூட வாழை மரம் இரண்டு மூன்று முறை வாழைத்தார் கொடுக்கும் என்று நினைத்தேன்..

  idhu kudava ungaluku theriyadhu..he he..vinay kitta kelunga he will teach u:)

 3. நல்ல கட்டுரை கிரி. ஸ்பாம் பிரச்னைக்கு “Akismet” plugin பயன்படுத்தி பாருங்கள்…

 4. பதிவுக்கு நன்றி கிரி.

  //நான் கூட வாழை மரம் இரண்டு மூன்று முறை வாழைத்தார் கொடுக்கும் என்று நினைத்தேன்// 🙂

  எங்கள வச்சி காமெடி கீமெடி பண்ணலையே.. 🙂

 5. கிரி.. நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் எழுத்தை வாசிப்பது மகிழ்வை தருகிறது.. மழை! மழை!! மழை!!! ஊரில் இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது…பவானி சாகர் அணையை ஒரு முறை மட்டும் பார்த்து உள்ளேன்…மிகவும் பிடித்து இருந்தது.. உடம்பை கவனித்து கொள்ளவும்.. பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி..

 6. // வாழை மரம் அதன் வாழ்க்கையில் (ஒரு வருடம்) ஒரே ஒரு முறை மட்டுமே குலை கொடுக்கும் அதன் பிறகு அதை வெட்டி விட வேண்டியது தான் என்றார். நாம் விற்கும் சமயத்தில் விலை இருந்தால் அதிர்ஷ்டம் இல்லையென்றால் நட்டம் தான் ஆகும் என்று குறிப்பிட்டார். நான் கூட வாழை மரம் இரண்டு மூன்று முறை வாழைத்தார் கொடுக்கும் என்று நினைத்தேன்.. //

  கிரி நீங்கள் குழம்பியதிலும் நியாயம் உண்டு.

  ஒரு வாழை மரம் [கன்று] வைத்தால் அதனை சுற்றி மேலும் சில மரங்கள் வளரும். ஒரிரு மாதம் கழித்து மெயின் மரத்தை மட்டும் விட்டு விட்டு மற்றதை வெட்டி விடுவார்கள். அந்த சில மரங்களை வெட்டும் வரை அவற்றை சாப்பாட்டு இலைக்காக பயன் படுத்துவதுண்டு. மெயின் மரத்தின் இலைகளை சாப்பாட்டுக்காக பயன்படுத்த முடியாது [கவுண்டர் ராமராஜனுக்கு பரிமாறும் இலையை கணக்கில் சேர்க்கக் கூடாது] வெட்ட வெட்ட பக்கவாட்டில் மரங்கள் தளிர்த்துக் கொண்டே இருக்கும். மெயின் மரத்தின் வாழைத்தாரை [9to12மாதம்] வெட்டிய பின்னர்; அந்த மரத்தையும் வெட்டிவிடுவார்கள். அதன் பின்னர் பக்கத்தில் தளிர்த்துள்ள மரங்களில் எது நன்றாக உள்ளதோ அதை மெயின் மரமாக்கிவிட்டு மற்றதை வெட்டி விடுவார்கள்……

  இந்த சுழற்சி 3-4 முறை நடக்கும். இதை வைத்துதான் நீங்கள் குழம்பி விட்டீர்கள் என நினைக்கிறேன்.

  செம்பருத்தி படத்தில் ஒரு வரி வரும்
  “வெட்ட வெட்ட
  வாழைதான்
  அள்ளித் தரும்
  வாழ்வைத்தான்”

  வாழையின் பெரிய பிரச்சனை புயல்தான்………விலையில் பெரிய ஏற்ற இறக்கம் இருக்காது; தக்காளி-வெங்காயம் போல…….

 7. கிரி,
  பதிவுலக சூரியனே வருக வருக
  பயண குறிப்பு பகிர்வுக்கு நன்றி. அந்த ரோடு போட்டோ அட்டகாசம் நான் முதல்ல photoshop நு நினச்சுட்டேன்..
  வினய் பத்தி எதுவும் சொல்லவே இல்லையே அவரோட விஷமம் எதாவது பகிரலாமே?
  லிங்கா trailer, பாட்டு எப்படி உங்களுக்கு புடிச்சுதா ?

  “(அதிலும் இரண்டரை வாரம் வீட்டில் இருந்து வேலை செய்தேன்).” – வீட்டில் இருந்தீங்க சரி, வேலை பார்த்தீங்களா?

  – அருண்

 8. அனைவரின் வருகைக்கும் நன்றி

  @ஜானகி இலந்த வடை எனக்கு கூரியரில் வரும். தற்போது காயாக .இருக்கிறது இன்னும் கொஞ்சம் நாள் ஆகும். என் அக்கா தான் கூறினார்கள்.

  @தமிழ்ச்செல்வன் Akismet என்னிடமும் இருக்கிறது. இருந்தும் இவ்வளோ ஃபில்டர் ஆகிறது.

  @நாராயணன் அந்த சென்னை வாலாவை சென்னையை தாண்டி மற்ற ஊருக்கும் போய் பார்த்துட்டு வரச் சொல்லுங்க.. அப்ப தான் என்ன நடக்குது என்று தெரியும்.

  @காத்தவராயன் மானம் காத்த காத்தவராயன் 🙂 நன்றி

  தற்போது வாழை பலரும் போடுவதால் விலை குறைந்து விட்டதாகக் கூறினார்கள். காற்று அடித்தால் மிகப்பெரிய இழப்பு தான்.

  @அருண் அந்தப் படம் உண்மை தான். இணையத்தில் எடுத்தேன்..இந்தமுறை ஒரு நிழல்ப்படம் கூட ஊரில் எடுக்கலை.

  வினய் யுவன் பற்றி இந்த முறை கூற முடியவில்லை. மற்ற செய்திகளே அதிகம் ஆகி விட்டது.

  லிங்கா பாடல்கள் பிடிக்கவில்லை.

  நான் அலுவலக வேலையைப் பார்க்கவில்லை… செய்தேன் 😉

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here