‘நேரமே இல்லை’ என்ற வார்த்தையைக் கேட்காதவர்களே இருக்க முடியாது. நாமே கூறி இருப்போம் அல்லது மற்றவர்கள் யாராவது கூறி இருப்பார்கள். இதற்குக் காரணம் நேரத் திட்டமிடல் இல்லாததே.
அப்படி என்ன தான்யா நேரமில்லாம போனது? என்று ஆராய்ந்தால், நாம் எதோ செய்து இருந்தோம் என்று நினைத்த நேரங்களில் எல்லாம் வெட்டியாக இருந்து இருப்போம் அல்லது வெட்டியாக எதையாவது செய்து இருப்போம்.
நேரமில்லை என்று கூறவும் ஒரு தகுதி வேண்டும் ஆனால், அதற்கான தகுதி நம்மில் பெரும்பானவர்களுக்கு இல்லை. Image Credit
நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டு, எவ்வளவு நேரம் மீதி உள்ளது என்று கணக்குப்போட்டு பார்த்தால், கிறுகிறுத்து விடுவீர்கள். ‘என்னடா இது! இவ்வளவு வெட்டியாகவா இவ்வளவு நாளை வீணடித்து இருக்கிறோம்!‘ என்று அதிர்ச்சியாக இருக்கும்.
நேரத்தைத் திட்டமிடாததால், காலம் மட்டும் வீணாவதில்லை அதனோடு பல்வேறு மற்ற தேவையற்ற பிரச்சனைகளையும் கொண்டு வருகிறது.
அது என்ன தேவையற்ற பிரச்னை?
சில பிரச்சனைகள் மற்றவர்களால் வரும், அவை என்னவென்று உங்களுக்குத் தெரியும்.
நம்மால் பிரச்சனை என்றால், காலையில் கல்லூரி, அலுவலகம் செல்லத் தாமதம் ஆவது, ஒரு வேலையைக் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க முடியும் என்றாலும், மேலும் நீட்டிப்பது.
இதையெல்லாம் சரியான திட்டமிடல் இருந்தால், எளிதாகச் சமாளிக்கலாம்.
காலையில் செல்லும் போது, முன்னரே எழுந்து வேலைகளை முடித்தால், செல்லும் போது பதட்டம், கோபம், சண்டை இல்லாமல் நிம்மதியாகச் செல்ல முடியும்.
முந்தைய இரவே அடுத்த நாள் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களை எடுத்து வைத்து விட்டால், காலையில் அவசர அவசரமாகத் தேடிக்கொண்டு இருக்க வேண்டிய தேவையில்லை.
ஆனால், இப்படியா நடக்கிறது?
எல்லாவற்றிலும் தாமதம், அதனால் அவசரம், அதனால் சண்டை, அதனால் மனவருத்தம். இதைச் சரி செய்யச் சிறு திட்டமிடல், முன்னேற்பாடு போதுமானது ஆனால், இதைச் செய்ய முயற்சிக்காமல் தினமும் ஒவ்வொரு நாளையும் நிம்மதியற்று பலர் கடக்கிறார்கள்.
சிறு திட்டமிடல் நமக்கு மகிழ்ச்சியைத் தரும், கோபத்தைப் பதட்டத்தைத் தவிர்க்கும் என்பது எத்தனை முறை பிரச்னையானாலும் பலருக்கு புரிவதில்லை.
திறன்பேசி (ஸ்மார்ட் ஃபோன்)
நமது நேரத்தை நம்மை அறியாமலே எளிதாக விழுங்கி விடும். 5 நிமிடங்கள் என்று பார்க்க ஆரம்பித்தால், அரை மணி நேரத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கும்.
பெரும்பாலும் பார்த்ததையே பார்ப்போம், தேடியதையே தேடுவோம், படித்ததையே படிப்போம் ஆனாலும் பார்த்துக்கொண்டே இருப்போம்.
யோசித்துப் பார்த்தால், பைத்தியக்காரத்தனமா இருக்குல்ல..!
நாம் இதைத்தான் செய்து வருகிறோம்.
இவற்றை ‘Digital Wellbeing’ செயலியைப் பயன்படுத்தியும் அல்லது ActionDash என்ற செயலியைப் பயன்படுத்தியும் பயன்பாட்டைக் குறைக்கலாம்.
எனவே, நேரமில்லை என்று கூறுவது முழுக்க முழுக்க வடிக்கட்டிய பொய். நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது போலத்தான்.
மேற்கூறியவற்றை முறையாகச் செய்தால், கிடைக்கும் நேரத்தைக் கண்டும், இவ்வளவு நாட்கள் நாம் வீணடித்த நேரங்களைக் கண்டும் நொந்து போய் விடுவோம்.
எனவே, ‘ஒரே பிஸ் பிஸ்‘ என்று கூறாமல், உங்கள் நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டுச் செயல்படுத்திப் பாருங்கள், உங்களுக்கு எவ்வளவு நேரம் கிடைக்கிறது என்று புரியும்.
தொடர்புடைய கட்டுரைகள்
மன அழுத்தம் எப்படி இருக்கும்?!